Advertisement

அத்தியாயம் – 5

 

 

மாத்திரையின் உதவியால் உறங்கியிருந்த யாழினி மாலையில் கண்விழிக்க சற்றே தெம்பாய் உணர்ந்தாள். எழுந்து குளியலறை சென்றவள் ஹீட்டரை ஆன் செய்து சுடுநீரில் ஒரு குளியலை போட உடலில் மிச்சமிருந்த அலுப்பும் எங்கோ பறந்தோடியது போல் உணர்ந்தாள்.

 

 

சபரீஷ் வந்துவிடுவான் என்று எண்ணியவள் பளிச்சென்ற நிறத்தில் ஒரு சேலையை எடுத்து உடுத்தினாள். அவர்கள் அறையில் இருந்து மெல்ல எட்டிப் பார்த்தவள் அப்போது தான் அந்த வீட்டையே முழுதாய் பார்த்தாள்.

 

 

என்ன தான் முதல் நாளே அவள் அந்த வீட்டிற்கு வந்திருந்தாலும் மனதில் இருந்த குழப்பங்களினால் அவள் கண்ணில் பட்ட எதுவும் கருத்தில் நிலைக்கவில்லை.

 

 

ஹாலில் யாருமேயில்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டவளின் கண்கள் அந்த வீட்டை ஆராய்ந்தது. கண்கள் அங்குமிங்கும் ஓடி அந்த வீட்டை ஒரு அலசு அலசியது. அவர்கள் அறையை ஒட்டியிருந்த அடுத்த அறை ஆராதனா அனீஷின் அறை என்பது மட்டும் அவளுக்கு உறைத்தது.

 

 

ஹாலுக்குள் அவள் நிற்க உள்ளிருந்து படிகள் மேலேறுவதை பார்த்தாள், மாடியிலும் அறைகள் இருக்கிறது போலும் என்று எண்ணியவளின் கண்கள் ஆராதனாவை தேடியது.

 

 

தோழியின் அறை பூட்டியிருந்ததால் ஒன்று அவள் உள்ளேயிருக்கலாம் அல்லது கதவை அடைத்து விட்டு வெளியே எங்கேனும் சென்று இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்.

 

 

ஏனெனில் ஆராதனாவுக்கு மதிய உறக்கம் பழக்கமில்லை என்பதை அவளறிவாள். ஹாலில் இருந்து ஒரு அறை உள்வாங்கி இருக்க அந்த வழியே சென்றவள் சமையலறையை கண்டாள்.

 

 

யாழினியும் திலகவதியும் அங்குமில்லை, ‘எங்கு தான் சென்றிருப்பார்கள்என்று யோசித்துக் கொண்டே சமையலறையை ஒட்டிய அடுத்த அறைக்குள் எட்டிப்பார்க்க அது ஸ்டோர் சாமான்கள் வைக்கும் அறை என்று புரிந்தது.

 

 

அங்கும் அவர்களை காணாதவள் அந்த அறையில் இருந்து வெளியில் வந்தாள். ‘என்ன இன்னைக்கு வீட்டை சுத்தி பார்க்கற நாளா இப்படி சுத்தல்ல விடுறாங்க என்று எண்ணியவாறே மேலும் முன்ண்டேற வெளியே எங்கோ ஆராதனாவின் குரல் கேட்டது.

 

 

ஸ்டோர் அறையை தாண்டி வெளியே செல்ல பாதை இருக்க அந்த வழியே நடந்து பின்வாசலை அடைந்தவள் வாயிலில் வந்து நிற்க அங்கு திலகவதியும் ஆராதனாவும் பின்னால் இருந்த தோட்டத்தில் பேசிக் கொண்டே பூ பறிப்பது தெரிந்தது.

 

 

‘இவ எப்படி அதுக்குள்ள இங்க செட் ஆகிட்டா, என்னமோ காலங்காலமா இங்கவே இருக்க மாதிரி எப்படி இப்படி ஒட்டிகிட்டா?? வீட்டில அம்மா ஒரு வேலை சொன்னா கூட செய்யாதவ எப்படி இப்படி இருக்கா?? என்ற ஆச்சரியம் யாழினிக்குள் எழுந்தது.

 

 

அவர்களை பற்றி யோசித்துக் கொண்டே அடுத்த படியில் இசகுபிசகாக கால் வைத்தவள் தடுமாறி ஆவென்று கத்த அங்கிருந்த மற்ற இருவரும் திரும்பி பார்த்தனர்.

 

 

“ஹேய் என்னாச்சு யாழி நீ எதுக்கு இங்க வந்த?? என்று கூறிக் கொண்டே வேகமாக அவளருகில் வந்தாள் ஆராதனா, அதற்குள் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு காலை லேசாய் தாங்கியவாறே நின்றாள் யாழினி.

