Advertisement

                                                அத்தியாயம் 8

வீட்டு வேலையாட்களுக்கு உத்தரவிட்டவாறே வந்த லதா என்கிற சாருலதா வெளியே சத்தம் கேட்டு வர அங்கே ஆன்ஷியின் கையில் இருந்த புகைப் படத்தைக் கண்டு கோவம் தலைக்கேற ஆன்ஷியை பிடித்து தள்ளியவள்.

 

“அந்த ஓடுகாலி பெத்தவ வந்ததும் அவள கொஞ்ச ஆரம்பிச்சிட்டீங்களா? வெக்கமா இல்ல உங்களுக்கு? எங்க குடும்ப மானம் மரியாத எல்லாமே போச்சு, அவ போனதுல அத்த படுத்த படுக்கையாகிட்டாங்க அவங்கள குணமாக்க நா என்ன பாடு பட்டேன். நர்ஸ் வச்சா பாத்தேன்? நான் தானே பார்த்தேன். ஊருல எங்க போனாலும் உன் நாத்தனார் ஓடிப் போய்ட்டாளாமே? என்கிட்ட தானே கேட்டாங்க. உங்க கிட்டயா கேட்டாங்க. அத்த நீங்க படுக்கைல விழுந்துட்டீங்க. அவரு பாசமா இருந்த தங்கச்சி இப்படி பண்ணிட்டாளேன்னு ஒடஞ்சி போய்ட்டாரு. மாமா நீங்க வீட்டை வீட்டு எங்கயும் போகல நான் தானே கம்பெனிய பாத்து கிட்டேன். வீட்டு வேலைக்காரியிலிருந்து கம்பெனி ஸ்டாப் வர குசு குசுன்னு பேசுறதும், கேலி பண்ணுறதும் அப்பப்பா எல்லாத்தயும் நான் தானே சமாளிச்சேன்.  லேடீஸ் கிளப்புக்கு போனா அங்க வேற கிண்டல் பண்ணுறாங்க. நா வீட்டை பாப்பேனா? கம்பெனிய பாப்பேனா? எல்லாத்தயும் மறந்துட்டு இவ வந்ததும் நாங்க ஏத்துக்கணுமோ?

 

சாருலதா பரமேஸ்வரியின் அண்ணன் மகள் தனது நண்பனான சிவஞானத்துக்கு தங்கையையை கல்யாணம் பண்ணி கொடுத்தது மட்டுமில்லாமல் சொத்திலும் சரி பாதி பங்கு கொடுக்க கைமாறாக சாருலதாவையும், சிவதாசையும் மணமுடித்து வைத்து சொத்தை இணைத்தனர் பெரியவர்கள்.

சிவதாஸை  விட தொழிலை சாருலதா சிறப்பாக நடத்தி தான் அப்பாவின் மகள் என்று நிரூபித்தாள். சொந்த அத்தை மகனையே திருமணம் செய்திருக்க புகுந்த வீட்டிலும் செல்லம் கொஞ்சியவள். கேள்வி கேக்க ஆள் இல்லாததும், அதிகாரம் பண்ண ஆள் இல்லாமலும் போக தான் வைத்ததே சட்டம் என்று வீட்டையும், கம்பெனியையும் நிர்வாகித்தாள்.

 

அவளின் அடக்குமுறைதான் மீனாட்சியை மனிஷுடன் ஓட வைத்ததோ?

 

தங்களது மாமியார் கத்தும் சத்தம் கேட்டு மல்லிகையும், முல்லையும் “இன்னைக்கு யார் மாட்டினாங்களோ?” என்ற பார்வை மாற்றத்தோடு வாசலுக்கு வர அங்கே ஒரு பெண் கீழே விழுந்திருப்பதையும் பாட்டி அணைத்துக் கொண்டு அமைதியாக இருப்பதையும் கண்டு மாமியாரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் கையை பிசைந்தவாறே நிற்க. கம்பனிக்கு செல்ல கிளம்பி வந்த அருண், வருண் கூட அன்னையை எதிர்க்க முடியாமல் நிற்க கணவன்மார்களை பார்வையாலேயே எரித்தனர் அக்கா, தங்கை இருவரும்.

