Advertisement

அத்தியாயம் – 21

 

 

ஆராதனாவிற்கு இன்று ஸ்கேன் எடுக்கும் நாள், நேரமாகவே கிளம்ப வேண்டுமென்று மல்லிகா வந்து அவளை எழுப்பிவிட்டு சென்றார். படுக்கையில் இருந்து எழுந்தவளுக்கு இதற்கு முன் ஸ்கேன் செய்த அன்று அனீஷ் செய்த ஆர்ப்பாட்டம் கண் முன் வந்து போனது.

 

 

தான் குழந்தை உண்டானதில் இருந்து அவனுக்கு தான் எவ்வளவு சந்தோசம் எவ்வளவு ஆனந்தம், வானத்திற்கும் பூமிக்கும் குதிக்காதது தான் குறை. தானும் ஒரு மருத்துவன் என்பதையும் மீறி அந்த பெண் மருத்துவரை அன்று அவன் படுத்தியபாடு நிழலாய் அவள் முன் விரிந்தது.

 

 

ஒவ்வொரு நாளும் அவன் நினைவில்லாமல் விடிவதுமில்லை, உறங்குவதுமில்லை. ஏதோவொரு ஒரு சிறு நிகழ்வாவது அவனை பற்றிய நினைவுகளை அவளுக்கு தருவித்து விடும்.

 

 

திருமணமாகி வந்த புதிதில் நம் வீட்டினரை கூட நாம் இப்படி அதிகம் நினைத்திருக்கவில்லையே என்பதே அவளுக்குள் இருந்த ஆச்சரியம் கலந்த கேள்வி. ஆனால் அதற்கு விடை தான் அவளுக்கு விளங்கவேயில்லை(!).

 

 

மல்லிகா மீண்டும் வரும்முன் குளித்து கிளம்பி அவள் அறையில் இருந்து வெளியில் வந்தாள். லேசாய் வயிறு மேடிட தொடங்கியிருந்தது. சட்டென்று பார்த்தால் தெரியாவிட்டாலும் அவளால் குழந்தையின் வளர்ச்சியை உணர முடிந்தது.

 

 

இந்நேரம் அனீஷுடன் இருந்தால் எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பான் என்று அவளால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. அந்த ஒரு கணம் அவளுக்குள் பெரும் குற்றவுணர்வு வந்து போகும். இது போன்ற எண்ணம் அவ்வப்போது வந்தாலும் அவள் பிடியில் அவள் உறுதியாய் தான் நின்றாள்.

 

 

அவள் உறுதியை தான் அவ்வப்போது தொலைக்காட்சியில் வரும் அவர்களின் விளம்பரம் வேரூன்ற வைக்கிறதே!! என்ன பெரிதாக கேட்டுவிட்டோம் என்று அம்மா வீட்டிற்கு போகச் சொன்னான் என்ற கோபம் இன்னமும் அவளுக்குள் கனன்று கொண்டே தான் இருந்தது.

 

 

“என்னம்மா ஆராதனா நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன். நீ என்ன யோசனையில இருக்க என்ற மல்லிகாவின் குரல் மட்டுமல்ல அவர் கையும் அவளை தட்டி எழுப்பியதில் நிகழ்வுக்கு வந்தாள்.

 

 

“என்னம்மா கேட்டீங்க?? நான் ஏதோ யோசனையில இருந்துட்டேன், நாம கிளம்புவோமா?? என்றாள்.

 

 

“கிளம்பலாம்மா ஆனா இப்படியே வா என்றார் அவர்.

 

 

“ஏன்ம்மா என்னாச்சு?? வேற டிரஸ் போடணுமா?? என்று குனிந்து அவள் உடையை பார்த்தாள்.

 

 

“போன முறை போனதோட ரிப்போர்ட் எல்லாம் கேட்பாங்களே, அதெல்லாம் எடுத்துட்டு போக வேண்டாமா?? நீங்க போய் எடுத்துட்டு வாங்க, நான் கார் வந்திருக்கான்னு பார்த்திட்டு வர்றேன் என்றுவிட்டு மல்லிகா வாசலுக்கு விரைந்தார்.

 

 

ஆராதனாவும் உள்ளே சென்று ரிப்போர்ட் எல்லாம் எடுத்துவரவும் வாசலில் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. இருவருமாக மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றனர். அங்கு அவளுக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருப்பதை அறியாமல் சென்றாள் அவள்…

 

 

____________________

யாழினியின் கன்னத்தில் இடியாய் கணவன் அடித்த அடி விழவும் அடக்கி வைத்திருந்த அழுகை யாவும் கேவலாய் வெடிக்க கட்டிலில் கவிழ்ந்து அழ ஆரம்பித்தாள் அவள்.

 

 

மனைவியை அடித்தபின் அந்த அறையில் இருக்க பிடிக்காத சபரீஷ் எழுந்து வெளியே சென்றுவிட்டான். அவன் எங்கு சென்றான் என்று கூட உணராதவளாய் யாழினி சுயபச்சாதாபத்தில் அழுது கரைந்து கொண்டிருந்தாள்.

