Advertisement

அத்தியாயம் – 24

 

 

“அண்ணா என்று அழைத்துக்கொண்டு ராஜீவனின் தோளில் சாய்ந்து அழுதுக்கொண்டிருந்தாள் ஆராதனா. மதுவோ இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

ஒருவாறு தன்னை சுதாரித்துக்கொண்டு “அண்ணா உள்ள வாங்க, அக்கா உள்ள வந்து பேசுங்க என்று அழைக்கவும் இருவருமே உள்ளே வந்தனர்.

 

 

“நீங்க பேசிட்டு இருங்க நான் அண்ணாக்கு சாப்பிட ஏதாச்சும் கொண்டும் வர்றேன் என்று உள்ளே செல்ல முனைந்த மதுவை நிறுத்திய ராஜீவன் “எனக்கு இப்போ எதுவும் வேண்டாம்மா. கொஞ்சம் கழிச்சு சாப்பிடுறேன் என்றான்.

 

 

“சரி நான் உங்களுக்கு மதிய சாப்பாடு ரெடி பண்ணுறேன் என்று சொல்லிவிட்டு இருவருக்கும் தனிமை கொடுத்து அங்கிருந்து நகர்ந்தாள். அதுவரையிலும் ராஜீவன் இங்கு எப்படி வந்திருப்பான் என்று யோசிக்காத ஆராதனா அப்போது தான் அவன் முகத்தை யோசனையுடன் ஏறிட்டாள்.

 

 

“என்ன நான் எப்படி உன்னை கண்டுபிடிச்சு இங்க வந்தேன்னு பார்க்கறியா?? என்று அவள் கேள்வியை படித்தவன் போல் கேட்டான் ராஜீவன். அவள் ஆம் என்று தலையசைக்கவும் ராஜீவன் வாசல் புறம் பார்வையை செலுத்த சுனீஷ் உள்ளே வந்து கொண்டிருந்தான்.

 

 

‘அப்போ சுனீஷ் தான் அண்ணாகிட்ட சொல்லி கூட்டிட்டு வந்தாரா, அப்போ அவருக்கும் இந்நேரம் தெரிஞ்சிருக்குமா!! அவரும் வருவாரா!!! என்று அவள் மனம் வேக வேகமாய் யோசிக்க ஆரம்பித்தது.

 

 

“அண்ணி உங்க எண்ணத்துக்கு எல்லாம் ஸ்பீட் பிரேக் போடுங்க. நானா போய் யாருக்கும் எதுவும் சொல்லலை. உங்க அண்ணா தான் என்னை கண்டுபிடிச்சு வந்து கேட்டார்

 

 

“என்னால மறுக்க முடியாம தான் உண்மையை சொல்லிட்டேன். இனி எதுவா இருந்தாலும் நீங்க அவர்கிட்ட கேளுங்க. மாமா என்ன நடந்துச்சோ அதை நீங்களே சொல்லிடுங்க என்று கண்ஜாடை காட்டிவிட்டு அமைதியாய் எதிர் சோபாவில் அமர்ந்து கொண்டான்.

 

 

சுனீஷிடம் இருந்து பார்வையை திருப்பிய ஆராதனா ராஜீவனை நோக்கினாள். “ஆமா சுனீஷ் சொன்னது சரி தான். நான் தான் சுனீஷை தேடி போனேன், அவர்க்கு மட்டும் தான் உன்னை பத்தி தெரிஞ்சிருக்குன்னு தெரிஞ்சு தான் போனேன்

 

 

‘எப்படி கண்டுபிடித்தார் என்று யோசித்துக்கொண்டே “எப்படி தெரியும்?? என்றாள்.

