Advertisement

பாடல் – 2
   
      “வாங்க அண்ணா, அண்ணி… நல்லா இருக்கீங்களா? எங்க சம்யுக்தாவ காணோம்?” என்று முகம் முழுக்க சந்தோசத்துடன் முருகேசனின் அக்காவையும் அவர் கணவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார் பத்மா. “நல்லா இருக்கோம் பத்மா. அவளுக்கு வரணும்னு ஆசைதான் ஆனா மாபிள்ளைக்கு லீவு கிடைக்கல அதான் வர முடியல.ஆமா காவியா எங்க? இனியாவுக்கு அலங்காரம் எல்லாம் முடிஞ்சுதா?” என்று கேட்ட படி பத்மாவுடன் உள்ளே நுழைந்தார் முருகேசனின் அக்கா விஜயா.
    “உள்ளதான் அண்ணி இருக்காங்க ரெண்டுபேரும். காவியாவும் என் அக்கா பொண்ணு லலிதாவும் தான் உள்ள அலங்காரம் பண்ணிவிட்டுட்டு இருக்காங்க” என்று பதிலளித்த பத்மா விஜயாவை இனியாவின் அறைக்கு அழைத்து சென்றார்.
    உள்ளே சென்ற விஜயா அங்கு தன் அலங்காரம் முடிந்து அமர்ந்திருந்த இனியாவிடம் சென்று அவள் முகத்தை நெட்டி முறித்தபடி “என் கண்ணே பட்டுரும் போல இருக்கு. எனக்கு மட்டும் ஒரு பையன் இருந்தா உன்ன இப்படி வெளி இடத்துக்கு கட்டி கொடுக்க விடுவேனா” என்றவர் “அப்போ நா நல்லா இல்லையா அத்த” என்று தன் பின்னால் கேட்ட காவியாவின் குரலில் அவள் புறம் திரும்பி எதோ சொல்ல வரும் முன் அவரை முந்திய இனியா “உனக்கு என்ன டி கொறச்சல் வாலு ஒன்ன தவிர” என்று கூற அங்கு இருந்த அனைவரும் சிரித்து விட்டனர். இவ்வாறே நேரம் கழிய, சிறிது நேரம் கழித்து அங்கு வந்த பத்மா “மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பக்கத்துல வந்துட்டாங்கலாம் அண்ணி ” என்று கூற விஜயாவும் லலிதாவும் இனியாவின் துணைக்கு காவியாவை விட்டுவிட்டு அவர்களை வரவேற்க வெளியே சென்றுவிட்டார்கள்.
    சிறிது நேரத்தில் ஹாலில் அரவம் கேட்கவும் ஜன்னலின் வழியாக எட்டி பார்த்த காவியா சில வினாடிகள் கழித்து இனியாவிடம் வந்து “இனியாக்கா போட்டோல இருந்ததவிட மாம்ஸ் நேருல செமயா இருக்காரு, ஆனா என்ன  கொஞ்சம் சிரிச்சா இன்னும் அழகா இருப்பாரு” என்று கூறவும் ‘ அப்படியா ‘ என்ற பார்வையை மட்டுமே இனியா பதிலாக கொடுத்தாள்.
  “அக்கா நீ வந்து பாரேன்” என்று  காவியா அழைக்க அதற்கு மறுத்துவிட்டாள். இனியாவை அதோடு விட்டாள் அது காவியா இல்லயே…ஒரு வழியாக நச்சி இனியாவை ஜன்னலோரம் இழுத்து வந்தவள் அவளை விஷ்வாவை பார்க்க சொல்ல , அவள் நச்சரிப்பு தாங்காமல் இனியாவும் எட்டி பார்க்க, ஹாலில் தேமே என்று அமர்ந்து இருந்த விஷ்வாவும் இவர்கள் அறை பக்கம் பார்க்கவும் சரியாக இருக்க, இருவர் பார்வையும் ஒன்றோடு ஒன்று சந்தித்துக் கொண்டன.
