Advertisement

அத்தியாயம் – 31

 

 

‘என்னைவிட்டுட்டு போகறதுன்னா தான் அவளுக்கு சந்தோசமா!!என்ன வாழ்க்கை இது. அம்மாவோட இருக்க ஆசைப்பட்ட காலத்துல வலுக்கட்டாயமா ஹாஸ்டல்ல படிக்க வைக்கப்பட்டேன்

 

 

‘இப்போ இவளோட இருக்கணும்ன்னு ஆசைப்படுறதுக்கு தான் எனக்கு இந்த தண்டனையா. நான் விரும்புறது என் கூட இருக்கக் கூடாதுங்கறது தான் எனக்கு விதி போல என்று எண்ணிக் கொண்டவன் எதுவுமே பேசவில்லை.

 

 

ஆராதனா அனீஷ் என்ன சொல்லுவானோ என்று பார்த்தது உண்மை தான். ஆனால் அவள் பார்த்தது அவன் போக சொல்லிவிடுவானோ என்று தான். முதலிலேயே அவளை அவள் வீட்டிற்கு தானே போகச் சொன்னான்.

 

 

இப்போதும் எதுவும் சொல்லிவிட்டால் அவளால் தாங்க முடியாது போலிருந்தது. நல்லவேளையாக அவன் வாய் திறவாதிருந்ததில் அவளுக்கு நிம்மதி உண்டாக “இப்போ வேண்டாம்மா எனக்கு அலைச்சல் நல்லதில்லை

 

 

“எனக்கு ரொம்ப நேரம் கால் நீட்டி உட்கார்ந்தாலே கால் வீக்கம் வந்திடுது. நான் அங்க இருந்து இங்க வந்து திரும்ப அங்க வந்துன்னு வேண்டாம்மா அலைச்சல். பெரிம்மா நீங்க அம்மாகிட்ட சொல்லுங்களேன் என்று அவள் பெரியம்மாவையும் துணைக்கழைத்தாள் அவள்.

 

 

“அம்மா பேசாம இருக்க மாட்டீங்களா!! அவங்களே வேற ஊர்ல இருந்து இப்போ தான் வந்திருக்காங்க. நீங்க மறுபடியும் அவளை அலைய வைக்கறீங்க. பேசாம கிளம்புங்க என்று அதட்டல் போட்டு அவர்கள் வீட்டினரை அமைதிப்படுத்தினான்.

 

 

ஆராதனாவின் வீட்டை பொறுத்தவரை அனீஷின் வேலை விஷயமாய் இருவரும் வேறு ஊரில் இருந்ததாக தான் அவர்களுக்கு தெரியும் அதையே காரணம் சொல்லி ராஜீவன் நாசூக்காய் அவர்கள் வீட்டினருக்கு சொல்லி புரிய வைத்தான்.

 

 

ஏதோ யோசனை வந்தவனாய் அனீஷ் ஆராதனாவை அழைத்தான். “ஆரா உன்கிட்ட பேசணும் கொஞ்சம் உள்ள வா என்று அவன் அழைக்கவும் அவள் அகமகிழ்ந்து தான் போனாள்.

 

 

பின்னே வெகு நாளைக்கு பின்னே அவளை ஆரா என்றழைக்கிறானே அதனால் வந்த மகிழ்ச்சி தான் அவளுக்கு. அனீஷும் வேறு யோசனையில் இருந்ததால் இயல்பாய் எப்போதும் போல் அவளை அழைத்துவிட்டான்.

 

 

அவன் பின்னேயே அவளும் அறைக்கு சென்றாள். “சொல்லுங்க என்றவளிடம் “ராஜீவ்க்கு நீங்க பொண்ணு பார்க்கற மாதிரி இல்லையா என்றான் மொட்டையாக.

