Advertisement

அத்தியாயம் – 30

 

‘எதுக்கு இப்படி கடுகடுன்னு பேசுறார். நான் இல்லாம தவிச்சேன்னு சொல்லாம சொல்றார். ஆனா இப்படி முகத்தை உர்ர்ருன்னு வைச்சுட்டு இருக்கார். எப்போ மாறுவார், ஒரு வார்த்தை என்னை திட்டிட்டா கூட நிம்மதியா இருக்கும் போல இருக்கு

 

 

‘இப்படி அங்கொன்னும் இங்கொன்னுமா பேசுறார். என் பக்கத்துல படுத்தா என்னாவாம் நான் என்ன இவரை கடிச்சா திங்க போறேன் மனதிற்குள் அவனுக்காய் ஏங்கியவள் புலம்பி தவித்துக் கொண்டிருந்தாள்.

 

 

அவளின் நாயகனோ அவளுக்கு புறமுதுகு காட்டினாலும் உறங்காமல் எதையோ எண்ணித் தவித்தவனாய் தூங்க முயன்று கொண்டிருந்தான்.

 

 

இருவரும் அவரவர் எண்ணங்களின் போக்கில் விழித்திருந்து உறக்கம் கட்டாயப்படுத்தி அவர்களை விழி மூட செய்திருந்ததில் எப்போது உறங்கினர் என்றே தெரியாமல் பொழுது விடிந்து வெகு நேரமாகியும் உறங்கிக் கொண்டிருந்தனர்.

 

 

“ஆரு… ஆரு… என்று வெளியில் கேட்ட யாழினியின் குரலில் தான் ஆராதனாவிற்கு விழிப்பு வந்தது. கண்ணை திறந்து பார்க்க பொழுது நன்றாக விடிந்திருந்தது.

 

 

அவளின் பார்வை சோபாவின் மீது பாய அங்கு அனீஷ் இன்னமும் துயில் கலையாமல் இருந்தான். மெதுவாய் எழுந்து சத்தமில்லாமல் கதவை திறக்க யாழினி நின்றிருந்தாள்.

 

 

“என்னாச்சு ஆரு ஒண்ணும் பிரச்சனையில்லையே. இவ்வளோ நேரமா தூங்கிட்டு இருந்தீங்களா, அதான் என்னமோ ஏதோன்னு கதவை தட்டிட்டேன்டி. ஒண்ணும் இல்லைல நல்லா இருக்க தானே. எதுவும்ன்னா சொல்லுடி. பேசாம இருக்காத என்று அவள் பேசிக்கொண்டே போனாள்.

 

 

“மணி என்னாச்சுடி என்றாள் ஆராதனா.

 

 

“பத்து மணி ஆகப்போகுது

 

 

“என்னது பத்தா?? என்று அதிர்ந்தவள் தோழிக்கு இன்னமும் பதிலளிக்காததில் அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது கண்ணில்பட “எனக்கொண்ணும் இல்லைடி யாழி

 

 

“நைட் ரொம்ப நேரமா தூக்கம் வரலை அதான் தூங்கிட்டேன் போல. நான் குளிச்சுட்டு வந்திடறேன்டி நீ பயப்படாம போ

 

 

“சீக்கிரமா வா ஆரு பால் கொழுக்கட்டை கேட்டியே செஞ்சு வைச்சிருக்கேன் என்றுவிட்டு அவள் விலகவும் ஆராதனா கதவை அடைத்துவிட்டு அவனருகில் வந்து நின்றாள்.

 

 

எப்போதும் துருதுருவென்று இருக்கும் அவன் முகம் ஏனோ கடினமாக இருப்பதாகவே அவளுக்கு தோன்றியது. அவன் சிரித்தால் விழும் கன்னக்குழி எங்கே என்று தேடும் அளவுக்கு அவன் முகம் உறக்கத்தில் கூட இறுக்கமாய் இருந்தது.