 

 

அழுது அழுது அவள் தன்னை மறந்து உறங்கியிருந்தாள். எப்போதும் போல் காலையில் விழிப்பு வர ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு. சற்று நேரம் கண்ணை மூடி யோசிக்கவும் தான் இரவு நடந்தது அனைத்தும் ஞாபகத்திற்கு வந்தது.

 

 

அருகில் படுத்திருந்தவன் எப்போதோ எழுந்துவிட்டான் போலும் என்று நினைத்துக்கொண்டு காலைகடன்களை முடித்து குளித்து அவர்கள் அறையில் இருந்து வெளியில் வந்தால் சபரி ஹால் சோபாவிலேயே உறங்கியிருந்தது கண்ணில் விழுந்தது.

 

 

‘இங்க எதுக்கு வந்து படுத்திருக்கார், நைட் நாம அதிகமா பேசிட்டமா என்ன?? தப்பா ஒண்ணும் சொல்லலையே!! உண்மையை தானே சொன்னோம். இவர் செஞ்சதுக்கு நான் தான் கோவிக்கணும்

 

 

‘இவர் எதுக்கு கோவிச்சுட்டு இங்க வந்து படுத்திருக்கார். அதான் என்னை அடிக்கவும் செஞ்சுட்டாரே அப்புறமென்ன கோபம் இவருக்கு என்று தன் கண்ணோட்டத்திலேயே யோசித்துக் கொண்டிருந்தவள் அவன் எதனால் அப்படி செய்தான் என்று யோசிக்க மறந்திருந்தாள்(!).

 

 

எப்போதும் போல் தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க சபரி எழுந்த அரவம் கேட்டு வெளியில் எட்டிப்பார்த்தவள் அவனுக்கு காபியை போட்டுக்கொண்டு எடுத்துச் சென்றாள்.

 

 

அவர்கள் அறைக்கு செல்ல அவன் அப்போது தான் பிரஷ் செய்து கொண்டிருப்பதை பார்த்தவள் அங்கிருந்த டேபிளின் மீது காபியை வைத்துவிட்டு அவனை நோக்கி “எடுத்துக்கோங்க என்றுவிட்டு வெளியில் சென்றுவிட்டாள்.

 

 

காலை டிபனை செய்து முடித்துவிட்டு அவள் வெளியில் வரவும் சபரி தன் மடிகணினி அடங்கிய பையினை மாட்டிக்கொண்டு வந்தவன் எதுவும் சொல்லாமல் காரைக் கிளப்பிச் சென்றுவிட்டான். அவன் காரை எடுக்கும் சத்தம் கேட்டு அவசரமாய் வாசலுக்கு விரைந்து அவள் வரும் முன்னே அவன் கிளம்பி விட்டிருந்தான்.

 

 

‘எதுக்கு இப்படி ஓவரா சீன் போடுறார். எனக்கு வரவேண்டிய கோபமெல்லாம் இவருக்கு ஏன் வருது. இப்போ சாப்பிடாம போய் என்னத்தை சாதிக்க போறார் என்று பொருமிக்கொண்டு உள்ளே சென்றவளுக்கு பத்து நிமிடங்களுக்கு மேல் பொறுக்க முடியவில்லை.

 

 

மனைவியின் மீது கோபமாயிருந்தாலும் இதுவரை ஒரு நாளும் சபரி சாப்பிடாமல் சென்றதில்லை. இன்று மட்டும் ஏன் இப்படி என்று எண்ணிக்கொண்டு கைபேசியை கையில் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

 

 

‘இப்போ போடலாமா?? இல்லை வண்டி ஓட்டிட்டு இருப்பாரா?? என்று தனக்குள்ளேயே கேள்விகளை கேட்டுக்கொண்டவள் யோசித்து கொண்டிருந்ததில் மேலும் ஒரு பதினைந்து நிமிடம் கழிந்திருக்க ஒருவாறு அவன் கைபேசிக்கு அழைத்தாள்.

 

 

முதல் இரண்டு அழைப்புகளை தவிர்த்தவன் மூன்றாம் அழைப்பை பாதியிலேயே துண்டித்துவிட்டு ‘Don’t call me’ என்று அவளுக்கு குறுந்தகவல் அனுப்பினான்.

 

 

‘என்னவாம் இவருக்கு ரொம்ப பண்ணுறாரு என்று மனதிற்குள் திட்டிக் கொண்டவளோ எப்படியோ போகட்டும் என்று ஓரிரு நிமிடம் நினைத்தாலும் அவளால் இருக்க முடியவில்லை. எப்படியும் சாயங்காலம் வீட்டுக்கு வந்து தானே ஆகணும் அப்போ பார்த்துக்கலாம் என்று இருந்துவிட்டாள்.

