Advertisement

அத்தியாயம் – 27

 

 

நித்யாவிடம் தான் அங்கு வருவதாக பேசிவிட்டு போனை வைத்தவன் நடந்துக் கொண்டிருந்த கலந்துரையாடலை வேறு ஒரு மருத்துவரை கூப்பிட்டு பார்க்க சொல்லிவிட்டு டிராவல்ஸ்க்கு போன் செய்து மங்களூருக்கு டிக்கெட் பதிவு செய்தான்.

 

 

பதினொன்று இருபதுக்கு அவனுக்கு பெங்களூர் செல்ல விமானத்திற்கு பதிந்திருக்க மருத்துவமனையில் இருந்து நேராக விமான நிலையம் சென்றவன் போகும் வழியிலேயே சபரியை கூப்பிட்டு சொல்லிவிட்டு கிளம்பினான்.

 

 

கோவையில் இருந்து மங்களூருக்கு நேரடி விமானம் இல்லாத காரணத்தினால் பெங்களூர் சென்றவன் அங்கிருந்து மாலை ஆறு மணிக்கு மங்களூர் செல்லும் விமானம் பிடித்து இதோ வந்து இறங்கியும் விட்டான்.

 

 

சொன்னபடி மங்களூர் வந்து சேர்ந்தான் அவன். நித்யாவிடம் பேசி அவளை விமான நிலையத்திற்கு அழைத்து வரச் சொல்லியிருந்தாலும் மனதிற்குள் ஒரு அலைப்புறுதல் இருந்துக் கொண்டிருந்தது அவனுக்கு.

 

 

ஆராதனா எப்படி அவனை எதிர்கொள்ளுவாள், தான் அவளை எப்படி எதிர்கொள்வோம் என்பதே அது. விமானம் விட்டு இறங்கியதும் பெங்களூரில் இருக்கும்போது நித்யா அழைத்த அவளுடைய எண்ணிற்கு அழைத்தான்.

 

 

அவளிடம் பேசிவிட்டு அவர்கள் இருந்த இடத்தை நோக்கி வர தூரத்திலேயே ஆராதனாவை கண்டுவிட்டவனுக்கு இதயம் வேகமாய் துடிக்க ஆரம்பித்தது. முகம் அழுததில் வீங்கியிருக்க லேசாய் மேடிட்டிருந்த வயிற்றுடன் கண்களில் ஜீவனில்லாமல் எங்கோ வெறித்திருந்தவள் கண்ணில்பட்டாள்.

 

 

அப்போது தான் வேறு பக்கம் பார்வையை திருப்பியிருந்த ஆராதனாவின் பார்வை அவன் புறம் திரும்பியது. அவனை கண்டதும் அவள் கண்கள் ஒளிர்ந்ததை தூரத்திலேயே அவனால் உணர முடிந்தது.

 

 

அவள் மேல் எவ்வளவு கோபமிருந்தாலும் தன்னைக் கண்டு அவள் விழிகளில் தெரிந்த ஆர்வத்தில் பெருமிதம் கொண்டது அவன் மனது. இதெல்லாம் என்ன பெரிது என்பது போல் இருந்தது அடுத்து அவள் செய்தது.

 

 

கண்களின் ஆர்வம் உடல் முழுதும் பாய வேகமாய் ஓடிவந்து அவனை கட்டிக்கொண்டாள் அவள். அவன் மார்பில் சாய்ந்து கண்ணீர் சிந்தியவளின் கண்ணீர் அவன் சட்டையை நனைக்க அதன் ஈரம் உணர்ந்து அவளை நிமிர்த்தினான்.

 

 

அவன் உள்ளம் முழுக்க அவளால் வலிகள் ஏற்பட்டிருந்தாலும் எப்போதும் போல் எதையும் வெளிக்காட்டாது, “அதான் நான் வந்துட்டேன்ல, போகலாமா?? என்றான் உணர்சிகளை உள்ளடக்கி.

 

 

அப்போது தான் அனீஷை அடையாளம் கண்டு அருகே வந்தாள் நித்யா. “போகலாமா அண்ணா?? என்று. அவளுக்கு ஆம் என்பதாய் தலையசைத்தவன் ஆராதனாவையும் அழைத்துக் கொண்டு காரியில் ஏறியமர்ந்தான்.

 

 

ஆராதனாவிற்கு அவன் தான் கூப்பிட்டதும் வந்துவிட்டான் என்பதிலேயே மனதில் நிம்மதி வந்திருந்தது. அவனுக்கும் மனமென்ற ஒன்றிருக்கும் தன்னால் அவனும் வேதனைக் கொண்டிருப்பான் என்பதெல்லாம் அக்கணம் அவள் எண்ணத்தில் தோன்றவேயில்லை.

 

 

தன் நிலையில் இருந்து மட்டுமே பார்த்தவளுக்கு அருகிருந்தவன் வலி புரியாமல் போனது. அவன் சமாதானமாகி வந்திருக்கிறான் என்று நினைத்தவள் அறியவில்லை, அழும் குழந்தையை சமாதானம் செய்யும் தாயை போல தன்னை அவன் சமரசம் செய்ய வந்திருக்கிறான் என்று.

 

 

வரும் வழியெங்கும் அமைதியே ஆட்சி செய்ய “இந்த ஹோட்டல்கிட்ட நிறுத்துங்க என்ற அவன் குரல் மௌனத்தை கலைத்தது.

 

 

“எதுக்குண்ணா இங்க இறங்குறீங்க?? நாம வீட்டுக்கு போய்டலாம் என்ற நித்யாவிடம் “இல்லைம்மா நான் இங்கயே தங்கிக்கறேன் என்றான் அவன் ஒட்டாமல்.