 

“மானம் போகுது போகுதுனு இவங்களே கத்திக் கத்தி ஏலம் போட்டா தானா போகாமா காத்துலயா{கிசுகிசு}  போகும்”  மல்லிகை முல்லையின் காதை கடிக்க அருண் அவளை முறைத்தான்.

“இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல, எல்லா பார்வையும் இங்கதான். அங்க மட்டும் பெட்டிப் பாம்பா அடங்க வேண்டியது” கண்ணில் அனலுடன் திருப்பி முறைத்தாள் மல்லிகை.

மல்லிகை, முல்லை இரட்டையர்கள் சாருலதாவின் பையன்களான அருண்,வருணை மணந்திருக்க, லதா அடங்கும் ஒரே ஜீவன் மூன்றாவது மகன் தருண் மாத்திரமே.

“தருண் எங்க போனானு தெரியலையே?” வருண் அண்ணனை பார்க்க

“தெரியாது” எனும் விதமாக தலையாட்டினான் அருண்.

கேட்டை திறந்துட் கொண்டு சிவதாஸோடு வந்த தருண் அன்னையின் கத்தலையும் பாட்டி தாத்தா இருவரும் ஒரு பெண்ணை அணைத்தவாறே நிற்பதை கண்டு சைகையாலேயே அண்ணன்களிடம் கேக்க அவர்கள் “தெரியாது” எனும் விதமாக தலையாட்ட “நான் பாத்துக்கிறேன்” எனும் விதமாக சைகை செய்தவன் அருகில் வர கீழே இருந்த புகைப் படங்களை கண்டு நொடியில் புரிந்துக் கொண்டவன்.

“ஹேய்  நீ தான் எங்க அத்த பொண்ணா? இவ்வளவு அழகா இருக்க, இங்க என்ன பண்ணி கிட்டு இருக்க முதல்ல உள்ள வா” யாரையும் எதிர் பார்க்காமல் அவளின் கைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.

அவனின் இச்செயலில் அதிர்ந்தாலும் லதா எதுவும் சொல்லாது அவனை பின் தொடர

“என்ன பாட்டி மசமசன்னு நிக்கிறீங்க இருக்குறது ஒரே பேத்தி போய் சாப்பிட ஏதாச்சும் எடுத்துட்டு வாங்க” தருண் அதட்ட பேரன் வந்ததால் பேத்தி எங்க கூட இருப்பாள் என்ற சந்தோஷத்திலேயே அம் முதியவர் செல்ல  தனது அன்னையின் முகத்திருப்பலை கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

ஆன்ஷியால் பேசமுடியாது என்பதை அறிந்தவர்கள் அனுதாபப் பட “வசதியா போச்சு என்ன சொன்னாலும் எதிர்த்து பேச மாட்டா” என லதா நினைத்துக் கொண்டாள்.

ஆன்ஷியை வீட்டினர் இயல்பாக ஏற்றுக் கொண்டாலும் லதாவின் குத்தீட்டி சொற்கள் அவளை காய படுத்திக்க கொண்டே இருக்க இதற்க்கு ஒரு முடிவு கட்ட வென அன்னையை தனியாக அழைத்து தருண் “என்னம்மா ஆன்ஷிய இப்படி பேசிக்கிட்டே இருக்க எங்க சொத்துல பாதி சொத்து மீனாட்சி அத்த பேர்ல இருக்கு மறந்துட்டியா? என்னதான் நீ கட்டிக் காப்பாத்தினாலும் பாதி சொத்தை கொடுக்கணும் அங்க பாதி, இங்க? மூனா பிரியும். அவள நல்ல முறையில் நடத்தினா தானே பின்னால சொத்தை எழுதி வாங்க முடியும். இப்படி விவரமில்லாம நடந்துக்கிறியே” என அன்னையை யோசிக்க வைக்க அது அவன் தலையில் விடிய போவது தெரியாமல் அன்னை யோசிக்க ஆரம்பிக்கவும் லதாவின் கன்னத்தில் முத்தமிட்டவன் சிட்டாய் பறந்தான்.