     இவளை கண்டவுடன் அவன் முகம் இவ்வளவு நேரம் துலைத்திருந்த சிரிப்பை தத்து எடுக்க, தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்து யாரும் அறியாமல் கண்ணடித்துவிட்டு திரும்பிவிட்டான்.
     அவன் இவ்வாறு பண்ணியதும் முகம் சிவக்க உள்ளே சென்று அமர்ந்துவிட்டாள்  இனியா. ‘ என்ன இது பார்த்த முதல் சந்திப்பிலேயே இப்படி பண்ணுகிறான் ‘ என்று இவள் யோசிக்கவும் லலிதா வந்து இவளை அழைத்து செல்லவும் சரியாக இருந்தது.
     பின், ஹால் உள்ளே நுழைந்தவள் தனது பார்வையை மெல்ல அவர்கள் பக்கம் திருப்ப அங்கு விஷ்வாவுடன் ஒரு நடுத்தர வயது பெண்மணியும், வீஷ்வாவை விட சிறிது பெரியவராக ஒருவரும் அவர் அருகில் ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தனர்.
     அவளை அங்கு இருந்த இன்னொரு சோஃபாவில் அமரவைத்தார் பத்மா. பின் அவள் அருகில் வந்து அமர்ந்துகொண்ட அப்பெண் அவள் கைகளை பிடித்துக் கொண்டு “ரொம்ப அழகா இருக்க நீ ” என்று சொல்ல அவருக்கு ஒரு சிறு சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்துவிட்டு அமைதியாகவே இருந்தாள்.
     பின் அப்பெண்ணே தொடர்ந்து அவர்களுடன் வந்தவர்களை அறிமுகப்படுத்த ஆரம்பித்தார் முதலில்  “இவன்தான் விஷ்வா” என்று அவனை கைகாட்டியவர் “நா சுசித்ரா, விஷ்வாவோட அக்கா அப்பறம் இது என்னோட வீட்டுக்காரர் தீபக்” என்று விஷ்வா அருகில் இருந்தவரை கை காட்டிய சுசித்ரா ” இது எங்க அம்மா” என்று அந்த நடுத்தர வயது பெண்ணையும் அறிமுகப் படுத்தினார். தீபக்கயும் அவர்கள் அம்மாவையும் பார்த்து சிறு சிரிப்பை உதிர்த்த இனியா மறந்தும் விஷ்வாவின் பக்கம் தன் பார்வையை செலுத்தவில்லை. ஆனால் அவன் பார்வையோ இவள் வந்ததில் இருந்து இவள் முகத்தை விட்டு இம்மியும் நகரவில்லை.     
    ஏற்கனவே அவளுக்கு புதியவர்கள் மத்தியில் இவ்வாறு காட்சிப் பொருள் போல அமர்ந்திருப்பது சிறிது சங்கடமாக இருக்க இவன் பார்வை வேறு அவளை மேலும் சங்கடத்திற்கு உள்ளாக்கியது.
     விஷ்வா தீபக்கின் காதில் எதோ சொல்ல அவனை ஒரு நமட்டு சிரிப்புடன் பார்த்த தீபக், முருகேசனிடம் திரும்பி “பையனும் பொண்ணும் ஒரு அஞ்சு நிமிஷம் தனியா பேசுனா அவங்களுக்கும் ஒரு முடிவு எடுக்க கொஞ்சம் சுலபமா  இருக்கும்னு நாங்க நினைக்கறோம், நீங்க என்ன சொல்றீங்க” என்று கேட்க, தன் மனைவியை திரும்பி பார்த்த முருகேசன் எதோ சொல்ல வர “இதுல என்ன இருக்கு, தாராளமா பேசட்டும் நானே இத சொல்லலாம்னு இருந்தேன்” என்று விஜயா அவரை முந்திக்கொண்டு சொல்லவும் தனது அக்காவின் பார்வையில் அமைதியாகிவிட்டார் முருகேசன்.
    இருவரையும் வீட்டிற்க்கு பின்னால் இருந்த சிறு தோட்டத்திருக்கு அழைத்து சென்ற காவியா சுசித்ராவுடன்  சிறிது தூரம் தள்ளி நின்றுகொண்டாள்.
