Advertisement

                                                        அத்தியாயம் 22

            After 6 years

“ப்ளீஸ் ஷரப், ப்ளீஸ் ஷரப்” ஆன்ஷி தூங்கிக் கொண்டிருந்த ஷரப்பை கெஞ்சிக் கொண்டிருக்க

“சொன்னா கேக்க மாட்டியா? நமக்கு  நம்ம பொண்ணு யாழி போதும்” அவனை முறைத்தவள்

“உங்களுக்கு ஒரு பொண்ணு எனக்கு ஒரு பையன், ப்ளீஸ்” என்று கெஞ்ச யாழினி என்று அழைக்கப் படும் ஐந்தே வயதான யாழினி நீலாதேவி ஷரப்பின் செல்லச் சிட்டு  அன்னையை போல் “ப்ளீஸ்” போட்டவள் தந்தை கண்டுக்காது இருக்க தந்தையின் மேல் ஏறி கன்னம் கடிக்க

“என்ன உங்கம்மா உன்ன ஏவி விட்டாளா? ரெண்டு பேரும் அடி படாம போங்க” என்று விரட்ட அவனை அன்னை, மகள் இருவரும் சேர்ந்து அடிக்க ஆரம்பித்தனர்.  

மருத்துவரிடம் ஷரப் ஆன்ஷியை அழைத்து செல்ல  இருவருக்குமான எல்லாவகை மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்ட பின் ஷரப்பின் மனநிலையை மருத்துவரிடம் ஆன்ஷி சொல்ல

மருத்துவரோ இயற்க்கை கருத்தரிப்பில் மகிமையையும், நன்மையையும் சொன்னவர், வைஷ்ணவி வாடகைத்தாய் தான் ஆன்ஷியின் கரு முட்டைகளை பெற செய்யவேண்டியவைகளையும், அதனால் ஏற்படும் கஷ்டங்களையும் சொல்ல மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது.

ஷரப்பை வளைக்கும் வழி தெரியாது  முழித்தவளை அணுகினால் ஒரு பெண் அது அன்று ஷரப் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பெண். அது அவளின் முதல் குழந்தை ஆனால் அவள் இன்னுரு குழந்தையை சுமந்துக் கொண்டிருக்க  அவ்வழியே வந்தவர்களை கண்டு வண்டியை நிருத்திப் பேச

“ஏன்மா அன்னைக்கு அப்படி வழியில் துடிச்ச, இன்னைக்கி இன்னொன்ன சுமக்கிற? அன்னக்கி அப்படி கத்தினதா சொன்னாரு” என்று ஷரப்பின் காது பட ஆன்ஷி வேண்டுமென்றே கேக்க, பதில் அப்பெண்ணின் பாட்டியிடம் வந்தது

“என்ன சொல்லுற ? குழந்தை பாக்கியம் கடவுள் கொடுப்பது, என்ன வலி என்றாலும் பிரசவ வலி பிள்ளை பெற்றவுடன் சுகமான வலி, முன்ன பின்ன புள்ளய பெத்தா தானே தெரியும், இப்படி எண்ணம் இருக்குறதால என்னமோ கடவுள் உனக்கு  குழந்தை பாக்கியத்தை தரல என்று நினைக்கிறேன். மலடினு பேர் எடுக்காம சமஸ்தானத்துக்கு வாரிசை பெத்துக்க  கொடு” என்றவர் அகல

அந்த பெண் ஏதாவது சொல்வாள் அதை வைத்து ஷரப்பிடம் பேசலாம் என்றிருந்த ஆன்ஷி மலடி என்றதும், அழுதவாறே வண்டியிலிருந்து இறங்கி ஓட ஷரப் யோசனைக்குள்ளானான்.