 

 

“திடீர்ன்னு ஏன் இப்படி கேட்கறீங்க?? எனக்கு புரியலை

 

 

“நான் தமிழ்ல தானே கேட்டேன். உங்கண்ணனுக்கு ஏன் பொண்ணு பார்க்கலைன்னு. அதுக்கு பதில் சொல்லாம ஏன் கேட்குறேன்னு கேட்குற. நான் கேட்டதுக்கு உனக்கு பதில் தெரியுமா!! தெரியாதா!! என்றான் சட்டென்று மூண்டுவிட்ட எரிச்சலில்.

 

 

“பார்த்திட்டு தான் இருக்காங்க, எங்கண்ணாக்கும் உங்களுக்கும் ஒரே வயசு தானே கிட்டத்தட்ட. எனக்கு முடிச்சுட்டு தான் பண்ணுவேன்னு அண்ணா சொன்னதால எனக்கு முதல்ல முடிச்சாங்க

 

 

“ஆனாலும் அவனுக்கு பொண்ணு தேடிட்டே தான் இருந்தாங்க. எதுவும் அமையலை என்றாள்.

 

 

“ஹ்ம்ம்… என்றவன் எதையோ யோசித்தான். மனம் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற கணக்கில் நம் வாசகர்கள் போல் அவனும் யோசிக்க அவன் நினைத்ததை அவளிடம் சொல்லியே விட்டான்.

 

 

“என்ன?? என்ன சொன்னீங்க?? நித்யாவை அண்ணனுக்கா?? என்று விழித்தாள் அவள்.

 

 

“நித்யாவை உங்க அண்ணனுக்கு தான் பார்க்கலாமான்னு கேட்டேன். உங்க வீட்டில ஜாதகம் சாதி மதம் எல்லாம் பார்ப்பாங்களா என்றான் அவன்.

 

 

“அதெல்லாம் பார்க்க மாட்டாங்க, ஆனா… என்று இழுத்தாள்.

 

 

“என்ன ஆனா… உங்கண்ணா எதுவும் சொல்லுவாரா?? ராஜீவ்கிட்ட வேணா நான் பேசவா??

 

 

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் யோசிச்சது அதுக்கில்லை. எனக்கு ஏன் இது முன்னாடியே தோணலைன்னு யோசிச்சேன் என்றாள் அவள்.

 

 

“உனக்கு தான் அப்பப்போ மூளை வேலை நிறுத்தம் செஞ்சிடுமே என்று கேலிக்குரலில் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான் அவன்.

 

 

அவனே ஆராதனாவின் குடும்பத்தினரிடம் பேசினான். நித்யா மறுவாரத்தில் வீட்டுக்கு வருவாள் என்றும் அவர்களுக்கு தோதுப்பட்ட நாளில் விருப்பமிருந்தால் வந்து பார்த்து செல்லுமாறு கூறியவன் மங்களூரில் நித்யாவுடன் எடுத்த புகைப்படத்தை அவர்களுக்கு காட்டினான்.

 

 

ஆராதனாவின் குடும்பத்தினற்கு நித்யாவை பிடித்திருந்தது. இந்த பெண்ணாவது அமைந்து விடாதா என்ற நப்பாசை அவர்களுக்கு இருக்கத் தான் செய்தது.

 

 

ஏன் அவர்களுக்கு அப்படி ஒரு எண்ணம் என்றால் ராஜீவனுக்கு பார்க்கும் பெண்கள் அனைவருக்குமே உடனேயே திருமணம் முடிந்துவிடுவது தான் அவன் ராசி.

 

 

இவன் சென்று பெண் பார்த்துவிட்டு வருவான். பெண்ணும் பிடித்துவிட்டது என்று இவர்கள் பக்கம் கூறுவார்கள். ஆனால் அப்புறம் அவனை விட நல்ல இடமாக அவர்களுக்கு தகைந்துவிட அப்பெண்களுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துவிடும்.

