Advertisement

                                         அத்தியாயம் 18

பிரதாப்பின் மூலம் பெற்றுக் கொண்ட தகவல்களை இன்கம் டெக்ஸ் டிபார்ட்மெண்ட்டுக்கும், பதிமூனு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காணொளியை பாலியல் குற்றப் பிரிவுக்கும் அனுப்பி வைத்தான் ஷரப்.

“என்ன பாய் அடுக்கடுக்கா லஞ்சம் வாங்கி இருக்கான். அத மாட்டி விடாம இருக்கீங்க?” வ்ருஷாத் கடுப்பாக கேக்க

“சொத்து மதிப்பை பற்றி சொல்ல முடியாம திணறி அவங்க கேக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம முழிக்கும் போது அவங்க தானா வருவாங்க. இல்லனா வரவச்சிடலாம்” ஷரப் கன்னக்குழி விழ புன்னகைக்க

“ஹப்பா ரொம்ப நாளைக்கு பிறகு இப்படி அம்சமா சிரிக்கிறீங்க” வ்ருஷாத் ஷரப்பின் கன்னக்குழியை தொட்டு சொல்ல

“சீ தொடாத”

“ஏன்? ஏன்? ஏன்? அண்ணிக்கு மட்டும் தான் சொந்தமா? நல்லா சரக்கடிச்சு மாட்டாயா கிடந்தப்போ நான் தான் தூக்கிச் சுமந்தேன். மறந்துடாதீங்க பாய்” என்று கண்ணடிக்க

“ஆமாடா சரக்க தொட்டே மாசக்கணக்காகுது”

“சரக்கடிக்கணும் போல இருக்கா?” வ்ருஷாத் கேலியாய் கேக்க

“உங்க அண்ணி முகத்தை தூக்கி வச்சிக்க கிட்டு இருக்கா. இதுல சரக்க வேற அடிச்சி அவ வெறுப்பை சம்பாதிக்க என்னால முடியாதுடா”  

“ஆமா இன்னுமா அண்ணிய சமாதானப்படுத்தாம இருக்கீங்க” வ்ருஷாத் யோசனையாக புருவம் சுருக்க

“நா கிட்ட போனாலே அழுறா, கொஞ்சம் நாள் போகட்டும்” சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஷரப்பின் போன் அலற அதை இயக்கி காதில் வைத்தவன் “சீக்கிரம் கிளம்பு” என்று டைகரை நோக்கி ஓட

“என்னன்னே ஆச்சு இந்த அர்த்த ராத்திரியில யார் போன்ல” என்றவாறே வ்ருஷாத் ஷரப்பின் பின்னால் ஓடி ஜீப்பில் ஏற ஜீப்பை கிளப்பினான் ஷரப்.

இவர்கள் வெளியே செல்வதை பாத்திருந்த ஆன்ஷி காவலாளி ஜீப் சென்ற உடன் கேட்டை பூட்டமுன் வெளியேறுவது எப்படி என்று யோசித்து வைத்திருக்க அதன் படி வெளியேறி இருந்தாள்.

இரவில் வேட்டை நாய்கள் உலாவினாலும் ஆன்ஷியை அவை ஒன்னும் செய்யவில்லை. அதை குறித்துக் கொண்டவள் இரவில் தான் வெளியேற முடியும் என்பதை உறுதி படுத்தி இருந்தாள்.

விருந்தினர் மாளிகையின் பியூஸ் போர்டில் உள்ள மின்சார வாயிலின் மின்விசை மாற்றுக்குமிழை அணைத்தால் காவலாளியோ கேட்டை பூட்ட முடியாமல் குரல் கொடுக்கும் போது அவரை திசை திருப்பி விட்டு வெளியேறலாம்.

அதற்க்கு மின்விசை மாற்றுக்குமிழை அணைக்க யாரவது அவளுக்கு உதவ வேண்டி இருந்தது. அது மாத்திரமல்லாது அந்த இரவு வேளையில் வண்டியும் வெளியேறவேண்டி இருக்க ஆன்ஷியின் திட்டம் நாள் தள்ளிப் போய்க் கொண்டிருந்ததே ஒழிய இலகுவாக அது அவளுக்கு கிட்ட வில்லை.

