Advertisement

பாடல் – 10
      அடுத்த ஐந்து நாட்கள் காற்றாய் பறந்த விட இனியா தன் புகுந்த வீட்டுக்கு செல்லும் நாளும் வந்தது.
     அன்று காலை முதலே இனியா வழக்கத்தை விட மிகவும் அமைதியாக இருந்தாள். அவள் அமைதியாய் இருப்பதன் காரணம் அறிந்த விஷ்வா அவளிடம் எதுவும் கேட்காமல் முருகேசனுடன் சேர்ந்து வழக்கம் போல  நடை பயிற்சிக்கு சென்றான்.
    அங்கு இருந்த நாட்களில் தினமும் இனியாவின் தந்தையோடு சேர்ந்து காலை மற்றும் மாலை அருகில் இருந்த பூங்காவிற்கு நடைபயிற்சி செல்வதை வழக்கமாக வைத்திருந்தான் விஷ்வா. 
    இந்த ஐந்து நாட்களில் கணவன் மனைவி இருவருக்குள்ளும் ஒரு சிறு நட்புறவு ஏற்பட்டிருந்தது. அன்று கோவிலுக்கு சென்று வந்ததில் இருந்து அவனிடம் நன்றாக பேச ஆரம்பித்திருந்தாள் இனியா. 
   அன்று காவியா தன் தோழியின் வீட்டிற்க்கு சென்றிருக்க ஆண்கள் இருவரும் இன்னும் தங்கள் மாலை நடை பயிற்சி முடிந்து இன்னும் வீடு திரும்பி இருக்கக்வில்லை. 
  
     பத்மா சமையல் அறையில் எதோ கை வேலையாக இருக்க, சிறு பிள்ளை போல தன் தாயின் முந்தானையை பிடித்துக்கொண்டு அவரை எந்த வேலையையும் செய்ய விடாமல் செல்லம் கொஞ்சிக்கொண்டு அவர் பின்னாலேயே சுற்றிக்கொண்டு இருந்தாள் இனியா. 
      ஒரு கட்டத்திற்கு மேல் அதை பொறுக்க முடியாத பத்மா “என்ன பாப்பா இது சின்ன கொழந்த மாதிரி பண்ணிட்டு இருக்க நீ, கொஞ்சமாவது வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்க, மொதல்ல போய் அப்படி உக்காரு” என்று சொல்லிவிட்டார். அவர் அவ்வாறு சொன்னவுடன் இனியா கண்களில் கண்ணீர் எட்டி பார்க்க அதை துடைத்துக்கொண்டே “ஆமா இன்னைக்கு ஒரு நாள் தான் உங்க கூட நா இருப்பேன் இப்போவும் என்ன நீங்க திட்டறீங்க, போங்க மா உங்களுக்கு என் மேல கொஞ்சம் கூட பாசமே இல்ல” என்று அவரிடம் சொல்லியவள் ஹாலில் வந்து அங்கு இருந்த சோஃபாவில் அமர்ந்தாள். 
    பத்மாவுக்குமே நாளை முதல் மகள் தன்னோடு இருக்க மாட்டாள் என்பது வருத்தமாக இருந்தாலும் எங்கே அதை வெளி காட்டினாள் அவள் இன்னும் வருந்துவாளோ என்ற எண்ணத்தில் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இருந்தார்.
    என்னதான் வருத்தம் இருந்தாலும் இந்த ஐந்து நாட்களாக தன் மகளை அவள் கணவன் கவனித்து கொள்வதை பார்த்தவர் மனமோ இனி அவள் வாழ்வு அவனோடு நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் சற்று நிம்மதி அடைந்தது.
    சிறிது நேரத்தில் ஆண்கள் இருவரும் வந்துவிட, உள்ளே வந்ததும் அவர்கள் கண்களில் முதலில் பட்டது ஹால் சோஃபாவில் தன் கண்களை துடைத்தபடி அமர்ந்திருந்த இனியாவே. 
     வேகமாக அவளிடம் சென்று அமர்ந்த முருகேசன் “என்னாச்சு பாப்பா ஏன் அழுதுட்டு இருக்க” என்று அவள் தலையை தடவியபடி கேட்டார். 
    அவரை நிமிர்ந்து பார்த்த இனியா “இல்லப்பா நாளைக்கு நா அங்க வீட்டுக்கு போய்டுவேன்ல, இனி இப்படி உங்க கூட எல்லாம் ஒன்னா இருக்க முடியாது தான” என்று கேட்ட படி அவள் மீண்டும் அழ ஆரம்பிக்க, தன் மகள் கண்களில் கண்ணீரை பார்த்த அவர் கண்களும் சிறிது கலங்க ஆரம்பித்தது. 
