Advertisement

அத்தியாயம் – 23

 

 

சபரி முகத்தை தூக்கி வைத்திருந்தான். விஷயம் பெரிதாய் ஒன்றுமில்லை யாழினி அந்த பிறந்தநாள் விழாவின் தலைவி பேபி யஷ்வினிக்கு நச்சென்று கொடுத்த இச் தான் அவனுக்கு பொறாமையை தோற்றுவித்து முகத்தை தூக்கி வைக்க வைத்தது.

 

 

விழாவிற்கு வந்த போது இருந்த கலகலப்பு போகும்போது கணவனின் முகத்தில் இல்லாதிருந்ததை அப்போது தான் யாழினி கவனித்தாள். அவள் சந்தோஷ மனநிலையில் இருந்ததால் அவனின் மாற்றத்தை முதலில் கவனிக்கவில்லை.

 

 

யாழினிக்கு ‘அச்சோ வேதாளம் மறுபடியும் முருங்கைமரம் ஏறிவிட்டதா?? என்று கேள்வியும் லேசாய் அச்சமும் பிறந்தது. ‘என்னவாய் இருக்கும் என்று யோசித்துக்கொண்டே அவனருகில் வந்தாள்.

 

 

“கிளம்பலாமா?? என்று அவனை பார்த்து தலையசைக்க “ஹ்ம்ம் போகலாம் என்று வெடுக்கென்று கூறிவிட்டு கிளம்பினான். வண்டியை எடுத்தவுடன் தன்னையே அவள் பார்ப்பதை அப்போது தான் உணர்ந்தான். ‘அச்சோ நம் கோபம் அப்படியே முகத்தில் தெரிகிறது போலேயே

‘தான் ஏன் இப்படி இருக்கிறோம் என்று அவனுக்கே அவன் மேல் கோபம் வந்தது. ‘இப்போ தான் கொஞ்சம் அவளா புரிஞ்சு பேச ஆரம்பிச்சா அதுக்குள்ளே நான் திரும்பவும் முகத்தை காட்டிட்டேனே

 

 

திரும்பி அவளை பார்த்தான் அவள் பேசலாமா வேண்டாமா என்று தனக்குள் பட்டிமன்றம் நடத்துவது கண்ணில் விழுந்தது. அவள் பேசும் முன் நாமே ஆரம்பித்து விடுவோம் என்று எண்ணி “ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?? என்றவனை விசித்திரமா பார்த்தாள். (சொதப்புறியே சபரி!!!)

 

 

“ஏன் பிடிக்காதா??எதுக்கு அப்படி பார்க்குற?? என்றான்.

 

 

“யஷ்வினி வீட்டிலேயே நெறைய ஐஸ்கிரீம் சாப்பிட்டாச்சு. மறந்துட்டீங்களா, நான் ஒண்ணு சொல்லுவேன் தயவுசெய்து முகத்தை தூக்கி வைச்சுக்காதீங்க என்றுவிட்டு நிறுத்தினாள்.

 

 

“ஹேய் சாரிம்மா அது அது வேற ஏதோ ஒரு டென்ஷன். அதான் ப்ளீஸ் புரிஞ்சுக்கோ. என்னமோ சொல்ல வந்தியே சொல்லும்மா?? என்றான்.

 

 

“என்னை சமாதானப்படுத்த ஏதேதோ சொல்லி சமாளிக்கறீங்கன்னு தெரியுது. விடுங்க உங்களுக்கு ஒழுங்கா மன்னிப்பு கேட்கவும் தெரியலை.நீங்க நீங்களாவே இருங்க என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வீடு வந்திருந்தது.

 

 

முதலில் இறங்கியவள் காரை உள்ளே விட வசதியாக கதவை திறந்து வைத்தாள். கார் உள்ளே வந்ததும் கதவை அடைத்துவிட்டு உள்ளே வந்தாள்.

