Advertisement

அத்தியாயம் – 20

 

 

அனீஷின் பேச்சை கேட்டபின் சபரி மாறினானோ!! தன்னை மாற்றிக்கொண்டானோ!! அறியேன்!! யாழினி மாறினாள்!! தன்னை மாற்றிக் கொண்டாள்!!

 

 

இது பெண்களின் உணர்வு தன்னை புரிந்துகொள்ளாமல் மேலும் மேலும் காயப்படுத்தவோ வருத்தவோ செய்பவர்களிடம் ஒதுங்கி போவார்கள் என்பதை காட்டிலும் அவர்களை ஒதுக்கி போவார்கள் என்றே சொல்ல வேண்டும்.

 

 

யாழினி சபரியின் விஷயத்தில் அவன் பேசுவதை ஒதுக்கி அவனிடம் இருந்து ஒதுங்கிப் போனாள். மனம் வெறுத்துப்போய் சலிப்பு தோன்றும் போது மட்டுமே நிகழும் நிகழ்வு அது.

 

 

அவளின் மனம் பாலையை மாறிப்போனது சபரியின் செய்கையால். முதலில் அவளின் நடவடிக்கைகளை உணராதவன் உணர்ந்த பின்னே செய்வதறியாது திகைத்தான். வேண்டுமென்றே அவளை பேச வைக்க கோபமாய் பேசினாலும் சீண்டி பேசினாலும் பதிலில்லாது போன யாழினியின் மாற்றம் அவனை வெகுவாய் பாதித்தது.

 

அனீஷின் அறிவுரை இப்போது புரிந்ததாக இருந்தது, காலம் கடந்த புரிதல் என்பதை அவன் உணர்ந்தே இருந்தான். இனி எப்படி அவளை இயல்புக்கு கொண்டு வருவது என்று யோசித்தான். அவளின் இந்த ஒதுக்கம் நிச்சயம் மற்றவர் கண்களுக்கு தெரியவே தெரியாது.

 

 

ஏனெனில் அவனின் தேவையை கவனிப்பதில் அவள் எந்த குறையும் எப்போதும் வைத்தேயில்லை. அவன் கேள்விக்கு பதில் அளிக்காமலோ அவனிடம் பேசாமலோ எல்லாம் இல்லை.

 

 

சபரீஷால் நன்றாக உணர முடிந்தது அவளின் ஒதுக்கத்தை. யாரிடமும் சொன்னால் கூட இவனை தான் குற்றம் சொல்லுவார்கள் அவன் எண்ணம் தவறென்று.

 

 

ஒரு மனம் அவளிடம் சென்று கெஞ்ச வேண்டுமா என்று முரண்டு பிடிக்க மறு மனமோ தவறு உன் மீது தானே நீயாகத்தான் எல்லாமும் சரி செய்ய வேண்டும் என்று கூறியது.

 

 

அவன் மனதிற்குள்ளாக பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்க அனீஷ் மனது சரியில்லை வெளியூருக்கு செல்கிறேன் என்று கிளம்பிச் சென்றுவிட்டான். அவன் கிளம்பும்முன் அவன் அன்னை அவனிடம் “ஏன் அனீஷ் ஆராம்மாவை தேட நீ எந்த முயற்சியும் எடுக்கலையா?? என்றார்.

 

 

“அம்மா அவளா வரட்டும்மா?? நாமா போனா மட்டும் அவ வந்திடுவான்னு நினைக்கறீங்களா?? என்றான் பதில் கேள்வியாய்.

 

 

“அப்போ அவ இருக்கற இடம் உனக்கு தெரியுமா அனீஷ்?? என்கிட்டயாச்சும் சொல்லுப்பா நானாச்சும் போய் பார்க்கறேன். அவகிட்ட பேசி புரிய வைச்சு கூட்டிட்டு வர்றேன் என்றார் பாவமாய்.

 

 

“அம்மா ப்ளீஸ் இந்த விஷயத்தை அப்படியே விட்டுடுங்க. எனக்கில்லாத அக்கறையாம்மா, நான் பார்த்துக்கறேன் நீங்க கவலைப்படாம இருங்க என்றான்.

 

 

யாழினி அவர்கள் உரையாடலின் போது அருகேயிருந்தாலும் எந்த கருத்தும் அவள் கூறவில்லை என்பதை அனீஷ் கண்டுகொண்டிருந்தான். “ஏன்ம்மா யாழினி உனக்கு என்கிட்ட எந்த கேள்வியும் இல்லையாம்மா?? என்றான்.

