Advertisement

பாடல் – 5
       இரவு வெகு நேரம் கழித்தே உறங்கி இருந்ததால், எழும் போதே கண்கள் எல்லாம் சிவந்து இருந்தது இனியாவுக்கு. இனி தன் வாழ்வில் அஜித் என்பவனை பற்றிய நினைப்பே இருக்க கூடாது என்று முடிவு எடுத்தவளாய் அன்றைய நாளை தொடங்கினாள். ஆனால் பாவம் அவள் அறியவில்லை, தான் யாரை பற்றி இனி நினைக்க கூடாது என்று முடிவு எடுத்தாளோ அவனால் தனது வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்ப்பட போவதை.
     விஷ்வாவுக்கு ஒரு புறம் இனியாவுடன் தனக்கு நடக்கக் இருக்கும் திருமணம் மகிழ்ச்சியை தந்தாலும் மறுபுறம் அவன் உணர்ந்துகொண்ட அவளது ஒதுக்கம், ஒருவேளை அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையோ என்ற எண்ணத்தையும் தோற்றுவித்தது. மறுபுறம் இனியாவிக்கோ மனம் இருதலைக்கொல்லி எறும்பாய் தவித்தது. ஒரு புறம் விஷ்வாவிடம் அஜித் பற்றிய உண்மைகளை மறைப்பது மனதை உறுத்தினாலும் மறுபுறம் இவ்விஷயத்தை அவனிடம் சொல்ல போய் இது தன் பெற்றோர் காதுகளை எட்டிவிட்டால் என்ன பண்ணுவது என்ற பயமும் இருந்தது. 
     ஆனால் பாவம் இவ்விஷயத்தை அவள் முன்பே சொல்லி இருந்தால் பின்னாளில் வரப்போகும் ஒரு பிரளயத்தை தடுத்திருக்கலாம்.
      நாட்கள் அதன் போக்கில் செல்ல திருமணத்திற்கு இன்னும் இரு வாரங்களே மீதம் இருந்தது. இதற்கு இடையில் இரண்டு மூன்று தரம் விஷ்வா  மற்றும் சுசி இனியா வின் வீட்டிற்க்கு சென்றிருந்தாலும் அவனிடம் அளவுக்கு மட்டும் பேசும் அவள் சுசித்ரா விடம் அப்படி எந்த அளவையும் வைத்துக் கொள்ளவில்லை. வீட்டில் ஆட்களை வைத்துக்கொண்டு எப்படி பேசுவது என்று தயங்குகிறாளோ என்று எண்ணியவன் பத்மாவின் அலைபேசிக்கு அழைத்து பேச அதுவும் சரியான பலன் அளிக்கவில்லை. முதல் முறை இவன் அழைத்த போது “ஹலோ யாரு” என்று அவள் கேட்க “நான்தான் விஷ்வா” என்றான். அதற்கு மேல் அந்த பக்கம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போக “இனியா, இனியா” என்று இவன் இரு முறை அழைக்க “சாரி சரியா கேட்கல” என்றவள் தொடர்ந்து “அம்மாகிட்ட கொடுக்கணுமா” என்க
 ‘ கிழிஞ்சிது போ ‘ என்று மனதில் நினைத்தவன் “இல்ல உன்கிட்ட பேசத்தான் கால் பண்ணுனேன்” என்று சொல்ல “ம்ம்ம் சொல்லுங்க”  என்ற பதில் மட்டுமே வந்தது.
      “உன்கிட்ட ஒன்னு கேட்கணும் அப்பறம் நானும் ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என்று இவன் புதிரோடு ஆரம்பிக்க “கேளு…” என்று இவள் சொல்லும் முன்னரே இவன் டீம் லீடர் இவனை அழைக்க “நா கொஞ்ச நேரம் கழிச்சு கால் பண்றேன்” என்று சொல்லி காலை கட் பண்ணிவிட்டான்.
