Advertisement

அத்தியாயம் – 32

 

 

கட்டிலில் அமர்ந்திருந்த ஆராதனா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். “எதுக்கு ஆரா இப்படி பார்க்கற என்றான்.

 

 

“என்னோட புருஷன் பார்க்கறேன் என்றாள்.

 

 

“இத்தனை நாளா உனக்கு அப்படி தெரியலை போலேயே என்றதும் அவள் முகம் வாடியது.

 

 

“தெரியாம இருந்ததுக்கு தண்டனை தான் உங்களை பிரிஞ்சு கஷ்டப்பட்டேன். ஆரம்பத்துல நான் சொன்னதை கேட்கலைன்னு இருந்த கோபம் எனக்கு போகவே இல்லை

 

 

“நாளாக நாளாக நான் எதுக்காக இப்படி செஞ்சேன்னு என் மனசாட்சியே என்னை கேள்வி கேட்டு கொல்ல ஆரம்பிச்சுது. அதையெல்லாம் மறக்கடிக்கற மாதிரி திரும்பவும் விளம்பரம் எல்லாம் பார்த்ததும் என்னோட கோபம் நீறு பூத்த நெருப்பு மாதிரி ஆச்சு

 

 

“எனக்கு அப்போ தெரியலை அது நீறு பூத்த நெருப்பு இல்லை. உங்களை நான் நினைக்க வைக்கிற விஷயம்ன்னு

 

 

“நினைச்சியா??

 

 

“நெறைய!!

 

 

“உங்களை பார்க்கணும் அப்படிங்கறதுக்காகவே அந்த விளம்பரத்தை பார்ப்பேன். என்னோட போன்ல அந்த வீடியோ சேவ் பண்ணிக் கூட வைச்சிருக்கேன்

 

 

“உனக்கு இப்பவும் என் மேல அந்த விளம்பரத்தை பத்தி கோபமிருக்கா?? என்றான்.

 

 

“கோபமில்லை ஆனா ஒரு உறுத்தல் இருக்கு. நீங்க அதை தெளிவுப்படுத்திட்டா அது சரியா போய்டும் என்றதும் அவன் முகம் மீண்டும் இறுக்கமாகி பின் இளக்கமாகியது.

 

 

“எதுக்காக உறுத்தல்ன்னு தெரிஞ்சுக்கலாமா??

 

 

“எப்பவும் எனக்கு சரின்னு படறதை செய்யறது என்னோட பழக்கம். உங்ககிட்ட தப்புன்னு தோணினதை சரியோ தப்போ நான் எதிர்த்திட்டேன்

 

 

“இப்பவும் எனக்குள்ள நீங்க இந்த காசை வேற நல்ல விஷயத்துக்கு உபயோகப்படுத்தி இருக்கலாமேங்கற உறுத்தல் தான் வேற எதுவும் இல்லை

 

 

“நீங்க விளம்பரம் பண்றது தப்புங்கற எண்ணம் எல்லாம் எனக்கு எப்பவோ போச்சு

 

 

“எப்படி?? என்றான் அனீஷ். அவளை பேச வைத்து அவன் விஷயத்தை வாங்கிக் கொண்டிருந்தான்.

 

 

“யார் யாரோ எவ்வளவோ தப்பு பண்றாங்க…

 

 

“இது ஒண்ணும் பெரிய தப்பில்லைன்னு சொல்ல வர்றியா??

 

 

“நான் அப்படி சொல்லவேயில்லை. பெரிய பெரிய தப்பெல்லாம் பண்ணிட்டு நிம்மதியா நடமாடுறாங்க. உங்ககிட்ட தப்பியிருந்தா நீங்க தைரியமா முகத்தை பார்த்து பேசறவரா இருக்க மாட்டீங்கன்னு தோணிச்சு

 

 

“அதுவும் இல்லாம நீங்க கொடுக்கற ட்ரீட்மென்ட் நீங்க அதுக்கு வாங்கற பணம் எல்லாமே குறைச்சலானதுன்னு கேள்விப்பட்டேன்

 

 

“அப்போ எல்லாம் தெரிஞ்சுகிட்டு தான் என்னை நம்ப ஆரம்பிச்சியா??

 

 

“என்னங்க இப்படி கேட்கறீங்க. நான் கேள்விபட்டேன்னு சொன்னது வேற, அங்க நான் பார்த்துகிட்டு இருந்த ஆஸ்பிட்டல்ல யாரோ விசாரிச்சுட்டு இருந்தாங்க. அப்போ தான் எனக்கே தெரியும்

 

 

“அங்க இருந்த ஒண்ணு ரெண்டு பேரும் அதுக்கு ஆகற செலவு எல்லாம் பத்தி பேசினாங்க. அப்போ தான் நானா உங்களை தெரிஞ்சுக்கிட்டேன்

 

 

“உனக்கு தான் என்னை அப்போவே தெரிய ஆரம்பிச்சிருக்கே அப்புறம் ஏன் நீ என்னை தேடி வரலை

 

 

“எந்த முகத்தை வைச்சுட்டு நான் உங்களை தேடி வருவேன். மனசுக்குள்ள ஒரு சின்ன நப்பாசை என் மேலே உங்களுக்கு இருக்கிற அன்பை எனக்கு தெரியுமே

 

 

“அதை வைச்சு நீங்க என்னை தேடி வருவீங்கன்னு நான் நினைச்சுட்டேன். அப்பப்போ தலைக்காட்டின என்னோட ஈகோ எல்லாமும் சேர்ந்து உங்களை பார்க்க விடாம செஞ்சிடுச்சு

 

 

“ராஜீவ் அண்ணா வந்தப்போ கூட அவரோட வந்திருக்கலாம். ஒரு வேளை அன்னைக்கு நீங்க அவரோட வந்திருந்தா அந்த நிமிஷமே உங்களோட நான் வந்திட்டு இருப்பேங்க

 

 

“அண்ணாகிட்டையும் அதே கதை சொன்னேன் நீங்க வந்து கூட்டிட்டு வருவீங்கன்னு. அவர் வரவேயில்லைன்னா என்ன செய்வன்னு கேட்டு எங்கண்ணன் குண்டு தூக்கி போட்டான்

 

 

“அதுக்கு பிறகு தான் ரொம்ப யோசிச்சேன், எப்படி உங்களோட வர்றதுன்னு. அதுக்கு நடுவுல வந்த செக்கப்ல தான் ஆஸ்பிட்டல் விவகாரம் நடந்திச்சு கொஞ்சம் கூட யோசிக்கவேயில்லை நானு

 

 

“அந்த நேரத்துல உங்களை மட்டும் தான் நான் நினைச்சேன். உங்களுக்கு போனும் போட்டேன். எல்லாம் முடிஞ்சதும் நீங்க மட்டும் கிளம்புறேன்னு சொன்னதும் உயிரே போச்சு எனக்கு

 

 

“இனி மான ரோசம் பார்க்கக் கூடாதுன்னு தான் நானே வர்றேன்னு உங்கக்கிட்ட சொல்லி உங்க கூடவே வந்திட்டேன் என்றாள் அவள்.