 

 

வீட்டிற்குள் வந்ததும் முதல் வேலையாய் “நீ சொல்ல வந்ததை முழுசா சொல்லி முடியேன் என்றான்.

 

 

“அப்புறம் பேசலாமா?? நான் போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு டிரஸ் மாத்திட்டு வர்றேனே?? என்றவள் அவள் மாற்றுடை எடுத்துக்கொண்டு சென்றாள்.

 

 

“இங்கேயே மாத்தினா தான் என்னவாம் என்று முணுமுணுப்பாய் தனக்குள்ளேயே சொல்லிக் கொள்வதாய் நினைத்து வாய்விட்டே சொல்லியிருந்தான். (சபரி இது நீ தானா!!!)

 

 

வெளியில் சென்றவள் நின்று அவனை திரும்பி பார்க்க, அப்போது தான் அவன் வாய்விட்டு கூறியது உரைத்து திருதிருவென்று விழித்தான்.

அவளோ “என்ன மசமசன்னு நின்னுட்டு இருக்கீங்க?? நீங்களும் போய் ரெப்ரெஷ் பண்ணுங்க என்று கூறவும் அவன் தலை தானாய் ஆடியது. (பயபுள்ள மயக்கத்துல சுத்துது)

 

 

இப்போது பேசுவாள் அப்போது பேசுவாள் என்று அவன் காத்திருந்து காத்திருந்து நேரம் தான் கடந்ததே தவிர அவளாய் வாயை திறக்கவேயில்லை. எவ்வளவு நேரம் தான் டிவியையே வெறிப்பது என்று லேசாய் கோபம் எட்டி பார்த்தது அவனுக்கு.

 

 

டிவியில் ஓடிய எதுவுமே அவன் கருத்தில் படவேயில்லை. புறக்கண்கள் மட்டும் தொலைக்காட்சியை நோக்கிக் கொண்டிருக்க அவன் அகக்கண் பார்வை முழுதும் மனைவியின் மீதே இருந்தது.

 

 

பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக அவனை விட்டு பறந்து கொண்டேயிருந்தது. “யாழினி என்று சற்று சத்தமாகவும் கோபமாகவுமே அழைத்தான்.

 

 

“என்னங்க?? என்றவாறே அவனருகே வந்தாள்.

 

 

“எல்லாமே நானே தான் கேட்கணுமா?? நீயா சொல்ல மாட்டியா?? கார்ல வரும் போது ஏதோ பேசிட்டே வந்தே. வீட்டுக்கு வந்ததும் அப்படியே நிறுத்திட்ட, என்னாச்சு உனக்கு

 

 

“நாம கடைக்கு போயிட்டு வந்தப்பவும் இதே மாதிரி தான் செஞ்சே… என்னை கெஞ்ச வைச்சு பார்க்கறதுல உனக்கு என்ன அவ்வளவு சந்தோசம் என்று காட்டமாகவே கேட்டான் அவன்.

 

 

“அப்பாடா உங்க கோபம் திரும்பி வந்திடுச்சா!! இத இத இதை தான் நான் எதிர்பார்த்தேன் என்று சிரிக்கவும் அவனுக்கு சுர்ரென்று ஏறியது.

 

 

“என்னை கோபமாக்கி பார்க்கறதுல தான் உனக்கு சந்தோசமா?? என்று அவன் வினவவும் அவனருகே வந்து அவன் தோள் பற்றி கட்டிலின் மீது அமர்த்தியவள் தானும் அவனருகில் அமர்ந்தாள்.

 

 

“இப்போ என்ன?? உங்களுக்கு நான் என்ன சொல்ல வந்தேன்னு தெரியணும் அவ்வளவு தானே என்றதும் ஆம் என்பது போல் அவன் தலை ஆடினாலும் கோபமோ போவேனா என்று அடம் பிடித்து அவன் முகத்திலேயே நின்றது.

 

 

“நீங்க நீங்களாவே இருங்க. உங்களோட இந்த கோபம் தான் எனக்கு பிடிச்சிருக்கு என்றவளை யோசனையுடன் ஏறிட்டான்.

