Advertisement

பாடல் – 3
     ஒரு வாரம் அமைதியாக கழிய, மறுவாரம் ஒரு வெள்ளிக்கிழமையில்  திருமண பட்டு எடுக்க இனியா மற்றும் விஷவாவின் குடும்பத்தினர் கோவையில் உள்ள ஒரு பிரபல கடைக்கு சென்றனர். 
     முதலில் பட்டு பிரிவுக்கு சென்ற பெண்கள் தங்களுக்கான புடவைகளை தேர்வு செய்ய, நல்ல நேரத்தில் முகூர்த்த பட்டு எடுக்க வேண்டும் என்பதால் அதற்குள் மற்றவர்கள் ஆடைகளை எடுத்து விடலாம் என்று முடிவு எடுத்து விஷ்வாவும் மற்ற ஆண்களும் அவர்களுக்கு என்று ஒதுக்க பட்ட பிரிவுக்கு சென்றுவிட்டனர்.
        தனது மாமாவுடன் பேசிக்கொண்டு இருந்த விஷ்வாவின் அலைபேசி சிணுங்க அதை எடுத்தவன் “சொல்லு அக்கா” என்க “உனக்கு துணி எல்லாம் எடுதாச்சா” என்று கேட்ட தன் அக்காவிடம் “எடுத்துட்டோம்” என்று பதிலுறைக்க “அப்போ கொஞ்ச நேரம் இங்க வர முடியுமா”  என்று அழைத்த சுசித்ராவிடம் “சரி வர்றேன்” என்றபடி அழைப்பை துண்டித்தான்.
       சிறிது நேரம் கழித்து அங்கு வந்த விஷ்வாவை அழைத்த சுசித்ரா “எங்களுக்கு எத எடுக்கரதுனு ரொம்ப கொழப்பமா இருக்கு நீயே ஒன்னு செலக்ட் பண்ணு” என்றவர் பத்மா விடம் திரும்பி “இவன் செலக்சன் ரொம்ப அருமையா இருக்கும்” என்று முடித்தார்.
       தன் முன்னாள் குவிந்திருந்த புடவைகளை பார்த்தவன் தனது அருகில் அமர்ந்திருந்த இனியாவிடம் திரும்பி “உனக்கு இதுல எதாவது புடிச்சிருக்கா” என்று மெதுவாக வினவ அவள் இல்லை என்று தலை அசைத்தாள். பின் அதை விடுத்து வேறு புடவைகளில் தனது பார்வையை செலுத்தியவன் அடுத்த சில நிமிடங்களில் இளஞ்சிவப்பில் நீல கரையிட்ட அழகான ஒரு புடவையை தேர்ந்தெடுத்தான். 
அதனை பார்த்த இனியா ” ரொம்ப அழகா இருக்கு, இது எப்படி என் கண்ணுல படாம போச்சு” என்று அதை ஆசையுடன் எடுத்து பார்த்தாள். 
    “மாமா எப்படி சரியா அக்காக்கு புடிச்ச கலர்ல எடுத்தீங்க” என்று காவியா அவனிடம் வினவ “அதெல்லாம் கம்பெனி ரகசியம் வெளிய சொல்ல கூடாது” என்றவன் மற்றவர்களிடம் திரும்பி அவர்களது அபிப்ராயம் கேட்க  அனைவருக்கும் அப்புடவை பிடித்து போக ஒருமனதாய் அதையே எடுத்துவிட்டனர்.
      பின், கடையை விட்டு அவர்கள் வெளியே வரும் பொழுது மதிய உணவு நேரம் நெருங்கி இருந்ததால் அங்கு பக்கத்தில் இருந்த ஒரு உணவகத்திற்கு சென்றனர். விஷ்வாவுடன் இனியா மற்றும் காவியாவை அமர வைத்த சுசித்ரா தன் கணவன் மற்றும் தாயாருடன் முருகேசன் மற்றும் பத்மாவின் அருகில் அமர்ந்துகொண்டார். 