 

 

ஆராதனாவோ “என்னாச்சுங்க, ப்ளீஸ் நீங்க வீட்டுக்கு வாங்க. நான் உங்ககிட்ட நெறைய பேசணும், நெறைய சொல்லணும் என்றவளின் குரல் உடைய ஆரம்பித்தது.

 

 

‘வீட்டிற்கு கூட அப்பெண் அழைத்த பின் தான் அழைக்க இவளுக்கு தோன்றியதா என்று அறிவு கேள்வி கேட்டாலும் பாழாய் போன மனதோ தன்னவளின் மனம் புண்படக்கூடாது என்றெண்ணி அரைகுறையாய் தலையசைத்து தன் சம்மதம் சொன்னது.

 

ஒருவழியாக அவர்கள் வீட்டிற்கு வந்து சேர ஒன்பது மணிக்கு மேல் ஆகியிருக்க அவர்களை எதிர்பார்த்தாற்போல் அமர்ந்திருந்த மல்லிகாவும் மதுவும் வாசலிலேயே நின்றிருந்தனர்.

 

 

மதுவை பார்த்து ஒரு கணம் நெற்றி சுருக்கி யோசித்தவன் அவன் எண்ணத்தை ஒதுக்கி அவர்களை பார்த்து மெலிதாய் புன்னகைத்தான். மல்லிகாவும் மதுவும் சூடாய் பரிமாற மூவரும் உணவருந்தினர்.

 

 

அன்று முழுதும் ஆராதனா சற்று கூட இளைப்பாறவில்லை, நடந்தும் அமர்ந்தும் கழித்த பொழுதுகள் அதிகம் என்பதால் அவள் பாதம் வீக்கம் கண்டிருந்தது. அனீஷே அதை முதலில் கண்டான்.

 

 

பின் மல்லிகாவிடம் திரும்பி “அம்மா கொஞ்சம் வெந்நீர் வைச்சு கொடுக்கறீங்களா?? ஆராதனாவுக்கு கால் வீக்கம் கண்டிருக்கு எனவும் அவரும் வேகமாய் வந்து பார்த்துவிட்டு “என்னம்மா நீ எதுக்கும்மா கூடவே அலைஞ்ச, நீ வீட்டுக்கு வந்திருக்கலாம்ல. பாரு காலு வீக்கம் வந்திருச்சு

 

 

“நான் வெந்நீர் போட்டு கொண்டு வரேன் என்று அக்கறையாய் பேசிவிட்டு நகர்ந்தார் அவர். வெந்நீர் போட்டு கொண்டு வந்தவர் ஒரு அகல பாத்திரத்தில் வெந்நீரை ஊற்றி அவள் பாதத்தை அதில் வைக்கச் சொன்னார்.

 

 

அனீஷ் அவர்கள் படுக்க போகச் சொன்னவன் தானே பார்த்துக் கொள்வதாக கூறிவிட்டு சோபாவின் கீழே அமர்ந்து அவள் பாதத்தை எடுத்து சூடு பார்த்துவிட்டு வெந்நீரில் வைத்தான்.

 

 

“வேணாங்க நான் வைச்சுக்கறேன் என்று காலை அவள் நகர்த்தப் போக “இப்போவாச்சும் நான் சொல்றதை கேளுஎன்று அழுத்தமாய் அவன் சொல்லவும் அமைதியானாள்.

 

 

“தம்பி நீங்களே பிளைட்ல வந்தது அலைச்சலா இருக்கும். உங்களுக்கு ஏன் சிரமம் நான் பார்த்துக்கறேன் நீங்க போய் ரெஸ்ட் எடுங்க என்றார் மல்லிகா.

 

 

“ஆமா அண்ணா நாங்க பார்த்துக்கறோம். நீங்க போங்க, போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க என்றாள் நித்யா.

 

 

“பரவாயில்லைம்மா அவளை நான் பார்த்துக்கறேன். இதுவரைக்கும் உங்க எல்லாருக்கும் ரொம்ப சிரமம் கொடுத்திட்டோம். நாளைக்கு பேசிக்கலாம் நீங்க போய் படுங்க என்றான் அவன்.

அவளுடனே இருந்து அவள் பாதம் பிடித்துவிட்டு ஒருவாறு அவர்கள் உறங்கச் செல்ல இரவு பத்தரை மணியானது. அவன் போட்டிருந்த உடையுடனே வந்திருந்ததை அப்போது தான் கவனித்தாள்.

 

 

“உங்களுக்கு மாத்திக்க எடுத்துட்டு வரேன் என்று எழுந்தவளை “எதுவும் வேண்டாம் காலையில போய் நான் வாங்கிக்கறேன் என்றவன் சட்டையை மட்டும் கழற்றி அங்கிருந்த ஆணியொன்றில் மாட்டி வைத்தான்.

 

 

“சரி படு என்றுவிட்டு அவன் கீழே படுத்துக்கொள்ள “இங்கயே படுங்க என்று அவள் கட்டிலை காட்ட “வேண்டாம் எனக்கு இப்போ இது தான் வசதி என்றுவிட்டு விரிப்பை போட்டு படுத்தும் விட்டான்.

 

 

‘வான்னு சொன்னதும் வந்தார், பார்த்தார், இப்போ படுத்தும் தூங்கிட்டாரு. எதுவுமே பேசவேயில்லையே… என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு கட்டிலில் படுத்தவாறே அவனை பார்த்து மனதிற்குள் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

 

“இன்னைக்கே எல்லாமும் பேசி முடிக்கணும்ன்னு அவசியமில்லை. நாளைக்கு பேசிக்கலாம், எதுவும் யோசிக்காம நல்லா தூங்கு என்று திரும்பிய வாக்கிலேயே பேசினான் அவன்.

 

 

தன் மனம் யோசிப்பதை கண்டு அவன் பதில் பேசியது கனவு போல் தோன்றியது அவளுக்கு. அதிக அலைச்சலும் மன உளைச்சலுமாய் இருந்தவளை தூக்கம் ஆக்கிரமிக்க தொடங்க அவள் நித்திரைக்கு சென்றாள்.

