Advertisement

அத்தியாயம் – 6

 

 

யாழினியை ஊருக்கு கிளம்ப தேவையானவற்றை எடுத்து வைக்கச் சொல்லி விட்டு அவன் நேரே சென்றது எஸ்டி மருத்துவமனைக்கு தான். காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அவன் உள்ளே நுழையவும் அவனை முன்னமே அறிந்திருந்தவர்கள் அவனுக்கு மரியாதை செலுத்த அவனும் தலையசைத்து அதை ஏற்றவாறே உள்ளே சென்றிருந்தான்.

 

 

அனீஷின் அறைக்கு அவன் செல்ல முனைய வரவேற்ப்பில் இருந்த பெண் அவனை சார் என்றழைப்பது கேட்டு நின்றான். “சார் டாக்டர் உள்ள இல்லை ரவுண்ட்ஸ் போயிருக்கார்… என்றாள் அப்பெண்.“எப்போ வருவார்?? இப்போ தான் போனாரா?? என்றான்.

 

 

“இல்லை சார் ஒரு அவர் போய் ரொம்ப நேரமாச்சு ஒரு பத்து நிமிஷத்துல வந்திடுவார்… அதை சொல்ல தான் கூப்பிட்டேன் சார்… நீங்க டாக்டர் ரூம்ல போய் வெயிட் பண்ணுங்க சார்… என்றாள்.

“தேங்க்ஸ் என்றுவிட்டு அவன் அனீஷின் அறைக்குள் நுழைந்து ஒரு ஐந்து நிமிடம் கூட சென்றிருக்காது அனீஷ் உள்ளே வந்தான். வந்தவன் சபரீஷை கண்டு புருவத்தை ஏற்றினான்.

 

 

“என்னடா எதுக்கு அப்படி பார்க்கற?? என்றான் சபரீஷ்.

 

 

“நீ உன் வேலை எல்லாம் விட்டுட்டு அதிசயமா வந்திருக்கியே அதான் என்னன்னு பார்த்தேன்… என்னடா உடம்புக்கு எதுவும் முடியலையா?? என்றவன் அருகே வந்து அவன் நெற்றியை தொட்டு பார்த்தான்.

 

 

“டேய் எதுக்குடா இப்படி பில்டப் பண்ணுற?? எனக்கு ஒண்ணுமேயில்லை, நான் நல்லா தான் இருக்கேன்… நான் இங்க வந்தது நானும் ஊருக்கு வர்றேன்னு உன்கிட்ட சொல்ல தான் என்று தான் வந்த காரணத்தை அவனுக்கு விளக்கினான்.

 

 

“என்னடா அதிசயமா இருக்கு காலையில வரமாட்டேன்னு சொன்னே?? இப்போ வர்றேன்னு சொல்ற?? நீ சட்டுன்னு மனசை மாத்திக்கற ஆளில்லையே… என்று யோசனைக்கு தாவினான்.

 

 

“சும்மா தான் மனசு மாறிட்டேன் அதான் வர்றேன்னு சொன்னேன். இதை போய் ஒரு பெரிய விஷயமா சொல்லிட்டு என்றான்.

 

 

“நீ மனசு மாறிட்ட அதை நான் நம்பணுமா?? அடப்போடா?? என்றான் அனீஷ்.

 

 

“உன்கிட்ட மட்டும் எதையுமே மறைக்க முடியாதே?? சரி சரி சொல்றேன், நான் முதல்லையே சொல்லியிருக்கேன்ல சிமென்ட் விலை ஏத்திட்டாங்க வரியும் வேற ஏத்திட்டாங்க அதுக்கு ஸ்டிரைக் பண்ண போறோம்ன்னு

 

 

“ஆமா சொன்னே ஆனா அது நீ கல்யாணத்துக்கு முன்னாடியே வரும்ன்னு சொன்னியே?? ஓ!!! புரிஞ்சு போச்சு அது இப்போ தானா…

 

 

“ஆமா பில்டிங் அசோசியேஷன் சார்பா இன்னைக்கு தான் ஸ்டிரைக் தொடங்கியிருக்கு, அதான் வேலை எல்லாம் நிறுத்தி வைச்சு இருக்கோம். எப்படியும் ஒரு வாரம் ஆகும்ன்னு நினைக்கிறேன், அதான் நானும் ஊருக்கு வர்றதுக்கு சரின்னு சொன்னேன்

 

 

“அதானே பார்த்தேன், நீயாவது உன் வேலையை விட்டுட்டு வர்றதாவது… சரி சரி இதெல்லாம் வீட்டுல சொல்லிட்டியா இல்லையா??

