Advertisement

அத்தியாயம் – 8

 

 

புலர்ந்தும் புலராத காலைப்பொழுதில் குளித்து முடித்து கண்ணாடி முன் நின்று தலைவாரி தன்னை லேசாய் அலங்கரித்துக் கொண்டவள் திரும்பி அருகிருந்த கட்டிலை பார்க்க அனீஷ் இன்னமும் உறங்கிக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது.

 

 

அவனருகில் சென்று உறங்கும் அவனின் கன்னக்குழியை ஆசை தீர தொட்டவள் அவனை எழுப்ப முனைய அனீஷோ அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டான்.

 

 

“ஹேய் நான் தான் உனக்கு முழுசா சொந்தமாகிட்டேனே அப்புறமென்ன?? எனக்கு தெரியாம தொடுறது எனக்கு தெரிஞ்சே தொடு… இப்போவே தொடு… என்றவனை வெட்கத்துடன் நோக்கினாள் ஆராதனா.

 

 

“நான் முழுச்சுட்டு இருக்கும் போது ஒரு நாளும் தொட்டு பார்க்க மாட்டேங்குற?? பாக்குறேன் எத்தனை நாளைக்கு இப்படி செய்யறேன்னு

 

 

“ஆமா நீங்க தூங்கிட்டு இருக்கீங்கன்னு நினைச்சு நான் தொடுறது என்னமோ உண்மை தான் ஆனா நீங்க தான் அதை கண்டுபிடிச்சுடுறீங்களே!!!

“இதை என்ன சொல்லுறது, நான் தொடணும்ன்னே தூங்குற மாதிரி நடிக்கறீங்க என்று சிணுக்கமாக கூற அவனோ அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.

 

 

“ஆமா அப்படி தான் இப்போ என்ன செய்வ?? என்று அடாவடித்தனமாய் பேச அவள் வாயடைத்து போனாள். “சரி எழுந்துக்கோங்க, தண்ணி சூடா வருது… சீக்கிரம் எழுந்து குளிங்க, வெளிய போகலாம்ன்னு சொல்லிட்டு தூங்கறீங்க என்று அவனிடமிருந்து எழுந்து கொள்ள முனைந்தாள்.

 

 

“இப்போ என்ன அவசரம் ஆரா இந்த ஊட்டி குளிர்ல எவனாச்சும் இவ்வளவு சீக்கிரம் எழுத்துக்குவானா?? என்றவன் அவளை தன்னுள் சேர்த்துக் கொண்டு அவள் தோள் வளைவில் முகம் பதித்தான்.

 

 

“என்னது இவ்வளவு சீக்கிரமாவா?? மணி என்னனு தெரியுமா?? இப்போ எட்டு மணியாச்சு நீங்க இன்னமும் தூங்கிட்டு இருக்கீங்க என்று முறைத்தாள்.

 

 

“என்னது எட்டு மணியா?? என்று அவளை விலக்கி அவனும் எழுந்து அமர்ந்தான். “சரி சரி வா என்று எழுந்து நிற்க “எங்க வர சொல்றீங்க நீங்க?? என்றாள்.

 

 

“குளிக்க தான் வா ஆரா போய் குளிச்சுட்டு வந்திடுவோம்…

 

 

“நான் அப்போவே எழுந்து குளிச்சுட்டேன், பார்த்தா தெரியலையா??

 

 

“என்னது குளிச்சுட்டியா?? நான் வராம நீ எதுக்கு குளிக்க போனே?? சரி பரவாயில்லை வா மறுபடியும் குளிப்போம் என்றான்.

 

 

“என்னங்க விளையாடுறீங்களா?? என்று சிணுங்கினாள்.

 

 

“ஹேய் நீ தான் ஆரா விளையாடுற, ஹனிமூனுக்கு வந்த இடத்துல நீ மட்டும் தனியா போய் குளிச்சா எப்படி?? பரவாயில்லை வா என்று அவளையும் இழுத்துக்கொண்டு போக இவனிடம் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று யோசித்தாள் ஆராதனா.

 

 

அவனுடன் அவளும் உள்ளே செல்வது போல் அவன் பின்னோடு எழுந்து சென்றவள் அவனை முன்னே போகவிட்டு சட்டென்று கதவை அடைத்து வெளியில் தாளிட்டாள்.

 

“ப்ளீஸ் சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க என்று வெளியில் இருந்து குரல் கொடுத்தாள் அவள்.

