Advertisement

அத்தியாயம் – 25

 

 

வீட்டிலிருந்து கிளம்பிய ராஜீவனுக்கு இன்னமும் குற்றவுணர்சியாகவே இருந்தது. அந்த பெண்ணிடம் ஒரு மன்னிப்பை கூட சொல்ல முடியவில்லையே என்று.

 

 

பேருந்தை பிடிக்க மெதுவாய் அவர்கள் வீட்டிலிருந்து எட்டி நடைப்போட்டவன் பிரேக் பிடித்தார் போன்று அந்த இடத்திலேயே நின்றான். அங்கிருந்த பார்க் ஒன்றில் நித்யா அமர்ந்திருப்பது கண்ணில் விழுந்து அவனின் நடையை தடை செய்திருந்தது.

 

 

அப்பெண் வெளியில் தான் சென்றிருக்கிறாள் என்று அறிந்ததுமே அவனும் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டான். வெளியே எங்காவது அவளை பார்த்து மன்னிப்பு கேட்டுவிடுவது என்று.

 

 

அவன் எண்ணம் போலவே அவளை இப்போது கண்டும்விட்டான். நடையை எட்டி போட்டான் அவளை நோக்கி. கண் முன் நிழலாட யாரென்று நிமிர்ந்தவள் சட்டென்று எழுந்து நின்றாள் எதிரில் நின்றவனை கண்டு.

 

“நான் ராஜீவ், ஆராதனாவோட அண்ணன். சாரிம்மா… நான் யோசனையில இருந்தேன். தெரியாம அடிச்சிட்டேன்னு சொல்லி தப்பிக்க பார்க்க நினைக்கலை. எனக்கு இருந்த வேற குழப்பத்துல சட்டுன்னு வந்த கோபத்துல கையை நீட்டிட்டேன்

 

 

“தேவையில்லாத வார்த்தைகளையும் பேசிட்டேன், என்னை மன்னிச்சுடும்மா என்று நேரடியாகவே விஷயத்திற்கு வந்தவன் இருகரம் கூப்பி மன்னிப்பை யாசிக்கவும் நித்யாவோ “அய்யோ சார் விடுங்க அதெல்லாம் ஒண்ணுமில்லை. நான் சுனீஷ்ன்னு நினைச்சு உங்களை அடிச்சுட்டேன்

 

 

“நான் செஞ்சது மட்டும் சரியா?? சோ நீங்க பண்ணதும் நான் பண்ணதும் டேலி ஆகிடுச்சு விடுங்க. எங்கயோ கிளம்பிட்ட மாதிரி இருக்கு ஊருக்கா??என்றாள் பேச்சை மாற்றும் விதமாய்.

 

 

சட்டென்று இயல்பாகி பேசிய அவளின் குணம் அவனுக்கு பிடித்தது. “ஹ்ம்ம் ஆமாம்மா கிளம்பிட்டேன் என்றான்.

 

 

“நான் தான் காரணமா?? என்றாள் நித்யா.

 

 

“நிச்சயமா இல்லை, எனக்கு வேலை இருக்கு ஊர்ல அதான் கிளம்பிட்டேன். அப்புறம் ஒரு விஷயம் ஆராதனாவை பத்தி எதுவும் சொல்லணும்ன்னா எனக்கு கூப்பிட்டு சொல்றியாம்மா என்றான் தயங்கிக்கொண்டே

 

 

‘எதுக்கு இவர் இத்தனை அம்மா போடுறார், எனக்கு அவ்வளவு வயசாவா ஆகிட்டு என்று மனதிற்குள் நினைத்தவள் “கண்டிப்பா சொல்றேன் சார், உங்க நம்பர் சொல்லுங்க என்று கேட்டு வாங்கி குறித்துக் கொண்டாள்.

 

 

“அப்புறம் சார்… ஒரு… ஒரு விஷயம் உங்களுக்கு தெளிவுபடுத்தணுமே

 

 

ராஜீவனோ புருவத்தை நெரித்து அவளை பார்த்தான். ‘என்ன தெளிவு படுத்தப்போறா என்ற யோசனை அதில் தெரிந்தது.

 

 

“சுனீஷ் எனக்கு அண்ணன் மாதிரி. மாதிரி என்ன மாதிரி அண்ணனே தான், அப்புறம் நான் எல்லார்கிட்டயும் இந்த மாதிரி உரிமையா பழகினது இல்லை. சுனீஷ் ரொம்பவும் முக்கியமானவன் அவனை தவிர வேற யாரையும் நான் தொட்டு பேசினது இல்லை

 

“அப்போ இன்னும் என் மேல கோபம் போகலை அதானே என்றான் சற்றேறிய குரலில்.

