மௌனங்கள் இசைக்கட்டுமே 8

அன்று காலை விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தான் ஆதிசேஷன். நிவாஸ் அவனுக்காக விமான நிலையத்தில் காத்திருக்க, நண்பனை அணைத்து விடுவித்தவன் அவனுக்கு அடுத்தடுத்த வேலைகளை பட்டியலிட்டபடியே நடக்க, அவன் வேகத்திற்கு இணையாக அவனுடன் ஓடிக் கொண்டிருந்தான் நிவாஸ்.

ஏற்கனவே பாதியில் நின்று போயிருந்த இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களை அழைத்துப் பேசியவன், அடுத்த ஒரு மாதத்தில் இரண்டு படங்களையும் முடித்துவிடும்படி கேட்டுக்கொள்ள, எதிரில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சி தான்.

ஆனால், கதாநாயகன் அவனே வலிய வந்து தேதி கொடுத்தபின் அவர்களால் வேறு என்ன பேச முடியும். எதுவும் பேசாமல் அவன் விருப்பத்திற்கு தலையசைத்து விட்டனர்.

அமெரிக்காவில் இருந்து திரும்பிய அன்று ஒருநாள் மட்டும் முழுதாக ஓய்வெடுத்துக் கொண்டவன் அடுத்தநாளில் இருந்து முன்பைவிட வெகு தீவிரமாக படபிடிப்பில் கலந்துகொள்ள, அவன் நினைத்தபடியே படபிடிப்பு வேலைகளும் வேகம் பெற்றது.

நின்று போன படபிடிப்புகள் மீண்டும் தொடங்கியது பத்திரிக்கைகளில் செய்தியாக வெளியாக, அங்கே ஒருத்தி மீண்டும் ஒருமுறை துவண்டு நின்றாள். எத்தனை முறை தான் ஏமாற்றம் கொள்வாள் அவளும்.

இது இப்படித்தான் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான் என்றாலும் கூட, சந்திக்கும் நொடிகளின் கணம் எப்போதும் அதிகமாகிக் கொண்டே போகிறதோ என்று ஒரு ஐயம் அவளுக்குள்.

விட்டுவிடமாட்டான் என்று தெரிந்து தான் அவள் சினிமாவை விடச் சொன்னதும் கூட. ஆனால், எங்கோ ஓர் மூலையில் ஏதோ ஓர் எதிர்பார்ப்பு இருந்ததோ என்னவோ. அது பொய்யாகிப் போனது மீண்டும் வலித்தது.

இது பழக்கம் தானே என்று உணர்வுகளை மறைத்துக் கொண்டவளாக சேனா வலம்வர, பிரபாகரன் தான் அவள் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தார் எப்போதும்.

அன்று மருத்துவமனையில் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பின் சத்யதேவிடம் இருந்து முழுமையாக விலகி நின்றாள் சேனா. அவனே பேச முற்பட்டபோதும் கூட அவனை தனது அருகில் கூட அனுமதிக்காமல் விரட்டி அடித்துக் கொண்டிருக்கிறாள்.

இவளது செயல்களில் ஆத்திரம் கொண்டவனாக தேனமுதன் அவனாகவே விலகிக் கொள்ள, அதற்கெல்லாம் கவலை கொள்பவளா சேனா. “நீ யார்? நீ எந்த விதத்துல என்னை பாதிக்கப் போற?” என்று கேள்வி கேட்பதுபோல இருந்தது அவளது நடவடிக்கைகள்.

அலுவலக வேலைகள் அது முடிந்தால் பிரபாகரனுடன் வெளியே சுற்றுவது என்று அமெரிக்காவை அளந்து கொண்டிருந்தாள் அவள்.

சத்யதேவ்  பொறுத்துப் பார்த்தவன் ஒருநிலைக்கு மேல் பிரபாகரனிடம் வந்து நிற்க, “நீ இந்தியா கிளம்பு தேவ். தேவாவை நான் பார்த்துக்கறேன்” என்றுவிட்டார் பிரபாகரன்.