 

 

“உன்னோட போனை வைச்சு தான் கண்டுபிடிச்சேன். என்ன தான் நீ என்னை தேட வேண்டாம்ன்னு சொன்னாலும் எனக்கு மனசு கேட்கலை. நேரா அனீஷை தான் போய் பார்த்தேன்

 

 

“அவர் உன்னை தேடுற மாதிரி எனக்கு தெரியலை. நீ அன்னைக்கு பண்ண போன் நம்பர்க்கு ட்ரை பண்ணேன். அந்த நம்பர் சுவிட்ச் ஆப் ன்னு வந்துச்சு. அப்புறம் பார்த்தா அந்த நம்பர் உபயோகத்துலையே இல்லைன்னு வாய்ஸ் மெசெஜ் வருது

 

 

“எந்த வழியும் தெரியாம முழிச்சப்ப தான் என்னோட பிரண்டு சேவியர் பாண்டியன் எஸ்ஐயா இருக்கானே, அவன்கிட்ட போனேன். அவன் தான் ஐடியா கொடுத்தான் போனோட IMEI நம்பர் வைச்சு உன்னை டிரேஸ் பண்ணலாம்ன்னு

 

 

“உனக்கு ஞாபகமிருக்கும்ன்னு நினைக்கிறேன் உன்னோட போன் நான் தான் உனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி வாங்கி கொடுத்தேன்னு. அந்த பில் என்கிட்ட தான் இருந்துச்சு, அதுல இருந்து IMEI நம்பர் எடுத்து அவன்கிட்ட கொடுத்து கண்டு பிடிக்க சொன்னேன்

 

 

“அப்போ தான் உன்னோட நம்பர் கிடைச்சது. உனக்கு யாரெல்லாம் பேசி இருக்காங்கன்னு பார்த்தப்போ தான் சார் மாட்டினார். நேரா அவரை போய் பார்த்தேன், இல்லவே இல்லைன்னு மறுத்தார்

 

 

“ப்ரூப் எல்லாம் காட்டி அப்புறம் தான் உண்மையை ஒத்துக்கிட்டு என்னை கூட்டிட்டு வந்தார். என்ன சுனீஷ் எல்லாமே சொல்லிட்டேன், போதுமா!! உங்களை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க சரியா!! என்று சுனீஷிடம் முடித்தான் ராஜீவன்.

 

 

“அப்போ அவ… அவர்க்கு நான் இங்க இருக்கேன்னு சொல்லிட்டியா அண்ணா??

 

 

“இதுவரைக்கும் சொல்லலை, சொன்னா சுனீஷ்க்கு தான் தர்ம அடி விழுகும். உனக்கு உதவி பண்ண ஒரே பாவத்துக்கு அவர் ஏன் கஷ்டப்படணும் அதான் அனீஷ்கிட்ட சொல்லலை

 

 

இப்போது சுனீஷ் தர்மசங்கடமாய் ராஜீவனையும் ஆராதனாவையும் நோக்கியவன் “நீங்க பேசிட்டு இருங்க, எனக்கு உள்ள கொஞ்சம் வேலையிருக்கு என்று எழுந்து சென்றுவிட்டான்.

 

 

ஆராதனா எதுவும் பேசாமல் அமைதியாய் அமர்ந்திருந்தாள். அவள் அமைதியை அவளின் அண்ணனே கலைத்தான், “எதுக்கு இப்போ அமைதியா இருக்க, போன்ல அந்த பேச்சு பேசுன

 

 

“என்னை நேர்ல பார்த்ததும் அண்ணான்னு ஓடிவந்து அழுத, இப்போ மட்டும் வார்த்தையே வரமாட்டேங்குதா உனக்கு. உன் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்க

 

 

“எனக்கு வந்த ஆத்திரத்துக்கு உன்னை நல்லா நாலு சாத்தணும் போல இருந்துச்சு. ஈருயிரா இருக்கியேன்னு பல்லைக் கடிச்சுட்டு பேசாம இருக்கேன். அப்படி என்ன பிடிவாதமும் ஆங்காரமும் உனக்கு

 

 

“என்ன பிரச்சனையா இருந்தாலும் அதை பேசி தான் சரி பண்ணணும். அதைவிட்டு இப்படி மிரட்டி பணிய வைக்க நினைச்சா யாரும் பணிய மாட்டாங்க

 

 

“நான் பணிஞ்சு போனதையும் சேர்த்து தான் சொல்றேன். அன்னைக்கும் நீ செஞ்சது எனக்கு பிடிக்கலை தான், நான் பண்ண தப்புக்கு தண்டனையா ஏத்துக்கிட்டு என்னை நான் திருத்திக்கிட்டேன்

 

 

“நான் என்ன இந்த வீட்டு சுவத்துகிட்டயா பேசிட்டு இருக்கேன். பதிலே பேசாம இப்படி திண்ணக்கமா இருந்தா என்ன அர்த்தம். மரியாதையா என்னோட கிளம்புற வழியை பாரு

 

 

“அனீஷ் கைல கால்லயாச்சும் விழுந்து உன்னை அங்க கொண்டு போய் விட்டுட்டு போறேன் என்று அவன் முடிக்கவும் எங்கிருந்து தான் அவளுக்கு அவ்வளவு கோபம் வந்ததோ அவனை பார்த்து சீற ஆரம்பித்தாள்.