 

 

ஆராதனாவுக்கு திருமணம் முடிப்பதற்கு முன்பிருந்தே அவனுக்கு பெண் பார்த்துக் கொண்டிருந்தனர். அவனுக்கு பெண் பார்த்து முடிவு செய்து விட்டதும் மகளுக்கு திருமணம் முடித்துவிடலாம் என்று வீட்டினர் நினைத்திருக்க அவன் ராசிப்படி அவன் பார்த்த பெண்களுக்கு எல்லாம் மணமுடிந்து கொண்டிருந்தது.

 

 

வெளியே சென்றிருந்த ராஜீவன் வீட்டிற்குள் நுழைய சரியாக அந்நேரம் சபரியும் உள்ளே நுழைந்தான். இருவர் பார்வையும் ஒருவரை ஒருவர் ஒரு கணம் வெட்டுவதை போல பார்த்தது.

 

 

ராஜீவனால் இன்னமும் அந்த காட்சியை மறக்க முடியவில்லை அவன் கண் முன்னேயே யாழினியின் கழுத்தை பிடிக்காத குறையாக சபரி பேசியது கண் முன்னே வந்து போனது.

 

 

சபரி அவன் இறுக்கத்தை தளர்த்தி “எப்போ வந்தீங்க?? என்று கேட்டதில் சற்று ஆச்சரியம் தான் ராஜீவனுக்கு. ‘இவனுக்கு இதெல்லாம் கூட தெரியுமா என்பது போல் சபரியை பார்த்தான் அவன்.

 

 

“நல்லா இருக்கேன். நீங்க ஏன் காலையில வீட்டில இல்லை இன்னைக்கும் வேலையா?? என்று அவனும் பதிலுக்கு கேட்டான்.

 

 

“ஹ்ம்ம் ஆமா ஒரு சைட்ல ப்ராப்ளம் அங்க போயிருந்தேன் கொஞ்சம் லேட்டாகிடுச்சு பங்க்ஷன் நல்லபடியா முடிஞ்சுதா?? என்று விசாரித்தான்.

 

 

“நாம இப்படி வாசலோடவே பேசிட்டு போய்டலாமா இல்லை உள்ள போற ஐடியா இருக்கா?? என்றான் ராஜீவன்.

 

 

“சாரி ராஜீவ் நீங்க பேசிட்டே இருந்ததுல நானும் சுவாரசியமா கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டேன். வாங்க உள்ள போவோம் என்றவாறே அவன் சிரிக்க பதிலுக்கு ராஜீவனும் புன்னகைத்தான்.

 

 

இருவரும் சிரித்துக்கொண்டே வருவது அனீஷிற்கு ஆச்சரியம் தான். “உட்காருங்க ராஜீவ் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசலாமா என்றான்.

 

 

“எதுக்கு அனீஷ் இவ்வளவு பீடிகை எல்லாம்?? என்னன்னு சொல்லுங்க?? என்றான்.

 

 

“ராஜீவா மாப்பிள்ளையை இப்படி தான் பேர் சொல்லி கூப்பிடுறதா?? என்று அதட்டினார்கள் அவன் அம்மாவும் பெரியம்மாவும்.

 

 

“அத்தை நான் தான் ராஜீவை என் பேரு சொல்லி கூப்பிட சொன்னேன். எனக்கு அது தான் பிடிச்சிருக்கு. நீங்க ராஜீவை திட்டாதீங்க, என்னை வேணா திட்டுங்க என்று அவன் கூற அவர்கள் இருவரும் வாயை மூடிக் கொண்டார்கள்.

 

 

“சொல்லுங்க மாப்பிள்ளை என்ன விஷயம் என்று அவன் அன்னையும் பெரியம்மாவையும் பார்வையால் இது போதுமா என்று கேட்டுக்கொண்டே அனீஷை பார்த்தான்.

 

 

“உங்களுக்கு நான் பொண்ணு பார்க்கலாமா?? என்றான் அனீஷ்.

 

 

“ஏன் அனீஷ் நீ பொண்ணு பார்த்தா ராஜீவ் வேணாம்ன்னா சொல்லிடுவார் என்றான் சபரி இடைப்புகுந்து.