 

“இல்லை இப்போ தான் தூங்கி எழுந்தேன், உங்களை தேடினேன் நீங்க காணோம் இங்க பேச்சு சத்தம் கேட்டுச்சு அதான் இங்க வந்து பார்த்தேன் என்றாள்.

 

 

“இப்போ எப்படிடாம்மா இருக்கு?? பராவாயில்லையா உனக்கு?? என்று யாழினியை பார்த்து கேட்டார் திலகவதி.

 

 

“பரவாயில்லை அத்தை, நீங்க சொன்ன மாதிரி மாத்திரை போட்டதும் ஜுரம் விட்டுப்போச்சு. நான் காலையிலே போட்டிருந்தா மதியமே ஜுரம் விட்டிருக்கும் நான் தான் போடாம விட்டுட்டேன் என்றாள்.

 

 

“சரி விடுடா என்றவர் “நீங்க ரெண்டு பேரும் மிச்ச பூவையும் பறிச்சுட்டு உள்ள வாங்க, நான் போய் உனக்கு சுக்கு தட்டி டீ போட்டு கொண்டு வர்றேன்டா, ஆராம்மா உனக்கு காபி தானேடா?? என்றார்.

 

 

“அத்தை அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் நீங்க யாழியோட பூவை பறிங்க என்றுவிட்டு யாழினியிடம் கூடையை நீட்டிவிட்டு அவர்கள் இருவரும் பேசட்டும் என்று அவர்களுக்கு தனிமை கொடுத்து உள்ளே சென்றாள் ஆராதனா.

 

 

முதலில் எப்படி அவரிடம் சகஜமாய் பேசுவது என்று தயங்கிக் கொண்டே அமைதியாய் பூவை பறித்துக் கொண்டிருந்தாள் யாழினி.

 

 

ஆராதனா இருந்தாலாவது அவளை சாக்கிட்டு அவரிடம் சகஜமாக உரையாடலாம் என்று எண்ணியிருந்த அவள் எண்ணத்தை உடைத்து தோழி உள்ளே சென்றுவிட்டிருந்தாள்.

 

 

சட்டென்று ஒரு யோசனை ஓட ஆராதனாவை முன்னிறுத்தியே திலகவதியிடம் பேச்சை ஆரம்பித்தாள் யாழினி. “என்ன அத்தை ஆரு உங்களை பேசியே கொன்னிட்டு இருக்காளா??

 

 

“எப்போதுமே இப்படி தான் அத்தை பேசியே எல்லாரையும் அவளோட வசத்துக்கு கொண்டு வந்திடுவா?? காலேஜ்ல கூட நான் எல்லார்கிட்டயும் பழக கொஞ்சம் யோசிப்பேன். அவ யோசிக்கவே மாட்டா எல்லாருமே நம்ம பிரண்ட் தான் நம்ம கிளாஸ் அப்படின்னு ஒருத்தர் விடாம போய் பேசுவா…

 

 

“இதுல நெறைய நன்மையையும் நடந்திருக்கு சில சமயம் அது அவளுக்கு சங்கடத்தையும் கொடுத்திருக்கு. அதுல இருக்க நல்லது மட்டும் எடுத்திட்டு சங்கடத்தை எல்லாம் தூக்கி போட்டு அடுத்த வேலையை பார்க்க போயிட்டே இருப்பா என்றவளின் கண்களில் தோழியை பற்றிய பெருமிதம் கலந்திருந்ததை திலகவதி கண்டுகொண்டார்.

 

 

‘இவள் தான் நினைத்ததை போலில்லை, ஆராவை போல் இல்லை என்றாலும் இவள் நிச்சயம் வேறாக நடந்துக் கொள்பவளாக அவருக்கு அக்கணம் தோன்றவில்லை

 

 

எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று அவள் தயங்குவது புரிந்து தோழியை பற்றிய பேச்சை கொண்டே அவள் ஆரம்பித்த விதம் அவருக்கு பிடித்து போனது இரண்டு மருமகள்களை நினைத்தும் பெருமை பட்டுக் கொண்டார்.

 

 

“நீ சொல்றது சரி தான்டா இந்த ஆரா இப்படி தான் பேசியே என்னை கவுத்துட்டா?? நீயும் அவளுக்கு சளைச்சவ இல்லைன்னு இப்போ எனக்கு புரியுது என்றவர் அவளை பார்த்து ஒரு மார்க்கமாய் சிரித்தார்.

 

 

‘அச்சோ அத்தை கண்டுபிடிச்சுட்டாங்க போல என்று நினைத்தவள் அவரை பார்த்து அசட்டு சிரிப்பை சிரித்தாள். “ஆராவும் அனீஷும் ஒண்ணு போலவே குணம் பேசியே காரியம் சாதிக்கறவங்க நிறுத்தினார்.

