Advertisement

அத்தியாயம் – 26

 

 

அனீஷ் எதை நினைத்து சுனீஷிடம் பேசினானோ அது அவன் எண்ணியது போலவே நடந்தது. கோபத்தில் அறிவு வேலை செய்யாது என்பது எவ்வளவு உண்மை என்பதை அக்கணம் அவன் உணர்ந்தான்.

 

 

அவள் மேல் கோபத்தில் இருந்தவனால் அடுத்து அவள் என்ன செய்வாள் என்பதை யோசிக்க முடியாமல் அவன் கவனம் முழுதும் அவள் பேசிய பேச்சிலும் செயலிலுமே இருந்ததில் அவள் வீட்டை விட்டு போவாள் என்று நினைத்திருக்கவில்லை.

 

 

ஆராதனா வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள் என்ற உண்மை உரைக்கும் போது தான் தன் மீதும் தவறிருக்கிறது என்பதை நெஞ்சில் வலியோடுஉணர்ந்தான். அவன் சென்னை வந்து இறங்கியதுமே சுனீஷ் அவனை அழைத்திருந்தான். “ஹலோ என்றவனுக்கு பதிலாய் சுனீஷின் கோபமான குரலே குற்றம் சாட்டுவதாய் இருந்தது.

 

 

“அண்ணா நீ சொன்ன மாதிரியே அண்ணி போன் பண்ணாங்க… என்ன அண்ணா நடக்குது அங்க. அவங்களை வீட்டை விட்டு போகற அளவுக்கு என்ன நடந்துச்சு

 

 

“வாயும் வயிறுமா இருக்காங்க அண்ணா அவங்க. நீங்க எப்படி அவங்களை தனியா விட்டுட்டு மலேசியா கிளம்பி போனீங்க என்றதில் ஆரம்பித்து சரமாரியாய் கேள்விகளால் தாக்கினான்.

 

 

அவன் பேசுவது அனைத்தையுமே நிதானமாய் கேட்டு முடித்தவன் “நான் அனுப்பினேன்னு உங்க அண்ணி சொன்னாளா?? என்றான்.

 

 

சுனீஷ் இப்போது அமைதியானான் “இல்லை அப்படி ஒண்ணும் சொல்லலை. ஆனா உங்களுக்குள்ள ஏதோ ஒண்ணு நடந்திருக்கு அது தானே அவங்களை வெளிய போக வைச்சிருக்கு

 

 

“அந்த ஏதோ ஒண்ணை உன்கிட்ட என்னால சொல்ல முடியாது. இது எங்க பிரச்சனை அதை எப்படி சரி பண்றதுன்னு நான் பார்த்துக்கறேன். உங்கண்ணி மேல உனக்கு இருக்கற பிரியத்தை விட என் மனைவி மேலயும் எங்க குழந்தை மேலயும் எனக்கு அதிகமாவே இருக்கு என்றான் ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தந்திருந்தமாக.

 

 

சுனீஷும் அவன் கருத்தை ஆமோதித்தார் போல் அமைதியானான். “சொல்லு உங்கண்ணி, என்ன சொன்னா?? என்று கேட்க அவன் அவர்களின் உரையாடலை அண்ணனிடம் உரைத்தான்.

 

 

“இப்போதைக்கு அண்ணி என்னோட பிரண்டு நித்யா வீட்டில தான் இருக்காங்க. சொல்லுங்கண்ணா இனி நான் என்ன பண்ணனும்

 

 

“நீங்க இன்னைக்கு நைட்டே வீட்டுக்கு வந்திடுவீங்கள்ள. நீங்க இப்போ சென்னையில தானே இருக்கீங்க, நான் நித்யா அட்ரஸ் தரேன் நீங்க போய் அண்ணியை கூட்டிட்டு வீட்டுக்கு போறீங்களா என்றான்.

 

 

“வேணாம் சுனீஷ் இப்போ நான் போய் கூப்பிடுறதா இல்லை. உங்கண்ணியே திரும்பி வர்றது தான் நல்லது. அவளா வர்றேன்னு சொல்ற வரைக்கும் நானா அவளை தேடி போய் கூப்பிட மாட்டேன் என்று தனக்குள் ஒரு பிடிவாதம் கொண்டு அதை அப்படியே தம்பியிடமும் கூறினான்.

 

 

“ரெண்டு பேரும் எதுல ஒத்து போறீங்களோ இல்லையோ பிடிவாதம் பிடிக்கிறதுல ஒரே மாதிரி தான் இருக்கறீங்க. உங்களால இருக்கறவங்க தான் டென்ஷன் ஆகுறாங்க என்று மனதில் உள்ளதை மறைக்காமல் சொன்னான் சுனீஷ்.

 

 

“சுனீஷ் இதை நீ எப்படி வேணா எடுத்துக்கோ?? ஆனா இது தான் என் முடிவு. சரி அதை விடு இனி என்ன பண்றதுன்னு எனக்கும் இப்போ எதுவும் தோணலை

 

 

“ஆனா ஒண்ணு உங்கண்ணி நிச்சயம் உன் பிரண்டு வீட்டுல இருந்து கிளம்பிடுவான்னு தான் தோணுது… அதுக்கு என்ன பண்றதுன்னு தான் இப்போ பார்க்கணும்

 

 

“நீ இன்னைக்கு நைட்டே சென்னை கிளம்பு. நான் கோயம்புத்தூர் போனதும் உனக்கு போன் பண்றேன். எனக்கும் கொஞ்சம் யோசிக்கணும் என்றவன் கைபேசியை அணைத்துவிட்டு கோவை செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்தான்.

