Advertisement

அத்தியாயம் – 9

 

“மதுமிதா… என்று அவன் சொன்ன பெயரை அவளும் வாய்விட்டு சொல்லிக்கொண்டு அவள் மொபைலில் இருந்த அவள் எண்ணை அந்த பெயர் கொண்டு பதிவு செய்து வைத்தாள்.

 

 

“அந்த பொண்ணு யாரு?? என்று அடுத்த கேள்வி கேட்டாள் ஆராதனா.

 

 

“அவங்க அம்மா தான் எனக்கு இப்போ சமைச்சு கொடுத்திட்டு இருக்காங்க. நான் தங்கியிருக்க வீட்டு பக்கத்துல தான் இருக்காங்க. அவங்க அம்மாக்கூட எப்பவாச்சும் இவங்க வருவாங்க. தெரிஞ்சவங்க தான், ஆனா அண்ணி நீங்க இவ்வளவு விசாரிக்கற அளவுக்கு இதுல எதுவுமே இல்லையே என்றான்.

 

 

“நிஜமாவே ஒண்ணுமில்லை தான்… என்று கிண்டலாக சிரித்துவிட்டு“அவங்கம்மா வீட்டு வேலை செய்யறவங்களா?? என்றாள்.

 

 

“வீட்டு வேலை எல்லாம் இல்லை அண்ணி, உதவியா தான் இதை செய்யறாங்க. எனக்கு இப்பவும் புரியலை நீங்க ஏன் இவ்வளவு விசாரிக்கறீங்கன்னு?? ஆனா அண்ணி அந்த பொண்ணையும் என்னையும் நீங்க இணைச்சு யோசிக்கறீங்கன்னு தோணுது

“அப்படி எந்த எண்ணமும் எங்களுக்குள்ள இல்லை என்றான் அவசரமாக.

 

 

“உங்களுக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லைன்னு எனக்கு தெரியுது என்று பொடி வைத்து பேசிவிட்டு அவனிடம் விடைபெற்று கிளம்பினாள்.

 

 

ஹனிமூன் ஜோடிகள் அன்று முழுவதும் ஊட்டியையும் குன்னூரையும் சுற்றிப் பார்த்தனர். டால்பின் நோசின் விளிம்பில் நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த யாழினிக்கு அதன் ஆழம் பார்த்து தலை லேசாய் சுற்றவும் அருகில் நின்றிருந்தவரின் கையை இருக்க பற்றினாள்.

 

 

அவள் பற்றியது சபரீஷின் கைகளையே என்பது அவளை அவன் மார்பின் மீது சாய்த்த போது தான் உணர்ந்தாள். “உனக்கு பயம்ன்னா எதுக்கு எட்டிப் பார்க்கற?? என்றவன் அவள் தலையில் மென்மையாய் முத்தமிட்டான். யாழினிக்கு அவனின் இந்த மாற்றமே போதுமானதாய் இருந்தது.

 

 

கூச்சமாய் இருந்தாலும் அவனைவிட்டு விலக முற்படவில்லை அவள். அவர்கள் இருவரையும் பார்த்த ஆராதனா “அங்க பாருங்க உங்க தம்பியை இங்கவே ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கார் என்று அனீஷை கூப்பிட்டு காண்பித்தாள் அவள்.

 

 

“சரி வா ஆரா நாமளும் அவங்களுக்கு ஷோ காட்டுவோம் என்றவன் அவள் இடையில் கை போட்டு தன் பக்கம் இழுத்துக் கொண்டான். “அப்பா சாமி நான் ஏதோ தெரியாம சொல்லிட்டேன். ஆளை விடுங்க சாமி என்று நகர முயல அவளால் முடிந்தால் தானே.

 

 

அனீஷ் அவளை விடுவதாக இல்லை. “இங்க பாரு ஆரா இங்க எல்லாருமே அப்படி தான் இருப்பாங்க. அதுனால யாரும் நம்மை கண்டுக்கவே மாட்டாங்க. நீ ஒண்ணும் வொர்ரிபண்ணாதே என்று இடையில் இருந்த கையை எடுத்து அவள் தோளில் போட்டுக் கொண்டான்.

 

 

தம்பதிகள் நால்வரும் விதவிதமாய் போட்டோக்கள் எடுத்துக் கொண்டனர். இன்ஸ்டன்ட் போட்டோவும் அங்கு கிடைப்பதால் நால்வருமாக சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை எடுத்து தள்ளினர்.

