Advertisement

அத்தியாயம் 2

பௌர்ணமி அன்று மனிதர்களின் கண்களுக்கு தெரிவதால் தேவதைகள் அமைதியாக நடையை தொடர்ந்துக் கொண்டிருக்க, தூரத்தே கேட்ட குதிரையின் கணைப்பும், காலடி சத்தமும் அனைவரையும் பதட்டம் கொள்ள செய்ய பதுங்குவதற்கு வழி தேடலானார்கள்.

அனைவரும் திக்கு தெரியாமல் ஒதுங்க குதிரை வீரன் குதிரையை ஓட்டிவரும்  பாதையில் முன்னால் விழுந்திருந்தாள் ருத்ரமகாதேவி. அதிர்ச்சியில் அவள் நகறாமல் இருக்க அவனோ வேகம் குறையாமல் குதிரையை செலுத்தி லாவகமாக அவளை தொட்டுத் தூக்கி தன்னோடு குதிரையில் அமர்த்திக் கொண்டு குதிரையை செலுத்த தன்னுடைய பச்சை விழிகளால் அவனை மெய் மறந்து பாத்திருந்தாள்.

மேலங்கியாக சில ஆபரணங்களை மாத்திரம் அணிந்து பெரிய மீசையும், திண்ணிய புஜங்களும் இடுப்பில் ஒரு வாளும் அவன் ஒரு போர் வீரன் என்றே பறை சாற்ற, மானிட பிறவி என்றாலும் ஒரு ஆணின் தொடுகையால் தன்னையே மறந்து அவள் இருக்கும் வேளையில் குதிரையை ஒரு குளக்கரையில் நிறுத்தியவன் அவளை இறக்கி விட்டு குதிரை நீர் அருந்த வைத்தவன் தானும் நீர் அருந்தலானான்.

அவனையே பாத்திருந்தவளை “இதற்க்கு முன்பாக எந்த ஒரு ஆண் மகனையும் பாத்திருக்க மாட்டாய் போல் பார்க்கின்றாயே! யார் நீ”

அவனின் கேள்வியில் சுயநினைவுக்கு வந்தவள் மெளனமாக தான் செல்ல வேண்டிய வழியை காட்டும் கருவியை தேட அது காணாமல் போய் இருந்தது.

“தேவி உன்னை பார்த்தால் சாதாரண பெண்ணாக தெரியவில்லை. அரசிளங்குமரி  போல் இருக்கின்றாய். வழியை மறந்து விட்டாயா? நான் உனக்கு வழித்துணையாக வருகிறேன்”

“நீர் எனக்கு வழித்துணையா வீரனே! நீர் தானே என்னை இங்கு குதிரையில் ஏற்றி கடத்திக் கொண்டு வந்தீர்” தனது வழிகாட்டி தொலைந்த கோபத்தை ருத்ரமகாதேவி அவன் மீது காட்டியவள் அவன் கண் இமைக்கும் நொடியில் அவன் கண்களில் இருந்து மறைந்து விட்டாள்.

மதியழகி சப் இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ் வீட்டின் முன் பெயர்ப் பலகை மின்ன அறையில் தயாராகிக் கொண்டிருந்தவளுக்கு காலையும், மாலையும் சுப்பிரபாதம் போல் அன்னையின் வசை மழையே! காதில் விழும்.

