Advertisement

அத்தியாயம் – 28

 

 

அன்று இரவு உணவின் போது நாளை ஊருக்கு செல்லப் போகிறேன் என்று அனீஷ் சொன்னது ஏதோ உறுத்தலாக தோன்றியது ஆராதனாவிற்கு. மல்லிகா ஆராதனவிற்கு நேரமாகவே உணவு கொடுத்துவிட அவனுக்கு முன்பாகவே சாப்பிட்டுவிட்டு அவள் சென்றிருந்தாள்.

 

 

மல்லிகா அவனிடம் “எப்படி தம்பி போகப் போறீங்க. டிரைனா!! இல்லை பிளைட்டா?? என்றதும் அவரை வித்தியாசமாய் நோக்கினான் அவன். “எதுக்கும்மா கேட்கறீங்க?? என்றான் அவன்.

 

 

“பிளைட்ன்னா எப்படின்னு எனக்கு தெரியலை. டிரைன்னா பரவாயில்லை. ஆராம்மா கொஞ்சம் சாய்ஞ்சு ரெஸ்ட் எடுத்துக்குவாங்க. அதுக்கு தான் சொன்னேன் என்றார் அவர்.

 

 

“நான் மட்டும் தானேம்மா போறேன் என்றவனின் பேச்சு மெதுவாய் அவள் தலையில் இடி இறக்குவது போல் இருந்தது. இப்போது அனைவரும் அவனை வித்தியாசமாய் பார்த்தனர்.

 

 

அவர்களுக்கு அவனிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆராதனாவை கூட்டிச் செல்லுங்கள் என்று கேட்கவே தயக்கமாக இருந்தது. மது, நித்யா, மல்லிகா என மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

 

மல்லிகாவே தயங்கியவாறே பேச ஆரம்பித்த வேளை விருட்டென்று அவர்கள் அறையில் இருந்து ஆராதனா வெளியில் வந்தாள். “சாப்பிட்டீங்களா?? உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் வர்றீங்களா?? என்றாள் அனீஷை பார்த்து.

 

 

அவனும் கையை கழுவிட்டு அவள் பின்னோடு சென்றான். மற்றவர்கள் அவர்கள் பேசிக்கொள்ளட்டும் என்று அமைதியாகினர். “சொல்லு என்ன விஷயம்?? என்ன பேசணும் உனக்கு என்கிட்ட?? என்றான் அவன்.

 

 

“நீங்க மட்டும் தனியா ஊருக்கு போகப் போறீங்களா

 

 

“ஆமா நான் மட்டும் தான் போகப் போறேன். நீ கூப்பிட்டியேன்னு வந்தேன். வந்த வேலை முடிஞ்சுது அதான் கிளம்பப் போறேன் என்றான்.

 

“நானும் உங்ககூட ஊருக்கு வர்றேன். என்னை கூட்டிட்டு போவீங்களா?? மாட்டீங்களா?? என்று அவள் சொன்னதும் அவனுக்கு ஜிவ்வென்று தான் இருந்தது.

 

 

‘இதை உன் வாயால் நீயே சொல்ல வேண்டும் என்று தானே காத்திருந்தேன் என்று மனம் குதூகலித்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை அவன். அவளை வெறுமையாய் ஒரு பார்வை பார்த்தான்.

 

 

“நானும் வரேன்னு சொன்னேன் நீங்க பதிலே சொல்லலை. நான் வர்றதுல உங்களுக்கு இஷ்டமில்லையா?? என்றாள் உடைகின்ற குரலில்.

 

 

“நீயா வர்றேன்னு சொல்லும் போது நான் என்ன சொல்ல முடியும். ஏன்னா நான் உன்னை போக சொல்லலையே??

 

 

“எங்கம்மா வீட்டுக்கு போக சொன்னீங்களே?? என்றாள் சிறுகுழந்தையை போல்.

 

 

“ஒரு கோபத்துல போக சொன்னேன் தான். ஆனா உன்னை அனுப்பிடலையே

 

 

“நான் தான் தப்பு பண்ணிட்டேன்னு சொல்றீங்களா??

 

 

“நான் எதுவுமே சொல்லவேயில்லை?? நாம இப்போ இதைப்பத்தி பேச வேண்டாம், விட்டுடு. பேசினா வீணா விவாதங்கள் வரும், எனக்கு அதுல உடன்பாடு இல்லை என்று பேச்சை முடிக்க முயன்றான்.