 

 

கை தன்னையுமறியாமல் அவன் தலைகோதிவிட மற்றொரு கை அவன் கன்னக்குழியில் கை வைத்து பார்த்தது. எத்தனை முறை கேட்டிருப்பான் ‘நான் விழித்துக் கொண்டிருக்கும் போது தொடு என்று.

 

 

எப்போதும் அவள் தொட வரும் போது அவன் விழித்துக் கொண்டு தானிருப்பான். அவள் நெருங்கவும் கண்ணை விழித்து ஆட்டம் காட்டுவான். இன்றோ அவன் சீரான மூச்சு அவன் இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறான் என காட்ட ஒரு பெருமூச்சொன்றை விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் அவள்.

 

 

அவள் குளியலறை நோக்கி செல்லவும் அப்போது தான் விழிப்பது போல மெல்ல கண்ணை திறந்தான். எப்போதும் போல் அவள் தொடுகையில் விழித்திருந்தவன் அதை காட்டாமல் இயல்பாய் உறங்குவது போல் நடிக்க பெரும் சிரமம் கொண்டான்.

 

 

அவளிடம் எதுவும் பேசாமலே குளித்து சாப்பிட்டு மருத்துவமனை கிளம்பிச் சென்றும் விட்டான். ஆராதனாவிற்கு அழுகை தான் வந்தது. வாடியிருந்த தோழியின் முகத்தை பார்த்துவிட்டு அதை பற்றி எதுவும் கிளறாமல் அவளுக்கு பிடித்த பால் கொழுக்கட்டையை ஊட்டப் போனாள் யாழினி.

 

 

“நானே சாப்பிடுறேன் யாழு என்று மறுத்தவளை தள்ளி “பரவாயில்லை நானே ஊட்டுறேன் சாப்பிடு என்றுவிட்டு தோழிக்கு ஊட்ட ஆரம்பித்தாள்.

 

 

தோழியின் கரிசனத்தில் மேலும் அழுகை வரப்பார்த்தது அவளுக்கு. கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள யாழினி அறியாமல் சமாளிக்க முயன்றாள். இருந்தும் அதை கண்டுவிட்ட யாழினி அவள் தோளை மென்மையாக அழுத்தினாள்.

 

 

ஆராதனா சாப்பிட்டு முடித்ததும் அவள் அறைக்கு செல்ல பின்னோடே யாழினியும் சென்றாள். “சொல்லு ஆரு என்கிட்ட பேசணும்ன்னு சொன்ன??

 

 

திடீரென்று தோழி கேட்கவும் மலங்க விழித்தவள் பெருமூச்சொன்றை சிந்தினாள். “ஹ்ம்ம் சொல்றேன்டி… அதுக்கு முன்னாடி ஊருக்கு ஒரு போன் பண்ணி பேசிடறேன் என்றவள் முதலில் மங்களூருக்கு போன் செய்து அனைவரிடமும் நலம் விசாரித்து அவள் நலம் சொல்லி ஒருவழியாக போனை வைத்தாள்.

 

 

ராஜீவனுக்கு அழைத்து அவனிடமும் சொல்லிவிட்டு வீட்டினரிடமும் பொதுவாக பேசிவிட்டு வைத்தாள். அதுவரை அமைதியாய் தோழியை பார்த்துக் கொண்டிருந்த யாழினி “இப்போ சொல்லு ஆரு எதுக்குடி அப்படி ஒரு முடிவெடுத்த

 

 

“யாழு நான் பண்ணது சரின்னு வாதாடலைடி நானு. அப்படி செய்யவும் மாட்டேன் ரொம்ப தப்பு தான் பெரிய தப்பு தான். ஆனா அன்னைக்கு நான் இருந்த மனநிலையில முட்டாள்தனமா முடிவெடுத்திட்டேன்டி

 

 

“நீ என்னை புரிஞ்சுக்குவியாடி ப்ளீஸ். நீ சொல்லும் போதெல்லாம் எனக்கு புரியாத விஷயம் இப்போ புரியுதுடி என்று நிறுத்தியவளை என்னவென்பது போல் பார்த்தாள் யாழினி.