 

 

நீலகிரியின் மிக உயரமான இடமான தொட்டபெட்டாவில் இருந்தனர் அவர்கள். அங்கிருந்த டெலஸ்கோப்பின் வழியாக பார்த்துக் கொண்டிருந்த ஆராதனாவை அருகில் நின்று சீண்டிக்கொண்டிருந்தான் அனீஷ்.

மறுநாள் அவர்கள் மசினக்குடிக்கு செல்வதால் அன்றே ஊட்டி, குன்னூரை சுற்றிப் பார்த்து முடித்தனர். அனீஷ் தம்பிக்கு போன் செய்து அன்று இரவும் அவர்களுடன் உணவருந்த வருமாறு அழைக்க சுனீஷும் வருவதாக கூறி வைத்தான்.

 

____________________

 

 

அண்ணனிடம் பேசிவிட்டு போனை வைத்த சுனீஷுக்குள் பழைய நினைவுகளின் தாக்கம் வந்து போக அவன் நடந்து முடிந்தவைகளை அசை போட ஆரம்பித்தான்.

 

 

சுனீஷ் சிறுவயதில் இருந்து அன்னையுடனே வளர்ந்ததினாலோ என்னவோ அவர் குணத்தை அவன் ஒத்திருந்தான். அன்னை அண்ணன்களை பற்றி அவ்வப்போது சொல்வதில் அவனுக்கும் அண்ணன்களின் மேல் தீராத அன்பு உருவாகியிருந்தது.

 

 

அண்ணன்கள் இருவரும் விடுமுறைக்கு வரும் போதெல்லாம் அவனுக்கு வித்தியாசமாய் இராமல் அவர்களுடன் சேர்ந்து விளையாட துவங்கினான்.

 

 

ஓரளவு விவரம் புரிந்த வயதில் தன் தாயிடம் ஏன் அவர்கள் வேறு இடத்தில் படிக்கிறார்கள் என்று விளக்கம் கேட்க அவரும் நடந்ததை சொல்ல தன்னை போல் ஏன் அவர்கள் அடம்பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டான்.

 

 

அனீஷும் சபரீஷும் படிப்பை முடித்திருந்த நேரம் சுனீஷ் தன் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி செல்ல தயார் ஆகியிருந்தான். சபரீஷ் தான் அவனை சென்னை சென்று படிக்குமாறு வற்புறுத்த அடம்பிடித்தவனோ விடாப்பிடியாய் கோவை என்ஜினியரிங் கல்லூரியிலேயே சேர்ந்து படிக்க ஆரம்பித்தான்.

 

 

சபரீஷ் அவனிடம் ஒரே ஒரு கண்டிஷன் வைத்திருந்தான், இப்போது கல்லூரியில் படிக்கும் இவன் மேல்படிப்பிற்காய் வெளியூர் சென்று படித்தால் மட்டுமே கோவை கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூற அதற்கு சம்மதித்தே சுனீஷ் தன் படிப்பை தொடர்ந்தான்.

 

 

சபரீஷ் எதிர்பாராத விதமாய் சுனீஷ், தான் வெளிநாடு சென்று படிப்பதாக கூறிவிட அதற்குள் இந்தியா வந்திருந்த அனீஷும் சுனீஷுமாக தம்பியை ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

 

 

திலகவதிக்கு உள்ளுர கவலை இருந்த போதும் படிப்பிற்காக தானே சீக்கிரம் வந்துவிடுவான் என்று மனதை தேற்றிக் கொண்டார். அதற்கு பதில் இரண்டு மகன்கள் அருகிருக்க இனி அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மூத்தவர்கள் இருவர் மீதும் அதிக நெருக்கம் காட்ட ஆரம்பித்தார்.

 

 

அனீஷ் இயல்பாய் அவரை எடுத்துக் கொண்ட போதும் சபரீஷ் அவ்வப்போது அவரை வார்த்தையால் காயப்படுத்திவிடுவான். வெளிநாட்டிற்கு சென்ற சுனீஷ் ஒரு வருடத்தை விளையாட்டாய் கழிக்க அவனுக்கு வாழ்க்கை பாடம் உணர்த்தவென்று வந்து சேர்ந்தவன் போல் இருந்தான் அந்த புதிய மாணவன் ஜனா.

 

 

ஜனா இவனை விட ஜூனியர் மாணவன் தான் ஆனால் எப்போதும் சுறுசுறுப்பாய் அங்குமிங்கும் ஓடியாடி இருப்பவனை ஏனோ அவ்வப்போது நோட்டமிடுவான் சுனீஷ்.