     அவள் கண் கலங்குவதை பார்த்த விஷ்வாவின் கைகளும் மனமும் அவளை அணைத்து ஆறுதல் சொல்ல துடிக்க அதை கட்டுப்படுத்தியவன், அவர்களுக்கு சிறிது தனிமை கொடுக்க எண்ணி வெளியே சென்றுவிட்டான். 
   இவர்கள் வந்த அரவம் கேட்டு அங்கு வந்த பத்மா தந்தை மகள் இருவரும் இருந்த கோலத்தை பார்த்து “இது என்ன ரெண்டு பேரும் சின்ன புள்ள மாதிரி அழுதிட்டு இருக்கீங்க, ஏய் இனியா கண்ண தொட மொதல்ல, பாரு உன்ன பாத்து உன்னோட அப்பாவும் அழுகராறு” என்று விஷ்வா எதேனும் நினைத்து விடுவானோ என்று அவனை தேடிக்கொண்டு சொல்ல “பாருங்க அப்பா இப்போவும் அம்மா என்ன திட்டறாங்க, நான் எப்போட போவேன்னு இருப்பாங்க போல இருக்கு ” என்று அவரிடம் புகார் வாசித்தாள் மகள்.
     அவள் அவ்வாறு கூறியதும் அவளை அணைத்து பிடித்தவாறு அவளுக்கு  மறுபக்கம் அமர்ந்த பத்மா “இங்க பாரு இனியா, நா உன்ன திட்டறது உன்மேல இருக்க அக்கறைல தான். நீ அழுகரதால இங்க எதுவும் மாற போறது இல்ல.  அப்பறம் நீ இங்க பக்கத்துலதான இருக்க போற, உனக்கு எங்கள பாக்கனும்னு தொனுநா ஒரு கால் பண்ணு போதும் அடுத்த கொஞ்ச நேரத்துல நாங்க அங்க வர போறோம், இதுக்கு போய் அழுவியா நீ” என்றபடி அவள் கண்களை தன் முந்தானையால் துடைத்தார். 
    அந்நேரம் சரியாக காவியாவும் உள்ளே வர, இவர்கள் மூவரையும் பார்த்தவள் “என்ன பலத்த ஆலோசனை போகுது போல, அதுவும் என்ன விட்டுட்டு ரொம்ப தப்பாச்சே இது” என்று கேட்டபடி அவர்களுக்கு எதிரில் வந்து அமர்ந்தாள். அமர்ந்தவள் விழிகளில் இனியாவின் கலங்கிய கண்கள் பட “ஏய் இனி கா அழுதியா நீ ” என இவ்வளவு நேரம் இருந்த விளையாட்டு தனம் மறைந்து  அக்கறையோடு அவள் கைகளை பிடித்தபடி கேட்டாள். 
    அவளிடம் அங்கு நடந்ததை பத்மா கூற 
“அச்சோ, லூசு அக்கா இதுக்கு போய் அழுவையா நீ, உன்ன என்ன லண்டன்க்கா கட்டி கொடுத்திருக்கோம்? இங்க பக்கத்துல தான நினச்சா வந்து பாக்க போறோம் ஆமா, இதுக்குப் போய் நீ சின்ன புள்ளையாட்ட அழுதட்டு இருக்க கண்ண தொட மொதல்ல” என்று சொன்னவாறே சுற்றியும் தன் பார்வையை சுழல விட்டவள் “ஆமா மாமா எங்க, அவரு நீ இப்படி அவங்க வீட்டுக்கு போகறத நினச்சு இப்படி அழுகரத பாத்தா என்ன நினைப்பார்” என்று கேட்க அப்பொழுதுதான் அவன் நியாபகம் வந்த இனியா அவன் எங்கே என்று சுற்றியும் பார்க்க “இவங்க பன்ற அழும்பு தாங்காம அவர் அப்போவே வெளிய போய்ட்டாறு”  என்று பதிலளித்தார் பத்மா. 
    பின் சிறிது நேரம் அங்கு அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தவர்கள் தங்கள் வேலையை கவனிக்க சென்றுவிட, இன்னும் விஷ்வா வந்திருக்காததால் அவனுக்கு அழைக்க தன் மொபைலை கைகளில் எடுத்தாள் இனியா.  அவள் அழைப்பு விடுக்க போகும் நேரம் கைகளில் ஒரு சிறிய பையுடன் உள்ளே நுழைந்தான் அவள் கணவன். 
    அவனை பார்த்ததும் “எங்க போய்ட்டிங்க நீங்க இவ்வளோ நேரம், இப்போதான் உங்களுக்கு கால் பண்ணலாம்னு நினைச்சேன்” என்று கேட்ட இனியாவிடம் தன் கைகளில் இருந்த பையை நீட்டியவன் “இதோ இது வாங்கத்தான் போனேன்” என்றான். 