      வந்ததில் இருந்து காவியாவிடம் மெல்லிய குரலில் இனியா பேசிக்கொண்டு இருக்க விஷ்வாவோ அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவன் தன்னை அவ்வாறு பார்ப்பதை கவனித்த இனியா ‘ என்ன ‘ என்பது போல் தனது பார்வையால் வினவ “நீ என் மொபைல் வாங்கிக்கல” என்று அவன் கேட்க ” இல்ல, காலேஜ் படிக்கரப்போ அப்பா ஒரு keypad மொபைல் வாங்கி கொடுத்தாரு” என்று அவள் பதில் அளிக்க “அப்போ அந்த மொபைல் என்ன ஆச்சு” என்றவனுக்கு “அவ ஊட்டில இருந்து வர்ற வழில அத தொலசுட்டா” என்று பதில் அளித்தது காவியா “அவ வந்த அப்பறம் நா அத எடுதுக்கலாம்னு இருந்தேன் அதுக்குள்ள இவ தொலசிட்டா” என்பதையும் சேர்த்து சொன்னாள். “ஏன் நீ புதுசா ஒன்னு வாங்கி இருக்கலாமே” என்று கேட்டவனிடம் “நா கேட்டதுக்கு படிக்கற புள்ளைக்கு எதுக்கு மொபைல் அப்டின்னு வாங்கி தர மாட்டேன் சொல்லிட்டாங்க, கம்முனு நானும் இவள மாதிரி வெளி ஊருல படிச்சிருக்கலாம்” என்று சொன்னவள் தனது உணவில் கவனம் செலுத்த ஆரம்பித்தது விட்டாள்.
  பின் இனியாவிடம் திரும்பியவன் “உனக்கு என்ன பிராண்ட் மொபைல் வேனும்” என்று கேட்க “எனக்கு இப்போ மொபைல் வேண்டாம்” என்று கூறினாள். ‘ ஏன் ‘ என்பதை போல அவன் பார்க்க “இல்ல, கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி பேசிக்கறது அப்பாவுக்கு புடிக்காது” என்று அவள் பதில் உரைக்க “சரி என்கிட்ட பேச வேண்டாம் ஆனா உன்னோட தனிப்பட்ட தேவைக்கு உனக்கு ஒன்னு தேவைபடும் தான அத இப்போ நா வாங்கி தரேன்” என்க “இல்ல எனக்கு  எந்த தேவையும் இப்போதைக்கு இல்ல, அதனால எதுவா இருந்தாலும் கல்யாணம் முடிஞ்ச அப்பறம் பாத்துக்கலாம்” என்றவள் அங்கு இருந்து எழுந்து சென்று விட்டாள். 
      அவள் அவ்வாறு பேசிவிட்டு சென்றதும், கவியாவுக்கு  விஷ்வா எதாவது தவறாக நினைத்துக் கொள்வானோ என்ற பயத்தை கொடுக்க “அது….மாமா….அவ எப்போவும் இப்படி பேசரவ இல்ல, ஏற்கனவே இன்னைக்கு கொஞ்சம் தலைவலிக்குதுனு சொல்லிட்டு இருந்த அதான்…..” என்று இழுக்க “அதெல்லாம் நா எதுவும் நினைசுக்கல நீ கவலைய விடு” என்றவன் காவியாவுடன் பேசியபடி தானும் எழுந்து கை கழுவ சென்றான்.
   பிறகு நகை கடைக்கு வந்தவர்கள் முதலில் தாலி கொடி எடுத்துவிட்டு பின்னர் நிச்சய மோதிரம் வாங்க செல்ல,  செல்லும் வழியில் அங்கு இருந்த செயின் ஒன்று இனியாவின் கண்களை கவார்ந்துவிட்டது, சன்னமான அந்த சங்கிலியில் ஆங்காங்கே ரோஜாக்கள் சிதறியது போல இருக்க அதற்கு நடுவில் ஒரு அழகிய பட்டாம்பூச்சி போல வடிவமைக்கப்பட்ட டாலர் இருந்தது. மிகவும் எளிமையாக இருந்தாலும் அதனை விடுத்து தன் பார்வையை திருப்ப முடியவில்லை அவளால். சிறிது நேரம் அதையே ஆசையாக பார்த்துக்கொண்டு இருந்தவள் பின்னர் தன்னுடன் வந்தவர்களை தொடர்ந்து சென்றுவிட்டாள். 