 

 

அவனை பார்த்தால் தமிழ் போல் தெரிந்ததால் கூட அவன் அப்படி கவனித்திருக்கலாம். ஒரு நாள் அவனை அருகே அழைத்தான். “நீங்க தமிழா?? என்றதும் ஜனாவுக்குள் சந்தோஷ ஊற்று பீறிட்டது.

 

 

“சார் நீங்க தமிழ் பேசினீங்களா?? எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா சார்?? தமிழை கேட்காம எனக்கு காது ஏன் இருக்குன்னு நினைக்குற அளவுக்கு பீல் பண்ணிட்டேன் சார் என்றான் ஜனா மகிழ்ச்சியாக.

 

 

“ஏன் இவ்வளவு எக்சைட் ஆகுறா?? ஐ யம் சுனீஷ், நீங்க?? என்றான்.

 

 

“ஜனார்த்தனன் சார்

 

 

“சார் எல்லாம் வேணாம் ஜனா. நமக்கு ரொம்ப வயசு வித்தியாசம் எல்லாம் இருக்காதுன்னு நினைக்கிறேன், சோ நீங்க என்னை சுனீஷ்ன்னே கூப்பிடலாம் என்றான்.

 

 

இருவரும் தத்தம் அறிமுகங்களை முடித்துக் கொண்டு அவர்கள் எப்படி அங்கு வந்தார்கள் என்பது பற்றி பேச ஆரம்பித்தனர். சுனீஷுக்கு பெரிதாய் எந்தவொரு கஷ்டமும் இல்லாததால் அவன் அங்கு சேர்ந்த விதம் கூறினான்.

 

 

ஆனால் ஜனாவுக்கோ அங்கு வந்து படிப்பது ஒரு சவாலாகவே இருந்தது. அது அவன் லட்சியமாகவும் இருந்தது, அரசு உதவிப்பணத்தில் படிப்பை முடித்தவன் உதவிப்பணத்தின் மூலமே வெளிநாட்டிற்கு படிக்க வந்ததையும் கூற சுனீஷுக்கு அவன் மேல் ஒரு மதிப்பு வந்தது.

 

உதவிப்பணம் வாங்கி படிக்கும் நிலையில் இல்லாதவன் என்பதால் ஜனாவின் லட்சியம் அவனுக்கு புதிதாய் இருந்தது. அது மட்டுமில்லாமல் ஜனா அங்கு ஒரு இடத்தில் பகுதி நேரமாக வேலைப்பார்த்து கொண்டிருப்பதை கேட்டதும் ஆச்சரியமாகிப் போனான்.

 

 

“ஆனா ஜனா, உனக்கு தான் உதவிப்பணம் வருதே நீ படிக்க, அப்புறம் ஏன் நீ வேலைக்கு போறே?? என்று தன் சந்தேகத்தை கேட்டான்.

 

 

“என்ன தான் உதவிப்பணம் கிடைச்சாலும் என்னோட அன்றாட செலவுக்கும் நான் அவங்களை எதிர்பார்க்க முடியுமா என்ற ஜனாவின் பதிலில் தானும் அவனுடன் சேர்ந்து வேலை பார்க்கும் ஆவல் அவனுக்கு உந்த ஜனாவிடம் கேட்டான்.

 

 

“உங்களுக்கு எதுக்கு சுனீஷ் இந்த வேலை எல்லாம் என்றவனிடம் “சும்மா ஒரு ஜாலி எனக்கும் ஆசையா இருக்கு என்று என்னென்னவோ சொல்லி அவனுடன் சேர்ந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்தான்.

 

 

முதலில் விளையாட்டாய் வேலைக்கு செல்ல ஆரம்பித்தவனை நாளடைவில் ஒரு ஈடுபாட்டுடன் செய்ய முதல் மாதம் சம்பளம் வாங்கும் போது அவன் உழைப்பின் உன்னதத்தை உணர்ந்திருந்தான்.

 

 

ஊருக்கு போன் செய்து தன் படிப்பு செலவுக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்றும் தானே பகுதி நேர வேலை பார்த்து அதை கட்டிக்கொள்வதாகவும் கூற எப்போதும் போல சபரீஷ் தாம்தூமென்று குதிக்க அனீஷ் தான் அவனை சமாதானம் செய்தான்.

 

 

அனீஷுமே அங்கு பிராக்டீஸ் செய்துக் கொண்டே படித்ததால் வேலை பார்ப்பதெல்லாம் அவனுக்கு பெரிதாக தோன்றவில்லை. சுனீஷ் படிப்பை முடித்து கோவைக்கு திரும்பி வரவும் சபரீஷ் அவனை தன்னுடன் வருமாறு அழைத்தான்.