 

 

அவர்கள் அறைக்கு சென்ற போது தான் இன்னொன்றும் அவள் உணர்ந்தாள். காலையில் வைத்திருந்த காபியை கூட அவன் அருந்திருக்கவில்லை. ‘அப்படி என்ன கோவம் இவருக்கு??தான் எதுவும் தவறாக பேசிவிட்டோமோ?? இல்லையே சரியாக தானே பேசினோம் என்று தனக்குள்ளேயே யோசனையில் உழன்றாள்.

 

 

ஏனோ அவளுக்குமே உணவு இறங்கவில்லை அன்று, அவன் சாப்பிடாததால் எல்லாம் இல்லை(!) என்று அவளே அவளை சமாதானம் செய்து கொண்டாள். சபரியின் கோபம் இன்னமும் தணிந்திருக்கவில்லை. இரவு வெகு தாமதமாகவே வீட்டிற்குள் நுழைந்தவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை யாழினியின் பதிலடியை.

மருத்துவமனை வாயிலில் சென்று மல்லிகாவுடன் இறங்கிய ஆராதனாவுக்கு தலைசுற்றலாக இருந்தது. அடிவயிற்றில் இருந்து புரட்டிக்கொண்டு வர அவசரமாய் ஒதுக்குப்புறம் சென்றாள்.

 

 

மல்லிகாவும் அவளை தாங்கியவாறே அருகில் நிற்க காலையில் சாப்பிட்ட டிபன் மொத்தமும் வெளியில் வந்துவிட வாயை கழுவிட்டு சோர்வுடன் அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்தாள்.

 

 

“இதை குடிம்மா என்று மல்லிகா நீட்டியதை “வேண்டாம்மா ரொம்ப ஓமட்டலா இருக்கு. எனக்கு எதுவுமே வேண்டாம்என்றவளுக்கு பெற்றவளின் நினைவும் கொண்டவனின் நினைவும் ஒரே சேர எழ கண்கள் கரித்தது.

 

 

“இங்க பாரும்மா மசக்கையா இருந்தா இப்படி தான் இருக்கும். அதுக்காக சாப்பிடாமலே இருக்க முடியும். புளிப்பா இந்த சாத்துக்குடி ஜூஸ் குடிம்மா உனக்காக போட்டது தான். உனக்கு ஒண்ணும் செய்யாது என்று சொல்லி அவளை கொஞ்சம் குடிக்க செய்தார் அவர்.

 

 

அது மிகப்பெரிய மருத்துவமனை சுனீஷுக்கு தெரிந்தவர் யாரோ ஒருவர் இருந்ததால் அவன் இங்கேயே காண்பிக்க ஏற்பாடு செய்திருந்தான். இதற்கு முன் அவனுடன் வந்திருந்த சந்தர்ப்பத்தில் அவனே சொல்லியிருந்தது தான் அது.

 

 

“அம்மா மணியாச்சுல டாக்டர் வந்திருப்பார்ம்மா வாங்க போவோம் என்று சொல்லிக்கொண்டே எழுந்தவள் தூரத்தில் என்ன கண்டாளோ சட்டென்று அமர்ந்துவிட்டாள்.

 

 

“என்னாச்சும்மா என்று மல்லிகா உசுப்பவும் “ஹான் ஒண்ணும் ஒண்ணும் இல்லைம்மா… என்றவள் கண்ணைக் கசக்கிக்கொண்டு அவருடன் எழுந்து சென்றாள்.

 

 

அவள் படியேறி உள்ள செல்லவும் கூட்டமாய் சிலர் உள்ளே நுழைந்தனர். அவளை தள்ளிக்கொண்டு சென்றவர்களை திரும்பி முறைக்க நினைத்தவள் அப்படியே நின்றுவிட்டாள்.

 

 

அந்த கூட்டத்தில் இருந்த ஓரிருவர் வரவேற்பில் இருந்த பெண்ணிடம் எதைப்பற்றியோ கேட்டுவிட்டு அந்த பெண் காட்டிய வழியில் சென்றனர். அவர்கள் அப்புறம் நகரவும் வேகமாய் வரவேற்பிற்கு வந்தவள் “மேடம் அவங்க எல்லாம் யாரு?? எதுக்கு இப்படி வேகமா போறாங்க?? என்று விசாரித்தாள்.

 

 

“இங்க கான்பிரன்ஸ்க்கு வந்த டாக்டர்ஸ் மேடம் அவங்க. ஒரு வாரமா இங்க இந்த கான்பிரன்ஸ் நடக்குது. நேத்து சென்னையில இருந்து டாக்டர்ஸ் வந்திருக்காங்க என்று அவள் கேட்காத தகவலாக அந்த பெண் இவளிடம் உளற அருகிருந்த மற்றொரு பெண்ணோ “நீங்க எதுக்கு மேடம் இதெல்லாம் கேட்கறீங்க என்று இவளை பார்த்து கேட்டுவிட்டு அருகிலிருந்தவளிடம் “ஹேய் நிஷா யார் என்ன கேட்டாலும் இப்படி ஒப்பிக்காதான்னு எத்தனை முறை உனக்கு சொல்றது என்று அதட்டிவிட்டு நகர்ந்தாள்.