“அடியேய் மதி சாப்பிட்டுட்டு போ… நீ பாட்டுக்கு போயிடாத அப்புறம் பிச்சைக்காரனுக்கு நா எங்க போறது? போலீஸ்காரியின் வீடு னு இந்த பக்கம் எவனும் வர மாட்டான். ஆம்பிள பிள்ளையை வளர்த்திருந்தாலாவது நிம்மதியா இருந்திருப்பேன். நேரங்கெட்ட நேரத்துக்கு வீட்டுக்கு வர. டாக்டருக்கு படிக்க சொன்னா போலீஸ் ஆகிட்ட. நா என்ன சொன்னாலும் கேக்க கூடாதென்ற அடம். எல்லாம் திமிரு. சம்பாதிக்கிறோம் என்கிற திமிரு.  நா கட்டினவரை சொல்லணும். பொம்பள புள்ளய அடக்க ஒடுக்கமா வளர்க்கணும் னு நா சொன்னா செல்லம் கொடுத்தே கெடுத்து விட்டாரு” சட்டினியை அரைத்தவாறே புலம்பித்தல்ல, இவை அனைத்தும் காதில் விழுந்தாலும் கண்டு கொள்ளாது அறையில் இருந்து வெளியே வந்தவள் சாப்பாடு மேசையில் அமர்ந்து இரண்டு இட்லியை தட்டில் வைத்து சாம்பாரை ஊற்றி சாப்பிடலானாள்.

காவல் சீருடையில் கம்பீரத்துக்கு குறைவிலாது. பெண்மைக்கென்ற அழகோடு மிளிர்ந்தாள் மதியழகி. சட்டினியை அவள் தட்டில் வைத்த மதியழகியின் அன்னை முத்துலட்சுமி மீண்டு ஆரம்பித்தாள்.

“உங்க அப்பா உயிரோடு இருக்குற வரைக்கும் என்ன எந்த குறையும் இல்லாம பாத்து கிட்டாரு. உனக்கொரு கல்யாணத்த பண்ணிட்டு அவர் கூடயே போய் சேர்ந்துடுவேன். வர மாப்புள்ளைங்க எல்லாரையும் குறை சொல்லி கிட்டே இருக்க” மூக்கை சிந்தியவாறே புடவை முந்தியால் துடைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

அவள் செல்லும் வரை பாத்திருந்த ராஜவேலு “பாத்தியாம்மா? நா உயிரோட இருக்குற வர அவளை குறை இல்லாம பாத்து கிட்டேனாம். இருக்கிறவரை குறை சொல்லியே உசுர எடுத்தா. அவ செத்து என் கூட வர போறாளாம். ஜென்ம சனி விடாது னு ஜோசியர் சொன்னது உண்மையாக போகுதே!” ஆவியாய் அவள் முன் அமர்ந்திருந்த மதியின் தந்தை ராஜவேலு கிண்டலைத்தான்.

ஆம்  எல்லாருக்கும் உதவனும் என்று மதியழகி கேட்ட வரம் அவளின் வாழ்க்கையையே மாற்றி இருந்தது. அவள் கண்களுக்கு ஆவிகளும் தென்பட ஆரம்பித்திருந்தது. முதலில் பயந்து அலறி, ருத்ரமகாதேவியை அழைத்தவள். இறந்து போனவர்களின் ஆத்மா உடன் பேச ஆரம்பித்த பின் அவர்களின் நியாயமற்ற, நேர்மையற்ற மரணத்தால் ஆவியாகி அலைபவர்களுக்கு உதவவும் செய்தாள்.

சதா ப்ளூடூத் அவள் காதில் இருக்க, யாரும் அவளை சந்தேகமும் பட வில்லை. என்ன ஒன்று விபத்தில் இறந்தவர்களையும், கொலை செய்யப்பட்டவர்களை சந்திக்கும் போதுதான் கொஞ்சம் அலறினாள். இப்பொழுது காவல் அதிகாரியாக இருப்பதால் ரொம்பவே தைரியம் பெற்றிருந்தாள்.

அன்னை சொன்னது போல் டாக்டரும் ஆகாமல், தந்தை சொன்னது போல் இன்ஜினியரும் ஆகாமல் ருத்ரமகாதேவி சொன்னது போல் போலீஸாக ஆனதால் பலருக்கு அவளால் உதவவும் முடிந்தது.

தந்தை இறந்தது மாரடைப்பால் தான். இறந்து விட்டார் என்று கண்கள் கலங்கி கண்ணீர் வடிக்க முன் ஆவியாக அவள் முன் நின்றவரைக் கண்டு சந்தோசத்தில் சிரிக்க, அவளுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று உறவினர்கள் பேச, உறவுக்குள் மாப்பிளை கிடைப்பது  குதிரைக்கு கொம்பாகிப் போனது.

