அத்தியாயம் 20
சைதன்யனை கண்டதும் எல்லாவற்றையும் மறந்து விடுபவள் அவன் வந்ததும் அம்பிகாவை மறந்தாள்.அவன் புடவைகளை தெரிவு செய்யும் போதே அம்பிகா “நீ ஊட்டி காலேஜ்க்கு போயிட்ட” என்று சொன்னது நினைவில் வர அவள் சிந்தனை புடவையிலிருந்து மாறி அம்பிகாவை அவளின் நினைவடுக்கில் தேட ஆரம்பித்தாள். எவ்வளவு யோசித்தும் ஒன்னும் தெளிவாய் தோன்றவில்லை. சைதன்யன் காட்டிய எல்லாவற்றுக்கும் சரி சரி என்று தானாக தலையாட்டியவள்.
அவன் தொட்டு கரிசனையாக பேசவும் சுயநினைவுக்கு வந்தவளாக அம்பிகாவை புறம்தள்ளி அவனோடு ஐக்கியமானாள்.
லட்சுமி அம்மா பணம் கொடுத்ததை அன்று போல் குழப்பமாக பார்க்காமல், உயிரை காப்பாற்றியவரை தெய்வமாக பார்க்கும் ஊரில் தனது ஒரே மகனின் உயிரை காப்பாற்றியவனுக்கு அவர் செய்வதெல்லாம் அதிகம் என்றாலும் அவரின் சந்தோஷமும் மனநிம்மதியும் முக்கியம் என்பதை புரிந்த்துக்கொண்டவளாக பார்த்தாள்.
சாப்பிட சென்ற இடத்தில் ஒரு பன்னிரண்டு வயதுக்கு பெண் குழந்தை ஐஸ் கிரீம் சாப்பிடுவதை பார்த்திருந்தவளுக்கு சிரிப்பைமூட்டியது
இன்னும் சின்ன குழந்தை போல் ஐஸ் கிரீமை அள்ளி வாயில் வைத்து குளிரும் போது அவள் கொடுக்கும் முக பாவம்……. அது…… அது எங்கயோ……! பாத்திருக்கிறேனே! எங்க? …..எங்க? …..கனவு கனவு…….. கனவில் அம்பிகா……… அப்போ அது கனவில்லையா? நா சையுவ பார்த்தது உண்மையா? ஒரு போன் பண்ணிட்டு வரேன் என்று சைதன்யன் எழுந்து சென்றிக்க சைதன்யனை அதிர்ச்சியாக பார்த்தவளுக்கு அன்று ஆபீசில் அவன் அவளை முன்பே தெரியும் போல் பார்த்ததும் முத்தமிட்டது நியாபகத்தில் மாறி மாறி வந்து மனம் அலைக்கழிக்க அதை தாங்கும் சக்தி மூளைக்கு இல்லாமல் மயங்கிச்சரிந்தாள்.
மெனு கார்டை பார்த்துக்கொண்டிருந்த ப்ரியா மற்றும் லட்சுமி அம்மா மீரா மயங்கி சரிந்ததை கண்டு பதட்டமடைய ஒரு டாக்டராய் ப்ரியா பரிசோதிக்க லட்சுமி அம்மா பயத்தினால் கத்தத்தொடங்கினார்.
“தனு தனு சீக்கிரம் வாப்பா……மீராகு என்னமோ ஆச்சு” அவரின் கத்தலில் அங்கிருந்த அனைவரும் என்ன ஏதோ என பார்க்க போன் காலில் இருந்த சைதன்யனோ சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க அங்கே மீரா கீழே விழுந்திருந்ததை கண்டு இதயம் நின்று துடிக்க அவளருகே ஓடி வந்தான்.
அவளை பரிசோதித்த ப்ரியாவுக்கோ ஒன்னும் புரியவில்லை தண்ணீர் தெளித்தும் விழிப்பு வராமலிருக்கவே “தனு ஹாஸ்பிடல் கொண்டு போயிடுவோம் நா தேவ்கு கால் பண்ணுறேன்” ப்ரியா சொல்லி முடிக்க முன் மீராவை கையில் ஏந்தியவன் காரை நோக்கி வேக நடை போட பின்னாடியே அழுதவாறு லட்சுமி அம்மா செல்ல ப்ரியா தேவ்வை போனில் பிடிக்க முயற்சி செய்தவாறே அவர்கள் பின்னால் சென்றாள்.
மீராவை சைதன்யன் தூக்கி வருவதை பார்த்த டைவர் உடனே பின் இருக்கையின் கதவை திறந்து விட்டு வண்டியை இயக்கினார்.
