Advertisement

அத்தியாயம் – 29

 

 

அவள் ஏதோ சொல்ல வருவதும் பின் தயங்குவதும் புரிய “என்ன விஷயம்?? என்றான் அனீஷ்.

 

 

சட்டென்ற அவன் கேள்வியில் திடுக்கிட்டு அவனை ஏறிட்டாள் அவள். “ஏதோ சொல்லணும்ன்னு வந்த மாதிரி இருக்கு. அதான் கேட்டேன் என்ன விஷயம்??

 

 

“இரு இரு அப்படியே இரு எவ்வளவு நேரம் காலை கீழ போட்டுக்கிட்டு இருப்ப!! ஒரு நிமிஷம் என்றவன் வெளியில் சென்றுவிட்டு வரும் போது சூடான வெந்நீரை கையோடு கொண்டு வந்தான்.

 

 

அவளுக்காய் மல்லிகா கொடுத்துவிட்டிருந்த சிறு டப்பை எடுத்து அதில் நீரை விளாவி சூடு பார்த்துவிட்டு “இப்போ இதுல கால் வைச்சுக்கோ கொஞ்சம் நேரம், இதமா இருக்கும் என்று சொன்னவனை அப்படியே அணைத்துக் கொள்ள துடித்தது மனது.

 

 

இப்படி பார்த்து பார்த்து தனக்காய் செய்பவன் தான் அன்று உங்கள் வீட்டுக்கு போ என்று பேசினானா என்று அவளால் நம்பவே முடியவில்லை. கண்களில் கண்ணீர் துளிர்த்து அவன் தோளில் விழுந்தது.

 

 

“எதுக்கு இப்போ அழற?? எங்கயும் வலிக்குதா?? என்றவன் அவள் முகத்தை முதலில் ஆராய்ச்சி செய்தான்.

 

 

“எங்கயும் வலிக்கலை, அழணும்ன்னு தோணிச்சு அழுதேன்

 

 

“அதுக்கு தான் இப்போ என்ன அவசியம் வந்துச்சு

 

 

“உங்களுக்கு என் மேல எதுவும் கோபம் வரலையா?? என்ற அவளின் கேள்விக்கு அவன் மௌனம் காத்தான்.

 

 

“ஏன் என்னை எங்க வீட்டுக்கு போக சொன்னீங்க?? ப்ளீஸ் சொல்லுங்களேன் என்றாள் கெஞ்சல் பார்வையுடன்.

 

 

“நான் இதுக்கு என்ன பதில் சொல்லணும்ன்னு நீ எதிர்பார்க்கற??

 

 

“இப்படி சொன்னா நான் என்ன சொல்ல??

“இந்த கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல எனக்கு விருப்பமில்லைன்னு வேணா வைச்சுக்கோயேன் என்று அவன் சொன்னதும் அவள் முகம் வாடியது.

 

 

“ப்ளீஸ் எதையும் தேவையில்லாம யோசிக்காத. எனக்கு எப்பவும் நீ வேணும் அந்த நம்பிக்கையாச்சும் நீ என் மேல வை

 

 

அவன் பதிலில் மனதில் சட்டென்று ஒரு வீம்பு பிறந்தது. “எனக்கு உங்க மேல நம்பிக்கை இல்லைன்னு சொல்றீங்களா??

 

 

“நான் எதுவும் சொல்ல வரலை ஆராதனா. ப்ளீஸ் என்னை எதுவும் பேச வைக்காத, இன்னொரு பிரிவை தாங்குற சக்தி எல்லாம் எனக்கில்லை என்றவன் எதிர் இருக்கையில் சென்று அமர்ந்துவிட்டான்.

 

 

கண்களை மூடி தன்னை அவன் ஆசுவாசப்படுத்துவது புரிந்தது. ‘நிஜமாவே என்னோட பிரிவு இவரை ரொம்பவே வருத்துதா!! அப்படி இருந்தா என்னை அப்போவே வந்து கூட்டி போயிருக்கலாமே

 

 

‘எதுக்கு தம்பிகிட்ட சொல்லி ஏதோ ஏற்பாடு எல்லாம் பண்ணி என்கிட்ட இருந்து தள்ளியிருந்தார் என்ற கேள்வி இன்னமும் பூதாகரமாய் அவளுக்கு எழ ஆரம்பித்தது.