 

 

“அப்போ என்னை கூட்டிட்டு போக மாட்டீங்க அப்படி தானே?? என்று ஆரம்பித்த இடத்திற்கே அவள் மீண்டும் வந்தாள்.

 

 

“இப்போ தானே என்னை கூட்டிட்டு போங்கன்னு கேட்டிருக்க… டிக்கெட் புக் பண்றேன். உன்னை நம்பி நான் டிக்கெட் போடலாம்ல என்றான்.

 

 

அவளுக்குள் சுருக்கென்று தைக்க அவன் எதுவுமே கேட்காதது போல அங்கிருந்து நகரப் போனான். சட்டென்று நினைவு வந்தவனாய் “உன்னை பத்தி மட்டுமே யோசிச்சியே?? உனக்காக இங்க வந்திருக்காங்களே அவங்களை பத்தி யோசிச்சியா??

 

 

அவனுடனே  ஊருக்கு கிளம்பிச் சென்றுவிட வேண்டும் என்று எண்ணியவளுக்கு அதை தவிர வேறு ஒன்றும் ஞாபகத்திலேயே இல்லை.

 

 

அவன் அப்படி கேட்டதும் அவனை பார்த்து திகைத்து விழித்தாள். “எப்போமே பாதியில விட்டுட்டு போறது தான் உனக்கு பழக்கம்ல நறுக்கென்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் அவன்.

 

 

அவளுக்கு தான் மேலும் மேலும் குற்றவுணர்வாக இருந்தது. தனக்காக தானே அவர்கள் இங்கு வந்தார்கள். அவர்களை எப்படி மறந்தேன், நான் ஏன் இப்படி சுயநலமாக ஆகிவிட்டேன்.

 

 

என் குணமே இப்படி மாறிவிட்டதே. எல்லாமே என் வீண் பிடிவாதத்தால் தான் என்று எண்ணியவள் தன்னை எண்ணியே நொந்து கொண்டாள். அவர்களை பாதியில் விட்டுச் செல்லவும் முடியவில்லை.

 

 

அனீஷிடம் இப்போது போய் பிறகு வருகிறேன் என்றால் குத்திக்காட்டுவான் என்ற பயம் பாதி குற்றவுணர்வு மீதி என்று அவளை கொல்லாமல் கொன்றது.

 

 

ஏதோ எண்ணம் தோன்ற சுனீஷுக்கு அழைத்துப் பார்த்தாள் அவனின் எண் சுவிட்ச் ஆப் என்று வந்தது. ‘கடவுளே நான் என்ன செய்வேன் என்று தலையை பிடித்து அமர்ந்திருந்தவள் கண்ணில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

 

 

அப்போது அறைக்குள் மீண்டும் வந்தான் அனீஷ். “உன்னையே ரொம்ப கஷ்டப்படுத்திக்காத, போதும் விட்டுடு என்று பொதுவாக கூறியவன்உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும். உண்மையை சொல்லுவியா?? என்றான்.

 

 

கண்ணீர் நிறைந்த விழிகளோடு இன்னும் என்ன கேட்டு என் மனதை அறுக்கப் போகிறானோவென எண்ணியவாறே அவனை பார்த்தாள். இப்படி என்றுமே அவன் சுருக்கென்று அவளிடத்தில் பேசியவனில்லை.

 

 

எல்லாவற்றுக்கும் தான் தான் காரணம் என்று தெரிந்தாலும் அவன் அளந்து பேசும் ஓரிரு வார்த்தைகள் கூட அவளை சுருக்கென்று தைப்பதாகவே இருந்தது.

 

 

அவன் ஏதோ கேட்கிறேன் என்று சொல்லிவிட்டு எதுவும் கேட்காமலே இருக்கிறானே என்று தோன்ற அவன் முகத்தை பார்த்ததால். அவனோ அவள் எதுவும் சொல்லுவாள் என்று எண்ணி அவனை பார்க்க தன் பதிலுக்காய் அவன் காத்திருக்கிறான் என்பது புரிய “என்னன்னு சொல்லுங்க, எனக்கு தெரிஞ்சதை சொல்லுறேன் என்றாள்.

 

 

“அந்த பொண்ணு மதுவை நாம இதுக்கு முன்னாடி பார்த்திருக்கோம் தானே!! என்றதும் ‘ஆஹா இவருக்கு ஏதோ சந்தேகம் வந்துவிட்டது போலிருக்கிறதே என்று எண்ணியவள் “ஆமாம் பார்த்திருக்கோம் என்றாள்.