 

 

“வெளிய வந்து வைச்சுக்கறேன் இரு என்று அவனும் பதிலுக்கு உள்ளிருந்து குரல் கொடுத்தான். அவளுக்கே அவள் செய்தது அதிகமாக தோன்ற அவன் உள்ளே குளித்து கொண்டிருக்கும் அரவம் கேட்டு கதவை திறக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

 

நல்லவேளையாக அவனே கதவை தட்டவும் கதவை திறந்துவிட வேகமாக அவள் கையை பிடித்து உள்ளே இழுத்தான். அப்போது தான் அவனை பார்க்க அவன் இன்னமும் குளிக்காமல் இருந்தான்.

 

 

“நீங்க இன்னும் குளிக்கலையா?? என்று அவனை பார்க்க “நீயில்லாம எப்படி ஆரா?? என்றவன் அவளை நெருங்கி வர அவள் முகமோ வேண்டாம் என்பது போல் அவனை பார்த்து கெஞ்சியது.

 

 

என்ன தோன்றியதோ அவனுக்கு “சரி போ… என்று அவளை விட்டுவிட்டான். அவன் அப்படி விடவும் அவளுக்கு தர்மசங்கடமாகி போனது. ‘ச்சே நமக்காக பார்க்கிறார், அவருக்காக நாம் பார்க்கவில்லையே என்ற குற்றவுணர்வு தோன்றியது அவளுக்கு.

 

 

அவள் முகத்தை பார்த்தவன் அவளருகில் நெருங்கி நின்றான். “எனக்கு எந்த வருத்தமுமில்லை… கோபமுமில்லை. நீ போ நான் உன்னை தப்பா எடுத்துக்கலை என்று சொல்லி அவள் கன்னத்தில் முத்தமிட்டு அவளை அனுப்பினான்.

 

 

வெளியே செல்ல திரும்பியவள் மீண்டும் வந்து அவன் இதழில் முத்தமிட்டு வெளியே ஓடி வந்துவிட்டாள். அனீஷ் அவளை நினைத்து சிரித்துக் கொண்டவன் கதவை அடைத்துவிட்டு குளிக்க ஆரம்பித்தான்.

 

 

அவளுக்கு அறைக்குள் அடைந்து கிடப்பது போரடிக்க குளியலறை கதவை தட்டி வெளியில் சற்று நடந்துவிட்டு வருவதாக கூறிவிட்டு கதவை சாத்திக் கொண்டு வெளியில் சென்றாள்.

 

 

அவர்கள் தங்கியிருந்த ரிசார்ட் ஒரு ஏரியை சுற்றி இருந்ததால் அவள் மெதுவாய் அந்த ஏரியின் அருகே நடந்து சென்றாள். பச்சையும் சிவப்பும் இருந்த அந்த ப்ராக் உடை அணிந்து ஒரு மழலை அங்குமிங்கும் விளையாடிக் கொண்டிருந்தது.

 

பச்சை பட்டுடுத்தி இருந்த அந்த மரங்களே குழந்தையாய் துள்ளி விளையாடுவது போல் தோன்றியது அவளுக்கு. குழந்தையை ரசித்துக் கொண்டிருந்தவளின் கவனத்தை அருகில் கேட்ட பேச்சுக் குரல் கலைத்தது.

 

 

அவர்களின் பேச்சை ஏனோ கேட்க வேண்டும் தோன்றியது அவளுக்கு. பேருந்து பயணத்தில் காதலி காதலனுடன் சத்தமாக பேசுவதையும் தோழிகள் அவர்கள் பின்னே வரும் காளையரை பற்றி விமர்சிப்பதையும் இன்னும் பல சுவராசியமான பல பேச்சுக்களையும் கேட்டிருப்போம்.

 

 

இப்போது அவளுக்கு அது போன்ற ஒரு உணர்வே தோன்றியது. அவர்களின் உரையாடலை கவனிக்க ஆரம்பித்தாள்.

 

 

“ஹேய் நீ எங்க இங்க?? என்றான் அந்த இளைஞன்.

 

 

“இங்க தான் வேலை பார்க்கறேன் என்றாள் அவன் வயதை ஒத்த பெண்.

 

 

“இது என்ன இடம்ன்னு தெரியுமா?? இங்க நீ என்ன மாதிரி வேலை பார்க்கற??

 

 

“ஹ்ம்ம் தெரியும் நான் இதுக்கு முன்னாடியும் ஒரு ஹோட்டல்ல தானே வேலை பார்த்தேன். இதுவும் அது போல தானே. இங்க ரெஸ்டாரென்ட்ல தான் எனக்கு வேலை. சமயத்துல ஆளில்லைன்னா இந்த ரூம்ஸ்க்கு எல்லாம் சர்வ் பண்ணுறதும் என்னோட வேலை தான் என்றாள்

 

 

“இதுக்கு முன்னாடி நீ வேலை பார்த்த இடம் இது போல இல்லை. இங்க யாரெல்லாம் வருவாங்கன்னு தெரியுமா?? என்று கேள்வியாய் அப்பெண்ணை நோக்கினான்.

