Advertisement

பாடல் – 1
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு 
மலரும் மலரும் புது தாளம் போட்டு 
புதுசா புதுசா அதை காதில் கேட்டு 
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று… ஆ… 
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு 
மலரும் மலரும் புது தாளம் போட்டு 
உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே 
நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே 
ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான் 
அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்……….. 
            தொலைகாட்சியில் ஒடிய பாடலுடன் தானும் சேர்ந்து பாடிக்கொண்டிருந்த காவியா தனது அக்கா இனியா தன்னை முறைப்பதை கண்டு அவசரமாக பாடலை மாற்றினாள்.
         இனியா – பெயரைப்போலவே  இனிய சுபாவம் கொண்டவள். ஊட்டியில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் தனது முதுகலை படிப்பை முடித்தாள். வெளியே வேலைக்கு செல்லும் விருப்பம் அலாதி இருந்தாலும், அவள் தந்தை அதற்கு சம்மதிக்காததால் ஆறு மாதமாக வீட்டிலேயே இருக்கிறாள்.
      அவள் தந்தை முருகேசன், ஈரோட்டில் தாசில்தார் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர். அவள் தாய் பத்மாவதி ஒரு இல்லத்தரசி, மேலும் அவள் தங்கை காவியா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி.
      “ஏன்டி உன்கிட்ட எவ்வளவு தடவ சொல்றது இந்த பாட்ட போட வேண்டாம்னு “ என தன் தங்கை காவியாவை கடிந்து கொண்டாள் இனியா.
       “உனக்கு பிடிக்காட்டி வெளிய போயிக்கோ, எதுக்கு என்னய திட்டிட்டு இருக்க” என்று தன் தமக்கையிடம் சண்டைக்கு வந்த காவியா ” அம்மா இங்க பாருங்க ஒரு பாட்டு கூட என்ன கேட்க விட மாட்டேங்குறா” என்று தன் தாயிடமும் புகார் வாசித்தாள்.
       இவர்கள் சத்தம் கேட்டு சமயல் அறையில் இருந்து வெளியே எட்டி பார்த்த பத்மா “அவளுக்கு அத பிடிக்கல சொன்ன அப்புறமும் அத ஏன் நீ போடற, இவ்வளோ நாள் அவ ஊருல இருந்தப்போ உன் இஷ்டத்துக்கு தான பாத்த, இப்போ கொஞ்ச நாள் அவளுக்கு புடிச்ச மாதிரி விடேன்” என்று தன் இளைய மகளை கடிந்து கொண்டவர்.
       “மொதல்ல எல்லாம் அந்த பாட்டு போட்டா முடியர வரைக்கும் நகர கூட மாட்ட, இப்போ என்ன ஆச்சு?  ஊட்டில இருந்து வந்ததுல இருந்து நீயும் ரொம்ப மாறிட்ட” என்று இனியாவிடம் கூற.
          “அப்படி எல்லாம் ஒன்னும் மாறல மா, நீங்களா ஒன்னு கற்பனை பண்ணிக்கதிங்க” என்று சொல்லி தனது அறைக்குள் சென்றுவிட்டாள். அறைக்குள் சென்றவளை பார்த்தவர் மனதில் எதோ சரி இல்லை என்று தோன்ற ‘ சரி கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்தது தானே ஆகணும் ‘ என்று எண்ணி தனது வேலையை கவனிக்க சென்றுவிட்டார்.