ஷரப் மற்றும் வ்ருஷாத்தை கண்காணித்துக் கொண்டே இருந்தவளுக்கு அவர்கள் வெளியே செல்வதை புரிந்துக் கொண்டவள், சிறுமியை சுவிட்ச் போர்டின் பக்கம் அனுப்பி கேட் அருகே வர ஜீப் சென்ற உடன் காவலாளி கேட்டை பூட்டும் போதே ஸ்விச்சை அணைத்திருக்க கேட்டோடு சேர்ந்து சுற்றி உள்ள மின்விளக்குகளை அணைக்கப் பட இருட்டில் ஆன்ஷி இலகுவாக வெளியேறி இருந்தாள்.

அவள் வெளியேறுவதை வேட்டை நாய்கள் கண்டு கொண்டு குறைக்க அவைகளை அடக்கினர் ஷரப்பின் ஆட்கள். வீட்டை சுற்றி காவலுக்கு மெய்க்காப்பாளர் இருந்தும் ஆன்ஷி ஷரப்பின் பாதுகாப்பு வலயத்தை  விட்டு வெளியேறி இருந்தாள்.

அன்று இரவில் சென்ற பாதையினூடாகவே பயணித்தவள் போகும் வழி எங்கும் திரும்பித் திரும்பி பார்த்தவாறே வர அவளை யாரோ பின் தொடர்வது போலையே இருக்க நடையை எட்டிப் போட்டவள் சில கணங்களை ஒடத் தொடங்கினாள்.

வசுந்தராதேவியின் ஆட்கள் இருவர்  கண்கொத்திப் பாம்பாய் விருந்தினர்  மாளிகையை நோட்டம் வீட்டுக் கொண்டிருக்க அதை கண்டு வ்ருஷாத் ஷரப்பிடம் சொல்ல

“விடுடா இருந்துட்டு போகட்டும். நமக்கு பாதுகாப்பு தானே” என்று அசால்டாக விட்டு விட

விருந்தினர் மாளிகையை நோட்டம் விட்ட இருவரும் ஆன்ஷி வெளியேறுவதை கண்டு வசுந்தராதேவியிடம் தகவல் சொல்ல ஆன்ஷியை கொன்று விடுமாறு வசுந்தராதேவி உத்தரவிட்டிருக்க ஆன்ஷியை பின் தொடர்ந்தனர்.

திடீரென ஆன்ஷி ஒடத் தொடங்கவும் அவளை துரத்தியவர்கள் பாதையின் இருளில் அவள் மாயமாய் மறைந்ததை கண்டு திகைத்து வசுந்தராதேவியிடம் என்ன பதில் சொல்வதென்று முழித்துக் கொண்டிருந்தனர்.

இருவர் துரத்தியதால் வழி தவறி வீட்டுக்கு செல்லாது வேறு திசையில் ஓடிக் கொண்டிருந்தாள் ஆன்ஷி. அவள் முன் ஒரு வண்டி வந்து நின்றது.

“என்ன பாய் எதுக்கு சடன் பிரேக் போட்டு வண்டிய நிறுத்துனீங்க” வ்ருஷாத்  ஷரப்பை ஏறிட

“என்னமோ தெரியல மனசு ஒருமாதிரி இருக்கு. ஆன்ஷிக்கு ஏதாச்சும் ஆபத்து” ஷரப்பின் பேச்சில் குறுக்கிட்ட வ்ருஷாத்

“இதெல்லாம் டூ மச். டூ டூ மச். அண்ணி மாளிகையில பலத்த பாதுகாப்போடு இருக்காங்க. அவங்க அம்மா தான் ஹாஸ்பிடல்ல அசைஞ்சாங்கணு பறந்து கிட்டு இருந்தீங்க. வண்டிய எடுங்க” வ்ருஷாத் கடுப்பாகவே சொல்ல புருவம் சுருக்கியவாறே வண்டியை மருத்துவமனைக்கு செலுத்தினான் ஷரப்.

ஆம் மனீஷிடம் ஆன்ஷியை பற்றி விசாரிக்கும் போது  மீனாட்ச்சியை ரத்தவெள்ளத்தில் கண்ட மனீஷ் “என் பொண்டாட்டியை  காப்பாத்து” என்று சொன்னது ஷரப்பின் காதில் தெள்ளத்தெளிவாக விழ மீனாட்ச்சியை மருத்துவ மனையில் அனுமதிக்குமாறு உத்தரவிட்டிருந்தான் ஷரப். கூடவே மனிஷும் இருக்க அவனை அங்க இருந்தே தூக்கி பிரானா மீன்களுக்கு இரையாக்கி இருந்தான்.