  

பெண்களுக்கு எல்லாமே கஷ்டம் கடவுள் வரம் கொடுத்தாலும், பூசாரி  வரம் தர மறுக்குறாரே நான் யார் கிட்ட போய் என் கஷ்டத்தை சொல்லுவேன். அம்மா நீ சாகும் போது என்னையும் கூட்டிட்டு போய் இருந்தா இன்னைக்கி மலடி னு பேர் கேட்டிருப்பேனா,  நீ என் வயித்துல  பொறப்பனு ஆசையா இருந்தேனே! அது நடக்காம போகப் போகுதே என்று புலம்பியவாறே அரண்மனையிலுள்ள பூஜையறையில் தஞ்சமடைந்தாள்.    

அப்பொழுதுதான் வைஷ்ணவிக்கும், வ்ருஷாதுக்கும் விஷயம் தெரியவர “என்ன பாய்” என்ற பார்வையோடு வ்ருஷாத் நிறுத்திக் கொள்ள வைஷூ ஷரப்பை லெப்ட் அண்ட் ரைட் வாங்கியிருந்தாள்.  

அன்று தனது ஜீப்பில் பிரசவ வழியால் துடித்த பெண் இன்னொரு குழந்தையை சுமப்பதை ஆச்சரியமாக பார்த்திருக்க, அம் முதிய பெண்மணி பேசியதில் குழம்பிப் போய் இருந்தவன். ஆன்ஷி சாவை பற்றி பேசியதில் கலங்கிய ஷரப் வைஷூ பேசியதில் பெண்களின் கருத்தரிப்பு முதல் பிரசவிக்கும் வரை எல்லாவற்றையும் மருத்துவரை அணுகி தெரிந்து தெளிவு பெற்றவன் ஆன்ஷியிடம் வந்து

“சரி பெத்துக்ககலாம்” என்று சொல்ல ஆன்ஷி கோவத்தின் உச்சிக்கே சென்றாள்.  

அவளின் கோவமுகத்தை கண்டு “என்னாச்சு ஆன்ஷி என்று பொறுமையாக கேக்க

“கடமைக்காக குழந்தை தேவையில்லை, காதலோடு தந்தா வாங்கிக்கிறேன்”  அவள் சொன்ன விதம் சிரிப்பை மூட்ட

“அந்த காதலாலதான்  எல்லா பிரச்சினையும்” என்று முணுமுணுக்க ஆன்ஷி அவனை திரும்பிப் பார்க்கும் போது அவளை இழுத்து இறுக அணைத்தவன்  முத்தமிட்டவாறே “சொல்லுடி என் காதல்ல எங்க குறைய கண்ட” என்று கேக்க ஆன்ஷிதான் முழிக்கும் படியாகிற்று. பிரச்சினையே அவனின் இதயம் உருகும் காதலாலே அன்றி வேறில்லை.

பெண்கள் ஆண்களின் அடிமைகள் என்று நினைத்தவனை காதல் என்ற ஒற்றை சொல்லால் ஆன்ஷி கட்டி வைக்க, இதயம் கசியும் காதலால் “பிரசவ வழியேனும்  என்னால் உனக்கு வர விட மாட்டேன்” என்று ஷரப் நினைத்தது அவனின் அறியாமையா? ஆன்ஷியி மேல் அவன் வைத்த ஆழமான  தூய காதலா?

ஒருவாறு ஆன்ஷி கர்ப்பமடைய ஷரப்பின் பதட்டம்  ஆரம்பமானது மசக்கை அவளை படுத்த ஊன், உறக்கம் இன்றி  ஷரப் அவள் அருகிலேயே இருந்து கவனிக்க வேலையெல்லாம் வ்ருஷாத்திடம் ஒப்படைத்திருந்தான்.

நான்காம் மாதம் தொடங்கவும் ஆன்ஷி சற்று தெம்பாக நடமாட ஷரப் ஆசுவாசமடைந்தான். குழந்தை வயிற்றில் வளர வளர  உடல் மாற்றத்தை கண்டு ஆன்ஷியின் முகம் பூரிப்பில் ஜொலிக்க

உலகில் உள்ள எல்லா செல்வங்களையும் கொண்டுவந்து அவளின் காலடியில் கொட்டினாலும் இந்த சந்தோச பூரிப்பை ஆன்ஷியின் முகத்தில் காண முடியாது என்பதை தெளிவாக உணர்ந்துக் கொண்டான் ஷரப்.