அவள் திருமணத்தை பற்றியெல்லாம் கவலைக் கொள்ள வில்லை. அவளுக்கு பிடித்த வேலை, நாலு பேருக்கு நல்லது செய்கிறாள். மனநிம்மதி இருக்க, வேறென்ன வேண்டும். ஆனால் அவளின் அன்னைதான் நிம்மதி இல்லாமல் காலை, மாலை தனது ஆதங்கத்தை அவள் மேலையே கொட்டிக் கொண்டிருக்கின்றாள்.   

வாழ்க்கை ஒரு மாயை என்று நன்கு அறிந்து கொண்டதால் அதிக ஆசைகள்  அவளிடத்தில் இல்லை. காதல் என்று வந்து நின்றவர்களை கேள்வி கேட்டே துரத்தி அடித்தாள் என்றால், பெண் கேட்டு வந்தவர்களின் குடும்பம் சொந்த பந்தம் என்று விசாரித்து குறைகளை சுட்டிக் காட்டி விலக்கினாள்.

இறந்து விட்டார் என்று சொல்லும் தந்தை கண் முன் இருக்க, அவள் எங்கே  தந்தையை இழந்தாள்? அவர் தான் முப்பொழுதும் அவள் கூடவே இருக்கின்றாரே!

“நா போன பிறகு அம்மாவை பய முறுத்தாதீங்க சரியா?”

“சரி மா…” அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு ராஜவேலு

“நீங்க கொடுக்குற ரியாக்ஸனுலையே தெரியும் ஏதோ செய்ய போறீங்கன்னு. ஏற்கனவே அவங்க பேர சொல்லி கூப்பிட்டு அவங்க மயங்கி விழுந்து சாமியார்னு ஒருத்த கூட்டிட்டு வந்து பூஜை, பரிகாரம் னு ஏகப்பட்ட செலவாச்சு. கடைசில அவன் போலிச்  சாமியார்னு நானே அரெஸ்ட் பண்ணி உள்ள தள்ளிட்டேன். மறுபடியும் நீங்க ஏதாவது பண்ண போய் அவங்களுக்கு ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிட போகுது.  அப்பொறம் உங்களுக்கு ஜென்ம சனிதான்” மதி தந்தையை மிரட்டி விட்டு அன்னையிடம் வந்தவள் அன்னையின் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டு விட்டே  விடை பெற்றாள்.

மதியழகிக்கு இந்த உலகத்தில் இருக்கும் ஒரே சொந்தம் முத்துலட்சுமி மட்டும் தான். ஒரு அன்னையாக அவளின் புலம்பல்களை புரிந்துக் கொண்டவள் “கடவுள் எனக்குன்னு ஒருத்தன படைச்சி இருப்பானில்லை, அவன் வரட்டும் பாத்துக்கலாம்” என்று கண்ணடித்து அன்னையை  சமாளிப்பாள். 

மதி தனது பைக்கை காவல் நிலையத்தை நோக்கி  செலுத்திக் கொண்டிருக்க அவளுடைய அப்பா ராஜவேலு பின்னாடி அமர்ந்திருந்தான்.

“என்ன மிரட்டினதும் என் கூட வரீங்க”

“எதுக்கு வம்பு ஏற்கனவே உங்கம்மா கோவில், குளம்னு சுத்தி நா சம்பாதிச்ச எல்லாம் நாசமாக்கிட்டா. இப்போ நா பயமுறுத்த போய் அந்த போலிச் சாமியார் மாதிரி இன்னும் நிறைய பேருக்கு காச தானம் பண்ணிடுவா. நீ கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற காசு” சோகமாக சொன்னவன் “மதி அங்க பாரு அந்த வண்டிக்குள்ள….”

மதியும் திரும்பிப் பார்க்க, அது ஒரு ஜீப் வண்டி முன்னாடி இருவர் அமர்ந்திருக்க, பின்னாடி ஒரு இளம் பெண். பெண்ணல்ல அது ஒரு ஆவி…. கண்ணாடியில் புகை மூட்டம் தோன்றி  “உதவி” என்ற சொல் எழுதப்பட்டு மறைந்தது.