 

 

“நிச்சயமா இல்லை சார், சொல்லணும்ன்னு தோணிச்சு சொல்லிட்டேன். யார்கிட்டயும் நான் இதுவரைக்கும் விளக்கமும் கொடுத்ததில்லை இது தான் முதல் முறை. தப்பா எடுத்துக்காதீங்க உங்களை குத்திக்காட்ட நான் இதை சொல்லலை. தெளிவுபடுத்த தான் சொன்னேன்

 

 

“எல்லா பொண்ணுங்களும் ஒரே மாதிரி கிடையாது. அதை நீங்க புரிஞ்சுக்க தான் சொன்னேன். நான் கிளம்பறேன் சார் வீட்டில தேடுவாங்க என்று அவள் நகரவும் தான் அவள் கன்னத்தை பார்த்தான் அவன்.

 

 

அவன் விரல் இரண்டு நன்றாக அதில் பதிந்து போயிருந்தது. “ஒரு நிமிஷம் நித்யா, என்னோட கை விரல் தடம் பதிஞ்சு போச்சு. சாரிம்மா, ரியலி வெரி சாரி என்றான் மீண்டும் மன்னிப்பாக.

 

 

“வா நானே உன்னை வீட்டில விட்டுட்டு ஆராதனாகிட்ட சொல்லிட்டு வந்திடுறேன் என்று அவளுடனே நடக்க “ஐயோ பரவாயில்லை சார். அதெல்லாம் ஒண்ணுமில்லை நான் எதாச்சும் சொல்லி சமாளிச்சுக்குவேன்

 

 

“உங்களுக்கு டைம் ஆகியிருக்கும் நீங்க கிளம்புங்க என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தால் வீடே அமைதியாக இருந்தது. ‘நம்ம இல்லைன்னா வீடு கூட அமைதியா இருக்குதுபா என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

 

 

அப்போது சமையலறையில் இருந்து மல்லிகா வெளியில் வந்தார், வந்தவர் நேராக அவளருகே வந்து அவள் கையை பிடித்துக் கொண்டார். “நித்திம்மா மன்னிச்சுடுடா. இந்த மது பேசினதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்குறேன்டா என்றார்.

 

 

“அம்மா என்னம்மா நீங்க போய் என்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்டுகிட்டு. மது பேசினதை நான் தப்பாவே எடுத்துக்கலைம்மா. நான் அவளை கிண்டல் பண்ணேன், பதிலுக்கு அவ என்னை கிண்டல் பண்ணா அவ்வளோ தான் முடிஞ்சுச்சு போச்சு

 

 

“என்ன இருந்தாலும் அவ பேசினது தப்பு தானேம்மா என்றவரிடம் “அவ தப்புன்னா நானும் அவளை தப்பா சொல்லியிருக்க கூடாது தானேம்மா. அப்போ நீங்க என்னையும் தானே திட்டணும்

 

“நான் உங்களை என் அம்மாவா தான் நினைக்கிறேன், மது எனக்கு கிடைச்ச நல்ல தோழி. அவளை என்ன வேணா கிண்டல் பண்ணுவேன், பதிலுக்கு அவ என்னை கிண்டல் பண்ணுவா. இந்த பஞ்சாயத்துக்குள்ள எல்லாம் நீங்க யாரும் வரக்கூடாது சொல்லிட்டேன் ஆமா என்றாள்.

 

 

“ஆனா அம்மா இதெல்லாம் உங்களுக்கு யாரு சொன்னா?? என்றவளிடம் “எல்லாம் உன் பிரண்டு தான் வேற யாரு, சொந்தமா வாக்குமூலம் கொடுத்து ஒவ்வொருத்தர்கிட்டயா வாங்கி கட்டிட்டு இருக்கா என்றார் மல்லிகா.

 

 

“என்னம்மா சொல்றீங்க அவளே சொன்னாளா?? அப்போ சுனீஷ்கிட்டயும் சொல்லிட்டாளா?? என்றதும் அவர் ஆமென்பது போல் தலையசைத்தார்.

 

 

“நீங்க வேற அவளை திட்டுனீங்களா?? இப்போ சுனீஷ் டர்ன்னா?? எங்கம்மா இருக்காங்க அவங்க என்றாள்.

 

 

“சுனீஷ் தம்பி கோவிச்சுகிட்டு மாடிக்கு போயிட்டார். மது உள்ள அழுதுட்டு இருக்கா என்றார் அவர்.

 

 

படியேறி மாடிக்கு செல்லவும் சுனீஷ் முதலில் ராஜீவன் நின்று கொண்டிருந்த அதே போஸில் நிற்கவும் ‘நீ நிக்குறன்னு நினைச்சு தானேடா நல்லா வாங்கினேன் என்று கன்னத்தை தடவிக்கொண்டே அவனருகே சென்றாள்.

 

 

“இங்க என்னடா பண்ணுற, தனியா நின்னுட்டு என்றாள்.

 

 

“எங்க போனே நீ?? உன்னை தான் ரொம்ப நேரமா தேடிட்டு இருக்கேன் என்றான் சுனீஷ்.

 

 

“என்னையா?? என்னை எதுக்கு தேடின?? வந்ததும் உன் ஆளை பார்க்கறது தானே உன் வேலை. என்னை எதுக்குடா தேடின என்றாள் எதுவும் தெரியாதது போல்.