 

 

“தெரியும் இங்க ஹனிமூன் கபிள்ஸ் வருவாங்க

 

 

“அப்புறம் எதுக்கு இங்க வந்து வேலை பார்க்கற??

 

 

“இல்லைங்க முதல்ல வேலை பார்த்த இடத்துல விட இங்க அதிக சம்பளம் அதான் இங்க வேலைக்கு வந்திட்டேன் என்றாள் அப்பெண்.

 

 

“சம்பளம் அதிகம் கொடுக்கறாங்கன்னா எங்கயும் வேலைக்கு போய்ட முடியாது. தேவைக்காக தான் பணம், அதிகமா கிடைக்குதுன்னு அது பின்னாடி ஓட ஆரம்பிச்சா நாம ஓடிட்டே இருக்க வேண்டியது தான்…

 

“என்னோட தேவைக்கு தான் நான் வேலைக்கு போறேன்னு உங்களுக்கு தெரியாதா?? அப்பா இல்லாத எங்க குடும்பத்துல நான் வேலைக்கு போனா தானே, அம்மாவும் எவ்வளவு நாளைக்கு தான் வேலைக்கு போவாங்க…

 

 

“என்னோட தங்கை நல்லா படிச்சு முடிக்கணும் அவளோட தேவைகளை அவ பார்த்துக்கற வரை தான் இதெல்லாம் என்றவளின் குரல் சுருதி இறங்கியிருந்தது.

 

 

“நான் தப்பா எதுவும் சொல்ல வரலை, சாரி… உனக்கு இந்த வேலை சரியா வருமா வராதான்னு யோசிச்சு செஞ்சிருக்கலாம். சரி பார்த்து கவனமா வேலை செய் என்று நகர்ந்தான் அவன்.

 

 

“ஒரு நிமிஷம் என்ற அவள் குரலில் திரும்பினான்.

 

 

“நீங்க இங்க என்ன வேலையா வந்தீங்க?? என்றாள் அப்பெண்.

 

 

“ஒரு சின்ன வேலையா வந்தேன் என்றுவிட்டு அவன் மீண்டும் திரும்பினான்.

 

 

“காபி சாப்பிட்டு போறீங்களா?? என்றாள்.

 

 

“நீயே இங்க சம்பளத்துக்கு வேலை பார்க்கற, இதுல எனக்கு காபி வேறயா?? என்ற அவன் பேச்சில் அடிப்பட்டு போனாள் அப்பெண்.

 

 

அவள் முகம் வாடியதும் தான் அவன் பேசியது அவனுக்கு புரிந்தது. “ஹேய் நான் உன்னை தப்பா நினைச்சு அப்படி சொல்லலை. உனக்கு கஷ்டம் கொடுக்க வேண்டாம்ன்னு தான் அப்படி சொன்னேன்

 

 

“ஒரு காபில நான் என்ன கஷ்டப்பட போறேன். வேண்டாம்ன்னா விட்டுடுவோம் என்றாள்.

 

 

“சாரி நான் இன்னொரு நாள் உன்னோட சேர்ந்து சாப்பிடுறேன். இப்போ எனக்கு வேலை இருக்கு கிளம்பறேன் என்றுவிட்டு நகர்ந்தான்.

 

 

“என்ன வேலை?? ரொம்ப முக்கியமான வேலையா?? என்று கேட்டுவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள் அவள்.

 

 

“ஒரு பெர்சனல் வேலை, சரி நான் வர்றேன் என்று அவன் கிளம்புவதிலேயே குறியாய் இருக்க திரும்பி செல்லும் அவனை ஒரு ஏக்கத்துடன் பார்த்துவிட்டு பெருமூச்சுடன் அவள் வேலையை பார்க்க சென்றாள்.

 

 

அவர்கள் இருவரின் உரையாடலை பார்த்துக் கொண்டிருந்த ஆராதனாவிற்கு அப்பெண்ணின் விழிகள் அந்த இளைஞனை ஆர்வமாய் நோக்கிக் கொண்டிருந்தை அறிவாள்.

 

 

ஆனால் அந்த இளைஞனின் பார்வையில் அப்பெண்ணின் மீது சின்ன ஈர்ப்போ சலனமோ எதுவுமில்லாமல் அவன் வெகு சாதாரணமாய் தான் பேசினான். அவர்கள் இருவருக்கிடையில் அடுத்து என்ன நடக்கும் என்ற சுவாரசியம் ஆராதனாவிற்கு பிறந்தது.

 

 

சுவாரசியமான ஒரு படத்தின் இடையில் நல்ல கட்டத்தில் மின்சாரம் அறுபட்டதும் அடுத்து என்ன என்ற ஆர்வம் தொற்றிக்கொள்ளவது போல இப்போது அவளுக்கு இருந்தது.