 

 

அந்த பயணத்தில் அவளை அவன் பார்த்து பார்த்து கவனித்தது வேறு அவளை அதிகமாய் நெகிழ்த்தியது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் அவர்கள் கோவையில் இறங்கிவிடுவர்.

 

 

அதை நினைக்க நினைக்க அவள் அடிவயிற்றில் ஏதோவொரு வித அவஸ்தை உண்டானது. அனீஷ் தான் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறானே அவளின் சிறு முகச்சுளிப்பும் அவன் கண்களில் இருந்து தப்பவில்லை.

 

 

எழுந்து வந்து அவளருகில் அமர்ந்தவன் “என்னாச்சும்மா என்றான் பரிவாய்.

 

 

“என்ன யோசிக்கற?? வாய்விட்டு சொல்லு??

 

 

“வீட்டில எல்லாரையும் எப்படி பார்க்க போறேன்னு… என்று முடிக்காமல் நிறுத்தினாள் அவள்.

 

 

“யாரும் எதுவும் உன்னை சொல்ல மாட்டாங்க என்றான் அவன் உறுதியாய்.

“நிஜமா தான் சொல்றேன் உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. நீ எதுவும் கவலைப்பட்டு உன்னை குழப்பிக்காதே சரியா??

 

 

“இல்லை யாழு??

 

 

“யாழினி கூட எதுவும் கேட்க மாட்டா, நிச்சயமா தான் சொல்றேன் ஆரா

 

 

“இல்லை அவ என்கிட்ட சண்டை போடுவா??

 

 

“அப்படி போட்டா தான் என்ன?? உன்னோட தோழியை உனக்கு சமாதானப்படுத்த தெரியாதா?? அது உன்னால முடியாதா?? என்றான்

 

 

“ஆனா அதுக்கெல்லாம் அவசியமே இருக்க போறதில்லை. நீ கண்டதையும் நினைச்சு உன்னை கஷ்டப்படுத்திக்காதே. இன்னும் கொஞ்சம் நேரத்துல நாம இறங்கிடுவோம். ஸ்டேஷனுக்கு சபரி வருவான்

 

 

“நீ எப்பவும் போல இயல்பா இரு. எந்த குற்றவுணர்ச்சியும் உனக்கு வேண்டாம் என்று அவளை சமாதானம் செய்தான்.

 

 

“உங்களுக்கு என் மேல கோவம் தானே ஏன் அதை காட்டாம மறைச்சு வைக்கறீங்க என்று மனதில் நினைத்தை பட்டென்று கேட்டு விட்டாள்.

 

 

“நான் இதுக்கான பதிலை உனக்கு முன்னாடியே சொல்லிட்டதா ஞாபகம் என்றான்.

 

 

“நீங்க இன்னும் எனக்கு பதில் சொல்லவேயில்லை

 

 

“நாம இதைப்பத்தி பேச வேண்டாம்ன்னு சொன்னதா ஞாபகம்

 

 

“ப்ளீஸ்… என்றவளை “அதே தான் ஆரா சொல்றேன் ப்ளீஸ் என்னை கிளறதா?? என்றவன் எழுந்து வெளியில் சென்றுவிட்டான்.

 

 

பத்துநிமிடம் கழித்து வந்தவன் அவளருகில் அமர்ந்து கொண்டு அவள் கையை எடுத்து தனக்குள் வைத்துக்கொண்டான்.கோவை ரயில் நிலையத்தில் ரயில் நுழைந்து கொண்டிருந்தது. வண்டி மெதுவாய் நிற்கவும் உடைமைகளை எடுத்துக்கொண்டு முதலில் இறங்கினான் அனீஷ்.

 

“நீ இங்கயே இரு என்றுவிட்டு ஒவ்வொன்றாய் இறக்கி கீழே வைக்கவும் சபரி வந்து சேரவும் சரியாக இருந்தது. “பார்த்துக்கோ சபரி என்று அவனிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்று அவளை அழைத்தான்.