 

 

“அதானே மாப்பிள்ளை, சபரி சொல்ற மாதிரி நான் என்ன வேணாம்ன்னா சொல்லிடுவேன். நீங்க எனக்கு பொண்ணு பாருங்க ஆனா அந்த பொண்ணுக்கு வேற யாரையும் மாப்பிள்ளை பார்க்காம இருந்தா தான் எனக்கு நல்லது

 

 

இல்லைன்னா அது அந்த பொண்ணுக்கு நல்லதா போய்டும். என்கிட்ட இருந்து அந்த பொண்ணு தப்பிச்சிரும் என்று வெள்ளந்தியாய் சிரித்தான் அவன்.

 

 

“அனீஷ் பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பார்த்த மாதிரி எனக்கு தெரியலை. நீங்க அடுத்த வாரம் இங்க வந்து பொண்ணை பாருங்க. ரெண்டு பேருக்கும் பிடிச்சிட்டா கல்யாணம் பண்ணலாம் ஓகே தானே என்றான்.

 

 

“நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் அனீஷ். நான் உங்களை முழுசா நம்புறேன் என்றவனின் பார்வை தங்கையை தொட்டுச் செல்ல அவள் முகம் சுருங்கியது.

 

 

அவர்கள் விடைபெற்று சென்றுவிட வீடே வெறிச்சென்றிருந்தது. ஆராதனாவிற்கு ஏனோ அவள் தனிமைப்பட்டதாகவே தோன்றியது. இத்தனை பேர் இருந்தும் கொண்டவனின் அருகாமை இல்லாமல் அவள் பெரிதும் தவித்து போனாள்.

 

 

அவன் அருகில் இல்லாத போது நினைவுகள் மட்டுமே சுகமாய், ஆனால் அவன் அருகில் இருந்தும் இல்லாதிருப்பது அந்த நினைவுகளே பெரும் துயராய் இருந்தது அவளுக்கு.

 

 

அவனிடம் அவள் பேச முயற்சி செய்யும் போதெல்லாம் எதையாவது ஒன்றை சொல்லி அவள் வாயடைக்கச் செய்து விடுவான், அல்லது அவளுக்கு பதில் பேசாமல் அங்கிருந்து நகர்ந்துவிடுவான்.

 

 

ஆராதனாவிற்கு பேசாமல் அவனை விட்டு நிரந்தரமாய் தனித்திருந்தால் அவனுக்கும் என்னிடம் பேச வேண்டிய கஷ்டமிருக்காது என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.

 

 

இரண்டு நாட்கள் சென்றிருக்கும் அனீஷ் மருத்துவமனையில் இருக்க யாழினி அவனுக்கு அழைத்திருந்தாள். லிப்ட்டில் இருந்ததால் உடனே எடுக்க முடியவில்லை அவனால்.

அழைப்பை பார்த்ததும் ஏனோ மனம் பதற ஆரம்பித்தது. யாழினி போன் செய்கிறாளே ஆராதனாவிற்கு உடம்பு எதுவும் சரியில்லையா என்னவாகியதோ என்று எண்ணிக்கொண்டே வந்தவன் கிரவுண்ட் ப்ளோரில் இறங்கியதும் கடைசி ரிங்கில் போனை எடுத்துவிட்டான்.

 

 

“ஹலோ என்றான்.

 

 

“மாமா… ஆராதனா… ஆரு… ஆரு… என்றவளின் பேச்சில் பதட்டம் தொனித்ததோ என்றிருந்தது அவனுக்கு.

 

 

“ஆரு மறுபடியும் காணோம் மாமா… நீங்க ப்ளீஸ் கொஞ்சம் வீட்டுக்கு வாங்களேன் என்றுவிட்டு போனை வைத்துவிட்டாள் யாழினி.