 

 

ஏனோ அவர் பேச்சை இடையில் நிறுத்தியது போல் தோன்றியது யாழினிக்கு சபரீஷை பற்றியும் அவர் ஏதும் சொல்வாரோ என்று ஆவலே வடிவாய் அவரை பார்த்தாலும் அவராய் சொல்வதை விட தான் அவனுடன் பழகி புரிந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது அவளுக்கு.

 

 

யோசனையுடனே அவள் நிமிர்ந்து அவரை பார்க்க அவர் தன்னை வித்தியாசமாய் பார்ப்பது கண்டு பார்வையை மறைத்தாள்.

 

 

“என்னடாம்மா உனக்கு சபரீஷை பத்தி கேட்கணுமா?? என்று அவள் முகத்தை பார்த்து நேராகவே கேட்டார் அவர்.

 

 

“இல்லை அத்தை என்று மறுப்பாய் தலையசைத்து சொன்னாள் யாழினி. “அப்போ நான் எதுவும் சொல்வேன்னு நீ எதிர்பார்க்கலைன்னு சொல்றியாடா?? என்று சொல்லி அர்த்தமாய் அவளை பார்த்து சிரித்தார்.

 

 

“நீங்களா சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன் அத்தை, நானா அவரை பத்தி கேட்டு தெரிஞ்சுக்கணும்ன்னு நினைக்கலை. அவரை பத்தி அவரோட பழகி தெரிஞ்சுக்க தான் விரும்பறேன்

“அதுனால தான்டா நானும் அவனை பத்தி உன்கிட்ட சொல்லலை. நீயா அவனை புரிஞ்சுக்கறது தான் நல்லது, அப்போ தான் எல்லாமே சரியா வரும். சரிவாடா உள்ள போவோம், சபரீஷ் இப்போ வந்திடுவான்

 

 

“அனீஷும் வந்ததும் நீங்க ஒண்ணா கோவிலுக்கு போயிட்டு வந்திடுங்க. அவங்க வர்றதுக்குள்ள நான் பூவை கட்டி தந்திடுறேன் என்று அவர் சொல்ல பறித்த பூக்களுடன் உள்ளே சென்றனர் இருவரும்.

 

 

யாழினிக்கு திலகவதியை பிடித்து போனது, தன் தாயிடம் கூட தோன்றியிராத ஏதோவொரு நெருக்கம் அவரை பார்த்து தோன்றியது. இருந்தும் அவளால் ஆராவை போல் அவருடன் சகஜமாக உரையாட முடியவில்லை.

 

 

உள்ளே சென்றவளுக்கோ இப்போது யோசனை சபரீஷை பற்றி தாவியது. இப்போது வந்துவிடுவார் என்று அத்தை சொன்னார்களே எப்போது வருவார் என்று அவள் மனம் ஆவலுடன் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது.

 

 

திலகவதியும் வந்திருந்த உறவினர் சிலரும் சேர்ந்து பூக்கட்ட அமர்ந்துவிட யாழினி ஆராதனாவுக்கு உதவியாக சென்றாள்.

 

 

திலகவதி சொன்னது போலவே சபரீஷ் முதலில் வீடு வந்து சேர்ந்தான். யாழினி உள்ளே ஏதோ செய்துக் கொண்டிருக்க “யாழிம்மா என்றழைத்தார் திலகவதி.

 

 

“என்னங்கத்தை?? என்றவாறே அவரெதிரில் சென்று நின்றாள் யாழினி. “சபரி வந்துட்டான்ம்மா, அவனுக்கு என்ன வேணும்ன்னு கேட்டு போய் பாருடா?? என்று கூற அவளும் அவர்கள் அறைக்குள் செல்ல திரும்பினாள்.

 

 

“ஒரு நிமிஷம்டா என்றவர் அதுவரை கட்டியிருந்த பூவை அவள் கையில் கொடுத்தார். “கோவிலுக்கு போகணும்லடா பூவை வைச்சுக்கோ என்றுவிட்டு மீதமிருந்த பூவை கட்ட ஆரம்பித்தார்.

 

 

யாழினி பூவுடன் அவர்கள் அறைக்குள் நுழைய சபரீஷ் குளியலறைக்குள் நுழைந்திருந்தான். ‘வந்தாரே என்னை தேடினாரா?? என்று லேசான சுணக்கம் தோன்றிய போதும் அதே மனமே அவளை சமாதானமும் செய்தது.

 

 

‘இவ்வளவு நாளாய் உனக்காய் தான் காத்திருந்தாரா, நீ நேற்று வந்தவள் தானே என்று அவள் மனம் எடுத்துக் கொடுக்க மனம் சற்றே சமாதானமடைந்தது.