 

 

மறுநாள் சென்னை சென்று சேர்ந்த சுனீஷ் ஆராதனாவின் முடிவை அண்ணனிடம் கூற இருவருமாக பேசி அவளுக்கு ஒரு பெண் துணையாய் உறுதுணையாய் இருக்கவென்று மல்லிகாவை அனுப்ப முடிவு செய்தனர்.

 

 

மல்லிகாவை பற்றி சுனீஷ் கூறவும் அனீஷிற்கும் ஒரு பெரிய பெண்மணி மனைவியுடன் இருந்தால் நன்றாய் இருக்கும் என்று எண்ணி சரியென்று தலையாட்ட ஆராதனா மது, மல்லிகா துணையுடன் மங்களூருக்கு சென்றாள். நித்யாவும் அவர்களுக்கு துணையாய் இருக்கட்டும் என்று சுனீஷ் தான் அனுப்பி வைத்திருந்தான்.

 

 

மதுவையாவது ஏதேதோ பேசி சமாளிக்க முடிந்தவனால் மல்லிகாவை உடனே சம்மதிக்க வைக்க முடியவில்லை.மதுவையும் மல்லிகாவையும் பேசி சரி செய்து ஆராதனாவிற்கு துணையாய் அனுப்புவதற்குள் சுனீஷ் ஒரு வழியாகியிருந்தான்.

 

 

நினைவுகள் கலைந்து நிகழ்காலத்திற்கு திரும்பியவனுக்குள் சுனீஷ் கிளம்பும்முன் சொன்னது நினைவிற்கு வந்தது. ஆராதனாவிற்கு அடுத்த வாரம் செக்கப் என்று சொன்னானே எப்படி போவது என்று யோசிக்க ஆரம்பித்தான்….

 

____________________

 

 

“ஏம்மா நாளைக்கு உனக்கு செக்கப் போகணுமே. நீ உன் வீட்டுக்காரர்க்கு போன் பண்ணி வரச்சொன்னியாம்மா?? போன தரம் போனப்பவே வீட்டில இருந்து யாராச்சும் கூட்டிட்டு வரச் சொன்னாங்களே என்றார் மல்லிகா ஆராதனாவிடம்.

 

 

“ஏம்மா அதான் நீங்க இருக்கீங்களே அப்புறம் என்னம்மா என்றவளிடம் “போன முறையும் நான் தானேம்மா வந்தேன். அந்த டாக்டர் என்னை உன் சொந்தக்காரங்கன்னா நினைச்சாங்க. உங்க வீட்டில வேலை செய்யறேன்னு தான் நினைச்சாங்க

 

 

“நான் வர்றது சரியா வராதும்மா நீ வீட்டில யாருக்காச்சும் போன் பண்ணி வரச்சொல்லிடு என்றார் அவர் விடாப்பிடியாக.“அம்மா அப்படி உடனே என்னால அவங்களை கூப்பிட முடியாதும்மா. டாக்டர்கிட்ட நானே சொல்லிடறேன், அவரை அடுத்த முறை கூட்டிட்டு வர்றேன்னு. இந்த முறை எப்பவும் போல நீங்களே வாங்கம்மா

 

 

“இல்லைம்மா நான் வரலை. என்னை கூட்டிட்டு போனா அவங்க உங்களை தான் இன்னும் தப்பா நினைப்பாங்க. வீட்டு வேலைக்காரங்களோடவே இந்த பொண்ணு எப்பவும் வருது என்ன பிரச்சனையோன்னு அவங்களுக்கு தோணும். எதுக்கும்மா வம்பு நான் வரலை நீ நாளைக்கு நித்யாவை வேணா கூட்டிட்டு போம்மா என்றார் அவர்.

 

 

“அம்மா என்னம்மா பேசறீங்க, அவங்க சொன்னா நீங்க வேலைக்காரங்க ஆகிடுவீங்களா?? சொன்னாலும் சொல்லாட்டாலும் நீங்க எங்களுக்கு சொந்தமாகப் போறவங்க தானேம்மா

 

 

“நானும் இப்போ அதை தான்ம்மா யோசிக்கறேன். கொஞ்சம் அவசரப்பட்டு சுனீஷ் தம்பிகிட்ட சம்மதம் சொல்லிட்டமோன்னு தோணுது. நல்ல பையன் நல்ல இடம்ன்னு நானும் சராசரி அம்மாவா தான் யோசிச்சுட்டேன்

 

 

“இதெல்லாம் எங்களுக்கு சரியா வருமா!! வராதா!! எதுவுமே நான் யோசிக்கவே இல்லை. என் பொண்ணோட சந்தோசம் அவளோட விருப்பம்ன்னு மட்டும் யோசிச்சுட்டேன்

 

 

“ஏம்மா இப்படி எல்லாம் பேசறீங்க?? நல்லதே நடக்கும்மா. நீங்க உங்களை குறைச்சு மதிப்பட வேண்டாம். பணம் காசெல்லாம் வைச்சு மனுஷங்களை எடை போடக் கூடாதும்மா என்றாள் ஆராதனா அவரை சமாதானப்படுத்தும் விதமாக.

 

“எங்களை போலவங்க மனுஷங்களை மட்டும் தான்மா பார்ப்போம். அந்த ஆஸ்பத்திரி ஆளுங்க மாதிரி இன்னமும் உலகத்துல பணத்தை வைச்சே எடை போடுறவங்க இருக்கத் தானே செய்யறாங்க என்று அவர் தன் அங்கலாய்ப்பை தொடர்ந்தார்.