 

 

முதலில் கீழே இறங்கி நின்றவன் அவன் கைக்கொடுக்க அதை பிடித்துக்கொண்டு மெதுவாய் இறங்கினாள் அவள். ஏனோ அவளுக்கு சபரியை பார்க்கவே சங்கடமாய் இருந்தது.

 

 

சபரியோ எதுவுமே நிகழாதது போல அவளருகில் வந்து “எப்படியண்ணி இருக்கீங்க?? நல்லா இருக்கீங்களா?? என்று கேட்கவும் அவளுக்கு கண்கள் மீண்டும் நிறைந்தது.

 

 

“ஹ்ம்ம் நல்லாயிருக்கேன், யா… யாழினி

 

 

“ரொம்ப நல்லாயிருக்கா!! உங்களை பார்க்க ஆவலா காத்திட்டு இருக்கா!! நீங்க எப்போ வருவீங்கன்னு காலையில இருந்து ஒரு நூறு தரம் என்கிட்ட கேட்டிருப்பா!!

 

 

“ஸ்டேஷன்க்கு வரேன்னு சொன்னவளை நான் தான் வேணாம்ன்னு சொல்லி வீட்டில விட்டு வந்திருக்கேன். இங்க வந்து அவ அழுது போடுற செண்டிமெண்ட் சீன் எல்லாம் எப்படியண்ணி பார்க்கறது அதான் என்று இயல்பாய் கிண்டலாய் பேசியவன் அவளுக்கு புதிது.

 

 

சபரியின் மாற்றம் அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது. யாழினி நன்றாய் இருக்கிறாள் என்பது அவன் பேச்சில் நன்றாக தெரிந்தது. இருந்தும் அவளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற குற்றவுணர்வு அவளுக்கு இருந்து கொண்டே தான் இருந்தது.

 

 

“சபரி வண்டி எடு போகலாம். நான் உங்கண்ணி கூட பின்னாடி உட்கார்ந்துக்கறேன் என்றவன் பின்னால் ஏறி அவளுடன் அமர்ந்து கொண்டான்.

 

 

“பார்த்து ஓட்டு சபரி என்று அவனுக்கு அவ்வப்போது சொல்லிக்கொண்டு வந்தவனின் கையை எப்போது பிடித்தோம் என்று அவளுக்கு தெரியவில்லை. அவன் கைகள் பிடித்து தலைசாய்த்ததும் புரியவில்லை அவளுக்கு.

 

 

வீட்டு வாயிலிலேயே எல்லோரும் அவளுக்காய் காத்திருக்க வாசலில் வண்டி நின்றதும் அவள் கால்கள் தயங்கியது இறங்குவதற்கு.

“ஒண்ணும் ஆகாது வா என்று சொல்லி அவள் கையை தனக்குள் வைத்துக்கொண்டே தான் அவன் இறங்கினான்.

 

 

வாசலில் ஆரத்தி தட்டுடன் நின்றிருந்தார் திலகவதி. “வாம்மா உள்ள வா, திருஷ்டி கழிச்சுடலாம். எல்லா கெட்டதும் இன்னையோட உங்களை விட்டு போகட்டும் என்றவாறே அவளுக்கு திருஷ்டி சுற்றினார்.

 

 

திலகவதியின் அருகில் நின்றிருந்த மாமனாரும் அவளை பார்த்து புன்னகைத்தவாறே தான் நின்றிருந்தார். யாழினியும் ஏதோவொரு பரவசத்தில் தான் நின்றிருந்தாள்.

 

 

அருகில் வரவேயில்லை அவள், அது சட்டென்று ஆராதனாவிற்கு ஒரு ஏமாற்றத்தை கொடுத்தது. எல்லோருமாக உள்ளே செல்ல அனீஷ் அவளை அவர்கள் அறைக்கு அழைத்து சென்றான்.

 

 

“நான் அத்தை மாமாகிட்ட யாழினிகிட்ட எல்லாம் பேசிட்டு வரட்டுமா?? ப்ளீஸ் என்று அவனை பார்த்து கேட்டாள்.