 

 

“என்ன அண்ணா நீ கோபமா பேசிட்டு இருக்கியேன்னு பேசாம இருந்தா நீ பாட்டுக்கு என்னென்னமோ பேசிட்டே போறே!!. நீ எதுக்கு அவர் கைல கால்ல விழறேன்னு சொல்ற, நான் எந்த தப்பும் பண்ணலையே

 

 

“அப்படி மன்னிப்பு கேட்கணும்ன்னா அதை என் புருஷன்கிட்ட எனக்கு கேட்டுக்க தெரியும். நீங்க யாரும் நடுவுல வரவேண்டாம். என்னால உன்கூட வர முடியாது

 

 

“என் புருஷனே வருவார் என்னை கூட்டிட்டு போக, அதுவரை நானா எங்கயும் வரமாட்டேன் என்றவளின் பதிலில் பிடிவாதமிருந்ததை ராஜீவன் உணர்ந்தான்.

 

 

“கொழுப்பு கொழுப்பு அவ்வளவு கொழுப்பு உனக்கு. நினைச்சுட்டு இரு உன் புருஷன் வருவாரு, வந்து கூட்டிட்டு போவாருன்னு. நினைப்பு தான் பொழப்பை கெடுக்குமாம்

 

 

“ஒண்ணு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ அனீஷ் உன்னை தேடி வரமாட்டார். நீ தான் அவரை தேடி போகணும்

 

“உன்கிட்ட சொன்னாரா என்னை தேடி வரமாட்டேன்னு… நான் அவரை தேடி போக மாட்டேன்… எனக்கு தெரியும் அவர் வருவார், எனக்காக வருவார் எங்க குழந்தைக்காக வருவார் என்று அழுத்தமாக கூறினாள்.

 

 

ஆராதனாவின் அழுத்தமான பதிலில் ராஜீவன் அயர்ந்து தான் போனான். “அப்போ நான் சொல்றதை நீ கேட்க மாட்டே அப்படி தானே

 

 

“அண்ணா போதும் நிறுத்து, நான் எந்த தப்பும் செய்யலை புரிஞ்சுக்கோ அண்ணா… உடனே அவர் என்ன தப்பு பண்ணார்ன்னு குதர்க்கமா யோசிக்காதே. எங்க விஷயத்துல யாரும் தலையிட வேண்டாம், புரியுதா என்றாள்.

 

 

இப்போது ராஜீவனுக்கு சுள்ளென்று கோபம் மூண்டது. “அப்புறம் எதுக்கு எனக்கு போன் பண்ணி பேசுன. அனீஷை யாரும் எதும் சொல்லிடக் கூடாதுன்னு சொன்னே

 

 

“நீ வீட்டை விட்டு போனது நம்ம வீட்டுல யாருக்கும் தெரியக்கூடாதுன்னு எதுக்கு என்கிட்ட சொன்னே. வீட்டில எல்லாரும் கேட்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியாம நான் ஏன் முழி பிதுங்கணும்

 

 

“முடியாது என்னால இனி யாருக்கும் பதில் சொல்ல முடியாது. எல்லாரும் உன்கிட்ட பேசணும்ன்னு சொன்னாங்க, உன்னை பார்க்க கோயம்புத்தூர் கிளம்பணும்ன்னு சொன்னாங்க. இனி நான் அவங்களை தடுக்க போறதில்லை என்றான் ராஜீவன்.

 

 

“அண்ணா என்றாள் அதிர்ச்சியாய்.

 

 

“என்னோட பேச்சை நீ கேட்க மாட்டே, உன்னோட பேச்சை நான் ஏன் கேட்கணும். என்னால கேட்க முடியாது, நீயாச்சு அவங்களாச்சு. என்னையும் உன் புருஷனையும் தான் நீ மதிக்கறதில்லை

 

 

“உனக்கு தெரியுமா நான் அவரை மதிக்கலைன்னு என்று பேச்சின் இடைபுகுந்தாள்.