 

 

இருந்தாலும் நின்று அதைப்பற்றி தெரிந்து கொள்ள முடியாதே என்று இயல்புக்கு வந்த ஆராதனா அதற்கு மேல் அங்கில்லாமல் அவர்கள் அறைக்கு திரும்பினாள்.

 

 

அதற்குள் அனீஷ் ரவுண்டு நெக் புல் ஹான்ட் பனியன் போட்டுக் கொண்டு சின்ன பையன் போல் தயாராகியிருந்தான்.அவனையே ரசித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

 

 

“என்ன மேடம் வாக்கிங் எல்லாம் முடிஞ்சுதா?? என்றான் அவன்.

 

 

“முடிஞ்சுதுங்க என்றாள்

 

 

“ஹேய் என்ன என்னை இப்படி பார்க்குற?? என்றவன் அவளை நெருங்கி நின்றான்.

 

 

எப்போதும் அவனருகில் கூச்சத்துடன் அவனை விலகி நிற்பவள் அவன் மார்பின் மீது சாய்ந்துக் கொண்டு “உங்களை சைட் அடிக்கறேன், இப்படி நீங்க டீஷர்ட் எல்லாம் போட்டா உங்க வயசு ரொம்ப குறைஞ்சு போனா போல இருக்குஎன்றாள் வெட்கத்துடன்.

 

 

“ஆஹான்… என்றவன் “இப்படி எல்லாம் செய்யாத ஆரா, நேரமாச்சு வெளிய கிளம்பணும். இல்லைன்னா நீயா இப்படி வந்து என் மேல சாய்ஞ்சு நின்னதுக்கு உன்னை ஒரு வழியாக்கி இருப்பேன் என்று சொல்லி அவளை பார்த்து கண் சிமிட்டினான்.

 

 

“சரி வா கிளம்புவோம் என்றுவிட்டு சபரீஷ், யாழினியையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்த ஹோட்டல் ரெஸ்டாரென்ட்டுக்கு சென்றான்.

 

 

அவர்கள் அங்கு நுழையவும் “ஹாய் அண்ணாஸ், ஹாய் அண்ணிஸ்… என்று சிரித்த முகமாய் நின்றவனை அனீஷ் சந்தோசமாகவும் சபரீஷ் கோபமாகவும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

 

ஆராதனா அந்த இளைஞனை பார்த்து ஆச்சரியமானாள். சற்று முன் ஏரியின் அருகில் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தவன் அவனே. அனீஷ் அவனை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினான்.

 

 

“இவன் தான் சுனீஷ் எங்க தம்பி என்று அறிமுகம் செய்தவன் சுனீஷிடம் திரும்பி “சுனீஷ் இவங்க… என்று ஆரம்பிக்க “எல்லாம் தெரியும் என்றான்.

 

 

“என்னோட அண்ணிங்க… உங்களோட வர்றவங்க பக்கத்து வீட்டுக்காரவங்களாவா இருப்பாங்க இது கூட என்னால கண்டுபிடிக்க முடியாதா?? என்றான் அவன்.

 

 

“சார்க்கு என்னாவாம் இப்படி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முகத்தை வைச்சுட்டு இருக்கார் என்று சபரீஷை பார்த்து கேட்க யாழினி திகைத்தாள்.

 

 

‘அச்சோ இவரை பார்த்து இவ்வளவு தைரியமா குரங்குன்னு சொல்றாரு. இந்த மனுஷன் சும்மாவே உர்ருன்னு இருப்பாரு… நேத்து தான் கொஞ்சம் சாந்தமான முகத்தை பார்த்தேன் அதுக்குள்ள இப்படி நடக்குது என்று சபரீஷின் முகத்தை பார்த்தாள் அவள்.

 

 

ஆராதனாவோ அவனை பார்த்து “ஹாய் சுனீஷ் எப்படி இருக்கீங்க?? என்றாள் அப்போது தான் நினைவு வந்தவளாய் யாழினியும் அவனை நலம் விசாரித்தாள்.

 

 

“அப்புறம் அண்ணா சொல்லுங்க அம்மா அப்பா எப்படி இருக்காங்க?? என்ற சுனீஷின் குரலில் ஒரு எதிர்பார்ப்பு இருந்ததை அனீஷ் குறித்துக் கொண்டான்.

 

 

“அதை பத்தி உனக்கு தெரிஞ்சே ஆகணுமா?? என்றான் அனீஷ்.