அவன் வெளிவர காத்திருந்த நேரத்தில் திலகவதி கொடுத்த பூவை எடுத்து பின்னிய கூந்தலில் சூடிக் கொண்டாள். கண்ணாடியை பார்த்து லேசாய் ஒப்பனை செய்துக் கொண்டாள்.

 

 

ஏன் செய்துக் கொண்டாள் என்று கேட்டால் அவளுக்கே தெரியாது, இது போல் எப்போதும் அவள் செய்ததில்லை. ஏனோ சபரீஷ் முன் பளிச்சென்று இருக்க வேண்டுமென்று தோன்றியதில் அவ்வாறு செய்திருந்தாள்.

 

 

குளித்து முடித்து வெளியில் வந்த சபரீஷோ அவளை கண்டுக் கொள்ளாமல் வேறு உடையை எடுத்து போட்டுக் கொண்டவன் கையிலிருந்த டேப்பை எடுத்து கட்டிலில் வைத்துவிட்டு மடிக்கணினியை எடுத்து உசுப்பினான்.

 

 

யாழினிக்கு தான் ஏமாற்றமாக இருந்தது, அவள் உடல்நிலை பற்றியாவது கேட்பான் என்று எண்ணியிருந்தாள். ஆனால் அவனோ எனக்கென்ன என்பது போல் அவன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

“என்னங்க காபி எதுவும் வேணுமா?? என்று அவளே அவனிடம் கேட்டு விட்டாள்.

 

 

“வேண்டாம், எனக்கு வேலையிருக்கு என்னை தொல்லை பண்ணாம கொஞ்சம் நேரம் எங்காச்சும் போறியா?? என்றான் முகத்திலடித்தது போல்.

 

 

அவளால் அதற்கு மேல் பொறுமையை கடைப்பிடிக்க முடியவில்லை, “நான் உங்களை எந்தவிதத்துல தொல்லை பண்ணேன். எதுக்கு அப்படி சொல்றீங்க??

 

 

அவனோ நிமிர்ந்து பார்த்து அவளை முறைத்தான். “இப்போ எதுக்கு முறைக்கறீங்க?? உடம்பு சரியில்லாம படுத்திருந்தேனே உனக்கு இப்போ எப்படியிருக்குன்னு ஒரு வார்த்தையாச்சும் கேட்டீங்களா??

 

 

“இப்போ என்னமோ நான் உங்களை தொல்லை பண்ணுறேன்னு சொல்றீங்க?? காபி சாப்பிடுங்கன்னு அக்கறையா கேட்டது தப்பா?? உங்களுக்கு தான் என் மேல அக்கறை எதுவும் இருக்க மாதிரி தெரியலை. நானும் அப்படியே இருக்கணுமா என்ன?? என்று கேட்டாள்.

 

 

“என்ன வந்த ஒரே நாள்ல ரொம்ப பேசுற??

 

 

“நீங்க தான் எதுவுமே அவசியமா பேசலை அதான் நானாச்சும் பேசறேன் என்றாள் அவள் பதிலுக்கு.

 

 

“இப்போ என்ன வேணும் உனக்கு?? என்றான் அவன் சலிப்பாக.

 

 

“அத்தை கோவில்க்கு போகணும்னு சொன்னாங்க. உங்களுக்காக தான் காத்திட்டு இருக்கேன், நீங்க வந்ததும் இப்படி உட்கார்ந்தா எப்படி கிளம்புறதாம்??

 

 

“இப்போ என்ன கோவில்க்கு போகணும் அவ்வளோ தானே இரு. நம்ம மணி அண்ணனை வண்டி எடுக்க சொல்றேன் அவரோட போயிட்டு வந்துடு என்று அவன் எழ ‘இது உனக்கு தேவை தான் யாழி என்று அவள் தலையில் அவளே அடித்துக் கொண்டாள்.

 

 

“ஹேய் இப்போ எதுக்கு தலையில அடிச்சுக்கற அதான் உனக்கு வண்டி ஏற்பாடு பண்ணிட்டேன்ல என்றான்.

 

 

“எனக்கு வண்டி எதுவும் வேணாம் விடுங்க என்றுவிட்டு அவள் எதுவும் பேசாமல் பால்கனிக்கு சென்று நின்றுக் கொண்டாள். அவனோ தோளைக் குலுக்கிக் கொண்டு மீண்டும் அவன் வேலையில் முழ்கினான்.

 

 

‘ஏன் இப்படி இருக்கார், இவருக்கு புரியலையா இல்லை புரியாத மாதிரி நடிக்கிறாரா?? இவருக்கு தேவையான விஷயத்துல எல்லாம் சரியா தானே இருக்கார் என்று எண்ணியவளின் மனம் முன்தினத்தை நினைத்துக் கொண்டது.