 

 

“எனக்கென்ன மாமா கேள்வி இருக்க போகுது?? எதுவுமில்லை மாமா?? என்னை புரிஞ்சுக்காதவங்களை பற்றி நான் மட்டும் ஏன் மாமா கவலைப்படணும் என்றவளின் பதிலில் அவளின் காயம்பட்ட மனதின் வலியை உணர்ந்தான்.

 

 

“உன்னை புரிஞ்சதுனால கூட உன்கிட்ட சொல்லாம போயிருக்கலாமோ?? என்னவோ?? என்று சொல்லி நிறுத்தினான்.

 

 

“நான் இதைபத்தி எதுவும் பேச விரும்பலை மாமா. அவளோட விஷயத்துல நீங்க என்ன முடிவேடுக்கறீங்களோ எடுங்க. உங்களுக்கு மீறிய அக்கறை எங்க யாருக்கும் இருக்க போறதில்லை

 

 

“நீங்க பேசாம இருக்கறீங்கன்னா அதுக்கு ஒரு அர்த்தமிருக்கும்ன்னு நான் நினைக்கறேன். உங்களோட அன்பை புரிஞ்சு அவளா வருவா, உங்க மனசுப்படி எல்லாம் நடக்கும் மாமா என்றவள் தோழியின் மீது கோபமிருந்தாலும் அவளை விட்டுக்கொடுக்காமலேயே பேசினாள்.

 

 

ஊருக்கு சென்றிருந்த சுந்தர்ராஜ் திரும்பி வந்தபின்னே திலகவதி அவரை கூட்டிக்கொண்டு அவர்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டார். வீட்டில் தொடர்ந்து நடக்கும் பிரச்சனைகள் தீர குலதெய்வம் வழிக்காட்டும் என்று எண்ணி கணவருடன் கிளம்பிச் சென்றுவிட்டார் அவர்.

 

 

யாழினி தன்னினைவு கலைந்து நிகழ்காலத்திற்கு வந்தாள். மனது சரியில்லை என்று வெளியூருக்கு சென்ற அனீஷ் எப்போதாவது கோவைக்கு வந்து செல்வதோடு சரி.

 

 

குலதெய்வ வழிபாட்டிற்கென்று சென்ற மாமியாரும் மாமனாரும் கூட மனநிம்மதிக்காய் கோவில் கோவிலாக அவ்வப்போது சென்றுவிட வீட்டில் பெரும்பாலான நேரங்களில் யாழினிக்கு தனிமை வசமே.

 

 

யாழினி முன்பை விட இப்போது இன்னும் ஒதுக்கம் காட்டுவது சபரீஷுக்கு புரியாமலில்லை. இருவரின் இடைவெளியை எப்படி குறைப்பது என்பதை அறியாது திகைத்தவன் மீண்டும் மீண்டும் இழைத்த தவறு அவளை சீண்டி பேசி தன் புறம் அவள் கவனத்தை திரும்ப முனைந்ததே.

 

 

ஏனெனில் அதற்கு எந்த விதத்திலும் அவள் எதிர்ப்போ சலிப்போ என்று எந்த உணர்வையும் காட்டாததே காரணம். அவன் முயற்சி அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் போல் ஆனது.

 

இப்போதெல்லாம் சபரீஷின் பார்வை அவளையே சுற்றி சுற்றி வந்தது. இவள் மனம் திறந்து பேச மாட்டாளா என்று அவனை ஏங்க வைத்தது. அன்று மாலை வீட்டிற்கு வந்த சபரீஷ் அவளை பேச வைக்க முயற்சி செய்ய பலன் என்னமோ பூஜ்யம் தான். அவன் கேள்விக்கு ஒன்றிரண்டு வார்த்தைகளில் பதில் சொல்லி முடிப்பவளை அவன் என்ன தான் செய்ய முடியும்.

 

 

யாழினிக்குமே தெரிந்து தான் இருந்தது சபரீஷின் பார்வை தன்னை சுற்றியே இருக்கிறது என்பது. இருந்தும் மனம் முழுதாய் அவனை நம்ப மறுத்தது அவளுக்கு. இப்போதெல்லாம் அவன் சீண்டி பேசினாலும் முன் போல் அதில் கோபமோ வெறுப்போ கலந்திருப்பதாக அவளுக்கு தோன்றவில்லை.