மீனாட்ச்சி தலையில் பலமாக அடி பட்டிருக்க காப்பாத்துவது ரொம்ப கஷ்டம் என்று டாக்டர் கையை விரிக்க ஆன்ஷியை தேடும் வேட்டையில் இறங்கி இருந்தான் ஷரப். மீனாட்ச்சியின் உடல் நலத்தில் சிறிது முன்னேற்றம் இல்லாத நிலையில்  அவர் கோமாவில் விழுந்தார். அவரை காப்பது கஷ்டம் என்ற நிலைமையிலும் மருத்துவமனையில் ஷரப் அவரை வைத்து மருத்துவம் பாக்கலானான்.

தலையில் ஒரு அறுவை சிகிச்சை செய்தால் உயிர் பிழைப்பார். இருந்தாலும் கோமாவில் இருந்து எழும்புவாரா என்று தெரியாது. உயிர் பிழைத்தாலும் உடல் பாகங்கள் செயல் இழக்க வாய்ப்பு இருக்கு. சாகும் வரை கட்டிலில் இருக்க நேரிடும். என்றெல்லாம் மருத்துவர்கள் சொன்னாலும். ஆன்ஷி என்ற பெண்ணின் தாய் மீனாட்ச்சி என்ற போது ஷரப் மருத்துவர்கள் சொன்ன எல்லா வற்றையும் செய்தான்.

ஆன்ஷியை தடாலடியாக திருமணம் செய்தவன் ராஜஸ்தான் திரும்பும் போது ஆன்ஷியின் தாத்தா, பாட்டியிடம் சொன்னது மீனாட்ச்சி உயிருக்கு போராடும் நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்பதையே!  

ஆன்ஷிக்கு தெரிந்தால் தங்கமாட்டாள் என்று ஷரப் ஆன்ஷியிடமிருந்து மறைத்து விட்டான்.  தாத்தா, பாட்டியின் அழுகையையும் கேலிபேசி சமாதனப் படுத்தியவன் ஆன்ஷியிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டான்.

மீனாட்ச்சின் அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்திருந்தாலும் பிழைக்க மாட்டார் என்றிருந்தவரின் “விரல் அசைந்தது” என்று மருத்துவமனையிலிருந்து போன் வரவே வ்ருஷாத்துடன் கிளம்பி இருந்தான் ஷரப்.

ஆன்ஷியிடம் மீனாட்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதை சொல்லி இருக்க வேண்டுமோ?

ஆன்ஷியை மருத்துவமனைக்கு அன்னையை பார்க்க அழைத்து சென்றிருக்க வேண்டுமோ?

***********************************************************

“என்னடா சொல்லுறீங்க வெளிய வந்தவளை  கோட்ட விட்டுட்டீங்களா?” வசுந்தராதேவி கோபமாக கத்த

“அந்த பொண்ண  போலீஸ் வண்டில கூட்டிட்டு போய்ட்டாங்க?”

“போலீஸ் வண்டியா? பிராத்தல் கேஸ்ல அரெஸ்ட் பண்ணாங்களா?”

“தெரியல. போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் பாத்தோம் அப்படி யாரையும் அரெஸ்ட் பண்ணதா எந்த ரெகார்டும் இல்லயாம்”

“என்ன செய்வீங்களோ! ஏது  செய்வீங்களோ! அவ செத்துட்டான்னு எனக்கு தகவல் வரணும்” வசுந்தராதேவியின் கர்ஜனை குரல் அரண்மனை முழுவதும் எதிரொலிக்க நடு நடுங்கிப் போனாள் வைஷ்ணவி.

“வணக்கம் தலைவரே!”

“வாய்யா போலீசு, என்னய்யா அர்த்த ராத்திரில போன் பண்ணி பாக்கணும், முக்கியமான விஷயம்னு சொன்ன” ஹரிலால் தர்மேந்திரனிடம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே கைகட்டப்பட்ட ஒரு பெண் கோணிப்பையால் தலையிலிருந்து இடுப்புவரை மூடப்பட்டு இழுத்துவரப்பட்டாள்.