“டேய் அனீஷ் அதெல்லாம் எதுவும் சொல்லாதே… நானா வந்ததா இருக்கட்டும்… சரி ஹனிமூன் போகணும் சொன்னியே எந்த ஊருக்கு??

 

 

“ஊட்டி!!!

 

 

“என்னது இங்க இருக்க ஊட்டியா?? அதுக்கா பிளான் எல்லாம் பண்ணே… நாம நினைச்சா தினமும் போய் பார்த்திட்டு வர்ற இடம் அதுக்கு நீ ப்ளான் எல்லாம் போட்டு அய்யோ!!! அய்யோ!!! என்றான் சபரீஷ்.

 

 

“டேய் ஊட்டியா இருந்தா தான்டா நாம ஒரு அவசரம்ன்னா உடனே நம்ம வேலை பார்க்க கோயம்புத்தூர் வர்றதுக்கு சரியா இருக்கும் என்றான் அனீஷ்.

 

 

“ஹ்ம்ம் நீ சொல்றதும் சரி தான் அனீஷ்… ஆனா!!! நீ அதுக்கு மட்டும் தான் ஊட்டி போகலாம்ன்னு சொன்னியா?? என்றான் சபரீஷ் கேள்வியாக.

 

 

“நீ நினைக்கிறதுக்காகவும் தான் என்றான் தம்பியின் கேள்விக்கு பதிலாய்.

 

 

“அப்போ நான் வரலை என்னால அவனை பார்க்க முடியாது என்றான் கோபமாய் மற்றவன்.

 

 

“டேய் எதுக்குடா இப்படி பேசறே அவன் யாருடா?? நீயே இப்படி பேசினா எப்படி??

 

 

“அதே தான் நானும் சொல்றேன். நாம என்னமோ பெரிய தப்பு பண்ண மாதிரி அவன் நம்மளை எவ்வளவு பேச்சு பேசினான். இப்போ கூட நம்ம கல்யாணத்துக்கு வந்தானா அவன்???

 

 

“அவன் ஏதோ ஒரு ஊர்ல இருந்தா கூட பரவாயில்லை இதோ பக்கத்துல இருக்கற ஊட்டி அவனால வரமுடியாதா??எவ்வளவு கோபம் வேணும்ன்னா இருக்கட்டும், இது ஒரு முக்கிய விசேஷம் இல்லையா??

 

 

“அதுக்கு கூட அவனால வரமுடியலைன்னா என்ன சொல்றது. எனக்கு பிடிக்கலை… நீ தான் அவனை தலையில தூக்கி வைச்சு ஆடுற?? என்றான் சபரீஷ் காட்டமாக.

 

 

“அவன் சின்ன பையன்டா நம்ம கூட பிறந்தவன் நம்ம மேல ஏதோ கோபம் விடு. நம்ம கல்யாணத்துக்கு அவன் வரலைன்னு எனக்கும் கூட அவன் மேல லேசான வருத்தம் இருக்கத்தான் செய்யுது. அதுக்காக உன்னை மாதிரி என்னால அவனை விட முடியாது. அவனை நேர்ல பார்த்து நான் கேட்கத்தான் போறேன் என்றான் ஏதோ யோசனையாக.

 

 

“அதுக்காக மட்டும் தானா இல்லை அண்ணிகளை பார்க்கணும்ன்னு எதுவும் உன்கிட்ட சொன்னானா?? அதுக்காக தான் நீ ஊட்டிக்கு பிளான் போட்டியா?? என்று முறைத்தான் சபரீஷ்.

 

 

“நீ அதெல்லாம் விடுடா… முதல்ல நாம நாகர்கோவில் போறோம். அப்புறம் அங்க ஒரு நாள் இருந்து தங்கிட்டு மறுநாள் அங்க இருந்து ஊட்டி கிளம்பறோம்

 

 

“ஊட்டின்னா வெறும் ஊட்டி மட்டும் சுத்தி பார்க்கலை… மசினகுடி போகலாம்ன்னு எல்லாம் ரெடி பண்ணிட்டேன்… சரியா சபரி இதுக்கு இடையில ஒரு நாள் சுனீஷை வரச்சொல்லலாம்னு இருக்கேன் பார்க்கறதுக்கு

 

 

“நீ என்னமோ பண்ணு எனக்கு பிடிக்கலை… நான் அவன்கிட்ட பேசுறதா இல்லை, நடக்கறது நடக்கட்டும். அவன் தான் யார் பேச்சும் கேட்கறது இல்லையே அப்புறமும் நீ ஏன் அவனை கெஞ்சிட்டு இருக்க என்றான் மீண்டும் ஆரம்பிப்பவன் போல்.