 

 

எதையோ அவனிடத்தில் எதிர்பார்த்தது மனது, அவனை பாம்பென்றும் நினைக்க முடியவில்லை, பழுதென்றும் ஒதுக்க முடியவில்லை. மதில் மேல் பூனையாய் மனம் எந்த புறமும் செல்ல முடியாமல் தவித்தது.

 

 

ஆராதனா வீட்டை விட்டு சென்ற அன்று நடந்த நிகழ்வுகளே அவள் எண்ணத்தை ஆக்கிரமித்தது. என்ன முயன்றும் அன்றைய அவனின் குத்தல் பேச்சும் கோபமும் அவளால் மறக்க முடியாததாய் மன்னிக்க முடியாததாய் இருந்தது.

 

 

இரவு சமையலுக்கு தேவையானதை செய்து முடித்துவிட்டு அவள் சப்பாத்தி தேய்த்துக் கொண்டிருந்த வேளை சபரீஷ் உள்ளே வந்தான். இத்தனை நாளில் எத்தனையோ முறை அவன் சமையலறைக்கு வந்திருக்கிறான் தான். ஏனோ இன்றைய அவன் வரவு அவளுக்கு மனதில் படபடப்பை உண்டு செய்தது.

 

 

‘கடவுளே இப்போ என்ன திட்டப் போறானோ என்ற எண்ணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள் என்ன வேண்டும் என்பது போல். அவனோ பதிலேதும் சொல்லாமல் அவளை நெருங்கி வந்தான்.

 

 

இதயம் பலமாக முரசு கொட்டுவது போல் அடித்துக் கொண்டது. முயன்று தன்னை இயல்பாகக் காட்டிக் கொண்டு “என்ன வேணும்?? என்றாள். அதற்கு அவன் சொன்ன பதிலில் அவளுக்கு ச்சே என்று ஆனது.

 

____________________

 

 

ஆராதனாவிற்கு ஏனோ வீட்டு ஞாபகமாகவே இருந்தது. அவளுடன் மது, மல்லிகா, நித்தி உடனிருந்தாலும் மனம் என்னவோ அவள் பிறந்த வீட்டினரையும் மணாளனையுமே சுற்றி சுற்றி வந்தது. அவள் கிளம்பி வந்த அன்றைய நாள் அவள் கண்முன் நிழலாட ஆரம்பித்தது.

ரயிலில் இருந்து இறங்கியவள் கையில் வைத்திருந்த ராகினியின் வீட்டு முகவரியை சரிபார்த்துக் கொண்டு அருகில் இருந்த காயின் பூத்திற்கு சென்று ராகினியின் எண்ணை அழுத்தினாள்.

 

 

கிளம்பு முன்னேயே அவளுக்கு ஒரு போன் செய்து சொல்லியிருக்கலாமோ என்று நூறாவது முறையாக தோன்றிய எண்ணத்தை ஒதுக்கி போனிற்கு செவிமடுத்தாள்.

 

 

முழு அழைப்பும் சென்று எடுக்கப்படாமலே அது வாய்ஸ் மெசேஜ்க்கு சென்றது. மீண்டும் இரு முறை அழைத்தும் அழைப்பு முன்பை போலவே எடுக்கப்படாமலே போனது.

 

 

சரி இன்னொரு முறை முயற்சிப்போம் என்று எண்ணியவள் மீண்டும் அழைக்க நீண்ட அழைப்பிற்கு பின் அதனை ராகினி எடுத்தாள். குரலில் ஏதோவொரு அவசரம் தோன்றியது போல் இருந்தது ஆராதனாவிற்கு.

 

 

“ஹலோ யாருங்க?? என்ற குரலுக்கு “ராகினி நா… நான் தான் ஆராதனா பேசறேன். எப்படி இருக்க??

 

 

“சொல்லு ஆராதனா நான் நல்லா இருக்கேன். எதுவும் முக்கியமான விஷயமா?? என்றாள் குரலில் அவசரத்தை தேக்கி.

 

 

“நான் இப்போ சென்னையில தான் இருக்கேன் ராகினி. உன்… உன்னை பார்க்க தான் வந்தேன் என்றவளின் குரலில் இப்போது தயக்கம் வந்தமர்ந்தது.