“யோவ் யாரு இவ, எப்போ தொழில மாத்தின?” என்று கேலி செய்தவர். “அது சரி போலீஸ மாமான்னு சும்மாவா கூப்புடுறாங்க” என்று சிரிக்க

அந்த வெக்கம் கேட்ட போலீஸும் “ஈ….” என்று இளிக்க கோணிப்பையினுள் இருந்த ஆன்ஷி தடுமாறினாள்.

கோணிப்பையை விளக்கிய தர்மேந்திரன் “பொண்ணு யாரென்று தெரியுமா?”

ஆன்ஷியை கண்டு சந்தோசத்தில் குதித்த ஹரிலால் தர்மேந்திரனை கட்டிக்க கொள்ள ஆன்ஷியின் வாயும் கட்டப்பட்டிருக்க கத்தமுடியாதவள், எங்க இருக்கிறோம் என்று சுற்றி சுற்றி பார்க்க அவளை இழுத்து சோபாவில் அமர்த்திய ஹரிலால் கதை சொல்ல ஆரம்பித்தார்.

“ஷரப் பொண்ணுங்கள வச்சிருப்பான்னு தெரியும். கட்டிக்கிட்டானு சொன்னா எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கு. உன் மேல அவ்வளவு காதலா?” என்று வியந்தவாறே கேட்டவர்.   

“அன்னைக்கி உன் அப்பன் உன்ன என் கிட்ட வித்தப்போ பக்கா ஹீரோ என்ட்ரி கொடுத்து உன்ன என்கிட்ட இருந்து காப்பாத்திட்டு போனான்” என்று இடியிடி  என சிரிக்க  

“அப்போ ஷரப்  என்ன கடத்தலயா? காப்பாத்தினானா? உண்மையாகவே என்ன காதலிக்கிறானா?” தன் காதல் பொய்த்து போகவில்லை என்ற சந்தோசத்தில் ஆன்ஷி முதல் முறையாக ஆனந்தக் கண்ணீர் வடிக்க ஷரப் பெண்களுடன் உறவு வைத்திருந்தான் என்பது கூட அக்கணம் ஆன்ஷி மறந்தாள்.

“என்னம்மா நீ பொண்ணுங்க அழுதாலே எனக்கு பிடிக்காது” என்ற ஹரிலால் “உன் புருசனுக்கு நீ என்றா உசுராமே. உனக்கு ஒன்னென்ரா ஊரையே கொளுத்துவானாமே. இப்போ உன்ன அணு அணுவா அனுபவிக்க போறேன். உன் புருஷன் என்ன பண்ணுறான்னு பாப்போம்” ஹரிலால் ஆன்ஷியின் மேனியை கண்களால் வருடியவாறே சொல்ல அருவருப்பில் முகம் சுளித்தாள் ஆன்ஷி.   

“தலைவரே! எனக்கும்” என்று   தர்மேந்திரன் தலையை சொரிய அவன் கேட்டது புரிய ஹரிலால்

“உனக்கு இல்லாமலா, நீ நெனச்சி இருந்தா தனியாகவே அனுபவிச்சு இருக்கலாம். என் கிட்ட கூட்டிட்டு வரணும்னு தோணினதுக்கே உனக்கு நிறைய செய்யணும்” என்றவர் டிராயரை திறந்து ஒரு ஊசியை எடுத்து ஏதோ மருந்தை செலுத்தியவர் ஆன்ஷி திமிர திமிர அதை உட்செலுத்தினார்.

செலுத்தும் போது ஆன்ஷியிடம் ஹரிலால் ஒருவிசயத்தை பற்றி பெருமை பேச ஆன்ஷி அதிர்ச்சியடைந்தாள்.

“என் தலைவரே அத இவ கிட்ட சொன்னீங்க? இவ போய் ஷரப் கிட்ட சொல்லிட்டா?”

“இவ தான் உசுரோட இருக்க போறதில்லயே” ஹரிலால் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆன்ஷியின் உடலில் செலுத்தப் பட்ட மருந்து வேலை செய்ய ஆரம்பித்திருந்தது.