 

 

‘இது அவர் மாதிரியே இருக்கே. ஒரு வேளை அவர் தான் என்னைத் தேடி வந்திட்டாரோ?? இல்லையே அதான் அந்த பொண்ணு சொல்லுச்சே ஏதோ கான்பிரன்ஸ்ன்னு. அதுக்கு தான் வந்திருப்பார் என்று ஆராதனா நினைத்தது வேறு யாரைப்பற்றியும்மல்ல அவள் கணவன் அனீஷ் பற்றி தான்.

 

 

சற்று முன் தூரத்தில் அனீஷ் போன்று ஒருவனை பார்த்ததும் அவள் எண்ணத்தின் சுழற்சி தான் அவளை ஏதேதோ யோசித்துக் கொண்டிருக்க வைத்தது.

 

 

அவனை பார்த்த அதிர்ச்சியா சந்தோசமா என்று பிரித்தறியாத உணர்வொன்று அவளை ஆட்டுவித்தது. ஏதோ நினைவிலேயே மல்லிகாவுடன் ஸ்கேன் எடுக்க சென்றாள்.

 

 

குழந்தையின் துடிப்பு வளர்ச்சி என்று அவர்கள் சொன்னதும் காட்டியதும் அவள் மனதில் சற்றும் பதியவேயில்லை. அனீஷ் இங்கு வந்திருக்கிறான் என்பதே அவள் நினைவுகளை ஆக்கிரமிக்க போதுமானதாக இருந்தது.

 

 

மருத்துவர் சற்று நேரம் காத்திருக்க சொன்னது கூட காதில் விழவில்லை அவளுக்கு. மல்லிகா தான் அவளை வெளியே அழைத்து சென்றார். அரைமணி நேர காத்திருப்பிற்கு பின் ரிப்போர்ட் அவர்கள் கைக்கு வர இருவருமாய் வாசலுக்கு வந்தனர்.

 

 

அப்போது அவளுக்கு நேரெதிராக அனீஷ் படியிறங்கி வந்துகொண்டிருந்தான். வந்தவன் சற்றும் இவள் புறம் திரும்பாமல் வேறு புறம் சென்றுவிட்டான். மீண்டும் அவளுக்குள் குழப்பம் குமிழியிட துவங்கியது. ‘பார்த்தாரா?? பார்க்கவில்லையா?? என்ற குழப்பம் தான் அது. அவள் கணவன் அவளை இன்னும் கலங்க வைக்கப் போகிறான் என்பதறியாமல் சென்றாள் அவள்.

 

சபரி வீட்டிற்குள் நுழையவும் வீட்டில் இருந்து பேச்சுக்குரல் வந்ததும் கண்டுகொண்டான் வந்திருப்பது அவன் அன்னையும் தந்தையும் என்று. “என்னடா மணி இப்போ என்னாச்சு?? பன்னிரண்டு ஆகப்போகுது நீ பாட்டுக்கு சாவகாசமா உள்ள வர்ற

 

 

“யாழினி போன் பண்ணாலும் எடுக்கலை. உன் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்க?? வீட்டுல யாருமில்லைன்னா இப்படி தான் இந்த பொண்ணை தவிக்க விடுவியா?? என்று அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டே இருக்க அவன் சோபாவிலேயே அமர்ந்துவிட்டான்.

 

 

இதுவே பழைய சபரீஷாக இருந்திருந்தால் அவன் அன்னை பேச ஆரம்பித்ததுமே பதிலுக்கு பதில் கொடுத்திருப்பான். அவர் பேசவே இடம் கொடுத்திருக்க மாட்டான்.

 

 

காலையில் இருந்து சாப்பிடாதது வேறு சோர்வாக இருந்தது. பசிக்கும் சமயங்களில் ஜூஸ் குடித்து சமாளித்தவனால் அதற்கு மேல் முடியவில்லை. அப்போது மகனின் சோர்வை கவனித்தவர் யாழினியை கூப்பிட்டு அவனுக்கு உணவளிக்க சொன்னார்.

 

 

வீம்புடன் எழுந்து உள்ளே செல்ல நினைக்க அனீஷும் வந்தான். ‘அடடா இவன் எப்போ வந்தான். இவளே எல்லாரையும் போன் பண்ணி வரச் சொன்னாளா?? இல்லை அவங்களா வந்தாங்களா?? என்ற கேள்வி உள்ளே முளைத்தது.

 

 

“உட்காருடா நாம சேர்ந்து சாப்பிடுவோம். உனக்காக தான் காத்திட்டு இருக்கேன் என்று அனீஷ் சொல்லவும் வேறுவழியில்லாமல் கையை கழுவிவிட்டு உணவு மேஜையில் அமர்ந்தான்.

 

 

“அம்மா அப்பா நீங்க ரெண்டு பேரும் போய் படுங்க. அப்பாக்கு பிரஷர் மாத்திரை போடணும் இப்போவே ரொம்ப லேட்ம்மா என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான்.