    அங்கு வந்ததில் இருந்து அவளாக எதாவது பேசுவாள் என்று அவள் முகத்தையே விஷ்வா பார்த்துக்கொண்டு இருக்க இனியாவோ அங்கு இருந்த மல்லிகை பந்தலை விட்டு தன் பார்வையை திருப்பவில்லை. இனியும் எவ்வளவு நேரம் ஆனாலும் இவளாக எதுவும் பேச ஆரம்பிக்க மாட்டாள் என்று நினைத்த விஷ்வா தானே பேச்சை ஆரம்பித்தான்.
     “இதுக்கு முன்னாடி என்ன எங்கயாச்சு பாத்திருக்கிங்களா” என்று கேட்க, அவள் ஆம் என்பது போல தலை அசைத்தாள். “எப்போ, எங்க?” என்று அவன் கேட்க “உங்க ஃபோட்டோ வீட்டுல காட்டுனாங்க” என்று அவள் பதில் அளிக்க “வேற எங்கயாவது என்ன பார்த்த நியாபகம் இருக்கா” என்று அவன் ஒரு ஆழ்ந்த பார்வையுடன் கேட்க இல்லை என்பதை போல தலை அசைத்தாள். “நீங்க என்ன பாத்திருக்கிங்களா” என்று அவள் கேட்க “இல்லை” என்று கூறியவன் குரல் சற்று வித்தியாசமாக பட , அவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க அதில் இன்னதென்று அவள் குறிப்பிட முடியாத ஒரு உணர்வு.
      இவள் பார்ப்பதை பார்த்தவன் உடனே தன் முகத்தில் ஒட்டாத ஒரு சிரிப்பை கொண்டுவந்து “இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பமா” என்று கேட்க, ‘ ஆம் ‘ என்பது போல அவள் தலையை மட்டும் அசைக்க, “சரி, உன் மொபைல் நம்பர் என்ன” என்று கேட்டு அவன் தன் அலைபேசியை தனது கைகளில் எடுக்க “என்கிட்ட மொபைல் இல்ல” என்று அவள் பதில் அளித்தாள். “ஏன், …” என்று அவன் எதோ பேச ஆரம்பிக்கவும் சுசித்ராவும், காவியாவும் இவர்களை நோக்கி வரவும் சரியாக இருக்க அப்பேச்சை அதோடு விட்டுவிட்டான்.
    “என்ன விஷ்வா பேசியாச்சா” என்று கேட்ட தன் அக்காவிடம் “பேசிட்டேன் க்கா வா உள்ள போகலாம்” என்ற பதிலுடன் உள்ளே சென்றான்.
    உள்ளே சென்றவர்களிடம் அவர்கள் சம்மதத்தை கேட்க, தன் குடும்பத்தினரிடம் இருவரும் சரி என்று கூற அன்றே இனியாவிற்கு பூ வைத்து அவர்கள் திருமணத்தை உறுதிபடுத்தி விட்டார்கள் விஷ்வா வீட்டினர்.
     பின்னர் சிறிது நேரம் அவர்கள் அங்கு பேசிக்கொண்டு இருக்க விஷ்வாவயும் அவனின் கலகப்பான குணத்தையும் அனைவருக்கும் பிடித்துவிட்டது.
    இனியா மட்டும் எந்த பேச்சிலும் கலந்துகொள்ளவில்லை. எதையோ யோசித்தபடி அமைதியாகவே அமர்ந்திருந்தாள். ஆனால் காவியாவுக்கு அவனை மிகவும் பிடித்து போக இனியாவுக்கும் சேர்த்து அவளே பேசிக்கொண்டு இருந்தாள்.
    பின் விஷ்வா வீட்டினர் கிளம்பும்  முன் அடுத்த வாரத்தில் ஒரு நாள் திருமண பட்டு, நிச்சய மோதிரம் மற்றும் தாலி கொடி வாங்கலாம் என்றும் அந்த மாத கடைசியில் வரும் முகூர்த்த நாளில் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்றும் முடிவு எடுத்துவிட்டே சென்றனர்.

Advertisement