 

 

“இப்போவே பேசணும்ன்னு எதுவுமில்லை. உனக்கு அலுப்பா இருக்கும், கொஞ்சம் ரெஸ்ட் எடு என்றான்.

 

 

அவள் பிடிவாதமாய் முகத்தை தூக்கி வைத்திருக்க “உன்னிஷ்டம் என்றுவிட்டு அவளைவிட்டு அவள் உடைமைகளை எடுத்துக்கொண்டு அவர்கள் அறைக்கு சென்றுவிட்டான்.

 

 

“என்னடா நின்னுட்டு உட்காரு என்று அருகே வந்த திலகவதியின் காலிலேயே விழுந்துவிட்டாள் அவள். “என்னை மன்னிச்சுடுங்க அத்தை. நான் பண்ணது எவ்வளவு தப்பு முட்டாள்த்தனம்ன்னு இப்போ எனக்கு புரியுது

 

 

“நீங்க எல்லாரும் என்ன ஏதுன்னு கூட கேட்காம எப்பவும் போல பேசுறதே எனக்கு குற்றவுணர்ச்சியா இருக்கு அத்தை. மாமா நீங்களும் என்னை மன்னிப்பீங்களா என்று பொலபொலவென்று கண்ணீர் விட்டாள் அவள்.

 

 

“என்னம்மா நீ என் கால்ல எல்லாம் விழுந்துட்டு, பிள்ளைத்தாச்சி பொண்ணு இப்படி எல்லாம் விழுக கூடாது எழுந்திரு என்று சொல்லி எழுப்பியவர் “அதான் நீ அன்னைக்கே எல்லாம் போன் பண்ணி பேசிட்டியேம்மா, விடு அதெல்லாம் நினைச்சு எதையும் போட்டு மனசை குழப்பிக்காத என்று மருமகளை சமாதானம் செய்தார் திலகவதி.

அவள் மாமனாரும் “எதுவும் கவலைப்பட வேண்டாம்மா. எல்லாமே நல்லதுக்குன்னு நினைச்சுக்குவோம். போனது போனதாவே இருக்கட்டும் விட்டிடு என்றார்.

 

 

“உனக்கு என்ன பிரச்சனையா இருந்தாலும் என்னை உன் அம்மாவா நினைச்சு நீ சொல்லியிருக்கலாம்மா. அது மட்டும் தான் எனக்கு கவலையா இருந்துச்சு. நீ இல்லாம பெரிசா வருத்தப்பட்டது அனீஷ் தான்

 

 

“கம்பீரமா முன்னாடியும் காட்டிக்கிட்டாலும் அவன் உள்ளுக்குள்ள ரொம்பவே உடைஞ்சு போய்ட்டான்ம்மா என்றவரின் கண்களிலும் நீர் கசிந்தது.

 

 

“அங்க பாரு உன்னோட பிரண்டை அவ உன்னையவே பார்த்திட்டு இருக்கா. அனீஷ்க்கு இணையா அவளும் உன்னை ரொம்பவே தேடினா. போம்மா போய் அவகிட்ட பேசு என்றார்.

 

 

“அத்தை உங்களுக்கு என் மேல கோவமில்லையே…

 

 

“பொய் சொல்ல மாட்டேன்டா நானு. எனக்கு கோவமில்லை நெறைய வருத்தம் தான் நீ அன்னைக்கு போன் பண்ணப்போ சொன்னது தான் இப்பவும் சொல்றேன். இனி இப்படி ஒரு முடிவு நீ எப்பவும் எடுக்கக் கூடாது சரியா என்று பரிவாய் ஆரம்பித்து கண்டிப்பாய் சொல்லி நகர்ந்தார் அவர்.

 

 

யாழினியை நோக்கி செல்ல வேண்டும் என்று தோன்றினாலும் கால்கள் நகருவேனா என்று அடம் பிடித்தது. உள்ளே செல்லும் சபரி போகிற போக்கில் யாழினியிடம் “போ யாழும்மா உன் கோவம் எல்லாம் விட்டுட்டு போ அண்ணிகிட்ட பேசு என்றான்.