 

 

ஆராதனாவிற்கு அனீஷின் பதில் திருப்தி கொடுக்கவில்லை எப்படி இருந்தபோதும் தவிப்புடன் கேட்கும் சுனீஷிடம் பதில் கேள்வி கேட்டது அவளுக்கு சங்கடத்தை கொடுத்தது.

 

 

“நல்லா இருக்காங்க தம்பி என்று அவள் பதில் கொடுக்க அனீஷ் திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தான். அவளோ அவன் பார்வையை பொருட்படுத்தாது “ஆனா தம்பி அதை நீங்க இங்க இருந்து கேட்கறதுக்கு பதிலா அங்க நேர்ல வந்து பார்த்து தெரிஞ்சுக்கலாமே?? என்றாள்.

 

 

“கண்டிப்பா வருவேன் அண்ணி, சீக்கிரமே வரேன் என்றவனின் பார்வை அனீஷையும் சபரீஷையும் தொட்டு நின்றது. அவர்கள் இருவரும் சுனீஷின் பார்வைக்கு எந்த சலனமும் காட்டவில்லை என்பதையும் ஆராதனா குறித்துக் கொண்டாள்.

 

 

சுனீஷின் விலகலுக்கு தன் கணவன் ஒரு வகையில் காரணம் என்பதை அவள் அறியாள். அதே காரணத்திற்காக தான் அவனை எதிர்த்து நிற்கப் போகிறோம் என்பதும் அவர்கள் இருவரும் எதிரெதிர் ஆகப் போவதும் அறியாமல் சுனீஷ் ஏன் இப்படி இருக்கிறான் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

 

 

“இவன் எங்க வரப் போறான், கூடப்பிறந்த அண்ணனுங்க கல்யாணத்துக்கே வரலை என்று கோபமாக கேட்டான் சபரீஷ். அந்த வருத்தம் அனீஷுக்கும் இருந்தது. அவனும் சுனீஷை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தான்.

 

 

“யார் சொன்னா?? நான் கல்யாணத்துக்கு வரலைன்னு என்றுவிட்டு அமைதி கொடுத்தான்.

 

 

“என்ன சொல்ற?? நீ எப்போ கல்யாணத்துக்கு வந்தே?? அம்மா கூட உன் மேல வருத்தமா தான் இருக்காங்க என்று அனீஷ் கூறிக் கொண்டிருக்க சுனீஷோ அவன் கையில் இருந்த சாம்சங் டேபில் எதையோ தேடி எடுத்து யாழினி ஆராதனாவிடம் காட்டிக் கொண்டிருந்தான்.

 

 

“டேய் அனீஷ் கேக்குறான்ல?? அதுக்கு பதில் சொல்லாம என்னடா பண்ணிட்டு இருக்க?? என்று மீண்டும் பொரிந்தான் சபரீஷ்.

 

 

“சபரிண்ணா கூல் கூல் இந்த ஊட்டியில இருந்துக்கிட்டு எதுக்கு இவ்வளவு ஹாட்டா இருக்கே?? ஒரு ஜூஸ் சொல்லவா?? என்று கேட்டு எரிகிற தீயில் மேலும் எண்ணெய் வார்ப்பது போல் பேசினான். சபரீஷ் மீண்டும் அவனை பார்த்து முறைத்தான்.

 

 

அதற்குள் ஆராதனா அவள் சுனீஷ் காண்பித்ததை அனீஷிடம் காட்டிக் கொண்டிருந்தாள். சுனீஷ் கூறியது முற்றிலும் உண்மை போல் தோன்றியது, ஆனாலும் எப்படி வந்திருப்பான் என்று யோசித்தான் அவன்.

 

 

“என்ன நடக்குது அனீஷ்?? அதில அப்படி என்ன இருக்கு என்று சபரீஷ் கூறவும் டேபை அவனை நோக்கி நீட்டினான் அவன்.

 

 

“அனீஷ்ண்ணா நீங்க அண்ணியை நல்லா ரொமான்ஸ் விடறீங்க, சபரிண்ணா தான் கிலோ என்னன்னு கேக்குறார் பாருங்க போட்டோஸ்ல. சபரிண்ணா எப்போடா அண்ணியை ரொமான்ஸ் லுக் விடுவார்ன்னு ரொம்ப நேரம் காத்திருந்து எடுத்த போட்டோ இது என்று ஒரு போட்டோவை எடுத்து காண்பித்தான் சுனீஷ்.

 

 

அனீஷுக்கும் சபரீஷுக்கும் தம்பி அவர்கள் திருமணத்திற்கு வந்திருக்கிறான் என்பது உறுதியாக புரிந்தது. சுனீஷுக்கு போட்டோகிராபியிலும் ஆர்வம் உண்டு, வித்தியாசமாக புகைப்படம் எடுப்பது அவனுக்கு கைவந்த கலை.