 

 

அனீஷிற்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை ஆனாலும் யாழினி பொய் சொல்ல மாட்டாள் என்று தோன்ற அவன் வேலைகளை பாதியிலேயே விட்டுவிட்டு வேறு ஒருவரிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு அவசரமாய் வீட்டிற்கு கிளம்பினான்.

 

 

அங்கு வீட்டிலோ “எதுக்கு யாழி இப்படி சொன்னே?? என்றான் சபரி அவளை பார்த்து.

 

 

“எல்லாம் நல்லதுக்கு தான் என்றாள் அவள் அலட்டாமல்.

 

 

“நீ என்ன நல்லதை கண்டுட்ட எனக்கு புரியலை

 

 

“உங்களுக்கு என் மேல கோவம் வருதா??

 

 

“வருது அவனை ஏன் இப்படி அலைக்கழிக்கிறன்னு கோவம் வருது. ஆனா நீ எதையும் யோசிக்காம செய்யறவ இல்லை அதனால தான் இவ்வளவு பொறுமையா உன்கிட்ட கேட்டுட்டு இருக்கேன் சொல்லு

 

 

“நீங்க பழைய மாதிரி இருந்தா??

 

 

“இந்நேரம் உன்னோட சண்டை போட்டிருப்பேன். அதை விடு கேட்டதுக்கு பதில் சொல்லு

 

 

“உங்கண்ணனும் ஆராதனாவும் பேசணும் அதுக்கு தான்

“லூசாடி நீ… அவங்க பேசலைன்னு உனக்கு தெரியுமா??

 

 

“பேசினாங்கன்னு உங்களுக்கு தெரியுமா என்று திருப்பினாள் அவள்.

 

 

“அதெல்லாம் பேசிட்டு தான் இருக்காங்க. காலையில கூட பார்த்த தானே அனீஷ் எப்படி அண்ணியை கவனிச்சுக்கறாங்கன்னு. அப்புறம் உனக்கு என்ன சந்தேகம் அவங்க மேல அண்ணி எதுவும் உன்கிட்ட சொன்னாங்களா??

 

 

“அவங்க பேசவேயில்லைன்னு நான் சொல்லலைங்க. ஆனா இயல்பா பேசலை, உங்களுக்கு அது புரியலையா.. உங்கண்ணன் இன்னும் ஆராதனா மேல கோவமா இருக்கார்

 

 

“சரி இருந்துட்டு போகட்டும் அது அவங்க புருஷன் பொண்டாட்டி விவகாரம் நீயேன் அதுல தலையிடுற

 

 

“அது என் தோழியோட விவகாரம் அதுனால நான் தலையிடுறேன். என் கணவரோட அண்ணனுக்கு ஒரு பிரச்சனை அதுனால நான் தலையிடுறேன் போதுமா என்றாள்.

 

 

“நான் தப்புன்னு சொல்லலை. நமக்குள்ள பிரச்சனை நடந்தப்ப கூட நான் அனீஷ்கிட்ட எதுவும் சொன்னதில்லை. ஏன்னா இது நம்ம விஷயம் நாம தான் பேசி தீர்க்கணும். அது போல தானே அவங்களும், எனக்கென்னமோ நீ இந்த விஷயத்துல தலையிட்டது சரியாப்படலை

 

 

“என்னங்க சாரிங்க உங்க பேச்சை மீறுறேன்ன்னு நினைக்க வேண்டாம். உங்கண்ணன் பாவம்ங்க மனசுக்குள்ளவே வைச்சுட்டு மறுகறார். அதை வெளியில கொட்டிட்டா தான் அவர் இயல்பா இருப்பார்

 

 

“ஆரு பார்த்தீங்கள்ள!!! எப்படி இருக்கா அவ இப்போன்னு உங்களுக்கு தெரியுமா. தெரியாது. அவ செய்தது சரின்னு நான் சொல்ல மாட்டேன் தப்பு தான், அதுக்கு தண்டனை தான் இந்த பிரிவுன்னு நினைச்சுக்க வேண்டியது தான்