பிரசவ நாள் நெருங்க நெருங்க ஷரப்பின் நெஞ்சில் பாரம் ஏறிக்கொள்ள மருத்துவர் சொன்ன திகதிக்கு முன்பே ஆன்ஷியை மருத்துவமனையில் அனுமதித்திருந்தான்.

பிரசவ அறையில் ஆன்ஷி கத்திய கத்தலில் ஷரப் அழுத அழுகை இந்த ஜென்மத்தில் அவனால்  மறக்க முடியாத நாளானது. ஆன்ஷி வலியால் துடித்தவாறே அவனின் கையை இறுகப் பிடித்திருக்க அவளின் பூப் போன்ற கைகளுக்கு இவ்வளவு வலிமையா? என்பது போல் ஷரப்பின் கை கன்றி சிவந்திருக்க அவனின் பெண்ணரசி பூமியில் ஜனித்தாள்.

மருத்துவர் சிசுவை அவன் கையில் கொடுத்த போது அதன் மென்மையிலும், அழகிலும் லயித்தவன்,  குழந்தையை  தொடும் பொது என்ன மாதிரி உணர்ந்தான் என்பது அவனே அறிவான். ஆன்ஷி என்ற பெண் அவனின் காதல் தேவதை என்றால்? அவனை ஆள பிறந்தால் அவனின் பெண்ணரசி.

தனது அன்னையின் பெயரை வைக்க ஆன்ஷி ஆசைப் பட்டாலும் அன்னையின் தலைவிதியை  கண்டு அஞ்சியவளாக ஷரப்பின் அரச பரம்பரையின் பெயரும் வரும் படி தனது செல்ல மகளுக்கு யாழினி நீலாதேவி என்று பெயரிட்டாள்.

ஐந்தே வயதான அந்த செல்லச்சிட்டு அன்னையுடன் சேர்ந்து தந்தையை வெளுத்து வாங்க காரணம் சென்னையிலிருந்து வந்த லட்சுமி அம்மாவின் போன் தான். போனில் அவர் கூறியதாவது மீரா மீண்டும் கர்ப்பம் அடைந்திருக்கிறாள் என்பதே.

ஆன்ஷிக்காகவே வைஷ்ணவி பெண்ணை பெற்றுக் கொள்ளும் ஆசையை கை விட்டவள் நீலாவுடன் பின்னிப் பிணைந்தாள்.

“உங்க அண்ணா காதல் மன்னன் போல் வருசத்துக்கு ஒண்ணா ரிலீஸ் பண்ணி கிட்டு இருக்காரு. அஞ்சு பசங்க பொண்ணு வேணும்னு இன்னொரு தடவ பெத்துக்க போறாங்க. நான் எனக்கு பையன் வேணும்னு கேக்குறேன் கண்டுக்காம இருக்கீங்க” என்று ஆன்ஷி பொரிய

“நீலு பொறக்கும் போது என்ன சொன்னேன்? ஆணோ, பொண்ணோ எந்த குழந்தையானாலும் ஒரு குழந்தை தான் வேற குழந்தை வேணான்னு சொன்னேனே! சொல்றப்போ மண்டைய மண்டைய ஆட்ட வேண்டியது அப்பொறம் ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு நீலுவ வேற உசுப்பேத்தி எனக்கெதிரா ஏவி விடுறியா” என்றவாறே ஆன்ஷியின் கன்னம் கிள்ள

அவனின் கையை தட்டி விட்டவள் “நா எப்போ மண்டைய ஆட்டினேன்? பொய் சொல்லாதீங்க என்று கன்னத்தை தடவியவாறே முறைக்க