 

 

“டேய் சபரி உன்னை மாதிரி தான்டா அவனும் எனக்கு. உனக்கே தெரியும் எனக்கு அவனை பிடிக்கும்ன்னு எனக்கு மட்டும் இல்லை உனக்கும் அவனை பிடிக்கும்ன்னு எனக்கு தெரியும். அவன் நம்மை புரிஞ்சுக்குவான் சரியா?? சரி நீ கிளம்பு நான் மதியம் வீட்டுக்கு வர்றேன் என்றான் அனீஷ்.

 

 

சபரீஷ் அவனிடம் இருந்து விடைபெற்று வீட்டிற்கு கிளம்பி சென்றான். யாழினி அவளுக்கு தேவையானதை அடுக்கி வைத்தவள் அவனுக்கும் தேவையானதை எடுத்து அங்கிருந்த மற்றொரு பெட்டியில் நிரப்பினாள்.

 

 

வீட்டிற்கு வந்த சபரீஷ் இரு பெட்டியை பார்த்ததும் புருவத்தை உயர்த்தி அவளை பார்த்தான். இப்போ எதுக்கு இப்படி பார்க்குறான் என்று யோசித்துக் கொண்டே அவளும் பதிலுக்கு அவனை என்ன என்பதாய் கேள்வியாய் அவனை பார்த்தாள்.

 

 

“என்ன ரெண்டு பெட்டி எடுத்து வைச்சு இருக்க அப்படியே உங்க ஊர்லையே செட்டில் ஆகிட போறியா என்ன??

 

 

“அதுல ஒண்ணு என்னோடது இன்னொன்னு உங்களோடது!!!

 

 

“என்னது!!! என்னோடதா?? அதை எதுக்கு நீ எடுத்து வைச்ச?? என்று அவளை முறைத்தான்.

 

 

“நீங்க தானே போகும் போது டிரஸ் எல்லாம் எடுத்து வைக்க சொன்னீங்க!!! அதான் எடுத்து வைச்சேன்

 

 

“டிரஸ் எடுத்து வைக்க சொன்னேன், என்னோடது எல்லாம் உன்னை எடுத்து வைக்க சொன்னேனா?? என்று முறைத்தான்.

 

 

‘இது எனக்கு தேவை தான் போனா போகுதுன்னு எடுத்து வைச்சா இவன் பேச்சை கேட்க வேண்டியதா இருக்கே… என்று மனதிற்குள் குமைந்தாள் யாழினி.

 

 

“எனக்கு சூடா காபி வேணும், கொஞ்சம் கொண்டு வா என்று அவளை வெளியே அனுப்பிவிட்டு அவள் எடுத்து வைத்ததை ஆராய்ந்தவன் பார்வை திருப்தியாய் மாற பெட்டியை மீண்டும் அதே இருப்பிடத்தில் வைத்தான்.

 

 

வெளியே சென்றிருந்த அனீஷ் மதியமும் வீட்டிற்கு வராததால் அங்குமிங்கும் சுற்றி சுற்றி வந்த ஆராதனாஅவள் பொழுதை நெட்டி தள்ள முடியாமல் பால்கனியில் சென்று அமர்ந்தாள்.

 

 

சபரீஷ் வேறு வீட்டிலிருந்ததால் யாழினியிடமும் சென்று பேச அவளால் முடியவில்லை. திலகவதி அசதியாக இருந்ததால் உறங்க சென்றிருந்தார். அவள் மனம் அவள் கல்லூரி காலத்திற்கு செல்ல யாழினியும் அவளுமாய் அடித்த லூட்டிகள் மனதினில் வந்து உதடுகள் லேசாய் விரிந்தது சிரிப்பில்.

 

 

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாலோ அவளறியாள் பால்கனியில் கீழே அமர்ந்திருந்தவள் அங்கு சிலுசிலுப்பாய் அடித்த காற்றில் தன்னை மீறி அருகேயிருந்த சுவற்றில் சாய்ந்து உறங்க ஆரம்பித்திருந்தாள்.

 

 

உறக்கத்தில் அனீஷ் அவளருகில் அமர்ந்து அவளையே பார்ப்பது போல் தோன்ற விரிந்த புன்னகையுடன் அரைகுறையாய் கண்ணை திறந்து மீண்டும் மூடினாள் அவள்.