 

 

“ஹேய் போதும் நீ நடிச்சது எல்லாம். என்ன சொன்னா அவ காலையில உன்னை. அவ அப்படி சொன்னதும் ஓங்கி ரெண்டு போட்டிருக்க வேண்டியது தானே. எதுக்கு பேசாம இருந்தே என்றான்

 

 

“டேய் லூசாடா நீ. அவளும் வேணுமின்னு பேசலை நானும் வேணும்ன்னு பேசலை. சும்மா ஒருத்தர் மாத்தி ஒருத்தர் கிண்டல் அடிச்சுக்கிட்டோம். இதை போய் பெரிசா எடுத்துக்குவியா

“இதோ பாரு எங்க விஷயத்துல நீ மூக்கை நுழைக்காத. நான் ஒண்ணும் உன்கிட்ட கம்பிளைன்ட் கொடுக்கலை தானே. இந்த பிரச்சனையை இதோட விடு, போய் மதுகிட்ட ஒழுங்கா பேசு. நான் அவளை மேல அனுப்பி வைக்குறேன் என்றாள் நித்யா.

 

 

“பெரிய மகாத்மாவா நீ, உன்னளவு பொறுமை எல்லாம் என்கிட்ட இல்லை

 

 

“இல்லைல்ல விட்டுடு. நான் இங்க இருக்கறது தான் பிரச்சனை நான் பழைய படி சென்னைக்கு கிளம்பிடுறேன் என்று அவள் முகத்தை திருப்பவும் “இப்போ நான் என்ன செய்யணும்ன்னு சொல்ற என்றான் சுனீஷ்.

 

 

“மதுவை என்னைவிட உனக்கு நல்லா தெரியும் தானே. நான் அவளை சீண்ட போய் தான் அவ என்னை பதிலுக்கு பேசினா. ப்ளீஸ் இன்னைக்கே இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைச்சுடு

 

 

“அவளுக்கு அது தப்புன்னு தோணினதுனால தான் உன்கிட்ட அவளே சொல்லியிருக்கா. இதுக்கு மேல நீ என்ன எதிர்பார்க்குற.கீழ போய் அவளை சமாதானப்படுத்து சரியா எனவும் “சரி உனக்காக என்றான் அவன்.

 

 

“எனக்காக எல்லாம் வேண்டாம். உனக்காக உங்களோட சந்தோசத்துக்காக உங்களோட வருங்காலத்துக்காக சரியா எனவும் “சரி வாயாடி என்றான் அவனும் இன்முகத்துடன்.

 

 

“ஹேய் நீ கீழ வராதே, நான் உனக்கு ஒரு நல்ல சான்ஸ் கொடுக்கறேன். நான் கீழ போய்ட்டு அவளை மேல அனுப்பி வைக்குறேன். நீ அப்படி இப்படின்னு பேசி ரொமான்ஸ் பண்ணிக்கோ சரியா. மிஸ் பண்ணிடாதே என்று சற்று சிம்ரனின் குரலில் சொல்லி முடித்து ஒரே ஓட்டமாக ஓடினாள்.

 

____________________

 

 

அனீஷ் அவன் அறையில் அமர்ந்துக்கொண்டு தீவிரமாய் எதையோ யோசித்துக்கொண்டிருக்க அவன் கைபேசி சிணுங்கி தான் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொண்டது.

 

 

போனை கையில் எடுத்தவன் அழைத்தது ராஜீவ் என்பதை கண்டதும் அவசரமாய் பொத்தானை அழுத்தி காதில் வைத்தான். “சொல்லுங்க ராஜீவ் என்றான்.

 

 

எடுத்ததுமே ராஜீவ் “நான் ஆராதனாவை பார்த்தேன் என்றான்.

 

 

“என்ன சொன்னா ராஜீவ்?? எப்படியிருக்கா??

 

 

“நான் ஒண்ணு கேட்பேன் உண்மையை சொல்லுவீங்களா அனீஷ் என்றான் ராஜீவ் பீடிகையாக.

 

 

“சொல்லுங்க ராஜீவ்

 

 

“ஆராதனா எங்க இருக்கான்னு உங்களுக்கு தெரியும் தானே!! என்ற அவன் பதிலுக்கு மற்றவன் என்ன சொன்னானோ சில நிமிடங்களாக பேசிய இருவரும் திருப்தியுடனே போனை வைத்தனர்.

 

____________________

 

 

ராஜீவன் வந்து சென்றதில் இருந்தே ஆராதனாவிற்குள் தீராத குழப்பமும் யோசனையும் வந்து சேர்ந்தது. அனீஷ் தன்னை தேடி வந்தே தீருவான் என்று தான் அனாவசியமாய் நினைக்கிறோமோ என்று எண்ணினாள்.