“அந்த வண்டிய பாலோ பண்ணு. எனக்கென்னமோ அந்த பொண்ண இவனுங்க ரேப் பண்ணி கொலை பண்ணி புதைக்க கொண்டு போய் கிட்டு இருக்காங்க னு தோணுது” ராஜவேலு தனது கருத்தை சொல்ல

“இல்ல வேறென்னமோ பிரச்சினை. அதான் அவங்க உதவி னு கேட்டாங்க” மதி யோசனையாக அந்த வண்டியை பின் தொடரலானாள்.

நகரத்திலிருந்து ஒதுக்கு புறமாக உள்ள பொட்டல் காட்டில் வண்டி நின்றது. தூரத்தில் பாறையின் மறைவில் வண்டியை நிறுத்திய மதியும் அங்கே என்ன நடக்கின்றது என்று பார்க்க ராஜவேலுவை அனுப்பி இருந்தாள். 

வண்டியின் முன் இருக்கையில் கைகள் இரண்டும் பின்னாடி கட்ட பட்ட நிலையை ஒருவன் மயங்கிய  இருக்க, வண்டியை ஓட்டி வந்தவன் அவனை கீழே இழுத்து போட்டு  அவனுக்கான குழியை தோண்டலானான்.

“மதி ஒருத்தன உசுரோட புதைக்க போறான் போய் காப்பாத்து”

வண்டியில் இருந்து இறங்கிய மதியும்  இடுப்பில் இருந்த துப்பாக்கியையும் கையில் எடுத்துக் கொண்டு  அரவம் செய்யாது மெதுவாக அடியெடுத்து சென்றவள் வண்டியின் பின் பதுங்கி எட்டிப் பார்க்க, வண்டிக்குள் இருந்த ஆவியை காணவில்லை.

 ஒருவன் குழியை மும்முரமாக வெட்டிக் கொண்டிருக்க, மயங்கி விட்டான் என்றவன் கையில் இருந்த சிறு கத்தி கொண்டு கைக்கட்டை அறுத்துக் கொண்டிருந்தான். அவன் கால்களும் கட்டப்பட்டிருக்க அவன் அசையும் சத்தம் கேட்டு குழியை வெட்டுபவன் திரும்பினால் அவனுக்கு ஆபத்து என்பதை கண்டு கொண்ட மதி குழி வெட்டுபவனின் பின்னால் சென்று அவனின் கழுத்தில் ஒரு கராத்தே அடி வைக்க, அவன் மயங்கி சரிந்தான்.

கிழே இருந்தவன் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு மதியை பார்க்க அவளோ! அவனை ஆராயும் பார்வை பார்த்தாள். ஆறடிக்கு மேல் கிரேக்க சிலை போன்ற கட்டுமஸ்தான தேகம். லட்சத்தை தொடும் கோட் சூட். கை கடிகாரம் சொல்லும் அவன் பண செழுமையை. இவனையே ஒருவன் வீழ்த்தி இருக்கின்றான் என்றால் அவன் இவனுக்கு வேண்டியவனா இருக்கணும். என்றெண்ணியவள் அதையே அவனிடமும் கேட்டாள்.

“வெல். ஐம் அக்ஷய் சாம்ராட். இது என் டைவர் தான். உன் புத்தி ரொம்ப கூர்ம” என்றவன் சுற்றும் முற்றும் பார்க்க

“போலீஸ் என்ற மரியாதை கொஞ்சமும் இல்லாம ஒருமைல பேசுறான்” என்ற எண்ணம் மதியின் மனதில் உருவானது.

“எந்த இடம் இது?”

“சிட்டியை தாண்டி நாலு கிலோமீட்டரில் இருக்கு”

“ஜஸ்ட் நாலு கிலோமீட்டரா?”