 

 

அவர்கள் உள்ளே சென்றதும் தம்பியை நோக்கி திரும்பினான். யாழினி அவர்கள் இருவருக்கும் உணவு வைத்துவிட்டு சமையலறைக்குள் சென்றுவிட்டாள். “என்னடா ஒரு மாதிரியா இருக்க என்றான் அனீஷ்.

 

 

“ஒண்ணுமில்லையே நல்லா தானே இருக்கேன் என்று பதிலிருந்தான் அவன் உடன்பிறந்தான்.

 

 

“பார்த்தா அப்படி தெரியலை எதையோ சொல்லாம மறைக்குற மாதிரி இருக்கு. நீ சொல்றது நம்பும்படியா இல்லை

 

 

“நான் சொல்றதை யாரும் நம்பணும்ன்னு எந்த அவசியமும் இல்லை. இப்போ இதைப்பத்தி பேசத்தான் நீ இங்க வந்தியா அனீஷ்??” என்றான் காட்டமான குரலில்.

 

 

‘இப்படி பேசுபவனில்லையே சபரி என்று அறியாதவனா அவன். யார் தன்னை பற்றி என்ன நினைத்தாலும் எனக்கொன்றும் இல்லை என்பவன் மனதில் நினைத்ததை பேசும் ரகம்.

 

 

தற்போதைய அவன் பேச்சில் தன்னை யாரோ நம்பவில்லை என்ற குற்றச்சாட்டும் வருத்தமும் அப்பட்டமாக தெரிந்ததை உணர்ந்தான் அவன் சகோதரன். யாரோ என்ன யாரோ அது யாழினியாய் இருக்குமென்பது அவனால் உணர முடிந்தது.

 

 

இதில் தான் செய்வதற்கு எதுவுமில்லை என்றுணர்ந்தவன் அந்த பேச்சை அத்துடன் விட்டு வேறு பேச்சு பேசி அவனை சமாதானம் செய்தான். யாழினி அவர்களின் பேச்சின் நடுவே குறுக்கே வரவில்லை என்றாலும் சபரியின் இந்த போக்கு சற்று வித்தியாசமாய் தான் தோன்றியது அவளுக்கு.

 

 

இன்னமும் அவளால் அவனை முழுதாய் நம்ப முடியவில்லை. ஏனென்றும் அவளுக்கு புரியவேயில்லை. அவள் எண்ணங்களை ஒதுக்கி உறங்குவதற்காக அவர்கள் அறைக்கு சென்றாள்.

 

 

அவள் கணவனோ அங்கு அவளிடம் பேசுவதற்கென்று காத்திருக்கவெல்லாம் இல்லை. வசதியாய் தொலைக்காட்சி பார்ப்பதற்கென்று போடப்பட்டிருந்த ஒன்றை மரத்தினாலான சோபாவிலேயே படுத்து உறங்கியிருந்தான் அவன்.

 

 

ஒரு வாரத்திற்கும் மேல் ஓடிவிட்டது கணவனும் மனைவியும் சரியாக பேசி. முதலிலாவது சபரி பேசுவான், யாழினி ஓரிரு வரிகளிலாவது பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். இந்த ஒரு வாரமாக எந்த பேச்சு வார்த்தையுமே இருவருக்கும் இல்லை.

 

 

மற்றவர் முன் தங்களை வெளிபடுத்திக் கொள்ளாமல் இருக்க இருவருமே முனைந்தனர். வீட்டில் இருந்தவர்களுக்கு வேறு கவலைகள் இருந்ததில் இவர்களை மற்றவர்கள் சரிவர கவனிக்கவில்லையோ!! என்னவோ!!

 

 

“சபரி, உன்கிட்ட பேசணும் என்ற அனீஷின் குரலில் அலுவலகம் கிளம்பிச் செல்ல தயாரான சபரி அப்படியே சோபாவில் அமர்ந்தான், “சொல்லு அனீஷ் என்றவாறே.

 

 

“இந்தா இந்த பேப்பர்ஸ் வாங்கி பாரு. நம்மோட புது விளம்பரம் டிசைன்ஸ், மாடல்ஸ் எல்லாம் இருக்கு. இன்னும் ரெண்டு நாள்ல ஷூட் பண்ணுவாங்க, பார்த்திட்டு எனக்கு சொல்லு சபரி. நான் இன்னைக்கு திரும்ப ஊருக்கு கிளம்பறேன் என்றான் அனீஷ்.

 

 

சபரி அனீஷை வித்தியாசமாய் பார்த்தான். “என்ன?? என்ன சொன்ன?? இப்போ நீ?? விளம்பரமா?? எதுக்கு?? ஏன்?? என்று கேள்வியை பார்த்தான்.

 

 

“என்ன சபரி புதுசா கேட்குற மாதிரி கேட்குற??