 

 

எந்த ஒரு நம்பிக்கையில் தான் அப்படி நினைத்தோம் என்று குழம்பித் தவித்தது மனது. தன்னுடைய நம்பிக்கை குருட்டுத்தனமானது என்பதை அக்கணம் ஒரு வலியுடனே உணர்ந்தாள் அவள்.

 

 

தன்னை அவன் தாய் வீட்டிற்கு தானே போகச் சொன்னான். ஆனாலும் அதை அவன் சொல்லியிருக்கக் கூடாது என்பதை அவள் மனம் இடித்துரைத்தது. அவன் தன்னைத் தேடி வருவான் என்று வைத்த நம்பிக்கையை அவன் மாறுவான் என்று வைத்திருக்கலாமோ என்று எண்ணியது அவள் மனம்.

 

 

தமையனிடம் காட்டிய அதிகாரத்தையும் பிடிவாதத்தையும் கணவனின் விஷயத்தில் காட்ட முடியாது என்பதை மிகத் தாமதமாக உணர்ந்தாள் அவள். அந்த ஒரு விஷயத்தில் அவன் காட்டிய பிடிவாதம் தவிர வேறு எதற்காகவும் அவன் அவளை கஷ்டப்படுத்தியதில்லையே.

 

 

தவறு உன்னதா!!! என்னதா!!! என்ற ஆராய்ச்சியை விட்டு ஓடிச்சென்று அவன் மார்பில் சாய்ந்துக் கொள்ள துடித்த உணர்வினை தடுக்கும் வழி தெரியாது அவனை சந்திக்கும் வழி புரியாது தன்னிலை குறித்து அவளுக்கு அழுகை வந்தது.

 

 

இதுவரையிலும் ஏதேதோ யோசனையில் பயணித்த எண்ணங்கள் சரியான பாதையில் பயணிக்க ஆரம்பித்தது. யாழினியிடம் பேச வேண்டும் போல் தோன்றியது.

 

 

கைபேசியை எடுத்து யாழினிக்கு அழைத்தவள் இரண்டு ரிங்கிலேயே அணைத்துவிட்டாள். ஏனோ யாழினியிடம் பேச தயக்கமாய் இருந்தது. பேசினால் திட்டுவாளோ!! பேசாமல் போய்விடுவாளோ!! என்று பயமாய் இருந்தது.

 

 

விளையாட்டாய் நாட்கள் விரைந்தோட அவ்வப்போது தொலைக்காட்சியில் வந்த விளம்பரம் முன் போல் இப்போதெல்லாம் அவளை கோபம் கொள்ள செய்யவில்லை. இப்போதும் அவள் அவ்விளம்பர யுக்தியை ரசிக்கவில்ல, மாறாக அதில் தோன்றும் தன் கணவனை தன்னையுமறியால் ரசித்து பார்க்க ஆரம்பித்தாள். (இதற்கு தானோ ஆசைப்பட்டாய் பாலகுமாரா!!)

 

 

மசக்கையின் உபாதைகளால் அவதிப்படும் நேரத்தில் அன்னை மடியும் கொண்டவனின் தோளுக்கும் மனம் ஏங்கி தவிக்க ஆரம்பித்தது. அவள் நெஞ்சில் இருந்த கோபம் மெல்ல மெல்ல குறைந்து ஏக்கம் எழவாரம்பித்தது.

 

 

மல்லிகா அவளை தாங்கும் போதெல்லாம் அவள் பெரிதும் நினைக்கும் வேறு ஒரு நபரும் உள்ளார். அவர் தான் திலகவதி, தன் அன்னையை போல் தோழமை காட்டி அக்கறைக் கொண்ட மற்றொரு ஜீவன் அவர்.

 

 

தன் பிடிவாதத்தால் அனைவரின் அன்பையும் உதாசீனம் செய்துவிட்டோம் என்று காலதாமதமாய் புரிந்தது அவளுக்கு. எப்படி அவர்களை நேருக்கு நேராய் சந்திக்க போகிறோம் என்று தவிப்பு முன்பை விட அதிகமாய் தோன்றியது.

 

 

அவளின் எண்ணப்போக்கு இப்படியிருக்க ராஜீவன் கொடுத்த இரண்டு மாத கெடுவிற்கு முன்னாலேயே பதறித்துடித்து தானே தன்னவனைத் தேடி போகப் போகிறோம் என்பதை அறியாமல் அனீஷை எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள் அவள்.

 

____________________

 

 

சுனீஷ் கோவைக்கு சென்றிருந்தான் அனீஷைக் காண. வீட்டில் அனைவருமே இருந்தனர், ராமேஸ்வரம் சென்றிருந்த அன்னை தந்தையும் கூட வீட்டிற்கு திரும்பி விட்டிருந்தனர்.

 

 

வெகு நாளைக்கு பின் அனைவருமே ஒன்றாய் வீட்டில்!! ஆராதனாவை தவிர!! திலகவதிக்கு தான் மனம் கவலையில் உழன்றது. குடும்பத்தினர் யாராவது ஒருவராவது வீட்டில் இல்லாமல் இருப்பதே அவரின் கவலைக்கு காரணம்.