 

 

திருமணத்திற்கு தான் யாரென்று காட்டிக்கொள்ளாமல் வந்தவன் தம்பதியரை அவர்கள் எதிர்பாராத போஸில் எல்லாம் புகைப்படம் எடுத்திருந்தான்.

 

 

“ஏன்டா இப்படி யாருக்கும் தெரியாம வந்துட்டு போயிருக்க, அந்தளவுக்கு நாங்க என்னடா தப்பு பண்ணிட்டோம். எதுக்கு இப்படி வறட்டு பிடிவாதம் பிடிக்கற?? என்று மீண்டும் பொரிய ஆரம்பித்த சபரீஷை மூத்தவன் பார்வையால் அடக்கினான்.

 

 

யாழினியும் ஆராதனாவும் அவர்கள் பேசுவதை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும் அண்ணன் தம்பிகளுக்குள் ஏதோ ஊடல் அதை அவர்களே சரி செய்து கொள்வார்கள் என்று ஒதுங்கியே இருந்தனர்.

 

 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்களை நோக்கி ஏரியின் அருகில் சுனீஷிடம் நின்று பேசிக் கொண்டிருந்த பெண் வருவது தெரிந்தது. அப்பெண் அருகில் வரவும் சுனீஷ் என்ன என்பது போல் பார்க்க “ஆ… ஆர்டர் சா… சார் என்றாள் தடுமாற்றமாக.

 

 

ஆராதனாவுக்குள் சுவாரசியம் தொற்றிக் கொண்டது இவர்கள் எப்படி பேசிக் கொள்வார்கள் என்று. சுனீஷ் தான் அப்பெண்ணின் மீது ஆர்வம் இல்லாதவன் போல் தெரிகிறானே, சரி இவளை பார்ப்போம் என்று எண்ணி அப்பெண்ணை பார்த்தாள்.

 

 

அருகில் வந்தவளிடம் சினேகமாய் சிரித்த சுனீஷ் “மிது இவங்க ரெண்டு பேரும் என்னோட அண்ணாஸ்… இவங்க என்னோட அண்ணிஸ்… என்றவன் “இவங்க… என்று ஆரம்பித்தவன் அனீஷும் சபரீஷும் கண்டுகொள்ளாமல் இருப்பதை பார்த்து வாயை மூடிக் கொண்டான்.

 

 

இருவருக்குமே அப்பெண்ணிடம் சுனீஷ் பேசியது பிடிக்கவில்லை என்று அப்பட்டமாக தெரிந்தது. ஆராதனாவுக்கு தன் கணவனின் இந்த போக்கு புதிது மட்டுமல்ல; பிடிக்காததாகவும் இருந்தது.

 

 

சுனீஷோ சமாளித்துக் கொண்டு “எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் ரூம் எங்க இருக்குன்னு காட்ட முடியுமா?? என்று அப்பெண்ணிடம் கேட்டுக் கொண்டு அவளுடனே நடக்க ஆரம்பித்தான். அவளிடம் என்ன சொன்னானோ அவர்களிடம் ஆர்டர் எடுக்க ஒரு ஆண் வந்து நின்றார்.

 

 

அனைத்துமே ஆராதனா ஊன்றி பார்த்துக் கொண்டிருந்ததை யாரும் அறியவில்லை. ஆராதனா யாழினியை போல் இல்லை, யாழினிக்கு பிடிவாதம் தோழியிடம் மட்டுமே.

 

 

ஆராதனாவும் விட்டுக் கொடுப்பது யாழினியிடம் மட்டுமே. அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இருப்பவள் தான், ஆனால் தவறென்று பட்டுவிட்டால் அமைதியாய் இருக்க மாட்டாள். தனக்கு சரியென்று பட்டதையும் நியாயமாக இருந்தாலும் அதை செய்யவும் தயங்க மாட்டாள்.

 

 

அவளுக்கு சுனீஷிடம் எந்த தவறும் தெரியவில்லை, பின் ஏன் அவன் இவர்களை பிரிந்திருக்கிறான் என்று யோசிக்க யோசிக்க தலை வலிப்பது போல் இருந்தது.

 

 

வந்த இடத்தில் எதற்காக இப்படி அலட்டிக் கொள்ளவேண்டும் என்று யோசித்தவள் தற்காலிகமாக அந்த சிந்தனையை ஒதுக்கி வைத்தாள்.அதற்குள் அவர்கள் ஆர்டர் செய்திருந்த உணவும் வந்துவிட ஆராதனாவும் இயல்பானாள்.

 

 

சாப்பிட்டு முடித்து கைகழுவ எழுந்தவள் நடந்துக் கொண்டே அப்பெண் மிதுவை கண்களால் ஜாடை காட்ட அவளருகில் வந்தவள் “சொல்லுங்க மேடம், நான் உங்களுக்கு எதுவும் ஹெல்ப் பண்ணனுமா?? என்றாள் மெல்லிய குரலில்.