 

 

“எதையும் யோசிச்சு செய்ன்னு நீ பலமுறை என்கிட்ட சொல்லியிருக்க. நான் அதை எப்பவும் கேட்டதில்லை. யோசிச்ச மாத்திரத்தில எனக்கு சரின்னு தோணினதை உடனே செஞ்சிருக்கேன்

 

 

“அதுனால இதுவரைக்கும் நான் எந்த பிரச்சனையும் சந்திச்சதில்லை நீ பேசாம போனது தவிர. நீ பேசாம இருந்தப்போ மனசுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும் தெரியுமா

 

 

“அப்பவும் எனக்கு ஒரு வீம்பு நான் எதுவும் தப்பு செய்யலைன்னு. நான் செஞ்சது தப்பேயில்லைன்னு. அதனால தான் உன் மேல கொஞ்சம் கோவம் கூட வந்திச்சு

 

 

“இதெல்லாம் ஒரு விஷயம்ன்னு பேசாம இருக்காளேன்னு நினைச்சு நானே வந்து பலமுறை உன்கிட்ட பேசியிருக்கேன்என்றவளை இடைமறித்த யாழினி “அதெல்லாம் இப்போ எதுக்கு ஆரு விடேன். பழசு எல்லாம் நினைச்சுட்டே இருந்தா நிம்மதியே போய்டும்டி

 

 

“என்னை பேசவிடுடி ப்ளீஸ்

 

 

“சரி சொன்னா தான் உனக்கு நிம்மதின்னா சொல்லு

 

 

“அன்னைக்கு அவர் ஒரு வார்த்தை சொல்லிட்டார்ன்னு நான் கிளம்பி போனது எவ்வளவு தப்புன்னு இப்போ எனக்கு நல்லா புரியுது யாழு என்றவள் அன்றைய அவர்களின் உரையாடலை தோழியிடம் பகிர்ந்தாள்.

 

 

“நான் இங்க இருந்து போய் எவ்வளவு பேரை கஷ்டப்படுத்தி இருக்கேன். உன்கிட்ட கூட சொல்லாம போக காரணம் தம்பி உன்னை எதுவும் சொல்லிடுவாங்களோன்னு தான்டி யாழு

 

 

“ப்ளீஸ்டி என்னால நீ எவ்வளவு கஷ்டப்பட்டியோன்னு நினைச்சு நினைச்சு நான் வருந்தாத நாளில்லை. அங்க போயும் நான் நிம்மதியா இருந்திருப்பேன்னு நீ நினைக்கிறியா யாழு

 

 

“நிச்சயமா இல்லைடி… உன்னை கூட நான் ஜெயிச்சிருக்கேன் யாழு, பேசாம இருந்த நீ நான் வீட்டை விட்டு போக முன்னாடியே என்கிட்ட பேசிட்ட. ஆனா அவர்கிட்ட தோத்துட்டேன் யாழு

 

 

“இந்த நிமிஷம் அதை ஒத்துக்கறதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எப்போ எனக்கு ஒரு பிரச்சனைன்னு எனக்கு அவர்கிட்ட சொல்லணும்ன்னு தோணிச்சோ அப்பவே அவர் என்னை ஜெயிச்சுட்டார்டி யாழு

 

 

“ஏன் ஆரு உனக்கு மாமா மேல எந்த கோவமும் இல்லைன்னு சொல்றியா?? நான் என்ன கேட்கிறேன்னு உனக்கு புரியுதா என்று நிறுத்தினாள் யாழினி.

 

 

“எதுக்காக எங்களுக்குள்ள பிரச்சனை வந்திச்சோ அதை பத்தி தான் நீ கேட்கறேன்னு எனக்கு புரியுது யாழு

 

 

“உண்மையை சொல்லட்டுமா எனக்கு இப்போ அவரைதவிர வேற எதுவும் முக்கியமில்லை. அதுக்காக அந்த பிரச்சனையை மனசுல இருந்து ஒரேடியா தூக்கியெறிச்சுட்டேன்னு பொய் சொல்ல மாட்டேன்

 

 

“அது எங்கயோ மனசுல ஒரு மூலையில இருக்கு. அதுக்கும் அவர்கிட்ட வேற எதுவும் காரணமிருக்குமோன்னு நினைக்கிறேன் என்றவளின் பேச்சில் மெல்ல அவளை படித்துக் கொண்டிருந்தாள் யாழினி.

