Advertisement

மௌனங்கள் இசைக்கட்டுமே 01

“தேனு டைம் ஆச்சுடா… எழுந்து கிளம்பு” என்று தான் இருக்குமிடத்திற்கு கொஞ்சமும் பொருந்தாமல் தமிழில் கத்திக் கொண்டிருந்தார் தேன்கனி. முப்பது ஆண்டுகாலம் வெளிநாட்டில் வாழ்ந்து, அந்த நாட்டின் குடியுரிமையும் பெற்றாகி விட்டபின்பும் கூட ஆங்கிலம் தகராறு தான் அவருக்கு.

வராது என்பதை விட பிடிக்காது. பின்னே சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊரில் பிறந்து வளர்ந்தவரை திருமணம் என்ற பெயரில் கடத்திக் கொண்டு வந்து இங்கே அடைத்தால், அவரும் தான் என்ன செய்வார்.

ஆனால், அப்படியும் சொல்லிவிட முடியாது. தான் கொண்ட காதலால், அவரது அமுதனின் கரத்தைப் பிடித்துக்கொண்டு மற்ற அனைத்தையும் துறந்து வந்துவிட்டவர் தான் தேன்கனி. பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள், சொந்தம், பந்தம், பிறந்து வளர்ந்த ஊர் என்று மொத்தத்தையும் தூக்கி எறிந்து தான் அமுதனின் கைப்பிடித்தார் அவர்.

தனது செயலுக்காக என்றும் அவர் வருந்தியதும் கிடையாது. அவரைப் பொறுத்தவரை அவர் வாழ்வின் இறுதி நிமிடம் வரை அமுதனின் காதல் மட்டுமே போதும்.

அவர்களின் காதலுக்கு சாட்சியாக கட்டிலில் உறங்கி கொண்டிருந்தவன் தான் தேனமுதன். அவரது ஒரே மகன். அவனை எழுப்பி விடத்தான் ஓயாது போராடிக் கொண்டிருக்கிறார் தேன்கனி.

ஆனால், அவரது குரலை அசட்டை செய்து கவிழ்ந்து படுத்தபடி மகன் உறக்கத்தை தொடர்ந்து கொண்டிருக்க, அதில் உஷ்ணமானவர் அவன் முதுகில் சற்று வேகமாக ஒரு அடி வைக்க, “டென் மினிட்ஸ் தேனு” என்று கொஞ்சியபடி மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தான் தேனமுதன்.

“உன் பிரபா அங்கிள் பொண்ணு மூணு போன் பண்ணிட்டா. நீ தூங்கிட்டு இருக்கேன்னு சொல்லிடறேன்.” என்றபடி அவர் திரும்ப,

“தெய்வமே ஏன்… இல்ல ஏன்” என்று போர்வையுடன் எழுந்து அமர்ந்தான் தேனமுதன்.

அவன் வேகத்தில், “அவ்ளோ பயம் இருக்கா உனக்கு” என்று தேன்கனி சிரிக்க,

“பயமா… அதெல்லாம் இல்லையே” என்று சமாளிக்கப் பார்த்தான் மகன். அவனைப் பார்த்து நக்கலாக சிரித்தபடியே, அந்த அறையின் வாயிலை நோக்கி நடந்தார் அவர்.

அடுத்த பத்து நிமிடங்களில் அரைகுறையாக குளித்து முடித்து தேனமுதன் அறையை விட்டு வெளியே வர, “டிபன் எடுத்து வைக்கவா” என்று சமையல் அறையில் இருந்து குரல் கொடுத்தார் தேன்கனி.

“வேண்டாம்மா. ஆல்ரெடி லேட்” என்று நிற்காமல் பதில் கூறியபடியே ஓடிவிட்டான் மகன். தேன்கனி தனக்குள் சிரித்துக் கொண்டு தனது ஆஸ்தான பொழுது போக்கில் மூழ்கிப்போக, அந்த சமையல் அறையிலிருந்து வெளிவந்த ஜாம்மின் வாசத்தால் ஈர்க்கப்பட்டு சமையல் அறைக்குள் எட்டிப் பார்த்தார் ஆரவாமுதன்.