 

 

‘வேற எதுவும் பிரச்சனையா இவருக்கு இல்லை எப்போமே இப்படி தானா?? என்று யோசிக்க யோசிக்க அவளுக்கு தலையை வலிக்க ஆரம்பித்தது. தன் யோசனையிலே உழன்றிருந்தவளை திலகவதி அழைக்கும் குரல் கேட்டது.

 

 

வேகமாக அவள் பால்கனியில் இருந்து அவர்கள் அறைக்குள் நுழைய திலகவதியும் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தார். அவரை கண்டதும் சபரீஷ் “என்னம்மா?? என்றான்.

 

 

“என்னடா லேப்டாப் வைச்சுட்டு உட்கார்ந்திருக்க கோவிலுக்கு கிளம்பலையா?? என்னம்மா யாழி நீ அவன்கிட்ட சொல்லலையா?? அனீஷும் வந்திட்டான், அவங்க ரெண்டு பேரும் ரெடியா இருக்காங்க. நீங்க இன்னும் ரெடி ஆகாம இருக்கீங்க?? என்றார்.

“நான் அவர்கிட்ட சொல்லிட்டேன் அத்தை. அவர் தான் கொஞ்சம் வேலையிருக்குன்னு உட்கார்ந்திருக்கார் என்றாள்.

 

 

“டேய் ஏன்டா இப்படி பண்ணுற?? எப்பவும் இருக்க மாதிரி இனிமேலும் இருக்க நினைக்காத, உனக்குன்னு பொண்டாட்டி வந்தாச்சு. உன் வேலையை எல்லாம் ஒதுக்கி அவளையும் கவனி. முதல்ல உன் லேப்டாப் எடுத்து ஓரமா வைச்சுட்டு கோவிலுக்கு போயிட்டு வா… என்றுவிட்டு அவர் வெளியேறி சென்றுவிட்டார்.

 

 

சபரீஷ் திரும்பி அவளை பார்த்து முறைக்க ‘ஆமா எப்போ பார்த்தாலும் முறைக்கிறாரு என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டாள் அவள்.

 

 

சபரீஷும் கிளம்ப எல்லோருமாக சேர்ந்து கோவிலுக்கு சென்றுவிட்டு வந்தனர். வீட்டிற்கு வந்ததும் இரவு உணவின் போது திலகவதி மறுவீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதை ஞாபகப்படுத்தினார்.

 

 

சபரீஷோ யாருக்கு வந்த விருந்தோ என்று அமைதியாய் உணவு அருந்திக் கொண்டிருந்தான். அவன் அன்னை சொன்னதை எங்கே கவனித்திருந்தான் அவன் எப்போதும் போல் ஏதோ மனக்கணக்கை போட்டுக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

 

 

அவன் அமைதியாக இருந்தது யாழினிக்கு சந்தோசமாக இருந்தது. ‘அப்போ நாளைக்கு நைட் ஊருக்கு கிளம்ப போறோமா?? அம்மா அப்பா எல்லாரும் பார்க்க போறோமா?? என்று எண்ணியவளின் மனம் உற்சாக துள்ளல் போட்டது.

 

 

மறுநாள் விடியலில் சபரீஷ் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த வேளை “என்னங்க ஊருக்கு போக டிரஸ் எல்லாம் எடுத்து வைச்சிடட்டுமா?? நாம எப்படி ஊருக்கு போறோம், ட்ரைனா?? பஸ்ஸா?? இல்லை வண்டியிலேயே போறோமா??

 

 

“என்னது ஊருக்கா?? எந்த ஊருக்கு போகணும்?? என்றான் அவன் சுவாதீனமாக. யாழினிக்கு தூக்கி வாரி போட்டது.

 

 

“என்னங்க நைட் அத்தை சொன்னாங்களே, மறுவீட்டுக்கு போறதை பத்தி. எங்க வீட்டுக்கு போக வேண்டாமா?? என்றாள், ஏனோ கண்ணில் ஈரம் லேசாய் கசிய ஆரம்பித்திருந்தது.

 

 

“எனக்கு வேலை இருக்கு நீ வேணும்னா போயிட்டு வா?? என்றான் அவன்.

காலை உணவு வேளையின் போது அவன் அதையே சொல்ல யாழினி முகம் வாடியிருந்ததை ஆராதனா கண்டுக் கொண்டாள். ஆனால் இந்த விஷயத்தில் அவள் எப்படி தலையிட முடியும் என்று அவள் அமைதியாய் இருந்தாள்.

 

 

திலகவதியும் பலவாறாக சொல்லிப் பார்க்க அவனோ வேலையிருப்பதாக சொல்லிவிட யாரும் எதுவும் பேச முடியவில்லை. ஆராதனா சும்மா இல்லாமல் அனீஷின் காதில் கிசுகிசுத்தாள்.