 

 

“ஓ அதான் அவர்கிட்ட சொல்லாம கொள்ளாம வந்தியா!! நம் வீட்டில இப்படி நாகரீகம் தான் உனக்கு சொல்லிக் கொடுத்தாங்களா!! கொஞ்சமாச்சும் எல்லாரை பத்தியும் யோசிச்சியா நீ என்று அவன் மேலும் மேலும் குத்தினான்.

 

 

இப்போது ஆராதனா கதறி அழவே ஆரம்பித்துவிட்டாள். ராஜீவனோ தலையில் அடித்துக்கொண்டான், ‘ச்சே கோபமா பேசக்கூடாதுன்னு நினைச்சுட்டே வந்தேன். இப்படி கன்னாபின்னான்னு பேசி கஷ்டப்படுத்திட்டேனே என்று தன்னையே நொந்துக்கொண்டான் அவன்.

 

 

ஒரு புறம் அவன் அதிகம் பேசியிருக்க கூடாது என்று நினைத்தாலும் மறுபுறமோ அவன் பேசியதில் தவறொன்றும் இல்லை என்றே தோன்றியது. யாராவது அவளுக்கு எடுத்து சொல்ல வேண்டுமே என்று எண்ணி தன்னை சமாதானம் செய்துக்கொண்டான்.

 

 

“போதும் எதுக்கு இப்போ அழற, எங்க எல்லாரையும் அழவைச்சுட்டு நீ மட்டும் இப்போ சந்தோசமா இருக்கியா என்ன

 

 

“என்ன காரணத்துக்காக நீ இதை ஆரம்பிச்சு வைச்சியோ தெரியலை. நீ எதுவும் தப்பான காரியத்துக்காக இப்படி செஞ்சுருக்க மாட்டேன்னு நம்புறேன் என்றதும் ஆராதனா அவன் தோள் சாய்ந்து கண்ணீர் வடித்தாள்.

 

 

அவள் தலையை மிருதுவாய் வருடிக்கொடுத்தவன் “சீக்கிரமா வந்துடுடா ஆரும்மா. நீ இப்போ ரெண்டு உசிரா இருக்கே, உன்னையும் கஷ்டப்படுத்தி எல்லாரையும் தவிக்க விடாதேடா

 

 

“உன்கிட்ட ஒண்ணு கேட்குறேன், அதுக்கு ஒழுங்கா பதில் சொல்லணும் சொல்லுவியா என்றதும் மண்டையை பலமாய் உருட்டினாள் அவன் தங்கை.

 

 

“ஒரு வேளை நீ நினைக்கிற மாதிரி அனீஷ் உன்னை தேடி வரலைன்னா என்ன செய்வ!! என்றான் அவன்.

 

 

வேகமாய் கண்ணை துடைத்தவள் “வருவாருண்ணா கண்டிப்பா வருவாரு என்றாள். மனதில் இரண்டு நாட்களுக்கு முன் அனீஷை மருத்துவமனையில் பார்த்த ஞாபகம் வரவும் மனதின் ஒரு மூலையில் நிச்சயம் வருவார் என்று உறுதி பிறந்தது அவளுக்கு(!?).

 

 

“இங்க பாரு மறுபடியும் கேட்கறேன் அவர் வரலைன்னா, சும்மா வந்திடுவார் வந்திடுவார்ன்னு நீயா கற்பனை பண்ணாதே. வரலைன்னா அடுத்து என்னன்னு யோசிச்சியா!!

 

 

“அதுக்கு மட்டும் எனக்கு பதில் சொல்லு என்றான் ராஜீவன்.

 

 

அனீஷ் தன்னைத் தேடி வரமாட்டான் என்ற கோணத்தில் இதுவரை ஆராதனா நினைத்தேயிராததால் ராஜீவனுக்கு பதில் சொல்ல முடியாமல் விழித்தாள். மனதிலோ ‘வருவாரு ‘வருவாரு என்று உருப்போட்டுக் கொண்டாள்.

 

 

“பதில் சொல்லத் தெரியலை, ஹ்ம்ம் ஏன்னா நீ யோசிக்கலை. சரி விடு, நானே அதுக்கு வழி சொல்றேன். ஆனா அதை நீ கேட்கணும், கேட்டு தான் ஆகணும் என்று நிறுத்தினான்.