 

 

“உங்களுக்கு தான் என் மேல நெறைய கோபம் போல

 

 

“நெறையன்னு சொல்லி கையை குறுக்கி காட்டாதே. கடலளவு கோபம்ன்னு சொல்லு

 

 

“நான் ஒரு வார்த்தை சொன்னா நீ போயிடுவியா அப்படியே… உன்னை போக சொல்லிட்டு நான் அமைதியா இருப்பேன்னு நீ நினைச்சியா?? ஏதோ ஒரு கோபம் அப்படி சொல்லிட்டேன்

 

 

“நீ இல்லாம ரெண்டு நாள் தனியா கான்பிரன்ஸ் போயிட்டு வர்றதுக்குள்ள நான் படுற பாடு உனக்கு தெரியாது ஆரா

“அங்கயாச்சும் வேலையிருக்கும் அதுல அலைச்சல் இருக்கும். நைட் எப்படியாச்சும் தூங்கிடுவேன். ஆனா உன்னை திட்டிட்டு ப்ளைட் ஏறுன எனக்கு உன்னை தவிர வேற நினைப்பே இல்லை தெரியுமா

 

 

“அந்த நிமிஷம் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா. உன்னை இப்போவே பார்க்கணும் கட்டிப்பிடிச்சுக்கணும். சாரிடி கோபமா ஏதோ பேசிட்டேன்னு சொல்லணும்ன்னு தோணிச்சு

 

 

“ஒரு நாள் இருந்திட்டு உடனே கிளம்பிறலாம்ன்னு நினைச்சுட்டு இருக்க நான் இறங்கின அடுத்த நிமிஷமே இடி மாதிரி செய்தி நீ வெளிய போயிட்டன்னு. ஆடிப்போயிட்டேன் தெரியுமா??

 

 

“நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. என்கிட்ட போன்ல கோபமா பேசுவ உன்னை சமாதானம் செய்யலாம்ன்னு நினைச்சுட்டு இருக்க நீ இல்லவே இல்லை வீட்டிலன்னா எனக்கு எப்படியிருக்கும்

 

 

“அப்புறம் கொஞ்ச நேரம் யோசிச்சேன். உனக்கு சுனீஷ் தவிர பெரிசா யாரும் தெரியாதுன்னு தோணிச்சு. எதாச்சும் ஒரு விதத்துல நீ அவனை காண்டக்ட் பண்ணுவேன்னு நினைச்சேன் என்றவன் அதன் பிறகு அவனும் சுனீஷுமாக சேர்ந்து செய்ததை சொல்லி முடித்தான்.

 

 

“அப்போ நான் சந்தேகப்பட்டது சரி தான். நான் இருக்கற இடம் தெரிஞ்சும் நீங்க ஏன் என்னை வந்து கூட்டிட்டு போகலை

 

 

“வீட்டை விட்டு போனது நீ, நான் உன்னை உங்க வீட்டுக்கு வேணா போன்னு தான் சொன்னேன். ஆனா சத்தியமா சொல்றேன் உன்கிட்ட ஒரு பேச்சா அதை சொல்லிட்டு போனேனே தவிர உன்னை அனுப்பற எண்ணம் எனக்கு இல்லவேயில்லை

 

 

“அப்படியிருந்திருந்தா உன் கண்ணு முன்னாடியே ராஜீவ்க்கு போன் பண்ணி சொல்லியிருப்பேனே. நீயா போனே நீயா வரணும்ன்னு நினைச்சேன், அட்லீஸ்ட் நீயா வர்றேன்னு சொல்லணும்ன்னு நினைச்சேன்

 

 

“இடையில இந்த ஆஸ்பிட்டல் விவகாரம் வரலன்னா என்னாகியிருக்குமோ தெரியலை

 

 

“எப்படியிருந்தாலும் நான் திரும்பி வந்திருப்பேன். ராஜீவ் அண்ணா சொல்லிட்டு தான் வந்தார், அவர் வரலன்னா நான் வந்து கூட்டிட்டு போவேன் என்னோட வரணும்ன்னு. நான் அவரோடகண்டிப்பா வந்திருப்பேன். ஆனா நான் அப்படி வந்திருந்தா உங்க கோபம் குறைஞ்சிருக்காதுல

 

 

“நிச்சயமா குறைஞ்சிருக்காது. இப்போ கூட எனக்கு கோபம் குறையாம தான் இருந்துச்சு. பொதுவா நான் கோபத்தை வெளிய காட்டிகறவனில்லை

 

 

“சின்ன வயசுல ஒரு முறை அம்மா சொன்னாங்க. நீ வீட்டுக்கு மூத்தவன் நீ தான் உன் தம்பிகளை அரவணைச்சு போகணும்ன்னு. அதனால விட்டு கொடுத்து பழகு கோபத்தை காட்டாதே. உன்னை பார்த்து தான் அவங்களும் கத்துக்குவாங்கன்னு சொன்னாங்க

 

 

“என்னமோ அது என்னோட நெஞ்சில பதிஞ்சு போச்சு. நீ இல்லாத வீட்டில இருக்கவும் பிடிக்கலை. கோபத்தையும் காட்ட முடியலை. எப்பவும் எதுவும் நடக்கவே நடக்காத மாதிரி ஒரு முகமூடி போட்டுக்கிட்டு தான் திரிஞ்சேன்

 

 

“பார்க்கறவங்களுக்கு கூட தோணியிருக்கும் இவனால எப்படி எதுவும் நடக்காத மாதிரி இருக்க முடியுதுன்னு. அது எவ்வளவு கஷ்டம்ன்னு அவங்களுக்கு தெரியாது

 

 

“எங்க என்னோட கோபத்தை காட்டிட்டா நீ திரும்பவும் என்னை விட்டு போயிடுவியோன்னு ஒரு பயம் எனக்கு. அதனாலேயே என்னை நான் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டேன். ஒரு வேளை நான் அப்போவே வெடிச்சு சிதறி இருந்தா நல்லதா இருந்திருக்கும்

