Advertisement

பாடல் – 6
     
         அதிகாலை நேரம், அந்த மண்டபத்தில் உறவினர்களும் நண்பர்களும் கூடியிருக்க பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்து இருந்தான் விஷ்வா. அவன் கைகள் ஐயர் சொல்வதை செய்து கொண்டு இருந்தாலும் அவன் மனமோ தன் மனம் கவர்ந்தவளுக்காக காத்துக்கொண்டு இருந்தது. அவனை வெகு நேரம் காக்க வைக்காமல் “பொண்ண அழைச்சிட்டு வாங்க” என்று ஐயர் கூற ஓரக்கண்ணால் அவள் அறை இருந்த பக்கம் தனது பார்வையை செலுத்தினான் அந்நாளின் நாயகன். 
       இளஞ்சிவப்பு பட்டுடுத்தி, அழகிய ஆபரணங்கள் அணிந்து, அழகியாய் இருந்தவளை பேரழகியாய் அவள் அலங்காரம் மாற்றியிருக்க தேவதையென நடந்து வந்தாள் பெண்ணவள். தனது அருகில் வரும் வரை அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தவன் அவள் தன் அருகில் அமர்ந்ததும் அவள் அருகே குனிந்து “ரொம்ப அழகா இருக்க” என்று ரசனையுடன் அவன் கூற, ஏற்கனவே செம்மையூட்டப்பட்டு இருந்த அவள் கன்னங்கள் மேலும் சிவந்தது. 
      அருமைக்காரர் தாலி எடுத்து கொடுக்க அதை தனது கைகளில் வாங்கியவன்  தங்கள் இல்லறம் நல்லறமாக இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டியபடி அவள் கழுத்தில் முடிச்சிட்டான்.தாலி கட்டும் பொழுது அவள் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் இவன் கைகளில் விழ என்ன என்பதை போல அவளை பார்க்க ஒன்றும் இல்லை என்று தலை அசைத்தவள் பார்வையை தாழ்த்தி கொண்டாள். 
       மீதம் இருந்த சடங்குகள் விரைவாக நிறைவேற காலை உணவை மண்டபத்தில் முடித்து கொண்ட பின் பால் பழம் சாப்பிட விஷ்வா வீட்டை நோக்கி சென்றனர். அவன் வீட்டை பர்த்தவளுக்கு, தனக்கு பிடித்த வகையில் முன்னே சிறிய தோட்டம் விட்டு அதில் பல வகை மலர் செடிகள் இருந்த அந்த வீட்டை முதல் பார்வையிலேயே பிடித்துவிட்டது. 
     இவர்களுக்கு ஆரத்தி எடுத்த சுசித்ரா “வலது கால எடுத்து வைச்சு உள்ள வா இனியா” என்று சொல்ல, தன்னை அறியாமல் விஷ்வா கைகளை பிடித்து கொண்டு தன் முதல் அடியை அவர்கள் வீட்டில் வைத்தாள். அவள் தானாக முதல் முறை இவன் கைகளை பிடிக்க, அவர்கள் முதல் ஸ்பரிசம் அவன் உள்ளே  இனம் புரியா உணர்வை கொடுத்தது.  முதலில் அவளை பூஜை அறைக்கு சுசித்ரா அழைத்து செல்ல, அங்கு சென்று விளக்கு ஏற்றிய பின்னர் இருவரும் ஒரு சோஃபாவில் அமரவைக்கப் பட்டனர். முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் ஒரு மோதிரத்தை போட்டு இவர்களை எடுக்க சொல்ல, இருவரும் அதனுள் தனது கையை விட்டு தேடினர். 
      முதல் முறை அது இனியா கைகளில் கிடைக்க சிறு பிள்ளை போல முகம் முழுக்க சிரிப்புடன் அவனை ஒரு வெற்றி பார்வை பார்த்துவிட்டு அதை அவள் வெளியே எடுக்க, அந்த பார்வையில் மொத்தமாக அவள் புறம் சாய்ந்து விட்டான் விஷ்வா.
     மீண்டும் அந்த மோதிரத்தை பாத்திரத்தில் போட்டு இவர்களை எடுக்க சொன்னார்கள்,இரண்டாம் முறை அதை விஷ்வா எடுத்துவிட அவள் சிரிப்பு சிறிது சுருங்கி விட்டது, அதை பார்த்தவன் மனமும் சுருங்கிவிட்டது. மூன்றாம் முறை அந்த மோதிரம் முதலில் விஷ்வா கைகளில் கிடைக்க, மீண்டும் அவள் முகத்தில் அந்த சிரிப்பை காண ஆசை பட்டவன், யாரும் அறியாமல் அதை அவள் கைகளில் அவன் திணிக்க அவனை ஒரு ஆச்சர்ய பார்வை பார்த்தவள் அதை மீண்டும் அவன் கைகளில் கொடுத்துவிட்டாள். அதை அவன் வாங்காமல் கை விரல்களை மடக்கி கொள்ள, அவன் செயலில் அவள் முகம் புன்னகையை பூச இந்த முறை அவள் மோதிரத்துடன் தனது கைகளை வெளியே எடுத்துவிட்டாள்.
      அதன் பிறகு இருவரும் பாழ் பழம் சாப்பிட, அங்கு இருந்து இனியா வீட்டிற்க்கு சென்றனர். அங்கு காவியா ஆரத்தி எடுக்க, ஆரத்தி எடுத்த பிறகு “மாமா” என்றபடி ஆரத்தி தட்டை நீட்ட அதில் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை வைத்தான் விஷ்வா. “இதெல்லாம் செல்லாது ஒரு பெரிய அமௌண்டா கொடுங்க” என்றபடி காவியா அங்கேயே நிற்க, அவளிடம் மெல்லிய குரலில் விஷ்வா எதோ சொல்ல அதை கேட்டவள் முகத்தில் ஒரு பெரிய புன்னகையுடன் அவன் உள்ளே செல்ல வழி விட்டாள். 
      உள்ளே வந்த பின் காவியாவை பிடித்த இனியா “அவரு  அப்படி என்ன சொன்னாரு? சொன்னதும் உன் மொகம் அப்டியே பிரகாசம் ஆகிருச்சு” என்று அவன் என்ன சொன்னான் என்ற ஆர்வத்தில் கேட்க “அதுவா…..” என்று இழுத்த காவியா, “சொல்ல முடியாது போ” என்றபடி அங்கு இருந்து ஓடிவிட்டாள்.
***********
      சிறிது நேரம் அங்கு இருந்தவர்கள் மாலை நடக்கும் வரவேற்புக்கு தயாராக மீண்டும் மண்டபத்திற்கு சென்றனர். அவர்கள் அங்கு செல்லும் பொழுதே மதியம் ஆகி விட்டிருந்ததால் இருவரையும் மணப்பெண் மற்றும் மணமகன் அறைக்கு ஓய்வு எடுக்க அழைத்துச்சென்று விட்டனர். 
       சிறிது நேரம் கழித்து அழகு நிலையத்தில் இருந்து பெண்கள் வந்து விட அதன் பின்னான நேரம் ரெக்கை கட்டி கொண்டு பறந்தது.
    
