Advertisement

அத்தியாயம் – 7

 

 

யாழினியுடன் சபரீஷ் அவளின் வீட்டிற்கு பயணப்பட்டான். அவனின் மாற்றம் நிகழப் போகுமிடம் அது என்பதை அறியாதவனாய் எப்போதும் போல் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டே அவளுடன் பயணப்பட்டான்.

 

 

யாழினியின் உடன்பிறந்த தமக்கை இலக்கியாவும் அவள் கணவர் அகிலும் அவர்களின் செல்ல மகள் ஆராத்யாவும் கூட அவர்களை வரவேற்கவென வந்திருந்தனர்.

 

 

யாழினி ஆராத்யாவை கண்டதும் மகிழ்ந்தவளாய் அவளை அள்ளி அணைத்து முகம்மெங்கும் முத்திரை பதித்தாள். அதுவரை பார்வையை வெளியில் வைத்திருந்த சபரீஷின் கண்களுக்கு அந்த காட்சி தப்பவில்லை.

 

 

என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வுடன் அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தான். சிறு குழந்தையுடன் சரிசமமாய் குழந்தையாய் பேசி விளையாடியவளை எப்போதும் இல்லாத வகையில் அவன் மனம் கண்டுக் கொண்டிருந்தது.

 

 

 

அந்த குழந்தையும் அவளிடம் குதூகலமாய் பேசுவதை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். கார் வீட்டிற்கு வந்து நின்ற பின்னும் அவன் பார்வை யாழினியையே தழுவி நின்றது.

 

 

யாழினி வெகு நேரமாய் அவனை அழைத்துக் கொண்டிருந்தாள் போலும் அவன் காதுகள் அதை செவிமடுக்காமல் அவளையே நோக்கிக் கொண்டிருக்க அவள் அவனை உலுக்கவும் தான் “என்ன?? என்றான்.

 

 

“இறங்கலாம் வீடு வந்திடுச்சு என்றாள். தலையை குலுக்கிக் கொண்டவன் இயல்பு நிலைக்கு வந்தான். அவளுடன் அவனும் கீழே இறங்க இருவருக்குமாய் ஆரத்தி எடுத்து அவர்களை உள்ளே அழைத்தனர்.

 

 

யாழினியின் அன்னை அவளை அழைத்து அவளுடைய அறைக்கு செல்லுமாறு கூறினார். அவளோ எதையுமே காதில் வாங்காதவளாய் ஆராத்யாவுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

 

 

அவள் இப்போதைக்கு நகரமாட்டாள் என்பதை அறிந்த அகிலன் மெதுவாய் சபரீஷிடம் பேச்சு கொடுத்தான். பேச்சு அவன் தொழில் ரீதியாய் இருக்க சபரீஷும் இயல்பாகவே அதில் கலந்து கொண்டான்.

 

 

அவ்வப்போது மனைவியை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டும் தானிருந்தான். அகிலனுக்கு அவன் பார்வை புரிந்திருந்தது, அவன் இலக்கியாவுக்கு ஜாடை காட்ட அவள் யாழினியிடம் வந்தாள்.

 

 

“யாழு என்ன இது வந்ததும் அவளோட விளையாடிட்டு போ, முதல்ல போய் குளிச்சுட்டு வாங்க… அவரை உள்ள கூட்டிட்டு போ… ஆரா எங்கயும் போக மாட்டா… என்று தங்கைக்கு நாசுக்காய் உரைத்தாள்.

 

 

“ஆராம்மா சித்தி போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வரட்டும்டா நீங்க அப்பா கூட டாட்டா போயிட்டு வாங்க என்று அவளை தூக்கி கணவனிடம் கொடுத்தாள்.

 

 

அப்போது தான் சபரீஷை அவள் பார்க்க அவன் சோபாவிலேயே அமர்ந்திருப்பது உரைத்தது. “வாங்க… என்று அவனிடம் கூறிவிட்டு மாடியேறினாள்.