 

 

“ஹெல்ப் தான் கொஞ்சம் என்னோட ரெஸ்ட் ரூம் வரை வரமுடியுமா?? வழி காட்டுற மாதிரி வந்தா கூட போதும். உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று கூற திகைத்த அப்பெண் என்னவாக இருக்கும் என்னை திட்டுவதற்கு அழைக்கிறாரோ என்று எண்ணிக் கொண்டே அவளுடன் நடந்தாள்.

 

 

உள்ளே சென்ற ஆராதனா அப்பெண்ணின் கையை பிடித்து தன்னுடனே இழுத்துக் கொண்டவள் “உன்னோட போன் நம்பர் என்ன?? என்றாள். அப்பெண்ணுக்கோ தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.

 

 

“மேடம் என்னோட நம்பர் எதுக்கு கேட்கறீங்க?? என்று இழுத்தாள்.

 

 

“மேடம் எல்லாம் வேண்டாம், சும்மா அக்கான்னே கூப்பிடு. உன்கிட்ட நெறைய பேசணும் இப்போ உன்னோட நம்பர் தரமுடியுமா?? முடியாதா?? என்றாள்.

 

 

பயத்தில் மற்றவள் அவள் எண்ணை கொடுக்க இயல்பான ஆராதனா “சுனீஷ் பத்தி உன்கிட்ட பேசணும் அதான். உனக்கு அவனை பிடிக்கும்ன்னு நினைக்கிறேன்

 

 

“உனக்கு என் போன்ல இருந்து மிஸ்டு கால் கொடுத்திருக்கேன். அது தான் என்னோட நம்பர் என்னோட பேரு என்று அவள் கூற முயல மற்றவள் “ஆராதனா அக்கா தானே எனவும் புன்சிரிப்புடன் அவளை விட்டு நகர்ந்தாள்.

 

 

அப்பெண்ணோ ஏதோ கேட்க வந்து தயங்குவது அவள் பின்னால் மெதுவாய் நடந்து வருவதில் தெரிய “எனக்கு எப்படி தெரியும்ன்னு யோசிக்கிறியா?? அதெல்லாம் பேசவோ?? சொல்லவோ?? இப்போ நேரமில்லைவிழுந்தது

 

 

“நான் கிளம்பறேன் என்றுவிட்டு நகரவும் யாழினி இவர்கள் இருவரையும் கடந்து செல்லவும் சரியாக இருந்தது.

 

 

‘இவ எப்போ வந்தா நான் கவனிக்காம விட்டுட்டேனே?? பேசினது எல்லாம் கேட்டிருப்பாளோ?? கேட்டா கேட்கட்டும் என்ன தப்பிருக்கு என்று யோசித்துக் கொண்டு அவர்கள் இருப்பிடம் நோக்கிச் சென்றாள்.

 

 

வேகமாக நடந்துக் கொண்டிருந்தவளின் நடை சற்றே பின்னடைந்தது. சபரீஷ் சுனீஷை பார்த்து கத்திக் கொண்டிருந்தான். அவர்கள் பேசுவது அரசல்புரசலாய் காதில் விழுந்தது.

 

 

“என்னடா சும்மா சொன்னதே சொல்லிட்டு இருக்க, அப்படி என்ன பெரிசா நாங்க செஞ்சிட்டோம். ஊர்ல உலகத்தில யாரும் செய்யாததா, இவனொருத்தன் தான் இந்த நாட்டுக்கே நல்லது செய்யறவன் மாதிரி பேசறான் என்றான் சபரீஷ்.

 

 

அனீஷ் மற்றவன் போல் கத்தாமல் நிதானமாகவே சுனீஷிடம் பேசினான். “இங்க சரி தப்பு அப்படிங்கற ஆராய்ச்சி எல்லாம் விட்டிடு. நீ உனக்கு பிடிச்ச மாதிரி தானே இருக்க

 

 

“அதை நாங்க எப்பவும் எதுவும் சொன்னதில்லேயே. அப்புறம் நீ மட்டும் எதுக்கு அலட்டிக்கற?? அம்மா உன்னை நினைச்சு ரொம்ப வருத்தப்படுறாங்க. வாய்விட்டு சொல்லலையே தவிர உன்னை தினமும் நினைக்காத நாள் இல்லை

 

 

அனீஷின் அன்னையை பற்றிய பேச்சில் இளையவன் முகம் சற்றே கனிந்து அன்னையை பற்றிய ஏக்கத்தை விதைக்க அனீஷ் அதை திருப்தியுடன் பார்த்துக் கொண்டே மேலே பேசினான்.