          முருகேசனும் வந்த பிறகு, இரவு உணவை அனைவரும் ஒன்றாக உண்டு முடித்து, வீட்டின் கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த பொழுது “இன்னைக்கு நம்ம நாராயணன் மாமாவ ஆபீஸ்ல பார்த்தேன்” என்றார் முருகேசன் “நம்ம திருப்பூர் நாராயணன் அண்ணவா, எப்படி இருக்காரு, என்னங்க சொன்னாரு” என்ற பத்மாவிடம்  “நல்லா இருக்கரு, பேசிட்டு இருகப்போ,  இனியாவுக்கு தகுந்த மாதிரி ஒரு நல்ல வரன் இருக்குதுனும், ஒருவேளை நம்ம இப்போ அவளுக்கு கல்யாணம் பேசற மாதிரி இருந்தா அந்த ஜாதகத்த அனுப்பறதாவும் சொன்னாரு ” என்று தன் மனைவியிடம் கூற “எப்படியோ கொஞ்ச நாள்ள அவளுக்கும் நம்ம மாப்பிள்ளை பாத்து தான ஆகணும்…இது நல்ல இடமா இருந்த இப்போவே முடிச்சர்லாம், நாளைக்கே அவர பாத்து ஜாதகம் வாங்கிட்டு வந்திருங்க” என்று  பத்மா கூற “நம்ம பேசி என்ன பண்ணறது கல்யாணம் பண்ணிக்க போறது நம்ம பொண்ணு அவள கேட்போம் இரு” என்று தனது மனைவியிடம் கூறியவர், இனியாவிடம் திரும்பி ” நீ சொல்லும்மா உனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்க விருப்பமா, இந்த இடத்த பாக்கலாமா” என்று கேட்க “உங்க இஷ்டம் அப்பா” என்று பதில் கூறிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டாள்.
********
         மறுநாள் விடுமுறை தினம் ஆதலால் முருகேசன் மற்றும் பத்மா இருவரும் சென்று வெங்கடாச்சலத்திடம் ஜாதகத்தை வாங்கி நேராக ஜோசியரிடம் சென்று அதை பார்த்துவிட்டும் வந்துவிட்டனர்.
         மாலை வீட்டிற்கு வந்தவர்கள் வழக்கம் போல காவியாவிடம் வழக்கடித்துக் கொண்டிருந்த  இனியாவை அழைத்து பார்த்த ஜாதகம் நன்றாக பொருந்தி வந்ததாகவும், குடும்பமும் விசாரித்த வரை நல்லதாகவே தெரிவதாகவும் கூறினர். அவளிடம் ஒரு கவரை கொடுத்த பத்மா “இதுல மாபிள்ளை ஓட ஃபோட்டோ இருக்கு பாத்துட்டு உனக்கு பிடிச்சிருக்கானு சொல்லு” என்று கூற “உங்களுக்கு புடிச்சா போதும் ” என்று சொல்லி அதை மறுபடியும் அவரிடம் கொடுத்துவிட்டாள்.
         “இருந்தாலும் வாழ போறவ நீ” என்று எதோ கூற வந்த பத்மாவை    “என்ன விட என்னோட வாழ்க்கைக்கு எது சரியா வரும்னு உங்களுக்குதான் தெரியும், அதனால உங்களுக்கு சரினா எனக்கும் சரி” என்று கூறி வாயடைத்து விட்டாள்.
        எப்பொழுதும் தனக்கு வேண்டியதை வேறு யார் கருத்துக்களும் கேட்காமல் தானே தேர்வு செய்யும் தன் பெரிய மகளின் வாயில் இருந்து இப்பொழுது உதிர்ந்த சொற்களை நம்ப முடியாமல் இரவு தனது கனவரிடம் இதை பற்றி கூறி பத்மா கவலைப்பட “அவ இன்னும் சின்ன பொண்ணு இல்ல பத்மா, அவ இப்படி சொல்ல எதாச்சும் காரணம் இருக்கும்,நீ எதுவும் மனசுல போட்டு ஓலப்பிக்காம படு” என்று கூறிவிட்டு அவர் படுத்துவிட்டார். என்னதான் தனது மனைவியை சமாதானப் படுத்தினாலும் அவர் மனதிலும் தனது மகளை பற்றிய கவலை இருக்கவே செய்தது.