 

 

இத்தனை வருஷமாக அது தானே நடக்கிறது என்று மாறுமோ என்ற பெரும் மனக்குறை அவருக்கு. ஏதோ யாழினியும் சபரியும் இணக்கமாய் இருப்பது மட்டுமே மனதிற்கு சுகமாய். அனீஷை தேடி அறைக்கு சென்றான் சுனீஷ்.

 

 

“சொல்லுங்கண்ணா என்னை எதுக்கு வரச் சொன்னீங்க?? என்று அவன் அனீஷிடம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே சபரியும் உடன் வந்து இணைந்திருந்தான்.

 

 

“நீ இங்கயே வந்திடேன் சுனீஷ், இன்னும் ஏன் தனியா இருக்கணும்?? என்ற அனீஷை ஏறிட்டான் அவன் தம்பி.

 

 

“நான் வீட்டை விட்டு போன காரணம் இன்னமும் அப்படியே தானே அண்ணா இருக்கு. அண்ணியும் கூட அதை நினைச்சு தானே போனாங்க என்று அனீஷிடம் எதிர்கேள்வி கேட்டான் அவன்.

 

 

“சுனீஷ் உங்கண்ணி தான் புரியாம என்னைவிட்டு கிளம்பி போனா!! நீயும் ஏன்டா புரிஞ்சுக்க மாட்டேங்குற?? என்று சலித்தான்.

 

 

“அண்ணா உங்களுக்கு தான் எங்களை புரியவே மாட்டேங்குது என்றவனை இடைமறித்தான் சபரி.

 

 

“சுனீஷ் உனக்கு தான் எதுவுமே புரிய மாட்டேங்குது. அவன் உனக்கு அண்ணன் அவனை எதிர்த்து பேசுறோம்ன்னு இருக்கா உனக்கு??

 

 

“ஏதோ சின்ன பையன்னாச்சேன்னு  விட்டுபிடிக்கலாம்ன்னு பார்த்தா நீ ஏன்டா இப்படி இருக்க என்று லேசாய் சிடுசிடுத்தான் சபரி.

 

 

“சபரிண்ணா நீ ஆரம்பிச்சுட்டியா உன் வியாக்கியானத்தை நான் என்ன புரியாம இருக்கேன் நீயே சொல்லு??

 

 

“சபரி கோபமா பேசாதே அவனுக்கு புரியற மாதிரி சொல்லு. அவன் புரிஞ்சுப்பான் அவனுக்கும் வெளி உலகம் நல்லாவே தெரிஞ்சிருக்கும் என்றான் அனீஷ்.

 

“உனக்கு எங்ககிட்ட பிரச்சனையா இருக்கறது எது?? என்றான் சபரி.

 

 

“அதான் ஏற்கனவே சொல்லிட்டேனே சபரிண்ணா

 

 

“நம்மகிட்ட வேலை செய்யறவங்களுக்கு வீடு இல்லைங்கறது தான் உன்னோட குறைன்னா அது அர்த்தமில்லாதது சுனீஷ். கொஞ்சம் யோசிச்சு பாரு இன்னைக்கு அவங்க நம்மகிட்ட வேலை செய்யறாங்க நாளைக்கே வேற ஒரு ஆளுகிட்ட வேலை செய்ய போய்டுவாங்க

 

 

“அவங்களுக்கு நாம எப்படி வீடு கட்டி கொடுக்க முடியும். நான் முதல்லயே சொன்ன மாதிரி அவங்க வாழ்க்கை ஒரு நாடோடி வாழ்க்கை. அதுவுமில்லாம உனக்கு தெரியாத விஷயமும் இதுல ஒண்ணு இருக்கு. அவங்க எல்லாரும் சிட்டில உள்ளவங்க கிடையாது

 

 

“எல்லாருமே அவங்கவங்க சொந்த ஊரில இருந்து தான் இங்க வேலைக்கு வர்றாங்க. இங்க சம்பாதிக்கற பணத்தை வைச்சு அவங்க அவங்களோட சொந்த ஊர்ல வீடு, நிலம்னு வாங்கி போட்டுட்டு தான் இருக்காங்க என்று அவன் சொல்லி முடிக்கவும் சுனீஷ் அமைதி காத்தான்.

 

 

“எப்படி சொல்றீங்க சபரிண்ணா இது நிஜமா?? என்று அவன் அண்ணன்கள் இருவரையும் குழப்பமாய் பார்த்தான்.