 

 

“நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியலைல. உங்களுக்கு கோபம் வந்தா கோபப்படுங்க, அதை நான் என்ன சொல்லுவேன்னு நினைச்சு அடக்கிக்க வேண்டாம்

 

 

‘இதென்னடா வம்பா போச்சு. இவளை ரொம்ப காயப்படுத்தி இருக்கேனேன்னு தானே என்னோட கோபமெல்லாம் மூட்டைக்கட்டி வைச்சிருக்கேன். அப்போ நான் எப்படி தான் இருக்கறது?? என்ற யோசனையும் ஆயாசமும் எழுந்தது அவனுக்கு.

 

 

“என்னடா இவ லூசு மாதிரி உளர்றான்னு உங்களுக்கு தோணும். ஆரம்பத்துல உங்க கோபம் என்னை காயப்படுத்தினது என்னமோ உண்மை தான்

 

 

“உங்களுக்கு மூக்குக்கு மேல கோபம் வருதுன்னு கூட நினைச்சிருக்கேன். ஆனா என்னைக்கு நான் கோபமா பேசி நீங்க பேசாம போனீங்களோ அன்னைல இருந்து தான் நான் இப்படி மாறிட்டேன்

 

 

“உங்களோட கோபத்தை நான் ரசிக்க ஆரம்பிச்சுட்டேன்னு நீங்க என்னோட பேசாம இருந்த நாள்ல தான் நான் உணர்ந்தேன். எதுவுமே பேசாம இருக்கறதுக்கு என்னோட சண்டையாச்சும் போட்டிருக்கலாம்ன்னு தோணிச்சு

 

 

“அதுனால தான் சொல்றேன் நீங்க நீங்களாவே இருங்க. எனக்காக உங்களை நீங்க மாத்திக்க வேண்டாம். நமக்குள்ள ஒண்ணே ஒண்ணு மட்டும் தான் நான் உங்ககிட்ட எதிர்பார்க்கறேன்

 

 

“நீங்களோ நானோ மனசுவிட்டு பேசிக்கணும், நம்மோட இந்த பெரிய இடைவெளிக்கு அது தான் காரணம் என்றதும் சபரி கோபம் முழுதும் அகன்றவனாய் அவளை வியப்பாய் ஏறிட்டான்.

 

 

“நீ ரொம்ப புத்திசாலி யாழினி. நெறைய விஷயத்தை புட்டுப்புட்டு வைச்சுட்ட, தெளிவாவும் யோசிக்கற, சரியா பேசுற. நான் அப்படி இல்லைன்னு எனக்கும் தெரியும். நான் மனசுவிட்டு பேசுற ஒரே ஆளு அனீஷ் மட்டும் தான்

 

 

“ஒரு உண்மையை சொல்லட்டுமா?? நான் அவன்கிட்ட மனசுவிட்டு பேசாத ஒரு விஷயம் நீ… நீ மட்டும் தான்

 

“என்னை பத்தி அவர்கிட்ட பேச என்ன இருக்கு??

 

 

“சாரி தப்பா எடுத்துக்காத, உன்னை பத்தி நான் பேசாத விஷயம்ன்னு சொன்னது. நமக்குள்ள நடக்குற சின்ன சின்ன சண்டை இதை பத்தி எல்லாம்

 

 

“நீ நினைக்கலாம் இதெல்லாம் ஏன் அண்ணன்கிட்ட சொல்லணும்ன்னு. நான் சின்ன வயசுல இருந்தே அப்படி தான். யார் கூட என்ன பேசினாலும் அவன்கிட்ட சொல்லாம என்னால இருக்க முடியாது

 

 

“உன்னை பார்த்ததுமே பிடிச்சுது. அதை கூட ஏதோ போனா போகுதுன்னு பிடிச்ச மாதிரி தான் வீட்டில காட்டிக்கிட்டேன். அது ஏன்னு எனக்கே புரியலை. நம்ம கல்யாணத்தன்னைக்கு அண்ணியை எவ்வளவு பிடிக்கும்ன்னு அனீஷ் சொன்னான்