 

 

“நான் உண்மையை சொல்லணும்ன்னா நீ வந்த பிறகு தான் நான் நானா இருந்தேன். நான் அவ்வளவு ஜாலியா இருப்பேன்னோ, எப்போ பார்த்தாலும் உன்னை கலாட்டா பண்ணி குறும்பு பண்ணிவேன்னோ நானே நினைக்கலை

 

 

“இதெல்லாம் செஞ்சேன் என்னமோ காலேஜ் படிக்கற பையன் லவ் சொல்லிட்டு அந்த பொண்ணு பின்னாடியே அலையற மாதிரி உன் பின்னாடியே சுத்தி சுத்தி வந்திருக்கேன்

 

 

“உனக்கு என் மேல பாசமிருக்குன்னு எனக்கு தெரியும். இவன் நம்மோட கணவன் அப்படிங்கற பாசம் அது. ஆனா அதையும் மீறி நீ என்னை லவ் பண்ணனும்ன்னு நினைச்சேன்

 

 

“என்னோட அன்பு உன்னை மாத்தும் நினைச்சேன். காலம் அதை உனக்கு உணர்த்தும்ன்னு நான் நினைச்சேன் அது போலவே நடந்திருச்சு. நீ யாழினிகிட்ட என்ன சொன்னியோ தெரியலை, என்னை கலங்கடிச்சு விழுந்தடிச்சு வீட்டுக்கு வரவைச்சு உன்கிட்ட கோபமா பேச வைச்சுட்டா

 

 

“நன்றியை யாழினிக்கு தான் சொல்லணும்

 

 

“கண்டிப்பா சொல்லணும் என்றாள்.

 

 

“நீ சுனீஷ் விஷயம் என்கிட்ட மறைச்சது கூட எனக்கு வருத்தம் தான் ஆரா என்றான் மனதில் உள்ளதை மறையாமல்.

 

 

“இல்லைங்க நீங்க கோபப்படுவீங்களோன்னு தான் சொல்லலை

 

 

“மனசுக்கு பிடிச்ச பொண்ணை கட்டுறது வரம். ரெண்டு பேருக்கும் பிடிச்சு அந்த கல்யாணம் நடக்கறது பெரிய வரம். அதை போய் நான் மறுப்பேன்னு உனக்கு எப்படி தோணிச்சு

 

 

“சரி அதைவிடு, நீ உறுத்தலா இருக்குன்னு சொன்னியே. அதுக்கான விளக்கத்தை சொல்லிடறேன் என்றான் அவன்.

 

 

“வேண்டாங்க தேவையில்லை என்றாள்

 

 

“சொல்லலைன்னா எனக்கு உறுத்தல் இருக்கும். உனக்கு புரியவைச்சுட்டா நல்லது தானே. நீ நினைக்கிற மாதிரி அந்த விளம்பரம் பண்ணுறது எங்க ஆஸ்பிட்டல்ல கூட்டம் சேர்க்கறதுக்கான உத்தி அது

 

 

“அந்த வரையிலும் நீ நினைச்சது சரி தான். ஆனா இதுல நீ யோசிக்க மறந்த விஷயம் என்ன தெரியுமா?? என்று நிறுத்தினான்.

 

 

என்னவென்பது போல் அவனை பார்த்தாள். “இந்த காலத்துல ஒரு நல்லது செய்யணும்ன்னா அதை சொல்லி தான் செய்ய வேண்டி இருக்கு. உண்மையாவே நீ சொன்ன மாதிரி நம்ம ஆஸ்பிட்டல்ல நெறைய சலுகைகள் உண்டு

 

 

“அது வெளிய தெரியறதுக்கு வழியா தான் அந்த விளம்பரம் செய்யப்பட்டது. இதை நீ நம்புவியோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனா அது தான் உண்மை

 

 

“இதை பார்த்து வசதி குறைஞ்சவங்க வசதி இருக்கவங்கன்னு நெறைய பேர் வந்தது என்னமோ உண்மை தான்

 

 

ஆராதனா புரியாமல் அவனை பார்த்தாள். “உனக்கு புரியற விதமாவே சொல்றேன் கேட்டுக்கோ. மன்னர்கள் காலத்துல கொட்டடிச்சு சொல்லுவாங்களே தெரியுமா

 

 

“எந்தவொரு விஷயமும் மக்களுக்கு போய் சேருறதுக்காக ஊருக்கே கொட்டடிச்சு சொல்லுவாங்க. இன்னமும் கூட கிராமங்கள்ல திருவிழா காலங்கள்ல கொட்டடிக்கற பழக்கமிருக்கு

 

 

“அந்த காலத்தில் முக்கிய விஷயங்கள் சலுகைகள் விழாக்கள் இதை அறிவிக்க கொட்டடிச்ச மாதிரி தான் இதுவும். அப்போ பறை அறைஞ்சு அறிவிச்ச விஷயம் தான் இப்போ வாட்ஸ் அப், ட்விட்டர், பேஸ் புக், டிவி விளம்பரங்களா வந்து நிற்குது

 

 

“இப்போ புரியுதா நான் என்ன சொல்ல வந்தேன்னு என்றவனின் நீண்ட விளக்கம் அவளை சற்று தெளிய வைத்தது. அவன் கூறுவது ஒரு வகையில் சரி தானே என்று மனம் அதை ஏற்றுக் கொண்டது.

 

 

“போனது எல்லாம் போகட்டும் விடு. இனி நடக்கறது நல்லதாவே நடக்கட்டும் என்றவன் ஆராதனாவின் அருகில் நெருங்கி அமர்ந்தான்.

 

 

“ஆரா… என்று மென்மையாக அழைத்தான்.

 

 

“ஹ்ம்ம்… என்றாள் அவள் முனகலாய்.

 

 

“ஒரு முத்தம் கொடுக்கட்டுமா… உனக்கு கஷ்டமாயிருக்காதே!!!

 

 

“கஷ்டமில்லாம கொடுக்க என்னோட டாக்டர் ஹஸ்பன்ட்க்கு சொல்லியா தரணும் என்றவளுக்கு வெட்கம் வந்துவிட தலை குனிந்தாள்.“நல்லா தேறிட்டீங்க ஆரா மேடம். டாக்டர் பொண்டாட்டின்னு நிருபிக்கறீங்க போல என்றவன் அதற்கு மேல் பேசவேயில்லை.