 

 

“அம்மா அதெல்லாம் விடுங்கம்மா, நாளைக்கு நீங்களே என் கூட வாங்கம்மா… யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. நான் பார்த்துக்கறேனம்மா என்றாள் ஆராதனா.

 

 

அவரோ பிடிவாதமாக உடன் வர மறுத்துவிட்டார். மதுமிதா மங்களூரிலேயே ஒரு ஹோட்டலில் ஒரு வாரம் முன்பு தான் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்ததால் உடனே அவளால் விடுப்பு எடுக்க முடியாமல் போனதில் மறுநாள் நித்யா அவளுடன் செல்வதாக முடிவெடுக்கப்பட்டது.

 

 

மறுநாள் இருவருமாக மருத்துவமனைக்கு சென்று சேர்ந்தால் அங்கு அவள் பார்க்க வேண்டிய மருத்துவரை பார்க்க அவ்வளவு கூட்டமிருந்தது. இத்தனைக்கும் இருவரும் நேரமாகவே கிளம்பி வந்திருந்தனர்.

 

 

எப்படியும் அவர்கள் முறை வருவதற்கு குறைந்தது இரண்டு மணி நேரமாவது பிடிக்கும் என்பதால் இருவரும் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

 

 

அரைமணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் அமர முடியாமல் தவித்தாள் ஆராதனா. அவளுக்கு வாந்தி வருவது போல இருந்தது, அதுவுமில்லாமல் ரொம்ப நேரம் அவளால் உட்கார்ந்தே இருக்கவும் முடியாமல் போக கால்போக்காக நடந்து வருவதாக நித்யாவிடம்  சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

 

 

உடன் வருவதாக கூறியவளை தடுத்து அமர வைத்துவிட்டு அவள் மட்டுமாக தனியாக அந்த காரிடரில் நடந்தாள். ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டு வந்தவள் திறந்திருந்த ஒரு அறைவாயிலின் அருகே போடப்பட்டிருந்த இருக்கை ஒன்றில் சற்று அமர்ந்தாள்.

 

 

திறந்திருந்த அறைவாயிலின் வழியே கேட்ட பேச்சுக்குரல் அவள் கேளாமலே அவள் காதில் விழுந்தது. மருத்துவமனையில் பேச்சுக்குரல் கேட்பதொன்றும் அதிசயமான விஷயம் இல்லை என்றாலும் ஏனோ அந்த பேச்சு அவளை அங்கிருந்து எழவிடாமல் மேலே கேட்கச் செய்தது.

 

 

இத்தனைக்கும் அவர்கள் பேசிக்கொண்டது கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில். அவர்கள் அறியாத விஷயம் அவள் கல்லூரி தோழி ஒருத்தி மைசூரில் பிறந்தவள் அவர்களுடன் பயின்றதில் ஆராதனா ஓரளவு அவளிடம் கன்னடம் பயின்றிருந்தாள்

 

 

மங்களூர் வந்த இந்த இரண்டு மாதத்தில் கன்னடம் அவளுக்கு ஓரளவு அத்துப்படி ஆகியிருந்தது. அதனால் அவர்கள் பேசியதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

 

 

“டாக்டர் அந்த வசுமதி சுந்தர்ராஜன் கேஸ் IVF பண்ண வந்திருந்தாங்களே, இந்த முறையும் அது பெயிலியர் ஆகிடுச்சு இப்போ என்ன செய்ய?? என்று அருகிலிருந்த நர்ஸ் உடையில் இருந்த சரசம்மா கேட்டாள்.

 

 

“ஏன் என்னாச்சு? இந்த முறை நல்ல வளர்ச்சியடைஞ்ச கருமுட்டை தானே எடுத்தோம். என்ன பிரச்சனை?? என்றார் அப்பெண்ணின் எதிரில் இருந்த மருத்துவர்.

 

 

“அவங்க கணவரோட விந்தணுவோட சேர்க்கும்போது பெயிலியர் ஆகிடுச்சு டாக்டர். இது அவங்களுக்கு நாலாவது முறை, ஏற்கனவே ரொம்ப காசு வாங்கறோம்ன்னு அவங்களோட மாமியார் இந்த முறை கொஞ்சம் முகத்தை காமிச்சாங்க என்றாள் சரசம்மா.

 

 

“இதுக்கு நான் என்ன சொல்லணும்ன்னு எதிர்பார்க்கறீங்க சிஸ்டர். போன முறை சுசித்ரா கேஸ்ல செஞ்ச போல செஞ்சிடுங்க என்றுவிட்டு அவர் நகரப்பார்த்தார்.

 

 

“டாக்டர் ஏதோ ஒரு முறை தெரியாம மாறிப்போச்சு அது போல திரும்பவுமா, எதுவும் பிரச்சனை ஆகிடப் போகுது டாக்டர் என்றாள் அவள்.

 

 

“ஏன் போன மாசம் உங்க சொந்தக்காரங்க ஒருத்தர்க்கும் நீங்க இப்படி தானே செஞ்சீங்க. அது நீங்க தெரிஞ்சு தானே செஞ்சீங்க என்று சிடுசிடுத்தார் டாக்டர்.