 

 

அவனும் பின்னாலேயே வந்தான். அறைக்குள் சென்றதும் அவனை அமரச்சொல்லி விட்டு பெட்டியில் இருந்து துண்டை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

“போய் குளிச்சுட்டு வந்திடுங்க… என்று துண்டை அவனை நோக்கி நீட்டினாள்.

 

 

அவனோ அதை வாங்காமல் சாவகாசமாய் கட்டிலில் சாய்ந்துக் கொண்டு “எனக்கு ஹாட் வாட்டர் தான் வேணும் என்றவனை முறைத்து பார்த்தாள்.

 

 

குளியலறை கதவுக்கு வெளியே இருந்த சுவிட்ச் போர்டில் ஹீட்டரின் சுவிட்ச் ஆன் செய்து வைத்திருப்பதை பார்த்தவள் “தண்ணி சூடா தான் இருக்கும் போய் குளிங்க. ஹீட்டர் சுவிட்ச் ஆன்ல இருக்கு என்றுவிட்டு திரும்பியும் பாராமல் வெளியே சென்றாள்.

 

 

‘இங்க ஒருத்தன் தனியா இருக்கானேன்னு எண்ணமிருக்கா பாரு… இவ பாட்டுக்கு எனக்கென்னன்னு போறா?? புதுசா ஒரு வீட்டில புருஷன் எப்படி தனியா இருப்பான்னு நினைப்பிருக்கா?? என்று மனதிற்குள் அவளை திட்டிக் கொண்டான்.

 

 

கீழே இறங்கி சென்றவள் அப்போது தான் நினைவு வந்தவளாய் “என்ன அத்தான் நீங்க இன்னைக்கு அதிசயமாய் இங்க இருக்கீங்க. நாங்க வந்திருக்கோம்ன்னு வந்தீங்களா??

 

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை யாழு உங்கத்தானுக்கு லீவு மாதிரி, அதான் அவர் வேலையெல்லாம் விட்டுட்டு இங்க இருக்காரு… இல்லைன்னா இவராவது லீவு போடுறதாவது. இப்போ தானே உன் கல்யாணத்துக்கு லீவு போட்டாரு அதுவே பெரிசு யாழு என்றாள் இலக்கியா.

 

 

“என்ன அத்தான் அக்கா என்ன சொல்லுறா?? எனக்கு புரியலையே??

 

 

“அதில்லைம்மா சிமென்ட் விலை ஏத்திட்டாங்கன்னு ஸ்ட்ரைக் நடக்குது அதுனால தான் எனக்கு கொஞ்சம் வொர்க் கம்மியா இருக்கு.நீங்க வந்திருக்கவும் நான் இங்க வந்துட்டேன்

 

 

“ஏன்மா யாழினி கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வைச்சு இருக்கீங்க, உனக்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கும். எப்படியும் சபரி உன்கிட்ட சொல்லியிருப்பாரே. தெரிஞ்சுட்டே என்னை கலாட்டா பண்ணுறியாம்மா

 

 

அகிலன் சொன்னதை கேட்டதும் யாழினிக்குள் சபரீஷின் மேல் கோபம் கோபமாக வந்தது. அவன் வரவில்லை என்று சொல்லிவிட்டு கடைசியில் வந்ததிற்கு இது தான் காரணமா என்று கொதித்தாள். அகிலனிடம் சிரித்து மழுப்பிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அவனை ரெண்டில் ஒன்று கேட்பது என்று அவள் அறைக்குள் நுழைய அவன் சரியாக அந்நேரம் குளியலறைக்குள் நுழைந்திருந்தான். ‘ச்சே… என்று தரையில் காலை உதைத்துவிட்டு அவளும் அவளுக்கு தேவையான உடையை எடுத்துக் கொண்டு வேறு குளியலறைக்கு சென்றாள்.