 

 

“அப்பக்கூட நான் வாயை திறந்து உன்னை பத்தி பேசவே இல்லை. பொண்டாட்டின்னா இப்படி இருப்பா, இதெல்லாம் தான் செய்வான்னு மனசுக்குள்ள நானே ஒரு எண்ணம் வைச்சுட்டு இருந்திருக்கேன்

 

 

“அதுனால தான் அவளுக்குன்னு ஒரு மனசிருக்கும்ன்னு நான் புரிஞ்சுக்காம இருந்திருக்கேன். சாரிடா உன்னோட விருப்பம் கூட கேட்காம நான் இருந்திருக்கேன்

 

 

“உன்னோட உண்மையான அக்கறையை உங்க வீட்டுக்கு போனப்ப பார்த்தப்போ மனசு மாறினா போல தான் இருந்துச்சு. ஆனா என்னோட திமிர் என்னோட ரத்ததுலையே ஊறி போன என்னோட எண்ணங்கள் எல்லாம் என்னை முழுசா மாறவிடலை

 

 

“எங்கப்பா மாதிரி நான் இருக்கக்கூடாதுன்னு நினைச்சு கடைசியில நானும் அவர் மாதிரியே தான் இருந்திருக்கேன் யாழும்மா. அம்மாவோட விருப்பத்தை கேட்டு அப்பா எப்பவும் எதுவும் செஞ்சது இல்லை சின்ன வயசுல

 

 

“வயசான பிறகு தான் மாறியிருக்கார்ன்னு நினைக்கிறேன். என்ன இருந்தாலும் நான் அவரோட ரத்தம் தானே, அதான் அவரை போல பொண்டாட்டியை மதிக்காம இருந்துட்டேன்

 

 

“இப்போ எதுக்குங்க இந்த விளக்கம் எல்லாம். நான் கேட்கவே இல்லையே, விடுங்க என்று அவன் மேலே பேசுவதை அவள் கையால் அவன் வாய் மூடி தடுத்தாள்.

“யாழும்மா ஒண்ணே ஒண்ணு நீ தானே சொன்ன நாம மனசுவிட்டு பேசிக்கணும்ன்னு அதான் கேட்குறேன். ரொம்ப நேரமா ஒரு விஷயம் என்னை உறுத்திட்டே இருக்கு என்று பில்டப் கொடுத்தான்.

 

 

“என்னங்க என்ன விஷயம்?? என்றாள்.

 

 

“கார்ல வரும் போது ஒண்ணு சொன்னியே உங்களுக்கு மன்னிப்பும் கேட்க வரலைன்னு. வேற என்னவெல்லாம் எனக்கு வரலைன்னு நீ நினைக்கிற என்று அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.

 

 

“கண்டிப்பா தெரிஞ்சே ஆகணுமா??என்றவள் “அதுக்கெல்லாம் நீங்க சரியா வரமாட்டீங்க என்று சினிமாப்பட பாணியில் சொன்னாள்.

 

 

“யாழும்மா எதுக்கெல்லாம் நான் சரியா வரமாட்டேன். என்னன்னு கொஞ்சம் சொல்லிட்டு போயேன்என்று அவளைவிட்டு தள்ளிச் சென்றவளிடம் கேட்டவனுக்கு இப்போது மண்டை காய்ந்தது.

 

 

“உங்களுக்கு ரொமான்ஸ் கூட சுத்தமா வரலை, ட்ரை பண்ணாதீங்க என்று சொல்லிவிட்டு நமுட்டு சிரிப்புடன் அவள் வெளியே செல்ல போக “என்ன என்ன சொன்னே?? என்றவன் அவள் கையை பிடித்து இழுத்தான்.