“என்ன பார்ப்பீங்க. திரும்பவும் ஒருமுறை அவன்கிட்ட தூக்கி கொடுக்க போறீங்களா” என்று அடக்கமாட்டாமல் அவன் கத்தி வைக்க,

“என மகளுக்கு அதுதான் சந்தோஷம்னா அதையும் நான் செய்வேன் தேவ். ஆனா, எந்த முடிவா இருந்தாலும் அவளே எடுக்கட்டும். நீ அவளை நெருக்காத” என்றார் பிரபாகரன்.

“நீங்க புரிஞ்சுதான் பேசறீங்களா.”

“நீதான் உன் தங்கையை புரிஞ்சிக்காம பேசிட்டு இருக்க தேவ்.”

“அப்பா… அவளைப் பத்தி நல்லா புரிஞ்சதால தான் இவ்ளோ அவசரப்படறேன்.” என்று ஓய்ந்து போனவனாக தேவ் கூற, மௌனமான புன்னகை ஒன்றை பதிலாக்கினார் பிரபாகரன்.

“சிரிக்காதீங்க. இவளுக்கு என்ன தலையெழுத்து? அவன் என்ன செய்தாலும், அவனுக்காக இவ நிற்கணுமா?”

“அதுதானே தேவ் கணவன் மனைவி உறவு”

“அந்த உறவுக்கான மரியாதையை சேஷா எப்பவுமே கொடுத்ததே இல்ல டாடி. அதுதான் என்னோட வேதனை. அப்போ என தங்கச்சி மட்டும் ஏன் எல்லாத்தையும் தாங்கணும். என்ன வயசு அவளுக்கு. அவ எவ்ளோ சந்தோஷமா இருக்கணும்? ஆனா, எல்லாத்தையும் மறந்து இவ்ளோ நாள் அவன் தொழிலுக்காகவும், அவனுக்காகவும் தான் ஓடிட்டு இருந்தா. பதிலுக்கு செஷன் செஞ்சது என்ன?”

“இதோ இப்பவும் அவளைத்தேடி இங்கே வரைக்கும் வந்தான்னு நினைக்கிறீங்களா நீங்க. வாய்ப்பே கிடையாது.”

“அவளுக்காக தானே தேவ் வந்திருக்கணும்?”

“அவளுக்காக வந்தவன் அவளைக் கூடவே கூட்டிட்டு போய் இருக்கணும் இல்ல. செய்யலையே… இந்தியா கிளம்பிட்டான் டாட். அவனோட மூவி ஷூட்டிங்ல இருக்கான்.” என்றவனை பிரபாகரன் நம்பிக்கையற்றவராக பார்க்க, இன்ஸ்டா பக்கத்தை ஓபன் செய்து அவனது படப்பிடிப்பு குறித்த செய்தியை அவரிடம் காண்பித்தான் தேவ்.

பிரபாகரனுக்கும் லேசான ஏமாற்றம் தான் சேஷனின் செயலில். ஆனால், என்னவோ அவனை முழுதாக சந்தேகிக்கவும் மனம் வரவில்லை அவருக்கு.

அதுதான் இந்தியா கிளம்பும் முன் மாமனாருக்கு தனியாக மந்திரம் ஓதிச் சென்றிருந்தானே கள்வன்.

பிரபாகரனுக்கு இன்னமும் அவன் வார்த்தைகளில் நம்பிக்கை இருக்க, “நீ இந்தியா கிளம்பு” என்றுவிட்டார் மகனிடம்.

தேவ் ஏற்கனவே அந்த முடிவுக்கு தான் வந்திருந்தான். இப்போது தந்தை சொல்லவும் சட்டென தலையசைத்துவிட்டான். அவனுக்கு தங்கையின் பாராமுகத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இந்தியாவில் அவனது தொழிலும் இருக்கிறதே. அதையும் பார்த்தாக வேண்டுமே.