 

 

அங்கு தான் முதன் முதலில் அண்ணன் தம்பிகளுக்கிடையே கருத்து வேறுபாடு தோன்ற ஆரம்பித்தது. “என்னால நம்மோட ஆபீஸ் எல்லாம் வந்து பார்த்துக்க முடியாது. நான் வேலைக்கு போகப் போறேன் என்று குண்டை தூக்கி போட்டான்.

 

 

“நீ வேலைக்கு போய் சம்பாதிச்சு தான் இந்த குடும்பம் வாழணும்ன்னு இல்லை, ஒழுங்கா மரியாதையா வந்து என்னோட தொழிலை கத்துக்கப் பார். வேணுமின்னா வேற ஊர்ல வேணா பிரான்ச் ஆரம்பிச்சு தரேன். உனக்கு தனியா செய்யணுமின்னு தோணிச்சுன்னா நீ அங்க முழுப்பொறுப்பும் எடுத்து பார்த்துக்கோ என்றான் அதிகாரமும் கட்டளையுமாக.

 

 

சுனீஷ் தான் பிடிவாதத்திற்கு பிறந்தவன் ஆயிற்றே அவனும் விடாமல் வர முடியாது என்று கூற சபரீஷ் சொன்னதையே வேறுமாதிரி சொன்னான் மூத்தவன்.

 

 

“சரி சுனீஷ் உனக்கு நம்ம பிசினஸ் பிடிக்கலைன்னா விடு. உனக்கு பிடிச்ச பிசினஸை நீ பாரு. உன் ஐடியா என்னன்னு சொல்லு அதே போல செஞ்சுடலாம். நீ எதுக்கு இன்னொருத்தர்கிட்ட கைக்கட்டி சம்பளம் வாங்கணும் என்றான் அனீஷ்.

 

 

அண்ணன்கள் இருவரையும் ஏதோ ஜந்துவை பார்ப்பது போல் வித்தியாசமாய் பார்த்தான் சுனீஷ். யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதவன் அவர்கள் எதிர்ப்பை மீறி சென்னைக்கு சென்று வேலை பார்க்க ஆரம்பித்தான்.

 

 

அங்கு வேலை பார்த்தாலும் அவ்வப்போது கோவைக்கு வந்து எல்லோரையும் பார்த்துவிட்டு செல்லும் அவன் அவர்களைவிட்டு ஒரேடியாக தனியாக இருப்பதற்கு காரணமாய் இருந்த நிகழ்வுகளை மனதில் ஓடவிட்டுக் கொண்டிருக்க அவன் கைப்பேசியின் அழைப்பு உலுக்க நிகழ்வுக்கு வந்து போனை எடுத்து காதில் வைத்தான்.

 

 

அழைத்தது மிதுவின் அன்னை, “சொல்லுங்க ஆன்ட்டி என்றவனிடம் “தம்பி மது இன்னும் வீட்டுக்கு வரலை. ஆறு மணிக்கே எப்பவும் வந்திடுவா இன்னும் வரலை. கொஞ்சம் பதட்டமா இருக்கு, அவ போனு வேற ஆப் பண்ணியிருக்கு என்றார்.

 

 

“போன் சார்ஜ் இல்லாம ஆப் ஆகியிருக்கும் ஆன்ட்டி. நான் ஹோட்டலுக்கு தான் என் அண்ணன்களை பார்க்க போறேன். லேட் ஆகுற மாதிரி இருந்தா மிதுகிட்ட பேசிட்டு நானே கூட்டிட்டு வந்திடறேன். இல்லன்னா அவளை ஆட்டோவில வரச்சொல்றேன் என்றுவிட்டு போனை வைத்தவன் மதுமிதாவுக்கு அழைத்தான்.

 

 

மதுமிதாவின் எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்ற பதிவு செய்யப்பட்ட குரலை கேட்டதும் தான் அவள் அன்னை கூறியது நினைவில் வர ஹோட்டல் எண்ணுக்கு அழைத்தான். அவளை கேட்டுவிட்டு லைனில் காத்திருக்க “ஹலோ என்றது அவள் குரல் அவசரமாக.

 

“என்னாச்சு மிது?? நீ இன்னும் வரலைன்னு அம்மா எனக்கு போன் பண்ணாங்க?? லேட்டானா வீட்டுக்கு சொல்ல மாட்டியா?? என்றான்.

 

 

“அதில்லை சார் போன் சார்ஜ் இல்லாம ஆப் ஆகிடுச்சு, அதான் வீட்டுக்கு எப்படி தகவல் சொல்லன்னு யோசிச்சுட்டே இருந்தேன் என்று இழுத்தாள் அவள்.