“என்ன தலைவரே இது” என்று தர்மேந்திரன் கேக்க

“இது ஒரு வகையான போதை பொருள் நான் எப்படி எல்லாம் இவ கூட இருந்தாலும் இவளால் என்ன தடுக்க முடியாது. இவ கட்டையெல்லாம் அவிழ்த்து விடு. தூக்கிட்டு போய் அந்த ரூம்ல உள்ள கட்டில்ல போடு. இன்னைக்கி செம வேட்ட தான். ஷரப்ப பலி வாங்குறதுல உச்ச கட்டம்.  என் முகம் தெரியாம வீடியோ எடு. என் பசங்களையா வீடியோ எடுக்குற? அரண்மனை வாரிசின் மனைவியின் மறுமுகம். கணவனிடம் சுகம் போதாதென்று பல ஆண்களோடு சல்லாபம். எப்படி இருக்கு தலைப்பு” என்று சத்தமாக சிரிக்க

ஷரப்பின் காதலை புரிந்துக் கொள்ளாது இருந்ததால் இந்த தண்டனையா? என்று ஆன்ஷி எண்ணினாலும் தர்மேந்திரன் இழுத்த இழுப்புக்கெல்லாம் தடுக்க முடியாது சென்றவள் கட்டிலில் விழுந்தாள்.

சரக்கை நன்றாக ஊற்றி ஊற்றி குடித்த ஹரிலால் ஆன்ஷி இருக்கும் அறை நோக்கி தள்ளாடியவாறே செல்ல ஹரிலாலின் போன் அடித்தது.  

“யாரடா இந்த நேரத்துல” என்று அழைப்பை ஏற்க மறுமுனையில் சொல்லப்பட்ட செய்தியில் அடித்த போதை முழுவதும் இறங்க தர்மேந்திரனை பார்த்து  “முதலில் இவள இங்க இருந்து கூட்டிட்டு போ” கத்த

“என்னாச்சு தலைவரே!”

“இன்கம் டெக்ஸ் ரைடு வாரங்களாம், இவள உன் இடத்துக்கு கூட்டிட்டு போ” என்று உத்தர விட

தர்மேந்திரன் ஆன்ஷியை தூக்கிக் கொண்டு தனது ஜீப்பை நோக்கி சென்றான்.

*******************************************************

“என்ன சொல்லுறீங்க பாய். வைஷு அப்படி சொன்னாளா? அப்போ அண்ணி” என்ற வ்ருஷாத் கேக்கும் போதே ஷரப்பின் டைகர் விருந்தினர் மாளிகையை  அடைந்திருந்தது.

” வ்ருஷாத் நீ போய் cctv ய செக் பண்ணு” என்றவன் மாளிகை முழுவதும் ஆன்ஷியை தேடினான். வசுந்தராதேவி பேசியதை கேட்ட வைஷ்ணவி ஷரப்புக்கு அழைத்து சொல்லி இருந்தாலும். ஆன்ஷி என்னை மீறி போய் இருக்க மாட்டாள் என்று எண்ணியே விருந்தினர் மாளிகைக்கு வந்தான்.

cctv யில் ஆன்ஷி வெளியே செல்வது டார்க் விஷனில் தெளிவாக தெரிய ஷரப்பின் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென கொட்ட ஆரம்பித்தது.

“நா அவளை எவ்வளவு நேசிச்சேன். அவ என்ன புரிஞ்சிக்கவே இல்லையா?” என்று கதறியவனை எவ்வாறு தேற்றுவது என்று வ்ருஷாத் தவிக்க

“நான் அவள எங்க போய் தேடுவேன். ஒரு தடவ தொலச்சி, ரொம்ப கஷ்டப் பட்டு கண்டு பிடிச்சேன். மறுபடியும் எங்க போய்ட்டா? என்ன விட்டு போறதுலயே குறியா இருந்து இருக்கா? ஏன் அப்படி பண்ணா? நான் சில்பாவ கொன்னதுக்கா? என்ன இருந்தாலும் என் கிட்ட கேட்டிருக்கலாம்ல?” என்று வ்ருஷாத்திடம் ஷரப் புலம்ப  

“பாய் அண்ணிய கண்டு பிடிக்க வழி இருக்கு” என்றவன் ஏதோ தனது போனில்  செய்ய அது ஒரு இடத்தில் சிகப்பு புள்ளியை காட்டியது.