 

 

பொழுது புலர்ந்து வெகு நேரம் கழித்தே உறக்கம் கலைந்து எழுந்த ஆராதனா கீழே படுத்திருந்த கணவனை பார்க்க அவனோ எப்போதோ எழுந்து வெளியில் சென்றிருந்தான்.

 

 

மல்லிகாவிடம் கேட்க எங்கோ வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றதாக கூறினார் அவர். ‘ஏன் என்னை எழுப்பி ஒரு வார்த்தை சொல்லியிருக்க கூடாதா என்று சிணுங்கியது அவள் மனது (நீ மட்டும் சொல்லிட்டா வந்தே!!)

 

 

மனம் ஒரு குரங்கு என்பது அவள் விஷயத்தில் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையாய். அவள் செய்ததெல்லாம் மறந்து அவன் இதை செய்யவில்லை அதை செய்யவில்லை என்று அவள் மனம் குறை கூறிக்கொண்டிருந்தது விந்தை தானே.

 

அடுத்தவரிடம் எப்போது ஒருவன் குறை காண்கிறானோ அப்போது தான் சச்சரவு பிறக்கும். தன் குறையை எப்போது ஒருவன் உணர்கிறானோ அப்போது தான் சமாதானம் பிறக்கும்.

 

 

ஆராதனா அவனிடம் கண்ட குறை அவளுக்கே திரும்பப் போவதும் அதை தான் எப்படி எதிர்க்கொள்ளப் போகிறோம் என்பது யோசியாமல் சொல்லாமல் சென்றானே என்ற சிந்தனையிலேயே உழன்றாள் அவள்.

 

 

பதினோரு மணிபோல் திரும்பி வந்தவன் வேறு உடைக்கு மாறியிருந்ததை கண்டாள். கையில் சிறு பெட்டி வேறு இருந்தது, வந்தவன் நேராக அவளிடம் வந்து அவளுடைய ரிப்போர்ட் அனைத்தும் கேட்க எடுத்து கொடுத்தாள். அதை மேம்போக்காக பார்வையிட்டு முடித்தவன் கைப்பெட்டியை திறந்து எதையோ எடுத்தான்.

 

 

ஸ்டெதஸ்கோப்புடன் அவன் அருகில் வரவும் “என்னாச்சு எனக்கு ஒண்ணுமில்லையே. எதுக்கு இதெல்லாம் பார்க்கறீங்க?? என்றாள்.

 

 

“சாதாரணமா தான் பார்க்கறேன், ப்ளீஸ் கோஆப்பரெட் பண்ணு என்றவன் அவன் இதயத்துடிப்பை பார்த்துவிட்டு பின் அவளுக்கு ரத்த அழுத்தமும் சரி பார்த்தான்.

 

 

“இப்போ நார்மலா தானே இருக்கே?? ஒண்ணும் பிரச்சனையில்லையே நாம கொஞ்சம் வெளிய போவோமா?? என்றான்.

 

 

“எங்… எங்க போகப் போறோம்??

 

 

“அந்த ஆஸ்பிட்டலுக்கு தான், வண்டி சொல்லியிருக்கேன் இப்போ வந்திடும். நாம கிளம்பலாம் என்றவன் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் அவள் ரிப்போர்ட்ஸ் கையோடு எடுத்துக்கொண்டு வெளியில் சென்றான்.

 

 

‘இவரு எதுக்கு இப்படி மணிரத்னம் பட ஹீரோ மாதிரி அளந்து அளந்து பேசிட்டு போறார் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு எதுவும் பேசாமல் அவன் பின்னே சென்றாள்.

 

 

மல்லிகாவிடம் சொல்லிவிட்டு கிளம்பியவர்கள் அடுத்த அரைமணியில் மருத்துவமனை வாயிலை வந்தடைந்திருந்தனர். அடுத்து என்ன செய்யப் போகிறான் என்ன நடக்கப்போகிறது எதையும் அவன் அவளிடத்தில் கூறவில்லை.

வரவேற்பு பெண்ணிடம் சென்று பேசினான். “நான் டாக்டர் அனீஷ் உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கும்ன்னு நினைக்கிறேன். போன மாசம் ஒரு கான்பிரன்ஸ்க்கு நான் இங்க வந்திருந்தேனே

 

 

‘அடப்பாவி அப்போ போன மாசம் பார்த்தது இவரை தானா…என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி ஏன் போனாரு என்று தனக்குள்ளாகவே கேள்வி கேட்டுக்கொண்டாள் ஆராதனா.

 

 

“தெரியும் சார் ஞாபகமிருக்கு. சொல்லுங்க சார் நான் உங்களுக்கு என்ன உதவி செய்யணும் என்றாள் அப்பெண் ஆங்கிலத்தில்.

 

 

“டாக்டர் ஆயிஷாவை பார்க்கணும் என்றான்.

 

 

“இன்னைக்கு அவங்க விசிட்டிங் ஹவர்ஸ் இல்லையே. நேத்து தான் பார்த்தாங்க. நாளைக்கு தான் அவங்க விசிட்டிங் ஹவர். இன்னைக்கு ஒரு ஆபரேஷன் பண்ண ரெடி ஆகிட்டு இருக்காங்க என்றாள் அப்பெண்.

 

 

“ஒரு டென் மினிட்ஸ் பார்க்க முடியுமா ப்ளீஸ். நான் ரொம்ப டிஸ்டர்ப் பண்ண மாட்டேன், ஜஸ்ட் பேசிட்டு போயிடறேன். நீங்க அவங்ககிட்ட பேசிட்டு சொல்லுங்க, வேணாம்ன்னு சொன்னா நாளைக்கு பார்த்துக்கறேன் என்றான்.

