Advertisement

அத்தியாயம் – 19

 

 

ராஜீவனுக்கு ஆராதனாவின் மேல் கோபம் கோபமாக வந்தது. ‘இவளுக்கு கோபம் வந்தால் இப்படி தான் போவாளா?? யாரை பற்றியும் இவளுக்கு கவலையே கிடையாதா?? என்ற கேள்வியும் ஆயாசமும் வந்தது அவனுக்கு.

 

 

ஆராதனாவின் மேல் எந்தளவுக்கு கோபமிருந்ததோ அதே அளவு கோபம் அவனுக்கு சபரீஷின் மீதும் இருந்தது. ஆராதனா செய்ததற்கு யாழினி என்ன செய்வாள். சபரீஷ் அவள் மீது எப்படி கோபம் காட்டலாம் என்ற கனல் அவன் நெஞ்சில் இருந்துக்கொண்டே இருந்தது.

 

 

இதுவே வேறு சமயமாய் இருந்திருந்தால் சபரீஷை அவன் உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பான். இந்த ஆராதனா செய்து வைத்துவிட்டு போன வேலைக்கு அவனால் சபரீஷிடம் எதுவும் கேட்க முடியாமல் போனது.

 

 

பதிலுக்கு அவன் கேள்வி கேட்டால் தன் முகத்தை எங்கே போய் வைத்துக் கொள்வது என்ற எண்ணம் ஒருபுறம் எழ மறுபுறமோ இதில் நம் மீது தவறு எங்கிருந்து வந்தது. அனீஷுக்கு பதில் சொல்லலாம், இந்த சபரீஷுக்கு ஏன் பதில் சொல்ல வேண்டும் என்று மனம் முரண்டு பிடித்தது. ராஜீவன் சபரீஷுக்கு சற்றும் சளைத்தவன் அல்ல. அவன் தணிந்து போவது ஆராதனா யாழினிக்காக மட்டுமே.

 

சபரீஷ் அவன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடைபயின்று கொண்டிருந்தவன் போல் இருந்தான். முகத்தில் ஏக கோபம் குடிக்கொண்டிருந்தது. யாழினி வேறு அறைக்கு வராமல் எப்போதும் போல் அவனுக்கு போக்கு காட்டிக் கொண்டிருந்தாள்.

 

 

ராஜீவனை போன்றே சபரீஷுக்கும் அவன் மீது கோபமும் எரிச்சலும் இருந்தது. இதில் இந்த யாழினி வேறு அவனை விழுந்து விழுந்து உபசரிக்கிறாள் என்ற கடுப்பு வேறு அவனுக்கு.

 

 

யாழினியை கூப்பிட்டு எதுவும் பேசலாம் என்றால் அவளோ வாயிலில் நின்றே பேசிவிட்டு செல்கிறாள், என்ன செய்வது அவளை என்று பல்லைக் கடித்துக் கொண்டான். தன்னால் தான் இதெல்லாம் என்ற எண்ணம் மட்டும் அவனுக்கு வரவேயில்லை. அப்படி நினைத்திருந்தால் தான் மனையாளை கஷ்டப்படுத்தியிருக்க மாட்டானே!!!

 

 

இவன் யோசனை இப்படி சென்றுக் கொண்டிருக்க ஆராதனாவின் மணாளன் சபரீஷை அழைத்தான். “ஹலோ சொல்லு அனீஷ் என்றவாறே போனை காதுக்கு கொடுத்தான் சபரீஷ்.

 

 

“சபரி நான் சென்னை வந்திட்டேன், இன்னும் கொஞ்ச நேரத்துல கோயம்புத்தூர் ப்ளைட் ஏற போறேன். எப்படியும் ஒரு எட்டு மணிக்கெல்லாம் வந்திடுவேன் என்றவன் ஆராதனா பற்றி வேறு தகவல் எதுவும் கிடைத்ததா என்று சபரீஷிடம் கேட்டுவிட்டு வைத்தான்.