 

 

“ஏன் உங்க ஹோட்டல் நம்பர்ல இருந்தா போன் பண்ணியிருக்கலாம்ல இல்லை பக்கத்துல யார்கிட்டயாச்சும் போன் வாங்கி பேசி இருக்கலாம்ல. ஆமா நீ ஏன் இன்னும் கிளம்பாம இருக்க?? என்றான்.

 

 

“சார் நானே இப்போ தான் இங்க வேலையில சேர்ந்திருக்கேன், அதுக்குள்ள எப்படி சார் ஹோட்டல் நம்பர்ல இருந்து போன் பண்ண. எனக்கு தெரிஞ்ச அண்ணா வெளிய வேலையா போயிருக்காங்க அவங்க வந்ததும் போன் பண்ணலாம்ன்னு இருந்தேன்

 

 

“நான் இன்னைக்கு வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆகும் சார். அம்மாகிட்ட கொஞ்சம் சொல்லிடுறீங்களா?? இங்க ஆள் கொஞ்சம் பத்தாம இருக்கு, அதுனால ஒன்பது மணி வரை இன்னைக்கு இங்க தான் இருக்க வேண்டி இருக்கும் என்று தயங்கி தயங்கி சொன்னாள்.

 

 

“உனக்கு இதெல்லாம் தேவையா மிது?? ஒழுங்கா இங்க ஹோட்டல்ல இருந்திருக்கலாம்ல, இப்படி நேரம் கழிச்சு வந்தா அம்மாக்கு பயமாயிருக்காதா??

 

 

“என்னமோ போ நீ பண்ணுறது சரியில்லை. நான் அட்வைஸ் பண்ணா மூஞ்சி தூக்கி வைச்சுக்கற, சரி உன்னிஷ்டம். ஆனா உன் ஹோட்டல் மேனேஜர்கிட்ட சொல்லிடு தினமும் இந்த மாதிரி லேட்டா எல்லாம் வொர்க் பண்ணமுடியாதுன்னு என்றான்.

 

 

“சரிங்க சார் சொல்லிடுறேன், நீங்க அம்மாகிட்ட…. என்று இழுத்தாள், “சொல்லிடுறேன் என்று முடித்தான் அவன்.

 

 

“நான் ஹோட்டல்க்கு தான் வர்றேன் அண்ணாவை பார்க்க, நான் திரும்பி வரும் போது நீ என்னோட வந்திடு. நான் உங்கம்மாக்கிட்ட சொல்லிடுறேன் என்று சொல்லி போனை வைத்தான்.

 

 

குன்னூரில் இருந்து கிளம்பியவன் ஊட்டியை வந்தடைய ஒரு மணி நேரமானது, ஹோட்டலுக்குள் நுழைந்தவன் ஒரு டேபிளை செலக்ட் செய்து அங்கு சென்று அமர்ந்தான்.

 

 

முன்னமே மதுமிதாவிடம் அவள் சர்வ் செய்யாத டேபிளை விசாரித்து அறிந்துக் கொண்டவன் அங்கு சென்று அமர்ந்திருந்தான். அனீஷுக்கு போன் செய்து கேட்க அவனோ அவர்கள் அறைக்கு வந்திருப்பதாகவும் ரெப்ரெஷ் செய்துக் கொண்டு பத்து நிமிடத்தில் வந்துவிடுவதாக கூறி வைக்க சுனீஷ் மதுமிதாவை தேடிச் சென்றான்.

 

 

“மிது என்றழைக்க திரும்பி பார்த்தவள் “சார் என்றாள்.

 

 

“ஒரு பைவ் மினிட்ஸ் பேசணும் என்றான்.

 

 

அருகில் இருந்தவரிடம் “அண்ணா இவர் என்னோட பிரண்ட் தான் ஒரு ஐஞ்சு நிமிஷம் பேசிட்டு வந்திடுறேன் பார்த்துக்கோங்க அண்ணா என்று கூறிவிட்டு வந்தாள்.

 

 

அவளை தனியே வெளியே அழைத்து சென்றவன் தயங்கி நின்றான். “சார் என்ன விஷயம்?? என்கிட்ட ஏதோ பேசணும்ன்னு சொல்லிட்டு பேசாம இருக்கீங்க?? என்றாள்.

 

 

“எங்க… எங்க அண்ணி உன்கிட்ட எதுவும் பேசினாங்களா?? என்றான் தயங்கிக்கொண்டே.