 

 

‘இதுநாள் வரை கணவன் என்ற உரிமையில் மட்டுமே இருந்தவளுக்கு அவனின் மேல் காதலும் வந்திருக்கிறது என்று புரிந்தது. ஆனாலும் அவள் மனதில் இன்னமும் அந்த உறுத்தல் வேறு இருப்பதாக சொல்கிறாளே அதை ஒரேடியாக தூக்கி எறிந்தால் தானே நல்லது என்று யாழினிக்கு தோன்றாமலில்லை.

 

 

மேலே அவள் என்ன சொல்கிறாள் என்பதை கேட்க ஆரம்பித்தாள். ஆராதனா மங்களூருக்கு சென்றது அங்கு நடந்தது தான் திரும்பி வந்தது எல்லாம் சொன்னாள்.

 

 

மங்களூரில் இருக்கும் போது திலகவதியின் நினைவு வந்து அவருக்கு போன் செய்து பேசியதை சொன்னதும் யாழினிக்கு முகம் விழுந்துவிட்டது. “ஏன் ஆரு நேத்தே கேட்கணும்ன்னு நினைச்சேன்

 

“ஊர்ல இருந்து நீ அத்தைக்கு கூட போன் பண்ணி பேசியிருக்க ஆனா இத்தனை வருஷமா ஒண்ணா பழகின எனக்கு போன் பண்ணணும்ன்னு உனக்கு தோணவேயில்லையாடி. நான் அப்படி என்னடி தப்பு பண்ணேன் என்றாள் யாழினி.

 

 

“யாழு அப்படி சொல்லாதடி. நீ எந்த தப்பும் பண்ணலை நான் தான் எல்லா தப்பும் பண்ணேன். உன்கிட்டயும் அவர்கிட்டயும் போன் பேசினா சமாதானம் ஆகறதில்லைடி நான் பண்ண விஷயம்

 

 

“உங்களை நேர்ல பார்த்து சமாதானம் செய்யணும்ன்னு தான் நான் போன் பண்ணவேயில்லை

 

 

“சும்மா சொல்லாத யாழி, நீ மாமாக்கு கூட போன் பண்ணி பேசியிருக்க என்று தன் வருத்தத்தை மறைக்காமல் சொன்னாள் யாழினி.

 

 

“நான் எதுக்காக பேசினேன்னு கேட்டுட்டு சொல்லுடி என்றவள் அனீஷ் எப்படி அங்கு வந்தான் என்பதை பற்றி கூறினாள்.

 

 

“அவர்கிட்ட தினமும் இதை பத்தி பேசணும்ன்னு நான் நினைக்கும் போதெல்லாம் எதாச்சும் சொல்லி என் கவனத்தை மாத்திவிட்டுடறார்டி. என் மேல நெறைய கோவத்துல இருக்கார்ன்னு புரியுது

 

 

“என்னை திட்டிட்டா கூட பரவாயில்லை. அடிச்சா கூட வாங்கிக்க தயாரா இருக்கேன் யாழு. இப்படி யாருக்கு வந்த விருந்துன்னு இருக்கறதை பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்குடி யாழு”

 

 

“என்னோட பழைய அனீஷை எப்போ பார்க்க போறேன்னு தெரியலை. அவரை எப்படி மீட்டெடுக்க போறேன்னு தெரியலைடி என்றவள் தோழியின் தோளில் சாய்ந்து அடக்கமாட்டாமல் அழ ஆரம்பித்தாள்.