 

 

“சபரி சொல்றது சரி தான் சுனீஷ். உனக்கு அதுல எந்த சந்தேகமும் வேண்டாம். அன்னைக்கே உனக்கு இதை சொல்லியிருப்பேன் ஆனா அன்னைக்கு நீ இருந்த நிலையில நாங்க என்ன சொன்னாலும் அது உனக்கு சப்பைக்கட்டா தான் தெரிஞ்சிருக்கும், அதான் எதுவும் சொல்லலை

 

 

சபரி பேச்சை தொடர்ந்தான், “உனக்கு தான் என்னை பத்தி தெரியுமே சுனீஷ், நீ கேள்வி கேட்டதும் இவன் என்ன என்னை கேள்வி கேட்கறதுன்னு சட்டுன்னு ஒரு கோபம் எனக்கு

 

 

“அதனால தான் நீ கேட்டதும் நான் உனக்கு விளக்கமா பதில் சொல்லலை. அதுக்கு அப்புறம் நீ ஒண்ணொண்ணா குறை சொல்லிட்டே இருந்தே, அதுனால தான் அனீஷ்கிட்ட சொன்னேன்

 

 

“அனீஷும் உன்னை ஹாஸ்பிட்டல் மேனேஜ்மெண்ட் பார்த்துக்க சொன்னான். ஆனா அதையும் நீ விட்டுவைக்கலை. உனக்கு அங்க நடக்கறதும் குறையா தான் தெரிஞ்சுது

“அப்போ எனக்கு எதுவுமே புரியலைன்னு சொல்றீங்களா?? நான் என்ன முட்டாளா?? என்ற சுனீஷுக்கு இப்போது லேசாய் கோபம் எட்டிப்பார்த்தது.

 

 

“சபரி நான் சொல்லிக்கறேன், நீ இரு என்று அவனை அமைதியாய் இருக்குமாறு கூறிவிட்டு அனீஷே தொடர்ந்தான்.

 

 

“இங்க பாருடா உன்னை முட்டாள்ன்னு நாங்க சொல்லலை. நீ சின்ன பையன்டா அப்போ தான் படிப்பை முடிச்சுட்டு வெளிநாட்டுல இருந்து வந்த. வந்ததும் சென்னைக்கு வேலைக்கு போறேன்னு அங்க போய்ட்ட

 

 

“அங்கயாச்சும் ஒழுங்கா வேலை பார்த்தியா, யாருக்கோ நல்லது நடக்கட்டும்ன்னு நீ வேலையை விட்டுட்டு வந்துட்ட. நீ கொஞ்சம் யோசிச்சு பாரு நீ செஞ்சது சிறுபிள்ளைத்தனமா இல்லையான்னு

 

 

“அண்ணா!!!

 

 

“உன்னை குறை சொல்லலை சுனீஷ். நீ நல்லவன் மட்டுமில்லை ரொம்ப ரொம்ப நல்லவன் தான். எல்லாருக்கும் நல்லது தான் நினைச்ச, அதில எந்த தப்புமில்லை. அம்மா சின்ன வயசுல ஒரு பழமொழி சொல்லுவாங்க பாத்திரமறிந்து பிச்சையிடுன்னு கேள்விப்பட்டிருக்கியா??

 

 

“இந்த பழமொழி அந்த காலத்துல எழுதப்பட்டது. அதோட உண்மையான விளக்கம், யாசகம் கேட்பவர்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் அல்ல. அவர்களில் சிலர் சிவ / வைணவ அடியார்களாகவும், அவங்கள்ள சிலர் பழவகைகளை மட்டுமே யாசகமா பெற்றுக்கொள்வார்களாம்

 

 

“அதுனால அவங்களுக்கு பிச்சை போடும் போது அவங்க கையில இருக்கறது திருவோடா இல்லை வேறு பாத்திரமான்னு தெரிஞ்சு பிச்சையிடுன்னு சொல்லியிருக்காங்க. அதே தான் நானும் சொல்றேன் அவங்களோட தேவை என்னன்னு தெரியாம நாம ஒண்ணை அவங்களுக்கு செய்ய முடியாது

 

 

“உனக்கு உண்மையாவே அவங்களோட தேவை என்னன்னு தெரியாது. நாங்க சொல்றதுல உண்மையில்லைன்னு உனக்கு தோணிச்சுன்னா நீயே இதை அவங்ககிட்ட நேரடியா கேளு நாங்க தடுக்கலை

 

 

“அதை கேட்டுட்டு வந்து சொல்லு உன்னோட தேவையை நாங்க செஞ்சு தரோம். உன்னாலயும் அவங்களுக்கு உதவ முடியும் போ… போய் அவங்ககிட்ட பேசி பாரு என்றான்.

“நிஜமாவே எனக்கு ஒண்ணுமே புரியலைண்ணா. நீங்க ரெண்டு பேரும் என்னை குழப்புறீங்க?? நல்லது நினைக்கறது தப்பா??

 

 

“சுனீஷ் உன்னை குழப்பலை, உனக்கு தெளிய வைக்க தான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன். நீ தனித்தன்மையோட இருக்கணும்னு நினைச்சேன். நீ சென்னைக்கு வேலைக்கு போனப்போ சந்தோசமா இருந்துச்சு

 

 

“நீ உனக்கு பிடிச்சதை படிச்ச, நல்ல வேலையை தேடிக்கிட்ட, சொந்தக்கால்ல நிக்குறன்னு நான் சந்தோசப்பட்டுக்கிட்டு இருக்கும் போதே நீ வேலையை யாருக்கோ விட்டுக்கொடுத்துட்டு வந்து நின்ன??