 

 

கண்முன் நிழலாட பட்டென்று கண்ணை மலர்த்தி பார்க்க நிஜமாகவே அனீஷ் அவளருகில் அமர்ந்து அவளையே நோக்கிக் கொண்டிருந்தான்.

சட்டென்று எழுந்து அமர்ந்தவள் அப்போது தான் பார்த்தாள், பால்கனியில் இருந்த அவள் கட்டிலில் படுத்திருப்பதை, “என்னாச்சு நீங்க எப்போ வந்தீங்க?? நான் இங்க எப்படி வந்தேன்?? என்று அவள் விழிக்க அனீஷோ அவளை கண்டு சிரித்தான்.

 

 

“கம்மி தான்… என்றான் முகத்தை சுளித்தவாறே.

 

 

“என்ன கம்மி?? என்றாள் ஆராதனா.

 

 

“உனக்கு தான் மூளை கொஞ்சம் கம்மி தான் என்று நமுட்டு சிரிப்பு சிரித்தான்.

 

 

அவளோ சிணுங்கிக் கொண்டே “ஏன் அப்படி சொல்றீங்க?? என்றாள்.

 

 

“பின்னே நீ கேள்வி கேட்குறது அப்படி தானே இருக்கு. பால்கனியில தூங்கிட்டு இருக்கவ இங்க பறந்தா வந்திருக்க முடியும் என்று கன்னம் குழிய சிரித்தான் அவன்.

 

 

அவளோ அவன் கூறியதை எல்லாம் விட்டு அவன் கன்னக்குழியையே பார்த்துக் கொண்டிருந்தாள். கைகள் தானாய் உயர்ந்து அந்த குழியை தொட்டுப் பார்க்க அதில் கிறங்கியவன் அவளை இழுத்து தன் மேல் சாய்த்துக் கொண்டான்.

 

 

“ஆமா உனக்கு அவ்வளோ பிடிச்சிருக்கா இந்த கன்னக்குழி அதிலேயே இருக்கியே?? என்றான் அவள் கழுத்தில் முகம் புதைத்தவாறே.

 

 

“அவளோ அவன் கேட்டதிற்கு பதில் சொல்லாமல் நீங்க தானே என்னை தூக்கிட்டு வந்து இங்க படுக்க வைச்சீங்க?? என்றாள்.

 

 

“அது கண்டுபிடிக்க உனக்கு இவ்வளவு நேரமா??

 

 

“என்னை எழுப்பி இருக்கலாம்ல?? எதுக்கு தூக்கிட்டு வந்து படுக்க வைச்சீங்க??

 

 

“காலை குறுக்கி புடவையை இழுத்து போர்த்திட்டு படுத்து இருந்தியா, உன் முகம் மட்டும் குட்டிப்பாப்பா போல இருந்திச்சி… உன்னை எழுப்பவே மனசு வரலை…அதான் அலேக்கா தூக்கிட்டு வந்து இங்க படுக்க வைச்சுட்டேன். தூங்குற என் பொண்டாட்டியோட அழகை ரசிச்சு பார்த்திட்டு இருந்தேன். அதுக்குள்ளே உனக்கு விழிப்பு வந்திடிச்சு

 

 

“நீங்க எப்போ வந்தீங்க?? எதுவும் சாப்பிடறீங்களா?? என்றவள் அவனிடம் இருந்து விலக முயல அவனோ மேலும் அவளை தன்னுள் இறுக்கிக் கொண்டு “எனக்கு இப்போவே சாப்பிடணும் என்று அவள் இதழை வருடினான்.

 

 

“உங்களுக்கு நேரம் காலமே கிடையாதா?? இன்னும் கொஞ்ச நேரத்துல நாம ஊருக்கு கிளம்பணும் இப்போ போய் விளையாடுறீங்க?? என்றாள் செல்லக் கோபமாய்.

 

 

“ஓ!!! அப்போ உன்னோட கவலை ட்ரைன்க்கு நேரமாகிடுமேன்னு தானா… என்றவன் ஒரு மார்க்கமாய் அவளை பார்த்து சிரிக்க அவளோ அவனிடமிருந்து விலகி எழ முயற்சிக்க அவளை இழுத்து தன் மேல் சாய்த்தவன் அவள் இதழை சிறை செய்தான்.

 

 

அன்று இரவு நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்சில் நால்வருமாய் பயணம் செய்தனர். கிளம்புமுன் அனீஷ் அன்னையிடம் ஊட்டிக்கு ஹனிமூன் போகப் போவதாக சொல்ல அவர் முகம் முதலில் மலர்ந்து பின் வாடியது.