 

 

“சுனீஷ்க்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்கா என்று நேரடியாகவே விஷயத்திற்கு வந்துவிட்டான் அவன்.

 

 

“ஹ்ம்ம் ஆமா அவங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்பறாங்க என்று தயங்கி தயங்கி சொல்லியே விட்டாள்.

 

 

“உனக்கு எப்போ தெரியும்?? என்று கேட்க அவள் நடந்ததை சொல்லவும் “அப்போ உனக்கு முன்னாடியே தெரியும்

 

 

“என்கிட்ட சொல்லணும்ன்னு உனக்கு தோணவேயில்லையா?? நான் உனக்கு  எங்க என்ன குறை வைச்சேன் என் மேல உனக்கு நம்பிக்கை இல்லாம போக என்றவனின் குரலில் அப்பட்டமான வலி தெரிந்ததை அவளால் உணர முடிந்தது.

 

 

“இல்லை அது வந்து அன்னைக்கு அந்த ஹோட்டல்ல சுனீஷ் அந்த பொண்ணை அறிமுகப்படுத்தும் போது நீங்களும் உங்க தம்பியும் கொஞ்சம் கூட திரும்பி பார்க்கவேயில்லை

 

 

“நீங்க ஏதோ கவுரவம் பார்க்கிறா போல தோணுச்சு. அதான் அவரும் யோசிச்சார், நானும் உங்ககிட்ட சொல்ல அதுக்கு தான் தயங்குனேன். அவங்க பாவம் ஒண்ணா சேரணும் ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க நான் உங்ககிட்ட சொல்லலைன்னு. அவங்களை சேர்த்து வைச்சுடுங்க என்றாள்.

 

 

“என்னை நீ என்னன்னு நினைச்சுட்டு இருக்க, அரக்கன்னா?? ஒத்துக்கறேன் நான் கொஞ்சம் ஏற்றத்தாழ்வு பார்க்கற ஆளு தான்னு. ஏன்னா நான் வளர்ந்த விதம் அப்படி

 

 

“எங்களோட ஸ்கூல்ல படிச்ச பசங்கள்ள இருந்து எல்லாருமே ரிச்சா தான் இருந்தாங்க. அதனால தான் அப்படி ஒரு மனோபாவம் எனக்கு. ஆனா நான் எல்லா நேரமும் அப்படி இருந்ததில்லை

 

 

“நல்லா வசதியா இருக்கணும்ன்னா நான் ஏன் உன்னை கல்யாணம் பண்ணேன். நீங்க நார்மல் பாமிலி தானே. எனக்கு பொண்ணு பார்க்கும் போது நான் அம்மாகிட்ட சொன்னது ஒரு விஷயம் தான்

 

 

“பொண்ணு வசதியா இருக்கணும்ன்னு அவசியமில்லை. என் மனசுக்கு பிடிச்சிருக்கணும்ன்னு மட்டும் தான் சொன்னேன். உன்னை பார்த்தேன் பார்த்ததும் பிடிச்சுது

 

 

“உன்னை அடிக்கடி பார்க்கணும்ன்னு தோணிச்சு. அதான் உங்கண்ணன்கிட்ட சொல்லி உனக்கே தெரியாம உன்னை போட்டோ எடுத்து எனக்கு அனுப்பச் சொன்னேன்

 

 

“என்னை பார்த்து ஏதோ காதலுக்கு எதிரி போலவும், சினிமா வில்லன் போலவும் பேசுறியே ஆராதனா, ஏன்?? இதை எல்லாம் இப்போ ஏன் உன்கிட்ட சொல்லுறேன் தெரியலை.

 

 

“நான் சொன்னாலும் உனக்கு புரிய போறதில்லை விடு, ஆனா என்னை யாரும் இந்தளவுக்கு கீழ்த்தரமா நினைச்சதே இல்லை

 

 

“நான் பதில் பேசினா உனக்கு ரொம்ப வலிக்கும் அதனால தான் பேச வேண்டாம் பேச வேண்டாம்ன்னு அமைதியா இருக்கேன். நீ மேல மேல என்னை காயப்படுத்துற மாதிரியே பேசிட்டு இருக்க என்றவன் வலியுடன் கண்களை ஒருமுறை இறுக மூடித் திறந்தான்.