 

 

அவன் என்ன கேட்க வருகிறான் என்பது புரிய அவளுக்குள் மெல்லிய பதட்டம் உருவாகியது. “இ… இல்லையே… ஒண்ணும் கே… கேட்கலையே என்றாள் அன்று காலை ஆராதனா அவளிடம் பேசியதை மறைத்து.

 

 

“அவங்க உன்கிட்ட எதுவும் கேட்டாலும் கேட்பாங்கன்னு நினைக்கிறேன். நம்ம ரெண்டு பேரையும் ஏதோ தப்பா… சாரி சேர்த்து ஏதோ நினைச்சுட்டு என்னை கேட்டாங்க

 

 

“நான் ஒண்ணுமில்லைன்னு சொன்னாலும் அவங்க நம்பாம பேசுன மாதிரி இருந்துச்சு. உன்னை கேட்டா நீ உண்மையை சொல்லிடு சரியா?? அப்புறம் அவங்க பேசினா அதை தப்பா எடுத்துக்காதே மிது. எனக்காக மன்னிச்சுடு, என்னால உனக்கு தேவையில்லாத சங்கடம் என்றான்.

“அதோ அண்ணாஸ், அண்ணிஸ் எல்லாம் வர்றாங்க, நீ உள்ள போ… என்றுவிட்டு அவர்களை நோக்கி நடையை போட்டான். ஆராதனாவிற்கு தான் கழுகு கண்ணாயிற்றே அவள் பார்வை தூரத்திலேயே கண்டுவிட்டிருந்தது மதுமிதாவும் சுனீஷும் பேசிக் கொண்டிருந்ததை.

 

 

இரவு டின்னரை அவர்களுடன் முடித்துக்கொண்டவன் அனீஷிடம் திரும்பி “அண்ணா மசினக்குடியில உனக்கு எதுவும் ஹெல்ப் வேணும்ன்னா சொல்லு, அங்க தான் என்னோட பிரண்டு ராகவ் இருக்கான் என்றான்.

 

 

“யாரு அந்த ஓட்டை சைக்கிள் ராகவ்வா என்று அனீஷ் கேட்டதும் வாயை மூடிக்கொண்டான் இளையவன். தன் கணவனின் பேச்சில் முதல் முறையாய் அவனை வெறுப்பாய் நோக்கினாள் ஆராதனா.

 

 

“எனக்கு அவனோட அந்த சைக்கிள் தான்டா ஞாபகம் இருக்கு அதான் அப்படி சொன்னேன்.நான் பார்த்துக்கறேன் சுனீஷ், அவனுக்கு எதுக்கு வீணா சிரமம். அங்க ஏற்கனவே எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு என்றவன் மனைவியின் முகச்சுழிப்பை கண்டுவிட்டு இயல்பாய் பேச்சை மாற்றியிருந்தான்.

 

 

ஆராதனாவுக்கு அவன் பதில் திருப்தி இருந்தும் இல்லாமல் இருந்தது. அதிகம் யோசித்து வெறுப்பை வளர்த்துக்கொள்ள விருப்பமில்லை அவளுக்கு. இயல்பாய் மீண்டும் பேச்சில் கலந்துக் கொண்டாள்.

 

 

சுனீஷ் வெளியே வந்து மதுமிதாவிற்கு போன் செய்தான். “மிது நான் என்ட்ரன்ஸ்ல இருக்கேன், சீக்கிரமா வந்திடு என்றான்.

 

 

“சரிங்க சார் என்றுவிட்டு ஏற்கனவே வேலை முடித்திருந்தவள் அவனுக்காய் தான் காத்திருந்தாள். அவன் அழைத்ததும் வேகமாய் வாயிலை நோக்கிச் சென்றாள்.

 

 

“போகலாம் சார் என்று அவனருகே வந்து அவள் கூறவும் அவளை ஜீப்பில் ஏறச்சொல்லிவிட்டு அவனும் ஓட்டுனர் இருக்கையில் ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

 

 

அவனுக்குள் பலவிதமான யோசனைகள் குமிழியிட்டுக்கு கொண்டே இருந்ததால் வண்டியில் அமைதி மட்டுமே நிலவியது. அவன் எதுவும் பேசுவானா என்று பொறுத்து பொறுத்து பார்த்தவள் அந்த அமைதியை கலைத்தாள்.

 

 

“சார்… சார்…சார்… என்று அவள் மெதுவாய் சத்தமாய் என்று அழைத்த பின்னே ஒருவாறு சுதாரித்தவன் “என்ன?? என்றான் அவளை திரும்பிப் பார்த்து.