 

 

அதை கவனித்த சபரீஷோ “என்னம்மா என்ன உங்களுக்கு இன்னும் உங்க செல்லப்பிள்ளை ஞாபகம் தானா?? அவனை பார்க்க எல்லாம் நாங்க போகலை என்றான் அவன்.

 

 

அனீஷோ “டேய் பேசாம இருக்க மாட்டியா?? என்று அவனை அதட்டியவன் அன்னையை நோக்கி “சுனீஷையும் பார்க்க தான்மா போறோம். அவனை திரும்ப இங்க கூட்டிட்டு வரவேண்டாமா?? அதுக்கு தான் என்றான் அவன்.

 

 

“வேணாம்ப்பா அவனை இங்க கூட்டிட்டு வரவேணாம்ப்பா?? என்றார் திலகவதி.

 

 

“அம்மா என்ன சொல்றீங்க நீங்க?? என்றான் அனீஷ்.

 

 

“அவனுக்கு எவ்வளவு கோபம் இருந்தாலும் நம்ம வீட்டுல ஒரு விசேஷம்ன்னு வைச்சுக்கூட அவன் வரலையேப்பா?? எனக்கு அவன் மேல கோபமிருக்கு, அதுக்கு அவன் விளக்கம் சொல்லாம அவன் இந்த வீட்டுக்கு வரமுடியாது என்றார் தீர்க்கமாய்.

 

 

“இப்போ தான் நீங்க சரியா பேசி இருக்கீங்க!!! என்று முணுமுணுப்பாய் சொல்லிவிட்டு சபரீஷ் நகர அப்போது தான் யாழினிக்கு அவனுக்கு ஒரு தம்பி இருக்கிறான் என்ற ஞாபகமே வந்தது.

 

 

ஆராதனாவோ அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று புரியாதவளாய் விழித்தாள். ரயிலில் ஏறியபின்னும் அவள் யோசனையாய் இருப்பதை கண்ட அனீஷ் “என்ன ஆரா என்ன யோசனை?? என்றான் அவன்.

 

 

“ஹ்ம்ம் ஒண்ணுமில்லை என்றாள் அவள்.

 

 

யாழினியும் தோழியையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் யோசனை என்னவாய் இருக்கும் என்று இப்போது அவளுக்குள் யோசனை குமிழியிட்டது.

 

 

அனீஷோ அத்தோடு விட்டுவிடாமல் அவள் தோளை தட்டி எழுப்பியவன் தனியே அழைத்து சென்றான். அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த யாழினிக்கு தோழியை நினைத்து சந்தோசமாக இருந்தது.

 

 

அவள் முகம் சற்றும் வாடாமல் இருக்க நினைக்கிறாரே அனீஷ் மாமா என்று மனதிற்குள் சிலாகித்தவளின் பார்வை தன்னையுமறியாமல் அருகில் அமர்ந்திருந்த சபரீஷின் மேல் பட்டது.

 

 

அவன் யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் வழக்கம் போலவே அவன் டேபை நோண்டிக் கொண்டிருந்தான். ‘இவருக்கு என்னைய கல்யாணம் பண்ணி வைச்சதுக்கு பதிலா இந்த டேபையை கல்யாணம் பண்ணி வைச்சிருக்காலம் என்று அவனை திட்டிக் கொண்டாள் மனதில்.

 

 

ஆராதனாவை அழைத்துச் சென்ற அனீஷ் கதவிற்கருகில் சென்று அவளை நிறுத்தினான். “என்ன ஆரா?? உனக்கு என்ன யோசனை?? அந்த யோசனை என்னோட தம்பி பற்றியதா?? என்று அவள் மனதில் உள்ளதை கேட்டான்.

 

 

ஆச்சரியமாய் புருவம் உயர்த்தி அவனை பார்த்தவள் “ஆமாம் என்றாள்.

 

 

“அதுல உனக்கு என்ன யோசனைன்னு எனக்கு புரியலை!!! ஏன்?? எனக்கு இன்னொரு தம்பி இருக்கற விஷயம் உனக்கு முன்னமே தெரியாதா?? யாழினி கூட இவ்வளவு யோசிக்கலையே??

 

 

“நீ யோசிக்கறது பார்த்தா உனக்கு தெரியாத மாதிரி இருக்கு, சொல்லு ஆரா உனக்கு முன்னமே தெரியாதா?? என்றான் அனீஷ்.