 

 

சபரீஷுக்கோ ஐயோவென்றிருந்தது எந்த முகத்தை வைத்துக்கொண்டு அனீஷை சமாதானப்படுத்துவது என்ற கவலை மேலோங்கியது அவனுக்கு. அனீஷ் எந்தளவிற்கு அண்ணியின் மீது அக்கறையாய், காதலாய்  இருக்கிறான் என்பதை அவனறிவான்.

 

 

அதனாலேயே அவன் யாழினியை முதலில் சந்தேகப்பட்டான். யாழினியின் பதட்டம் அவளுக்கு விஷயம் தெரியாது என்று பறைசாற்றினாலும் இப்போதும் கூட மனதின் ஒரு ஓரத்தில் இவளுக்கு தெரிந்திருக்குமா என்ற நப்பாசை அவனுக்கு இல்லாமலில்லை.

 

 

அவன் கோபம் தான் அவனுக்கு சத்ரு என்பதை உணர்ந்திருந்தாலும் கோபம் வரும் நேரத்தில் அவன் என்ன செய்கிறான் என்பதை அவனேயறியான்.அனீஷை அழைக்க ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே ஏர்போர்ட்டுக்கு கிளம்பினான் அவன்.

 

கிளம்புமுன் யாழினியிடம் சொல்லலாம் என்றால் ஏதோ இந்த ராஜீவன் தான் அவளுக்கு பாடிகார்டு போன்று அவளை மறைத்துக்கொண்டு முன்னின்றிருந்தான்.

 

 

அதுவே அவனுக்கு பெரும் எரிச்சலாக இருந்தது. வேறு வழியில்லாமல் அவன் அன்னையிடம் சொல்லிக்கொண்டு மற்ற இருவரிடமும் ஒரு தலையசைப்புடன் கிளம்பினான்.

 

 

சபரீஷ் சென்று சேர்ந்து சரியாக ஒரு மணி நேரத்தில் அவன் உடைமைகள் சகிதம் வந்து சேர்ந்தான் அனீஷ். இருவருமாக காரில் ஏறி அமர சபரீஷ் மெதுவாக காரை செலுத்த ஆரம்பித்தான்.

 

 

சில நிமிடங்கள் மௌனமாகவே கழிய சபரியால் அனீஷின் நிலையை சரியாக கணிக்க முடியவில்லை. ஒரு சிறு செருமலுடன் “அனீஷ் இப்போ என்ன செய்யலாம்?? நாம போலீஸ்ல வேணா கம்பிளைன்ட் கொடுக்கலாமா?? என்று ஆரம்பித்தான்.

 

 

தம்பியை திரும்பி விநோதமாக பார்த்தான் அவன். “அதுக்கு இப்போ என்ன அவசியம்?? என்றவனின் குரலில் இருந்தது என்ன என்பதை இன்னமும் சரிவர பிரித்தறிய தெரியாமல் விழித்தான் சபரீஷ்.

 

 

“அனீஷ் அண்ணியை நினைச்சு நீ கவலைப்படலையா?? அவங்க திரும்பி வரணும்ன்னு நினைக்கலையா?? எனக்கு தெரியும் அவங்க விட்டுட்டு போனது உனக்கு வருத்தமாயிருக்கும்ன்னு அப்புறம் ஏன் இப்படி பேசுற??

 

 

“இருக்கலாம் சபரி அது தான் உண்மையும் கூட, ஆனா இதுக்காக நாம போலீஸ்க்கு போகணுமா என்ன?? அதுவும் இல்லாம அவ ஒண்ணும் காணாம போகலை. அவளா தான் போயிருக்கா?? எவ்வளவு கேள்வி வரும்ன்னு யோசிச்சியா??

 

 

“இது நமக்கு ஒரு பெரிய விஷயமே இல்லையே அனீஷ். கமிஷனர் உன்னோட பேஷன்ட் தானே அவர்க்கிட்ட ரகசியமா விசாரிக்க சொல்லலாமே??

 

 

“ப்ச்சு… என்ன தேவைக்கு?? என்றவன் அதற்கு மேல் பேச விரும்பாதவனாக தலையை திருப்பிக் கொண்டான்.