“என்னடா இது” ஷரப் ஏதோ புரிந்தும் புரியாமலும் கேக்க

“அண்ணிய தேட நீங்க எவ்வளவு கஷ்டப் பட்டீங்கனு கிட்ட இருந்து பார்த்தவன் நான். நமக்கு இருக்குற எதிரிங்க அண்ணிய தூக்கிட்டா என்ன செய்வதுனு யோசிச்சேன், அவங்களுக்கு நீங்க கட்டின தாலில ட்ரெக்கிங் டிவைச பொறுத்திட்டேன்” என்று சொல்ல ஷரப் வ்ருஷாத்தை கட்டிக்க கொண்டு

“நீ என்ன கேட்டாலும் தாறேண்டா”

“பாய் வாக்கு மாற கூடாது” வ்ருஷாத் சைக்கிள் காப்பில் வண்டியை ஓட்ட

“நீ என்ன என் சொத்தையா கேக்கப் போறா வைஷ்ணவியை கல்யாணம் பண்ணி தர சொல்லி கேக்கப் போற” ஷரப் ரணகாலத்திலும் குதூகலம் போல் சொல்ல

“பாய்” என்று ஷரப்பை கட்டி அணைத்த வ்ருஷாத் “உங்களுக்கு எப்படி”

“அத உங்க அண்ணிய கூட்டிட்டு வந்து பேசுவோமா?” என்று சிரித்தவாறே சொன்னான் ஏதோ ஆன்ஷி ரோடில் நடந்து போய் கிட்டு இருக்கிறதாக நினைத்துக் கொண்டு

“சீக்கிரம் வண்டிய எடுங்க” என்ற வ்ருஷாத் “பாய் அண்ணி ஏதோ வண்டில போற மாதிரி இருக்கு”

“வீட்டிலிருந்து போய் ஒரு மணித்தியாலம் தான் ஆகுது, நடந்து போனாலே அந்த இடம் வந்திடும், இவ்வளவு நேரம் எங்க இருந்தா?  யார் வண்டில போறான்னு தெரியலையே?” என்று ஷரப் புருவன் சுருக்க

“பாய்… இங்க பாருங்க இது…. அங்க…. போகுது” என்று  யோசனையாக வ்ருஷாத் சொல்ல வண்டியின் வேகத்தை கூட்டினான் ஷரப்.

ஷரப்பின் போன் அலற அதை காதில் வைத்தவன் “அங்க தான் வந்து கிட்டு இருக்கேன்” என்று போனை வைக்க பாதையில் தர்மேந்திரன் தாக்கப் பட்டு விழுந்திருந்தான். அவனை தூக்கி ஜீப்பில் போட்டவர்கள் ஆன்ஷியை காப்பாற்ற பறந்தனர்.

தர்மேந்திரனின் வண்டியை அடையாளம் கண்டு கொண்ட வசுந்தராதேவியின் அடியாட்கள் வண்டியை தொடர்ந்து, துரத்திப் பிடித்து தர்மேந்திரனை அடித்துப் போட்டு ஆன்ஷியை தூக்கி தங்களது வண்டியில் ஏறியவர்கள் ஆன்ஷி கண்களை திறந்தவாறே சுயநினைவில்லாது இருக்கிறாள் என்று வசுந்தராதேவிக்கு தகவல் சொல்ல ஆன்ஷியை அரண்மனைக்கு தூக்கிட்டு வருமாறு உத்தரவிட்டார்.

ஆன்ஷியை கொலை செய்ய சொல்லி இருந்த வசுந்தராதேவி ஷரப்பை அடக்க ஆன்ஷியை தன்னிடம் வைத்துக் கொண்டால் மாத்திரமே முடியும் என்ற தீர்மானத்துக்கு வர ஷரப்பை அழைத்தார்.  

“சொல்லுங்க தாதிமா?”

“உன் பொண்டாட்டி இப்போ என் கிட்ட, இனி நீ நான் சொல்லுற படி தான் கேக்கணும்” என்று கர்ஜிக்க

“என்ன தாதிமா நா என்ன ஸ்கூல் போற பையனா? நீங்க மிரட்டினா பயந்து அலற” என்றவன் “கொஞ்சம் பின்னாடி திரும்பிப் பாருங்க உள்ள வந்து ஐஞ்சு நிமிசமாகுது”  போனை அணைக்க

திரும்பிப் பார்த்த வசுந்தராதேவி அதிர்ச்சியானார். அங்கே ஷரப் ஆன்ஷியை மடியில் படுக்க வைத்தவாறே ஸ்டைலாக அமர்ந்திருக்க பத்மா ஷரப்புக்கு ஷொட்கன்னை நீட்டியவாறே நின்றிருந்தாள்.

Advertisement