அவன் அப்படி கேட்டதும் ஆராதனா தன் மூளையை கசக்கி இதற்கு முன் யாராவது இதை சொல்லி இருக்கிறார்களா?? என்று யோசித்தாள். அப்போது தான் அவள் எண்ணத்தில் அது வந்து போனது.

 

 

தன்னை நினைத்து சிரித்துக் கொண்டவள் தன் தலையில் மெலிதாக குட்டிக் கொண்டாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த அனீஷோ அவள் குட்டுவதை பார்த்து அவள் கையை பிடித்தான்.

 

 

“என்ன ஆரா?? நீயா யோசிச்சே?? நீயா சிரிச்ச?? நீயா குட்டிக்கற?? என்னடா என்கிட்ட சொல்லு?? என்றான் அவன்.

 

 

அவளோ அவனுக்கு பதில் சொல்லாமல் அசட்டு தனமாய் சிரித்தாள். அனீஷுக்கு அவள் ஏதோ கிறுக்குத்தனமாய் செய்திருக்கிறாள் என்று புரிந்தது, ஆனால் அது என்னவென்று அவள் சொன்னால் தானே அவனுக்கு புரியும்.

 

 

“ஆரா இப்போ நீ சொல்லப் போறியா?? இல்லையா??

 

 

“நீங்க சிரிக்கக் கூடாது… என்று நிறுத்தினாள் அவள்.

 

 

“சிரிக்கற போல என்னடா சொல்லப் போறே?? என்றான் அவன் கேள்வியாய்.

 

 

“சிரிக்க மாட்டேன்னு சொல்லுங்க என்று அவள் அதிலேயே நின்றாள்.

 

 

“சரி சிரிக்க மாட்டேன், என்னன்னு சொல்லு?? என்றான்

 

 

“இல்லை அது வந்து… அதை எப்படி சொல்றதுன்னா??

 

 

“இப்போ நீ சொல்லப் போறியா?? இல்லையா?? ரொம்ப இழுக்கறியேம்மா??

 

 

“கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு முறை உங்க போட்டோ எனக்கு காமிக்கும் போது அம்மா சொன்னது ஞாபகம் வந்திச்சி. உங்க போட்டோவை என் கையில கொடுத்திட்டு அண்ணன் தம்பி ரெண்டு பேருன்னு சொன்னாங்க

 

 

“அதுக்கு அர்த்தம் அப்போ புரியலை இப்போ தான் புரியுது என்றுவிட்டு அடிக்கண்ணால் அவனை பார்த்தாள்.

 

 

இப்போது குழப்பம் அவனை சூழ்ந்தது. அண்ணன் தம்பி ரெண்டு பேரு என்று மனதிற்குள் சொல்லிப் பார்க்க அவள் சிரித்ததும் தலையில் குட்டிக் கொண்டதற்குமான காரணம் அவனுக்கு புரிய அவன் முகம் புன்னகையில் விரிந்தது.

 

 

“உங்கம்மா என்ன பார்த்திபனா அவர் தான் ஒரு படத்துல வடிவேலை குழப்ப இப்படி சொல்லியிருப்பார். உங்கம்மா உன்னைய குழப்ப இப்படி சொல்லியிருக்காங்க?? என்று சிரித்தான் அவன்.

 

 

“சிரிக்க மாட்டேன்னு சொன்னீங்கள்ள, அப்புறம் ஏன் சிரிக்கறீங்க?? அப்போ நானும் அதை பெரிசா யோசிக்கலை. அதுக்கு என்ன செய்ய முடியும், ஆமா உங்க தம்பிக்கும் உங்களுக்கு ஏதும் பிரச்சனையா?? என்றாள்.

 

 

“ஒரு சின்ன மனஸ்தாபம் அவ்வளவு தான், நீ அதை விடு. ஆமா அதை பத்தி பெரிசா யோசிக்கலைன்னு சொன்னியே, ஏன் யோசிக்கலை. என்னை பத்தி மட்டும் தான் யோசிச்சுட்டு இருந்தியா?? என்றவனின் கண்கள் மலர்ந்து இப்போது அவன் அவளை நெருங்கி நின்றிருந்தான்.

 

 

அவன் நெருக்கம் அவளுக்கு பதட்டத்தை கொடுக்க “அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை, வாங்க உள்ள போவோம். இது ட்ரைன் எல்லாரும் என்ன நினைப்பாங்க என்று விட்டு அவள் நகர அவள் கையை பற்றி நிறுத்தினான்.