 

 

அவளை தன்புறம் திருப்பியிருந்தான். அவள் இதழ்களை தன் வசமாக்கினான். அங்கு மௌனயுத்தம் நடந்துக் கொண்டிருந்தது, வார்த்தைகள் இல்லாத யுத்தத்தில், இதழ்கள் மட்டுமே பேசிக்கொள்ளும்.

 

“ஹேய் எப்படி யாழிம்மா உனக்கு இவ்வளவு அறிவு வந்திச்சு என்று யாழினியை சிலாகித்துக் கொண்டிருந்தான் அவள் அருமை கணவன் சபரி.

 

 

அவனை பார்த்து முறைத்தவள் “என்னங்க என்னை பார்த்தா எப்படி தெரியுது என்றாள்.

 

 

“ஒரு மார்க்கமா தான் தெரியற என்றவனின் பார்வை அவளை மேலிருந்து கீழாக ஆராய்ந்ததில் அவள் உடல் கூசியது. “நான் என்ன கேட்டா நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க என்றாள்.

 

 

“சரி சரி விஷயத்துக்கு வரும். அனீஷ் இப்படி ஒரு சீன் காட்டுவான்னு உனக்கு எப்படி தெரியும். உனக்கு இந்த ESP பவர் எதுவும் இருக்கா என்றான்.

 

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. உங்கண்ணா உங்களை போல எல்லாம் இல்லை. உங்களுக்கு கோபம் வந்தா அகத்தின் அழகு அப்படியே முகத்தில தெரிஞ்சுடும். ஆனா அவர் அதெல்லாம் அடக்கியே வைச்சு பழகிட்டார்

 

 

“ஆரு சொன்னப்போ தான் புரிஞ்சுது அவர் அவ மேல இருக்கற கோபத்தை கூட வெளிப்படுத்தாம இருக்கார்ன்னு. ஒருவேளை அதை அவர் காட்டிட்டா இயல்பாகிடுவார்ன்னு நினைச்சேன். அதுக்கு தான் அவர்கிட்ட அப்படி சொன்னேன்

 

 

“நான் நினைச்ச மாதிரி தான் நடந்திச்சு. கணவன் மனைவிக்கு இடையில விட்டு கொடுத்து போகலாம் தப்பேயில்லை. ஆனா கோபமிருந்தா அதை வெளிக்காட்டிடணும் உள்ளுக்குள்ளவே வைச்சு மறுக கூடாது

 

 

“அனீஷ் மாமா ரொம்ப கஷ்டப்பட்டிருப்பார் பாவங்க அவரு. இனி ரெண்டு பேரும் நிம்மதியா இருப்பாங்க. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்குவாங்க இல்லையா

 

 

“ஹ்ம்ம் சரி தான் யாழும்மா. நீ சூப்பர் பொண்டாட்டிடி எனக்கு

 

 

“இதெல்லாம் நல்லா தான் சொல்றீங்க. இந்த அனீஷ் மாமா என்னடான்னா பொசுக்கு பொசுக்குன்னு இந்த ஆருவை தூக்குறார் நீங்களும் இருக்கீங்களே

 

 

“ஹேய் அதென்னே பொசுக்கு பொசுக்குன்னு இதுக்கு முன்னாடி இப்படி எதுவும் நிகழ்ச்சி நடந்திருக்கா என்றான் அவன்.

 

“ஆமா ஆமா நடந்திருக்கு. ஒரு நாள் வெளிய போயிட்டு பாதியில திரும்பி வந்த நானு அதை பார்த்திட்டேன். நான் பார்த்தது அவங்களுக்கு தெரியாது

 

 

“ஓ!!! என்றவன் “அதெல்லாம் இருக்கட்டும் நீ நடுவுல ஏதோ சொன்னியே??

 

 

“என்ன சொன்னேன்

 

 

“எனக்கு உன்னை தூக்க தெரியாதுன்னு எங்க நல்லா யோசிச்சு பாரு நான் உன்னை தூக்கவேயில்லையா

 

 

“எங்க இங்க இருக்கற கிட்சன்ல இருந்து தூக்கிட்டு வர்றது ஒரு சாகசமா. அவங்களை பாருங்க மாடியில இருந்து தான் தூக்கிட்டு வர்றார் எப்பவும், அது உங்களால முடியுமா என்று கிண்டல் செய்தாள் அவள்.

 

 

“நீ என் தன்மானத்தை சீண்டிட்ட, மாடி என்ன மாடி இந்த தெருவே வேடிக்கை பார்க்க உன்னை என் கையில தூக்கிட்டு போறேன் என்றவன் சட்டென்று அவளை தூக்கிவிட “அச்சோ விடுங்க

 

 

“ப்ளீஸ் நான் சும்மா சொன்னேன் விட்டுடுங்க ப்ளீஸ்… என்று அவள் அலற போகவும் “அந்த பயம் இருக்கட்டும் என்றவன் அவளை கட்டிலில் இறங்கிவிட்டு அவளின் மேல் சரிந்தான்.

 

____________________

 

 

சுனீஷ் கோயம்புத்தூருக்கு வந்தவன் நித்யாவை அங்குவிட்டு விட்டு மல்லிகாவையும் மதுவையும் ஊட்டிக்கு சென்று விட்டு வந்தான். மறுநாளே கோயம்புத்தூருக்கு அவன் திரும்பினான்.

 

 

நித்யா அவள் அலுவலகத்தில் ஒரு மாத விடுப்பு சொல்லி வந்திருந்தாள் அனீஷின் வேண்டுகோளுக்கு இணங்க. ஆராதனாவிற்கு மது, மல்லிகா செய்தது கூட ஏதோவொரு வகையில் சொந்தமாகிவிட்டது.

 

 

எந்த சொந்தமும் இல்லாமல் நித்யா அவர்களுக்கு உதவி செய்தது அனீஷை வெகுவாய் கவர்ந்தது. அதுவுமில்லாமல் உரிமையாய் அவள் அண்ணா என்று அழைத்தது அவனுக்கு பிடித்தது.

 

 

பெண் பிள்ளைகள் இல்லாத வீடு அவர்களுடையது என்பதால் ஒரு பெண் அண்ணா என்றதும் அவனுக்கு மிகப்பிடித்தது. அவளை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவளை உபசரிக்க வேண்டும் என்று எண்ணியே அவளை வரச்சொல்லியிருந்தான்.