 

 

ராஜீவன் என்ன சொல்வானோ என்று அவன் முகத்தையே பார்த்தாள் அவன் தங்கை. “உனக்கு இப்போ மூணாவது மாசம் தானே என்ற அவன் கேள்விக்கு “மூணு மாசம் முடிஞ்சுடுச்சு நாலு பிறந்திருச்சு என்றாள் பதிலாய்.

 

 

“சரி நாலாம் மாசம் ஓகேவா. இன்னையில இருந்து சரியா ஒன்றை மாசம் உனக்கு டைம். எதுக்குன்னு பார்க்கறியா, அனீஷ் உன்னை தேடி வாருவார்ன்னு சொன்னியே அதுக்கு தான்

 

 

“எதுக்காக ஒன்றரை மாசம்ன்னு யோசிக்காதே, உனக்கு அஞ்சாம் மாசம் ஏதோ சாப்பாடு எல்லாம் செஞ்சு போடுவாங்க இல்லையா. அப்போ நீ உன் வீட்டுல இருக்கணும். இப்போவே நாலு பிறந்தாச்சு, அதுனால தான் ஒன்றரை மாசம் டைம்ன்னு சொன்னேன்

 

 

“அனீஷ் வரலைன்னா நான் இங்க வருவேன். நீ வரணும் அங்க, நீ வரலைன்னா நானே வருவேன் உன்னை கூட்டிட்டு போக. நான் மட்டும் தனியா வரமாட்டேன் என்னோட எல்லாருமே வருவாங்க. அதுக்கு பிறகு உன்னோட இஷ்டம் என்றான்.

 

 

“அவர் வருவாருண்ணா… என்று மீண்டும் அதே பல்லவியை அவள் ஆரம்பிக்க “போதும் இதோட நிறுத்திக்குவோம். திரும்பவும் ஆரம்பிச்சா, நான் ரொம்ப பேசிடுவேன். நீ தாங்க மாட்ட விட்டுடு என்றதும் அவள் முகம் வாடியது.

 

 

சட்டென்று ஞாபகம் வந்தவனாக அவன் கையோடு கொண்டு வந்த பையை பிரித்தான். “நான் உன்னை பார்க்க போறேன்னு சொன்னேன். அதுனால அம்மா, பெரியம்மா, அத்தை எல்லாரும் சேர்ந்து உனக்கு பிடிச்சது எல்லாம் என்கிட்ட கொடுத்து விட்டிருக்காங்க என்று அவளுக்கு பிடித்த வகைகளை எடுத்து அவள் முன் அடுக்கினான்.

 

 

அவளுக்கு பிடித்த ரவாலட்டை எடுத்து அவள் வாயில் ஊட்டிவிட ஆராதனாவிற்கு வீட்டு ஞாபகத்தில் கண்ணீர் மளமளவென வடிந்தது. “போதும்டா சும்மா அழுது உடம்பை கெடுத்துக்காதே

 

 

“நல்லதே யோசி, நல்லதே நினை. இந்தா இந்த குங்குமம் எடுத்துக்கோ, நான் கன்னியாகுமரி போயிருந்தேன். உனக்காக வேண்டிக்கிட்டு வாங்கிட்டு வந்தது என்று சொல்லி அவள் நெற்றில் வைத்துவிட்டான்.

 

 

“அண்ணா உனக்கு பொண்ணு பார்த்துட்டு இருந்தாங்களே என்னாச்சு. எதுவும் செட் ஆச்சா என்றாள்.

 

 

“யப்பா சாமி எனக்கு கல்யாணமே வேணாம்ன்னு சொல்லிட்டேன் என்றவனிடம் “ஏன் அப்படி சொன்னீங்க அண்ணா??

 

 

“உங்களை எல்லாம் பார்த்து தான் கல்யாணமே வேணாம்ன்னு இருக்கு எனக்கு. ஆளை விடுங்க சாமி எனக்கா தோணிச்சுன்னா சொல்றேன். நான் அதுவரைக்கும் நிம்மதியா இருக்கேன் ஆளை விடுங்க என்றான் ராஜீவன்.