 

 

“ஒண்ணு உங்கண்ணா அவளை திட்டணும். இல்லை அவளா வீட்டுக்கு வரட்டும்ன்னு விட்டிருக்கணும். அவர் ரெண்டையுமே செய்யலை. அவ போன் பண்ணதுமே அவளை தேடி போய்ட்டார்

 

 

“அவ வர்றேன்னு சொன்னதும் கூட்டிட்டு வந்துட்டார். நீ தானே போன நீயே வீடு தேடி வான்னு சொல்லியிருக்க வேண்டியது தானே. அப்போவாச்சும் அவரோட கோபம் குறைஞ்சிருக்கும். அப்போவும் விட்டுட்டார், இப்போ வீட்டுக்கு கூட்டிட்டு வந்த பிறகாச்சும் அவகிட்ட பேசியிருக்கணும்

 

 

“தன்னோட கோபத்தை காட்டியிருக்கணும் அதையும் செய்யலை. ஏன்??

 

 

“ஏன்??

 

 

“ஏன்னா பயம் அவருக்கு பயம் எங்க கோவமா பேசிட்டா ஆராதனா திரும்பவும் அவரை விட்டுட்டு போய்டுவாளோன்னு நினைக்கிறார் என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மூச்சிரைக்க ஓடி வந்தான் அனீஷ்.

 

 

“யாழினி எங்… எங்கம்மா போனா எதுவும் சொல்லிட்டு போனாளா?? என்றவனின் முகத்தில் கோபம் டன்டன்னாக இருந்ததை யாழினி உணர்ந்தாள்.

 

 

“தெரியலை மாமா, நான் தற்செயலா கோவிலுக்கு போயிருக்கும் போது அவளை பார்த்தேன். திட்டி கூட்டிட்டு வந்துட்டேன், இப்போ மாடியில இருக்கா போய் பாருங்க என்று மாடியை கைக் காண்பித்தாள்.

 

 

இரண்டிரண்டு படிகளாக தாவி எறியவனின் கோபம் இன்னும் அதிகமாகியிருந்தது. யாழினியோ சபரியை பார்த்து சிரித்தாள்.

 

 

“எதுக்குடி சிரிக்குற, இப்படி வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி வைச்சிருக்கியே?? இன்னைக்கு என்ன நடக்கப் போகுதோ?? என்றான்.

 

 

“பொய்மையும் வாய்மையிடத்து நன்மை பயக்குமெனின் என்றாள்.

 

 

“குரளுக்கெல்லாம் குறைச்சலில்லைடி

 

 

“கொஞ்ச நேரத்துல பாருங்க உங்கண்ணன் நமக்கு ஒரு ஷோவே காட்டுவார். அப்போ சொல்லுவீங்க நான் சொன்னது குறைச்சலா கூடவான்னு என்று அவனுக்கு உதட்டை சுழித்து காண்பித்து உள்ளே ஓடிவிட்டாள்.

 

 

மாடியில் ஒரு மூலையில் நின்றிருந்த ஆராதனா எங்கோ சூனியத்தை வெறிப்பதை போல வெறித்துக் கொண்டிருக்க அவள் முன்னே மூச்சிரைக்க கோபத்துடன் நின்றவனை அவள் அக்கணம் எதிர்பார்க்கவேயில்லை.

 

“என்னடி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல என்றான் ஆத்திரமாக.

 

 

“என்ன சொல்றீங்க புரியலை??

 

 

“சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னேன். நான் சொன்னது உனக்கு புரியலையா?? இல்லை புரியாத மாதிரி நடிக்கறியா?? என்று இரைந்தான்.