 

 

“எனக்கு புரியலை அனீஷ்?? அப்போ என்ன செய்யலாம்ன்னு சொல்ற?? அவங்க வேற இப்போ மாசமா இருக்காங்க. எப்படி வேணா அவங்க போகட்டும்ன்னு நாம விட முடியுமா?? என்றான் விடாமல். அனீஷோ பதிலேதும் சொல்லாமல் இருக்கையை பின்னால் சாய்த்துக் கொண்டு மெல்ல சாய்ந்தவாறே படுத்துக் கொண்டான்.

 

 

என்ன நினைத்தானோ எழுந்து அமர்ந்தவன் “இனிமே நாம இதை பத்தி பேச வேண்டாம் சபரி. போனவளுக்கு வர்றதுக்கு வழி தெரியும். இதுக்கு மேல என்னை எதும் கேட்காதே?? என்று மட்டும் சொல்லிவிட்டு அவன் படுத்துக் கொண்டான்.

 

 

சபரியும் மேற்கொண்டு எதுவும் பேச முயற்சிக்கவில்லை. ஏதோ சொல்ல வாயெடுத்தவன் சொல்லாமலே விடுத்து வண்டியை ஓட்ட ஆரம்பித்தான். ஒருவழியாக அவர்கள் வீட்டை வந்தடைந்தனர்.

 

 

சபரி அனீஷின் உடைமைகளை எடுத்துக்கொண்டு இறங்க அனீஷுயும் அதற்குள் இறங்கியிருந்தான். அனீஷிற்கு ராஜீவன் வந்திருப்பது தெரியாது. சபரி சொல்ல நினைத்திருக்க அனீஷ் பேச வேண்டாம் என்று சொன்னதில் சொல்லாமல் விடுத்திருந்தான்.

 

 

வீட்டிற்கு உள்ளே செல்லவும் ராஜீவனை கண்டு திகைத்தான் அனீஷ், திரும்பி தம்பியை ஒரு பார்வை பார்க்க “சாரி அனீஷ் ராஜீவ் வந்தது சொல்லணும் நினைச்சேன். நீ எதும் பேசாதன்னு சொல்லிட்டு படுத்திட்ட அதான் சொல்லலை என்றான்.

 

 

யார் கேட்டாலும் என்ன பதில் வேண்டுமானாலும் சொல்ல தயாராக இருந்த அனீஷால் ராஜீவனை கண்டதும் எதுவும் பேச முடியாது போயிற்று. முதல் நாள் தான் அவ்வளவு சத்தமாக பேசியிருக்கிறோம்.

 

 

இப்போதோ அவன் தங்கையை தொலைத்து நிற்கிறோமே, உன்னால் தான் என்று அவன் சொன்னால் தன்னால் மறுக்கவா முடியும் என்று எண்ணி கலங்கி போனவன் அவன் முகம் பாராது ஒரு சிறு தலையைசைப்புடன் சென்றான்.

 

 

ராஜீவிற்கு அவன் தயக்கம் புரிந்ததோ என்னவோ அவன் “அனீஷ் ஒண்ணும் அவசரமில்லை, நீங்க இப்போ தான் வந்திருக்கீங்க. ரொம்ப டயர்டா இருப்பீங்க போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க, அப்புறம் பேசிக்கலாம் என்று கூற அனீஷ் மற்றவனை நன்றியுடன் பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

 

 

அவன் ரெப்ரெஷ் செய்துக்கொண்டு குளியலறையில் இருந்து வெளியில் வந்து கட்டிலின் மீது யோசனையாய் அமர்ந்தான். இதற்கு மேல் தாமதிக்க முடியாது எப்படியும் ராஜீவனின் கேள்விக்கு பதில் சொல்லித் தான் ஆகவேண்டும் என்று எண்ணியவன் அதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டான்.

 

 

அவன் அறைவாயிலில் வந்து நின்றவன் ராஜீவனை உள்ளே வருமாறு அழைக்க மற்றவனும் மறுப்பேதும் சொல்லாமல் உள்ளே சென்றான். அவன் அன்னை உள்ளே வந்து இருவரையும் உணவருந்த சொல்ல அனீஷ் பசிக்கவில்லை என்று சொல்லி மறுக்க ராஜீவன் அவனை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றான்.