 

 

“அவரோட வயசு தானே உனக்கும் அப்புறம் ஏன் பிடிவாதம் பிடிக்கிற

 

 

“நீ கூட தான் பிடிவாதம் பிடிக்கிறே, அது சரின்னு வாதம் பண்ணுற. இது என்னோட வாதம் அதை நீ பிடிவாதம்ன்னு எடுத்துகிட்டா அப்படியே இருக்கட்டும் விடு என்றான்.

 

 

மது சமையலறையில் இருந்து எட்டி பார்த்தாள் “அக்கா நீங்களும் அண்ணாவும் சாப்பிட வாங்களேன் எனவும் ராஜீவனை அழைத்துக்கொண்டு உணவு மேஜைக்கு சென்றாள் ஆராதனா.

 

 

சாப்பிட்டு சற்று ஓய்வெடுத்தவன் இரவு கிளம்புவதாக இருந்தது. மாலையில் மொட்டை மாடிக்கு சென்றவனுக்குள் பெரும் யோசனையும் குழப்பமாயும் இருந்தது.

 

 

அனீஷ், ஆராதனா இருவரையும் அவனால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. அது தனக்கு தேவையில்லாதது என்று நினைத்தாலும் அவனால் அந்த எண்ணங்களை ஒதுக்க முடியவில்லை. இதே யோசனையுடனே அவனிருக்க அவன் முதுகில் சுளிரென்று விழுந்த அடியில் சட்டென்று நினைவு கலைந்தவனாய் பின்னால் திரும்பி பார்த்தான்.

 

சுனீஷின் வரவறிந்து மாலையில் சீக்கிரமே அலுவல் முடித்து நேரமாகவே வீட்டிற்கு வந்த நித்யா அவனை தேட அவன் வெளியே சென்றிப்பது தெரிந்தது.

 

 

மல்லிகா கொடுத்த காபியை வாங்கிக்கொண்டு எப்போதும் போல் மொட்டை மாடியில் அமர்ந்து குடிக்கலாமென மாடியேறி வந்தவள் சுனீஷ் தான் வந்துவிட்டான் போலும், மாடியில் உலவிக் கொண்டிருக்கிறான் என்று எண்ணினாள்.

 

 

சத்தம் எழுப்பாமல் காபி கோப்பையை சுவற்றில் வைத்துவிட்டு இரண்டு கைகளையும் நன்றாக தேய்த்து விட்டுக் கொண்டு அவன் முதுகில் ஒன்று வைத்தாள் “டேய் எப்போடா வந்தே?? என்று கேட்டுக்கொண்டே.

 

 

ஆனால் அவள் புறம் திரும்பியவனை பார்த்ததும் முகத்தில் ஈயாடவில்லை அவளுக்கு. எனக்கு நேரமே சரியில்லை என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவள் அவனின் கட்டுமஸ்தான தேகமும் பார்ப்பதற்கு அடியாள் போன்று இருந்த தோற்றமும் கண்டு திகைத்து நின்றிருந்தாள்.

 

 

ஏற்கனவே ஆத்திரத்திலும் கோபத்திலுமிருந்த ராஜீவனுக்கோ அவள் முதுகில் சுரீரென்று அடித்த அடியில் கோபம் தலைக்கேற ஓங்கி அவளை சப்பென்று அறைந்துவிட்டான்.

 

 

“ஹேய் யாரு நீ. அறிவில்லை உனக்கு, யாரு என்னன்னு பார்க்காம இப்படி தான் செய்வியா?? எந்த ஆம்பிளையா இருந்தாலும் இப்படி தான் தொட்டு பேசுவியா?? சீய் முதல்ல இங்க இருந்து கிளம்பு என்றதும் மளமளவென்று வந்த கண்ணீரை அடக்க முடியாமல் மெல்லிய விசும்பலுடன் கீழே இறங்கி சென்றுவிட்டாள் அவள்.

 

 

அவள் சென்றதும் தான் தன்னிலை உணர்ந்த ராஜீவ், ‘அச்சோ யாரு என்னன்னு தெரியாம அடிச்சிட்டோமே. எந்த ஆம்பிளையா இருந்தாலும் தொடுவியான்னு கேட்டுட்டு நான் மட்டும் என்ன செஞ்சு வைச்சிருக்கேன்

 

 

‘ஒரு பொண்ணை எப்படி அடிக்கலாம், தப்பில்லையா. அந்த பொண்ணு வேற அழுத்துட்டே போச்சே என்று எண்ணியவன் கீழே இறங்க போக சுவற்றின் மீது காபிகோப்பை இருந்ததை பார்த்தான்.