 

 

“உங்க காதுல விழுந்தது எல்லாம் சரி தான், அதுல என்ன டவுட்டு உங்களுக்கு என்று சொன்னவளின் அருகே குனிந்து அவள் காதருகே “நான் ரொமான்ஸ் பண்ண ரெடி. ஆனா அன்னைக்கு மாதிரி எதும் சொல்லிட்டா அதான் தயக்கமா இருக்கு. அந்த வார்த்தை மறுபடியும் கேட்டா என்னாலதாங்க முடியாது என்று காதலாய் ஆரம்பித்தவன் வருத்தமாய் முடித்தான்.

 

 

அவன் புறம் திரும்பி அவள் கைகளை அவன் கழுத்துக்கு மாலையாக்கியவள் “அன்னைக்கு பேசின யாழினி உங்களை புரிஞ்சுக்காம பேசிட்டா!! சரியா!! அதுக்காக அவளை நீங்க மன்னிக்க கூடாதா??

 

 

“இப்படி பார்த்தும் பார்க்காமன்னு லுக்கெல்லாம் விட்டு நீங்க விட்ட தண்ணியில சிறுவாணி நிரம்பிட்டுன்னு நேத்து நியூஸ்ல சொன்னாங்க என்றதும் அவன் சிரித்துவிட்டான்.

 

 

“நீ இவ்வளவு பேசுவன்னு இன்னைக்கு தான் நான் நல்லா தெரிஞ்சுக்கிட்டேன். நீ பேசுறது கேட்டுட்டே இருக்கணும் போல இருக்கு யாழும்மா. ஆனா இப்போ எனக்கு பேச நேரமில்லை

“இதுக்கு மேல பேசினா என் பொண்டாட்டி மறுபடியும் நான் அதுக்கு சரியா வரமாட்டேன்னு சொல்லிடுவா. ஒண்ணு மட்டும் சொல்லிடறேன் அதுக்கு பிறகு நம்ம கச்சேரி வைச்சுக்கலாம் என்றவன் அவளை இன்னும் நெருங்கி குனிந்து அவள் காதருகே சென்றான்.

 

 

அதுவரை அவனிடம் நன்றாக வாயாடித்தவள் அவன் என்ன சொல்லப்போகிறான் என்ற ஆர்வம் இருந்தாலும் ம்ம் கூட கொட்டாமல் மூச்சடைத்து நின்றிருந்தாள்.

 

 

அவன் சூடான மூச்சுக்காற்று அவள் மேல் உரசியதில் அவளுக்கு குளிர ஆரம்பித்தது. “உன்கிட்ட நான் இதுவரை இதை சொன்னதேயில்லை. சொல்லட்டுமா??

 

 

இப்போதும் அவள் பதிலே பேசாமல் ஏதோவொரு மோன நிலையிலேயே இருந்தாள். “என்ன எதுவும் சொல்ல மாட்டேங்குற??

 

 

“நான் என்ன சொல்லணும்ன்னு உனக்கு தெரிய வேண்டாமா?? என்றவனின் இதழ்கள் அவள் கன்னத்தை உரசியது. “இப்… இப்படி சொ… சொன்னா… பே… பேச்சு வர… மாட்டேங்குது…

 

 

“சரி பேச்சு வரவேண்டாம். நான் சொல்லட்டுமா?? வேண்டாமா??

 

 

“ஹ்ம்ம் சொல்லுங்க என்ன சொல்லப்போறீங்கன்னு சொல்லுங்க?? என்று தன்னை சுதாரித்துக்கொண்டு தடுமாறாமல் பேசினாள்.

 

 

“ஐ லவ் யூ, லவ் யூ யாழும்மாஎன்றவனின் அதரங்கள் அவள் காதுமடலில் இருந்து தன் வேலையை துவக்கியது.