 

 

“நான் புதுசா கேட்கலை,இப்போ எதுக்கு இந்த விளம்பரம்?? தேவையில்லாம நீ தான் பிரச்சனையை இன்னும் பெரிசு பண்ணிட்டே போறன்னு எனக்கு தோணுது அனீஷ். அண்ணியை திரும்ப இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்ன்னு உனக்கு எண்ணமே இல்லையா??

 

 

“நான் நம்மோட விளம்பரத்தை போடுறதை நிறுத்தி இரண்டு மாசத்துக்கு மேல ஆகுது. நீ என்னமோ புதுசா விளம்பரம் ஷூட் பண்ணுறதை பத்தி பேசுற?? என்ற சபரியை பார்த்து அனீஷ் நமுட்டு சிரிப்பு சிரித்தான்.

 

 

“நான் கேட்டா நீ பாட்டுக்கு சிரிக்கிற?? என்று முறைத்தான் அவன் தம்பி.

 

 

“நீ அதிகம் டிவி பார்க்க மாட்டேன்னு எனக்கு தெரியும், டிவியே பார்க்க மாட்டேன்னு இன்னைக்கு தான் தெரிஞ்சுக்கிட்டேன் என்றவன் பேசியது சபரிக்கு சுத்தமாய் புரியவில்லை.

 

 

“என்ன சொல்ற அனீஷ்?? புரியற மாதிரி சொல்லு என்றான்.

 

 

“நீ விளம்பரத்தை நிறுத்த சொன்ன மறுநாளே நான் தொடர்ந்து போடச்சொல்லி சொல்லிட்டேன் என்று சொல்லி நிறுத்தினான் மற்றவன்.

 

 

“இல்லையே நான் விளம்பரத்துக்குன்னு எந்த செக்கும் கொடுக்கவேயில்லையே. எனக்கு தெரியாம இது எப்படி நடந்திச்சு?? என்று குழம்பினான் சபரி.

 

“அதுக்கான செக்கை நான் தான் கொடுத்தேன். என்கிட்டயே இனி செக் வாங்கிக்க சொல்லிட்டேன். அதுனால விஷயம் உனக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லாம போச்சு

 

 

“அண்ணிக்கு பிடிக்காததை ஏன் செய்யணும்ன்னு நினைக்கிற அனீஷ்?? வேண்டாம் நாம இதோட நிறுத்திடுவோம் அவங்க ஒண்ணும் தப்பா சொல்லவேயில்லையே. நாம அவங்களோட கருத்தையும் கொஞ்சம் கேட்கலாமே, தப்பில்லையே

 

 

அவன் பேசுவதை காதில் வாங்காதவன் போன்றிருந்த அனீஷ் “நீ விளம்பரத்தை பார்த்திட்டு மட்டும் எனக்கு சொல்லு, மேல எந்த கருத்தும் எனக்கு தேவையே இல்லை என்றவனின் கண்கள் சொன்னதை செய் என்ற தீவிரத்தை காட்டியது.

 

 

அதுவரை பொறுமையாய் அண்ணனும் தம்பியும் பேசுவதை அமைதியாய் பார்த்திருந்த யாழினி அனீஷின் முன் வந்து நின்றாள். “நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே மாமா என்றாள் பீடிகையாய்.

 

 

“சொல்லும்மா என்றவன் அவள் என்ன பேசப்போகிறாள் என்பதை முன்பே அறிந்தவன் போல் அதற்கு தயாராய் நின்றான். “எங்களோட ஆபீஸ் விஷயத்துல தலையிடாதீங்கன்னு என்கிட்ட சத்தம் போட்ட இவங்களே இதெல்லாம் வேண்டாம்ன்னு சொல்றாங்க

 

 

“நீங்க மட்டும் ஏன் மாமா பிடிவாதம் பிடிக்கறீங்க?? ஆராதனா இங்க வரவேண்டாம்ன்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்களா?? நாங்க எடுத்து சொல்ல வேண்டிய அளவுக்கு நீங்க கிடையாதுன்னு எனக்கு தெரியும்

 

 

“ஆனாலும் நீங்க ஏன் இப்படி பண்றீங்கன்னு எனக்கு விளங்கவேயில்லை. மாறவே மாட்டார்ன்னு நான் நினைச்ச உங்க தம்பி மாறியிருக்கார், ஆனா நீங்க ஏன் மாமா இப்படி மாறிட்டீங்க

 

 

“ஆராதனா வீட்டை விட்டு போனது தப்பாவே இருக்கட்டும். ஆனா அவ எண்ணம் தப்பில்லை, அதை கொஞ்சமும் காது கொடுத்து கேட்கவே மாட்டேங்கற மாதிரி நீங்க நடந்துக்கறது தான் எனக்கு தப்பா தெரியுது

 

 

“நான் உங்களை தப்பு சொல்றேன்னு நினைக்காதீங்க. மனசுல தோணினதை சொல்லிட்டேன். நீங்க மாறினா சாரி உங்க எண்ணத்தை மாத்திக்கிட்டீங்கன்னா நல்லதுன்னு நினைக்கறேன் என்றாள்.