 

 

ஆராதனாவிற்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. முன்னே சென்றால் முட்டுவது போலவும் பின்னே சென்றால் இடிப்பது போலவும் இருந்தது அவள் நிலைமை. எதுவும் வாய் திறந்து பேசவே பயமாக இருந்தது.

 

 

“சரிவிடு நீ என்ன பண்ணுவ?? நீ தான் என்னை புரிஞ்சுக்கவேயில்லையே அப்புறம் உன்னை சொல்லி என்ன பண்ண?? என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டான் அவன்.

 

 

அவனை எப்படி சரிசெய்வது என்று ஆராதனா கலங்கி தவித்தாள்.

 

 

“நாளைக்கு காலையில சுனீஷ் வருவான். அவனுக்கு பொண்ணை பிடிச்சிருந்தா போதும். அவங்க வசதி எல்லாம் நமக்கு முக்கியமில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம அவங்க உன்னை நல்லா பார்த்துகிட்டாங்க

 

 

“அதுவே எனக்கு போதும், அவங்க பொண்ணு நம்ம வீட்டில வந்து நல்லபடியா நாம பார்த்துக்கணும். நான் அம்மாகிட்ட இப்போ தான் பேசினேன், வீட்டில எல்லாருக்கும் சம்மதம் தான்

 

 

“ஊருக்கு போனதும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவங்க நிச்சயத்தை முடிச்சிடலாம். குழந்தை பிறந்த பிறகு கல்யாணம் வைச்சுக்கலாம்ன்னு அம்மா சொல்லிட்டாங்க என்று பேசிக்கொண்டே போனான்.

 

 

அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லாது போக “நான் பேசிட்டே இருக்கேன். நீ பதிலே பேசலை, சரி நீ போய் படு என்றுவிட்டு அவனும் கீழேயே விரிப்பை போட்டு படுத்துக்கொண்டான்.

 

 

ஆராதனாவிற்குள் பெரும் யோசனையும் குழப்பமும் பயமும் தவிப்புமாய் இருந்தது எப்படி அனீஷை சமாதானம் செய்யப் போகிறோம் என்பதே அது. அவன் நறுக்கென்று கேட்கும் ஒரு கேள்விக்கு கூட அவளால் சமாதானம் சொல்ல முடியவில்லை.

 

 

தான் எங்கேயோ செய்த தவறு தன்னை பேச்சிழக்க செய்கிறது என்பது மட்டும் புரிவதாய் இருந்தது.கண்ணை மூடி தூங்குவதாக பாசாங்கு செய்தவளுக்கு நித்திரையும் தொலைந்தது.

 

 

எப்போது கண்ணயர்ந்தாளோ அவள் எழும் போது சுனீஷின் குரல் வெளியில் கேட்கவும் அனீஷ் அவனை வரவைத்திருக்கிறான் என்று தெரிந்து கொண்டாள்.

 

 

குளியலறை சென்று காலை கடமைகளை முடித்துவிட்டு குளித்து வெளியில் வரும் வேளை அவளுக்குள் திடீரென்று ஒன்று உரைத்தது. அனீஷுக்கு ஏற்கனவே தான் இருக்குமிடம் தெரியுமோ என்பது தான் அது.

 

 

சில நாட்களாகவே அவள் மனதிற்குள் தோன்றும் எண்ணம் தான் அதுவென்றாலும் ஏனோ இக்கணம் அண்ணன் தம்பி இருவரையும் சம்மந்தப்படுத்தி பார்க்க வைத்தது.

 

 

அதை அவளுக்கு தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்று தோன்றினாலும் அதைப்பற்றி சுனீஷிடம் கேட்பதா!! அனீஷிடம் கேட்பதா!! என்று வேறு ஒரு குழப்பம், இப்போதைக்கு அதை ஒத்திப்போட்டு தன் கணவன் அவன் தம்பியை எதற்கு வரவழைத்திருப்பான் என்று பார்க்க வெளியில் சென்றாள்.

 

 

ஆராதனாவை கண்டதும் சுனீஷ் பொறியில் அகப்பட்ட எலி போல் திருதிருவென்று விழித்தான். ‘இவரு ஏன் இப்படி முழிக்குறார் என்று தோன்றவும் அதை மனதிற்குள் குறித்துக் கொண்டு “இப்போ தான் வந்தீங்களா?? என்று முகமன் விசாரித்தாள் அவள்.