 

 

“நிஜமாவா ஆராதனா சொல்ற, நான் இப்போ அவரோட சொந்த ஊருக்கு வந்திருக்கோம். என்னோட மாமனாருக்கு உடம்புக்கு முடியலை, இப்போவோ அப்பவோன்னு இருக்கார்

 

 

“உன்னை வந்து வீட்டுக்கு அழைச்சுட்டு போக முடியாம போய்டுச்சு சாரி ஆராதனா. நீயும் அண்ணாவும் வந்திருக்கீங்களா?? என்றாள் அவள்.

 

 

“இல்லை ராகினி நான் மட்டும் தான் வந்திருக்கேன். உனக்கு நெறைய டென்ஷன் இருக்கும், நான் வேற உன்னை தொந்திரவு பண்றேன். நீ போய் அங்க எல்லாரும் கவனி, நான் வைக்குறேன் என்று வைக்க போனாள்.

 

 

“ஒரு நிமிஷம் என்னாச்சு ஆராதனா?? நீ மட்டும் ஏன் தனியா வந்திருக்க, எதுவும் பிரச்சனையா?? அச்சோ நான் வேற அங்க இல்லாம போயிட்டேனே!! உனக்கு சென்னையில வேற யாரும் தெரிஞ்சவங்க இருக்காங்களா?? என்று மேலும் விசாரித்தாள்.

 

 

“ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லும் போதே குரல் உள்ளே சென்றது “நீ கவலைப்படாதே ராகினி நான் பார்த்துக்கறேன். நீ உன் வீட்டு ஆளுங்களை முதல்ல பாரும்மா என்றுவிட்டு அவள் மேலே தொடரும் முன் போனை வைத்துவிட்டாள்.

 

 

இப்போது அவளுக்கு கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. மனதின் எண்ணங்களுக்கும் சற்று முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்று இப்போது தோன்றியது.

 

 

கிளம்புமுன் அவளுக்கு போன் செய்திருந்தாலாவது வேறு ஏதாவது செய்திருக்கலாம் இப்போதோ என்ன செய்வது ஏது செய்வது என்று விழி பிதுங்கியது அவளுக்கு.

 

 

வயிறு வேறு பசிக்க ஆரம்பித்திருந்தது. காதெல்லாம் அடைப்பது போல் இருந்தது. பசி சற்று மட்டுப்பட்டால் தான் மேலே யோசிக்க முடியும் என்று தோன்ற அருகில் இருந்த கடையில் பாலும் பிஸ்கெட்டும் வாங்கிக் கொண்டு அங்கிருந்த பெஞ்ச் ஒன்றில் அமர்ந்தாள்.

 

 

சூடான பால் உள்ளே இறங்கவும் தான் மூளை தன் வேலையை செய்ய ஆரம்பித்தது. அடுத்து என்ன செய்யலாம் என்ற எண்ணத்திற்கு அவளுக்கு கிடைத்த பதில் சுனீஷ்.

 

 

வேறு வழியே இல்லை, தன்னை நன்கு புரிந்தவன் தன்னை போலவே யோசிப்பவனும் கூட என்ற எண்ணம் மேலோங்க தாமதியாது மீண்டும் காயின் பூத்துக்கு சென்றவள் சுனீஷின் எண்களை அழுத்தினாள்.

 

 

அவள் அதிகம் காத்திருக்க தேவையில்லாமல் முதல் அழைப்பிலேயே எடுத்தவன் “ஹலோ என்றான்.

 

 

“நான் ஆராதனா பேசறேன் என்றாள்.

 

 

“அண்ணி… நீங்… நீங்க இப்போ சென்னையிலா இருக்கீங்க?? சென்னை நம்பர் வந்ததும் என்னோட பிரண்ட்ஸ் யாராச்சும்ன்னு நினைச்சேன். நீங்க எப்போ சென்னை போனீங்க??

 

 

“சுனீஷ் நான் வீட்டை விட்டு வந்துட்டேன் என்றவள் சுருக்கமாய் விபரமுரைத்தாள்.