 

 

சாப்பிட்டு இருவரும் அறைக்குள் நுழைய அனீஷிற்கு நேரெதிர் அமர்ந்திருந்தான் ராஜீவன். இருவருக்குமே எப்படி ஆரம்பிப்பது என்ன பேசுவது என்ற தயக்கம் இருக்க சில நொடிகள் மௌனமாகவே கழிந்தது.

 

 

ராஜீவனே மௌனத்தை கலைத்து பேசவாரம்பித்தான். “அனீஷ் உங்களுக்குள்ள என்ன நடந்திச்சுன்னு எனக்கு தெரிய தேவையில்லை. என்னால பிரச்சனை எதுவும் பெரிசாகிட கூடாதேன்னு தான் நான் அவசரமா கிளம்பி வந்தேன். ஆனா இங்க எல்லாம் வேற மாதிரி ஆகிப்போச்சு

 

 

“இப்போ என்ன பண்ணுறது அனீஷ், நீங்க… உங்களுக்கு என் மேல எதுவும் கோபமில்லையே என்றவனை அதிசயமாய் பார்த்தான் அனீஷ்.

 

 

“ராஜீவ் நியாயமா உங்களுக்கு என் மேல கோபம் தான் வந்திருக்கணும். ஆனா நீங்க இப்படி பேசறீங்க, உண்மையை சொல்லுங்க ராஜீவ் நிஜமாவே உங்களுக்கு என் மேல கோபமில்லையா?? இருந்தாலும் தப்பில்லை நான் பதில் சொல்ல வேண்டிய இடத்துல தான் இருக்கேன் என்றான் மற்றவன்.

 

 

“யாரும் யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம் அனீஷ். நிஜமாவே எனக்கு உங்க மேல கோபமோ வருத்தமோ இல்லை. நீங்க தப்பு பண்ணியிருப்பீங்கன்னு நான் நினைக்கலை. அதுக்காக ஆராதனா தப்பு பண்ணிட்டான்னும் நான் சொல்ல மாட்டேன்

 

 

“இது புரிதல் இல்லாத ஒரு இடைவெளி தான் உங்களுக்குள்ள, இதை தீர்க்க உங்களால முடியும். இந்த ஆராதனா பண்ண தப்பு என்னன்னா வீட்டை விட்டு யாருகிட்டயும் சொல்லாம போனது தான். அப்படி போனதே பெரிய தப்பு தான், இதுல சொல்லாம போனதை மட்டும் நான் சொன்னேன்னு நினைக்க வேண்டாம்

 

“அவ இப்படி போறது ஒண்ணும் புதுசில்லை. இவளுக்கு இதே வேலையா போச்சு, எல்லாரையும் கலவரப்படுத்தி அவ நினைச்சது சாதிக்கிறது, அப்போவே… என்று அவன் சொல்லிக்கொண்டே போக அனீஷ் இவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் பார்த்தான். ஆராதனா ஏற்கனவே இது போல் செய்திருக்கிறாளா என்ற ரீதியில் இருந்தது அவன் யோசனை.

 

 

அனீஷின் முகம் பார்த்துவிட்டு பேச்சை நிறுத்திய ராஜீவ் என்னவென்பது போல் பார்க்க “ராஜீவ் இப்போ நீங்க என்ன சொன்னீங்க, ஆராதனா இதுக்கு முன்னாடி இப்படி செஞ்சிருக்காளா?? என்ன?? என்றான் அனீஷ்.

 

 

ராஜீவ் ஆம் என்பது போல் தலையசைத்தான். “என்னாச்சு ராஜீவ்?? என்று வினா எழுப்பினான் மற்றவன்.

 

 

“அவ காலேஜ் படிச்சுட்டு இருக்கும் போது நடந்த விஷயம் அனீஷ். என்னால தான் அப்போ அவ அப்படி செஞ்சா என்றவன் தொடர்ந்து கூற ஆரம்பித்தான்.