 

 

“ஒன் மினிட் ப்ளீஸ் சார் என்றவள் ஆயிஷாவிற்கு போன் அடித்து டாக்டர் அனீஷ் பார்க்க விரும்புவதாக கூறி அவனை பற்றி சின்ன அறிமுகம் கொடுக்க அவரும் அவனை உள்ளே வரச்சொல்லிவிட்டு போனை வைத்தார்.

 

 

“சார் டாக்டர்கிட்ட பேசிட்டேன். நீங்க போய் பாருங்க என்று கூற ஆராதனாவை கூட்டிக்கொண்டு ஆயிஷாவின் அறைக்கதவை லேசாய் தட்டி விட்டு உள்ளே சென்றான்.

 

 

“ஹலோ டாக்டர்… ஐ யம் அனீஷ் என்று அறிமுகம் கொடுத்து புன்னகைத்தான்.

 

 

“வாங்க அனீஷ் உட்காருங்க… நீங்க நேத்து செக்கப்க்கு வந்தவங்க தானே… இவங்க உங்களுக்கு தெரிஞ்சவங்களா அனீஷ் என்று இருவரையும் பார்த்து மாறி மாறி கேட்டார் ஆயிஷா.

 

 

ஒரு கணம் முகம் சுருங்கினாலும் சட்டென்று தன்னை சுதாரித்துக்கொண்டு “இவங்க Mrs. அனீஷ், என்னோட மனைவி பேரு ஆராதனா என்று ஆராதனாவை அடையாளப்படுத்தினான்.

 

 

“ஓ அப்படியா!! என்னம்மா ஆராதனா உங்க ஹஸ்பன்ட் ஒரு டாக்டர்ன்னு நீங்க சொல்லவேயில்லையே. ஏன் அனீஷ் நீங்க இவங்களோட ஒரு முறை கூட செக்கப்க்கு வரவேயில்லையே என்று விசாரித்தவருக்கு சமாளிப்பான பதிலை சொன்னவன் ஆராதனாவின் உடல் நிலையம் குழந்தையின் வளர்ச்சியையும் பற்றி விசாரித்து தெரிந்துக் கொண்டான்.

 

 

பின் அவரிடம் விடைபெற்றவன் வெளியே வந்ததும் “நேத்து நீ போன ரூம் எது. அந்த டாக்டர் நர்ஸ் இவங்களை உனக்கு அடையாளம் தெரியுமா?? என்றான்.

 

 

“ஹ்ம்ம் தெரியுங்க இதே ப்ளோர் தான் எதிர்பக்கம் போகணும் என்றவள் அவனுக்கு வழிகாட்டியவாறே நடக்க இருவருமாக அந்த அறையின் முன் வந்து நின்றனர்.

 

 

மெதுவாய் கதவை தட்டிவிட்டு அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தனர் இருவரும். முன் தினம் பார்த்த மருத்துவர் அங்கில்லை வேறு ஒருவர் அமர்ந்திருந்தார்.

 

 

“இவர் தானா… என்று அவளை பார்த்து கேட்க “இவரில்லை… நேத்து வேற ஒருத்தர் இருந்தார் என்றாள்.

 

 

“ஹலோ டாக்டர்… நான் அனீஷ் கோயம்புத்தூர்ல டாக்டரா இருக்கேன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள எதிரிலிருந்தவர் “ஹலோ டாக்டர் உட்காருங்க என்று சொல்லி இருவரையும் அமரச் சொன்னார்.

 

 

“இவங்க என்னோட வைப், நேத்து இவங்க இங்க வந்திருக்கும் போது வேற டாக்டரை பார்த்திருக்காங்க. டோன்ட் மிஸ்டேக் மீ நேத்து எந்த டாக்டர் இருந்தார்ன்னு தெரிஞ்சுக்கலாமா

 

 

“இவங்களோட நேத்து நான் வரலை அதான் கேட்கறேன்

 

 

“ஓ நேத்து நீங்க டாக்டர் சாலமனை பார்த்திருப்பீங்க. ஆமா நீங்க அவரை எதுக்கு கேட்கறீங்க. அவர் இன்னைக்கு லீவ். உங்களுக்கு என்ன வேணும்ன்னு சொல்லுங்க என்னாலான உதவியை நான் பண்றேன் என்றார் அவர் இன்முகத்துடன்.

அனீஷ் மீண்டும் ஆராதனாவிடம் திரும்பி “அந்த நர்ஸ் பேராச்சும் தெரியுமா இல்லை அதுவும் தெரியாதா என்று மெதுவாக கேட்க “அவங்க பேரு சரசம்மான்னு நினைக்கிறேன். அவங்க பேட்ஜ்ல பார்த்தேன் என்று பதில் கொடுத்தாள்.

 

 

“இங்க சரசம்மான்னு நர்ஸ் இருக்காங்களா?? என்று அனீஷ் அடுத்து கேட்கவும் எதிரிலிருந்தவர் “என்ன டாக்டர் எதுக்கு டாக்டர் நர்ஸ்ன்னு ஒரு ஒருத்தரையா கேட்கறீங்க?? என்ன விஷயம் எதுவானாலும் சொல்லுங்க?? என்று வேறு தொனியில் பேச ஆரம்பித்தார்.

 

 

“சாரி டாக்டர் தப்பா எடுத்துக்காதீங்க. விஷயம் ஒண்ணும் பெரிசில்லை சாதாரணமானது தான். இவங்களோட பிரண்டு ஒருத்தர்க்கு IVF பண்ணணும் அதை பத்தி நேத்து அவங்ககிட்ட தான் பேசியிருப்பாங்க போல அதான் விசரிக்கலாம்ன்னு நானே நேரடியா வந்தேன்

 

 

“என்ன டாக்டர் காமெடி பண்றீங்க. டாக்டரா இருக்க உங்களுக்கு தெரியாதா?? என்றார் அவர்.