“இன்னைக்கு என்ன ஸ்பெஷல் கனி” என்றபடியே அவர் மனைவியை நெருங்க,

“கண்டுபிடிங்க” என்றார் கனி.

“அமுதன் கிளம்பிட்டானா?” என்று அடுப்பின் அருகில் வந்து நின்றவர் கண்களை மூடி ஆழ்ந்து சுவாசிக்க, அவரை புன்னகையுடன் பார்த்து நின்றார் மனைவி.

“ப்ளூ பெரிஸ்… என் தேனுக்குட்டியோட கண்ணைப் போல செம ஹாட்” என்று அவர் கண்ணடிக்க,

“ஆரம்பிச்சாச்சு” என்று தேன்கனி அடுப்பை கவனிக்க, தன் மனைவியைக் குறையாத காதலுடன் பார்வையால் தழுவி நின்றிருந்தார் அமுதன்.

கணவரின் கண்களில் தெரிந்த காதலில் தொலைய நினைத்தாலும், எதிரில் இருந்த அடுப்பு, ‘என்னை கவனி’ என்று எச்சரிக்கை செய்ததில் விடாது அந்த நீல நிற ஜாமை கிண்டிக் கொண்டிருந்தார் தேன்கனி.

ஐந்து நிமிடத்திற்கு மேல் பார்த்திருந்த அமுதன், “நான் பண்றேன் விடு. கை வலிக்கும்.” என்று கரண்டியை தான் வாங்கிக்கொள்ள, இது வழக்கம் தான் என்பதால் அலட்டிக்கொள்ளாமல் தள்ளி நின்றார் தேன்கனி.

அரைமணி நேரத்தில் ஜாம் சரியான பதத்தில் தயாராகிவிட, இதற்குள் ஹாலில் இருந்த சோஃபாவில் வந்து அமர்ந்திருந்தார் தேன்கனி.

அமுதன் அந்த சமையலறையின் மேல் தட்டிலிருந்த ஒரு எவர்சில்வர் டப்பாவில் இருந்து சில சப்பாத்திகளை எடுத்து மீண்டும் லேசாக வாட்டி எடுத்து கொண்டு, அதனுடன் அப்போது தான் தயாரான ஜாமையும் ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்து மனைவியிடம் கொடுத்தார்.

முதல்முறை போலவே விரிந்த சிரிப்புடன் தேன்கனி கையில் வாங்கிக்கொள்ள, இந்த புன்னகைக்காக உலகத்தையே வாங்கி கொடுக்கலாம் என்று எப்போதும் போலவே இப்போதும் எண்ணம் கொண்டார் அமுதன்.

மனைவியைப் பெருமிதமாகப் பார்த்தபடியே அவர் அருகில் அமர, எப்போதும்போல் முதல் வாய் உணவை அமுதனுக்கே ஊட்டினார் தேன்கனி. அமுதன் வாய்திறந்து வாங்கிக்கொள்ள, “எப்படியிருக்கு” என்றார் தேன்கனி.

“சூப்பரா இருக்கு தேனும்மா” என்ற அமுதன், “நீ சாப்பிடு” என்றபடியே டிவி ரிமோட்டை கையில் எடுத்துக்கொண்டார்.

“உன் மகன் என்ன சொல்றான்” என்றபடியே அவர் டிவியில் கவனமாக, “தேவா சீக்கிரம் வர சொன்னதா சொல்லிட்டு இருந்தான். காலையில வழக்கம் போல தூங்கியாச்சு. தலைவர் அவசர அவசரமா எழுந்து ஓடிட்டாரு” என்றார் தேன்கனி.

“என்னவோ கனி இப்போதான் பிரபா முகத்துல உயிர்ப்பு வந்திருக்கு. இது எப்போதும் நிலைச்சு இருக்கணும்.” என்று வேண்டுதலாக அமுதன் கூறிட, ஆமோதிப்பாக தலையசைத்தார் தேன்கனி.