 

 

“எனக்கு அப்போ குடிக்கற பழக்கம் இருந்துச்சு அனீஷ், நிஜமா தான் சொல்றேன். காலேஜ் படிக்கும் போது கத்துக்கிட்ட பழக்கம், வேலைக்கு போக ஆரம்பிச்சதும் அப்படியே தொடர்ந்திட்டேன்

 

 

“சமயத்துல பிரண்ட்ஸ் எல்லாம் கூட்டிட்டு வண்டி எடுத்திட்டு கேரளா பார்டர் போய்டுவோம் தண்ணி அடிக்கறதுக்காகவே. வீக் எண்டுல நான் வீட்டிலேயே இருக்க மாட்டேன்

 

 

“வீட்டில எதாச்சும் ஒரு காரணம் சொல்லிட்டு நாங்க எல்லாரும் கும்மாளம் போடுவோம். எங்க வீட்டுக்கு என்னோட இந்த பழக்கம் அரசல்புரசலா தெரியும். என்னை நிக்க வைச்சு யாரும் கேள்வி கேட்டதில்லை

 

 

“ஆனா யாரும் நேரடியா பார்த்ததில்லை, அதுனால அட்வைஸ் பண்ணுறேன்னு ஆளாளுக்கு எதாச்சும் சொல்லுவாங்க. நானும் பெரிசா அதை கண்டுக்காம என் பாட்டுக்கு என் வேலையை செஞ்சேன்

 

 

“அப்போ தான் ஒரு நாள் கேரளாவுக்கு சுற்றுலா போயிருந்த ஆராதனா என்னை அங்க வைச்சு நேர்ல பார்த்திருக்கா. நான் அன்னைக்கு ரொம்ப கலாட்டா பண்ணிட்டு இருந்தேன் தண்ணி அடிச்சுட்டு

 

 

“என்னோட இந்த பழக்கம் அவளுக்கு மட்டும் தெரியாம இருந்துச்சு. அன்னைக்கு நேர்ல பார்த்து தெரிஞ்சுக்கிட்டவ தான். நான் இதெல்லாம் செய்வேன்னு அவ நினைக்கலை. நான் வீட்டுக்கு வந்ததும் என்கிட்ட வந்து நேர்ல பேசினா

 

 

“இதெல்லாம் சரியில்லை உன்னை நீ திருத்திக்கோன்னு வீட்டில இருக்கறவங்களுக்கு மேல எனக்கு அட்வைஸ் கொடுத்தா. நானும் தங்கச்சிக்கு தெரிஞ்சு போச்சே இப்படி பண்ணிட்டோமேன்னு நினைச்சு கொஞ்ச நாள் நல்லபிள்ளையா தான் இருந்தேன்

 

 

“அந்த நேரத்துல ஒரு நண்பனோட கல்யாணம் வந்துச்சு எல்லாரும் வற்புறுத்தினதுனால யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சு நான் மறுபடியும் அந்த பழக்கத்தை ஆரம்பிச்சேன்

 

 

“சில மாசம் யாருக்குமே தெரியாம எந்த டவுட்டும் வராமலே தான் நடந்துகிட்டேன். ஆனா ஆராதனா கண்டுபிடிச்சிட்டா, கண்டுபிடிச்சவ என்கிட்ட வந்து கேட்டிருக்கலாம்

 

 

“ஒருவேளை அப்படி கேட்டிருந்தா அப்போ நான் அவ பேச்சை கேக்குற மாதிரி கேட்டுட்டு மறுபடியும் அதே வேலையை தொடர்ந்து செஞ்சிருப்பேனோ?? என்னவோ?? என்று சொல்லி இடை நிறுத்தினான்.

 

 

“அப்போ அவ என்ன செஞ்சா?? வீட்டை விட்டு போயிட்டாளா?? என்றான் அனீஷ்.