       பிறகு சிறிது நேரம் கழித்து இவன் அழைக்க, அழைப்பை ஏற்றதோ பத்மா. அவரிடம் சிறு நலன் விசாரிப்புக்கு பின் இனியா எங்கே என்று இவன் தயங்கியபடி கேட்க்க, தான் வெளியே வந்திருப்பதாகவும் வீட்டிற்க்கு சென்ற பின் அவளை அழைக்க சொல்வதாகவும் கூறினார். “இருக்கட்டும் அத்த நானே நாளைக்கு காலைல கூப்பிடுறேன்” என்ற படி அழைப்பை கட் செய்து விட்டான். 
     ஒரு வாரம் அமைதியாய் கழிய, தன் திருமணத்திற்கு இரண்டு வாரம் விடுப்பு எடுக்க வேண்டி இருந்ததால், அதற்கு முன் முடிக்க வேண்டிய வேலைகள் விஷ்வா வின் நேரத்தை இழுத்துகொள்ள அவனால் அதன் பிறகு இனியாவிடம் சுத்தமாக பேச முடியவில்லை.
     இடையில் ஒரு நாள் அலுவலகம் விட்டு வந்த அவனை அழைத்த அவன் தாய் சுலோச்சனா “தம்பி, நாளான்னைக்கு கோவில்ல தாலிக்கு பொன்னு கொடுத்துட்டு அப்புடியே உப்பு சக்கர மாத்திரலாம்னு முடிவு பண்ணிருக்கோம் ஒரு பாதி நாள் லீவு எடுத்துக்கோ” என்றுவிட்டு இரவு உணவை எடுத்துவைக்க சென்றார்.
     இந்த ஒரு வாரமும் வேலை பளுவில் இனியாவிடம் பேசாதது நியாபாகம் வர கோவிலில் அவளிடம் பேச வேண்டும் என்ற முடிவுடன் சாப்பிட சென்றான் விஷ்வா.
*******
     இரண்டாம் நாள் காலை கோவிலில் இரு குடும்பம் மற்றும் அவர்கள் நெருங்கிய உறவினர்கள் கூடியிருக்க விஷ்வாவின் கண்களோ சுற்றிலும் இனியாவை தேடியது. ஆனால் எங்கும் அவள் தென் படாததால், அருகில் தன் இரண்டு வயது மகளுடன் நின்றிருந்த தீபக்கிடம் திரும்பி “மாமா எங்க இனியாவ காணோம்” என்று கேட்டவனுக்கு “உப்பு சக்கர மாத்தரதுக்கு எல்லாம் பொண்ணுங்கள கூட்டிட்டு வர மாட்டாங்க ” என்று ஒரு கிண்டல் சிரிப்புடன் தீபக் சொல்ல ” ஆனா சுசி அக்காவ கூட்டிட்டு வந்தோம்ல”  என்று விஷ்வா கேட்க “எங்களுக்கு அன்னைக்குதான் நிச்சயம் பண்ணினாங்க அதான் உங்க அக்காவும் வந்தா” என்றவன் அதோடு விடாமல் 
 “என்ன மாப்ள உன் ஆள பாக்காம இருக்க முடியலை போல, ஒரு வாரம் மட்டும் பொறு அதுக்கு அப்பறம் நீயா நினச்சாலும் அவங்கள விட்டு வேற எங்கேயும் உன்ன பாக்க விட மாட்டாங்க” என்று ஒரு பெரு மூச்சு விட “என்ன மாமா இந்த ஆச வேற இருக்கா, நான் வேணும்னா அக்கா கிட்ட சொல்லி ஹெல்ப் பண்ணவா” என்று கேட்க “அய்யோ சாமி என்ன ஆள விடு” என்று திரும்பிக்கொண்டான் தீபக். 