“ஆமா”

அலைபேசியை உயிர் பித்தவன் “பாஸ்கர் நா ஒரு லொகேஷன் அனுப்புறேன் அது யாரோட இடம்? எவ்வளவு வலிவ்? விற்பங்களா?” எல்லா டீடைலும் எனக்கு உடனே வரணும்”

அவன் பேசுவதை கேட்ட மதி “பக்கா பிசுனஸ் மேன்” மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

அவளும் கீழே இருந்தவனின் கையில் விலங்கை மாட்டி ஸ்டேஷனுக்கு அழைத்து தகவல் சொல்லி இடத்தை குறிப்பிட்டு உடனே வரும் படி உத்தரவிட்டாள்.

“ஹலோ, ஹலோ நான் தான் கம்பலைனே கொடுக்களையே!” அக்ஷய்  புருவம் உயர்த்த

“ஐம் டூயிங் மை டியூட்டி சார்”  முகத்தை விறைப்பாய் வைத்திருந்தவள் குரலில் வெறுப்பும், கோபமும் எட்டிப் பார்க்க கூறலானாள். 

முகத்தில் ஒரு அலட்ச்சியத்தை  கொண்டு வந்தவன் அவளைக் கண்டு கொள்ளாது, அவ்விடத்தை எந்த மாதிரி பயன் படுத்தலாம் என்று திட்டம் தீட்டலானான்.

“மதிமா..ஆளு பாக்க சினிமா ஹீரோ மாதிரி இருக்கான். உனக்கு பொருத்தமா இருப்பான்”

தந்தையை முறைத்தவள் “அன்னைக்கும் இப்படித்தான் அந்த ஜவுளிக்கடை ஓனரோட மகனை பாத்து சொன்னீங்க, அவன் பொண்ணுங்க பின்னாடி அலையிறான்னு நா சொன்னதும் உங்க மூஞ்ச எங்க கொண்டு போய் வச்சி கிட்டீங்க? இவன் ட்ரெஸ்ஸ பாத்திங்களா? விலை லட்சத்தை தொடும். ட்ரெஸ்ஸுக்கே இப்படின்னா? பார்? பொண்ணுங்க? இன்னும் என்னெல்லாமோ இருக்கும்” விலாவரியாக சொல்லாது அவர் புரிந்து கொள்ளும் படி சொல்ல

“நா வேணா இவன் பின்னாடி போய் வேவு பார்க்கவா?”

“நீங்க வேவு பாக்குற நேரத்துல என்ன ஏதாவது காவு வாங்கிட போகுது”

ராஜவேலு வந்து மதியிடம் பேசிக் கொண்டிருக்க எதேர்ச்சையாக அவளை திரும்பிப் பார்த்தவன் புருவ மத்தியில் முடிச்சோடு யோசிக்க அவளின் ப்ளூடூத்தை கண்டு புன்னகைத்து விட்டு கீழே இருந்த கற்களை கையில் எடுக்க குனிந்த பொழுது எங்கிருந்தோ பறந்து வந்த குண்டு அவன் தலை மேலாக பறந்து அவனுடைய வண்டியின் கண்ணாடியில் பட்டு கண்ணாடியை துளைக்க முடியாமல் பின்வாங்கியது.

அவன் திகைத்து விழிக்கும் போதே அடுத்த குண்டு அவனை நோக்கி பாய அது அவனை தீண்ட விடாது ராஜவேலு அவனை அகற்ற என்ன நடந்தது என்று சிந்திக்க நேரம் இல்லாது உடனே உஷாரானவன் கண் இமைக்கும் நொடியில் மதியை இழுத்து வண்டியினுள் தள்ளி வண்டியில் தாவி ஏறி இருந்தான்.  அவனின் வேகம் கண்டு மதியுமே ஒரு நிமிடம் திகைத்து சுதாரித்தவள்

“அப்பா… எத்துணை பேர்? எங்க இருந்து சீக்கிரம் பாருங்க..” தந்தைக்கு ஆணையிட அவளை வித்தியாசமாக பார்த்தான் அக்ஷய்.

Advertisement