 

இங்கே ஷரப்பின் நிலைமையோ படு மோசமாக இருந்தது ஆன்ஷியின் நியாபகம் அவனை வாட்ட மதுவில் முழு நேரமும் லயித்தவனுக்கோ மாது கசந்தது. காதல் நெஞ்சம் நிறைத்து ஆட்டிப் படைக்க அந்த உணர்வை வெறுத்தவன் மதுவை நாடினான். ஆனாலும் ஆன்ஷி அவனை விட்டுச் செல்லாமல் மது அருந்திய போது அவன் கண் முன்னே வந்து அவனை இம்சை செய்ய ஆரம்பிக்க பாட்டிலை தூக்கி வீசியவன் அதை தொடவே இல்லை.

 

“ஏன் டி இப்படி படுத்துற உன்ன மறக்கணும்னு தானே பாட்டில் பாட்டிலா குடிச்சேன். அப்பொவும் வந்து இம்சை செய்யுற. எங்கடி போய் தொலைஞ்ச ராஜஸ்தான் முழுக்க தேடியாச்சு நீயும் இல்ல யொத்தாவுமில்லை.  என் கண்ணுல சிக்காம நீங்க ரெண்டு பேரும் அநியாயம் பண்ணுறீங்க. மரியாதையா வந்துடு நா தேடி கண்டு பிடிச்சேன், என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியல” கண்ணாடியை பார்த்தவாறே தனக்கு தானே பேசிக் கொண்டவன்,

“த்து நீயெல்லாம் ராஜவம்சத்துல பொறந்தானு பெருசா பீத்திக்கிற, ஒரு பொண்ண தேடி கண்டு பிடிக்க முடியல, அங்க தாதிமா யொத்தாவ கொண்டுவான்னு பாதி உயிரை வாங்குறாங்க, நீவேற என்ன விட்டு போய் மீதி உயிரை வாங்குற, எந்தநாளும் செத்து செத்து பொழைக்கிரேண்டி உன்னால, வ்ருஷாத் வ்ருஷாத் எங்கடா போய் தொலைஞ்ச”

 

“சே இவரு காதலிக்க ஆரம்பிச்சு என்ன படுத்தி எடுக்குறாரு, நானா அவங்கள போக சொன்னேன்” புலம்பியவாறே வந்த வ்ருஷாத் பவ்வியமாக “சொல்லுங்கண்ணே”

 

“என்னத்த சொல்ல அவ இல்லாம என்னால இருக்க முடியல அவள நா இப்போவே பார்க்கணும், வரச் சொல்லு இப்போவே வரச்சொல்லு, எங்க  இருக்கா அவ ஆன்ஷி…………..” வ்ருஷாத்தின் சட்டையை இழுத்து கிழித்தவன் பைத்தியம் போல கத்த அவனை பரிதாபமாக பார்த்தான் வ்ருஷாத்.

“பாய் இந்த மாசத்துல இது எத்தனையாவது சட்டனு தெரியுமா? அவன் என்ன சொல்கிறான் என்று வ்ருஷாத்தை பார்த்த ஷரப்

“அண்ணி காணாம போய் ரெண்டு மாசத்துக்கு மேலயாகுது ஒருநாளைக்கு மூனு, நாலு சட்டய கிழிச்சிடுறீங்க என் காசெல்லாம் சட்ட வாங்கியே கரையுது, அதெப்படி பாய் அண்ணி நியாபகமா பைத்தியம் புடிச்ச மாதிரி நடந்துக்கிறீங்க ஆனா கிழிக்கிறது பூரா என் சட்டய” பரிதாபமாக சொல்ல

 

அவனை உறுத்து விழித்தவன் “என் சட்டையெல்லாம் ரொம்ப காஸ்ட்லீடா” என சிரிக்க

 

“யப்பா எத்துன நாளாச்சு உங்க சிரிப்பை பாத்து அந்த கன்னத்துல விழுற குழி உங்களுக்கு செக்ஸியா இருக்கு ப்ரோ”

 