காரில் பின் இருக்கையில் அவளை கிடத்தும் போதே “அம்மா சீக்கிரம் ஏறுங்க ஸ்ரீ யா பிடிச்சிக்கோங்க விழுந்துடாம” என்றவன் ப்ரியாவை முன் இருக்கைக்கு வருமாறு சைகை செய்தவாறே தான் வண்டியை எடுப்பதாக டைவரிடம் கூறியவன் டிரைவிங் சீட்டில் தாவி அமர்ந்தவன் வண்டியை வேகமாக ஹாஸ்பிடல் நோக்கி செலுத்தினான்.
தேவ்வுக்கு அழைத்து விஷயத்தை சொன்ன ப்ரியா “தேவ் டென்ஷன் ஆகாதீங்க நாங்க வந்துகிட்டே இருக்கோம் ஜஸ்ட் டென் மினிட்ஸ் தான் அங்க என்ன பண்ணணுமோ எல்லாம் பண்ணிடுங்க டென்ஷன் ஆகாதீங்க” மீராவுக்கு ஏதாவதென்றால் தேவ் எப்படியெல்லாம் வருந்துவான் என கணவனை நன்றாக அறிந்தது வைத்திருக்கும் மனைவியாய் திரும்பத்திரும்ப சொல்லியவள் காலை கட் செய்தாள்.
ஹாஸ்பிடல் நுழைவாயிலேயே தேவ் ஸ்ட்ரெச்சருடன் காத்திருக்க வண்டியை சைதன்யன் நிறுத்தி இறங்கும் போதே மற்றவர்களும் இறங்க வேகமாக செயல் பட்டு மீராவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர்.
வீட்டிலுள்ளவர்களுக்கு போன் மூலம் தகவல் வழங்கப்பட சரஸ்வதி அம்மா அழுதவாறே வினு மற்றும் ரவிக்குமாருடனும் வந்து விட சரவணன் சார் நேசமணியுடன் வந்து சேர்ந்தார். இரண்டு மணித்தியாலங்களை கடந்திருக்க வெளியே வந்தான் தேவ் கூடவே இன்னொரு டாக்டருடன்.
“ஷி ஈஸ் ஆல் ரைட் எதயோ பார்த்து அதிர்ச்சில தான் மயங்கிட்டாங்க நத்திங் டு ஒர்ரி” என்று அந்த டாக்டர் நகர சைதன்யனுடன் இருக்கும் நொடிகள் மீராவுக்கு இப்படி நடக்க வாய்ப்பிருக்கு என்பதை அறிந்தவனாக “என்ன நடந்ததது” என்று ப்ரியாவை ஏறிட்டான் தேவ்.
“தெரியல தேவ்” என்றவள் ரெஸ்டூரண்ட்டில் சாப்பிட போனதை கூற மீரா ஐஸ் கிரீம் சாப்பிடும் குழந்தையை பாத்திருந்ததை ப்ரியா கவனிக்கவில்லையே!
தேவ் என்ன கூற போகிறானோ என்ற அச்சம் அனைவரின் முகத்திலும். ” ரொம்ப டயடா இருப்பா வேறொண்ணுமில்ல இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சிடுவா” என்றவனுக்கு மாத்திரமே தெரியும் எதனாலையோ அவ மனது டிஸ்டர்ப் ஆகி இருப்பதால் தான் மயங்கி விழுந்தாள் என்பது.
அனைவரும் மீரா கண்முழிக்கும் வரை அந்நிமிடங்களை மிகக்கொடிய நீண்ட நிமிடங்களாக உணர்ந்தனர்.
இங்கு மீரா தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டாள். அவள் தூங்கிக்கொண்டிருந்தாலும் அவள் மனம் தூங்கவில்லை. அம்பிகாவை பார்த்தது முதல் அவள் பேசியவை அனைத்தும் மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்க, அதே கனவு! மீண்டும்………… போன ஜென்மத்தில் நடந்தது என்று நினைத்த அதே கனவு! இன்னும் தெளிவாக…… கனவு காண்பதாய் தூங்கிக்கொண்டிருப்பவள் நினைக்க நடந்து முடிந்த சம்பவம் நியாபகத்துக்கு வந்து கொண்டிருந்தது.
கண்ணை மூடி இருந்தவளின் கண்மணி அங்கும் இங்கும் அசைந்தது. அவளுக்கு படம் போல் அம்பிகா தெளிவாக நியாபகத்தில் இருந்தாள். அன்று கனவென்றும் போன ஜென்மத்தில் நடந்திருக்கும் என்றும் நினைத்தது நிஜமாகிப்போக சைதன்யனை சந்தித்தது முற்றாக நியாபகத்தில் இருந்தது.