 

 

“அண்ணி நீங்க செஞ்சது சரின்னு நினைக்கறீங்களா?? என்று அவன் கூற அவளோ “தப்புன்னு நான் நினைக்கலை சுனீஷ்

 

 

“எனக்கு உதவி பண்ண உங்களுக்கு இஷ்டமில்லைன்னா விட்டுடுங்க, நான் போனை வைக்கறேன்

 

 

“அண்ணி நான் தப்பா எதுவும் கேட்டிருந்தா மன்னிச்சுடுங்க. நீங்க பண்ணது தப்புன்னு நான் சொல்ல வரலை. நீங்க அவசரப்பட்டிருக்க வேண்டாமோன்னு நினைச்சேன். நீங்க இப்போ இருக்கற நிலைமையில இதெல்லாம் ஏன்னு தோணிச்சு என்றவன் கூறியதை அவள் முழுதாய் கவனித்திருக்கலாம்.

 

 

“தம்பி யோசிச்சுட்டே இருந்தா எதுக்கும் தீர்வு கிடைக்காது. மாற்றங்களுக்காக சில அதிரடிகள் செய்யறதுல தப்பேயில்லை

 

 

“சரி விடுங்க அண்ணி, நீங்க இப்போ எங்க இருக்கீங்க?? என்றான்.

 

 

“தம்பி நீங்க எனக்கு… என்று அவள் முடிக்கும்முன் “கண்டிப்பா உங்களை பற்றி நான் யார்க்கிட்டயும் சொல்ல மாட்டேன் அண்ணி போதுமா?? நீங்களா சொல்ற வரைக்கும்

 

 

“தேங்க்ஸ் தம்பி என்றவள் “நான் இப்போ சென்ட்ரல் ஸ்டேஷன்ல தான் இருக்கேன். ஒரு பூத்ல இருந்து தான் போன் பேசறேன், என்கிட்ட போன் இருக்கு ஆனா சிம் இல்லை. என்ன பண்ணலாம்ன்னு சொல்லுங்க

 

 

“நான் என்னோட பிரண்டு ஒருத்தரை அனுப்பறேன் அண்ணி, அவ இன்னும் ஒரு அரைமணி நேரத்துல உங்களை வந்து பார்ப்பா என்றான்.

 

 

“என்கிட்ட தான் போன் இல்லையே??

 

 

“நான் உங்க போட்டோவை அவளுக்கு வாட்ஸ்அப் பண்ணிடுறேன் அண்ணி. நீங்க கவலைப்படாதீங்க, அவன் வந்து எனக்கு போன் பண்ணி உங்ககிட்ட பேச வைச்சுட்டு தான் கூட்டிட்டு போவா?? நீங்க நம்பி அவ கூட போகலாம், ரொம்ப நல்ல பொண்ணு. சொல்ல மறந்துட்டேன் அண்ணி அவ பேரு நித்யா

 

 

சொன்னது போலவே அவன் சென்னையில் இருக்கும் போது அவன் உடன் பணிபுரிந்த தோழி நித்யாவிற்கு அழைத்து விபரமுரைத்தவன் ஆராதனாவின் புகைப்படத்தை தோழிக்கு அனுப்பி வைத்தான்.

 

 

நித்யா தாய் தந்தையை சிறுவயதிலேயே இழந்திருந்தவள் சொந்தங்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் ஹாஸ்டலில் தனித்து வளர்ந்து படித்து நல்ல நிறுவனத்தில் வேலை பார்ப்பவள். இப்போது தனியே ஒரு பிளாட் எடுத்து தங்கியிருக்கிறாள்.

 

 

சுனீஷ் போன் செய்ததுமே தன்னுடையை இன்னோவா காரை எடுத்துக் கொண்டு விரைவாக ரயில் நிலையத்திற்கு செலுத்தினாள். ஆராதனாவை ஏற்றிக்கொண்டு இதோ வீட்டிற்கும் வந்து சேர்ந்து விட்டாள்.

 

 

போனிலேயே சுனீஷ் அரைகுறையாய் விபரமுரைத்திருக்க அவள் ஆராதனாவை பற்றி அதிகம் கேட்காமல் அவளின் தேவைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.

 

 

வழியிலேயே வாங்கி வந்திருந்த உணவை கட்டாயப்படுத்தி அருந்தச் செய்தாள். சாப்பிட்டு முடித்ததும் தான் தெம்பு வந்தது போல் ஆராதனா குற்றவுணர்வுடன் நித்யாவை நோக்கினாள்.

 

 

“நான் உங்களுக்கு தொந்திரவா இருக்கேன், மன்னிச்சுடுங்க. நான் சீக்கிரம் வேற இடம் போய்டறேன் என்றாள்.