“ஆமா மம்மி சொல்லவே இல்ல” என்று யாழினி குட்டி நடுவில் வர

“வாடி அம்மா கொண்டு. உங்கம்மா என்ன சொன்னாலும் ஆமா சாமி போடுற. போ உன்ன டைகர்ல கூட்டிட்டு போக மாட்டேன். என் இடுப்புல இருக்குற குட்டிக் கத்திய  தம்பி பாப்பாக்கு கொடுக்குறேன். அப்பொறம், குதிரைல சவாரி செய்ய சொல்லி தர மாட்டேன், யொத்தாவ எப்படி பிடிக்கனும் னு சொல்லி தர மாட்டேன். எல்லாம் தம்பி பாப்பா வந்தா அவனுக்கு தான் போகும்” என்று ஏற்றி விட

தந்தையின் சலுகைகள் மொத்தம் தனக்கில்லை என்றதும் உசாரானவள். “மம்மி உனக்கு எதுக்கு இப்போ தம்பி பாப்பா? போ போய் எனக்கு சாப்பிட எடுத்துட்டு வா” என்று சொல்ல

“உங்க பாபா {அப்பா} கிட்டயே சொல்லி கேட்டு வாங்கி சாப்பிடு நான் விரேன், விராட் கிட்ட போறேன்” என்று எழுந்துக்க கொள்ள அன்னையின் தந்தையின் சண்டையை புரியாது பாத்திருந்தால் யாழு.

“எங்கடி ஓடப் போற” என்று ஷரப் ஆன்ஷியின் கையைப் பிடித்து இழுக்க பூக் குவியலாக அவன் மீது விழுந்தவளை இறுக அணைக்க

“விடுங்க… என்ன செய்றீங்க யாழு முன்னாடி” என்று ஆன்ஷி திமிர

“உனக்கு பையன் தந்தா எனக்கு என்ன தருவ?”

“என்ன தரணும். அதான் ஏற்கனவே பொண்ணு தந்துட்டேனே” என்று ஆன்ஷி நொடித்துக் கொள்ள

“யாழு வந்ததிலிருந்து  நீ என்ன கவனிக்கிறதே இல்ல இதுல பையனும் வந்தா என்ன அறையிலிருந்து வெளி நடப்பு செய்ய சொல்லுவ, அதனால இப்போவே பேரம் பேசி ஒரு முடிவுக்கு வரலாம்” என்று ஷரப் ஒப்பந்த பத்திரத்தை நீட்ட.

“யாரு நான் கண்டுக்கிறதில்லயா? பொண்ணு வந்ததிலிருந்து அவள  தூக்கிக் கிட்டு சுத்துறீங்க, ராஜஸ்தானை விட்டு எங்க போனீங்க? தாஜ்மகால் பாக்க கூட்டிட்டு போங்கனு எவ்வளவு நாள் கேட்டுக் கிட்டு இருக்கேன்? நான் உங்கள வெளிநடப்பு செய்ய சொல்வேனா? என்று அடிக்க தொடங்க

அவளின் கைகளை விளக்காது “ஒரு பையன் போதுமா? இல்ல இன்னும் வேணுமா?” சம்மதம் சொன்னதை புரியாத ஆன்ஷியோ  

“முதல்ல பையனுக்கு வழி சொல்லுங்க” என்று அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொள்ள

 “நானும்” என்றவாறே நீலாவும் அவன் மேல் பாய்ந்தாள்.

அடுத்து வந்த நாட்களில் ஆன்ஷியையும் யாழினையும் அழைத்துக் கொண்டு டில்லி பறந்தான் ஷரப் இரண்டாவது தேன்நிலவை கொண்டாடுவதற்கு.

*******************************************************************

“யாரு போன்ல”

“லக்ஷ்மி மா தான். என் அண்ணனுக்கு ஒரு வழியா பொண்ணு பொறந்தாச்சு” ஷரப் புன்னகைக்க ஆன்ஷியின் முகத்திலும் புன்னகை தொற்றிக் கொண்டது.