 

 

“எனக்கு இதெல்லாம் தேவை தான்டி யாழு. உங்களை எல்லாம் வருத்தப்பட வைச்சுட்டு போனேன்ல எனக்கு இதுவும் தேவை இன்னும் தேவை தான் என்று மேலும் மேலும் அழுதவளை தேற்றுவதற்குள் யாழினி ஓய்ந்து போனாள்.

 

 

“விடு ஆரு நீ அழுதா உனக்கு நல்லதில்லை. உன்னோட சந்தோசம் தான் குழந்தையோட சந்தோசமா இருக்கும். நீ இப்படி அழுது வடிஞ்சா பாப்பாவும் பீல் பண்ணும் ப்ளீஸ் அழாத ஆரு

 

 

“மாமாவால உன்னை விட்டு இருக்க முடியாதுடி. உண்மையிலேயே அவர் ரொம்ப பாவம் தெரியுமா. நீ இல்லாம ரொம்பவே தவிச்சு போய்ட்டார். நீயில்லாத இந்த வீட்டுல கூட அவர் அதிகம் தங்கவேயில்லை தெரியுமா

 

 

“அவர் கூட சொன்னார் இந்த விளம்பரம் நிறுத்திட்டேன் அண்ணி வந்திடுவாங்கன்னு. மாமா என்ன பண்ணார் தெரியமா உன்னை வரவைக்குறதுக்காவே அந்த விளம்பரத்தை தொடர்ந்து பண்ணார்

 

 

“நீ என்ன சொல்ற யாழு. அதை அவர் உங்ககிட்ட சொன்னாரா??

 

 

“மாமா ரொம்ப அழுத்தம்டி யாழு அவரோட உணர்வுகளை சட்டுன்னு வெளிய காட்டுறவர் இல்லை. எல்லாத்தையும் உள்ளவே அடக்கி அடக்கி தன்னை கட்டுப்படுத்திக்கிட்டு வெளிய சிரிச்சுட்டே இருக்கற ரகம்

 

 

“உண்மையை சொல்லு உனக்கு அந்த விளம்பரம் பார்த்த பிறகு தானே மாமாவை அதிகம் தேடிச்சு என்றாள் யாழு.

 

 

“ஹ்ம்ம் தேடாம என்ன செய்யும், அதில தான் அவரை நான் பார்த்தேனே என்றாள் மற்றவள்.

 

 

“இது வேற செஞ்சிருக்காரா. விவரமான ஆளு தான்டி அவரு. எப்படி உன்னை தேட வைச்சு அவரை நீயா தேடி வர்றது போல பண்ணியிருக்கார் பாரு என்று அவனை பற்றி பெருமையாக சொல்ல ஆராதனாவுக்கும் ஏதோ புரிந்தது போல் இருந்தது.

 

 

“அய்யோ டைம் பார்க்கவேயில்லைடி ஆரு உன்கிட்ட பேசிட்டு இருந்ததுல. நேரமாச்சு நான் போய் சமையலை பார்க்கறேன். நாம அப்புறம் பேசுவோம் என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் யாழினி.

 

 

யாழினி அகன்றதும் அவள் சொன்னதெல்லாம் யோசிக்க ஆரம்பித்தாள் ஆராதனா. ‘என்னை தேடியிருக்கார் ஆனா என்னை எதுக்கு விலக்கி விலகி போறார் இப்போ என்று அதற்கு மட்டும் அவளுக்கு காரணமே புரியவில்லை.

 

 

அவன் முன்பு போல் கண்ணே மணியே என்று கொஞ்ச வேண்டும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை தான். கோவத்தையாவது காட்டுவான் என்று பார்த்தால் அதையும் அவன் செய்யவில்லை. அவளுக்கு தான் ஒரே குழப்பாக இருந்தது.

 

 

ஆராதனா இப்படி யோசனையில் இருக்க அன்று மாலையே வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள் அவளின் சொந்தங்கள் அனைவரும். மறுநாள் நல்ல நாளாக இருப்பதால் அவளுக்கு ஐந்தாம் மாதம் செய்வதை செய்ய வந்திறங்கியிருந்தார்கள்.