 

 

“ஹ்ம்ம் ஆமா அண்ணி நேத்து நைட் அண்ணா போன் பண்ணி அவசரமா வரச்சொன்னாங்க. அதான் பஸ் பிடிச்சு வந்தேன் என்றுவிட்டு அண்ணன் முகத்தை பார்த்தான்.

 

 

“உங்கண்ணி எதுவும் சொல்ல மாட்டா?? நீ எதுக்கு அவளை பார்த்து இப்படி முழிச்சு வைக்குற?? எதுவா இருந்தாலும் இனி நான் பேசிக்கறேன் அவகிட்ட, சோ நீ அந்த கவலையை விடு

 

 

“உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும் அதுக்கு தான் வரச்சொன்னேன் என்று நிறுத்தினான் அனீஷ்.

 

 

அனீஷின் பேச்சில் இருந்தே அவளுக்கு புரிந்து போனது சுனீஷ் தன் இருப்பிடம் பற்றி முன்பே தன் கணவனிடம் கூறியிருக்கிறான் என்று. ஆனால் இதை ஏன் அவன் என்னிடம் சொல்லவேயில்லை என்று யோசித்தாள்.

 

 

“சொல்லுங்கண்ணா என்ற சுனீஷின் பதிலில் அவள் எண்ணமும் தடைபட “வா அப்படி வெளிய போய் பேசுவோம் என்று அண்ணன் தம்பி இருவருமாக வெளியில் சென்றுவிட்டனர்.

 

 

“மதுமிதா யாரு?? என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான் மூத்தவன்.

 

 

‘ஆஹா அண்ணி அண்ணாகிட்ட சொல்லிட்டாங்க போலவே. ஒரு வார்த்தை எனக்கு போன் பண்ணி சொல்லியிருக்க கூடாதாஎன்று எண்ணிக் கொண்டவன் நேரடியான அண்ணனின் கேள்விக்கு நேராகவே பதில் சொன்னான்.

 

 

“நான் காதலிக்கிற பொண்ணு, உங்க எல்லார் சம்மதம் கிடைச்சதும் நம்ம வீட்டுக்கு மருமகளா வரப் போற பொண்ணு என்று நச்சென்று பதில் கொடுத்தான்.

 

 

இளையவன் கொடுத்த பதிலில் லேசாய் சிரிப்பு வந்தாலும் அவன் தைரியத்தை உள்ளுக்குள் மெச்சிக்கொண்டு வெளியில் எந்த பாவமும் காட்டாமலே நின்றான் அனீஷ்.

“ஓ!! ஓஹ்!! இது எப்போ இருந்து??

 

 

“இப்போ சில மாதமா தான்

 

 

“எங்ககிட்ட எல்லாம் உனக்கு சொல்லணும்ன்னு தோணவேயில்லைல. உங்கண்ணி தான் இப்போ உங்களுக்கு எல்லாமே அப்படி தானே. உன்கிட்ட எனக்கு பிடிச்சதே தப்பை கூட நேருக்கு நேரா சொல்லுற அந்த குணம் தான்

 

 

“உன்னோட அந்த குணம் எப்போ மாறிச்சு சுனீஷ். எங்களை விட்டு தனியா போகணும்னு முடிவு பண்ணப்ப கூட எல்லார்கிட்டயும் சொல்லிட்டு தானே போனே. இப்போ மட்டும் என்னாச்சு உனக்கு

 

 

சுனீஷ் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவனுக்கு என்ன பதில் சொல்வது என்ற தடுமாற்றம் வந்தது அவனுக்கு. ஊட்டியில் முன்பொருமுறை மதுமிதாவை அறிமுகப்படுத்த முயன்ற போது அலட்சியம் காட்டினார்களே அதனால் தானே இதை அவர்களிடம் சொல்லாமல் விடுத்தோம் என்று எண்ணியவன் அதையே அண்ணனிடம் கூறவும் செய்தான்.