“எதுக்கு யாழிய தூக்கி சுமக்கிற? அவ கால் வேற வயிற்றுல இடிக்குது” நீலுவின் முகம் சுருங்குவதை கண்டவன்   “அவ தனியா எல்லா வேலைகளையும் செய்வா, தம்பி பாப்பா வந்தா அவதான் பாத்துக்க போறா. இல்லையடி செல்லம்” என்று யாழினியிடம் கேட்டவன்  ஆன்ஷியை கடிந்தவாறே குழந்தையை தூக்க

“நான் தூக்கி சாப்பிட வைக்கலானா சாப்பிட மாட்டா” என்று ஆன்ஷி முகம் சுருங்க

அவளின் வயிற்றில் கை வைத்தவன் “என் பையன் என்ன சொல்லுறான்? அம்மாவை படுத்துறானா?” என்ற உடன் யாழினியும் ஆன்ஷியின் வயிற்றில் கை வைத்து தம்பியுடன் பேசலானாள்.

“ஆன்ஷி இந்த ஜூசை குடி, எப்போ கோத் பராய் {வளைகாப்பு} வைக்கலாம்” என்று வைஷூ உள்ளே வர  

“ஏழாம் மாசம் பொறந்தவுடனே வச்சிடலாம். வளைகாப்பை சின்ன பங்க்ஷனா பண்ணலாம் ” என்று ஆன்ஷி சொல்ல அவளை முறைத்தான் ஷரப்.

“லக்ஷித் போன் பன்னானா?” ஷரப்  கேக்க

“ஒவ்வொரு விஷயத்தையும் கத்துகிறதுல ரொம்ப ஆர்வமா இருக்கான்”  வைஷூ சொன்னாள்

“இப்போவாச்சும் அவனுக்கு ஒரு நல்ல வழிய காட்ட முடிஞ்சதே” ஷரப் முகம் மலர்ந்தான்.

நீலு வா பாட்டியும் தாத்தாவும் வீடியோ கால் பண்ணுவாங்க நாம பேசலாம் என்று வைஷ்ணவி யாழினியை அழைத்து சென்றாள்.  ஆம் பத்மாவும், தேஜ்வீரும் வைஷூ  குழந்தைகளை பார்க்கக் கூட அரண்மனைக்கு வரவில்லை. அதனால் வாரத்துக்கு ஒரு தடவையாவது வீடியோ காலில் பேச வேண்டும் என்ற உத்தரவோடு   குழந்தைகளை கணவாவது வருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களை அவர்களின் வழியில் செல்ல விட்டுவிட்டனர்.

*******************************************************************

“ஷரப் விளையாடாதீங்க, என் மகனுக்கு நான் தான் பெயர் வைப்பேன்”

“அடியேய் பொண்ணு பொறந்தப்போவும் நீ தான் பேர் வச்ச, என் பையனுக்காவது நான் பெயர் வைக்கிறேன்” மாறி மாறி ஷரப்பும் ஆன்ஷியும் வாய் சண்டை இட

“கொஞ்சம் உங்க ரெண்டு பேரோட சண்டையையும் நிறுத்துறீங்களா? என் தம்பிக்கு நான் தான் பேர் வைப்பேன்” யாழினி நீலாதேவியின் குரல் வசுந்தராதேவியை போல் கனத்து ஒலித்தது.

“ஆமா எனக்கு யார் பேர் வச்சாங்க? யாழினி கேக்க

“அது…” என்று ஆன்ஷி இழுக்க

“அவங்க ஒரு முக்கியமான நபர் பிறகு சொல்லுறேன்” என்று ஷரப் கண்ணடித்தான். {அது யாரென்று யோசிச்சு  கிட்டே இருங்க, சத்யா செல்வி குழந்தைகளுக்கும் அவங்க தான் பேர் வைக்க போறாங்க}

அரண்மனை விழா கோலம் பூண்டது   அது சமஸ்தான வாரிசின் வருகையினால், வளைக்காப்பை ஆன்ஷி சிறியதாக நடத்தியதால் மகனின் வரவை கொண்டாட சொந்த பந்தங்கள் எல்லாருக்கும் அழைப்பு விடுத்திருந்தான் ஷரப்.

  

“ஜெஷான் ஜெஷான் ஜெஷான்” [clear ] யாழினி தான் காதில் சொன்னாள் ஒற்றைக் கண்ணை திறந்து பார்த்து சிரித்தான் அரண்மனையின் அடுத்த வாரிசு நீல் ஜெஷான் சௌதாகர்.