 

 

சொந்தங்கள் இல்லாத அவளுக்கு இவ்வளவு சொந்தங்களும் உனக்கு இருக்கிறார்கள் என்று காட்ட வேண்டும் என்று நினைத்தான். சுனீஷ் அவளை பற்றி முன்னமே சொல்லியிருந்ததாலேயே அவனுக்கு நித்யாவை பற்றி தெரிந்திருந்தது.

 

 

அவள் அங்கு வந்து ஒரு வாரம் ஓடியிருக்கும். ராஜீவை குடும்பத்துடன் பெண் பார்க்க வரச்சொல்லிவிட்டான் அனீஷ். இன்னமும் விஷயத்தை நித்யாவிடம் சொல்லவில்லை யாரும்.

 

 

ஏனோ நித்யாவை அங்கிருந்த எல்லோருக்குமே பிடித்து போனது. ஒரு மகளை போலவே திலகவதியும் சுந்தரராஜும் அவளை பார்க்க ஆரம்பித்தனர். நித்யாவிற்கு சுனீஷைவிட அனீஷும் சபரியும் நெருக்கமாகியிருந்தனர்.

 

 

இன்னும் ஒரு பத்து இருபது நாள் தான் இதெல்லாம் என்று அவ்வப்போது நித்யாவிற்கு தோன்றினாலும் அவளை பொறுத்தவரை இருக்கும்வரை சந்தோசமாய் வாழ வேண்டும் என்பது தான். அந்த எண்ணத்தில் அவள் நாட்களை சந்தோசத்துடனே கழித்தாள்.

 

 

நித்யாவை தேடி அனீஷ் வந்தான். “நித்யா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்

 

 

“சொல்லுங்கண்ணா… என்ன பேசணும்?? ஆமா நான் கேட்கவே மறந்திட்டேன் இந்த சுனீஷ்க்கு எப்போ நிச்சயதார்த்தம் வைக்க போறீங்க?? நான் ஊருக்கு போறதுக்கு முன்னாடி வைச்சுட்டா நல்லா இருக்கும்ல

 

 

இல்லைனா நான் அதுக்குன்னு லீவ் போட்டு வரணும். அந்த சிடுமூஞ்சி மேனேஜர்கிட்ட வேற ஈன்னு பல்லைக்காட்டி லீவ் கேட்கணும் அதுக்கு தான் சொல்றேன் அண்ணா. சீக்கிரம் வைச்சுடுங்க என்றாள்.

 

 

“அவனுக்கு அடுத்த வாரம் நிச்சயதார்த்தத்துக்கு தேதி கொடுத்திருக்காங்க. சோ உனக்கு அந்த கவலை வேண்டாம். நீ ஏதோ பேசி குழப்புனதுல நான் பேச வந்ததை விட்டிட போறேன்

 

 

“ஹாங் சொல்லுங்கண்ணா

 

 

“என்னை உன்னோட சொந்த அண்ணனை போல தானே நினைக்குற

“எதுக்குண்ணா இவ்வளோ பெரிய பில்டப் என்ன விஷயமோ நேராவே சொல்லிடுங்க என்றாள்.

 

 

“உன்னை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை வரச் சொல்லிட்டேன், அது தான் விஷயம் என்று போட்டு உடைத்துவிட்டான் அவன்.

 

 

சபரி அப்போது அங்கு வர “என்ன என்ன சொல்றீங்க. எனக்கு கல்யாணமா??

 

 

“கல்யாணம் உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சா தான் இப்போ பெண் பார்க்க தான் வர்றாங்க. உனக்கு ஓகேன்னா இன்னைக்கே நிச்சயம் பண்ணிடலாம் என்றான்.

 

 

அவளுக்கு நம்பவே முடியவில்லை. தனக்கும் எடுத்து செய்ய ஆள் இருக்கிறார்களா என்று. அதை எண்ணிய அக்கணம் அவள் கண்களில் நீர் நிறைந்தது.

 

 

“ஹேய் நித்யா எதுக்கு கண்ணு கலங்குற. உனக்கு வேண்டாம்ன்னா விட்டிருவோம். அனீஷ் விட்டுடு என்றான் சபரி அவளை பார்த்து.

 

 

“அண்ணா இது ஆனந்த கண்ணீர்

 

 

“எதுக்கு இப்போ வந்திச்சு

 

 

“சாரி அண்ணா கண்ணு வேர்த்திடுச்சு, கர்ச்சீப் கொடுங்க துடைச்சுட்டு கொடுத்திர்றேன் என்று கலாய்த்தாள் அவள்.

 

 

“அப்போ உனக்கு ஓகே தானே

 

 

“இப்படி எனக்கு எடுத்து செய்ய யாரு இருக்காங்க

 

 

“உன்னை அப்படி சொல்ல வேணாம்ன்னு சொல்லியிருக்கோம். நாங்க எல்லாரும் இருக்கோம்

 

 

“என்னை பேச விடுங்களேன். எனக்கு இப்படி எடுத்து செய்ய உங்களை விட்டா யாரு இருக்காங்கன்னு சொல்லி முடிக்கறதுக்குள்ள முந்திகிட்டா எப்படி?? என்று கவுண்ட்டர் கொடுத்தாள் அவள்.

“உன்னை கட்டிக்கிறவன் பாடு திண்ட்டாட்டம் தான் பாவம் என்று விட்டு அனீஷும் சபரியும் நகர்ந்தனர்.

 

 

நித்யா பட்டுடுத்தி சபையில் வந்து அமர ராஜீவன் திருதிருவென்று விழித்தான். ‘என்னது இவ பொண்ணா?? என்ற ரீதியில் விழித்து வைத்தான்.

 

 

அவனுக்கு அவள் தான் பெண்ணென்று தெரியாது. அனீஷ் பெண் பார்க்கிறேன் என்றதும் அவனுக்கு தெரிந்த பெண்ணாயிருக்கும் என்று தலையை ஆட்டிவிட்டான்.

 

 

அவனருகில் வந்த அனீஷ் “என்ன ராஜீவ் பொண்ணு பிடிச்சிருக்கா?? என்றான்.

 

 

பேய் முழி முழித்த ராஜீவ் “அதை முதல்ல அந்த பொண்ணுகிட்ட கேளுங்க அனீஷ்?? அந்த பொண்ணுக்கு என்னை பிடிக்குதான்னு என்றான்.

 

 

“அதெல்லாம் அவ நாங்க யாரை சொல்றோமோ கட்டிக்கறேன்னு சொல்லிட்டா என்றான் அனீஷ்.