 

 

வெளியில் அமர்ந்திருந்த ஆராதனாவிற்கு ஏதோ தவறு நடக்கிறது என்றளவில் புரிந்தது ஆனால் அவர்கள் பேசிக்கொள்வதில் இருந்து என்ன தவறென்று தான் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

 

 

“நீங்க தெரிஞ்சு பண்ணா சரி. அப்போ பிரச்சனை வராது! இப்போ மட்டும் பிரச்சனை வருமா! வேற சாம்பிள் விந்தணுவோட சேர்த்துடுங்க. அவங்க யாரும் வந்து என்ன பண்ணீங்க எது பண்ணீங்கன்னு எல்லாம் கேட்க மாட்டாங்க. போங்க போய் வேலையை பாருங்க என்றவர் திறந்திருந்த கதவின் வழியே வெளியே வந்தார்.

 

 

அறைவாயில் ஆராதனாவை பார்த்தவர் சட்டென்று நின்றார். “யாரும்மா நீ என்ன வேணும் உனக்கு. இங்க எதுக்கு நின்னு உள்ள வேடிக்கை பார்த்திட்டு இருக்க என்று அதட்டலான குரலில் ஆங்கிலத்தில் கேட்டார் அவர்.

 

 

அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை அவள் அப்போது தான் முழுதாய் உள்வாங்கியிருந்தாள். அந்த அதிர்ச்சியில் இருந்து அவள் வெளியில் வருவதற்குள் டாக்டர் வெளியில் வந்து கேள்வி கேட்கவும் முதலில் விழித்தவள் சட்டென்று சுதாரித்து கையை மடக்கி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவருக்கு பதில் கொடுத்தாள்.

 

 

“நான் டாக்டர் ஆயிஷாவை பார்க்க வந்திருக்கேன். கொஞ்சம் நடக்கலாமேன்னு இப்படி வந்தேன் அவ்வளவு தான் என்று ஆங்கிலத்திலேயே அவள் பதில் கொடுத்தாள்.

 

 

“ஆயிஷா இருக்கறது லெப்ட் சைடு நீங்க இந்த பக்கம் வந்து என்ன பண்றீங்க. வாங்கிங் போக இதென்ன உங்க வீடா இல்லை பார்க்கா?? என்று முறைத்தார் அவர்.

 

 

“எதுக்கு டாக்டர் இப்போ டென்ஷனா பேசறீங்க? நீங்க பேசினதை நான் தற்செயலா தான் கேட்டேன். ஆனா இதெல்லாம் தப்பில்லையா, சம்மந்தப்பட்டவங்க அனுமதி இல்லாம நீங்களே எப்படி இப்படி முடிவெடுக்கலாம் என்று அவரை நேருக்கு நேர் பார்த்து மனதில் தோன்றதை அப்படியே கேட்டும் விட்டாள்.

 

 

அந்த மருத்துவரோ உனக்கெல்லாம் நான் என்ன பதில் சொல்வது என்பது போல் பார்த்துவிட்டு அவளுக்கு எந்த பதிலும் உரைக்காமல் பின்னால் திரும்பி சரசம்மாவிற்கு ஏதோ கண்களால் ஜாடை காட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் அவர்.

 

 

ஆராதனா பேச்சு வழக்கில் இருந்து அவள் தமிழ் என்பதை புரிந்து கொண்ட சரசம்மா “என்ன தமிழா?? என்று கொச்சையான தமிழிலேயே ஆரம்பித்தாள் அதிகாரமாய்.

 

“ஏன் தமிழ்ன்னா பதில் சொல்ல மாட்டீங்களா??

 

 

“உனக்கு எதுக்கு நாங்க பதில் சொல்லணும். யாரு நீ?? நீ என்னா டாக்டரா?? பெரிசா எங்களை கேள்வி கேட்க வந்துட்ட?? என்று சற்றும் மரியாதை இல்லாமலே பேசினாள் அவள்.

 

 

“நான் டாக்டர் இல்லை தான். ஆனா தப்பை தட்டி கேட்டுற உரிமை எல்லாருக்குமே இருக்கு. உங்களை நம்பி தானே இந்த ஆஸ்பிட்டல்க்கு எல்லாரும் வர்றாங்க. நீங்களே இப்படி செஞ்சா நாங்க எல்லாம் எங்க போவோம்

 

 

“இந்த ஆஸ்பிட்டல் வேணாம்ன்னா வேற ஆஸ்பிட்டல் போங்க… என்று வெகு அலட்சியமாய் பதில் சொன்னாள் அவள்.

 

 

“ஹலோ என்ன விட்டா ஓவர் திமிரா பேசிட்டு இருக்கீங்க. காசு வாங்கறீங்க தானே, அதுக்கு உண்மையா இருக்க வேண்டாமா? அவங்ககிட்ட இந்த மாதிரி செய்யலாமான்னு கேட்க கூட முடியாதா??

 

 

“இப்படி எல்லாம் நீங்க செய்வீங்கன்னா அவங்க அனாதை ஆசிரமத்துல இருந்து குழந்தையை தத்து எடுத்திட்டு போயிடலாமே. எதுக்கு இங்க வந்து பார்க்கறாங்க நீங்க உண்மையா இருப்பீங்கன்னு தானே

 

 

“முடியும்ன்னா முடியும் முடியாதுன்னா முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே. எதுக்கு அனாவசிய நம்பிக்கை கொடுத்து அவங்களை ஏமாத்துறீங்கஎன்று பதிலுக்கு ஆராதனாவும் எகிறினாள்.