 

 

குளித்து ஐந்தே நிமிடத்தில் வெளியே வந்தவள் நைட்டியுடன் அவர்கள் அறைக்குள் நுழைய அப்போதும் சபரீஷ் வந்திருக்கவில்லை. எப்படியும் அவன் வர தாமதம் ஆகும் என்று எண்ணியவள் அவசரமாக புடவையை உடுத்த ஆரம்பித்தாள்.

 

 

அவள் உடுத்தி முடிக்கும் தருவாயில் குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்க முன் கொசுவத்தை அவசரமாய் உள்ளே மடித்து அவள் திரும்பவும் அவன் ஆவென்று கத்தவும் சரியாக இருந்தது.

 

 

குளியலறையில் இருந்து வெளியே வந்தவன் ஈரக்காலுடன் தரையில் கால் வைக்கவும் சட்டென்று வழுக்கிவிட அவன் காலில் நரம்பு பிடித்துக் கொண்டதில் உருவான வலியில் அவன் கத்தியிருந்தான்.

 

 

அருகிலிருந்தவள் சுதாரித்து அவனை தாங்கி கட்டிலில் அமர்த்தினாள். “என்னாச்சுங்க?? ரொம்ப வலிக்குதா?? பார்த்து வரக்கூடாதா?? என்றவளின் கண்கள் கலங்கியிருந்ததோ?? என்று எண்ணியவனுக்கு உள்ளே ஜில்லென்றிருந்தது.

 

 

தனக்காக வருந்துகிறாள் என்பதே அவனிக்கு இனித்தது. எதுவும் பேசாமல் ஏதோவொரு மோன நிலையிலேயே இருந்தான் அவன். அவளோ அவன் காலை வேகமாய் நீவிவிட்டாள்.

 

 

பின் குளியலறை பக்கம் பார்த்தவள் அவனிடம் “ஒரு நிமிஷம் நான் இதோ வர்றேன் என்றவள் தடதடவென்று கீழே இறங்கி சென்ற சத்தம் அவன் காதில் விழுந்தது.

 

 

‘எங்க இவ்வளவு அவசரமா போறா?? என்று அவள் யோசிக்கும் போதே கீழே அவள் குரல் சத்தமாய் அம்மா என்று கேட்கவும் என்னவோ ஏதோவென்று அவனும் மெதுவாய் கட்டிலில் இருந்து எழுந்தான்.

 

 

அவனுக்கு காலில் லேசாய் பிடிப்பு தான் ஏற்பட்டிருந்தது, மெதுவாய் காலை தாங்கி நடந்தவன் மாடியில் இருந்தவாறே கீழே எட்டி பார்த்தான்.

 

 

“அம்மா என்னம்மா பண்ணிட்டு இருக்கீங்க எல்லாரும்?? மாடியில இருக்கற பாத்ரூம் வெளிய ஒரு மேட் கூட போட்டு வைக்க மாட்டீங்களா?? அவர் கால் வழுக்கி கீழ விழப்பார்த்தாரு

 

 

“நல்ல வேளை நான் பக்கத்துல இருக்கப்போயி பார்த்தேன். இப்போ காலு சுளுக்கி கட்டில்ல படுத்திருக்காரு என்று அவள் கூறவும் அவள் அன்னை “ஐயோ என்னம்மா ஆச்சு, நான் தான் மேட் போடணும்னு நினைச்சு மறந்திட்டேன்

 

 

“என்கிட்ட சொல்லி இருந்தா நானாச்சும் செஞ்சிருப்பேன்லம்மா, பாவம் அவர் வலில எப்படி கத்திட்டார் தெரியுமா?? என்றாள் வருத்தம் கலந்த கோபக்குரலில்.

 

 

“தப்புத்தான் யாழும்மா, அம்மா தான் பார்க்காம விட்டுட்டேன். மாப்பிள்ளைக்கு எப்படி இருக்கு?? ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போவோமா?? என்று பதட்டத்துடன் கேட்டார் அவர்.

 

 

“அதெல்லாம் எதுவும் வேணாம், சூடா எண்ணெய் காய்ச்சு கொடுங்க நானே தடவிக்கறேன்… என்று பொரிந்து விட்டு அவரிடம் எண்ணெய்யை வாங்கி சென்றாள்.