      மோதிரம் எடுக்கும் பொறுப்பை சிரியவர்களிடமே விட்டுவிட்ட பெரியவர்கள் மூவரும் ஒரு ஓரமாக சென்று அமர்ந்து கொண்டனர். 
     அதற்குள் தனக்கு ஒரு கால்(call) வந்துவிட தீபக் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டான். காவியாவும் சுசித்ராவும் இதற்குள் நல்ல நண்பர்கள் ஆகியிருக்க இருவரும் பேசிக்கொண்டே மோதிரங்களை பார்த்துக் கொண்டு இருந்தனர். தனது அருகில் அமைதியாக அமர்ந்து இருந்த இனியாவை திரும்பி பார்த்த விஷ்வா அவளாக பேச்சை தொடங்குவாள் என்ற நம்பிக்கை இல்லாததால் தானே அவளிடம் பேச ஆரம்பித்தான். 
     அங்கு இருந்த மோதிரங்களை ஒவ்வொன்றாய் காட்டி அவள் அபிப்ராயத்தை கேட்க அவளும் சகஜமாக அவனுக்கு பதில் சொல்ல ஆரம்பித்துவிட்டாள். சிறிது நேரம் கழித்து ஒரு மோதிரத்தை தேர்வு செய்தவர்கள் அதை மற்றவர்களுக்கு காட்ட அவர்களுக்கும் அது பிடித்து போக அதையே எடுத்துக்கொண்டனர். 
    கடையை விட்டு வந்த பின்னர் இவர்களிடம் சொல்லிவிட்டு இனியா வீட்டினர்  கிளம்ப, கார் ஜன்னல் அருகில் அமர்ந்து தன்னை நோக்கி சிறு சிரிப்பை உதிர்த்த இனியாவின் அருகில் வந்து தன் மென்மையான குரலில் ” உனக்கு எப்படினு தெரியல ஆனா எனக்கு என்னவோ உன்கூட இருக்க போற வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும்னு தோணுது” என்றவன், அதோடு விடாமல் “அப்பறம் இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன், உன்னோட நேம் போலவே உன்னோட குரலும் ரொம்ப இனிமையா இருக்கு , நீ பேசரப்போ எல்லாம் ஒரு காந்தம் மாதிரி என் மனச உன் பக்கம் அது இழுக்குது” என்று கூறிவிட்டு அவள் அதிர்ந்த பார்வையை கண்டுகொள்ளாமல் ஒரு சிறு சிரிப்புடன் அங்கிருந்து நகரந்துவிட்டான்.
     அவன் கூறியதை கேட்டவளுக்கோ மனது ஒரு நிலையில் இல்லை….. இத்தனை நாள் கஷ்டப்பட்டு தன் மனதில் இருந்து ஒதுக்கி வைத்திருந்த நியாபகங்கள் அனைத்தும் மீண்டும் அவளை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டது போல ஓர் உணர்வு. 
    “ஸ்வீட்டி, உன்னோட வாய்ஸ் ரொம்ப ஸ்வீட் , அத கேட்கும் பொழுது  எல்லாம் காந்தம் மாதிரி என் மனச அப்படியே உன் பக்கம் அது இழுக்குது”  என்றவன் குரல் இப்பொழுதும் தன் காதுகளில் ஒலிக்க, கண்களை மூடி சீட்டில் சாய்ந்து கொண்டவள் கண்களில் இருந்து கண்ணீர் துளி ஒன்று அவள் கன்னங்களில் உருள, அவள் மனமோ “ஏன் அஜி இப்படி பண்ணுன…நீ ஏன் பொய்யாகி போன” என்ற கேள்வியோடு பழைய நியாபகங்களை அசை போட ஆரம்பித்தது.

Advertisement