 

 

“டேய் சபரி, உன் வேலை எல்லாம் ஒரு வாரம் கழிச்சு பார்த்துக்கோடா. நாம ஊருக்கு போயிட்டு அப்படியே ஹனிமூன் போயிட்டு வரலாம். நான் அப்படி தான் பிளான் பண்ணி வைச்சிருக்கேன்

 

 

“நீ என்னடா இப்படி குழப்பிட்டு இருக்க என்றான்.

 

 

“அனீஷ் நான் உன்கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன். எனக்கு ஹனிமூன் போக எல்லாம் நேரமில்லைன்னு. என் வேலை பத்தி உனக்கு தெரியாதா?? அப்பா அவங்களுக்கு தான் தெரியாது உங்களுக்குமா?? என்றான்.

 

 

சுந்தர்ராஜ் “ஏன் சபரி நீ வர்ற வரைக்கும் நான் பார்த்துக்க மாட்டேனா?? என்று கூற சபரீஷ் அவரை நிமிர்ந்து பார்த்தான். “அப்பா நான் பார்த்திருக்க புது கிளைன்ட் பத்தி எல்லாம் உங்களுக்கு தெரியாதுப்பா??

 

 

“இதென்ன நீங்க பிசினஸ் பண்ணிட்டு இருந்த காலம் மாதிரியா?? எவ்வளவு காம்படிஷன் இருக்குன்னு தெரியாம ஈசியா சொல்லிட்டு இருக்கீங்க என்றான்.

 

 

“இப்போ என்ன நீ வர முடியாது அதானே விடு. எதுக்கு அப்பாவை பேசிட்டு இருக்க என்று அனீஷ் கண்டிக்க அதோடு வாயை மூடிக் கொண்டான் சபரீஷ்.

 

 

திலகவதி தனியே யாழினியிடம் “நீ வேணுமின்னா ஆராவோட ஊருக்கு போயிட்டு வந்திடுடா யாருமே போகலைன்னா நல்லாயிருக்காது என்றார்.

 

 

“இல்லை அத்தை நான் மட்டும் போனா தான் தேவையில்லாம பிரச்சனை வரும். கல்யாணமாகி முதல் முதல்ல போறது ரெண்டு பேரும் சேர்ந்து வரலைன்னா எல்லாரும் தப்பா பேசுவாங்க

 

 

“அதுனால அவர்க்கு எப்போ முடியுதோ அப்போ ரெண்டு பேருமே சேர்ந்து போய்க்கறோம். இல்லன்னா இப்படியே இருந்துக்கறோம் அத்தை என்றாள்.

அவள் குரலில் எட்டிப்பார்த்த ஏக்கமும் வருத்தமும் அவருக்கு புரிந்தது. சபரீஷை பற்றி அறிந்தவர் என்பதால் அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை. மருமகளுக்காக வருந்த மட்டுமே அவரால் முடிந்தது.

 

 

சபரீஷ் அலுவலகம் கிளம்பி சென்றிருக்க யாழினிக்கோ வெறுமையாய் இருந்தது. ‘இவன் ஏன் இப்படி இருக்கிறான் வேலை முக்கியம் இல்லை என்று நான் சொல்லவில்லை ஆனால் இது போன்ற சின்ன சின்ன சம்பிரதாயங்களும் முக்கியம் தானே??

 

 

‘இப்படியே வேலை வேலை என்று இருந்தால் நாளை நமக்கென்று யாருமே இருக்க மாட்டார்களே. உறவுகளும் நமக்கு முக்கியம் தானே என்று ஏதேதோ எண்ணி குழம்பிக் கொண்டிருந்தாள்.

 

 

அவள் குழப்பத்தில் ஆராதனா உள்ளே வந்ததை கவனிக்கவில்லை. “யாழி… என்று அவள் அழைத்த பின்னே அவள் நிகழ்வுக்கு திரும்பினாள். “என்னாச்சு?? என்ன யோசனையில இருக்க?? என்றாள்.

 

 

‘இவகிட்ட சொன்னா இவளும் வருத்தப்படுவா?? சும்மா இல்லாம அட்வைஸ் வேற பண்ணுவா?? என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட யாழினி “அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை என்று முகத்தில் அடித்தது போல பேசிவிட்டு அமைதியானாள்.

 

 

“இப்போ நான் என்ன கேட்டேன்னு, இப்படி படக்குன்னு பேசுற??

 

 

“உனக்கு இப்போ என்ன வேணும்?? உனக்கு ஊருக்கு கிளம்ப வேணாமா?? போ போயி அந்த வேலையை பாரு… எப்போ பார்த்தாலும் என்னையே சுத்தி சுத்தி வர்றது என்று சிடுசிடுப்பாய் பேசிவிட்டு எழுந்து நின்றாள்.