 

 

“ஆமா அனீஷ் வீட்டை விட்டு தான் போயிட்டா, காலேஜ் போன பொண்ணு இன்னும் வீட்டுக்கு வரலைன்னு சாயங்காலம் ஏழு மணிக்கு எனக்கு வீட்டிலருந்து போன் வருது. பதறி போய் நான் அவ காலேஜ், பிரண்ட்ஸ் வீடுன்னு ஒரு இடம் விடாம தேடி பார்த்தேன்

 

 

“எங்கயும் அவ இல்லை, அந்த சமயத்துல யாழினியும் அவளும் பேச்சு வார்த்தை இல்லாம இருந்தாங்க. ஆனாலும் நான் அவகிட்டயும் கேட்டேன், ஆராதனா வேற ஒரு பிரண்டோட வண்டியில வீட்டுக்கு தான் கிளம்பி போனான்னும் அவளை போற வழியில பார்த்தேன்னும் யாழினி சொன்னா

 

 

“நைட் பத்து மணியாச்சு யாரும் தூங்கலை, என்ன செய்யறதுன்னும் தெரியலை. போலீஸ்க்கு போனா தப்பாகிடுமோன்னு ஒரே யோசனை, அவளோட போனை வேற ஆப் பண்ணி வைச்சிருந்திருக்கா, எங்க நாங்க நாங்க பண்ணிடுவோமோன்னு

 

 

“கடைசியா வேற வழியில்லாம நான் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு நேரா போலீஸ் ஸ்டேஷன் போக கிளம்பி பாதி தூரம் போயிட்டு இருக்கேன். எதிர்ல ஒரு பொண்ணோட ஸ்கூட்டியில வர்றா

 

 

“அவளை பார்த்ததும் தான் நிம்மதி வந்துச்சு. அதுக்கு பிறகு அவ மேல பயங்கர கோபம் வந்துச்சு, இப்படி பதற வைச்சுட்டாளேன்னு. எதுவும் பேசாம அவ பிரண்டை வீட்டுக்கு அனுப்பிட்டு ஆராதனாவை என்னோட வண்டியில கூட்டிட்டு வந்தேன்

 

 

“வீட்டில ஒருத்தர் மாத்தி ஒருத்தர் கேள்வி கேட்குறாங்க யாருக்கும் பதில் சொல்லாம அசால்ட்டா என்னை பார்த்து முறைக்க வேற செஞ்சா. வந்த கோவத்துக்கு நாலு அப்பு வைக்கலாம்ன்னு தோணிச்சு

 

 

“எதுக்கு என்னை முறைக்கிற, கேள்வி கேட்டா முறைப்பியான்னு கேட்டா ரொம்ப கூலா ஆமா அப்படி தான் முறைப்பேன். நான் வேணுமின்னு தான் போனேன்னு பதில் சொன்னா

 

 

“அவ பதில் கேட்டு நான் அவளை அடிக்கவே போயிட்டேன். வீட்டில இருக்கறவங்க தான் தடுத்திட்டாங்க. அப்போ தான் அவ ஏன் போனான்னு காரணம் சொன்னா

 

 

“என்ன காரணம் ராஜீவ்?? என்றான் அனீஷ்.

 

 

“நான் குடிக்கறது தான் காரணமாம். நான் ஒரு நாள் காணாம போயிட்டு திரும்ப வந்ததுக்கே நீங்க பதறி போனீங்களே. உன் குடியினால நீ ஒரு நாள் இல்லாம போய்ட்டா நாங்க எல்லாரும் எவ்வளவு பதறுவோம்ன்னு கதறுவோம்ன்னு தெரிஞ்சுக்கோ

 

 

“இனிமே இப்படி செய்யாதன்னு சொல்லி கண்ணு கலங்கி நின்னா!! அன்னைக்கு முடிவு பண்ணவன் தான் இனி எந்த தப்பும் செய்யக் கூடாதுன்னு இப்போ வரைக்கும் நான் அதை கடைபிடிக்கிறேன் அனீஷ்

 

 

“அன்னைக்கு அவ என்னை திருத்தணும்ன்னு செஞ்சது தான், என்ன தான் நல்லதுன்னு நினைச்சு அவ செஞ்சாலும் வீட்டை விட்டு போய் எல்லாரையும் பதற வைச்சது எனக்கு பிடிக்கலை