     வரவேற்புக்கு இருவர் பக்கமும் இருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்திருக்க, வந்திருந்தவர்கள் அனைவரும் இருவர் ஜோடி பொருத்தம் பற்றியே புகழ்ந்தனர். 
    மாலை 6 மணி போல தொடங்கிய வரவேற்பு இரவு 9 மணி வரை தொடர, அதன் பின் இரவு உணவை முடித்துக்கொண்டு அனைவரும் மண்டபத்தில் இருந்து கிளம்பிவிட்டனர். 
     அதன் பிறகே இரவு அவனுடன் தனியாக கழிக்க வேண்டும் என்றது இனியாவுக்கு நியாபகம் வர, இத்தனை நேரம் இருந்த இருந்த மகிழ்ச்சி போய் ஒரு வித பயம் சூழ ஆரம்பித்தது அவள் மனதில். என்னதான் அவனை ஏற்றுக்கொள்ள முடிவு எடுத்திருந்தாலும், இன்றே தன் வாழ்வை முழுமையாக அவனுடன் தொடங்க அவள் தயாராக இல்லை.
     அவளுக்கு அலங்காரம் பண்ணிய சம்யுக்தா ஒரு சில அறிவுரைகளையும் கூறிவிட்டு, இனியாவை அவள் அறைக்கு அழைத்து செல்ல, அதற்குள் தான் அவனிடம் என்ன பேச வேண்டும் என்பதை முடிவு எடுத்து விட்டாள்.

Advertisement