 

 

“என்ன பார்த்துன்னே இருக்குறேன் ஓவரா நீ துள்ளிட்டு நான் ஓவரா பேசறேன் சொல்ற. எவ்வளோ பேரு குழந்தை இல்லாம இருக்காங்க தெரியுமா? இப்படி செய்யறதுல அவங்க சந்தோசம் தான் படுவாங்க. நீ பேசாத நாங்க தப்பு பண்றோம்ன்னு எல்லாம் நாங்க நல்லது தான் பண்றோம் என்று செய்த தப்பை சரி என்பதாய் சப்பை கட்டு கட்டினாள் சரசம்மா

 

 

“நானும் தப்புன்னு சொல்லலை அவங்களுக்கும் ஒரு வார்த்தை சொல்லிட்டு அவங்க அனுமதியோட செய்யலாமேன்னு தான் சொல்றேன் என்றான் ஆராதனாவும் விடாமல்.

 

 

அப்பெண் எதிரில் நின்ற ஆராதனாவை மேலும் கீழும் பார்த்துவிட்டு “உனக்கு இன்னா ஈஸியா வயித்துல வாங்கிட்ட அதுனால நீ ஏன் பேச மாட்டா. போ போ எல்லாம் எங்களுக்கு தெரியும்

 

 

“யார்ட்ட வேணா சொல்லிக்கோ போ… என்று அலட்சியமாய் பதில் சொல்லிவிட்டு மேலும் அவள் கர்ப்பத்தை பற்றி வெகு கொச்சையாய் சத்தமாய் முணுமுணுத்துக் கொண்டே அவள் நகர்ந்து சென்றதை பார்த்த ஆராதனாவுக்குள் தாங்க முடியாமல் கண்ணில் நீர் பெருக்கெடுத்தது.

 

 

இதெல்லாம் தனக்கு தேவை தானா என்ற மனதின் கேள்விக்கு உனக்கு தேவை தான் என்று மூளை பதிலளித்தது. தனக்கு மட்டுமல்லாது தன் கணவனையும் இழிவாக பேசிய அந்த பெண்ணின் மீது அளவில்லா கோபம் வந்தாலும் அவள் பேசிய கொச்சை சொற்கள் மனதை மேலும் காயப்படுத்துவதாய் இருந்தது.

 

 

பார்க்க ஓரளவு படித்த பெண் போல் இருந்த சரசம்மாவின்பேச்சு காது கொடுத்து கேட்க முடியாமல் போனது அவளுக்கு. வாள் கொண்டு அறுத்த அவளின் பேச்சை கேட்ட கணம் முதலே அனீஷை பார்க்க வேண்டும் அவனுடன் பேச வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு.

 

 

துன்பத்தில் கடவுளை சரணடையும் மனதை போல், அவளின் உள்ளக் கவலையில் அவள் சரணடைய விரும்பியது அவள் உள்ளங்கவர் கணவனின் மார்பில். அந்த கணம் அவனைத் தவிர வேறு எதையும் யோசிக்க விரும்பாத அவள் மனது கையில் இருந்த போனில் அவன் எண்களை அவசரமாய் அழுத்தியது…

 

 

மருத்துவமனைக்கு புதிதாக ஒரு அறுவை சிகிச்சை கருவி வாங்குவது தொடர்பாக முக்கியமான ஒரு கலந்துரையாடலில் இருந்தான் அனீஷ். அப்போது வெகு நாளாக அவன் எதிர்பார்த்து காத்திருந்த அந்த அழைப்பு இனிய கீதமாய் அவன் காதை வந்தடைந்தது.

 

 

அவன் கைபேசி

 

முன்பே வா என் அன்பே வா!
ஊனே வா  உயிரே வா!
முன்பே வா என் அன்பே வா!
பூப்பூவாய்ப் பூப்போம் வா!

 

 

என்ற பாடலின் தொனியில் ஒலிக்கக் கேட்டதும் அவனுக்குள் எதுவோ நிகழ்ந்ததை அவனால் உணர முடிந்தது. முக்கிய கலந்துரையாடல் என்பதையும் மீறி அவர்களிடம் மரியாதை நிமித்தம் சொல்லிவிட்டு எழுந்து வெளியில் வந்தான்.

 

 

அவசரமாய் பொத்தானை அமுக்கி “ஹலோ…என்றான். அனீஷின் குரல் கேட்டதும் பொங்கிய அழுகையை அவளால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. “ஹலோ… ஹலோ… என்றவனால் முதலில் அவள் அழுவதை உணர முடியவில்லை.

 

 

ஏதோ இடையூறாக சத்தம் கேட்கிறதோ என்ற ரீதியில் நினைத்துக் கொண்டிருந்தவன் பின் தான் அவள் அழுவதை உணர்ந்தான். அதற்குள் தன்னை சுதாரித்துக் கொண்டவள் “ஹலோ நான் ஆராதனா பேசறேன் என்றாள் அழுகையினூடே.

 

 

“என்னாச்சு எதுக்கும்மா அழறே? என்று கேட்டவனின் பரிவில் மீண்டும் அவளிடம் விசும்பல் மட்டுமே வந்தது.

 

 

“ஏதாச்சும் சொல்லு ஆராதனா?? இப்படி அழுத்திட்டே இருந்தா என்ன நினைக்கிறது?? எதுவும் பிரச்சனையா?? என்று யோசித்தவனுக்குள் ‘ஒரு வேளை குழந்தைக்கு எதுவும் பிரச்சனை என்று சொல்லிவிட்டார்களா அதற்கு தான் அழுகிறாளா என்று யோசித்ததுமே அவனை பதட்டம் தொற்றிக் கொண்டது.