அமுதனின் பால்யகால நண்பர் பிரபாகரன். தேன்கனியை அமுதன் திருமணம் செய்து அழைத்து வரும்போது அவருக்கு இருந்த ஒரே நம்பிக்கை பிரபாகரன் மட்டுமே. தனது நிறுவனத்திலேயே வேலை கொடுத்து, பின் அதே நிறுவனத்தில் நண்பனை பங்குதாரராக்கி, இன்று தனக்கு சமமான அந்தஸ்தில் நிறுத்தி வைத்தது பிரபாகரன் தான்.

அவர் நினைத்திருந்தால் வேலை கொடுத்ததோடு ஒதுங்கி கொண்டிருக்கலாம். ஆனால், எந்த இடத்திலும் தனது நண்பனை விட்டு விடாமல் அவருடனே வைத்துக் கொண்டார் பிரபாகரன். இன்று அவர் மகனையும் தொழிலில் சேர்த்துக்கொண்டு அவனுக்கும் தொழில் கற்றுக் கொடுக்கும் குருவாக நிற்கிறார் பிரபாகரன்.

அமுதனும் தனது நண்பன் கேட்டால் உயிரையும் கொடுத்துவிடுவார். உண்மையில் பிரபாகரன் அவருக்கு கடவுளைப் போன்றவர் தான். அவர் வாழ்வில் விளக்கேற்றி வைத்தவர்.

எப்போதுமே அமுதனுக்கு நண்பனைக் குறித்த கவலைகள் அதிகம். சிறு வயதிலேயே நிகழ்ந்துவிட்ட மனைவியின் இழப்பு, பிள்ளைகளின் பிரிவு என்று அத்தனையும் அவருடனே இருந்து கண்ணால் கண்டவர் அமுதன்.

‘அவனுக்கு நிம்மதியை கொடுக்கக்கூடாதா’ என்று கடவுளிடம் கூட  பலமுறை சண்டையிட்டிருக்கிறார் அவர். அவர் வருத்தத்தை குறைக்கவென்றே தன் மகனை அதிக நேரம் பிரபாகரனிடம் கொடுத்து விடுவார். பிள்ளைகளை பிரிந்த வருத்தத்தில் மதுவின் பிடியில் சிக்கிக்கொள்ள பார்த்தவரை மீட்டெடுத்தவன் தேனமுதன் தான்.

பெரும்பாலான நேரங்களில், “அங்கிள்… அங்கிள்” என்று பிரபாகரனை விடாது துரத்திக் கொண்டிருப்பான் அவன். பெற்றவர்களை விடவும் கூட, பிரபாகரனிடம் நெருக்கம் அதிகம் தேனமுதனுக்கு. அவன் நினைத்த நேரம் சுதந்திரமாக அந்த வீட்டின் இண்டு இடுக்கெல்லாம் அவன் வலம் வர, அவனுக்கு பயந்தே மதுபானங்களை வீட்டிலிருந்து வெளியே எடுத்து வீசிவிட்டார் பிரபாகரன்.

அவரும் மெல்ல மெல்ல தேனமுதனை தனது மகனாகவே நினைக்க தொடங்கிவிட, அவரின் பிடித்தங்கள் அவனுக்கும் பிடித்தமாகிப் போனது. பிள்ளைகள் நிச்சயம் இங்கே வரப்போவதில்லை என்று புரிந்து கொண்ட பிரபாகரன் தனது தொழிலிலும் அவனையே முன்னிறுத்தி பழக்கிவிட, அவர் நினைத்ததை விட வேகமாக தொழில் பழகினான் தேனமுதன்.

எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருக்க, தேனமுதனை வைத்து தன் மகளை தன்னிடம் அழைத்துவர பிரபாகரன் முடிவெடுத்த சமயம், அவரே எதிர்பாராத விதத்தில் தேவசேனாவின் திருமணத்தை முடித்துவிட்டார் பிரகதீஸ்வரி.