 

 

எல்லோரையும் பார்த்ததும் மனதிற்குள் சந்தோஷ ஊற்று பெருக்கெடுக்க அவர்களை அணைத்து கண்ணீர் விட்டு பாசம் காட்டி கோவித்து எல்லாம் செய்து கொண்டிருந்தாள் அவள்.

அவளை தனியே கண்ட ராஜீவன் மட்டும் அவளிடம் நேராகவே கேட்டுவிட்டான் “உனக்கா எப்படி வரணும்ன்னு தோணிச்சு ஆராதனா. அவர் வருவாரு அவர் வந்தா தான் வருவேன்னு அடம்பிடிச்ச

 

 

“அவர் வந்தார் நான் அவரோட தான் வந்தேன் என்றாள் அவள் பதிலுக்கு வீம்பாய்.

 

 

“அது எனக்கு தெரியும், ஆனா அவருக்கு போன் பண்ணது நீ தானே அதான் கேட்டேன். என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சுன்னு புரியலையா உனக்கு என்று நக்கலாகவே கேட்டான் தங்கையிடம்.

 

 

“எம் புருஷன் நான் கூப்பிட்டேன் நீ எதுக்குண்ணா நடுவுல வர்றே. நான் கோவிச்சுக்குவேன் பதிலுக்கு அவரும் கோவிச்சுக்குவாரு. புருஷன் பொண்டாட்டி நடுவுல ஆயிரம் இருக்கும். நீ குறுக்க புகுந்து நாட்டாமை பண்ணாதே என்று கோபமாக அண்ணனுக்கு திருப்பிக் கொடுத்தாள் அவன் தங்கை.

 

 

அவள் கொடுத்த பதிலில் அவனுக்கு கோபம் வரவில்லை. தங்கைக்கு அவள் கணவரின் மீதான அன்பு கூடி அவருக்காய் அவள் பரிந்து பேசியது அவனுக்கு சந்தோசமாகவே இருந்தது. இருந்தாலும் விடாமல் அவளை வம்பிழுத்தான்.

 

 

“ஆமாமா இன்னைக்கு புருஷன் பொண்டாட்டின்னு சொல்லுவ, அப்புறம் நீ பாட்டுக்கு சொல்லாம கொள்ளாம பொட்டியை கட்டிட்டு கிளம்பிடுவ. அந்த மனுஷனில்லை அவஸ்தை படுறார்

 

 

“நம்ம குடும்பத்தை தானே அவங்க தப்பா நினைப்பாங்க. என்ன பொண்ணை பெத்து வைச்சிருக்காங்கன்னு

 

 

“அண்ணா போதும் நிறுத்திக்கோ. மேல மேல குத்தி காயப்படுத்தாத. ஆமா போயிட்டேன் அதுக்காக அதையே சொல்லிக் காட்டுவியா. போனவ என்ன செத்தா போயிட்டேன்

 

 

“ஏதோ கோபம் போயிட்டேன், அதான் திரும்பி வந்துட்டேன்ல. அதையே சொல்லிட்டு இருந்தா வேதனையா இருக்காதா என்றவள் முகத்தை மூடி அழ ஆரம்பித்தாள்.

 

 

‘அய்யோ பிள்ளைத்தாச்சி பெண்ணை அழவைத்துவிட்டோமே!! என்ற குற்றவுணர்வு எழுந்தது ராஜீவனுக்கு. “ஹேய் ஆராதனா சாரிம்மா. அண்ணன் தானே கேட்டேன். அழாதடா நீ திரும்ப போயிடக் கூடாதுங்கறதுல அப்படி கேட்டுட்டேன்

 

 

“ப்ளீஸ்ம்மா அழாத என்று சொல்லி அவளை ஒருவழியாக சமாதானம் செய்து வைத்தான். இரவு வீட்டிற்கு வந்த அனீஷ் அனைவரிடமும் பொதுவாக பேசியவன் ராஜீவனிடம் தனியே நீண்ட நேரமாக மாடியில் பேசினான்.