 

____________________

 

 

காலையில் இருந்தே ஆராதனாவிற்கு வீட்டு ஞாபகமாய் இருந்தது. அவள் கைபேசியில் இருந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

அவளின் நினைவுகளை கலைக்கவெனவே வந்தது போல் வந்து சேர்ந்தார்கள் மதுவும் நித்யாவும் தங்கள் பஞ்சாயத்தை ஆராதனாவின் முன் வைக்க. நல்லவேளை மல்லிகா மார்கெட் சென்றிருந்தார் இல்லை என்றால் இருவரையும் உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பார்.

 

“அக்கா இவளை என்னன்னு கேளுங்க. எப்போ பார்த்தாலும் என்கிட்ட வம்பு பண்ணிட்டே இருக்கா?? நான் எவ்வளவு பொறுமைசாலின்னு உங்களுக்கே தெரியும்ல, என் பொறுமையை ரொம்ப சோதிக்கிறா அக்கா இவ என்று புகாரை முதலில் வாசித்து மதுவே தான்.

 

 

“என்னாச்சு நித்தி?? நீ எதுக்கு எப்போ பார்த்தாலும் மதுகிட்டவே சண்டைக்கு போற என்றாள் ஆராதனா.

 

 

“அது வந்து அ… அக்கா என்று அவள் பதில் சொல்லும் முன் “உனக்கு என்ன திக்குவாயா எப்போ பார்த்தாலும் அ… ஆன்னு இழுத்துட்டே இருக்க?? என்று மது அவளுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல் நித்யாவை குத்தினாள்.

 

 

“ஆமாடி எனக்கு திக்குவாய் நீ வேணா வந்து வைத்தியம் பார்க்குறியா?? என்று மதுவை நோக்கி கூறிவிட்டு ஆராதனாவின் புறம் திரும்பினாள் நித்யா.

 

 

“அக்கா இவ கிடக்கா பெரிய எகிப்து ராணின்னு நினைப்பு இவளுக்கு. ஒண்ணு சொல்லிட கூடாது உடனே உங்ககிட்ட பஞ்சாயத்தை கூட்டிடுறா?? அவளை விடுங்க, நீங்க மாத்திரை எல்லாம் போட்டாச்சா என்று ஆராதனாவை விசாரித்தாள்.

 

 

“ஹ்ம்ம் போட்டேன் நித்தி என்று பதிலிறுத்தாள் மற்றவள்.

 

 

“அக்கா இவ பேச்சை மாத்துறா?? நீங்களும் பேசாம இருக்கீங்க, போங்கக்கா… எனக்கு யாருமே சப்போர்ட் பண்ணுறதே இல்லை என்று முகத்தை திருப்பினாள் மது.

 

 

“உனக்கு தான் சுனீஷ் சப்போர்ட் பண்ணுவாரே மது அப்புறம் என்ன?? என்று அவளை சமாதானம் செய்ய முற்பட்டாள் ஆராதனா.

 

 

“அக்கா நீங்க என்ன இப்படி சொல்லிட்டீங்க. என் சுனீஷ் எனக்கு தான் எப்பவும் சப்போர்ட் என்னை விட்டு கொடுத்திடுவானா என் சுனீஷ் என்று வேண்டுமென்றே அழுத்தி கூறினாள் நித்யா. அவள் என் சுனீஷ் என்றதில் கடுப்பாகி போன மது திரும்பி கோபமாய் அவளை பார்த்து முறைத்தாள்.

 

 

“அக்கா இவ முறைக்கிறா அக்கா… நெற்றிக்கண்ணை திறந்துட்டா இங்க பாருங்க நான் அப்படியே பொசுங்கிட்டேன் என்று மேலும் வம்பு வளர்த்தது நித்யாவே தான்.

 

 

“போதும் நித்தி சும்மா அவளை வெறுப்பேத்தாதே விடு. நீ இன்னும் ஆபீஸ் கிளம்பலையா?? என்று பேச்சை மாற்றினாள் ஆராதனா.

 

 

“கிளம்பணும் அக்கா, இன்னைக்கு வீட்டில இருந்து வேலை பார்க்கலாம்ன்னு நினைக்கிறேன் என்றாள் நித்யா.