 

 

செல்லும் அவனை திரும்பி முறைத்தாள் யாழினி. “சரி சரி முறைக்காத நான் ஒண்ணும் சொல்லலை தாயே. நீயாச்சு உன் பிரண்டாச்சு உங்களுக்குள்ள நான் வரலை சாமி என்று பயந்தவனாய் சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

 

 

ஆராதனா அவளை நோக்கி எட்டு வைக்கும் முன்பே அவளருகில் வந்த யாழினி எதுவுமே பேசாமல் அவளை கட்டிக்கொண்டாள். “ஹேய் லூசு பொண்டாட்டி பார்த்துடி. அவங்க வயித்துல பிள்ளை இருக்கு நீ இந்த இறுக்கு இறுக்குற என்று உள்ளிருந்து எட்டிப்பார்த்து கிண்டலத்து நகர்ந்து விட்டான் சபரிதோழிகளுக்கு தனிமை கொடுத்து.

 

 

“ஏன்டி இப்படி பண்ணே?? அப்படி என்ன உனக்கு வீம்பு எங்க எல்லாரையும் விட்டுட்டு போய்ட்ட?? என்று ஆராதனாவின் தோளில் சாய்ந்து கண்ணீர் விட்டவாறே கேட்ட தோழியை நினைத்து மனம் உருகியது ஆராதனாவிற்கு.

 

 

தான் எவ்வளவு சுயநலமாய் இருந்திருக்கிறோம். எல்லாரையும் எவ்வளவு கஷ்டப்படுத்தியிருக்கிறோம் என்று புரிய நெஞ்சில் வலித்தது. “உனக்கு என் மேல கோவமில்லையாடி என்றாள் மெதுவாய்.

 

 

“அதெல்லாம் கொள்ளை கொள்ளையாய் இருக்கு. எதுவும் கேட்காத நல்லா திட்டிட போறேன் என்ற யாழினியின் பதில் அவளுக்கு சிரிப்பை கொடுத்தது.

 

 

“பரவாயில்லை திட்டிக்கோ, நான் கேட்டுக்கறேன் என்றாள்.

 

 

“இரு இரு எம் புருஷன் உன்னையும் என்னையும் பார்த்து கிண்டல் அடிச்சுட்டு இருக்கார். நான் இப்படியே உன்னை கட்டிப்பிடிச்சுட்டு இருந்தா ரொம்ப ஓவரா கலாட்டா பண்ணுவார் என்று சொல்லி தோழியிடமிருந்து விலகினாள் அவள்.

 

 

“ஆரு நீ வேணா போய் கொஞ்சம் ரெஸ்ட் எடேன்” என்றாள் யாழினி.

 

 

“உன்கிட்ட பேசணும், நான் பண்ணது தப்பு தான்டி யாழு. உன்கிட்ட நான் மன்னிப்பு கேட்கணும். ப்ளீஸ்”

 

 

“ஹேய் லூசு மாதிரி பேசாத, நீ எதுக்கு என்கிட்ட மன்னிப்பு கேட்கணும். நான்உன் மேல கோவமா எல்லாம் இல்லை”

 

 

“இங்கவே உட்கார்ந்து பேச வேண்டாம்.வாஎங்க ரூம்ல போய் பேசலாம்” என்ற யாழினி தோழியை அவள் அறைக்குள் அழைத்துச் சென்றாள். கட்டிலில் அமர்ந்திருந்த சபரி சட்டென்று எழுந்து நின்றான்.

 

 

“நாங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசணும். போங்க போய் கொஞ்சம் சில்லுனு சாத்துக்குடி ஜூஸ் கொண்டு வாங்க” என்று சபரியை விரட்டினாள் யாழினி.

 

 

ஆராதனாவிற்கு இருவரையும் பார்த்து வியப்பாய் தான் இருந்தது. சபரியை கோபக்காரனாய் பார்த்திருக்கிறாள் அவள். யாழினி சபரியிடம் இவ்வளவு கலகலப்பாக பேசுவதும் சபரி பதிலுக்கு அவளிடம் பேசுவதும் மனதிற்குள் நிறைவாய் இருந்தது.