 

 

அவள் வரும் அரவம் தெரிந்ததும் சபரீஷ் மீண்டும் கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான். அவனருகே வந்தவள் “ஏங்க?? ரொம்ப வலிக்குதா?? என்றாள்.

 

 

“பரவாயில்லை லேசான வலி தான் என்றான் அவன்.

 

 

கட்டிலில் அமர்ந்தவள் அவன் காலை எடுத்து தன் மடி மீது வைக்கவும் அவன் சங்கடத்துடன் சட்டென்று கால்களை நகர்த்திக் கொண்டான். “என்ன செய்யறே?? என்றான் கேள்வியாக.

 

 

“எண்ணெய் போட்டு நீவிவிட்டா வலி போய்டும் என்றவள் அவன் காலை எடுத்து மீண்டும் அவள் மடி மீது வைத்துக் கொண்டு மெதுவாய் நீவிவிட்டவாறே தடவினாள்.

 

 

சபரீஷுக்கோ தனக்காக அவள் துடிப்பது ஏதோ செய்ய அமைதியாய் அவள் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தான். தனக்காக தன்னை நேசிக்கும் ஒருத்தி என்ற எண்ணமே அவனுக்கு உவகையை கொடுத்தது. ஏனோ தன் கடந்த காலம் அவன் மனதிற்குள் வந்தது. நடந்ததை அசை போட்டது அவன் மனது.

சிறு வயதிலேயே ரெசிடென்ஷியல் பள்ளியில் படித்ததால் வீட்டினருடனான நெருக்கம் அவனுக்கு அதிகம் இருந்ததில்லை அனீஷை தவிர.

 

 

சுந்தர்ராஜ்க்கு மகன்கள் தரமான கல்வியை கற்க வேண்டும் நல்லொழுக்கத்துடன் வளர வேண்டும் தனித்துவமாய் இருக்க வேண்டும் என்று எண்ணி இருவரையும் சிறு வயதிலேயே ஊட்டியில் இருந்த ரெசிடென்ஷியல் பள்ளியில் சேர்த்துவிட்டார்.

 

 

ஒரே நேரத்தில் இரு மகன்களையும் பிரிந்த திலகவதிக்கு தாங்க முடியாத வேதனையாக இருந்தது. அவர்கள் இருவரும் சென்ற சில மாதங்களிலேயே அவர் மீண்டும் கருவுற்றார்.

 

 

மகன்கள் இருவரும் வருடாந்திர விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த நேரம் அவருக்கு குழந்தை பிறந்தது. கைக்குழந்தையை வைத்திருந்ததால் மற்ற இரு பிள்ளைகளுடனான அவரின் நெருக்கம் சற்றே குறைந்திருந்தது.

 

 

அனீஷுக்கும் சபரீஷுக்கும் தங்கள் வீட்டின் புது வரவான சுனீஷை மிகவும் பிடிக்கும். கொழு கொழுவென்று கையை காலை அசைத்து தங்களை பார்த்து சிரிக்கும் குட்டிப்பாப்பா அவர்களின் செல்லமாகிப் போனான்.

 

 

விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு பிள்ளைகள் சென்றதும் அவர்களுக்காய் எதுவும் செய்யவில்லை என்று திலகவதி உள்ளம் குமுறினார்.

 

 

அனீஷ் மற்றும் சபரீஷை தங்களுடனே வைத்துக் கொள்ளலாம் என்று கணவரிடம் பலமுறை மன்றாடி பார்த்தும் அவர் தன் பிடிவாதத்திலேயே இருந்தார்.

 

 

அதனாலோ?? என்னவோ?? அவர் சுனீஷின் மீது அதிக அன்பு செலுத்த ஆரம்பித்தார். அவனையாவது தன்னுடனே வைத்துக் கொள்ள வேண்டும் நினைத்தார்.