 

 

“இன்னைக்காச்சும் உனக்கு புத்தி வந்துச்சே வீட்டு வேலை பார்க்கணும்ன்னு வா… வா… வந்து வீட்டை துடை, அந்த பாத்திரத்தை கழுவி வை என்று மது ஆரம்பித்தாள்.

 

 

“அடியே உன்னையெல்லாம் மியூசியம்ல தான்டி வைக்கணும். நான் சொன்னது வீட்டில இருந்துட்டே ஆபீஸ் வேலை பார்க்கறதை பத்தி, வீட்டு வேலை பத்தி இல்லை. அது தான் நீ இருக்கியே வீட்டுல!! நீயே போய் அந்த வேலை எல்லாம் பாரு

 

 

“என்ன இருந்தாலும் சமையக்காரி தானேடி என்று சொல்லிவிட்டு நமுட்டு சிரிப்பு சிரித்தாள் நித்யா.

 

 

ஆராதனா “நித்தி என்று அழுத்தமாய் அழைத்து அவளை கண்டிக்கும் பார்வை பார்க்கவும் அவள் அடங்கினாள்.

 

 

மதுவிற்கு கோபம் இமயத்தை தொட்டது, அவளிருந்த கோபத்தில் சட்டென்று வாயைவிட்டு விட்டாள் அவள். “நானாச்சும் சமையக்காரி தான்டி. எனக்கு எல்லாருமே இருக்காங்க, உனக்கு யாருடி இருக்காங்க நீ அநாதை தானேடி என்றதும் நித்யாவின் முகம் கூம்பி போனது.

 

 

நித்யாவை காயப்படுத்தும் நோக்கில் தான் மது வேண்டுமென்றே அந்த வார்த்தையை கூறினாள். அவள் சொன்னதும் வாடிய நித்யாவின் முகம் ஒரு கணம் சந்தோசம் கொடுத்தாலும் மறுநிமிடமே தான் பேசிய வார்த்தையின் வீரியம் அதிகம் என்பதை உணர்ந்தாள்.

 

 

நித்யா எதுவும் பேசாமல் அவள் அறைக்கு சென்றுவிட்டாள். ஆராதனா மதுவை முறைக்க “அக்கா அப்படி பார்க்காதீங்க அக்கா. நான் வேணுமின்னே அப்படி சொல்லலை

 

 

“நீ வேணுமின்னு எல்லாம் சொல்லலை மது. வேணாம்மின்னு தான் சொன்னே. அவ வேணாம்ன்னு தானே சொன்னே!! என்றாள் மற்றவள்.

 

 

“அக்கா என்னக்கா?? இப்படி பேசுறீங்க?? அவ மட்டும் என்னை சமையக்காரின்னு சொல்லலாமா அக்கா!! அது தப்பில்லையா!! அந்த கோபத்துல ஒரு வார்த்தை சொல்லிட்டேன்

 

 

“நல்லா யோசி மது அவ உன்னை இப்போ இல்ல, நீ இங்க வந்ததுல இருந்தே அவ இப்படி தானே உன்னை எதாச்சும் சொல்லி கிண்டல் பண்ணுறா??ஆனா நீ இவ்வளவு நாள் அவளை பத்தி மனசுல வைச்சிருந்ததை சட்டுன்னு சொல்லிட்டியே

 

 

“அவ எதையும் வாய் வார்த்தையா தான் இதுவரைக்கும் பேசியிருக்கா?? ஏன் சுஷ்மி லீவுக்கு வரும் போது அவ கூடவும் இதே போல கிண்டலடிச்சு கலாட்டா பண்ணி இப்படி தானே இருந்திருக்கா

 

 

“ஆனா நீ அவளை காயப்படுத்தணும்ன்னு தானே அந்த வார்த்தையை சொன்னே. எதை சொன்னா அவளுக்கு வலிக்கும்ன்னு நினைச்சே தானே சொன்னே என்று ஆராதனா மதுவின் மனதில் புகுந்து பார்த்தவள் போல் கூறினாள்.