 

 

அவர்கள் அறைக்கு அவன் வரும் வரையிலும் ஆராதனா விழித்தே தான் இருந்தாள். அவள் உறங்காதிருக்கவும் “தூங்கலியா என்றான்.

 

 

“தூக்கம் வரலை

 

 

“ஏன்??

 

 

“துக்கமா வருது?? என்றது அவன் காதில் தூக்கமா வருது என்று விழுந்து வைத்தது. எதற்கு இப்படி மாத்தி மாத்தி பேசுறா என்பது போல் பார்த்தவன்“அப்போ தூங்க வேண்டியது தானே என்றான்.

 

 

“தூக்கம் வருதுன்னு சொல்லலை துக்கம் வருதுன்னு சொன்னேன் என்று அவள் சொன்னதும் அவன் எதுவுமே பேசவில்லை. அவளிடம் பேச வேண்டும் போலவும் இருந்தது.

 

 

பேசாமலிருந்தால் நல்லது என்று தோன்றியது அவனுக்கு. அவனால் அவளிடம் கோபப்படவும் முடியவில்லை கோபம் கொள்ளாமலும் இருக்க முடியவில்லை.

 

 

மனம் முழுக்க அவ்வளவு கோபம் அவள் மேல். அவளை பார்த்தால் அவனால் கோவத்தை காட்ட முடியவில்லை. பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவள் பார்க்கவும் அவனால் எதுவும் பேச முடியவில்லை.

 

 

ஒன்றுமே தெரியாத பாவனையை காட்டி பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு கடைசியில் என்னை பாவியாக்கிவிட்டாயே என்ற கோபம் மீண்டும் அவனுக்குள் துளிர்த்தது. சோபாவில் அவளுக்கு முதுகுக்காட்டிக் கொண்டு படுத்துவிட்டான்.

 

 

சற்று நேரத்தில் உறங்கியவனுக்கு உறக்கம் உடனேயே கலைய ஆரம்பித்தது. திரும்பி படுத்தவன் கட்டிலை பார்க்க அங்கு ஆராதனாவை காணவில்லை. பதறி எழுந்தமர்ந்தவன் சுற்று முற்றும் பார்க்க அவள் பால்கனியில் இருந்ததை வீசி சென்ற காற்றில் பறந்த அவள் முந்தானை சொல்லிச் சென்றது.

 

 

சட்டென்று மனதில் இருந்த கோபமெல்லாம் அவனுக்கு வடிந்தது போலிருந்தது. இந்த பனி நேரத்தில் எதற்கு அங்கு சென்று அமர்ந்திருக்கிறாள் என்று மெல்ல எட்டிப்பார்த்தான் அவன்.

 

 

கீழே அமர்ந்து கொண்டு வானில் தெரிந்த நிலவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். பௌர்ணமிக்கு முதல் நாள் நிலவு கிட்டத்தட்ட முழுவடிவத்தில் தானிருந்தது.

 

 

நிலவை வெறித்துக் கொண்டிருந்தவளுக்கு முதலிரவன்று இருவருமாக சேர்ந்து நிலவின் அழகை ரசித்தும் அதன் பின் நடந்த நிகழ்வுகளும் காட்சிகளாய் தோன்ற கண்ணை இறுக மூடினாள்.

 

 

அவள் கண்ணில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. அதை பார்த்தவனுக்கும் கஷ்டமாகவேயிருந்தது. ஆனாலும் முழுதாய் சமாதானமடையாமல் இருந்த மனதை அவனால் மாற்ற முடியவில்லை.

 

 

அதனால் பால்கனியை நோக்கிச் சென்றவன் “இந்த நேரத்துல இங்க என்ன பண்ணிட்டு இருக்க. பனியடிக்குது உள்ள வா, சளி பிடிச்சுக்க போகுது. நீ செய்யற எல்லாமே உன்னை மட்டும் பாதிக்காது. புரிஞ்சு நடந்துக்கோ ஆராதனா என்றான்.