நல்லவேளை… தேனமுதனிடம் வெளிப்படையாக எதையும் சொல்லி வைக்கவில்லை என்று அவர் நிம்மதி கொள்ள, அதற்குமுன்பே விஷயம் கேள்வியுற்று மொத்தமாக உடைந்திருந்தான் அவன்.

பிரபாகரன் மகளைப் பற்றி பேசிப் பேசியே அவனை மையல் கொள்ள செய்து விட்டிருந்தார். அவரையும் அறியாமல் நடந்திருந்த தவறுதான். ஆனால், அதன் வலி ஆழமாக தாக்கியிருந்தது தேனமுதனை.

இன்னொருவன் மனைவி என்று அவன் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள, அதையும் கெடுத்து வைத்தான் சத்யதேவ். சரியாக தேவாவின் திருமணம் முடிந்த சமயம், தந்தையின் தொழிலை கவனித்துக் கொள்ளவென்று அவன் அமெரிக்காவிற்கு வர, அங்கிருந்த சில மாதங்களில் தேனமுதனுக்கு நெருங்கிய தோழனாகி இருந்தான் சத்யதேவ்.

அப்படி ஒரு நாளில் தான் சத்யதேவ் தன்னையும் மீறி தேனமுதனிடம் தன் தங்கையின் வாழ்வு குறித்து மனம் திறந்தது. அவன் கூறிய ஒவ்வொரு செய்தியும் ஆணியாக அவன் நெஞ்சில் இறங்க, அப்போதே சிலுவை சுமக்க தொடங்கிவிட்டான் தேனமுதன்.

யாருக்கோ மனைவியாகிவிட்டாள் என்று தெளிந்திருந்தவன் மீண்டும் தன்னைக் குழப்பிக் கொண்டான். தேவாவின் வேதனைகளை கேட்டு, அவன் கலங்கி நிற்க, விடாது புலம்பி அவனை மொத்தமாக குழப்பமடையச் செய்துவிட்டான் சத்யதேவ்.

தேனமுதன் அப்போதிருந்தே தவிக்க தொடங்கிவிட, ஒருநாள் அவனைத் தேடி அவன் அறைக்கு வந்த சத்யதேவ்விடம் சிக்கிக் கொண்டது தேவாவின் நிழற்படம். அவன் கேட்டபோது தேனமுதன் எதையோ கூறி மழுப்பி வைக்க, “சரி… நான் எடுத்துட்டு போறேன்” என்றான் சத்யதேவ்.

அதற்குமேல் தாளாமல், “ப்ளீஸ் தேவ். எனக்கு இது மட்டுமாவது இருக்கட்டும். அவளோட ஞாபகங்களையும் என்கிட்டே இருந்து பறிச்சிடாத” என்று ஒப்புக்கொண்டான் தேனமுதன்.

“இடியட். அவ கல்யாணமானவடா…” என்று தேவ் கத்த,

“என் காதல் அதற்கும் முற்பட்டது தேவ். ஐ ப்ரோமிஸ். எந்த விதத்திலும் அவளோட வாழ்க்கையில நான் குறுக்கிட மாட்டேன்” என்றான் தேனமுதன்.

தேவ் சில நிமிடங்கள் பதில் கூறாமல் நின்றவன், கட்டிலில் பொத்தென அமர்ந்து விட்டான். தேனமுதன் அவன் அருகில் அமர, “நீ ஏன்டா அவளைத்தேடி இந்தியா வரல” என்று அவனைப் பிடித்து உலுக்கினான் தேவ்.

சிறிது காலமே என்றாலும், ஆழமான நட்பு இருந்தது அவர்களுக்குள். தேனமுதன் எப்படிப்பட்டவன் என்பதை இந்த சில மாத பழக்கத்திலேயே தேவ் உணர்ந்திருக்க, இப்படி ஒருவனின் காதலை தவறவிட்டு, அந்த அரக்கனிடம் சிக்கிக் கொண்டாளே என்று கண்ணீர் வடித்தது அவன் மனம்.