 

அண்ணனாய் இருந்தாலும் அவன் முன்னே தன் மனைவி தன்னைவிட்டுக் கொடுத்து விட்டாளே என்ற இறுக்கத்தில் இருந்த சபரீஷ் யாழினி பேசி முடித்ததும் திரும்பி அவளை முறைத்தான், “நீ யாரு எங்கண்ணனை கேள்வி கேட்க?? என்றாவாறே.

 

 

பெரிதாய் எதுவும் வாக்குவாதம் ஆகிவிடுமோ என்று அதற்குள் அனீஷ் குறுக்கே புகுந்து “ஏன் சபரி அப்போ நீ மட்டும் தான் கேள்வி கேட்கணுமா என்ன?? நீ வேற யாழினி வேறன்னு நான் நினைக்கலை. நீ இந்த பேச்சை இத்தோட விடு என்று முற்றுப்புள்ளி வைத்தான்.

 

 

“என்னை பத்தி பேசி உங்களுக்குள்ள சண்டை வேண்டாம். என்னை பத்தி நீங்க எந்த ஆராய்ச்சியும் செய்யவும் வேண்டாம். இந்த விளம்பரம் கதையை நானே பார்த்துக்கறேன் என்று பொதுவாய் இருவரையும் பார்த்து சொன்னவன் “யாழினி நீ சொன்னதையும் சபரி சொன்னதையும் நான் யோசிக்கறேன் போதுமா என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

 

 

எழுந்தவன் அவன் அறைக்கு செல்லும்முன் திரும்பி இவர்களை பார்த்தான். “பேசினா தீராதது எதுவுமில்லை, எதையும் ஓடி ஒளிஞ்சு செய்யணும்ன்னு அவசியமுமில்லை

 

 

“நான் சொல்றது உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன். எல்லாரும் திரும்ப இந்த வீட்டுக்கு வரும் போது புதுசா எந்த பிரச்சனையும் இருக்காதுன்னு நம்புறேன்என்று இருவரையும் பார்த்து தீர்க்கமாக சொல்லிவிட்டு போக இருவருமே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

 

அனீஷிடம் பேசியதாலோ இல்லை வேறு மனக்குழப்பத்தினாலோ சபரி இந்த ஒரு வாரமாய் படுத்திருந்த ஒன்றை சோபாவை விட்டுவிட்டு கட்டிலில் படுத்திருந்தான். அறைக்குள் வந்த யாழினியும் அதை பெரிதாய் கண்டுகொள்ளாமல் கட்டிலின் மறுபுறம் சென்று படுத்துக்கொண்டாள்.

 

 

அனீஷ் கிளம்பி சென்ற ஓரிரு நாளில் திலகவதியும் சுந்தர்ராஜும் ராமேஸ்வரம் சென்று பித்ரு காரியம் செய்வதாக கூறிவிட்டு கிளம்பினர். மீண்டும் கணவனும் மனைவியுமாக அதே தனிமை உண்டான போதும் எந்த பேச்சும் இருவருக்குள்ளும் எழவேயில்லை.

 

 

எந்த பிகுவும் செய்யாமல் சபரி வீட்டிலேயே உணவருந்தினான். அந்த வாரத்தில் திலகவதியின் தங்கையின் பேத்திக்கு பிறந்தநாள் விழா என்று அவர்கள் நேரிலேயே வந்து அழைத்திருந்தனர்.

 

தீடிரென்று தான் யாழினிக்கு அந்த விசேஷம் பற்றிய ஞாபகம் வந்தது. திலகவதி வேறு ஊருக்கு கிளம்பும்முன் சொல்லிவிட்டு தான் சென்றிருந்தார். கண்டிப்பாக அந்த விழாவிற்கு கணவன் மனைவி இருவருமாக செல்ல வேண்டும் என்று. சபரிக்கு ஞாபகம் செய்து அழைத்து செல்ல சொன்னார்.

 

 

காலையில் அலுவலகம் கிளம்பி கொண்டிருந்தவனிடம் சொல்வதற்கென்று அவசரமாக அவர்கள் அறைக்கு சென்றாள். வேகமாக வந்ததில் உள்ளிருந்து வெளியில் வந்துக் கொண்டிருந்தவனை கவனிக்காது அவன் மேல் இடித்துக்கொண்டவள் நிலைதடுமாறி விழப்போக அவள் இடையில் கைக்கொடுத்து அவளை நேராய் நிறுத்தினான் அவள் கணவன்.

 

 

உள்ளே ஏதோ சிலுசிலுவென்று ஓட எதுவும் புரியாமல் அப்படியே சிலையென நின்றாள் அவள். “பார்த்து வரமாட்டியா அப்படி என்ன தலைப்போற அவசரம் என்றவனின் கேள்வி அப்போது தான் அவள் மண்டையில் உரைத்தது.