 

 

முதல் முறை பள்ளி சேர்ந்த புதிதில் இரண்டு நாள் விடுமுறைக்கு வந்த பிள்ளைகள் அன்னையை பிரிந்து போக மறுத்து அடம்பிடித்து அழுக அதைக்கண்ட சுந்தர்ராஜோ இனி வருடாந்திர விடுமுறைக்கு மட்டுமே அவர்களை அழைத்து வர வேண்டும் என்று முடிவெடுத்தார்.

 

 

வருடாந்திர விடுமுறைக்கு மட்டுமே வீட்டிற்கு வரும் இரு பிள்ளைகளையும் தாயிடம் அதிகம் ஒட்டவிட மாட்டார் அவர். எங்கே மகன்கள் திரும்பி செல்வதற்கு அடம் பிடிப்பார்களோ என்று எண்ணி அவர் அப்படி செய்தார்.

 

 

ஆனால் பின்னாளில் அதுவே அவருக்கு எதிராய் திரும்பும் என்று அப்போது அவர் எதிர்பார்க்கவில்லை. அனீஷும் சபரீஷும் தாயையும் தந்தையும் முதன் முதலில் பிரிந்த போது வெகுவாய் வருந்தி தவித்து போனார்கள்.

 

 

போக போக அதுவே பழகிவிட ஒருவருக்கொருவர் ஆறுதலாய் மாறி தங்களை தாங்களே தேற்றிக் கொண்டனர். இருவருக்குள்ளும் பாசத்திற்கான தேடலும் ஏக்கம் மிகுந்து இருந்தது.

 

 

அனீஷ் அதன் பொருட்டு முடிந்தவரை எல்லோரிடமும் பாசமாக பழகினான். ஏனோ சபரீஷ் அவன் போல் அல்லாமல் அனைவரிடமும் ஒதுங்கியே போனான். அவனுக்குள் ஒரு வித வெறுப்பு எப்போதும் உள்ளே கனன்று கொண்டிருந்தது.

 

 

அவன் அன்னை மேல் கூட அவனுக்கு தீராத கோபமிருந்தது. அவர் நினைத்தால் இப்படி தாங்கள் பிரிந்திருக்க வேண்டியதில்லை என்ற ஆற்றாமை அவனுக்குள் கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்தது.

 

 

விடுமுறைக்கு வீட்டிற்கு வரும் பிள்ளைகள் பெரும்பாலும் கேட்பது அவர்கள் தந்தை ஓதும் போதனையை தான். அது பணம் சம்பாதிப்பது, அது ஒன்றே குறி என்று அவர்கள் மனதில் ஆழமாய் பதிய வைத்துவிட்டார் சுந்தர்ராஜ்.

 

 

சுனீஷையும் அவர் ரெசிடென்ஷியல் பள்ளியில் சேர்த்துவிட அவனோ பெரிதாக அழுது ஆர்ப்பாட்டம் செய்து அவன் உடம்புக்கு முடியாமல் போய்விட திலகவதி அழுது அரற்றி அவனையாவது தன்னுடன் இருத்திக் கொள்ள வேண்டும் என்று போராடி அவனை அவர்களுடனே வைத்துக் கொண்டார்.

 

 

அந்த வருட விடுமுறைக்கு அனீஷும் சபரீஷும் கோயம்புத்தூருக்கு வந்திருக்க அனீஷ் தன் பள்ளிப்படிப்பை அந்த வருடத்துடன் முடித்திருக்க சபரீஷுக்கோ இன்னும் ஒரு வருட படிப்பு பாக்கி இருந்தது.

 

 

சுந்தர்ராஜ் அதே ஊரில் இருந்த கல்லூரில் அனீஷுக்கு இடம் வாங்கியிருக்க அவனோ அங்கு சேர மறுத்தான்.சென்னையில் சென்று படிக்க போவதாக அவன் கூறவும் சபரீஷும் தன் படிப்பு முடிந்ததும் தானும் அனீஷுடனே சென்று படிப்பதாக  கூறிவிட திலகவதி தான் வெகுவாய் வருந்த ஆரம்பித்தார்.