அடுத்தநாள் காலை அமெரிக்காவில் இருந்து கிளம்பிய விமானத்தில் தேவ் இந்தியா கிளம்ப, அவனை வழியனுப்ப வந்திருந்தான் தேனமுதன்.

“சாரிடா அமுதா. சேனாவைப் பத்தி நல்லா தெரிஞ்சு இருந்தும் நான் உனக்கு நம்பிக்கை கொடுத்து இருக்கக்கூடாது. தப்பு பண்ணிட்டேன். மன்னிச்சுடுடா.” என்று சத்யதேவ் தேனமுதனின் கைகளைப் பிடித்துக் கொள்ள,

“நீ எனக்கும் நல்லது செய்ய தானே நினைச்ச. இதுல உன்னோட தப்பெல்லாம் எதுவும் இல்ல தேவ். சேனாக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்ச பிறகாவது நான் மாறி இருக்கணும். அப்படி செய்யாம விட்டதுக்கான பலன் தான் இப்போ நான் அனுபவிக்கிறது. விடு. நாம இனி சேனாவைப் பத்தி எப்பவும் பேச வேண்டாம். நம்ம நட்பாவது எனக்கு மிச்சம் இருக்கட்டும்டா” என்றவனை தேவ் அணைத்துக் கொள்ள, சில வினாடிகளில் விமானத்திற்கான அழைப்பு வந்துவிட்டது.

நண்பனை பிரிய மனமில்லாமல் விடுவித்தவன் தங்கையை குறித்து எதையும் அவனிடம் பேசாமல் விடைபெற்றுக் கொண்டான்.

தேவ் கிளம்பிய நொடியே தேனமுதனும் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு விட்டாலும், அன்று முழு நாளுமே வீடு செல்லவில்லை அவன். தேன்கனி அழைத்தபோதும் கூட, “மனசு சரியில்ல மாம். நானே வரேன் என்னை கொஞ்சம் தனியா விடேன்.” என்றுவிட்டான்.

தேன்கனியும் நடப்பவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டே தானே இருக்கிறார். அவருக்கும் மகனின் நிலை புரிகிறது தான். ஆனால், இதில் யார்தான் என்ன செய்துவிட முடியும்?

மகன் தேவாவை மறப்பது தான் அவன் வாழ்விற்கு வளம் சேர்க்கும் என்பது நன்றாகவே புரிந்தது அவருக்கும். மகனும் அதை உணர தொடங்கி விட்டதை அவனது வேதனை படிந்த முகத்திலிருந்து அறிந்து கொண்டவர் அவனை அவன் வழியிலேயே விட முடிவெடுத்தார்.

 இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் விலகிக் கொள்ள, சற்று நிம்மதியாக மூச்சு விட தொடங்கினாள் தேவா. சேஷாவின் படபிடிப்புக் குறித்த செய்திக்கு அவள் கவலைப்பட்டதெல்லாம் கூட வெறும் அரைமணி நேரம் தான். அதற்குமேல் அவனையும் தூர நிறுத்திவிட்டாள்.

அவள் தந்தையின் நிறுவனம் புதிதாக ஒரு பிராஜெக்டை தொடங்கியிருக்க, அதன் முதற்கட்ட வேலைகளில் முழுமூச்சாக இறங்கிவிட்டாள். தேனமுதன் அலுவலகத்திற்கு வருவதையும் ஒருவாரமாக தவிர்த்துவிட, பிரபாகரனும் இதுவரை அழைக்கவில்லை.

மகன் போல அல்லாமல் மகனாகவே வளர்த்தவர் தான். ஆனால், மகளின் நிம்மதியும் முக்கியமாகப் பட்டது. அதோடு தேவா தொடர்ந்து அமெரிக்காவில் தங்கிவிட மாட்டாள் என்று ஏதோ ஒரு நம்பிக்கை இருந்தது பிரபாகரனுக்கு.