“நீ ஊட்டி காலேஜில் ஒரு வருஷம் படிச்சே ஆகணும் னு ஏன் சொல்லுற உன் வேத் அத்தானையும், அத்தையையும் விட்டுட்டு இருந்துடுவியா ” என அம்பிகாவின் குரலும்
“நா ஊட்டிக்கு என் படிப்பு சம்பந்தமா ஒரு வருஷம் போனேன் அம்மு நீயும் கூட வரேன்னு சொல்லி அடம் பிடிச்சு வந்துட்ட வேற வழியில்லாம அங்க காலேஜ் ல சேர்த்துட்டேன்.”என்ற தேவின் குரலும், தொடர்ந்து தேவ் எக்சிடண்ட் நடந்த பிறகு கூறிய வைகலும் நியாபகத்தில் வந்தது.
மீரா மெதுவாக கண்விழித்தாள். அருகில் தேவ் அவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.அவள் கண்விழித்து பேசும் வரை யாரையும் அவன் அவளை அணுக அனுமதிக்க வில்லை.அவனுக்கு மீராவிடம் பேசி பழைய நியாபகங்கள் ஏதாவது நினைவில் வந்துள்ளதா! என கேக்க வேண்டியிருந்தது.
ஒரு புன்னகையை சிந்தியவாறே தேவ்வை ஏறிட்டவள் சுற்றும் முற்றும் பார்த்து ஹாஸ்பிடல் எப்படி வந்தேன் எனும் பார்வையை வீச ” அம்மு என்ன ஆச்சு? ரெஸ்டூரண்ட்ல நீ மயங்கி விழுந்துட்ட யாரையாவது? ஏதாவது? பாத்தியா?” தேவின் கனிவான குரலிலிருந்த பதட்டம் மீராவுக்கு அப்பட்டமாக தெரிந்தது.
“தெரியல வேத் அத்தான் மெனு கார்ட் தான் பாத்துக்கொண்டிருந்தேன் எப்படி விழுந்தேன்னு தெரியல.அவர், அத்த, அத்து எல்லாரும் கூடவே தான் இருந்தாங்க. ரொம்ப பயந்திருப்பாங்க. எங்க அவங்க?” மிக சாதாரணமாகவே வந்தது அவளின் குரல்.
நிம்மதி பெருமூச்சு விட்டவனாக தேவ் வெளியே சென்று மீரா கண்முழித்ததை சொல்ல எல்லாருமே அவளை சூழ்ந்துக்கொண்டனர்.
லட்சுமி அம்மா கையை பிடித்தவாறு “இப்படி பயமுறுத்திட்டியேமா” என கண்கலங்க சரஸ்வதி அம்மாவும் அவளை அணைத்து ஒரு மூச்சு அழுதார். ரவிக்குமார் அவளின் தலையை தடவியவாறு இருக்க, சரவண சாரும் நேசமணியும் அவளின் கால் இருக்கும் திசையில் நின்றிருந்தனர். ஒவ்வொருத்தராக நலம் விசாரிக்க சைதன்யன் கதவருகே இருந்தவண்ணம் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் பார்வை சொல்வது தான் என்ன?
வினுக்குட்டிக்கு என்ன புரிந்ததோ! மீராவின் கையையும் முகத்தையும் மாறி மாறி தடவியவள் “சு சு ஒன்னும்மில்ல ஒன்னுமில்ல எல்லாம் சரியாகிடும்” என்றவாறே இருக்க அவளை அள்ளி அனைத்தவள் “நா சொல்றதேயே எனக்கு சொல்றியா வினு” என்று முத்தம் வைக்க
அப்பொழுதுதான் சைதன்யனை கவனித்தவள் புன்னகைத்தவாறே அவன் புறம் கையை நீட்ட தாவி வந்து கையை பிடித்தவன் அவளருகே கட்டிலிலே அமர்ந்தான்.
மீரா அவனின் கையை இருகப்பற்றிப்பிடிக்க அவளை இழுத்து அணைத்திருந்தான் சைதன்யன். அவனின் இந்த அதிரடிச்செயலை எதிர் பார்க்காதவளோ அங்கிருந்த அனைவரையம் பாராது கூச்சத்தில் நெகிழ அவனோ அங்கிருந்தவர்களை கிஞ்சத்துக்கும் பொருட்படுத்தவில்லை. இன்னும் அவளை இறுக்கி கழுத்தில் முகம் புதைத்தான்.
பெற்றோர்களின் முகத்தில் இனி இவர்கள் சந்தோசமாக வாழ்வார்கள் என்ற நிம்மதியுடன் ஒவ்வொருவராக வெளியேற “மாப்புள இன்னும் கல்யாணம் ஆகல பாத்து இது ஹாஸ்பிடல் உங்க பெட்ரூமில்ல” என சைதன்யனின் தோளில் தட்டியவாறே ப்ரியா வினுவை தூக்கிச்சென்றாள்.