 

 

“நீ திருந்திட்டன்னு நினைச்சு உன்கிட்ட வந்து பேசினேன் பார் என்னை நல்லா அடிச்சுக்கணும்டி. நேத்து நீ பேசினது எல்லாம் ஒண்ணா ஒரே வீட்டில இருக்கோம்ங்கறதுக்காகன்னு புரியாம இருந்துட்டேன் என்ற ஆராதனா எழுந்து வெளியில் சென்று விட்டாள்.

 

 

அவள் சென்றதும் ‘சாரிடி ஆரு உன் மேல ஏற்கனவே தேவையில்லாத கோபத்தை வளர்த்து வைச்சிருக்கேன். இப்பவும் உன்னை திட்டிட்டேன். உன்கிட்ட இப்படி பேசக் கூடாதுன்னு தான் நினைக்கிறேன், ஆனா உன் மனசு கஷ்டப்படுற மாதிரியே நடந்துக்கறேன் என்று தன்னையே நொந்துக் கொண்டாள்.

 

அனீஷ் அன்று இரவு ஊருக்கு கிளம்புவதால் மருத்துவமனையில் சின்ன சின்ன வேலைகள் எல்லாம் முடிக்க வேண்டி இருக்கிறது என்று ஆராதனாவிடம் சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டான்.

 

 

பிற்பகல் வேளையில் மாடியில் உலர்த்தியிருந்த துணிகளை எடுக்கவென யாழினி சென்றிருக்க சபரீஷ் வீட்டிற்குள் நுழைந்தான். விறுவிறுவென வந்தவன் நேராக அவர்கள் அறைக்குள் நுழைந்தான்.

 

 

அங்கு யாழினியை காணாது குளியலறை பால்கனி என்று தேடியவன் அவன் அன்னையின் முன் வந்து நின்றான். “என்னப்பா சபரி இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட!! என்றார் ஆச்சரியமாக.

 

 

“ஊருக்கு போகணும்ல என்றான் மொட்டையாக.

 

 

திலகவதியோ அவன் பதில் கேட்டு விழித்தார், “என்னப்பா சொல்ற?? காலையில என்னால வரமுடியாதுன்னு சொன்னே?? என்றார்.

 

 

“அதான் இப்போ வரேன்னு சொல்லிட்டேன்லம்மா. எங்கம்மா போய்ட்டா அவ?? என்றான் மீண்டும் மொட்டையாக.

 

 

“யாரைப்பா கேட்குற?? என்று புரிந்தும் புரியாதவர் போல் கேட்டார் அவர்.

 

 

“ஹ்ம்ம் எல்லாம் உங்க மருமகளை தான். ஊருக்கு போக வேண்டாமா?? எல்லாம் எடுத்து வைக்கணும்ல என்ற அவன் குரலே அதிகாரமாய் இருந்தது.

 

 

“சபரி ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே?? என்று அவர் ஆரம்பிக்கவும் “அம்மா போதும் சும்மா அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடாதீங்க, எனக்கு நேரமில்லை என்றான் பட்டுகத்தரித்தார் போல்.

 

 

அதற்கு மேல் அவனிடம் எதுவும் பேச நினைக்கவில்லை அப்பெண்மணி உள்ளுர வலித்த போதும் அமைதியாகி போனார் அவர். “யாழினி மேல துணி எடுக்க போயிருக்கா?? என்று பதில் சொல்லிவிட்டு தன் வேலை முடிந்தது என்பது போல் அவர் உள்ளே சென்றுவிட்டார்.

 

 

அவனுக்கு அவர் அப்படி நடந்துக் கொண்டது ஒரு மாதிரியாகி போனது. தன்னால் தான் அன்னை அப்படி நடந்து கொண்டார் என்பதை உணராதவன் ஒரு எரிச்சலுடன் படியேறினான் யாழினியை காண.

 

அவளோ சாவகாசமாய் ஒவ்வொரு துணியாய் கோடியில் இருந்து எடுத்து அருகில் இருந்த மதிலின் மேல் மடித்து வைத்துக் கொண்டிருந்தாள். படியேறி மாடிக்கு வந்தவனை திரும்பியிருந்த அவள் கவனிக்கவில்லை.

 

 

“யாழினி என்று அழைக்கும் குரல் கேட்கவும் திடுக்கிட்டு திரும்பி பார்க்கவும் சபரீஷ் நின்றிருந்ததை பார்த்தவள் ‘இவர் எப்படி இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டு “என்னங்க என்றாள் வெளியில்.

 

 

“இங்க என்ன பண்ணுற?? என்று தேவையே இல்லாத ஒரு கேள்வியை கேட்டான்.

 

 

“சும்மா காத்து வாங்கலாம்ன்னு வந்தேன் என்று நக்கலடித்தாள் அவள்.