ஏதோ ஒரு நம்பிக்கை என்ன? எல்லாம் சேஷனின் மீது இருந்த நம்பிக்கை தான். அப்படி ஒன்றும் தன் மகளை சேஷன் விட்டுவிட மாட்டான் என்பது அவரது அனுபவத்தில் அவருக்கு புரிந்திருந்தது.

இங்கே இருக்கும் வரை சேனா நிம்மதியாக இருக்கட்டும் என்றுதான் அவர் தேனமுதனை அழைக்காமல் விட்டதும்.

ஆனால், இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அலட்டிக் கொள்ளாமல் இருந்தவள் சேனா மட்டும்தான். அவள் போக்கில் அவள் வேலைகளை கவனித்தபடி அவள் சுற்றிவர, அடுத்த ஒரு மாதமும் ஓரிரு நிமிடங்களைப் போலவே கடந்து போனது.

இதற்கிடையில் அவள் எதிர்பாரா விதமாக அவள் முன் வந்து நின்றனர் ஆத்மியும் இளமாறனும் அதுவும் கையில் திருமண அழைப்பிதழுடன் வந்து நிற்க மறுக்க முடியாத நிலையில் தான் நின்றாள் சேனா.

இளமாறன் உரிமையுடன் அழைத்துச் சென்றிருக்க, ஆத்மீ, “அமிர்தா இடத்துல இருந்து நீங்கதான் எனக்கு எல்லாமே செய்யணும் தேவாக்கா. ப்ளீஸ்” என்று கண்கலங்கியபடி பேசிச் சென்றிருக்க, “செல்வதா? வேண்டாமா?” என்று குழப்பத்தில் தான் இருந்தாள் தேவா.

இளமாறனின் திருமணம் தவிர்க்க முடியாதது தான் என்றாலும், இந்தியா செல்வதில் ஏனோ துளியும் விருப்பமில்லை. அதுவும் திருமணத்திற்கு கட்டாயம் சேஷனும் வருவான். என்னவோ அவனை சந்திக்கவே வேண்டாம் என்று ஒரு எண்ணம்.

திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே என்ற நிலை வரை அவள் நிலையாக ஒரு முடிவுக்கு வர முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்க, அன்று காலை அவள் உறக்கம் கலைந்து எழுந்த அரைமணி நேரத்திற்கெல்லாம் ராதா அழைத்துவிட்டார் அவளை.

“தேவா எப்போ இந்தியா வர்ற?” என்று அவர் கேட்க, பதில் சொல்ல தயங்கினாள் தேவா.

“உனக்கு வர்ற ஐடியா இருக்கா இல்லையா தேவா. நான் உனக்கு அந்தளவுக்கு முக்கியமானவன் இல்லையா. இல்ல, உன்னோட தகுதிக்கு என்னைப் போல ஒருத்தன் கல்யாணத்துக்கு வரக்கூடாதுன்னு யோசிக்கிறியா” என்று இளமாறன் சற்று கோபமாக குரல் உயர்த்திப் பேச,

“வாயை மூடு இளா. இதுவரைக்கும் எந்த விஷயத்துக்கு உன்கிட்ட தகுதி பார்த்திருக்கேன் நான். நீ எனக்கு எப்பவும் நல்ல நண்பனா இருந்திருக்க. நீயே இப்படியெல்லாம் பேசி அதை கெடுத்து வைக்காத. உன் கல்யாணத்துக்கு வரணுமா வேண்டாமான்னு நான் யோசிக்கல. இந்தியா வரணுமான்னு தான் யோசிக்கிறேன்.” என்று எப்போதும் போல தோரணையான தொனியிலேயே தேவா அதட்டிவிட்டாள்.