 

 

“இது ட்ரைன் அதுனால இங்க எதுவும் வேண்டாம்ன்னு சொல்றியா?? அப்போ நாளைக்கு வீட்டுக்கு போனதும் வைச்சுக்கலாம் தானே என்று மேலும் அவளை சீண்டிவிட்டு அவளுடன் அவர்கள் இருக்கைக்கு சென்றான்.

 

 

யாழினிக்கு திரும்பி வந்த இருவரின் முக மலர்ச்சியே சொன்னது அவர்கள் அன்னியோன்னியத்தை. அனீஷ் தன் மனைவியின் யோசனையை சரி செய்து அழைத்து வந்ததை யாழினி கண்டுகொண்டாள்.

 

 

அனீஷ் பசிக்கிறது என்று கூற தோழிகள் இருவரும் கொண்டு வந்திருந்த உணவை எடுத்து தத்தம் கணவன்மாருக்கு பரிமாறினர். அனீஷோ அருகில் இருந்த தம்பியை எல்லாம் கண்டுகொள்ளாது ஆராதனாவை சீண்டி விளையாடிக் கொண்டிருந்தான்.

 

 

அவளுக்கு அவன் ஊட்டிவிட பதிலுக்கு அவளையும் ஊட்டச் சொல்லி வம்பிழுத்துக் கொண்டிருந்தான். அனீஷ் அந்த ரோவில் இருந்த மொத்த சீட்டையும் நால்வருக்காய் பதிவு செய்திருந்தான்.

“ஏன் அனீஷ்?? எதுக்கு இந்த ரோ முழுசும் நமக்கே புக் பண்ணி வைச்சிருக்க, வேஸ்ட் தானே என்றான் சபரீஷ்.

 

 

“என்னடா வேஸ்ட்?? நாமோ புதுசா கல்யாணம் ஆனவங்க எதாச்சும் பேசி சிரிச்சுட்டு இருப்போம். பக்கத்துல இருக்கவன் எல்லாம் நம்மையே பார்ப்பான். அதெல்லாம் தேவையா அதான் அப்படி பண்ணேன்

 

 

“இருந்தாலும் இது மூணாவது வகுப்பு ஏசி தானே இதுல போய்இதெல்லாம் தேவையா?? என்றான்.

 

 

“இந்த ட்ரைன்ல முதல் வகுப்பு ஏசி இருந்திருந்தா அதை தான் புக் பண்ணி இருப்பேன். அது இல்லாததால இப்படி பண்ணியிருக்கேன். அதான் எல்லாம் முடிஞ்சு போச்சுலடா இப்போ எதுக்கு அதை பேசிக்கிட்டு என்று தம்பியின் வாயை அடைத்தான் அவன்.

 

 

‘இவருக்கு தான் ரொமான்ஸ் பண்ண வராது. அவங்க பண்ணுறதும் பொறுக்காம கேள்வி கேட்குறதை பாரு என்று மனதார தன் கணவனை மீண்டும் திட்ட ஆரம்பித்தாள் யாழினி.

 

 

ஆளுக்கொரு பெர்த்தில் ஏறி படுத்துக் கொள்ள ரயிலின் லேசான குலுக்கலே தாலாட்டாய் இருக்க அவர்கள் உறங்க ஆரம்பித்தனர். அதிகாலை பொழுதில் ஆராதனா கண் விழித்து பார்த்தவள் மெதுவாய் எழுந்து அமர்ந்தாள்.

 

 

ரயில் திருநெல்வேலியை கடந்து சென்றுக் கொண்டிருந்ததை உணர்ந்தாள். சன்னலை திறந்துவிட்டு வெளியில் வேடிக்கை பார்க்கலானாள். வண்டி வள்ளியூரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

 

 

இன்னும் சில மணி நேரத்தில் தான் பிறந்து வளர்ந்த ஊருக்கு செல்லப் போகிறோம் என்ற சிலிர்ப்பே அவளுக்கு உற்சாகத்தை எழுப்பியது. ரயிலின் வேகத்தில் திறந்திருந்த சன்னலின் வழியே வந்த காற்று யாழினியையும் எழுப்பிவிட்டது.

 

 

மெல்ல கண் விழித்து பார்த்தவள் ஆராதனா எதிரில் அமர்ந்து முகம் விகசிக்க இருந்ததை கண்டுகொண்டாள். அவசரமாய் எழுந்தவள் பையில் இருந்த பிரஷை எடுத்துக் கொண்டு வாஷ்பேசினுக்கு சென்றாள்.

 

 

தோழி சென்ற பின்னே தான் ஆராதனாவுக்கு அந்த நினைவு வர அவளும் தன் பிரஷை எடுத்துக்கொண்டு தோழியின் பின்னேயே சென்றாள்.