 

 

“உங்க அண்ணியும் நீயும் எதுல ஒற்றுமையா இருக்கீங்களோ தெரியாது ஆனா என்னை புரிஞ்சுக்காம இருக்கறதுல மட்டும் ஒண்ணாவே இருக்கீங்க

 

 

“உனக்கு பிடிச்ச பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கறதை நாங்க எப்படி வேணாம்ன்னு சொல்லுவோம்ன்னு உனக்கு தோணிச்சு. இவ்வளவு நாளா தான் எங்ககிட்ட சொல்லலை சரி ஆனா உங்கண்ணிக்கு துணையா அவங்களை வைக்கும் போதாவது என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல

 

 

“அண்ணா அன்னைக்கு நீயும் சபரி அண்ணாவும் அவகிட்ட முகம் கொடுத்து பேசக்கூட தயாரா இல்லை. அப்புறமும் நான் எப்படி உங்ககிட்ட சொல்லுவேன் நீங்களே சொல்லுங்க

 

 

“இங்க பாரு நாங்க எப்பவுமே இப்படி தானே புதுசாவா நீ எங்களை பார்க்கற. இதுக்காக எல்லாம் உன்னோட விருப்பத்தை நாங்க மதிக்காம இருப்போமா. உனக்கு சரின்னு பட்டதையே நீ சொல்லிட்டு செய்யும் போது இதை நீ மறைக்க வேண்டிய அவசியமில்லைன்னு தான் இவ்வளவு தூரம் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்

 

 

“உண்மையாவே எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு சுனீஷ். இவ்வளவு தூரம் எல்லாரும் என்னைவிட்டு விலகி போற அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணேன்

 

 

“உங்கண்ணி என்னோட கோயம்புத்தூர் வர்றேன்னு சொல்லிட்டா?? இப்போ மல்லி அம்மாவையும் மதுவையும் என்ன பண்ணறதா உத்தேசம் எதுவும் ப்ளான் பண்ணியிருக்கியா??

 

 

“என்னது அண்ணி வர்றேன்னு சொல்லிட்டாங்களா?? எப்படிண்ணா??

 

 

“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் சுனீஷ், நான் இன்னைக்கு நைட்டே ஊருக்கு கிளம்பலாம்ன்னு இருக்கேன். சொல்லு மல்லி அம்மா மதுவுக்கு என்ன வழி

 

 

“நான் அதை பத்தி யோசிக்கவே இல்லையே அண்ணா

 

 

“உங்க அண்ணியும் கூட அவங்களை பத்தி யோசிக்கவே இல்லை. சரி அவங்ககிட்ட இப்போ பேசுவோம். பேசிட்டு அவங்களை திரும்பவும் ஊட்டிக்கு அனுப்பி வைச்சுடலாம். அப்புறம் மதுவை நம்ம ஸ்கூல்லை பார்த்துக்க சொல்லு. வெளிய எங்கயும் வேலைக்கு போக வேண்டாம், சரியா??

 

 

“எல்லாம் சரி தான் அண்ணா, நீ இவ்வளவு தூரம் மிது பத்தியும் மல்லிகாம்மா பத்தியும் சொன்னியே. நித்யாவை மறந்துட்டியே என்று எடுத்துக் கொடுத்தான் சுனீஷ்.

 

 

“அதை நான் யோசிக்காம இருப்பேனா?? நித்யாவை நீ வரும் போது கோயம்புத்தூர்க்கு கூட்டிட்டு வந்திடு

 

 

“அய்யோ அண்ணா அவ அப்படி எல்லாம் வரமாட்டா. ஒண்ணு இங்க இருப்பா இல்லைன்னா சென்னைக்கே போய்டுவேன்னு ஏற்கனவே என்கிட்ட சொல்லிட்டு இருந்தா

 

 

“சரி நீ அவகிட்ட பேசவேணாம் நானே அவகிட்ட பேசிடறேன்

 

 

அண்ணன் தம்பி இருவருமாக பேசி முடித்து மல்லிகா, மதுமிதா, நித்யா எல்லோரையும் அழைத்து விஷயத்தை சொல்ல மதுமிதா இப்போ தான் புது வேலையில் சேர்ந்ததனால் உடனே வேலையை விட முடியாது என கூற அனீஷ் தம்பியிடம் சொல்லி அந்த ஹோட்டலில் நேராக சென்று பேசி வேலையைவிட்டு வர அனுமதி வாங்க சொன்னான்.

 

 

“அப்புறம் நித்யா நீ இப்போவே எங்களோட கோயம்புத்தூர் வர்றியா, இல்லை சுனீஷ் வரும் போது வந்திடறியா?? என்றான்.

 

 

“நான் எதுக்குண்ணா உங்க கூட, நான் சென்னைக்கு போய்டுவேன். எப்பவும் போல அங்க ஒரு வீடு எடுத்து இருந்துக்குவேன் அண்ணா என்றாள்.