 

“என்னப்பா இப்படி சொல்றீங்க இதுவரைக்கும் தான் பிரிஞ்சு இருந்தீங்க. காலேஜ் இங்கயே சேர்ந்து படிக்கலாமே என்றார் சுந்தர்ராஜ்.திலகவதியும் “ஆமாப்பா இனியும் உங்களை பிரிஞ்சு இருக்க முடியாது என்று குரல் உடைய பேசினார்.

 

 

சபரீஷோ “ஏன் இவ்வளவு நாள் இருந்தீங்கள்ள இன்னும் சில வருஷம் தானே அப்படியே இருங்க என்று சுள்ளென்று கூறவும் திலகவதி உடைந்து போய் அழ ஆரம்பித்தார். கணவரை அவர் அடிபட்ட பார்வை பார்க்க முதல் முறையாய் அவரும் வருந்த ஆரம்பித்தார்.

 

 

விதைத்தது தானே அறுவடை ஆகும் அவர் பிள்ளைகளிடம் விதைத்தது இன்று அவரையே பதம் பார்த்தது. முதலில் அனீஷை அவன் விருப்பப்படி சென்னையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவ கல்லூரியில் சேர்க்க மறுவருடம் சபரீஷ் படிப்பை முடித்ததும் அவனையும் சென்னையில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்த்துவிட்டார்.

 

 

அனீஷ் தன் ஐந்து வருட படிப்பை முடிக்கவும் சபரீஷ் நான்கு வருட இன்ஜினியரிங் படிப்பை முடிக்கவும் சரியாக இருந்தது. சபரீஷ் கோயம்புத்தூருக்கு சென்று தந்தையுடன் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியை பார்க்க சென்றுவிட அனீஷ் எம்எஸ் படிக்க அமெரிக்காவிற்கு சென்றுவிட்டான்.

 

 

அனீஷ் ஊருக்கு சென்றிருந்த இடைவெளியில் கோயம்புத்தூரில் இருந்த சபரீஷ் வீட்டினருடன் இருந்தாலும் ஏனோ அவர்களுடன் அதிகம் ஒட்டி பேசியதில்லை. திலகவதி அவனிடம் எவ்வளவு பாசம் பொழிந்து பேசினாலும் அவரை தள்ளி நிறுத்தியே வைத்திருந்தான் அவன்.

 

 

சுனீஷ் மட்டுமே அவனுடன் அதிகம் பேசுவான். அவன் தந்தைக்கும் மேலாக அத்தொழிலில் தடம் பதிக்க தனக்கென்று ஒரு அங்கீகாரம் ஏற்படுத்திக் கொண்டிருந்தான்.

 

 

அனீஷ் திரும்பி வருவதற்கு முன் சபரீஷின் அவனுக்காய் எஸ்டி மருத்துவமனையை கட்டி முடித்திருந்தான். இருவருக்குமே பணம் சம்பாதிப்பது ஒன்றே குறியாய் இருக்க அவர்கள் வாழ்வில் காதல் ஏன் தோழி என்ற பெயரில் கூட பெண்கள் நுழைந்ததில்லை.

 

 

அனீஷுக்கு சபரீஷும், சபரீஷுக்கு அனீஷுமே நண்பர்கள் ஆகிப் போக இருவருக்கும் சுனீஷ் உயிராகி போனான். அப்படிப்பட்ட சுனீஷ் தங்களை எதிர்த்து நின்றது இருவருக்குமே அதிர்ச்சி தான்.

 

பள்ளி செல்லும் முன் அனுபவித்த அன்னையின் அன்பு மட்டுமே அவன் நெஞ்சில் ஆழப்பதிந்திருக்க, யாழினி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவனிடம் காட்டும் அன்பு அவனுக்கு புதிதாய் தெரிந்தது,

 

 

அவளை ஆழ நோக்கிக் கொண்டிருந்தவன் அறியவில்லை, அவள் தன்னை முழுதாய் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டாள் என்று.