 

 

ஏற்கனவே எரிச்சலில் இருந்தவன் “என்ன கொழுப்பா?? ஊருக்கு கிளம்பணும் போய் துணி எல்லாம் எடுத்து வை என்று அவன் கூறவும் அவளால் நம்பவே முடியவில்லை.

 

 

அவள் கையில் ஒரு முறை அவள் கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். ஆச்சரியத்துடன் “நிஜமாவா சொல்றீங்க!!! என்றாள்.

 

 

“ஏன் என்னை பார்த்தா உனக்கு பொய் சொல்றவன் மாதிரி இருக்கா?? என்றான் அவன்.

 

 

‘இவனை எல்லாம் எங்க இருந்து பிடிச்சாங்க?? இப்படி கொஞ்சம் கூட அனுசரணையே இல்லாம பேசுறாரே, ச்சே என்று சலித்தவள் அவனிடம் மேற்கொண்டு எந்த பேச்சு வார்த்தையும் நடத்தாமல் துணிகளை எடுத்துக் கொண்டு அவனை தாண்டி கீழே சென்றாள்.

 

 

முதலில் அன்னை இப்போது மனைவி என்று இருவரும் அவனை ஒரு பொருட்டாக மதிக்காமல் சென்றுது அவனுக்கு பிடிக்கவில்லை. அன்னை வயதில் பெரியவர் என்பதால் எதுவும் சொல்ல முடியாமல் போனது அவனால்.

 

 

யாழினியிடம் அவனால் அப்படியிருக்க முடியவில்லை. அவள் இறங்கி சென்றதும் பின்னோடு அவனும் சென்றான். “உனக்கு கொஞ்சம் கூட மேனர்ஸ்ன்னா என்னனு தெரியாதா??

 

 

“நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன், பதிலே சொல்லாம எனக்கென்னன்னு போயிட்டே இருக்க?? அவ்வளவு திமிரா உனக்கு?? என்றான் அவன்.

 

 

“நான் இப்போ என்ன பண்ணேன்னு இப்படி சொல்றீங்க?? உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் ஆகி முழுசா ரெண்டு நாள் தான் ஆகியிருக்கு. நீங்க மட்டும் என்கிட்ட எப்படி நடந்துக்கறதா உங்களுக்கு நினைப்பு என்றாள் அவனை பார்த்து.

 

 

“ஏய் ஒண்ணு சொன்னா சரிங்க இனி அப்படி செய்ய மாட்டேன்னு சொல்லு சும்மா பதிலுக்கு பதில் பேசாதே?? இந்த பேச்சை இதோட விடு, ஊருக்கு போறதுக்கு எல்லாம் எடுத்து பாக் பண்ணி வைச்சுடு

 

 

“நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வந்திடறேன் என்றான் அவன். ஏனோ அவனால் அவளிடம் ஒரேடியாக கோபத்தை காட்ட முடியவில்லை அது ஏனென்று அவனுக்கே புரியவில்லை. ஏதோ அவனே மன்னிப்பு கொடுப்பதாய் பெயர் செய்துக் கொண்டு வெளியே கிளம்பயத்தனித்தான்.

 

 

“ஒரு நிமிஷம் என்ற அவள் குரலில் திரும்பினான்.

 

 

“என்ன?? என்றான் அவளை பார்த்து.

 

 

“எத்தனை நாளைக்குன்னு ஒண்ணுமே சொல்லாம போனா எப்படி?? அப்புறம் அதுக்கு வேற என்னை வந்து எதுவும் சொல்லுவீங்க?? என்றாள்.

 

 

அவள் பேச்சில் பல்லைக்கடித்தவன் “ஒரு வாரத்துக்கு தேவைப்படும். ஊருக்கு போயிட்டு அனீஷ் ஏற்பாடுபடி ஹனிமூன் போயிட்டு தான் திரும்பி வருவோம் என்றுவிட்டு அவன் கிளம்பி சென்றுவிட்டான்.

 

 

அவன் சென்றதும் யாழினி யோசனைவயப்பட்டாள், ‘ஹனிமூனு இவரோட நானு, யாழி போன ஜென்மத்துல நீ ஏதோ பாவம் பண்ணியிருக்கடி. அதான் இப்படி கொஞ்சம் கூட ரொமான்ஸ் பண்ணத் தெரியாத ஒருத்தன் உனக்கு புருஷனா கிடைச்சிருக்கான்

 

 

‘இவனோட நான் ஹனிமூன் போய் என்ன செய்ய, அங்கயும் இப்படி தான் உம்முனாமூஞ்சி ஊறுகாய் ஜாடியா இருப்பான். இதுக்கு போகாமலே இருக்கலாம் என்று தன் நிலையை எண்ணி அவளே அவளை கேலி செய்துக் கொண்டாள். அவளெங்கே அறிவாள் தேனிலவில் அவள் வேறொரு சபரீஷை காணுவாள் என்று….

Advertisement