       **********
      “என்ன காவியா இது, உன்ன கொண்டு போற துணிய பேக் பண்ண சொன்னா இங்க நின்னு அரட்டை அடிச்சுட்டு இருக்க, அங்க வந்து அய்யோ இத காணோம் அத மறந்துட்டேனு சொல்லு அப்பறம் இருக்கு உனக்கு” என்று தனது இளைய மகள் அரட்டிக்கொண்டு இருந்தார் பத்மா. 
      நாளை இனியா மற்றும் விஷ்வா வின் திருமணம். இன்று மதியமே அனைவரும் மண்டபத்திற்கு சென்றுவிடுவார்கள். அன்று மதியம் நிச்சயம் பண்ணவும், மாலை திருமணத்திற்கு முன் நடக்கும் சடங்கை நடத்தவும், மறுநாள் மாலை வரவேற்பு வைக்கவும் முடிவு பண்ணி இருந்தார்கள். 
     வீடு நெருங்கிய உறவினர்களால் நிரம்பி இருக்க அனைவரையும் சீக்கிரம் கிளம்புமாரு விரட்டிக்கொண்டு இருந்தார் பத்மா. இனியாவும் மிகவும் சந்தோசமாக இல்லா விட்டாலும் அவள் மனதிலும் சிறு எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. தனது வாழ்க்கை இனி விஷ்வாவோடுதான் என்று அவள் முடிவு எடுத்து இருக்க தனது திருமணத்தை முழுமையாக அனுபவிக்க எண்ணியிருந்தாள். 
     ஒரு வழியாக காலை 10 மணி அளவில் அனைவரும் கிளம்பி, தயாராக இருந்த வேனில் முன் செல்ல இனியா, காவியா, பத்மா மற்றும் விஜயாவின் மகள் சம்யுக்தா பின்னால் காரில் சென்றனர். 
           திருமணம் ஈரோட்டில் வைத்துக்கொள்ள முடிவு எடுத்திருந்தார்கள். சிறிது நேரத்தில் கார் மண்டபத்தை அடைய, முன்னமே வந்திருந்த விஷ்வா வீட்டு உறவினர்கள் இனியாவுக்கு ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்து சென்றார்கள். விஷ்வா வோ இவளை விட்டு தனது பார்வையை திருப்ப முடியாமல் இருந்தாலும், “பாத்து மச்சான் வாய்ல எதாச்சும் போயிற போகுது” என்று அருகில் இருந்த தனது நண்பர்கள் கிண்டலில் கஷ்டப்பட்டு தன்னை அடக்கி கொண்டான்.
      ஆரத்தி எடுத்து உள்ளே செல்லும் முன் அவள் பார்வையில் இவன் விழ சிறு புன்னகை ஒன்றை இவனுக்கு பரிசாக வழங்கிவிட்டு உள்ளே சென்று விட்டாள் இனியா. 
     அதன் பிறகு வேகமாக நிச்சய வேலை நடைபெற, நல்ல நேரத்தில் நிச்சய பத்திரம் வாசித்த பின்னர் நலங்கு வைக்க அவளை அழைத்து வர மஞ்சள் பட்டுடுத்தி அதிக அலங்காரம் இல்லாமல் வந்த இனியாவின் முகம் அவன் மனதில் ஆழ பதிந்துவிட்டது. நலங்கு முடிந்த பின்னர் மோதிரம் மாற்ற விஷ்வாவை மேடைக்கு அழைக்க, அங்கு சென்றவன் சிறு நடுக்கத்துடன் இருந்த மென்மையாக அவள் கரங்களில் மோதிரம் அணிவித்தான், இத்தனை அவள் தன்னை நிமிர்ந்து பார்க்காமல் இருப்பதை கவனித்து அவள் தனக்கு மோதிரம் போட வரும் பொழுது தனது கைகளை அவள் கைகளில் கொடுக்காமல் விளையாட்டு காட்டியவன், இனியா நிமிர்ந்து விளையாட்டாய் இவனை முறைக்கவும் சிரித்துக்கொண்டே தனது கைகளை அவள் கைகளில் ஒப்படைத்தான்.

Advertisement