 

 

பதட்டத்தோடே “கு… குழந்தைக்கு எதுவும் பிரச்சனையா!!! என்று கேட்கவும் தான் ஆராதனா அழுகையை கட்டுப்படுத்தி அவனுக்கு பதில் கொடுத்தாள். “இல்லை குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லை…

 

 

“எ… எனக்கு உங்க… உங்களை உடனே பார்க்கணும் என்றாள் திக்கித்திணறி.

 

 

“முதல்ல என்ன விஷயம் எதுக்கு நீ இப்போ அழற ப்ளீஸ் அதை சொல்லு என்றவனின் குரலில் பிடிவாதம் தெரிந்தது. அழுகையினூடே சற்று முன் நடந்தவற்றை அவனிடம் கூறி முடித்ததும் தான் மனதிற்குள் நிம்மதி வந்தது அவளுக்கு.

 

 

“நீ எங்க இருக்க இப்போ?? கூட யார் இருக்காங்க, முதல்ல போனை அவங்ககிட்ட கொடு என்றதும் அவன் சொல்படியே நேராக எழுந்துச் சென்றவள் நித்யாவிடம் போனை கொடுத்தாள்.

 

ஒன்றும் புரியாமல் விழித்த நித்யா சட்டென்று எழுந்து நின்றாள். “என்ன அண்ணி?? என்னாச்சு போன்ல யாரு?? நீங்க ஏன் அழுதுட்டு இருக்கீங்க, போன்ல யாரும் உங்களை திட்டிடாங்களா?? என்று படபடத்தவள் போனை காதில் வைக்காமல் கையிலேயே வைத்துக் கொண்டு ஆராதனாவிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

 

ஆராதனா அவளுக்கு பதிலொன்றும் கூறாமல் அவள் கைப்பிடித்து ஒரு ஓரமாய் இழுத்துச் சென்றவள் “நீ பேசு… என்றுவிட்டு அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தாள்.

 

 

ஒன்றும் விளங்காமல் போனை காதுக்குகொடுத்து “ஹலோ என்றாள் நித்யா.

 

 

“ஹலோ நான் அனீஷ் பேசறேன் என்றதும் “சொல்லுங்கண்ணா என்றவளிடம் என்ன பேசினானோ அவள் மண்டையை நன்றாக உருட்டுவது இருக்கையில் அமர்ந்திருந்த ஆராதனாவிற்கு புரிந்தது.

 

 

போனை வைத்துவிட்டு ஆராதனாவிடம் விசாரணையை தொடங்கிய நித்யாவிற்கு ஆராதனா எந்த பதிலையும் முழுதாக சொல்லவில்லை. ஆளுக்கொரு யோசனையில் அவரவர் அமர்ந்திருக்க, சில மணிகளில் அவர்கள் பெயரை அழைக்க இருவருமாய் மருத்துவரை பார்க்கச் சென்றனர்.

 

 

குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருப்பதாக கூறிய மருத்துவர் கணவரை பற்றி விசாரிக்க நாளை அவரை அழைத்து வருவதாக கூறிய ஆராதனாவை நித்யா வித்தியாசமாய் பார்த்து வைத்தாள்.

 

 

மருத்துவமனையில் இருந்து இருவருமாக வெளியே வரவும் அவர்களை நோக்கி ஒரு பெண் வந்தாள். “என்னா இங்க இருந்து இன்னும் கிளம்பலையா?? எல்லார்க்கும் கம்பிளைன்ட் பண்ணிட்டியா?? என்று எகத்தாளமாய் ஆராதனாவை பார்த்து கேட்டவள் அவளிடம் சண்டையிட்ட சரசம்மாவே தான்.

 

 

அவள் பேச்சை கேட்டு நித்யாவிற்கு எதுவோ புரிந்தது போல் இருந்தது. “ஹலோ என்ன பிரச்சனை உங்களுக்கு. எதுக்கு தேவையில்லாம இங்க வந்து பேசிட்டு இருக்கீங்க?? என்றாள் கேள்வியாய்.

 

 

“தேவையில்லாத விஷயத்துல மூக்கை நுழைக்கிறது எங்க வேலை கிடையாது. தோ… நிக்குதே இந்தம்மா தான் தேவையில்லாத விஷயத்துல எல்லாம் மூக்கை நுழைக்குது. நீ என்ட்ட சொல்றதுக்கு பதில் அதுகிட்ட சொல்லி வை என்றாள் சரசம்மா.

 

 

“தேவையில்லாத விஷயமா?? நீ என்ன சொல்ற?? என்று புரியாதவளாய் நித்யா அப்பெண்ணையும் ஆராதனாவையும் மாறி மாறி பார்க்க ஆராதனாவோ அப்பெண்ணை நோக்கி “நான் தப்பா எந்த விஷயத்துலயும் மூக்கை நுழைக்கலை

 

 

“உனக்கு தேவையில்லாத வேலை அதுல நீயேன் மூக்கை நுழைக்கிறன்னு தான் நான் சொன்னேன் என்று அவசரமாய் இடைமறித்தாள் சரசம்மா.

 

 

“தேவை எது தேவையில்லாதது எதுன்னு எங்களுக்கு தெரியும். அதை நீங்க எனக்கு சொல்ல வேண்டியதில்லை. நீங்க பேசினதுக்கு கண்டிப்பா சீக்கிரமே பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்றாள் ஆராதனா.