வாய் திறந்து பேசிக் கொள்ளவில்லை என்றாலும் இருவரின் மனதிலும் தங்கள் ஊரை பற்றிய ஞாபகங்களும் தாங்கள் ஒன்றாய் ஊர் சுற்றி மகிழ்ந்த நினைவுகளும் போட்டிப் போட்டுக்கொண்டு மனதில் எழ புன்னகை மட்டுமே அவர்கள் முகத்தில் உறைந்திருந்தது.

 

 

ஒருவர் முகத்தை ஒருவர் பார்வையாலேயே வருடிக் கொண்டிருந்தனர். இருவரும் திரும்பி வரும் போது அண்ணன் தம்பி இருவரும் எழுந்து அமர்ந்திருந்தனர்.

 

 

அவர்களும் சென்று ரெப்ரெஷ் ஆகி வரவும் வண்டி வள்ளியூரை தாண்டியிருந்தது. தோழிகள் இருவரும் அந்த சில மணிகளை அமைதியாகவே கழிக்க இருவரின் முகத்தை பார்த்த அனீஷும் அவர்களை எதுவும் சொல்லாமல் அப்படியே அமர்ந்துக் கொண்டான்.

 

 

எப்போதும் போலவே சபரீஷ் அவனின் டேபை கையில் எடுத்திருந்தான். வண்டி நாகர்கோவிலை வந்தடைய ரயிலில் இருந்து இறங்கிய ஆராதனாவிற்கு ஒரு வாரம் முன்பு வரை உரிமையாய் அந்த ஊரில் சுற்றி வந்ததும் ஏனோ இன்று வெகு காலம் கழித்து அங்கு காலடி வைப்பது போன்ற ஒரு உணர்வு.

 

 

வார்த்தைகள் ஊமையாகிப் போக அவர்களை அழைத்துச் செல்ல இரு குடும்பத்தினரும் ஸ்டேஷனுக்கே வந்திருந்தனர்.

 

 

ஆராதனாவின் வீடும் யாழினியின் வீடும் சற்று தள்ளி தள்ளி இருக்க அண்ணன் தம்பி இருவரும் அவரவர் மனைவிமார்களின் வீட்டிற்கு தனித்தனியே பயணமாயினர்.

 

 

அனீஷ் தன் தம்பியைதனியே அழைத்து “சபரி நானும் பார்த்திட்டு தான் இருக்கேன், நீ ஏன் இப்படி இருக்க?? கொஞ்சம் கலகலப்பா இருக்க பாரு. யாழினி பாவமில்லையா??

 

 

“கொஞ்சம் அவங்க வீட்டு ஆளுகளோட பேசு அப்போ தான் அவளுக்கும் கொஞ்சம் சந்தோசமாயிருக்கும். நீ என்ன நினைப்பன்னு எனக்கு தெரியும், நீ எப்பவும் போல நம்ம வீட்டுல இரு

 

 

“நான் வேணாங்கலை, நீ போகப் போறது உன் மாமியார் வீடு. எல்லார்கூடவும் பேசு, அதிகபட்சம் இன்னைக்கு ஒரு நாள் தானே. நாளைக்கு காலையில நாம ஊட்டிக்கு கிளம்பிட போறோம் என்று தம்பிக்கு அறிவுரை வழங்கிவிட்டு அவன் ஆராதனாவின் வீட்டினருடன் சேர்ந்துக் கொண்டான்.

 

 

யாழினி ஆராதனாவிற்கு கண்களாலேயே விடைக் கொடுக்க அதுவரை இருவர் மனதிலும் ஓரமாய் ஒட்டியிருந்த அந்த சிறு சலனம் கூட ஓடிவிட்டது போல் இருந்தது.

 

 

தேவையில்லாமல் வறட்டு பிடிவாதம் கொண்டு ஆராதனாவிடம் பேசாமல் இருந்த யாழினியின் மடத்தனம் அவளுக்கு புரிந்தது. சில நாள் மட்டுமே விட்டு பிரிந்த ஊரை எந்தளவிற்கு அவள் தேடினாலோ அது போலவே ஆராதனாவை பிரிந்திருந்த வலி அவளுக்கு இப்போது பெரிதாய் தெரிந்தது.

 

 

அவளுடன் மீண்டும் பழையபடி பேச வேண்டும் என்ற எண்ணம் தலைத்தூக்கியது அக்கணம். ஆனால் அது இப்போதைக்கு இல்லை என்பதை அவளே அறியாள்….

Advertisement