 

 

“தெரியும் ஆனாலும் இன்னும் தெளிவா தெரிஞ்சுக்கலாம்ன்னு தான் வந்தேன். அப்போ நாங்க கிளம்பறோம். ரொம்ப தேங்க்ஸ் டாக்டர் என்றவன் ஆராதனாவிற்கு கண்ஜாடை காட்டிவிட்டு இருக்கையில் இருந்து எழவும் சரசம்மா உள்ளே வரவும் சரியாக இருந்தது.

 

 

ஆராதனாவை கண்டதும் சரசம்மாவின் முகம் இருண்டது. அதற்குள் சரசம்மாவை அடையாளம் கண்டிருந்தவள் அனீஷிடம் அவரை சுட்டிக்காட்டினாள்.

 

 

“என்ன டாக்டர் என்னை வரச்சொன்னீங்களாமே?? சொல்லுங்க என்று சரசம்மா அங்கிருந்த டியூட்டி டாக்டரிடம் கேட்டாள்.

 

 

“இவர் டாக்டர் அனீஷ் உங்களை தான் பார்க்க வந்திருக்கார் என்றதும் அந்த பெண்ணின் முகம் கலவரத்தை சுமந்தது. தன்னை சுதாரித்துக்கொண்டு “சொல்லுங்க சார் என்னை எதுக்கு பார்க்க வந்திருக்கீங்க?? என்று சாதாரணம் போல் விசாரித்தாள்.

 

 

“அனீஷ் நீங்க உட்கார்ந்து பேசுங்க. சரசு நான் ரௌண்ட்ஸ் போயிட்டு சீப் டாக்டர் பார்த்திட்டு வந்திடறேன் என்றுவிட்டு அங்கிருந்த மருத்துவர் அகன்றார்.

 

“நீங்க இன்னும் எதுவும் சொல்லவேயில்லை சார் என்று மீண்டும் ஆரம்பித்தாள் சரசம்மா.

 

 

“உங்களுக்கு இவங்களை தெரியுமா?? என்று ஆராதனாவை சுட்டிக்காட்டி அவன் கேட்க “பார்த்திருக்கேன், அதுக்கென்ன சார் இப்போ?? இவங்க என்னைப்பத்தி எதுவும் உங்ககிட்ட தப்பா சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்

 

 

“அதெல்லாம் நம்பாதீங்க சார். உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் நீங்க டாக்டர் சாலமனை கேட்டுக்கலாம் என்றுவிட்டு விஷயம் முடிந்தது என்பது போல் அவள் நகர ஆரம்பித்தாள்.

 

 

“நான் பேசிட்டு இருக்கும் போது நீங்க போயிட்டே இருந்தா என்ன அர்த்தம்??

 

 

“அதான் பேசி முடிச்சிட்டேனே சார்

 

 

“இன்னும் நான் ஆரம்பிக்கவேயில்லை. கொஞ்சம் நிக்கறீங்களா??

 

 

“சொல்லுங்க சார் என்று வாய் அவனுக்கு பதில் கொடுத்தாலும் பார்வை முழுதும் அவளுக்கு ஆராதனாவின் மேலேயே இருந்தது.

 

 

“இவங்க என்னோட மனைவி என்றுவிட்டு ஒரு இடைவெளி கொடுத்தான் அவன். சரசம்மாவின் பார்வை இப்போது ஆராதனாவை விட்டு அவனை அதிர்ச்சியாய் பார்த்தது.

 

 

தன்னை சமாளித்துக்கொண்டு “இருக்கட்டும் சார் அதுக்கென்ன இப்போ??

 

 

“நீங்க டாக்டரான்னு இவங்ககிட்ட கேட்டீங்க போல. அவங்க டாக்டரா இல்லாம இருக்கலாம். ஆனா ஒரு டாக்டரோட மனைவி அது ஞாபகம் வைச்சுக்கோங்க. உங்க தப்பை சுட்டிக்காட்ட ஒரு டாக்டர் தான் வரணுங்கறது இல்லை. யார் வேணாலும் கேட்கலாம்

 

 

“சார் இங்க என்ன தப்பு நடந்திடுச்சுன்னு நீங்க இவ்வளோ தூரம் பேசிட்டு இருக்கீங்க. இங்க எதுவும் தப்பு நடக்கவேயில்லை இங்க வந்து எனக்கு நீட்டி முழக்கி அட்வைஸ் பண்ணிட்டு இருக்கறதை விட்டு மேடம்க்கு அட்வைஸ் பண்ணி கூட்டிட்டு போங்க சார்

 

 

“ஏய் என்ன எதுவுமே செய்யாத மாதிரி பேசுற. அவர் பேசிட்டு இருக்காரேன்னு நானே பொறுமையா பேசிட்டு இருக்கேன். இல்லன்னா நேத்து நீ பேசின பேச்சுக்கு உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கியிருப்பேன் என்று சீறினாள் ஆராதனா.

 

 

“ஆராதனா கொஞ்சம் பொறுமையா இரு. நான் பேசிக்கறேன் என்று அவளை அமைதிப்படுத்தி அமர வைத்தான்.

 

 

“அப்போ எதுவும் நடக்கலை இல்லையா?? நீங்க சொன்னது எல்லாம் உண்மை அப்படி தானே?? நான் டாக்டர் சாலமன்கிட்ட பேசணுமே என்றான்.

 

 

“எதுக்கு சார் பேசணும்?? அதான் ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டேனே என்றாள் சரசம்மா சற்றேறிய குரலில்.

 

 

“அவரும் உங்களை போல எதுவும் இல்லைன்னு சொல்லிடுவாரான்னு கன்பார்ம் பண்ணிக்க தான்னு வைச்சுக்கோங்க என்றான்.