          மறுநாள் காலை எழுந்து வந்த இனியாவை அழைத்த முருகேசன் “நேத்து பையன் ஃபோட்டோ பாத்தியா மா, உனக்கு புடிச்சா அவங்க வீட்டுல சொல்லிடலாம்” என்று கூற. “இல்ல பா பாக்கல உங்களுக்கு புடிச்சா…” என்று பேச வந்தவளை தனது கை நீட்டி தடுத்தவர் “இங்க பாரு எங்க விருப்பம் இங்க முக்கியம்தான், ஆனா வாழ போறது நீ, உனக்கு புடிச்சா மட்டும்தான் அந்த வாழ்க்கைய உன்னால நல்லபடியா வாழ முடியும் அதனால இப்போ இந்த படத்த பாத்து நல்லா யோசிச்சு சாயங்காலம் எனக்கு உன்னோட முடிவ சொல்லு ” என்றவர் அவள் முன் அப்படத்தை வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
          பின் தன் தந்தை சொல்லியதும் சரி என்று நினைத்தவள் அவர் வைத்து விட்டு சென்ற படத்தை எடுத்து பார்க்க அதில் அழகாக சிரித்துக்கொண்டு  இருந்தான் அவன். அப்புகைபடத்தை திருப்பி பார்க்க அவன் பெயர் விஷ்வஜித் என்றும், கோவையில் உள்ள ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.
         மீண்டும் படத்தில் இருந்த அவனின் முகத்தை பார்த்தவளுக்கு அவனை இதற்கு முன் எங்கேயோ பார்த்தது போல தோன்ற, எங்கே பார்த்தோம் என்று யோசித்துக்கொண்டு இருந்தவளின் கைகளில் இருந்த படத்தை பிடுங்கிய காவியா “அக்கா மாமா செமயா இருக்காரு” என்று கூறி கண்ணடித்தாள்.
        “என்ன மாமாவா? அதுக்குள்ள முடிவு பண்ணிட்டையா நீ” என்று கேட்க, “நா ஃபிக்ஸ் ஆகிட்டேன், ஒருவேள நீ இவர வேண்டாம்னு சொன்னா கூட நா இவர கட்டிக்கரேன்” என்று கூறியவளின் தலையில் யாரோ அடித்தது போல இருக்க திரும்பி பார்த்தால் அங்கு பத்மா நின்று கொண்டு இருந்தார்.
       “என்னைய ஏன் மா அடிக்கறிங்க” என்று தனது தலையை தடவியபடி அவள் கேட்க “மொதல்ல போய்  படிச்சு அரியர் இல்லாம பாஸ் பண்ணற வேலைய பாரு, அதுக்கு அப்பறம் பாக்கலாம் உன் கல்யாணத்த பத்தி” என்று கூறியவர், தனது பெரிய மகளிடம் திரும்பி “யோசிச்சு சீக்கரம் ஒரு நல்ல முடிவா சொல்லு மா ” என்று தனது வேலையை பார்க்க சென்றுவிட்டார். ” ஆமா ஆமா சீக்கரம் நல்ல முடிவா சொல்லு அப்போதான் என்ற ரூட் கிளியர் ஆகும் ” என்ற காவியா “அடி கழுத” என்ற பத்மாவின் குரலில் உள்ளே ஓடி விட்டாள்.
         பின்னர் சிறிது நேரம் எதையோ யோசித்தவள், மனதில் ஒரு முடிவுடன் வெளி முற்றத்தில் இருந்த தனது தந்தையை காண  சென்றாள் காவியா.
          “அப்பா” என்ற குரலில் பேசிக்கொண்டு இருந்த அவரும் பத்மாவும் திரும்பி பார்க்க “எனக்கு இதுல சம்மதம் நீங்க அவங்க வீட்டுல பேசிருங்க” என்று சொன்னவள் அவர்கள் முகத்தில் தோன்றிய சந்தோசத்தை பார்த்து தன் முகத்திலும் புன்னகை தோன்ற உள்ளே சென்றுவிட்டாள்.
          அவள் தனது சம்மதத்தை தெரிவித்ததும் அதற்கெனவே காத்திருந்தது போல விரைவாக அதற்குறிய வேலையை பார்க்க ஆரம்பித்தவர்கள் அடுத்த ஒரு வாரத்தில் அவளை பெண் பார்க்கும் நிகழ்வில் நிறுத்தி, மேலும் ஒரு மாதத்தில் திருமண தேதியும் குறித்துவிட்டனர் .

Advertisement