 

 

“ஹான்… போ… போ.. நீ யார்கிட்ட வேணா சொல்லிக்கோ போ… அல்லாம் நாங்க பதில் சொல்லிக்கிறோம்…. நீ உன் வேலை பாத்துன்னு போனா போதும் போ…

 

 

“அவனவன் புள்ளை இல்லைன்னு கோவில் கோவிலா போறானுங்க. ஈசியா கிடைச்சதால அவங்க கஷ்டம் உனக்கு இன்னா தெரிய போவுது

 

 

“ஏதோ எங்களால முடிஞ்ச சேவையா அவங்களுக்கு எங்களால முடிஞ்ச நல்லது பண்ணா ரொம்ப ஓவரா தான் பேசிகினு இருக்கியே மீண்டும் ஒரு முறை தப்பை நியாயமாய் பேசிய அவளின் மேல் கொலைவெறி வந்தது ஆராதனாவிற்கு.

 

 

“ஹலோ… ஹலோ… என்ன நடக்குது இங்க… வாய் இருக்குன்னு என்னென்னமோ பேசிட்டு இருக்கீங்க. என்ன பிரச்சனை?? என்ன வேணும் உங்களுக்கு?எதுக்கு இங்க வந்து அட்வைஸ் பண்ணிட்டு இருக்கீங்க. உங்க மேனேஜ்மெண்ட்ல கம்பிளைன்ட் கொடுக்கணுமா?? என்றாள் நித்யா.

 

 

“ஹான்… நீ ஒருத்தி தான் பாக்கி, நீயும் இவளோட சேர்ந்துகினியா?? போய் யார்கிட்ட வேணா பேசிக்கோ. நான் ஒண்ணும் அட்வைஸ் பண்ணலை. நீ இந்தம்மாக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணு. ரொம்ப ஓவரா துள்ளுது. அப்புறம் பின்னால பீல் பண்ணுறாப்புல ஆகிடும்

 

 

“வாயும் வயிறுமா இருக்கறன்னு பார்க்குறேன். இல்லன்னா நடக்குறதே வேற என்று சொல்லிவிட்டு சரசம்மா அவர்களை குரூரமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தாள்.

 

 

“அண்ணி என்னாச்சு அந்த பொம்பிளை எதுக்கு இப்படி பேசிட்டு போகுது என்று ஆராதனாவிடம் விசாரித்தாள் நித்யா. “எனக்கு பசிக்குது வீட்டுக்கு போகலாமா என்றவளிடம் மேற்கொண்டு எதுவும் பேசாமல் சரியென்று தலையாட்டினாள்.

 

 

வழியில் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தியவள் வண்டியை ஒரு ஹோட்டலுக்கு விடச் சொன்னாள். “ஹோட்டலுக்கு எதுக்கு?? வீட்டுக்கு போய்டலாம் என்ற ஆராதனாவின் கேள்விக்கு இப்போது நித்யா பதில் சொல்லவில்லை.

 

 

இருவருமாக ஹோட்டலில் உண்டுவிட்டு வெளியில் வர மணி மூன்றரையை தொட்டது. வெளிப்புறம் ஓரமாக நின்றிருந்த காரில் இருவருமாக ஏறினர். வண்டி அவர்கள் வீட்டிற்கு செல்லும் வழியில் செல்லாமல் வேறு புறம் செல்வதை பார்தததும் மீண்டும் ஆரம்பித்தாள் ஆராதனா.

 

 

“நித்யா வண்டி எங்க போகுது. இது நம்ப வீட்டுக்கு போற வழியில்லையே. டிரைவர் எங்க போறீங்க என்று நித்யாவிடம் தமிழிலும் டிரைவரிடம் கன்னடத்திலும் கேட்டாள்.

 

 

“வண்டி வீட்டுக்கு போகலை. இப்போ மங்களாதேவி கோவிலுக்கு போறோம். அதுக்கு அப்புறம் வீட்டுக்கு போகலாம் அண்ணி. மனசு சரியில்லை என்றவளிடம் ஆராதனாவும் எதுவும் மேற்கொண்டு கேட்கவில்லை.

 

 

அவளுக்குமே கோவிலுக்கு சென்றால் நன்றாக இருக்குமென்பது போல் தோன்ற அமைதியானாள். நாலு மணிக்கு கோவில் நடை திறக்கவும் அவர்கள் கோவில் வாசலில் இறங்கவும் சரியாக இருந்தது. நிம்மதியாக கடவுளை தரிசித்துவிட்டு அங்கேயே சற்று நேரம் இளைப்பாறினர் இருவரும்.

 

 

ஆராதனாவுக்குள் அனீஷ் நித்யாவிடம் என்ன கூறியிருப்பான் என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. அவளுக்கு இருந்த மனக்குழப்பத்தில் எதையும் கேட்கவோ செய்யவோ இயலாமல் தனக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்தாள்.

 

 

அந்த பெண் சரசம்மாவின் நாகரீகமற்ற பேச்சு வேறு அவளை அமைதியிழக்க செய்தது. அனீஷுக்கும் தன் வயிற்றில் வளரும் தங்கள் குழந்தைக்கும் தன்னால் ஏதோ அவமரியாதை நிகழ்ந்து விட்டது போல் மனம் துடித்தது.