 

 

“நீங்க சொல்றவரை அவ கட்டிக்கலாம் இல்லைங்கல. ஆனா அது நான்னு மட்டும் அவகிட்ட ஒரு வார்த்தை சொல்லிருங்க என்றான்.

 

 

“என்னாச்சு ராஜீவ் இவ்வளவு சீரியஸ்ஸா சொல்ற மாதிரி. எதுவும் பிரச்சனையா?? என்றதும் ராஜீவ் நடந்ததை மறைக்காமல் கொட்டிவிட்டான்.

 

 

“இவ்வளவு தானா!! நான் கூட ரொம்ப பயந்துட்டேன் என்றான் அனீஷ்.

 

 

“நீங்க முதல்ல போய் அந்த பொண்ணுகிட்ட சொல்லுங்க. அந்த பொண்ணுக்கு ஓகேன்னா நான் அவங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும் என்றான்.

 

 

“நல்ல விவரமா தான் இருக்கீங்க மச்சான் என்று முதன் முறையாக ராஜீவை உரிமையுடன் உறவு சொல்லி அழைத்தான்.

 

 

“நித்யா மாப்பிள்ளையை நல்லா பார்த்துக்கோ. இவர் தான் ராஜீவ் உங்கண்ணியோட அண்ணன் என்றதும் சட்டென்று நிமிர்ந்து அவனை பார்த்தாள் அவள்.

 

 

பார்த்த மாத்திரத்தில் அவள் கை கன்னத்தை தடவியதை பார்த்ததும் ராஜீவுக்கு குற்றவுணர்ச்சியாக இருந்தது. அவன் மன்னிப்பை கண்களால் யாசிக்க அவளோ எதையும் பிரதிபலிக்கவில்லை.

 

 

“உனக்கு சம்மதமா?? என்று மீண்டும் அனீஷ் கேட்க “சம்மதம் என்றாள்.

 

 

“சரி அப்போ எழுந்திரு என்றான்.

 

 

“எங்கண்ணா?? என்றாள்.

 

 

“ராஜீவ் உன்கிட்ட ஏதோ பேசணுமாம் கூட்டிட்டு போய் பேசு

 

 

“என்னது பேசணுமா??அதெல்லாம் வேணாம்

 

 

“ஆரா, யாழினி இதெல்லாம் உங்க டிபார்ட்மெண்ட் பார்த்துக்கோங்க என்று நகர்ந்து விட்டான் அனீஷ்.

 

 

இருவருமாக சேர்ந்து அவளை ராஜீவிடம் தனியே பேச அனுப்பினர்.

 

 

உள்ளே சென்றவளுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. “சாரி நித்யா. அன்னைக்கு தெரியாம பண்ணிட்டேன். நிஜமாவே சாரி

 

 

“ஒரே விஷயத்துக்கு எத்தனை முறை சாரி சொல்லுவீங்க என்றாள்.

 

 

“அப்போ கோவமில்லைல. நிஜமாவே என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா. ஏன்னா எனக்கு பொண்ணு ராசியே இல்லை. நான் பார்க்கற பொண்ணுங்களுக்கு எல்லாம் வேற ஒருத்தர் கூட கல்யாணம் ஆகிடுது

 

 

“இது அப்படி நடக்காது என்றாள்

 

 

“நடக்காம இருக்கணும் அதான் வேணும். சரி கிளம்புவோம் என்றவன் அங்கிருந்து நகர ஆரம்பித்தவன் “மறுபடியும் கேட்கறேன்னு தப்பா நினைக்காதீங்க. உங்களுக்கு நிஜமாவே சம்மதம் தானே. திடீர்ன்னு எந்த மாப்பிள்ளையும் வந்து குதிக்க மாட்டார்ல” என்றான்.

 

 

“யாரும் வரமாட்டாங்க. எனக்குன்னு யாருமில்லை அம்மா அப்பா சின்ன வயசுலேயே போய்ட்டாங்க”

“இந்த அமேரிக்கா மாப்பிள்ளை, மாமன் மகன் அத்தை மகன்னு கூட எனக்கு யாருமில்லை. எனக்கு பார்த்த முதல் மாப்பிள்ளை நீங்க தான். எனக்கு பிடிக்காம என்கிட்ட எதையும் திணிக்க முடியாது”

 

 

“நான் சொல்றது உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கறேன். இந்த கல்யாணத்துல எனக்கு முழுசம்மதம். என்னை கேட்டீங்க நீங்க எதுவுமே சொல்லவேயில்லையே”

 

 

“எனக்கு சம்மதம் தான்” என்றவன்“சரி நான் கிளம்பறேன்” என்று நகரப் போனான்.

 

 

“ஒரு நிமிஷம் என்றாள். ராஜீவன் ‘என்ன என்பது போல் பார்த்தான் அவளை.

 

 

யோசிக்காமல் சட்டென்று அவன் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு “இப்போ நம்புவீங்களா என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிட்டாள். ராஜீவன் நிஜமாகவே விழுந்துவிட்டான் அவள் கொடுத்த சம்மதத்தில்.

 

____________________

 

 

சொந்தங்கள் அனைவரும் அங்கு ஒன்று கூடியிருந்தனர் சுனீஷின் திருமணத்திற்காய். வாசலில் வந்து நின்ற காரில் இருந்து ராஜீவன் நித்யாவுடன் வந்து இறங்கினான்.

 

 

“வாங்க மச்சான் வாங்க. இதான் நீங்க காலாகாலத்துல வர்றதா” என்றான் அனீஷ்.

 

 

“உங்களோட தங்கச்சி பண்ணுற அலம்பல் தான் எல்லாம். ரொம்ப கஷ்டம் அனீஷ் இவளை சமாளிக்கறது”

 

 

“நித்யா ரொம்ப நல்ல பெண்ணாச்சே நீங்க அவளை தப்பா சொல்றீங்க. நான் கேள்விபட்டது அப்படி இல்லையே நீங்க தான் நாளெல்லாம் அவ பின்னாடியே சுத்தி சுத்தி வர்றீங்கலாமே” என்றான் அனீஷ்.

 

 

“சொன்ன பேச்சை கேட்கிறதா அது சரி தான். இவ சொன்ன பேச்சை தான் நாங்க எல்லாரும் கேட்டுக்கறோம். அம்மா, பெரியம்மான்னு எல்லாரையும் வளைச்சு போட்டுட்டு என்னை டிரில் எடுக்கற அனீஷ்”

 

 

“ரெண்டு வருஷமாக போகுது எங்க கல்யாணம் முடிஞ்சு என் பேச்சை அவ கேட்கிறதில்லை. அதான் நான் அவ பேச்சை கேட்டு அவ பின்னாடி சுத்தறேன். எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டது தான் அனீஷ்” என்று அனீஷை வாரினான் ராஜீவன்.