 

“ஹலோ மேடம் என்ன கொஞ்சம் விட்டா ரொம்ப பண்றீங்க?? அண்ணிக்காக பார்க்கறேன்” என்றவன் அவளை செல்லமாய் திட்டிவிட்டு வெளியில்செல்ல போனான்.

 

 

“அப்போ ஜூஸ்??”

 

 

“அண்ணிக்கு மட்டும் தான், ஆனா அதை நான் எடுத்துட்டு வர்றதுக்குள்ள வேற ஒருத்தர் வந்து கொடுப்பார் பாரு” என்றுவிட்டு சென்று விட்டான் அவன்.

 

 

இருவரும் பேச ஆரம்பிக்கும் முன்னே அனீஷ் அங்கு வந்தான். சபரிசொன்னது போலவே ஆராதனாவை தேடி வந்த அனீஷ்அவளை சாப்பிட அழைத்து சென்றான்.

 

 

சாப்பிட்டதும்“கொஞ்சம் ரெஸ்ட் எடு ஆராதனா. நான் ஆஸ்பிட்டல் போயிட்டு வர்றேன்” என்று கிளம்பப் போனான்.

 

 

“உங்களுக்கும் தானே டயர்டா இருக்கும், கொஞ்சம் படுக்கலாமே” என்றவளை யோசனையுடன் பார்த்தான்.

 

 

“பரவாயில்லை நான் ஆஸ்பிட்டல் போகாம நெறைய நாளை கடத்திட்டேன். நெறைய வேலை இருக்கு, அலுப்பெல்லாம் பார்த்தா வேலைக்கு ஆகாது. நான் கிளம்பறேன், நீ ரெஸ்ட் எடு. ப்ளீஸ் சொன்னதை செய் ரெஸ்ட் எடு” என்று திரும்பவும் வற்புறுத்தி சொல்லிச் சென்றான்.

 

 

அவன் சொன்னதிற்காகவாவது படுக்க வேண்டும் என்று நினைத்து படுத்தவளுக்கு தன்னை மீறி உறக்கம் வந்திருந்தது. மாலை முடிந்து இரவு தொடங்கிய நேரம் தான் அவளுக்கு விழிப்பே வந்தது.

 

 

கண்ணை கசக்கி எழுந்து மணி பார்க்க மணி ஏழை நெருங்கியிருந்தது. மெதுவாய் எழுந்து குளியலறை சென்று முகம் கழுவி வெளியில் வந்தாள்.

 

 

திலகவதி அவளை கண்டதும் அருகில் வந்தார். “என்னம்மா ரொம்ப டயர்டா இருக்கா?? பால் சூடா எடுத்துட்டு வர்றேன் குடி” என்று உள்ளே விரைந்தார். அதற்குள்எதிரில் யாழினி அவளுக்கு பாலை எடுத்துக் கொண்டு வந்தாள்.

 

 

“அத்தை இருங்க நான் பால் எடுத்திட்டு வந்திட்டேன். நானே கொடுத்திர்றேன் நீங்க போய் கொஞ்சம் உட்காருங்க, ஏற்கனவே மூட்டு வலிக்குதுன்னு சொல்லிட்டு இருந்தீங்க” என்று மாமியாரை ஓய்வெடுக்கச் சொன்னாள்.

“என்னாச்சு அத்தை உங்களுக்கு மூட்டு வலியா?? எப்படி அத்தை??” என்று அவரருகே சென்றாள் ஆராதனா.

 

 

“அத்தை கோவிலுக்கு போன இடத்துல கால் இடறி கீழே விழுந்துட்டாங்க. அதுல இருந்து தான் இப்படி” என்றாள் யாழினி.

 

 

“இப்போ எனக்கு சரியா போச்சுடா. நான் நல்லா தான் இருக்கேன். யாழும்மா தான் என்னை விரட்டிட்டே இருக்கா. போய் ரெஸ்ட் எடுங்க ரெஸ்ட் எடுங்கன்னு” என்று மருமகளை செல்லமாய் வைதார்.