 

 

“உனக்கு அம்மாவை பத்தி நல்லா தெரியும். அவங்களுக்கு எங்களை விட உன்னை ரொம்ப பிடிக்கும் அதுவும் உனக்கு தெரியும். அவங்க கூடவே இத்தனை வருஷமா இருந்தவன் இப்படி தனியா வந்துட்டா அவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்க என்றான் தம்பிக்கு புரிய வைத்துவிடும் விதமாக.

 

 

தாயின் நினைவில் கனிந்து வந்த சுனீஷை மூத்தவன் தன்னை மட்டும் தான் அன்னைக்கு பிடிக்கும் என்ற ரீதியில் பேசிய பேச்சில் முகத்திற்கு மீண்டும் கடினத்திரை போட்டுக் கொண்டு யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் அவன் பேச்சை அசுவாரசியமாய் கேட்பது போல் அலட்சியமாய் அமர்ந்திருந்தான்.

 

 

அவன் நடவடிக்கையில் பொறுமையிழந்த “அனீஷ் நீ என்ன சின்ன குழந்தைக்கு பாடம் எடுக்கற மாதிரி பேசிட்டு இருக்க, அவன் எப்படி உட்கார்ந்திருக்கான் பாரு என்று குரல் உயர்த்தினான்.

 

 

அவனிடம் பதில் பேச தலையை நிமிர்த்திய அனீஷ் அப்போது தான் எதிரில்  யாழினியும் ஆராதனாவும் தூரத்திலே நிற்பது புரிய சபரீஷிடம் கண்களால் ஜாடை காட்டிவிட்டு “என்ன ஆரா அங்கேயே நின்னுட்டு இருக்க

 

 

“வாம்மா யாழினி. சுனீஷ் எப்பவும் இப்படி தான் சிறுபிள்ளை மாதிரி இருப்பான். அதான் அவனுக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருந்தோம் என்று விளக்கம் கூறிய அனீஷ் பில்லுக்கு பணம் செலுத்திவிட்டு எழுந்து நின்றான்.

 

 

“அப்போ நாங்க கிளம்பறோம் சுனீஷ், சீக்கிரம் ஒரு நல்ல முடிவெடு. உன்னோட ஸ்கூல் எல்லாம் இங்க வேற ஆளு வைச்சு பார்த்துக்கலாம். எங்களுக்காக இல்லைனாலும் அம்மாவுக்காக சீக்கிரம் வந்து சேர் என்றுவிட்டு சபரீஷை இழுத்துக் கொண்டு நடந்தான்.

 

 

யாழினியும் எழுந்து அவர்கள் பின்னே செல்ல ஆராதனா மட்டும் பின் தங்கினாள். “என்ன அண்ணி?? என்கிட்ட என்ன பேசணும் உங்களுக்கு?? பேசணுமா?? இல்லை கேட்கணுமா?? என்றான் தலையை சரித்து.

 

 

அவன் உடனே புரிந்து கொண்டதை மனதிற்குள் மெச்சிக் கொண்டு “பேசணும் தம்பி என்றவள் ஒரு காகிதத்தில் தன் எண்ணை எழுதி கொடுத்தாள். “இது என்னோட நம்பர் என்றாள்.

 

 

“என்கிட்ட உங்க நம்பர் இருக்கு அண்ணி, நான் இப்போ உங்களுக்கு கட் கால் கொடுக்கறேன். என்னோட நம்பர் நோட் பண்ணிக்கோங்க. நீங்க எப்போ வேணும்னாலும் என்கிட்ட பேசலாம்

 

 

“ஆனா!!! ப்ளீஸ்!!!இந்த அண்ணாஸ் மாதிரி அட்வைஸ் மட்டும் வேணாம். இன்னைக்கு நான் பஞ்சு எடுத்திட்டு வராம வந்திட்டேன். பாருங்க எப்படி ரத்தம் வருதுன்னு என்றவன் வராத ரத்தத்தை காதில் துடைப்பதாக பாவனை காட்டவும் ஆராதனா வாய்விட்டு சிரித்தாள்.

 

 

அவனிடம் விடைபெற்றவள் தூரத்தில் நின்றுக் கொண்டு தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அப்பெண்ணை நோக்கியும் தலையசைத்தாள். ஏதோ ஞாபகம் வந்தவளாய் திரும்பியவளிடம் “இப்போ என்ன அண்ணி?? என்றான்.

 

 

“அப்பெண்ணை சுட்டிக் காட்டி அவளோட பேரு என்ன?? என்று கேட்டாள். அவன் பதிலை பெற்றுக்கொண்டே வெளியே சென்றாள்.

 

 

 

Advertisement