*******************************************************************

“பாய் அந்த ஹரிலாளோட அல்லக் கை கொஞ்சம் பேர கூட்டு சேத்து கிட்டு ஓவரா ஆடுறான்” வ்ருஷாத் சொல்ல

“அவனுங்கள தூக்கிடு” ஷரப் அமைதியாகவே சொல்ல

“அதெல்லாம் பக்காவே பண்ணிட்டேன். விருந்தினர் மாளிகைல இரகசிய அறைல இருக்கானுங்க” வ்ருஷாத் அசால்டாக சொல்ல ஒரு மெச்சுதலான பார்வையை ஷரப் அவன் புறம் வீச

“என்ன விருந்தினர் மாலிகைனு அடி படுது? அப்படி என்னதான் அங்க இருக்கு எந்தநாளும் அங்க ஓடுறீங்க” என்றவாறே ஆன்ஷி வர

“அங்க ஒரு பெரிய இரகசியம் இருக்கு அண்ணி” என்று வ்ருஷாத் சொல்ல ஷரப் நடுங்கி தான் போனான்.

ஷரப் வ்ருஷாத்தை முறைக்க அதை பொருட்படுத்தாது “அங்க ஒரு அறைல உங்கள ஓவியமா வரஞ்சி வச்சிட்டு அண்ணா புலம்புறத பாக்கணுமே! என்ன அண்ணி அண்ணனை இப்படி பயமுறுத்தி வச்சிருக்கிறீங்க. உங்க கிட்ட சொல்ல முடியாததெல்லாம் அந்த ஓவியத்து கிட்ட  சொல்லி புலம்புறாரு”

ஓவியத்தை பற்றி பேசவும் சற்று ஆசுவாசமடைந்தான் ஷரப்.

‘நிஜமாவா” என்று கண்கள் மின்ன ஆன்ஷி கேக்க “ஆமாம்” என்று ஷரப் தலையசைக்க

“அப்ப அந்த ஓவியத்த அரண்மனைக்கு ஷிப்ட் பண்ணிட வேண்டியது தான்” என்றவாறே வ்ருஷாத் அகல

   ஆன்ஷியிடம் பொய் சொல்ல பிடிக்காமல் தலையசைத்து விடை பெற்றவன் வேட்டையை தொடர விருந்தினர் மாளிகையை நோக்கி புறப்பட்டான்.

*******************************************************************

“ஆ அப்படித்தான், இந்த பக்கம் வாளை சுழற்று, அங்க பாரு விராட் இடது பக்கத்துல இருக்கான்” என்று தனது செல்ல மகளுக்கு வாள் பயிற்சி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான் ஷரப்

“டாடி எப்போ எனக்கு அந்த குட்டி கத்திய தர போறீங்க?” யாழி கண்கள் மின்ன கேக்க

“அத உங்கப்பா தருவான்னு நெனைக்கிற” என்ற வாறே  வ்ருஷாத் அமர

“நீ முதல்ல வாள் சண்டை, துப்பாக்கி சுடுறது எல்லாம் கத்துக்க அப்போ கண்டிப்பா தருவார்” என்றவாறே வைஷ்ணவி அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.

“எங்களுக்கு இன்னும் அந்த மாதிரி சின்ன கத்தி தரவே இல்லையே! நீலுக்கு மட்டும் எதுக்கு” விராட்டும், விரானும் முகம் தூக்க

“வாள் வீச்சுல யாரு திறமையை காட்டுறாங்களோ அவங்களுக்கும் குட்டிக் கத்தி வழங்கப் படும்” ஷரப் சொல்ல குட்டீஸ் முழு மூச்சோடு வாள் பயிற்சியில் இறங்கி விட்டனர்.

ஆன்ஷி ஜெஷானை தூக்கிக் கொண்டு வர வேலையாள் அருந்த குளிர் பானங்களோடு வர விரானும், விராட்டும் ஆன்ஷியின் அருகில் ஓடி வந்தனர்.