 

 

“ஏங்க என்ன என்னை பத்தி அனீஷ் அண்ணாகிட்ட என்ன சொல்லிட்டு இருக்கீங்க??”

 

 

“நீ ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டு இருந்தேன்ம்மா”

 

 

“ஓ!! நம்பிட்டேன்!! வாங்க உள்ள போகலாம், நான் தானே இந்த சுனீஷுக்கு நாத்தனார் முடிச்சை போடணும். இல்லைன்னா அவன் பொண்ணு கழுத்துல தாலி கட்ட மாட்டான்”

 

 

“ஓ!! அதுக்கு தான் நீங்க இவ்வளவு சீக்கிரமா கிளம்பி வந்தீங்களா. நைட் ரூம்க்கு நீங்க போகும் போதே என்ன சொன்னேன் சீக்கிரமா காலையில வந்திடணும்ன்னு சொன்னேன்ல” என்று கடிந்தான் அனீஷ்.

 

 

“சரி சரி வாங்க உள்ள போவோம்” என்றுசொல்லிக்கொண்டே அவர்களையும் அழைத்துக் கொண்டு வாயிலை தாண்டி மண்டபத்திற்கு உள்ளே நுழைந்தனர் அவர்கள்.

 

 

அனீஷுக்கும் சபரிக்கும் திருமணம் நடந்த அதே மண்டபம். ஒரு புறம் திலகவதியும் சுந்தர்ராஜும் வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

 

 

மல்லிகாவும் சுஷ்மிதாவும்அவர்களும்ஒரு புறம்வரும் சொந்தங்களை வரவேற்று அமர வைத்துக் கொண்டிருந்தனர். சுஷ்மிதாவை நெருங்கிய நித்யா “மது எங்க மேல ரூம்ல இருக்காளா. இன்னும் தயாராகலையா” என்றாள். “ஆமா அக்கா போய் அழைச்சுட்டு வாங்களேன்” என்றாள் அவள்.

 

 

படியேறி மாடிக்கு செல்லும் வழியில் ஆராதனா அஸ்வந்திகாவை அழைத்துக்கொண்டு எதிரில் வந்தாள். தத்திதத்தி அம்மா கைப்பிடித்து பட்டுப்பாவாடை அணிந்து வந்த அந்த தேவதையை பார்க்க கண் கொள்ளவில்லை அவளுக்கு.

 

 

“டேய் ஸ்வீட்டி அழகு குட்டி எங்கடா கிளம்பிட்டீங்க. உங்க சித்தப்பா கல்யாணத்துக்கு டிரஸ் பண்ணியிருக்கீங்களா. தேவதை மாதிரி இருக்கடா என் குட்டி பேபி” என்று கொஞ்சிக் கொண்டே அவளை தூக்கினாள் நித்யா.

“என்ன அண்ணி எங்க படியேற போறீங்க. மாப்பிள்ளையை அழைச்சுட்டு வரணுமா??”

 

 

“ஆமா நித்யா நீ போய் அவரை சீக்கிரம் வரச்சொல்லு. இங்க நேரமாகுதுன்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. நானும்அப்போல இருந்து கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன் இன்னும் அவர் அலங்காரம் முடிக்கலை போல இதோ அதோன்னு சொல்லிட்டு இருக்கார்” என்று அலுத்தாள் ஆராதனா.

 

 

“குட்டியை நான் கூட்டிட்டு போறேன் அண்ணி” என்றுவிட்டு அவள் அஸ்வந்திகாவுடன் படியேறினாள்.

 

 

மணமகன் அறைக்கு சென்று “டேய் என்னடா எவ்வளவு நேரம் உனக்கு அலங்காரம் பண்ண டைம் எடுத்துக்குவ. ரொம்பலேட் பண்ணேன்னு வை மதுவுக்கு வேற மாப்பிள்ளை பார்த்திருவோம்” என்று மிரட்டினாள்.

 

 

“ஹலோ மேடம் நீங்க கிளம்புங்க எங்களுக்கு வர தெரியும். எப்படி எப்படி மிதுவுக்கு வேற மாப்பிள்ளை பார்ப்பியா. மிது வந்து இவளை என்னன்னு கேளு” என்றாள்.

 

 

“டேய் என்னடா நடக்குது இங்க அவளும் இங்க இருக்காளா?? அடக்கடவுளேஇரு இரு கீழே போய் எல்லார்கிட்டயும் சொல்றேன்”

 

 

“போ போய் முதல்ல அவங்ககிட்ட சொல்லு” என்று அசராமல் பதில் சொன்னான் அவன்.

 

 

“என்ன நித்தி அவரை ரொம்ப மிரட்டுறா போல இருக்கு. நான் இங்க எதுக்கு வந்தேன் தெரிஞ்சுக்காம அவரை கிண்டல் பண்றியா??” என்று உள்ளிருந்து வெளியில் வந்தாள் மது.

 

 

அதற்குள் வெளியில் நின்றிருந்த கேமராமேன் “சார் மேடம் ரெடி ஆகிட்டாங்களா?? போட்டோஸ் எடுத்திடலாமா” என்றார்.

 

 

“ஓ!! இதுக்குதான் உன்னோட ரூம்க்கு மது வந்தாளா” என்று அசடு வழிந்தாள் நித்யா.

 

 

“போட்டோஸ் எடுத்ததெல்லாம் போதும். கீழே நேரமாச்சுன்னு உங்களை அழைச்சுட்டு வர சொல்றாங்க. தாலி கட்டி முடிஞ்சதும் மீதி எடுத்துக்கலாம் வாங்க” என்றாள்.

மணமக்கள் மணமேடைக்கு வர சடங்குகள் செவ்வனே நடந்து கொண்டிருக்க முதல் வரிசையின் ஓரத்தில் கையில் ஐந்து மாத குழந்தையுடன் யாழினி அமர்ந்திருந்தாள்.

 

 

சபரி அவளை நெருங்கி வந்தான் “யாழினி குழந்தை தூங்கிட்டு தானே இருக்கான். குடு நான் வைச்சுக்கறேன் நீ வேணா மேடையில கொஞ்ச நேரம் போய் நில்லு” என்றவன் அவர்களின் செல்ல மகன் யஸ்வந்த்தை கையில் தூக்கி தோளில் போட்டுக் கொண்டான்.