 

 

“அண்ணி என்ன பேச்சு இதெல்லாம்?? சுனீஷுக்கு நீங்க அண்ணின்னா எனக்கும் அப்படி தான். நீங்க எனக்கு தொந்திரவா நான் தான் அண்ணி உங்களுக்கு தொந்திரவு. ஏதோ நீங்க பேசாம இருக்கீங்களேன்னு தான் அமைதியா வந்தேன்

 

 

“மத்தப்படி நான் ரொம்ப வாயாடி அண்ணி. என் பேரு நித்யா இதை அந்த மஞ்சமாக்கான் சுனீஷ் சொல்லியிருப்பான் நினைக்கறேன். எனக்குன்னு யாருமில்லை, நான் தனியா இங்க வீடு எடுத்து இருக்கேன். இதை கண்டிப்பா அந்த பக்கி சொல்லியிருக்காது

 

 

“ஒரு எம்என்சியில வேலை பாக்குறேன், இதான் என்னோட STD அண்ணி என்று படபடவென பொரிந்தவளை ஆராதனாவிற்கும் பிடித்து தான் போனது. அன்றைய பொழுது வேகமாக கழிந்துவிட அதிகாலையிலேயே வந்து சேர்ந்தான் சுனீஷ்.

 

ஆராதனா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை, வந்தவன் சும்மாயில்லாமல் “அப்புறம் அண்ணி நீங்க என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?? என்று ஆரம்பித்தான்.

 

 

“நான் தான் நேத்தே சொல்லிட்டேனே தம்பி. ஆனா நான் இந்த ஊருல இருக்க விரும்பலை வேற… வேற ஊருக்கு போகலாம்ன்னு இருக்கேன். என்னோட பிரண்டு ஒருத்தி ஹைதராபாத்ல இருக்கா?? அங்க போய் இருக்கலாம்ன்னு நினைக்கிறேன்

 

 

“அண்ணி நான் ஒண்ணு சொன்னா கேட்பீங்களா??

 

 

“ஊருக்கு போறது தவிர எதுவானாலும் சொல்லுங்க என்று பதிலிறுத்தாள் அவள்.

 

 

“உங்களை நான் அப்படி சொல்ல மாட்டேன் அண்ணி. என்னை நீங்க நம்பலாம் என்றவன் “நீங்க அந்த பிரண்டு இந்த பிரண்டுன்னு எதுக்கு அண்ணி ஒரு ஒரு வீடா போகணும். நித்யா கூடவே நீங்க இருக்கலாமே, அவ உங்களை நல்லா பார்த்துப்பா அண்ணி

 

 

“வேணாம் தம்பி, இந்த ஊரு வேண்டாம். இங்க என்னோட சொந்தக்காரங்க நெறைய பேரு இருக்காங்க. யாராச்சும் பார்த்தா எங்க வீட்டுக்கு விஷயம் போகும், அதுனால யோசிக்கறேன்

 

 

“நான் முதல்லயே இங்க கொஞ்ச நாள் இருந்திட்டு ஹைதராபாத் போறதா தான் இருந்தேன். ராகினி வீட்டில இப்படியாகிட்டதுனால தான் உங்களை கூப்பிட்டேன்

 

 

“இல்லைன்னா நீங்க என்னையும் காண்டக்ட் பண்ணியிருக்க மாட்டீங்க. என்னை உங்கள்ள ஒருத்தனா நீங்க நினைக்கவே இல்லை அப்படி தானே அண்ணி என்றான் குரலில் லேசான வருத்தம் தோய்த்து.

 

 

“தப்பா எடுத்துக்காதீங்க தம்பி நான் அப்படி எல்லாம் எதுவும் நினைக்கவேயில்லை. ஒருவேளை உங்கண்ணன் என்னை பத்தி உங்ககிட்டையும் விசாரிப்பாரோன்னு தான் நான் முதல்ல உங்களை கூப்பிடலை என்றாள்.

 

 

“சரி அண்ணி இன்னைக்கு ஈவ்னிங்குள்ள என்ன பண்ணலாம்ன்னு நான் சொல்றேன் என்றவன் வெளியில் கிளம்பிச் சென்றுவிட்டான். மாலை வீட்டுக்கு வந்தவன் ஒரு முடிவுடனே வந்து சேர்ந்தான். ஆனால் அவனின் முடிவிற்கு தான் ஆராதனா உடனே ஒத்துக்கொள்ளவில்லை.