 

 

“இப்போ ரெஸ்ட் எடுத்தா தான் நாளைக்கு நீங்க எங்க பிள்ளைங்களோட விளையாட சரியா இருக்கும் அத்தை அதுக்கு தான் சொல்றேன்” என்றாள் யாழினியும் விடாமல்.

 

 

ஆராதனாவிற்கு இந்த வீட்டில் அவள் நெறைய இழந்துவிட்டதாக தோன்றியது. மருமகளைமகளாய் நினைக்கும் மாமியார், தன் மேல் உயிராய் இருக்கும் தோழி, சுற்றங்கள் எல்லோரின் அன்பையும் இழந்துவிட்டதாக தோன்றியது அவளுக்கு.

 

 

எல்லாவற்றுக்கும் மேலாக அவள் அனீஷின் இயல்பான கிண்டல் கேலிகளை எல்லாம் இழந்துவிட்டது அந்த கணம் பெரிதாய் அவளுக்குள் ஏக்கத்தை தோற்றுவித்தது.

 

 

“என்னடி நின்னுட்டே கனவு காணுற?? பாலை குடி நைட் உனக்கு என்ன வேணும் சொல்லு நான் செஞ்சு தர்றேன்” என்றாள் யாழினி.

 

 

“என்ன வேணாலும் செஞ்சு தருவியாடி”

 

 

“நீ கேளு என்னால முடிஞ்சதை செஞ்சு தர்றேன் போதுமா” என்று சிரித்தாள் யாழினி.

 

 

“பால் கொழுக்கட்டை நீ செய்வியே செஞ்சு தர்றியா??” என்றாள் ஆராதனா.

 

 

“இன்னும் ஞாபகம் வைச்சு இருக்கியாடி. நாம காலேஜ் படிக்கும் போது நீ கேட்பியேன்னு அடிக்கடி செஞ்சு கொண்டு வருவேன்”

 

 

“என் கூட நீ பேசாம போனதுக்கு அப்புறம் நான் அதை எவ்வளவு மிஸ் பண்ணியிருக்கேன் தெரியுமா” என்று பெருமூச்சு விட்டாள் ஆராதனா.

 

 

“சரி நீ உட்காரு நான் என்ன இருக்குன்னு பார்த்திட்டு சீக்கிரம் செய்யறேன்”

 

 

“ஹேய் வேணாம் யாழினி. இன்னைக்கு வேண்டாம் நாளைக்கு செஞ்சு கொடு. என்னமோ திடீர்ன்னு ஞாபகம் வந்துச்சு அதான் கேட்டுட்டேன். நீ கொஞ்சம் நேரம் என் கூட பேசிட்டு இரேன்”

 

 

“எனக்கு உன்கிட்ட நெறைய பேசணும். நாம பேசாம விட்ட எல்லாத்தையும் பேசணும், ப்ளீஸ்யாழு வா நாம கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம் அப்புறம் நானும் உனக்கு நைட் டிபன் பண்ண ஹெல்ப் பண்றேன்” என்றாள் ஆராதனா.

 

 

“இப்போவே நேரமாச்சு மாமாவும் அவரும் கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க. மாமாக்கும் அத்தைக்கும் இட்லி ஊத்திடறேன். நீ ஒண்ணு செய் என்னோட வந்து கிட்சன்\ல உட்கார்ந்துக்கறியா?? உனக்கு இந்த தாளிக்கிற வாசனை எல்லாம் பிடிக்காதுனா வேணாம்டி”

 

 

“கேள்விபட்டிருக்கேன் இந்த மாதிரி நேரத்துல இப்படி எல்லாம் இருக்குமாமே. உனக்கு இன்னமும் வாந்தி எல்லாம் வருதாடி ஆரு. நாங்க யாரும் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டியாடி எப்படிடி உன்னால எங்களைவிட்டு போக முடிஞ்சுது” என்று அவள் மனதில் உறுத்தலாய் இருந்ததை கேட்டாள் யாழினி.

 

 

“நீ ரெஸ்ட் எடு நாம பேச நெறைய நேரம் இருக்கு. நான் போய் நைட் சமையல் பார்க்கறேன்” என்று சமையலறைக்குள் நுழைந்தவளின் பின்னேயே ஆராதனாவும் சென்றாள்.