 

 

தான் அவனை உடனே பார்க்க வேண்டும் என்று கூறினோமே தான் அழைத்து அவன் வருவானா என்ற கேள்வி வேறு மனதை குடைந்தது. ஏதேதோ எண்ணங்களால் சூழப்பட்டவள் நேரம் கடந்ததை உணரவேயில்லாமல் கண்ணீர் வழிய கண் மூடி இறைவனிடம் பிரார்த்தனை செய்துக் கொண்டிருந்தாள்.

 

 

“அண்ணி கிளம்பலாம் நேரமாகுது என்று ஆராதனாவை தட்டிய நித்யாவை பார்த்தவள் மெதுவாய் எழுந்தாள்.

 

 

“ரொம்ப நேரமாச்சு போல!! இருட்டியிருக்கு!! வீட்டுல அம்மா தேடுவாங்களே!! எதுவுமே சொல்லாம வந்திட்டோமே!! நீ போன் பண்ணி சொல்லிட்டியா!! என்றாள் ஆராதனா.

 

 

“நாம யாரோ அவங்க யாரோ?? நாம எதுக்கு இதெல்லாம் அவங்ககிட்ட சொல்லிட்டு. சொல்லிட்டு போகலைன்னா தேடுவாங்களா என்ன?? அதெல்லாம் அவங்க ஒண்ணும் நினைக்க மாட்டாங்க அண்ணி என்று அலட்சியமாய் பதில் சொன்னவளை கோபமாய் பார்த்தாள் ஆராதனா.

 

 

“நித்யா என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல. நாம ஒரு வீட்டுல இருக்கறோம். ஒருத்தர் வீட்டுக்கு லேட்டா வந்தா கூட மனசு எப்படி பதைபதைக்குது

 

 

“நாம காலையில கிளம்பினது, அதுவும் ஆஸ்பத்திரிக்கு போறோம்ன்னு மட்டும் சொல்லிட்டு வந்திருக்கோம். இப்போ எங்க எங்கல்லாம் போயிருக்கோம், ஒரு வார்த்தை போன் பண்ணி சொல்றது தானே மரியாதை

 

 

“நீ சொல்லலைன்னா என்கிட்டே சொல்லியிருக்க வேண்டியது தானே நான் சொல்லியிருப்பேன்ல அவங்ககிட்ட. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம அவங்க எதுவும் நினைக்க மாட்டாங்கன்னு கூலா சொல்றே என்றாள் ஆராதனா கோபக்குரலில்.

 

 

“அண்ணி நீங்க ஊர்ல இருந்து கிளம்பி வரும் போது சொல்லிட்டா வந்தீங்க. அப்படி பார்த்தா மல்லிகாம்மாகிட்ட சொல்லாதது எல்லாம் எனக்கு பெரிய விஷயமாவே தெரியலையே என்று நறுக்கு தெறித்தார் போல் கேட்கவும் சுரீரென்று யாரோ மண்டையில் அடித்தது போல் இருந்தது ஆராதனாவிற்கு.

 

 

“போகலாம் வாங்க என்ற நித்யா மேற்கொண்டு எந்த பேச்சையும் தொடராதவள் வெளியில் நின்றிருந்த கால் டாக்ஸியில் ஏறி அமர்ந்தவள் ஆராதனாவையும் கைப்பிடித்து அமர வைத்தாள்.

 

 

அரைமணி நேரத்திற்கு மேல் கடந்திருக்க “இறங்குங்க அண்ணி என்றவளின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் இறங்கினாள் அவள். தான் எங்கிருக்கிறோம் எங்கு வந்திருக்கிறோம் எதையுமே உணராமல் எண்ணங்கள் அவளை ஆக்கிரமித்திருந்தது.

 

 

திடீரென்று ஒலித்த விமான நிலைய அறிவிப்பின் ஒலி காதில் விழுந்து மூளையை சென்றடைந்து அவள் கருத்தில் பதிய சுற்றுமுற்றும் திரும்பி பார்த்தாள். நித்யாவிடம் எதுவும் கேட்பதற்கு அவளுக்கு தயக்கமாய் இருந்தது.

 

 

நித்யா இன்று பேசியது போல் அவளிடம் என்றுமே பேசியதில்லை. விளையாட்டாய் இருக்கும் அவளுக்கு அதிகம் உலக நடப்பு தெரியாது என்பது ஆராதனாவின் எண்ணமாயிருந்தது.

 

 

ஒரே பதிலில் தான் ஒன்றும் அறியாதவளல்ல என்பதை நிரூபித்திருந்தாள் அவள். மீண்டும் அவளிடம் எதுவும் கேட்டு அதற்கு அவள் என்ன பேசுவாளோ என்று தோன்ற அமைதியாய் நின்றாள்.

 

 

ஒரு வேளை அனீஷ் வருகிறேன் என்று சொல்லியிருப்பானோ!! அதனால் தான் இங்கு வந்திருக்கிறோமோ!! என்று ஒரு கணம் மனம் துள்ளியது. மறுகணமே அப்படியிருந்தால் தன்னிடம் அவன் சொல்லியிருக்க மாட்டானா என்று தோன்ற வந்த சந்தோசம் சட்டென்று கானல் நீரானது.

 

 

நித்யாவே சுனீஷிற்கு போன் செய்து வரச்சொல்லியிருப்பாளோ அதனால் தான் இங்கு வந்திருக்கிறோமோ என்று எண்ணிக் கொண்டே திரும்பியவளின் எதிரில் வந்து நின்றவனை இமைக்க மறந்தும் பார்த்தவள் ஓடிச்சென்று அவன் மார்பில் சரண் புகுந்தாள்.

Advertisement