 

 

“ரெண்டு தலைமுறைக்கு பிறகு பிறந்த பொம்பளை பிள்ளைன்னு வீட்டில அவளுக்கு அதிக செல்லம். யாருமே அவ வீட்டை விட்டு போனது தப்புன்னு கண்டிக்கலை, மாறா எல்லாருமே என்னை குற்றவாளி போல பார்த்தாங்க

 

 

“என்னாலையும் அவளோட தப்பை அன்னைக்கு சுட்டிக்காட்ட முடியலை. அது எவ்வளவு பெரிய தப்பு முட்டாள்த்தனம்ன்னு இப்போ எனக்கு புரியுது அனீஷ். இப்பவும் அவ செஞ்சது சரின்னு நான் சொல்ல மாட்டேன். மன்னிக்கவே முடியாத அளவு தப்பு பண்ணியிருக்கா அவ

 

 

“அவ பக்கம் நியாயமா ஆயிரம் காரணமிருந்தாலும் யாரை பத்தியும் யோசிக்காம இப்படி அவ செஞ்சது எந்த விதத்துலயும் சரியேயில்லை. பேசி தீர்க்க வேண்டியதை தள்ளியிருந்து தீர்க்க நினைக்கிற அவளோட அறிவின்மையை என்னால ஏத்துக்கவே முடியலை அனீஷ்

 

 

“அவ என்ன தப்பு பண்ணியிருந்தாலும் என்னோட தங்கையா போய்ட்டா. அவ செஞ்சதை சரின்னு சொல்லலை. ஆனா ஏதோ ஒரு நல்லது நடக்க தான் இப்படி செஞ்சிருக்கான்னு என்னால புரிஞ்சுக்க முடியுது

 

 

“என்னடா இப்போ தான் தப்புன்னு சொன்னான், கொஞ்ச நேரத்துல சரின்னு சொல்றானேன்னு நினைக்காதீங்க அனீஷ்

 

 

“நியாயமான காரணத்திற்காக தான் அவ எதையும் செஞ்சிருப்பான்னு எனக்கு புரியுது. ஆனா அதுக்கு அவ எடுத்துகிட்ட முறை தான் தப்பு. நான் அதை தான் சொல்ல வர்றேன்

 

 

“அப்போ என்கிட்ட எதும் தப்பிருக்கும்ன்னு நினைக்கிறீங்களா ராஜீவ்?? என்றான் அனீஷ் புருவத்தை சுருக்கி யோசனையாய்.

 

 

“நிச்சயம் இல்லை அனீஷ், நான் முதல்ல சொன்ன மாதிரி புரிதல் தான் பிரச்சனைன்னு தோணுது எனக்கு. உங்க ரெண்டு பேருக்கும் இடையில உடன்பிறந்தவனாவே இருந்தாலும் நான் வெளியாள்

 

 

“நீங்க செஞ்சது சரி தப்புன்னு நான் கருத்து சொல்லலை. நான் புரிஞ்சதை சொல்றேன் உங்க ரெண்டு பேர் மேலயும் தப்பிருக்கும்ன்னு எனக்கு தோணலை

 

 

“உங்களுக்குள்ள உள்ள சிறு பிணக்கை என் தங்கை கையாண்ட விதம் தான் தப்புன்னு நான் நினைக்கிறேன் என்றவனை உண்மையிலேயே பெருமிதமாக பார்த்தான் அனீஷ். இப்படி ஒருவனை உடன்பிறந்தவனாக கொண்ட ஆராதனாவும் உறவாக கொண்ட தானும் நிச்சயம் அதிர்ஷ்டம் செய்தவர்கள் தான் என்று தோன்றியது அனீஷிற்கு.

 

 

என்னவொரு புரிதல் என்னவொரு தெளிவு என்று வியந்த அனீஷிற்கு பக்குவமாய் ராஜீவ் இந்த விஷயத்தை புரிந்து கொண்ட விதம் அனைத்தும் கவர்ந்தது.