 

 

“அதெல்லாம் அவர் நம்பர் எல்லாம் கொடுக்க முடியாது சார். வேணும்ன்னா நீங்க ரிசப்ஷன்ல கேட்டு கொடுத்தாங்கன்னா வாங்கிக்கோங்க என்றுவிட்டு போயேவிட்டாள் அவள்.

 

 

“என்னங்க இவங்ககிட்ட பேசி எதும் ஆகாது. எதுவுமே நடக்கலைன்னு அடிச்சு பேசறாங்க, மேற்கொண்டு எந்த பிரச்சனையும் வேண்டாம் வாங்க போவோம் என்று அவன் கைப்பிடித்து இழுத்தாள்.

 

 

‘பேசியது நீ தானா!! என்று ஆச்சரியப்பட்டு போனான் அவன். “நான் தாங்க சொல்றேன் எந்த பிரச்சனையும் வேண்டாம். அவங்க செய்யறது தப்பு தான் அதை இப்போ கூட என்னால நிரூபிக்க முடியும்

 

 

“எதுக்கு வீண் சச்சரவு, அவங்க நேத்து ரொம்ப பேசிட்டாங்க. நான் ஈஸியா வயித்துல வாங்கிட்டேன்னு என்னென்னமோ பேசிட்டாங்க. எனக்கு அசிங்கமா இருக்கு. நம்மோட அன்பை அவங்க கொச்சைபடுத்தினாப் போல பேசிட்டாங்க

 

 

“அவங்ககிட்ட பேசுறது சேற்றை வாரி நம்ம மேல நாமே பூசிக்கற மாதிரிங்க வேண்டாங்க. என்னால உங்களுக்கும் நம்ம குழந்தைக்கும் அவங்க அவமானம் செய்யறது போல பேசுறாங்க என்றவளுக்கு சொல்லும் போதே குரல் உடைந்து அழுகை வந்தது.

 

 

“ஒண்ணே ஒண்ணு உன்கிட்ட கேட்கணும். பதில் சொல்லுவியா?? என்று நிறுத்தினான்.

 

 

‘என்ன கேட்க போகிறான் என்ற யோசனையுடன் கண்ணீர் துடைத்து நிமிர்ந்து அவனை பார்த்தாள் என்ன என்பது போல்.

 

 

“இப்பவும் நான் தப்பு பண்றேன்னு உனக்கு தோணுதா?? என்றுவிட்டு அவள் முகத்தை பார்த்தான்.

 

 

அவனுக்கு என்ன பதில் கொடுப்பது என்று அவள் யோசித்துக்கொண்டிருந்த அந்த தருணம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தனக்கு பதில் சொல்ல அவள் தயங்குவது புரிந்து அனீஷின் முகம் இறுகியது.

 

 

“சரி அதை விடு, இப்போ சொன்னியே அவங்களை உன்னால நிரூப்பிக்க முடியும்ன்னு, எப்படி?? என்றவனிடம் தன் கைபேசியை எடுத்து காண்பித்தாள் அவள்.

 

 

முதல் நாள் அந்த டாக்டரும் நர்சும் பேசுவதை அசுவாரசியமாய் கேட்க ஆரம்பித்தவள் ஏதோ தோன்ற அவர்கள் பேச்சை அவள் கைபேசி கொண்டு வீடியோ பதிவு செய்தாள்.

 

 

“இதை முதல்லயே காண்பிக்க வேண்டியது தானே?? என்றவன் எதையோ யோசித்து அங்கேயே நின்றான். சற்று தள்ளிச்சென்று யாருக்கோ பேசிவிட்டு வந்தவன் “இன்னும் கொஞ்ச நேரத்துல நித்யா வந்திடுவா நீ அவளோட கிளம்பு. இங்க நான் பார்த்துக்கறேன் என்றான்.

 

 

“உங்களை தனியா விட்டு எல்லாம் என்னால போக முடியாது என்றவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்து வைத்தான்.

 

 

“மூணு மாசமா நான் தனியா தான் இருந்தேன் என்று ஆழ்ந்த குரலில் அவன் சொன்னதும் சுருக்கென்றிருந்தது அவளுக்கு.

 

 

அவள் முகம் போன போக்கை கண்டவன் என்ன நினைத்தானோ மறுநிமிடமே “சரி வா போகலாம் என்று அவள் கைப்பிடித்து அழைத்துச் சென்றான்.

 

 

ஆராதனா மங்களூர் வந்த இத்தனை நாட்களில் இன்று தான் அவள் மரியாதையாக நடத்தப்படுவதாக உணர்ந்தாள். ஏனோ கணவன் உடன் இல்லாததால் தான் அந்த மரியாதையின்மையா அல்லது அவன் கவுரவம் கண்டு இப்போது அவர்கள் கொடுக்கும் மரியாதையா என்று அவளால் பிரித்தறிய முடியவில்லை.

 

 

காலையில் அவர்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பெண் கூட கணவனுடன் வண்டியில் சென்ற அவளை வெகு மரியாதையாக பார்த்த உணர்வு வந்தது. அந்த வீட்டிற்கு சென்ற புதிதில் ஏதோ ஒரு சிறு தகராறு வந்திருக்க ஆண்பிள்ளை இல்லாத வீடென்று அவள் ஒரு மாதிரியாக பேசியிருந்தாள்.

 

 

எப்போதாவது வரும் சுனீஷை கூட அவள் தப்பிதமாகவே பேசினாள். இன்று அவள் பார்த்த பார்வை மரியாதையாக இருந்த போதே புரிந்தது மல்லிகா அவரிடம் ஏதோ சொல்லியிருக்கிறார் என்று. எது எப்படி இருந்த போதும் அனீஷுடன் இருப்பது மட்டுமே அவளுக்கு மதிப்பை கொடுக்கும் என்பது புரிந்தது.