 

 

“அது வந்து சார் என்று ஆரம்பிக்கவும் “இங்க பாரு மிது, நீ ஒண்ணும் எனக்கு அடிமை இல்லை இனிமே சார்ன்னு கூப்பிடுறதை விடு. பலமுறை சொல்லிட்டேன் உன்கிட்ட, நீ ஏன் மாத்திக்க மாட்டேங்குற?? என்று முறைப்பாய் சொன்னான்.

 

 

“அதில்லை சார்… சாரி நான் உங்களை வேற எப்படி கூப்பிட, அதான் இப்படி கூப்பிட்டேன்…

 

 

“நீ என்னை பெயர் சொல்லி வேணா கூப்பிட்டுக்கோ, ஆனா சார்ன்னு மட்டும் சொல்லாதே??சரி நீ ஏதோ கேட்க வந்தியே என்னன்னு சொல்லு?? என்றான்.

 

 

“அதில்லை சா… இல்லை நீங்க ஏதோ டிஸ்டர்ப்ட்டா இருக்கீங்கன்னு நினைக்கிறேன். ரொம்ப நேரமா அமைதியா வர்றீங்க. பாட்டு எதுவும் இருந்தா போட்டு விடறீங்களா??

 

 

“உங்களுக்கும் மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும், எனக்கும் போரடிக்காம இருக்கும் என்றவளை மெலிதான ஆச்சரியத்துடன் பார்த்தான். அவனை என்ன?? ஏது?? என்று கேட்டு கஷ்டப்படுத்தாமல் இயல்பாய் அவன் மனதை மாற்ற அவள் செய்த முயற்சி அவனுக்கு பிடித்தது.

 

 

திரும்பி நன்றியாய் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவள் சொன்னது போல் பாடலை ஒலிக்கவிட்டான். இளையராஜாவின் இனிமையான கானம் சூழ்நிலைக்கு தக்க ஒலிக்க ஆரம்பித்தது.

 

 

வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ?

மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ?

ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது

ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது

காடுகள் மலைகள் தேவன் கலைகள்

 

இடையில் இருந்து ஒலித்துக் கொண்டிருந்த பாடல் இதமாய் காதுகளில் இசைந்தது. பாடல் முடிந்ததும் எப்எம்மில் இடைவேளை வர “இந்த பாட்டு ரொம்ப பொருத்தமா ஓடுதுல மிது

 

 

“ஜீப்ல போற மாதிரி பாடுற பாட்டு தானே இது, இளையராஜா என்னமா மியூசிக் போட்டிருக்கார், ஜீனியஸ் அவரு என்று சிலாகித்தான்.

“ஆமாங்க, இப்போ உங்க மூட் மாறிடுச்சா?? மனசுக்கு பாரமா இருந்தா இப்படி பாட்டு கேளுங்க. பாரம் குறைஞ்ச போல இருக்கும். இல்லை உங்க நண்பர்கள்கிட்டயோ உங்களை நல்லா புரிஞ்சவங்ககிட்டயோ (?) சொன்னா அது பாதியா குறைஞ்சுடும் என்று கூறிவிட்டு மீண்டும் பார்வையை வெளிப்புறம் திருப்பிக் கொண்டாள்.

 

 

‘என்னைவிட சின்னப்பெண் எப்படி இப்படி யோசிக்கிறாள், நெறைய கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறாள். அது கொடுத்த பக்குவம் பேச வைக்கிறது என்றவனின் பார்வை முதன் முதலாய் அவளை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியது.

 

 

இதுவரை அவளை மல்லியம்மாவின் மகளாய் மட்டுமே பார்த்திருக்கிறான். அவ்வப்போது ஏதாவது அவளுக்கு அட்வைஸ் செய்வான் மல்லியம்மாவிற்காக.

 

 

ஊட்டிக்கு வந்து பள்ளி ஆரம்பித்த புதிதில் நண்பனின் உதவியால் மல்லியம்மாவின் வீடு அருகில் அவனுக்கு வீடு கிடைத்தது. அவன் சாப்பாட்டிற்கு சிரமப்படுவதை பார்த்தவர் தானே சமைத்து கொடுப்பதாக கூற முதலில் மறுத்தவன் பின் ஏற்றுக் கொண்டான்.

 

 

அவன் வீட்டிலேயே சமைக்க சொல்லிவிட சமைப்பதற்கு பணம் கொடுத்தாலும் வாங்க மறுத்தவருக்கு உதவியாக அவரின் இரண்டாம் மகளை தன் செலவிலேயே படிக்க வைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

 

 

மதுமிதா அவ்வப்போது அவள் அன்னைக்கு உதவியாகவோ அல்லது அவருக்கு உடல்நலம் சரியில்லாத நேரத்தில் அவளாகவே வந்து சமைத்து கொடுத்துவிட்டு செல்லுவாள்.