 

 

“இவ்வளவு நாள் தான் நீ தனியா இருந்த. அப்படி நீ இதுவரைக்கும் இருந்ததெல்லாம் போதும். உனக்குன்னு இனி யாருமே இல்லைன்னு நீ எப்பவும் நினைக்க வேண்டாம்

 

 

“எனக்கு இப்போ அந்த மாதிரி கவலையெல்லாம் கிடையாது அண்ணா. அதான் நீங்க எல்லாரும் இருக்கீங்களே எனக்கு

 

 

“நாங்க அண்ணனுங்க மூணு பேரு இருக்கோம்ன்னு நினைச்சுக்கோ. கூடவே அம்மா அப்பா எல்லாரும் இருக்காங்க சரியா. நீ ஊருக்கு வாயேன் வந்து ஒரு மாசம் தங்கிட்டு போ சரியா… என்று முடித்துவிட்டான்.

 

 

“அண்ணா… அது… அதெல்லாம்.. என்று இழுக்க “நீ வர்றே அவ்வளவு தான் என்றவன் மேற்கொண்டு அவள் பேச்சு எதையும் கேட்க தயாராகவே இல்லை.

 

 

நடப்பது அனைத்தும் ஒரு பார்வையாளராக இருந்து ஆராதனா பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு பொறாமையாக இருந்தது சுனீஷ், நித்யா மேல். எப்படிப்பட்ட அன்பை தனக்கு உரியவர்களிடம் செலுத்துகிறான் தன் கணவன் என்றதில் வந்த பொறாமை அது.

 

 

தன் மேலும் அவன் அன்பை பொழித்திருக்கிறான் தான். தன்னால் தான் அதெல்லாம் இப்போது இல்லாமல் போய்விட்டது என்று தன்னை எண்ணி தானே மீண்டும் நொந்து கொண்டாள்.

 

 

லேசாக கண்ணை கரித்தது அவளுக்கு. அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் அவள் அறைக்குள் சென்று ஒரு மூச்சு அழுதாள்.

 

 

‘இனி பழைய மாதிரி அவன் பேசுவானா??தன் மேல் அன்பு காட்டுவானா?? என்று ஏங்கித் தவித்தது மனது.

 

இவ்வளவு யோசித்தவளுக்கு இன்னமும் அவனை பற்றி புரியவேயில்லை. அல்லது புரிந்து கொள்ள முயற்சிக்கவே இல்லையோ…

 

 

தன்னைப்பற்றியே எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு அவன் புறம் இருந்து யோசிக்கும் திறன் இல்லாமல் போய்விட்டது போலும். அனீஷ் கிளம்பும் முன் மல்லிகாவை தனியே அழைத்து சுனீஷ் மது விஷயம் பேசிவிட்டு ஊருக்கு சென்றதுமே முறைப்படி வந்து பேசுவதாக உறுதி கூறிவிட்டே கிளம்பினான்.

 

 

மல்லிகா, மது, நித்யா மூவரும் ஒரு வாரமோ பத்து நாட்களோ அங்கிருந்து எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு சுனீஷுடன் கிளம்புவதாக இருந்தது. அனீஷ் மறுநாள் காலை ரயிலில் ஆராதனாவை அழைத்துக்கொண்டு கோவைக்கு பயணித்தான். முதல் வகுப்பு பெட்டியிலேயே இருவருக்குமாய் பதிவு செய்திருந்தான்.

 

 

அவனிடம் நெறைய பேச வேண்டும் என்று மனதிற்குள் எண்ணங்கள் முட்டி மோதிக் கொண்டிருந்தாலும் எதுவுமே பேச முடியாமல் அமைதியாகவே இருந்தாள் அவள்.

 

 

இன்னமும் அவளுக்குள் அவள் எண்ணத்தில் தவறில்லை என்ற எண்ணம் எங்கோ ஊறிப்போய் இருக்கிறது போலும். தன் ஈகோவை உடனே விட்டுத்தரவும் முடியவில்லை.

 

 

ஈகோவிட்டு அவனிடம் பேசவும் முடியவில்லை. இருதலை கொல்லி எறும்பு போல மனம் அங்குமிங்கும் அலைபாய்ந்தது. உண்மையிலேயே அவனை அவள் மனம் தேட ஆரம்பித்ததினால் தான் மருத்துவமனையில் சட்டென்று யோசிக்காமல் அவனை அழைக்க முடிந்தது அவளால்.

 

 

Advertisement