 

 

“ஏங்க குழந்தை எழுந்துட்டா என்னை கூப்பிடுங்க. நைட் எல்லாம் சரியாவே அவன் தூங்கலை. நேத்து ஊசி போட்டதுல இன்னும் லேசா ஜுரம் இருக்கு அவனுக்கு பார்த்துக்கோங்க” என்றவள் மேடையேறி சென்றாள்.

 

 

“கெட்டிமேளம்!! கெட்டிமேளம்!!” என்ற அய்யரின் குரல் கேட்கவும் கெட்டிமேளம் வாசிக்கப்பட சுற்றத்தார் வாழ்த்த மதுவிதாவின் கழுத்தில் மங்கலநாண் பூட்டினான் சுனீஷ்.

 

 

இருவரின் முகத்திலும் ஏதோவொரு நிம்மதி. காத்திருந்த காதல் நிறைவேறிய சந்தோசம் அவர்கள் முகத்தில்.

 

____________________

 

 

“யாழும்மா… யாழு… யாழினி…”

 

 

“எதுக்கு இப்படி என் பெயரை ஏலம் போட்டுக்கிட்டு இருக்கீங்க”

 

 

“ஏலம் போட்டா மட்டும் என்னன்னு கேட்டுடுவியா நீ??”

 

 

“சரி சொல்லுங்க என்ன??”

 

 

“என்னை பார்த்தா பாவமா இல்லையா உனக்கு”

 

 

சட்டென்று அவனை திரும்பி பார்த்தவள் “பாவமா இல்லை” என்றதும் உண்மையாகவே அவன் முகம் வாடியது.

 

 

“உனக்குஎன்னை பார்த்தா பாவமா இருக்காது தான். நீ தான் ஜாலியா அம்மா வீட்டுக்கு போயிட்டியே என்னை விட்டு. டெலிவரிக்கு போனது குழந்தையை தூக்கிட்டு இப்போ தான் நம்ம வீட்டுக்கு வந்திருக்க. உன் பக்கத்துல கூட என்னை வர விட மாட்டேங்கற”

 

 

“பாவமா இல்லையான்னு கேட்டா இல்லைன்னு வேற பதில் சொல்ற. இங்க நான் படுற அவஸ்தை எனக்கு தான் தெரியும். உனக்கென்னம்மா நீ நல்லா தூங்கு” என்றுவிட்டு திரும்பி படுத்துக்கொண்டான்.

 

 

“நான் பாவமாயில்லைன்னு தான் சொன்னேன். வேற எதுக்கும் தடை சொல்லவேயில்லையே” என்று மெதுவான குரலில் எங்கோ பார்த்து சொல்ல சபரி அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

 

 

இரவின் ஏகாந்தம் அறையை நிறைத்திருக்க கட்டிலில் அஸ்வந்திகா நிச்ராந்தியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.“ஏங்க குழந்தை தூங்கிட்டு இருக்கா, என்னை இங்க தள்ளிட்டு வந்திருக்கீங்க” என்றாள் ஆராதனா அனீஷை பார்த்து.

 

 

“அடிப்பாவி என் பொண்டாட்டியை தானே நான் கூட்டிட்டு வந்தேன். நீ தள்ளிட்டு வந்தேன்னு சொல்ற, என்னை பார்த்தா எப்படி தெரியுது”

 

 

“நிலாவை பார்க்கலாம்ன்னு கூப்பிட்டு வந்து நீங்க சேட்டை பண்றீங்கன்னு தெரியுது” என்றாள்.

 

 

“நான் நிலாவை தான் பார்த்திட்டு இருக்கேன். நீ வானத்துல இருக்கற நிலாவை பாரு. நான் என் மடியில இருக்கற இந்த நிலாவை பார்க்கறேன்” என்றான் அவன் குறும்பாய்.

 

 

எதிர்வீட்டு சன்னலில் ஒரு தலை தெரிய அங்கிருந்த அனீஷின் வில்லன் “அங்கிள் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என்றான் அவன்.

 

 

“டேய் இந்த ராத்திரி நேரத்துல கூட நீ என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியாடா. சன்னலை சாத்திட்டு படுடா” என்று விரட்டினான் அவன்.

 

 

“முதல்லஇவனை இந்த ஏரியால இருந்து காலி பண்ணணும். உன்னை கல்யாணம் பண்ணதில் இருந்து என் வழியில குறுக்க வந்திட்டே இருக்கான் அவன்”

 

 

“ஏங்க குழந்தையை போய் திட்டறீங்க”

 

 

“நம்ம கல்யாணம் நடக்கும் போது தான் அவன் சின்ன பையன் இப்போ வளர்ந்திட்டான் ஆரா”

 

 

“ஏங்க எனக்கு தூக்கம் வருது, தூங்கலாமா?? உங்க தம்பி யாழு எல்லாம் தூங்கிட்டாங்க பாருங்க. நீங்க தான் இப்படி அர்த்த ராத்திரில உட்கார்ந்து தூங்க விடாம என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க” என்றாள்.

 

 

“சபரி எப்பவும் என்னைவிட பாஸ்ட் தான்” என்று சொல்லி அவளை ஒரு மார்க்கமாய் பார்த்தான்.

 

 

“அதுல உங்களுக்கு ரொம்ப வருத்தம் போல”

 

 

“வருத்தமெல்லாம் இல்லை” என்றவன் அருகில் அமர்ந்திருந்தவளை எப்போதும் போல் கையில் தூக்கிக் கொண்டான்.

 

 

“உனக்கு வேற தூக்கம் வந்திடுச்சு வா தூங்கலாம்” என்று சொல்லி அவளை தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்தியவன் அவள் மேல் சரிந்தான்.

 

 

தாம்பத்தியத்தில் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்தும்விட்டுக்கொடுத்து வாழ்வது எந்தளவிற்கு முக்கியமோ அதுபோல் இருவருக்குமான புரிதல் மிக முக்கியம் என்பதை புரிந்து கொண்ட  தம்பதிகளின் அன்பில் எவரும் குறுக்கே நுழைந்திட முடியாது என்பதை அவர்கள் முழுதாய் உணர்ந்திருந்தனர். அவர்களின் தனிமையில் நாம் குறுக்கிடாமல் அவர்களிடம் இருந்து நாமும் விடைபெறுவோம்….

 

Advertisement