 

 

“அண்ணி ப்ளீஸ் நான் சொல்றதை கேளுங்க. இது தான் சரி அண்ணி. நீங்க இப்போ இருக்கற நிலைக்கு உங்களுக்கு ஒரு பெண் துணை தேவை. நான் நித்யாவை சொல்லலை அண்ணி, ஒரு பெரியவங்க உங்களுக்கு வேணும்

 

 

“நா… நான் மதுவையும் மல்லிகா அக்காவையும் உங்களுக்கு துணையா கூட்டிட்டு வர்றேன். இங்க இந்த ஊருல இல்லை அண்ணி. என்னோட பிரண்டு வீடு மங்களூர்ல இருக்கு, வீடு இப்போதைக்கு சும்மா தான் இருக்கு

 

 

“நீங்க மூணு பேருமே அங்க போய்டுங்க. நான் நித்யாவையும் உங்களோட அனுப்பி வைக்குறேன் என்று அவன் சொன்னதும் ஆராதனா அதை ஒப்புக்கொள்ளவேயில்லை.

 

 

தேவையில்லாமல் தன்னால் எல்லாருக்கும் சங்கடம் என்று ஏதேதோ காரணங்களை சொல்லி மறுக்க சுனீஷ் தன் அண்ணன்களின் பிடிவாதத்தை கொஞ்சமேனும் கொண்டவன் தானே, அவன் பிடித்த பிடியில் ஆராதனா ஒத்துக்கொள்ள அடுத்த வந்த பத்து நாளில் அவர்கள் மங்களூருக்கு பயணமானார்கள்.

 

 

நித்யாவின் கம்பனியின் கிளையொன்று மங்களூரில் இருக்க அவள் மாற்றல் விண்ணப்பித்து அடுத்த பத்து நாளில் அவர்களுடன் சென்று சேர்ந்துக் கொண்டாள். தன் நினைவில் இருந்து கலைந்த ஆராதனா இன்னமும் தன்னை தேடி வராத கணவனை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

 

‘தன்னை ஏன் அவன் இன்னமும் தேடவேயில்லை என்று எண்ணியவள் அவன் தேடக்கூடாது என்று தானே சொல்லாமல் கொள்ளாமல் வந்தாள் என்பதை மறந்து அவனை நிந்தித்து கொண்டிருந்தாள்.

 

 

மறுபுறமோ ஒரு வேளை என்னை தேடி தேடி ஓய்ந்து போய்விட்டாரோ என்றும் கூட எண்ணம் தோன்றியது. தினமும் வீட்டிற்கு வரும் தமிழ் தினசரிகள் ஒன்றுவிடாமல் புரட்டியவள் தன்னை தேடி எதுவும் பதிவு வந்திருக்கிறதா என்று ஒரு நப்பாசை அவளுக்கு.

 

 

அவ்வப்போது சுனீஷிடம் விபரம் கேட்டறிந்தாலும் ஏதோவொரு எண்ணம் தன்னவன் தன்னை தேடுவான் என்று. சுனீஷிடம் கேட்டறிந்தவரையில் அனீஷ் தன்னை பற்றி எந்த முயற்சியும் எடுக்காதது தெரிந்தாலும் அவனை பற்றி முழுதாய் அறிந்தவளால் கணவன் தான் எப்படியோ போகட்டும் என்று விடமாட்டான் என்றே மனதின் ஓரம் தோன்றிக் கொண்டே இருந்தது.

 

____________________

 

யாழினி கலக்கத்துடனே அவர்கள் அறையை எட்டிப்பார்த்தாள். உள்ளே சபரீஷ் அவன் மடிக்கணினி சகிதம் அமர்ந்திருப்பது தெரிந்தது. எப்போது தான் தூங்குவானோ என்று எண்ணிக் கொண்டு மீண்டும் சமையலறைக்கு சென்று உருட்ட ஆரம்பித்தாள்.

 

 

கண்முன் சற்று முன்பு நடந்தவை நிழலாடியது. அவன் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் தவிடு பொடியானது அந்த நொடி தான். சமையலறைக்கு வந்தவனிடம் யாழினி “என்ன வேணும் என்று கேட்டிருக்க அவனோ நிதானமாய் “நீ தான்!! என்று கூறவுமே அவளுக்கு ச்சே என்றானது.

 

 

என்னடா இவன் சற்றேனும் மாறியிருக்கிறான் என்று மனதின் ஓரத்தில் லேசாய் தோன்ற ஆரம்பித்த அந்த வேளையில் நீ தான் வேண்டும் என்று அவன் கூறியது அவள் உள்ளத்தை அறுத்தது.