“விளையாடினது போதும் விசயத்துக்கு வா.  யொத்தா இந்தியாவ விட்டு எங்கயும் செல்லல அது ராஜஸ்தான்லயும் இல்ல தலய பிச்சிகிட்டு நா இங்க தேடிக் கிட்டு இருக்கேன் அவனுங்க அங்க கல்யாணம் பண்ணுறாங்களா? எனக்கு கல்யாணம் பண்ண  யொத்தாவுமில்லை என் ஆன்ஷியுமில்ல. அவனுங்கள சும்மா விடமாட்டேன். அது யொத்தா தான்னு உறுதியா தெரியட்டும் அப்பொறம் இருக்கு அவனுங்களுக்கு. அவனுங்க ஆணி வேர் வர தோண்டி எடு, யாரு, என்ன, என்ன தொழில் பண்ணுறாங்க, எத்தனை பசங்க, எல்லாம் எல்லாம் வேணும் எனக்கு, போட்டோல இருக்குற வாள் யொத்தா வா இல்லையானு சரியா தெரியல. சார்னேம் சௌதாகர் என்றதால தான் சந்தேகப் பட்டேன்”

 

“ப்ரோ உங்க அறிவு தான் உலகளாவிய அளவுல இருக்கே. எந்த ஒரு சோசியல் மீடியாவில் வாள் போட்டோ விழுந்தா உடனே உங்களுக்கு வர்றமாதிரி ஆள செட் பண்ணிடீங்களே! இன்டெனெஷனல் லெவல்லக்கு இறங்கி அடிக்கிறீங்க”

 

“யொத்தாவ நா எப்படியும் கண்டு பிடிச்சிடுவேன். ஆன்ஷி… ஐ நீட் ஹேர், ஷி ஈஸ் மை குஈன், மை சோல், மை எவரிதிங்” அந்த விருந்தினர் மாளிகையை அதிரும் படி கத்தினான் ஷரப்.

 

ஆம் ஷரப் தற்போது தங்கி இருப்பது விருந்தினர் மாளிகையில். ஆன்ஷியை இழந்து அவன் கதறுவது அரண்மனையிலுள்ள வசுந்தராதேவிக்கு தெரிந்தால் என்னென்ன வெல்லாம் நடக்கும் என்பதை அறிந்தவனாக இங்கயே தங்கி விட்டான். ஆன்ஷியின் நினைவால்  மதுவை, மாதுவை விட்டவன் இரவில் தூக்கத்தை தொலைத்து தெளிவாய் யோசிக்கலானான். அவன் யொத்தாவை நோக்கி போய் கொண்டிருக்கிறான்.

 

“ப்ரோ யொத்தாவ கண்டு பிடிக்க எல்லா ஏற்பாடும் பக்காவா பண்ணிட்டீங்க தாதிமாகு சொல்ல வேணாமா?”

 

“தேஜ்வீர் மாமா அங்க தான் இருக்கிறார். அவருக்கும் அந்த ஹரிலாலுக்கும் ஏதோ லிங்க் இருக்கு என்னனு சரியா தெரியல அவரோட அண்ட் மினிஸ்டரோட போன டாப் பண்ண சொல்லி இருக்கேன், ஒருநாள் இல்ல ஒருநாள் மாட்டாமவா போய்டுவாங்க” ஷரப் யோசனையாக சொல்ல

“என்ன பண்ணியும் அண்ணி எங்க இருக்காங்கனு தெரியலையே! அவங்க நல்ல இருக்காங்களா? ஆபத்துல மாட்டி…” வ்ருஷாத் இழுக்க

“அவ என்ன நிலமைல இருந்தாலும் அவ தான் என் பொண்டாட்டி. என் உள்ளுணர்வு சொல்லுது அவளுக்கு ஒண்ணுமில்ல நல்லா ஆரோக்கியமா, பத்திரமா இருக்கா. கூடிய சீக்கிரம் என் கிட்ட வந்து சேர்ந்திடுவா” நெஞ்சில் கைவைத்தவாறே ஷரப் சொல்ல

“காதல் எப்படி இருந்த ஒருத்தர எப்படி மாத்திரிச்சு”  வ்ருஷாதால் ஆச்சரிய பட மட்டுமே முடிஞ்சது.

 

தான் உயிருக்குயிராய் நேசிப்பவளுக்கு திருமணம் என்றும் அதுவும் காதல் திருமணம் என்று தெரியவரும் போது ஷரப் அரக்கனாக மாறுவானா?

Advertisement