 

 

‘யார் இந்த பொண்ணு என்று யோசித்துக் கொண்டே அந்த கோப்பையுடன் கீழே இறங்கிச் சென்றான்.

 

 

கண்களால் வீட்டை துழாவ அப்பெண் இருந்த அடையாளமே தெரியவில்லை. நேராக ஆராதனாவை தேடிச் சென்றான். “ஆரும்மா, நான் கேட்கணும்ன்னு நினைச்சேன். இங்க யாரெல்லாம் இருக்காங்க என்றான்.

 

 

“ஏன்ண்ணா சுனீஷ் உங்ககிட்ட எதுவும் சொல்லலையா?? என்றாள்.

 

 

“நான் கேட்கவில்லையே, உன்னை பத்தி மட்டும் தான் என்னோட யோசனை இருந்துச்சு. அதனால நான் அதுமட்டும் தான் விசாரிச்சேன்

 

 

“நீ காலையில வந்தப்போ பார்த்தியே ஒரு பொண்ணு அவ பேரு மது. சுனீஷ் தம்பி விரும்பற பொண்ணு, உனக்கு காபி கொடுத்தாங்கள்ள அவங்க தான் மதுவோட அம்மா

 

 

“சுனீஷ் தம்பி தான் எனக்கு துணைக்கு பெரியவங்க துணை வேணுமின்னு மதுவையும் அவங்க அம்மாவையும் இங்க கூட்டிட்டு வந்து தங்க வைச்சிருக்காங்க

 

 

“மதுவோட தங்கை ஊர்ல ஹாஸ்டல்ல சேர்த்திட்டு அவங்க எனக்கு துணையா வந்திருக்காங்க. ஹான் அப்புறம் சொல்ல மறந்துட்டேன் இங்க நித்யாவும் இருக்கா

 

 

“சுனீஷ் தம்பியோட வேலை பார்த்த பொண்ணு. நான் சென்னைக்கு போனப்போ அந்த பொண்ணு தான் எனக்கு உதவி பண்ணுச்சு, அவளும் இப்போ எங்க கூட தான் இருக்கா. ரொம்ப நல்ல பொண்ணு என்றாள் ஆராதனா.

 

 

ராஜீவனுக்கு புரிந்தது அவன் அடித்த பெண் அவள் தான் என்று. எதேச்சையாய் விசாரிப்பது போல் விசாரித்தான் “அந்த பொண்ணை நான் பார்க்கவேயில்லையே என்றான்.

 

 

“அவ ஆபீஸ் போயிட்டு இப்போ தான் வந்தா. இங்க தான் எங்காச்சும் இருப்பா?? என்றாள்.

 

 

“சரிம்மா ஆரு எனக்கு நேரமாச்சு. இப்போ கிளம்பினா தான் சரியா இருக்கும், சுனீஷ் வந்தா சொல்லிடு நான் கிளம்பறேன். அப்புறம் நீ ஊருக்கு போன் பண்ண மறக்காதே என்றவன் நின்று அவளை ஒரு முறை திரும்பி பார்த்தான்.

 

 

“நீ ஒரு விஷயம் கேட்பேன்னு நினைச்சேன், இப்போ வரைக்கும் நீ அதை பத்தி கேட்கவேயில்லையே எனவும் ஆராதனா இறுக்கமாய் அவனை பார்த்தாள்.

 

 

“நீ யாரை சொல்றேன்னு எனக்கு தெரியும். அவளை பத்தி பேச எனக்கு என்ன தகுதி இருக்கு, நான் கேட்டு நீ என்னை திட்டிட்டா அதான் எதுவும் கேட்கலை என்றாள்.

 

 

“நீ கேட்கலைன்னாலும் நான் திட்டுவேன். ஏன்னா உன்னால பழி சுமக்குறது அவ தானே என்றான்.