    அதை தன் கைகளில் வாங்கியவுடன் இனியா பிரித்து பார்க்க அந்த பையில் அவளுக்கு பிடித்த காபி பிளேவர் ஐஸ் கிரீமோடு மேலும் நாலு பிலேவரும் இருந்தது. 
    தனக்கானதை தன்னுடையது கைகளில் எடுத்த இனியா “ஆமா என்னோட பழைய டைரி ஏதாச்சும் உங்ககிட்ட கிடச்சிதா விஷ்வா” என்று தன் ஐஸ் கிரீமை சுவைத்தபடி கேட்க “என்ன டைரியா,இல்லயே ஏன் அப்படி கேட்க்கற” என்றான் விஷ்வா. 
    “இல்ல என் அப்பா எப்பவும் நா அழுதா இப்டிதான் ஐஸ் வாங்கி கொடுத்து என்ன சமாதான படுத்துவாரு, அதே மாதிரி இப்போ நீங்களும் கரெக்டா எனக்கு புடிச்ச பிளேவர் வாங்கிட்டு வந்திருக்கீங்க, அப்பறம் அன்னைக்கு எனக்கு பிடிக்கும்னு படத்துக்கு கூட்டிட்டு போனீங்க அதான் கேட்டேன்” என்று சொல்லியவறே அவனோடதை எடுத்து அவன் கைகளில் தந்தவள் மற்றவர்களையும் சாப்பிட அழைத்தாள்.
    ‘ எனக்கு கிடச்சது உன்னோட டைரி இல்ல அதைய விட  பெருசா ஒன்னு ‘ என்று மனதில் நினைத்தவன் அவளோடு பேசியபடி சாப்பிட ஆரம்பித்தான். 
     இரவு உணவுக்கு முழுக்க இனியாவுக்கு பிடித்த உணவு வகைகளை செய்திருந்தார் பத்மா. அதை பார்த்தவள் கண்களில் மீண்டும் கண்ணீர் வரவா என்று கேட்க அருகில் இருந்த தன் கணவன் எதேனும் நினைத்து விடுவானோ என்று எண்ணி அதை கட்டுப்படுத்தி கொண்டாள். 
     அன்று இரவு தங்கள் அறைக்கு வந்த பிறகு “ஏன் இனியா நீ ஊட்டில படிக்க போறபோவும் இப்படித்தான் ஆழுதியா” என்று விஷ்வா கேட்க “அது வெறும் ஆறு மாசம் தான அங்க அம்மா அப்பாவா விட்டுட்டு இருந்தேன், அதுவும் அத்த வீட்டுல சம்யுவும் இருக்க அம்மாவா விட்டுட்டு இருக்கோம்னு எண்ணமே வரல, ஆனா இப்போ அப்படி இல்லைல இனிமேல் நா நினச்ச்சாலும் ரொம்ப நாள் இங்க வீட்டுல தங்க முடியாதுள்ளது அதா நினச்சுதான் இன்னைக்கு அழுதுட்டேன் ” என்றவள் தொடர்ந்து “அதுக்குன்னு உங்க வீட்டுக்கு வர்ற பிடிக்காம அழுதேண்ணு நினைச்சுக்காதிங்க” என்றாள்.   
  “உங்க வீடு இல்ல, நம்ம வீடு” என்று அவளை திருத்தியவன் “இதுக்கு போய் யாராச்சும் ஃபீல் பண்ணுவாங்களா, உனக்கு எப்போல்லாம் இங்க வரணும் தோணுதோ அபொல்லாம் இங்க வா, அங்க வீட்டுல உன்ன யாரும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க” என்றான்.
   “அதான் எனக்கு தெரியுமே, அத்த சோ ஸ்வீட், நா கூட சமயுவோட மாமியார் மாதிரி ரோம்ப ஸ்டிரிக்டா இருப்பங்களோனு நினச்சு பயந்தேன் ஆனா அன்னைக்கு கோவில் போனப்போ என்ன இவ்வளோ நல்லா பாதுட்டாங்க அப்போதான் அவங்க நா பயந்த மாதிரி இல்லைனு புரிஞ்சுது” என்று சொன்னபடி திரும்பி படுத்துவிட்டாள். 
   அவள் அவ்வாறு சொன்னதும் “ஆமா ஊருல இருக்க எல்லாரையும் புரியும் என் மனசு மட்டும் புரியாது” என்று அவளை பார்த்தபடி விஷ்வா மெல்ல சொல்ல “என்ன சொன்னீங்க” என்று இனியா கேட்டாள் “ஒன்னு இல்ல குட் நைட் சொன்னேன் அவ்வளோ தான்” என்றபடி தானும் படுத்து விட்டான் விஷ்வா.

Advertisement