 

 

அவன் பேச்சில் சட்டென்று அவனை திரும்பி பார்த்தாள் அவள். அவன் சாதாரணமாக தான் அதை சொன்னான் அவளுக்கு தான் அதில் இரண்டு அர்த்தம் தோன்றியது.

 

 

நான் செய்யறது என்னை மட்டும் பாதிக்காது அது எல்லாரையும் பாதிக்கும். சரியா தானே சொல்றார் என்று நினைத்துக்கொண்டு மெதுவாய் எழுந்து வந்து கட்டிலில் அமர்ந்தாள்.

 

 

பிளாஸ்கில் இருந்த சூடான வெந்நீரை அவளுக்கு கொடுத்து பருக சொன்னான். “பனியில நின்னு இருக்க, குடி கொஞ்சம் இதமா இருக்கும் என்றவன் அவள் குடிக்கும் வரை அவனும் கட்டிலிலேயே அமர்ந்திருந்தான்.

 

 

அவன் அமர்ந்திருப்பதே அவளுக்கு சுகமாய் இருந்தது. அவள் அவனுடன் திரும்பி வரும் போது கூட எண்ணியிருக்கவில்லை அவனை இவ்வளவு தேடுவோம் என்று, அவனை அதிகம் தேடியதால் தான் வந்தாள் என்பதை மறந்திருந்தாள் அக்கணம்.

 

“காலை நீட்டி படு என்று கூறவும் உள்ளே தள்ளி படுத்து காலை நீட்டி படுத்தாள். சட்டென்று அவள் பாதம் பிடித்து தன் மடி மேல் அவன் வைக்க சடாரென்று எழுந்தவளை அதட்டினான்.

 

 

“இப்படி எழுந்திருக்க கூடாதுன்னு தெரியாதா உனக்கு. உன் காலை தானே பிடிச்சேன் கழுத்தை ஒண்ணும் பிடிக்கலையே. எதுக்கு இப்படி பதட்டப்படுற என்றான்.

 

 

“இல்லை நீங்க என் காலை… விடுங்க வேணாம் ப்ளீஸ்…

 

 

“உன் காலை வைச்சு நான் ஒண்ணும் பண்ணலை. தைலம் தான் கொஞ்சம் தேய்ச்சு விடலாம்ன்னு என்றவன் அவள் காலில் தைலம் தேய்த்து சூடு பரத்தினான். அவன் கைகள் தன்னையுமறியாமல் மேலேறியது.

 

 

சட்டென்று அவன் எண்ணம் தடைப்பட்டது போல் அவள் காலை கட்டிலில் வைத்துவிட்டு எழுந்து சென்று கையை கழுவிவிட்டு வந்து சோபாவில் படுத்துக்கொண்டான் அவன். ‘ச்சே எனக்கு ஏன் இப்படி புத்தி போகுது. அவ மேல இருக்கற கோபத்தை விட இதெல்லாமா எனக்கு பெரிசா தெரியுது என்று அவனுக்கு அவன் மேலேயே ஆத்திரம் வந்தது.

 

 

மறுநாள் அவள் வீட்டினர் ஐந்து வகை சாதம் செய்து அவளுக்கு ஊட்டிவிட இத்தனை நாட்களாய் தான் இழந்த சந்தோசம் மொத்தமும் அன்று கிடைத்ததாய் உணர்ந்தாள் ஆராதனா.

 

 

அவளை பெருங்கவலையாய் சூழ்ந்திருந்தது அனீஷ் அவளிடம் பேசாதது மட்டுமே. மற்றப்படி அனைத்தும் எப்போதும் போலவே இருந்ததாக அவளுக்கு தோன்றியது.

 

ஊருக்கு கிளம்பிய அவள் வீட்டினர் மகளை சீராட்டி அனுப்ப பிரியப்பட்டனர். அவளை அவர்கள் அழைக்க அவள் முகமோ அனீஷை ஏறிட்டது…

Advertisement