அனைவரும் சென்றபின்னும் சைதன்யனின் பிடி இருகியதே தவிர விலகவில்லை. மீராவின் கழுத்துப்பகுதியில் ஈரமாக உள்ளது போல் உணரவே அவன் மௌனமாக கண்ணீர் வடிக்கிறான் என்பதை புரிந்துக்கொண்டாள் மீரா.
அவள் மயங்கிச்சரிந்ததிலிருந்து அவள் கண்விழித்தாள் என்ற செய்தி வரும் வரை அவன் ஒரு நிலையில் இல்லை.அவனின் தவிப்பு துடிப்பு எல்லாம் அவள் ஒருத்திக்காக. “உன்ன காதலிப்பதாக உணர்ந்தது தேவுடன் பார்த்த போதென்றால் எவ்வளவு காதலிக்கிறேன் என்று உணர்ந்தது உன்ன மயங்கிய நிலையில் பார்த்த போது தான் ஸ்ரீ” அவன் மனம் துடிக்கும் நொடியெல்லாம் அரற்றியது.
அவன் அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை,மனக்குமுறலை சொல்லவில்லை. அவனது இறுகிய அணைப்பே பறைசாற்றியது அவனது காதலின் ஆழத்தை.
மீராவுக்குமே இந்த அணைப்பு தேவையாய் இருந்தது அவனது முதுகை தடவிக்கொடுத்தவாறே “எனக்கு ஒன்னும் இல்ல சையு ஐம் ஓகே” என்றாள் ஆர்த்மார்த்தமாக.
‘ஜெய்’ என்று அழைக்காமல் ‘சையு’ என்று அழைக்குமாறு சைதன்யன் கேட்ட போது ‘ஏன்?’ என்றவளுக்கு அவளது பாணியிலேயே பதில் கொடுத்திருந்தான் சைதன்யன்.
தனஞ்சயன்ல ‘சயன்’ இருக்கு நீ ‘சையு’ என்றே கூப்டேன் ப்ளீஸ்.
அவன் கேட்டு மறுத்தால் அது மீரா இல்லையே!
ஆனால் இப்பொழுது ஆர்த்மார்த்தமான காதலுடன் அழைத்தாள்.
எவ்வளவு நேரம் அவளை அணைத்திருந்தான் என்பது அவனும் அறியவில்லை அவளும் அறியவில்லை கதவை தட்டிக்கொண்டு தேவ் வரவே தன்னிலைக்கு மீண்டனர் இருவரும். அவளை விட்டு விலகாது அவளை கை வளைவிலேயே வைத்திருந்தான்.மீராவும் அதை உணரவில்லை.தேவும் அதை கண்டுக்காமல் விட்டுவிட்டான்.
மீரா எதை பார்த்து டிஸ்டர்ப் ஆனா என மீரா உண்மையான காரணத்தை கூறாததால் ஒரு டாக்டராக ட்ரீட்மெண்ட் பத்தி யோசித்தவனுக்கு அடுத்த ஸ்டெப் என்ன என்று புரியவில்லை. கல்யாணத்த பண்ணி இருவரும் ஒன்னா இருந்தா போதும் என்று இருந்தவனுக்கு சைதன்யன் மீரா மேல் வைத்திருக்கும் காதலின் ஆழம் புரிய புன்னகைத்துக்கொண்டான்.
உள்ளே வந்தவன் ” மீரா உனக்கு ஒண்ணுமில்ல நீ வீட்டுக்கு போலாம்” என அவளைப்பார்த்து சொல்லியவன். சைதன்யனை பார்த்து “தம்பி வேணும்னா இன்னும் டூ ஹவர்ஸ் கழிச்சு வரவா இத சொல்ல” என்றான் கிண்டல் குரலில்.
அவனின் கிண்டல் தொனியில் முற்றாக தன்னை மீட்டுக்கொண்டவன் “பாத்து செய்ங்க ப்ரோ மாட்டுனா எனக்கு ஒண்ணுமில்ல உங்களுக்கு தான் அடி விழும்” என்றான் குறும்பாக.
எல்லாரையும் நாலு மணித்தியாலங்களுக்கு மேல் கதறவிட்ட மீரா ஒரு வாறு வீடு வந்து சேர மாலையானது.
சந்துருவின் மூலம் விஷயமறிந்த சௌமியா ஆபீஸ் விட்டு வீட்டுக்கு போகும் போது மீராவை பார்க்கவென அவள் வீட்டுக்கு சென்றாள்.
தோழியை கண்டவுடன் கட்டிக்கொண்டவளை இழுத்து அறையின் கதைவடைத்த மீரா சொன்னதை கேட்டு கண்களை அகல விரித்தாள் சௌமியா.
அப்படி என்னத்த சொல்லிட போற அவ கனவு கண்டதை தான் சொல்லி இருப்பா.