 

 

மதுவோ இன்னமும் அவள் தப்பை உணராதவளாய் அவள் பேசியதற்கு சப்பைக்கட்டு கட்டலானாள். “அக்கா நானும் வாய் வார்த்தையா தான் அக்கா அதை சொன்னேன்

 

 

“உன் மனசாட்சிக்கு தெரியும் மது. நீ பேசினது ரொம்பவே தப்பு நான் உன்கிட்ட இதை எதிர்பார்க்கவே இல்லை. உனக்கு நித்யா மேல இருந்த பொறாமை தான் உன்னை இப்படி பேச வைச்சிருக்கு என்றாள் ஆராதனா.

 

 

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே மதுவிற்கு சுனீஷிடம் இருந்து போன் வரவும் அவளுக்கு சர்வமும் நடுங்கியது. ‘அய்யோ அதுக்குள்ள போட்டு கொடுத்திட்டாளா. இவர் என்ன சொல்லுவாரோ தெரியலையே என்று யோசித்துக் கொண்டே போனை எடுத்து காதில் வைத்தாள்.

 

 

“மது போன் எடுக்க எவ்வளவு நேரம். இந்த நித்யா எங்க போனா?? போன் பண்ணா எடுக்க மாட்டேங்குறா?? கொஞ்சம் அவளை எனக்கு உடனே பண்ண சொல்லேன் என்றான் அவன்.

 

 

அவள் பதிலேதும் சொல்லாமல் இருக்கவும் “மது… மது நான் சொல்றது கேக்குதா இல்லையா?? என்றான் எதிர்முனையில்.

 

 

உள்ளேயிருந்து வெளியே வந்த நித்யாவோ ஆராதனாவிடம் வந்தவள் “எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சுக்கா. நான் கிளம்பறேன், சுனீஷ் போன் பண்ணா நானே அவனுக்கு பேசறேன்னு சொல்லிடுங்க என்று சொல்லிவிட்டு கடகடவென வெளியேறிவிட்டாள்.

 

 

மதுவிற்கு இரும்பு குண்டொன்று நெஞ்சில் அமர்ந்தது போல் வலித்தது. சுனீஷிடம் நித்யா அலுவலகம் கிளம்பி விட்டாள் என்று சொல்லி வைத்துவிட்டாள்.

 

 

தனியே சென்று அமர்ந்தவளுக்கு தான் உண்மையிலேயே அதிகமாய் பேசிவிட்டோம் என்று உரைத்தது. எதனால் இப்படி செய்தோம் என்று யோசிக்க காரணம் சுனீஷ் என்று புரிந்தது.

 

 

நித்யா அவன் மேல் எடுத்துக்கொள்ளும் உரிமை பிடிக்காதவளாய் தான் இவ்வாறு நடந்துகொண்டோம். ஆராதனா அக்கா சொன்னது போல் எனக்கு அவளின் மேல் பொறாமை தான். அதனால் தான் அவள் மனம் வலிக்க பேசிவிட்டேன் என்று அவள் மனம் அவளிடம் ஒத்துக்கொண்டது.

 

 

மது தன் யோசனையில் நின்றிருக்க வாசலில் யாரோ “ஆராதனா என்றழைக்கும் சத்தம் கேட்கவும் சட்டென்று திரும்பி பார்த்தவள் “நீங்க… நீங்க… என்று இழுத்தாள்.

 

 

அதற்குள் பேச்சு சத்தம் கேட்டு வெளியில் வந்த ஆராதனா வாசலை மறைத்து நின்றவனை கண்டதும் உள்ளம் சந்தோஷிக்க மாறாக கண்கள் கண்ணீரை பொழிய ஓடிச்சென்று அவனை அணைத்து கண்ணீர்விட்டாள்…

 

 

 

Advertisement