நண்பனின் நிலை இன்னும் வருத்த, தங்கையை அறிந்தவனாக, “இதெல்லாம் சரியா வராது தேன். அவளை மறந்திடு. அதுதான் எல்லாருக்கும் நல்லது. எனக்கு தேவாவைப் பத்தி நல்லா தெரியும். அவ யோசிக்கக்கூட மாட்டா” என்று அறிவுரை கூறினான் தேவ்.

“நான் எதையும் எதிர்பார்க்கல தேவ். எனக்கு தேவாவைப் பிடிக்கும். இந்த நிமிஷம் கூட என்னோட பிடித்தம் மாறல. அதுக்காக, அவ என்னை காதலிக்கனும், என்கூடவே இருக்கணும்னு அர்த்தம் இல்ல. இது என்னோட காதல். என்னோட போகட்டுமே.” என்று நிற்பவனை என்ன செய்வது என்று புரியவில்லை தேவுக்கு.

‘இவனிடம் தங்கையின் தற்போதைய நிலையைப் பகிர்ந்து கொண்டது தவறோ’ என்று தாமதமாக தவித்தது அவன் நெஞ்சம்.

அதற்குமேல் அதைப்பற்றி பேச்சை வளர்க்காமல் இருவரும் கவனத்துடன் தவிர்த்துவிட, அதன் பிறகான நேரங்களில் தேவாவின் பெயரைக்கூட தேனமுதனின் முன்னால் உச்சரிக்கமாட்டான் சத்யதேவ்.

மற்றபடி, அவர்களின் நட்பு தொய்வில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்க, அடுத்த சில மாதங்களில் தேவா அழைக்கவும் மீண்டும் இந்தியா வந்துவிட்டான் சத்யதேவ். அதன் பின்னான நாட்களில் தேவாவை தன்னுள் மறைத்துக்கொண்டு பெற்றவர்களுக்காக சிரிப்பை முகமூடியாக்கி கொண்டு தேனமுதன் நடமாட, அவனது மாற்றத்தை முதலில் கண்டுகொண்டவர் பிரபாகரன் தான்.

என்ன எது என்று அவர் தூண்டித் துருவியதில் காதல் தோல்வி என்று மட்டும் கூறினானே தவிர்த்து, பெயரைக்கூட சொல்ல மறுத்துவிட்டான். பிரபாகரன் அவனைத் தனியே விடாமல் அவனுடன் நேரம் செலவழிக்க, மெல்ல மெல்ல அவன் மீண்டு வந்த நேரம் மீண்டும் தேவ்விடம் இருந்து அழைப்பு.

தேவா சேஷனை விவாகரத்து செய்ய ஒப்புக்கொண்டுவிட்டாள் என்ற தேவ்வின் வார்த்தைகள் மீண்டும் ஏதோவொரு நம்பிக்கையை விதைக்க, மீண்டும் தேவாவை எண்ணி ஏக்கம் கொண்டது அவன் மனது.

அவன் நினைப்பிற்கு தூபம் போடுவதுபோல அடுத்தடுத்த நிகழ்வுகளும் அமைந்துவிட, அத்தனைக்கும் முத்தாய்ப்பாய் இதோ அவனிடமே வந்து நிற்கிறாள் அவன் தேவதை.

தேனமுதனின் மனம் மீண்டும் தேவாவை தனக்கானவளாக நினைக்க தொடங்கியிருக்க, அதற்கேற்றாற்போல் அவளை கவனிக்கும் பொறுப்பை தேனமுதனிடம் ஒப்படைத்து இருந்தார் பிரபாகரன்.

ஆனால், தான் வளைக்க நினைப்பது இரும்பு அல்ல என்பது புரியவில்லை அவனுக்கு. தேவசேனா கைகளுக்குள் அகப்படாத காற்றைப் போன்றவள் என்பதை அறிய அவன் என்ன விலை கொடுக்க வேண்டி வருமோ???

.

Advertisement