 

 

“நிஜமாவே நீங்க ஏன் இவ்வளவு கோபமா பேசறீங்கன்னு எனக்கு புரியலை. ஆனாலும் நீங்க கேட்டதுக்கு பதில் சொல்லிடுறேன். என் மனசுல நான் உங்களை தான் நினைச்சுட்டு இருக்கேன்

 

 

“என்ன… என்ன சொன்னே திரும்பி சொல்லு

 

 

“உங்களை தான் நினைச்சுட்டு இருக்கேன்னு சொன்னேன்

 

 

“இது எப்ப இருந்து?? இப்படி எல்லாம் உனக்கு பேசக்கூட தெரியுமா??

 

 

“ஏன் இப்படி கோபமா பேசறீங்க?? உங்ககிட்ட பேசவே எனக்கு பயமாயிருக்கு. நம்ம கல்யாணம் முடிஞ்ச புதுசுல நீங்க எப்படி இருந்தீங்க?? இப்போ மட்டும் ஏன் இப்படி இருக்கீங்க?? என்று கேட்டுவிட்டாள்.

 

 

“ஏன் கேட்க மாட்டே?? இதெல்லாம் சரியா தான் உனக்கு கேட்க தெரியும். அதை விடு இப்போ நான் கேட்கறதுக்கு பதில் சொல்லு. ஏன் வீட்டை விட்டு போனே??

 

 

“அது தான் சொன்னேனே அன்னைக்கு நீங்க என்னை உங்க வீட்டுக்கு போன்னு சொன்னீங்க. உங்களுக்கு என்னை பார்க்க பிடிக்கலையோன்னு மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு

 

 

“என்னை பார்க்க பிடிக்காம தானே போக சொல்றீங்க அதுக்கு எதுக்கு நான் எங்க வீட்டுக்கு போகணும்ன்னு நினைச்சு நான் வேற எங்காச்சும் போகலாம்ன்னு நினைச்சேன் என்றாள் கண்ணீருடன்.

 

 

“சரி அன்னைக்கு போனதுக்கு விளக்கம் சொல்லிட்ட, இன்னைக்கு போனதுக்கு என்ன விளக்கம் சொல்லப் போறே?? என்றான் இன்னமும் அடங்காத கோபத்துடனே.

 

 

“என்ன சொல்றீங்க?? இன்னைக்கு நான் எங்கயும் போகவே இல்லையே?? வீட்டில தான் இருக்கேன். காலையில நானும் யாழினி அத்தை மூணு பேரும் ஈச்சனாரி கோவிலுக்கு போயிட்டு வந்தோம். அதை தவிர்த்து நாங்க எங்கயும் போகலைங்க என்றாள்.

 

 

சட்டென்று அவன் கோபமெல்லாம் வடிந்தது போலிருந்தது அவனுக்கு. ‘ஏன்?? ஏன்?? எதுக்கு யாழினி என்கிட்ட பொய் சொல்லணும் என்று யோசித்தான்.

 

 

“நான் ஒரு தரம் தப்பு பண்ணது போதாதா திரும்ப திரும்ப உங்களை கஷ்டப்படுத்த மாட்டேங்க. என்னாலையும் உங்களை விட்டுட்டு இருக்க முடியாது

 

                                            

“ஏன்??

 

 

“ஏன்னா எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. ஐ லவ் யூ என்னை பெண் பார்த்திட்டு போன மாப்பிள்ளையா உங்க மேல வராத அன்பு, நீங்க என்னை கல்யாணம் பண்ணபிறகு நான் உணராத அந்த அன்பு, நம் குழந்தையை சுமக்கும் போது நான் உணராத அன்பை எல்லாம் இந்த பிரிவு எனக்கு உணர்ந்திடுச்சுங்க

 

 

“நிஜமா தான் சொல்றேன் நம்புங்க. நம்ம முதலிரவு அன்னைக்கு என்கிட்ட நீங்க எதிர்பார்த்த அந்த விஷயம் இன்னைக்கு சொல்லிட்டேன். ரொம்ப நாளா உங்கக்கிட்ட சொல்லணும் சொல்லணும்ன்னு நினைச்சு உள்ளவே வைச்சு தவிச்சுட்டு இருந்தேன்

 

 

“நீங்க என்கிட்ட பேசாமலே போய்ட்டா நெஞ்சு வெடிச்சிடும்மோன்னு எல்லாம் பயந்தேன். எப்படியோ இன்னைக்கு சொல்லிட்டேன் என்றவளை “லூசு எதுக்கு அப்படி சொல்ற என்றவன் அவளை தன் மேல் சாய்த்துக் கொண்டான்.