 

 

“அண்ணா நீ என்ன சொல்ற?? அவகிட்ட சொல்லிட்டு வந்தா அவளோட புருஷன் எதுவும் சந்தேகப்படுவாரோன்னு தான் நான் அவகிட்ட கூட சொல்லாம கிளம்புனேன்

 

 

“நீ சொல்லாம வந்தா மட்டும் அவர் சந்தேகப்படாம இருப்பாரா?? உன்னால எவ்வளவு பேருக்கு கஷ்டம்ன்னு பாரு. தேவையில்லாதது எல்லாம் நடக்குது என்றவன் மனதிற்கு நித்யாவை அவன் அடித்ததிற்கும் அவளையே காரணமாய் எண்ணிச் சொன்னான்.

 

 

“சும்மா பேசினதே பேசிட்டு இருக்க வேண்டாம். நான் சொன்னதை யோசி, முடிஞ்சா யாழினிகிட்ட பேசு. நான் கிளம்பறேன் என்றவன் பேருந்திற்கு நேரமிருந்த போதும் முன்னரே அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டான்.

 

 

சோபாவில் அமர்ந்து கொண்டு ராஜீவன் சொன்னதையே யோசித்துக் கொண்டிருந்தாள் ஆராதனா. யாழினிக்கு பிரச்சினை வரக்கூடாது என்று எண்ணியும் அவளுக்கு பிரச்சனை வந்துவிட்டதே என்று எண்ணி கலங்கினாள்.

 

 

‘காலேஜ் படிக்கும் போதும் என்னால அவளுக்கு தொல்லை தான், ஜானகி கல்யாணம் பண்ணி வைச்சப்பவும், என்னோட பிரண்டா இருந்த ஒரே காரணத்துக்காக அன்னைக்கும் அவ பிரச்சனையை சந்திச்சா, இன்னைக்கும் அவளை அதே நிலையில வைச்சுட்டனே என்று இடிந்து போய் அமர்ந்திருந்தாள்.

 

 

‘எல்லாத்துக்கும் அவர் தான் காரணம், நான் என்ன தப்பா சொல்லிட்டேன்னு என்னை எங்க வீட்டுக்கு கிளம்பி போன்னு சொன்னார். நல்லதுக்கு தானே நான் சொன்னேன் அதை ஏன் புரிஞ்சுக்காம என்னையே குற்றம் சொன்னார்

 

 

‘எல்லாமே அவரால தான், அவர் மட்டும் நான் சொன்னதை புரிஞ்சு கேட்டிருந்தா இன்னைக்கு இந்த பிரச்சனையே இல்லையே. உண்மையிலேயே நான் தப்பு பண்ணியிருந்தா அவர் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க கூட நான் தயங்க மாட்டேனே

 

 

‘நான் சொல்றது நல்லதுக்குன்னு புரியாம என்னையே வீட்டை விட்டு போன்னு சொன்னாரே. எங்கம்மா வீட்டுக்கு போன்னு இவர் ஏன் சொல்லணும். நான் ஏன் அங்க போகணும்னு நினைச்சு தானே நான் வீட்டை விட்டு வெளியே வந்தேன்

 

 

‘ஏங்க நீங்க இன்னமும் என்னை புரிஞ்சுக்கலையா!! எப்போ தான் என்னை புரிஞ்சுக்க போறீங்க!! நான் நம்ம நல்லதுக்கு தானே சொன்னேன். அதுல என்ன தப்பை கண்டீங்க என்று மனதார அவனிடம் கோபமாய் சண்டையிட்டு கெஞ்சலாய் சமாதானம் பேசிக் கொண்டிருந்தாள்.

 

 

அவளின் எண்ணம் சரியே என்பது போல் அவள் எண்ணத்தில் நெய்யை வார்த்து அவள் கோபத்தீயை மேலும் மூட்டவென வந்தது தொலைக்காட்சி விளம்பரம்.

 

 

அவள் எண்ணத்தின் நாயகன் அவளின் மணாளன் அனீஷ் அதில் தோன்றி புன்னகைக்க என்னவென்று பார்த்தவளுக்கு அவன் மருத்துவமனையின் நோயாளிகளுடன் சிரிக்க பேசுவது போன்ற காட்சியமைப்பும் மேலும் ஓரிரு வரிகளில் அவன் மருத்துவமனை சிறப்பை கூறுவது போலவும் அமைந்திருக்க கொதித்து போனாள் அவள்….

 

Advertisement