 

 

சில நாட்களாகவே அவள் மனதில் அவனை பற்றிய எண்ணங்கள் தான். இருந்தும் அவள் அதை அதிகம் வெளிக்காட்டி கொண்டதில்லை. எப்போது தனக்கு ஒரு பிரச்சனை என்றதும் அனைத்தையும் மீறி அவனையே மனம் தேடியதோ அப்போதே அவளுக்கு புரிந்தது தன் மனம் அவன் வசம் என்று.

 

 

இத்தனை நாளாக வீம்பாக ஏதேதோ எண்ணம் கொண்டு அவனை கஷ்டப்படுத்தியது புரிந்தது. எல்லாவற்றிற்கும் அவனிடம் எப்போதும் ஒரு நியாயமான காரணமிருக்கும், ஏன் அதற்கும் ஒரு காரணம் இருக்கக் கூடாது என்று மனம் அவனுக்கு சாதகமாக யோசிக்க ஆரம்பித்திருந்தது.

 

 

காரணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட அவளால் அவனை தவறாக எண்ண முடியவில்லை. எவ்வளவோ தவறுகள் செய்கிறவர்கள் மத்தியில் அவன் விளம்பரம் செய்ததை தான் குற்றமாக நினைத்து அவனிடம் சண்டையிட்டிருக்க கூடாது என்று தோன்றியது.

 

 

சண்டை போட்டதைவிட தான் அந்த வீட்டை விட்டு வெளியேறி இருக்கக்கூடாது என்பது ஆணியில் அறைந்தார் போல் புத்தியில் உரைத்தது. என்ன உரைத்து என்ன புண்ணியம் நடந்தது அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது.

 

 

காலம் கடந்த ஞானோதயம் வந்திருக்கிறது தனக்கு என்று எண்ணி அவளையே குட்டிக்கொண்டவள் இனி அதை எப்படி சீர் செய்வது என்று யோசிக்க வேண்டும்.

 

 

அனீஷை பார்த்ததுமே பிடித்து போகவே தான் அவள் அவனை திருமணம் செய்துக் கொண்டாள். அது ஒரு விருப்பமாக மட்டுமே அப்போது இருந்தது. அவனுடன் இருந்த பொழுதுகளில் கூட உணராத ஒன்று அவனை பிரிந்திருந்த இத்தனை நாளில் கூட அவள் உணராத ஒன்று

 

 

அவன் மேல் அவள் வைத்திருந்த அன்பு காதலாக மாறியிருந்ததை உணர்ந்தாள். அருகிருக்கும் அவனை வைத்த கண் வாங்காமல் பார்வையால் அவனை விழுங்கிக் கொண்டிருந்தவளை கண்டவனுக்கு அவள் பார்வை மாற்றம் புதிதாய்.

 

 

உள்ளே ஏதோவொன்று ஜில்லென்று உணர்ந்தாலும் நடந்தவைகள் கண்முன் வந்து முகம் உணர்ச்சியை தொலைத்தது. அவன் யோசனைகள் தடைபட நித்யா காரில் இருந்து இறங்கி கொண்டிருந்தாள்.

 

 

“நீ இவளை கூட்டிட்டு போம்மா நான்… எனக்கு இங்க கொஞ்சம் வேலையிருக்கு முடிச்சுட்டு நான் வீட்டுக்கு வந்திர்றேன் என்று நித்யாவிடம் கூறினான்.

 

 

“ப்ளீஸ் நான் உங்களோடவே இருக்கேன். இவ்வளோ நாள் தனியா உங்களை விட்டுட்டு போனது எவ்வளவு பெரிய மடத்தனம்ன்னு புரியுது. இனி ஒரு நிமிஷமும் உங்களை விட்டு போகக் கூடாதுன்னு நினைக்கிறேன் என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினாள்.

 

 

“நம்ம விஷயத்தை பேச இது இடமில்லை நீ இப்போ கிளம்பு என்றதும் அவள் முகம் சுருங்கி அழுகைக்கு தயாராக ஒரு நிமிடம் தன்னை சுதாரித்தவன் “ப்ளீஸ் ஆரா நான் சொல்றது புரிஞ்சுக்கோடா, ரொம்ப நேரம் நிக்கறது உனக்கு நல்லதில்லை

 

 

“அப்புறம் நேத்து மாதிரி கால் வீக்கம் கண்டிரும் அதான் சொல்றேன். நீ கிளம்பு என்று சற்று தன்மையாக பேசவும் தனக்காக தான் பார்க்கிறான் என்று சமாதானம் ஆனவள் எதுவும் மறுத்துப் பேசாமலே நித்யாவுடன் கிளம்பினாள்.

 

 

அனீஷுக்கு அந்த மருத்துவமனையின் சேர்மன் டாக்டர் விஸ்வேஸ்வரனை நன்றாக தெரியும். அவர் மகன் அமெரிக்காவில் அவனுடன் படித்தவன் அதனாலேயே சுனீஷ் மங்களூர் என்றதும் சரியென்றிருந்தான் அவன்.அவன் நண்பன் ராஜேஸ்வருக்கு போன் செய்து பேசினான்.

அவன் தற்போது பெங்களூருக்கு வேறு வேலையாக சென்றிருப்பதால் விஸ்வேஸ்வரனுடன் உடனே பேசவும் பார்க்கவும் அனுமதி வாங்கிக் கொடுக்க வரவேற்ப்பில் இருந்த பெண் அவனை தானாக தேடி வந்தாள்.“சார் நீங்க தானே அனீஷ் கொஞ்சம் முன்னாடி என்கிட்ட வந்து டாக்டர் ஆயிஷாவை பார்க்கணும் கேட்டீங்களே. சேர்மன் உங்களை வந்து நேர்ல பார்க்க சொன்னார் சார் என்றவள் வெகு பவ்வியமாய் மரியாதையுடன் அவனை பார்த்தாள்.