 

 

தன் மேல் அவளுக்கு பாசமும் அக்கறையும் இருந்ததை அவனறிவான். ஆனால் இன்று தான் அவன் மேல் அவளுக்கு காதலும் இருப்பதை அறிகிறான். அதுவே அவன் கோபத்தை மொத்தமாய் அடித்து சென்றுவிட்டது.

 

 

“கீழே போகலாமா என்றான் அவள் காதில். அவள் தலையசைக்க கொஞ்சமும் யோசிக்காமல் அவளை சட்டென்று கைகளில் தூக்கிக் கொண்டான்.

 

 

“அச்சோ என்னங்க இது விடுங்க நானே வர்றேன்

“என் பொண்டாட்டி நான் தூக்கிட்டு போறேன் என்றான் அவன். “இல்லை நான் ரொம்ப வெயிட் எங்க ரெண்டு பேரையும் தூக்கறது கஷ்டம் என்றாள் அவள்.

 

 

“காலம் முழுக்க உங்க ரெண்டு பேரையும் தூக்கி சுமக்க போறவனுக்கு இது ஒண்ணும் பெரிய சுமையில்லை என்றவாறே நடக்க ஆரம்பித்தான். ஆராதனாவுக்கு சந்தோசமாக இருந்தது அவளின் பழைய அனீஷ் திரும்பி விட்டிருந்தான்.

 

 

எதிர்வீட்டு சிறுவன் எட்டி பார்த்தான். “அங்கிள் என்னாச்சு அவங்களை தூக்கிட்டு போறீங்க என்றான்.

 

 

“உங்க ஆன்ட்டிக்கு கால் வலிக்குதுன்னு சொன்னாங்கடா அதான் தூக்கிட்டு போறேன்

 

 

“உங்களுக்கு எதுக்கு அங்கிள் கஷ்டம் நான் வேணா தூக்கிக்கறேன் என்றான் அவன் பெரிய மனிதன் போல். “டேய் நீ தான்டா எனக்கு நிஜ வில்லன் உன்னை அப்புறம் கவனிச்சுக்கறேன் என்றவன் கீழே இறங்கினான்.

 

 

“ஏங்க இறக்கி விடுங்க மாமா, அத்தை எல்லாம் இருப்பாங்க என்றாள் ஆராதனா. “இருக்கட்டும் நான் இப்படி தான் தூக்கிட்டு வருவேன் என்று வீம்பு பிடித்தான் அவன்.

 

 

எதேச்சையாக வெளியே வருவது போல வந்த யாழினி சபரியை அழைத்து அதைக்காட்ட சபரிக்கு அதிர்ச்சி தான் சந்தோஷ அதிர்ச்சி. யாழினியை கண்டுவிட்ட அனீஷ் அவளை அர்த்தத்தோடு பார்த்தான்.

 

 

“என்னாச்சு மாமா ஆருவுக்கு கால் வலி தானே அதானே தூக்கிட்டு வர்றீங்க… என்றாள்

 

 

“சரியா கண்டுபிடிச்சுட்டம்மா… தேங்க்ஸ் என்றான்.

 

 

“சாரி மாமா… என்றாள் அவளும்.

 

 

அவளுக்கு லேசாய் தலையசைத்துவிட்டு அவர்களின் அறைக்குள் நுழைந்து மனைவியை கட்டிலில் இறக்கிவிட்டு அவர்கள் அறைக்கதவை அடைத்துவிட்டு வந்தான் அவன்….

Advertisement