 

 

மதுமிதா ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துக் கொண்டே ஓரிடத்தில் பார்ட் டைமாக வேலை செய்து கொண்டிருந்தவளை அவள் படிப்புக்கு உதவியாய் இருக்கும் என்று சொல்லி அவனுக்கு தெரிந்த ஹோட்டலில் அவன் தான் வேலைக்கு சேர்த்திருந்தான்.

 

 

படிப்பு முடிந்ததும் அவள் அந்த வேலையை முழு நேரமாக பார்த்துக் கொண்டிருந்தவள் தற்போது வேறு ஹோட்டல் வேலைக்கு சென்றுவிட்டதை அன்று காலை தான் அறிந்து கொண்டான்.

 

 

காதுகளில் ஒரு பிளாஸ்டிக் தோடு, கண்டிப்பாய் உடலில் ஒரு தங்கம் போடவேண்டும் என்று போட்டார் போல் கழுத்தில் நூலாய் ஒரு தங்க செயின் என்று பார்க்க வெகு சாதாரணமாய் இருந்தாள்.

 

 

ஊதல் காற்றில் படபடத்த அவளின் மெல்லிய துப்பட்டா அவன் தோளை தொட்டு மெல்ல கீழிறங்கியது. ஏனோ அந்த ஸ்பரிசம் அவனுக்குள் ஏதோ செய்தது. வெகு நேரமாய் அவளையே நினைத்துக் கொண்டிருக்கிறோம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதறியாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்.

 

 

“சார்… சா… என்னங்க… என்னங்க என்று சொல்லி அவன் கையில் தட்டவும் “என்ன மிது?? என்றான். “நீங்க நம்ம வீட்டுக்கு போற வழி திரும்பாம போய்க்கிட்டே இருக்கீங்க?? அதான் கூப்பிட்டேன் என்றாள்.

 

 

‘ச்சே என்று தலையில் தட்டிக் கொண்டு அவன் வண்டியை வீடு செல்லும் பாதை நோக்கி திருப்பினான். அவளை அவள் வீட்டில் விட்டுவிட்டு திரும்பியும் பாராமல் அவன் வீட்டிற்குள் நுழைந்தான்.

 

 

‘காலையில தான் அண்ணிகிட்ட எதுவுமில்லைன்னு சொன்னேன். ஆனா மனசெல்லாம் என்னமோ செய்யுதே!!! அவகூட வண்டியில போய்கிட்டே இருக்கணும்ன்னு தோணுதே!!!

 

 

‘ஏன் இப்படி?? எனக்கென்ன ஆச்சு?? எல்லாம் இந்த அண்ணியால தான், அவன் அப்படி கேட்க போய் தான் எனக்கு இப்படி தேவையில்லாத சிந்தனை போல என்று எண்ணிக்கொண்டு வேறு வேலைகளில் முயன்று மனதை செலுத்தினான்.

____________________

 

 

தேன்நிலவு முடிந்து தம்பதிகள் ஊருக்கு திரும்பியிருந்தனர். கோவைக்கு வந்ததும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல் சபரீஷ் மீண்டும் சிடுசிடுப்பு கடுகடுப்பு என்று ஆரம்பித்தான்.

 

 

எப்படியிருந்த போதும் இரவிலோ அல்லது அவன் விடுமுறையில் வீட்டில் இருக்கும் போதோ யாழினியிடம் சற்றே தன்மையாகவே நடந்துக் கொண்டான். யாழினியும் இதுவே பெரிய விஷயம் என்றிருந்தாள்.

 

 

அனீஷ் எப்போதும் போல் அதே குறும்புடன் ஆராதனாவிடம் வம்பு செய்யவும் ரொமான்ஸ் செய்யவும் என்றிருந்தான்.

 

ஊரில் இருந்து வந்த அலுப்பும் களைப்பும் இருந்ததினால் இரண்டு நாட்கள் ஒரு சோம்பலுடன் செல்ல அனீஷ் அன்று ஒரு முக்கிய கருத்தரங்கு என்று பெங்களூர் கிளம்பிச் சென்றுவிட்டான்.

 

 

தனிமையில் இருந்த ஆராதனாவுக்கு மதுமிதாவிடமும் சுனீஷிடமும் தனித்தனியாக பேச வேண்டும் என்ற எண்ணம் தோன்ற முதலில் மதுவிற்கு பேசலாம் என்று எண்ணி அவளுக்கு டயல் செய்தாள்.

Advertisement