அவள் பேச்சில் சில நிமிடங்கள் மௌனம் சாதித்து பின், “நீ வராம என்னோட கல்யாணம் நடக்காது தேவா” என்று உறுதியாக கூறிவிட்டான் இளமாறன்.

“நீ என்ன பேசற புரியுதா இளா உனக்கு. ராதா ஆன்ட்டி உன் பக்கத்துல இருக்காங்க. யோசிச்சுப் பேசு.”

“இளா சொல்றதுல தப்பெதுவும் இருக்கறதா எனக்கு தெரியல தேவா. இந்த கல்யாண விஷயம் கைகூடி வந்ததே உன்னால தான். நீ இல்லாம எப்படி கல்யாணம் பண்ண முடியும். என புருஷன் பண்ண அத்தனையும் மீறி என குடும்பத்துக்கு நல்லது நினைச்சிருக்க நீ. ஆத்மீ கல்யாணம் நீ இல்லாம நடக்காது” என்று ராதாவும் தேவாவை நெருக்க, ஏதும் பேச முடியாமல் மௌனம் சாதித்தாள் அவள்.

“ப்ளீஸ் தேவா. கிளம்பி வா”என்று வேண்டுதலாக கேட்டு இளமாறன் அழைப்பைத் துண்டித்துவிட, அலைபேசியை கட்டிலில் எறிந்துவிட்டு சோர்ந்து போனவளாக கட்டிலில் விழுந்தாள் தேவசேனா.

இன்னும் இதுபோல எத்தனைப் பேருக்காக யோசிக்க வேண்டுமோ என்று அலுத்துப் போனது அவளுக்கு. சுற்றி இருப்பவர்கள் அத்தனைப் பேரும் ஏதோ ஒரு விதத்தில், எதற்காகவோ அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கும் இந்த நிலையை அறவே வெறுத்தாலும், பாதியில் விட்டுவிட்டு ஓடவும் மனம் வரவில்லை.

அன்றுநாள் முழுக்க யோசனையுடன் சுற்றி வந்தவள் அந்த நாளின் முடிவில், அடுத்தநாள் கிளம்புவது என்று முடிவெடுத்தாள்.

பிரபாகரன் ஒருவரைத் தவிர்த்து வேறு யாருக்கும் அவள் இந்தியா கிளம்புவது தெரியாது. சேஷன், சத்யதேவ், நிவாஸ், மலர், பல்லவி, கலையரசி, இளா, ராதா என்று ஒருவரிடமும் மூச்சு விடவில்லை அவள்.

அன்று இரவு விமானத்தில் கிளம்புவதாக பிரபாகரனுக்கே அன்றைய நாள் காலையில் தான் தகவல் கூறி இருந்தாள். அதுவும் நான்கு நாட்களில் திரும்பி விடுவேன் என்றும் உறுதிபோல மகள் கூறிச் சென்றிருக்க, ‘மகள் அவளுக்கே சொல்லிக் கொள்கிறாளோ’ என்று சந்தேகமாகிப் போனது பிரபாகரனுக்கு.

மகளிடம் அமைதியாக தலையசைத்துக் கொண்டவர் விஷயத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து விட்டு தன் வேலைகளை கவனிக்கச் சென்றுவிட்டார்.

என்னவோ, ‘அவன் பார்த்துக் கொள்வான்’ என்று அசைக்க முடியாதபடி ஒரு நம்பிக்கை அவருக்கு.

மகளின் வாழ்வு சீராகியே தீர வேண்டும் என்று வேட்கை கொண்டவராக, சேஷனின் பக்கம் லேசாக சாய்ந்திருந்தார் பிரபாகரன்.

அவர் நம்பிக்கையை காப்பாற்றுபவனாக சேஷனும் அவன் ஆட்டத்தை தொடங்கிவிட்டதை அடுத்தடுத்து வந்த நாட்களில் அறிந்துகொண்டபோது என்னவோ சிறுபிள்ளையைப் போல துள்ளியது பிரபாகரனின் மனம்.