 

 

அவன் மீதான கோபம் அவளுக்கு இன்னமும் இருந்தாலும் அதை காட்ட மனமில்லாதவளாய் அவனை கட்டிலை விட்டு கீழே இறங்கக் கூட விடாமல் பார்த்துக் கொண்டாள்.

 

 

மறுவீடு முடிந்து மறுநாள் காலையிலேயே இரு ஜோடிகளும் ரயிலில் கோயம்புத்தூருக்கு பயணப்பட்டனர். மாலை ஊரை வந்தடைந்தவர்களை அனீஷின் மருத்துவமனை ஊழியர் சந்தித்து அவன் கார் சாவியை கொடுத்து செல்ல ஜோடிகள் நேராக ஊட்டியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர்.

 

 

சபரீஷ் வீட்டில் இருந்து கிளம்பும் போதே யாழினி அவனுக்கு வலிக்குமோ என்று அவனை தாங்கி பிடித்தவாறே நடக்க அவ்வளவாக வலியில்லாத போதும் அவன் அவளின் அருகாமையை ரசித்தவாறே அவளை உரசியே நடந்தான்.

 

 

யாழினி அவனை ஊன்றி கவனிக்காததால் அவன் நடவடிக்கை அவள் மனதில் பதியவில்லை. ஒரு வேளை இவனுக்காவது ரொமான்ஸாவது என்று எண்ணியிருப்பாளோ??

 

 

நேரம் இரவு ஒன்பது மணியை கடந்திருந்தது அவர்கள் வந்து சேர்ந்த போது, அவர்கள் ரிசார்ட்டை வந்தடைந்து அவரவர் அறைச்சாவியை வாங்கிக் கொண்டு அவர்கள் அறைக்கு சென்றனர்.இரண்டு நாளாய் சபரீஷ் யாழினியை வெகு சுவாரசியமாயும் ஒரு குறுகுறுப்புடனும் பார்த்துக் கொண்டேயிருந்தான்.

 

 

அவள் சற்று தள்ளி நடப்பது பொறுக்காமல் அவர்கள் அறைக்கு நடந்து செல்லும் போது வேண்டுமென்றே கால் வலிப்பது போல் தாங்கி நடக்க அருகே வந்து “என்னாச்சுங்க?? வலிக்குதா?? என்று அவனை தாங்கி பிடித்துக் கொண்டாள்.

 

 

அது தான் சாக்கென்று அவள் இடையில் அவன் கைக்கோர்த்துக் கொள்ள அதுவரை அவன் வலியை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு வெற்றிடையில் பதிந்த அவன் கரத்தின் சூடு இதமாயும் குறுகுறுப்பாயும் இருந்தது. அவர்களுக்கான அறைக்குள் நுழைந்தவனுக்கு அவளை விட்டு விலக முடியவில்லை.

 

 

யாழினிக்கு அப்போது தான் அவன் பார்வை மாற்றம் தெரிந்தது. முதல் நாள் நடந்து கொண்டது போல் நடந்து கொள்வானோ என்ற பதட்டம் உருவாக ஏற்கனவே இருந்த குளிருடன் உள்ளமும் சேர்ந்து குளிரெடுக்க ஆரம்பித்தது.

 

 

யாழினி அவள் பயத்தை உள்ளே மறைத்தவாறே அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் நைட்டியை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

 

 

ஹீட்டரை ஆன் செய்துவிட்டு வென்னீர் வரும் வரை பொறுத்தவள் பிரயாண அலுப்பு தீர சூடான நீரில் குளிக்கவும் உடல் வலி எல்லாம் பறந்து உடம்பு லேசாவது போல் உணர்ந்தாள்.

 

 

வெகு நேரம் கழித்து குளியலறை கதவை திறந்து அவள் எட்டிப் பார்க்க சபரீஷ் கட்டிலில் படுத்து உறங்குவது தெரிந்தது. ‘அப்பாடா தூங்கிட்டான் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள் கட்டிலின் மறுபுறம் வந்து படுத்துக் கொண்டாள்.