 

 

அவனுக்கு என் மனதை பற்றி ஒன்றுமேயில்லையா?? இந்த உடல் மட்டும் தான் அவனுக்கு வேண்டுமா?? என்று நினைக்க நினைக்க அருவருப்பாய் இருந்தது அவளுக்கு.

 

 

நீ தான் என்று சொன்னது பத்தாது என்று அவளை பின்னிருந்து அணைத்துவிட்டு வேறு சென்றான் அவன். இவள் எண்ணம் இப்படியிருக்க இவளின் மணாளனோ மனைவியை இன்று எப்படியும் சமாதானப்படுத்தி விடலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தான்.

 

 

தான் அவளை நெருங்கும் போது தன்னை அவள் ஒதுக்காததே அவனுக்கு பெரும் நிம்மதியாய் தோன்றியது. அதையே சாக்காக கொண்டு இன்று அவர்கள் ஊடலுக்கு ஒரு முடிவு கட்ட எண்ணினான்.

 

 

இரவு உணவை முடித்துக்கொண்டு அவர்கள் அறைக்கு சென்றவன் அவள் எப்போதடா வருவாள் என்று மடிக்கணினியுடன் அமர்ந்திருந்தான்.இன்று எந்த தடங்கலும் இன்றி அவளுடன் பேசி சுமுகமாய் ஆக்கிட வேண்டும் என்ற அவன் எண்ணத்தில் மண் விழப்போவது அறியாமல் கனாக்கண்டான்.

 

 

இதற்கு மேல் தாமதிக்க முடியாது என்று எண்ணிய யாழினி ஒரு முடிவுடனே அவர்கள் அறைக்குள் நுழைந்தாள். அவனை ஏனென்று கூட ஏறிட்டு பார்க்காதவள் வந்ததும் சற்றும் தாமதியாமல் கட்டிலின் மறுமுனையில் சென்று படுத்தவள் அவனுக்கு முதுகுக்காட்டிக் கொண்டு உறங்க முற்பட்டாள்.

 

 

ஐந்து நிமிடம் அமைதியாய் அவளையே பார்த்திருந்தவன் பொறுக்க முடியாமல் அவள் தோளைத் தொட்டான். திரும்பி பார்த்தவளின் பார்வையில் நிச்சயம் அன்பில்லை என்பது தெரிந்தாலும் அதில் விருப்புமில்லை என்பது அவனுக்கு பிடித்தமானதாய் இல்லை.

 

 

சட்டென்று எழுந்து அமர்ந்தவள் என்னவென்பது போல் அவனை பார்த்தாள். பதிலேதும் சொல்லாமல் அவளையே இமைக்காது பார்த்தான் சபரீஷ். அதில் எரிச்சல் கொண்டவள் “என்ன வேணும் இப்போ உங்களுக்கு?? என்றாள் எரிச்சல் மண்டிய குரலில்.

 

 

“நான் தான் அப்போவே சொல்லிட்டேனே நீ தான் வேணும்ன்னு என்றான் அவன். யாழினியோ பொறுமை முற்றிலும் துறந்தவளாய் “அதுக்காக தானே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. என்னைக்கு என்னோட சம்மதத்தை நீங்க கேட்டு இருக்கீங்க

 

 

“இப்போ புதுசா கேட்குறதுக்கு, எனக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கறதே உங்களுக்கு புரியாம போய்டுச்சு. நானும் நீங்க இன்னைக்கு புரிஞ்சுக்குவீங்க நாளைக்கு புரிஞ்சுக்குவீங்க நினைச்சு நினைச்சு என் மனசு புண்ணானது தான் மிச்சம்

 

 

“உங்களுக்கு திட்டுறதுக்கு நான் வேணும், குறை சொல்றதுக்கு நான் வேணும். இப்போ உங்க தேவைக்கு நான் வேணும் அவ்வளவு தானே. என்னோட உணர்வுகள் எப்பவோ செத்து போச்சு

 

 

“வெறும் பிணமா தான் இருக்கேன், என்னை நீங்க கேட்கணும்ன்னு அவசியமே இல்லை. தாராளமா எடுத்துக்கோங்க என்று மூச்சுவிடாமல் அவள் பேசி முடியவும் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் அவள் கணவன்….

 

 

Advertisement