 

 

“யாழினி நான் செய்யட்டுமா”

 

 

“வேண்டாம் நீ ரெஸ்ட் எடு”

 

 

“நான் ஒண்ணும் பேஷன்ட் இல்லைடி. இப்போலாம் கொஞ்சம் வாமிட் குறைஞ்சுட்டு. நா… நான் சமைச்சு அவர் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு, ப்ளீஸ் நான் செய்யட்டுமா” என்று தயங்கி நின்ற ஆராதனாவை ஒன்றும் சொல்லாமல் அமைதியாய் பார்த்தாள் யாழினி.

 

 

“சரி செய் ஆனா உனக்கு என்ன வேணும் சொல்லு எல்லாம் நானே கட் பண்ணித் தர்றேன் சரியா”

 

 

தோழிகள் இருவருமாக பேசிக்கொண்டே சமைத்து முடித்தனர். இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது அனீஷ் வீட்டிற்கு வர. வந்ததும் அவன் கேட்ட முதல் கேள்வி “ஆராதனா சாப்பிட்டாச்சா” என்று தான்.

 

 

“அண்ணிக்கு அவங்க பிரண்டு ஊட்டி விட்டுட்டாங்க அனீஷ். நமக்கு தான் அந்த கொடுப்பினை எல்லாம் கிடையாதே. வா வா உனக்கு நான் டிபன் வைக்குறேன் எனக்கு நீ வை” என்று பேசிக்கொண்டே சபரி இருவருக்குமாய் எடுத்து வைத்தான்.

 

 

அனீஷ் அவர்கள் அறைக்கு சென்று ரெப்ரெஷ் செய்துக் கொண்டு வர சோபாவில் அமர்ந்திருந்த ஆராதனாவை கண்களால் பார்வையிட்டுக் கொண்டே உணவு மேஜையில் அமர்ந்தான்.

 

 

ஒரு வாய் எடுத்து வைத்ததுமே பொண்டாட்டியின் சமையல் என்பது புரிந்தது அனீஷிற்கு. அவனுக்கு பிடித்த மாதிரி வெங்காய சட்டினி அரைத்து சாம்பார் புதினா சட்டினி என்று வகைவகையாய் வைத்திருந்தாள்.

 

 

அவள் செய்தது எல்லாம் அவனுக்கு பிடித்தமானது. மனதில் ஏதோவொரு நிம்மதி பரவ எப்போதும் சாப்பிடுவதை விட இரண்டு இட்லி அதிகமாகவே சேர்த்து சாப்பிட்டான்.

 

 

படுக்க அவர்கள் அறைக்கு செல்லவும் ஆராதனாவும் பின்னோடு வந்தாள். அனீஷ் எதுவும் பேசுவானா என்று அவள் பார்க்க அவனோ எதுவும் பேசாமல் போர்வை ஒன்றை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த சோபாவில் படுத்துக் கொண்டான்.

 

 

“ஏன் இப்படி பண்றீங்க??” என்றாள்

 

 

“என்ன??”

 

 

“கட்டில்ல படுக்க வேண்டியது தானே??”

 

 

“என்னால அமைதியா படுக்க முடியாது. எனக்கு இப்போ தூங்கணும் குட் நைட். ஹ்ம்ம் சொல்ல மறந்திட்டேன் ராஜீவ்க்கு நான் போன் பண்ணி சொல்லிட்டேன். நீ வீட்டுக்கு வந்துட்டேன்னு யார் யார்கிட்ட சொல்லணுமோ சொல்லிட்டியா?? இல்லை வழக்கம் போல எல்லாரையும் மறந்துட்டியா??” என்றான் அவன்.

 

 

இதற்கு அவன் பேசாமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது அவளுக்கு. உள்ளுக்குள் அவன் பேச்சு வலித்தது. ஆனால் அவன் கூறியது சரி தானே அதை ஒத்துக்கொள்ள தான் அவளுக்கு மனமில்லை.

 

 

 

Advertisement