 

 

அவன் உறங்கி விட்டானென்று எண்ணி ரஜாய்க்குள் தன்னை அழுத்திக் கொண்டவளை நெருங்கினான் சபரீஷ். மனதிற்குள் சட்டென்று ஒரு கலவரம் சூழ அவனை பார்த்தாள்.

 

 

அவள் கண்களில் தெரிந்த கலவரமும் பயமும் அவனுள் ஏதோ செய்ய தன்னால் தான் இப்படி இருக்கிறாளா?? என்னைக் கண்டு என்ன பயம் இவளுக்கு?? என்று கேள்வியாய் யோசித்தான்.

 

 

அவன் நினைத்ததை வாய்விட்டும் அவளிடம் கேட்டான். “என்னாச்சு?? யாழினி என்னைப் பார்த்து எதுக்கு பயம் உனக்கு?? என்றான் மென்மையாக.

 

 

‘இவனுக்கு இப்படி மென்மையாக கூட பேசத் தெரியுமா?? என்ற கேள்வி அவளுக்குள் ஓட இப்போது அவனை ஆச்சரியமாய் நோக்கினாள்.

 

 

“முதல்ல பயம் இப்போ என்னை சுவாரசியமா பார்க்கற மாதிரி தெரியுது என்றான் குறும்பாய். ‘எப்படி நான் பார்க்கறதை வைச்சே கண்டுபிடிக்கிறார்?? என்று மெலிதாய் ஒரு ஆச்சரியம் அவளுக்குள் ஓட அதையும் கண்டுகொண்டு சிரித்தான்.

“பேசாமலே இருந்தா என்ன அர்த்தம் என்றவன் இப்போது அவள் மேல் படர்ந்தவாறே கேட்க அவளுக்கு பேச்சே வராமல் போனது.

 

 

‘இவன் இவ்வளவு தூரம் பேசுவானா, எப்போதும் எண்ணெயில் போட்ட கடுகு போல பொரிவானே இன்று என்ன வந்தது இவனுக்கு என்று எண்ணினாள்.

 

 

“உனக்கு விருப்பமில்லையா?? என்று அவன் கேட்டதும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போனவளின் கண்களில் மெலிதாய் நீர்ப்படலம் தோன்றியது.

 

 

விடிவிளக்கின் ஒளியில் அவள் கண்களின் ஈரத்தை கண்டுகொண்டவனுக்கு ஏதோவொரு ஏமாற்றம் தோன்ற அவளிடமிருந்து விலக நினைக்க இதற்கு மேலும் பேசாமல் இருந்தால் நன்றாயிராது என்று எண்ணியவளாய் அவள் சம்மதத்தை வாயால் கூறாமல் செய்கையில் உணர்த்தினாள்.

 

 

விலக நினைத்து எழப் போனவனை இருகரம் கொண்டு அவள் அணைக்க அவள் சம்மதம் கொடுத்த மகிழ்ச்சியில் அவள் கழுத்தில் முகம் புதைத்தவன் குனிந்து அவள் காதில்“ஏன் வாயால சொல்ல மாட்டியா?? என்றான்.

 

 

“சம்மதத்தை வாயை திறந்து தான் சொல்லணும்ன்னு இருக்கா?? செய்கையும் பார்வையும் உணர்த்தலையா?? என்றவளின் குரல் கிசுகிசுப்பாய் வர அவனுக்கு இந்த உணர்வு புதிதாய் இருந்தது.

 

 

அவளை முழுதாய் ஆக்கிரமிக்க தொடங்க அவளும் முழுமனதாய் அவனுடன் ஒன்றினாள். ஏனோ முதல் நாள் தோன்றியது போல் இன்று அவளுக்கு தோன்றவில்லை. அவள் மனம் புரிந்து நடந்தவனை சந்தோசத்துடன் பார்த்தாள்…

 

 

 

Advertisement