 

 

“கொஞ்சம் யோசிச்சு பாரு உனக்குன்னு அந்த கம்பெனில எவ்வளவு ரெஸ்பான்ஸிபிலிட்டிஸ் இருந்திருக்கும் அதையெல்லாம் ஒரு நொடியில தூக்கி போட்டுட்டு வந்துட்டுடியே ஒரு நாளாச்சும் அதை பத்தி நீ யோசிச்சிருக்கியா

 

 

“நல்லது நினைக்கறதும் தப்பில்லை, நல்லவனா இருக்கறதும் தப்பில்லை. எப்பவும் நாம ஏமாளியாவும் ஏமாத்துறவனாவும் தான் இருக்கக் கூடாது. இப்போ நீ ஸ்கூல் நடத்துற, உன்னோட பிரண்டுக்கு வேலையில்லைன்னு ஸ்கூலை அவன் பேர்ல மாத்திக் கொடுத்திடுவியா என்ன??

 

 

“அதெப்படி மாத்திக்கொடுப்பேன், என்னடா ஸ்கூல்ல அவனுக்கு ஒரு வேலை போட்டு கொடுப்பேன். என்னால முடிஞ்சது அது தானே என்று அனீஷின் கேள்விக்கு இடைமறித்து பதில் சொன்னான் சுனீஷ்.

 

 

“ஆனா இதே விஷயம் சென்னையில நடந்தப்போ நீ உன்னோட நண்பனுக்கு உன்னோட வேலையை தானேவிட்டுக்கொடுத்திட்டு வந்த. இப்போ அதையே மாத்தி சொல்ற. ஏன்னா இப்போ தான் நான் நடைமுறை வாழ்க்கையை பழகவே ஆரம்பிச்சிருக்க. இது தான் சுனீஷ் அனுபவம்

 

 

“இன்னைக்கு சபரி கூட சைட்டுக்கு போ, நீயே நேர்ல போய் அவங்களை விசாரி, அவங்களோட தேவை என்னன்னு தெரிஞ்சுட்டு வந்து சொல்லு. நாங்க சொன்னது உண்மையா இல்லையான்னு உனக்கு புரியும்

 

 

“நீ சபரி கூட தான் போகணும்ன்னு இல்லை. ஒரு வேளை நாங்க தான் அவங்களை மாத்தி பேச வைச்சுட்டோம்ன்னு கூட உனக்கு தோணும். உன்னிஷ்டம் நீ வேற யார்கிட்ட வேணாலும் விசாரிச்சுக்கோ

 

 

சுனீஷுக்கு பெரும் குழப்பம் வந்து சேர்ந்தது. இதுவரை அவன் செய்தது எல்லாமே சரியே என்றிருந்தவனுக்கு தன் எண்ணத்தில் எங்கேனும் தவறிருக்கிறதோ என்ற எண்ணம் லேசாய் முளைவிட தொடங்கியது.

 

 

அனைவரிடமும் சொல்லிக்கொண்டு ஊட்டிக்கு கிளம்பினான். கிளம்பும்முன் அனீஷிடம் சென்றவன் “அடுத்த வாரம் அண்ணிக்கு செக்கப் இருக்குண்ணா. நான் ஊருக்கு போயிட்டு உனக்கு போன் பண்றேன் என்றான்

 

 

“சரி நீ உன் முடிவு என்னன்னு சொல்லவே இல்லையே?? என்றான் அனீஷ்.

 

 

“அண்ணி இங்க வரும் போதே நானும் வர்றேன். எனக்கும் கொஞ்சம் யோசிக்கணும். நாங்க உங்களை எல்லாம் உன்னை கஷ்டப்படுத்தியிருந்தா சாரிண்ணா என்றான் உறுதியான குரலில்.

 

____________________

 

 

ஆராதனா இப்போதெல்லாம் அவள் வீட்டினருக்கு போன் செய்து பேசத் தவறவில்லை. வீணாய் ராஜீவனை கஷ்டப்படுத்த அவள் விரும்பவில்லை. அவள் அன்னையோ அவளை நேரில் பார்க்க ஆர்வம் கொண்டவராய் அவள் விலாசம் விசாரித்தார்.

 

 

“அம்மா நான் தான் இன்னும் கொஞ்ச நாள்ல வந்திருவேன்னு சொல்றேன்ல. எதுக்கு இப்படி அடம் பிடிக்கறீங்க. எனக்கும் உங்களை எல்லாம் பார்க்கணும் போல தான் இருக்கு

 

 

“நான் வந்ததும் சொல்றேன் நீங்க எல்லாரும் வாங்க, சரியாம்மா. அம்மா பேசுங்கம்மா. நான் அங்க இருக்கும் போதெல்லாம் எப்போடி நீ கல்யாணம் ஆகிப்போவே அப்போ தான் நிம்மதின்னு சொல்லிட்டு இப்போ ஏன்மா இவ்வளோ சீன் போடுற என்றாள்.