தனது கணவனும், மகளும் வாள் சண்டையில் லயித்திருக்க ஆன்ஷியின் கவனம் அவர்களிடத்தில் யாழி தோற்றத்தில் ஆன்ஷியை கொண்டிருந்தாலும், குணத்திலும், வீரத்திலும், பாசத்திலும்  தந்தையை கொண்டு இருக்க செயல்களும் அவனை போலவே இருந்தன. அவள் வாளை சுழற்றுவதை பாத்திருந்தவள் கணவன் தன் மீது வீசும் பார்வையை கவனிக்க தவறினாள்.   

எத்தனையோ முறை ஷரப் ஆன்ஷியிடம் வாளை கொடுத்து பயில்விக்க முயற்சி செய்த போதெல்லாம் அதை கையில் பிடிக்கவே நடுங்கி விட்டாள். முதல் முதலாக யாழினி லாவகமாக வாளை கையாள்வதை கண்டு அதிர்ந்தவள் ஷரபோடு சண்டைபோட

“அது அவ உயரத்துக்கு இருக்கும் குட்டி வாள், அதால வெட்டவும் முடியாது. இதுக்கே அலறுற நாளையிலிருந்து குதிரை சவாரி செய்ய வைக்க போறேன்” என்றதும்

“என்னது? அவ பொண்ணுங்க அதெல்லாம் உங்க பையனோடு வச்சிக்கோங்க அவளை விட்டுடுங்க” என்று கண்ணை சுருக்கி கெஞ்ச

“எதுக்கு இன்னொரு அழு மூஞ்சி ஆன்ஷியா மாத்தவா” சிரிக்காமல் சொல்ல

திருதிரு என்று முழித்த ஆன்ஷி அவனை மொத்த ஆரம்பித்தாள்.

இன்று யாழினி ஆர்வமாக கற்றுக் கொள்வதை பார்த்தவள் “பரம்பரை ரெத்தம்” என்று முணுமுணுக்க

“என்ன எங்களை திட்டுற மாதிரி இருக்கு என்று ஷரப் அவள் அருகில் அமர்ந்துக் கொள்ள

“நான் எதுக்கு திட்ட போறேன்” அவளை அணைத்துக் கொண்டவன்

“தேங்க்ஸ் ஆன்ஷி. எப்படி எப்படியோ போக இருந்த என் லைப்ல வந்து, எனக்கே எனக்கா உன்னையும் தந்து, என் வாழ்க்கையை முழுமையாக்கிட்ட” என்று அவள் கையில் முத்தம் வைக்க அவனின் நெஞ்சில் சாய்ந்தாள் ஆன்ஷி.

மடியில் இருந்த ஜெஷான் தந்தையின் கன்னம் தடவி சிரிக்க அவனை தூக்கி தட்டாமாலை சுற்றினான் ஷரப், “நானும் நானும்” என்றவாறே யாழி, விராட், விரான் ஓடி வர

“எப்படி இருந்த பாய் இப்படி ஆகிட்டாரு” என்று வ்ருஷாத் சொல்ல  

“எப்படி ஆகிட்டாரு? நல்ல மாற்றம் தானே! கண்ணு வைக்காத” வைஷூ அவனுடன் சண்டை போட ஆரம்பிக்க புன்சிரிப்போடு அவர்களை பாத்திருந்த ஆன்ஷியின் கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் சரேல் என்று விழ ஆன்ஷியை பார்த்த ஷரப் தலையசைத்து என்ன வென்று கேக்க புன்னகையையே பதிலாக கொடுத்தாள்.

அது ஷரப்பின் வேரறுக்கும் கண்ணீர் துளியல்ல நெஞ்சை குளிர் விக்கும் சந்தோச சாரல் துளி.

ஆன்ஷி காதல் விதை தூவ அது ஷரப்பின் மனதில் வேரூண்டி இன்று கிளை பரப்பி முழு சமஸ்தானத்துக்கே நிழல் கொடுக்க அவர்களின் மகிழ்ச்சியை நாமும் கொண்டாடி விடைபெறுவோமாக.

                                                              சுபம்  

Advertisement