 

 

விஸ்வேஸ்வரன் பொதுவாக யாரையும் அவராக சந்திக்க மாட்டார். அவராக அழைத்து வரச்சொன்னால் நிச்சயம் பெரிய ஆளாக தான் இருப்பான் என்ற எண்ணத்தில் அப்பெண் கொடுத்த மரியாதை அது.

 

 

அப்பெண்ணிடம் சிறு தலையசைப்புடன் விடைபெற்றவன் சேர்மன் அறைக்கு சென்றான். தான் அங்கு வந்த விஷயத்தையும் ஆராதனா பற்றியும் கூறியவன், முன் தினம் நடந்த அனைத்தும் அவரிடம் பகிர அவர் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது…

 

 

சம்மந்தப்பட்டவர்களை வரவழைக்க சொல்ல அங்கு வந்த சரசம்மாவின் முகத்தில் ஈயாடவில்லை. அனீஷ் இப்படி நேராக சேர்மன் அறைக்கே வந்திருப்பான் என்று எதிர்பார்க்கவில்லை அவள்.

 

 

ஏதோ மிரட்டுவான் ஜியெம்மிடம் சொல்லுவான் ஜியெம் நம் ஆள் தானே பார்த்துக் கொள்ளலாம் என்று அவள் இருக்க அனீஷ் தன் வேலைக்கே உலைவைத்து விட்டது அப்போது தான் அவளுக்கு புரிந்தது.

 

 

அப்போதும் கூட தன் மேல் குற்றமில்லை என்ற ரீதியில் தான் அவள் பேசினாள். நேற்று அவர்கள் செய்வதாக இருந்த அந்த வேலையை அவள் செய்யவேயில்லை.

 

 

ஆராதனா அதை கண்டு தானே சண்டையிட்டாள் ஒருவேளை அவள் யாரையாவது கூட்டி வந்து எதுவும் பஞ்சாயத்து செய்வாளோ என்று எண்ணியவர்கள் அந்த IVF மாற்றத்தை செய்யவில்லை. அந்த தைரியத்தில் தான் தப்பே செய்யாதவள் போல் பேசினாள் அவள்.

 

 

அனீஷ் தகுந்த ஆதாரமாக அவர்கள் உரையாடலின் வீடியோ பதிவை காட்டிவிட விஸ்வேஸ்வரன் வெகுண்டெழுந்தார். தப்பு செய்துவிட்டேன் மன்னித்துவிடுங்க என்று கூறியிருந்தால் கூட சற்று இளகியிருப்பாரோ என்னவோ தப்பே செய்யவில்லை என்பது போல் பேசிய அப்பெண்ணை உடனே வேலையை விட்டு நீக்கினார்.

 

 

சம்மந்தப்பட்ட அந்த மருத்துவரையும் வேலை நீக்கம் செய்யச் சொன்னார். பின் அவர் அனீஷிடம் மன்னிப்பு கோர “இருக்கட்டும் சார் நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்கறீங்க என்றான்.

 

 

“அனீஷ் ஒரு உதவிப்பா என்று தயங்கியவாறே பேசாமல் நின்றார். “இதுனால தான் அவங்க வேலையை விட்டு போனாங்கன்னு நீங்க யாருக்கும் சொல்ல வேண்டாம். இந்த வீடியோ இனி இருக்காது அங்கிள் நீங்க கவலையே பட வேண்டாம் என்றவன் அந்த வீடியோவை அவர் முன்னேயே அழித்தான்.

 

 

“என்னோட வைப் போன்ல அப்போவே டெலிட் பண்ணிட்டேன் இது போதுமா அங்கிள் என்றவனை பெருமையாக பார்த்தார். “நானும் ஒரு ஆஸ்பிட்டல் நடத்துறேன் அங்கிள் எனக்கும் புரியும் உங்களோட கஷ்டம்

 

 

“நம்மோட வேலை முள்ளு மேல நடக்கற விஷயம் தான். ஒரு சின்ன தப்பும் ஒட்டுமொத்தமா இந்த மருத்துவமனையோட பேரை மொத்தமா கெடுத்திடும்ன்னு தெரியும் அங்கிள். என்ன ஒண்ணு நாம கவனமா இருக்கணும். சரி அங்கிள் நான் கிளம்பட்டுமா என்றான்.

 

 

“ரொம்ப தேங்க்ஸ்பா அனீஷ். எனக்கு உன் வைப் பார்க்கணுமே அவங்களையும் கூட்டிட்டு நாளைக்கு வீட்டுக்கு வாயேன்ப்பா, ராஜேஷ் கூட இன்னைக்கு நைட் வந்திடுவான் என்றார்.

 

 

“பார்க்கறேன் அங்கிள் ஆராதனாவை கேட்டுட்டு நான் போன் பண்றேன் என்றவன் அவரிடம் விடைபெற்று வீட்டிற்கு கிளம்பினான். வந்ததும் ஆராதனாவிடம் நடந்த விஷயத்தை சொல்ல பூதாகரமாக உருவாகியிருக்க வேண்டிய பிரச்சனையை அவன் சுலபமாய் தீர்த்துவிட்டதாக தோன்றியது.

 

 

அவளிடம் சொல்லிவிட்டு மறுநாள் அவன் ராஜேஸ்வர் வீட்டிற்கு மரியாதைக்காக சென்று வந்தான். அப்பாவும் பிள்ளையுமாக மாறி மாறி அனீஷின் புகழ் பாட ஆராதனாவை குற்ற உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக கொன்றது.

 

 

தன்னால் அவனுக்கு எவ்வளவு கஷ்டம் என்று நினைக்க நினைக்க மனம் வெம்பியது. தன்னை அவன் மன்னிப்பானா என்ற எண்ணமே அவளை அலைகழித்தது. இந்நிலையில் அனீஷ் தான் ஊருக்கு கிளம்புவதாக அறிவித்தான்.

Advertisement