 

 

“இல்லை அது அது வந்து இன்னைக்கு கோமதி அத்தை பேத்திக்கு பிறந்தநாள். அத்தை நம்மளை போயிட்டு வரச்சொன்னாங்க அதை சொல்ல தான் வந்தேன்

 

 

“ஹ்ம்ம் எனக்கும் ஞாபகமிருக்கு, நான் சாயங்காலம் சீக்கிரம் வர்றேன். ஒரு மூணு மூன்றரை மணிக்கு வந்தால் போதுமா?? என்று கேள்வியாய் அவளை பார்க்க அவளோ அவனையே வெறித்து நோக்கினாள்.

 

 

‘என்னாச்சு இவளுக்கு என்று நினைத்தவன் அவள் கன்னத்தில் தட்டி “எங்க யோசனை?? என்று உலுக்க “ஹ்ம்ம் சரி வந்திடுங்க, கிப்ட் வாங்கணும். நீங்க வர்ற டைம் சரியா தான் இருக்கும் என்றுவிட்டு அங்கிருந்து அவசரமாய் நகர்ந்தாள்.

 

 

‘என்னாச்சு எனக்கு?? கல்யாணம் ஆகி இத்தனை நாளில் இவர் தொட்டது ஒண்ணும் பெரிசா தெரியலையே. இன்னைக்கு மட்டும் ஏன் இப்படி ஜில்லுன்னு இருக்க போல இருக்கு

 

 

‘இந்த மனுஷன் முருங்கைமரத்துல ஏறி உட்கார்ந்திருக்கும் போது தான் எனக்கு இதெல்லாம் தோணனுமா?? என்று சலித்தவள் அவனை பற்றிய நினைவை ஒதுக்க முயல குரங்கை நினைத்து மருந்தை குடித்த கதை போல் ஆனது.

 

 

அன்று முழுவதுமே அவனை பற்றிய நினைவாகவே இருந்தது அவளுக்கு. ‘என்னாச்சு ஏன் இப்படி அவர் நினைப்பாவே இருக்கு. அவர் என்கிட்ட பேசாம இருக்கறதுனால எனக்கு இப்படி இருக்கா?? என்னன்னே புரியலையே என்று மனதார புலம்பியவளை அழைப்பு மணியின் ஓசை கலைத்தது.

 

 

‘இந்த நேரத்துல யாரா இருக்கும்?? என்ற கேள்வியுடனே எழுந்து செல்ல அங்கு அவளின் எண்ணத்தின் நாயகன் அவளின் மணாளன் நின்றிருந்தான். புருவத்தை சுருக்கி அவனை யோசனையாய் நோக்க “என்ன வழிவிடுறதா உத்தேசமே இல்லையா?? என்று கேட்கவும் சட்டென்று விலகி வழி கொடுத்தாள்.

 

 

“மூன்றரை மணிக்கு தானே வர்றேன்னு சொன்னீங்க?? இப்படி போனதும் திரும்பி வந்திருக்கீங்க என்றவளை ஒரு விசித்திர ஜந்துவை பார்ப்பது போல் பார்த்தான் அவன்.

 

 

“மணி இப்போ என்னன்னு போய் பாரு. நான் ரெப்ரெஷ் பண்ணிட்டு வர்றேன் என்றுவிட்டு அவன் உள்ளே சென்றுவிட்டான். வேகமாக திரும்பி கடிகாரத்தை பார்க்க மணி மூணேமுக்கால் என்றிருக்க ‘ச்சே இவ்வளவு நேரமாகவா அவனை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தோம்

 

 

‘மானமே போச்சு, ஏற்கனவே என்னைக் கண்டா இவருக்கு இளக்காரம் இதுல லூசு மாதிரி நான் கேட்டதை இன்னும் இளக்காரமா நினைச்சிருப்பாரே என்று நினைத்துக்கொண்டு அவளும் விழாவிற்கு கிளம்ப ஆயத்தமானாள்.

 

 

இருவருமாக கிளம்பி காரில் செல்ல கனத்த மௌனமே ஆட்சி செய்தது அங்கு. போகும் வழியில் காரை ஜஸ்ட் பார்ன்க்கு விட இருவரும் இறங்கிச் சென்றனர். குழந்தைக்கு ஒரு வயது என்பதால் கொஞ்சம் உடைகளை அவன் தேர்வு செய்ய அவள் குழந்தை விளையாட பொம்மைகளை தேர்வு செய்தாள்.

 

 

“நீ போய் கார்ல இரு, இங்க கூட்டமா இருக்கு. நான் பில் போட்டு எடுத்துட்டு வர்றேன் என்று யாழினியிடம் வண்டி சாவியை கொடுத்து அனுப்பினான். திரும்பி வந்தவன் காரின் பின் கதவை திறந்து வாங்கியவைகளை வைத்துவிட்டு முன்பக்கக் கதவை திறந்து ஏறி அமர்ந்து “போகலாமா?? என்று கேட்க யாழினியிடம் இருந்து பதிலேதும் வராமல் மெல்லிய விசும்பல் மட்டுமே வந்து கொண்டிருந்தது…..

Advertisement