 

 

“உனக்கு கொழுப்புடி, நாங்க எல்லாரும் உன்னைய நினைச்சு கவலைப்படுறது உனக்கு சீனு போடுற போல இருக்கா. ஏன் சொல்ல மாட்டே, பொழுதுக்கும் உங்க பெரியம்மையும் நானும் உன்னைய பத்தி தான் பேசிட்டே இருப்போம்

 

 

“அம்மா நான் சும்மா தான் சொன்னேன் அதுக்குள்ளே மூஞ்சியை தூக்கி வைச்சுக்காதம்மா. உன்னை கிண்டல் பண்றேன் அதுக்கும் கோவிக்கறீங்களே. பெரியம்மாகிட்ட போனை கொடுங்க நான் பேசணும் என்றவள் அவருடனும் பேசிவிட்டு வைத்தாள்.

 

ஏனோ மனம் இப்போது தான் லேசாய் ஆனது போல் இருந்தது. அவர்களிடம் பேசிவிட்டு வைத்தவள் வேறு ஒரு எண்ணுக்கு அழைத்தாள்.

 

____________________

 

 

தனித்து அவனறையில் அமர்ந்திருந்த அனீஷ் கடந்த போன நாட்களை மனதிற்குள் ஓட்டிப்பார்த்துக் கொண்டிருந்தான். ஊருக்கு செல்லும்முன் ஆராதனாவிடம் பேசியதை நினைத்து போகும் வழியெல்லாம் கவலை கொண்டது கண்முன் நிழலாடியது.

 

 

எல்லாமும் விட மிகப்பெரிய அதிர்ச்சியாய் மறுநாள் அவள் வீட்டை விட்டு சென்றுவிட்டாள் என்று சபரி உரைத்த தருணம் நெஞ்சில் தணலை வாரியிறைத்தது போல் மனம் கருகியது.

 

 

ஏதோ கோபத்தில் பேசிவிட்டோம் அதெல்லாம் சில நொடிகள், நிமிடங்கள் அல்லது நாட்களில் சரியாகிவிடும் என்று நினைத்திருக்க நடந்ததோ வேறு. அனீஷ் அவளின் அந்த முடிவை நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

 

அதை மட்டும் தான் அவனால் கணிக்க முடியவில்லையே தவிர அடுத்து அவள் என்ன செய்வாள் என்பதை அவனால் கணிக்க முடிந்தது. கவலைகள் சிந்தனையை மழுங்கடிக்கும் ஆனால் அனீஷின் சிந்தனையோ அப்போது தான் தெளிவாய் யோசித்தது.

 

 

நிதானத்தை கடைபிடித்தது, விமான நிலையத்திலே இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தவன் இருகைகளையும் தலைக்கு முட்டுக்கொடுத்து சில நொடிகள் இருந்தாலும் அவன் மனம் வேகமாய் சிந்திக்க ஆரம்பித்தது.

 

 

அதே சிந்தனையுடனே சுனீஷிற்கு போன் செய்தான் விமான நிலையத்தில் இருந்து. போனை எடுத்த சுனீஷ் “சொல்லுங்கண்ணா என்றான்.

 

 

சுனீஷிடம் எந்த விபரத்தையும் நேரடியாக கூறாமல் “சுனீஷ் உன்னால எனக்கு ஒரு உதவி ஆகணுமே என்றான்

 

 

“சொல்லுங்கண்ணா என்ன விஷயம்ன்னு சொல்லுங்க நான் செஞ்சுட்டு போறேன். அதுக்கு எதுக்கு உதவின்னு எல்லாம் சொல்றீங்க

 

 

“உங்கண்ணி உனக்கு போன் பண்ணா நீ எனக்கு உடனே சொல்லணும் என்றுவிட்டு நிறுத்தினான்.

 

“என்னண்ணா எதுவும் பிரச்சனையா??

 

 

“ப்ளீஸ் சுனீஷ் இப்போ எதுவும் கேட்காதே. உங்கண்ணி போன் பண்ணா மட்டும் எனக்கு உடனே போன் பண்ணு. என்னை ரீச் பண்ண முடியலைன்னா எனக்கு ஒரு மெசேஜ் போடு. ஏன்னா நான் பிளைட்ல இருந்தா போன் உனக்கு ரீச் ஆகாம போக சான்ஸ் இருக்கு

 

 

“நான் சென்னை வந்ததுமே உனக்கு போன் பண்ணிடுவேன். உங்கண்ணி என்ன ஹெல்ப் கேட்டாலும் நான் கேட்டதா நினைச்சு செஞ்சு கொடு சரியா. ப்ளீஸ் பார்த்துக்கோ சுனீஷ் என்றுவிட்டு போனை வைத்தான்……

Advertisement