 

 

“ரொம்ப தேங்க்ஸ் ராஜீவ், நீங்க எப்படி நினைப்பீங்களோ?? நேத்து ரொம்ப கோபமா பேசிட்டோமோ மரியாதை குறைவா நடந்துகிட்டமோன்னு நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டேன். உங்க தங்கச்சியை நான் திட்டு அனுப்பிட்டதா நீங்க நினைப்பீங்களோன்னு கொஞ்ச நேரம் முன்னாடி வரை குற்றவுணர்ச்சி என்னை குத்திட்டு இருந்துச்சு

 

 

“நீங்க பேசினது மனசுக்கு ஆறுதலா இருக்கு ராஜீவ் என்றவன் அவன் கைகளை பிடித்துக் கொண்டான்.

 

 

“நீங்க எதும் வருத்தப்படாதீங்க அனீஷ். அவ வரட்டும் நான் சொல்லி வைக்கிறேன் இனி இப்படி செய்யக் கூடாதுன்னு. சரி சொல்லுங்க அனீஷ் இப்போ என்ன செய்யலாம்

 

 

“எப்படி அவளை கூட்டிட்டு வர்றது, போலீஸ்க்கு போகணுமா?? இல்லை நாம தனிப்பட்ட முறையில டிடக்டிவ் எதுவும் வைச்சு கண்டுபிடிப்போமா என்ன செய்யலாம் அனீஷ் என்றான் நிஜமான அக்கறையுடன்.

 

 

“எதுவுமே செய்ய வேண்டாம் ராஜீவ் என்றான் ஒற்றைவார்த்தையாய்.

 

 

“என்ன சொல்றீங்க அனீஷ்?? அப்போ என்ன தான் செய்யறது??

 

 

“அதான் சொன்னேனே ராஜீவ், நாம எதுவும் செய்ய வேண்டாம்

 

 

“நீங்க எதை மனசுல வைச்சுட்டு சொல்றீங்கன்னு எனக்கு தெரியலை அனீஷ். உங்க மனசுல எவ்வளவு வேதனை இருக்குன்னு உங்களை பார்க்கும் போது புரியுது. ஆனா ஏன் இப்படி செய்யறீங்கன்னு என்னால உங்களை கணிக்க முடியலை

 

 

“உங்க முடிவுல நான் தலையிடலை, ஆனா நான் அவளை தேடுறதுன்னு முடிவு பண்ணிட்டேன். வாயும் வயிறுமா இருக்க பொண்ணு வேற என் மனசு கேட்கலை அனீஷ் என்றான்.

 

 

“எதுக்குமே அவசியம் இல்லை ராஜீவ். உங்க தங்கையை நீங்க தேடவே வேண்டாம், அவளே உங்களை தேடி வருவா. ஐ மீன் உங்களுக்கு போன் பண்ணுவா என்ற அனீஷை புருவசுளிப்புடன் ஏறிட்டான் அவன்.

 

 

“இன்னைக்கோ இல்லை நாளைக்கோ நிச்சயம் பேசுவா என்றவனை இன்னமும் புரிந்து கொள்ள முடியாமல் பார்த்தான் ராஜீவன்.

 

 

“எதை வைச்சு சொல்றீங்க அனீஷ்?? அப்போ அவ எங்க இருக்கான்னு உங்களுக்கு தெரியுமா??

 

 

“நிச்சயம் தெரியாது, என்னோட அனுமானம் தான் நான் உங்ககிட்ட சொன்னது என்றான் மற்றவன்.

 

 

“நீங்க சொல்றதுக்காக நான் நாளைக்கு வரை வெயிட் பண்ணுறேன் அனீஷ். அவ எனக்கு போன் பண்ணலைன்னா நான் நிச்சயம் அவளை தேடத்தான் செய்வேன் என்றான் உறுதியான குரலில்.

 

 

“நீங்களும் சபரியும் கொஞ்சம் ஒரே மாதிரி தான் இருக்கீங்க ராஜீவ்

 

 

“என்னாச்சு ராஜீவ்?? சபரி பத்தி பேசினதும் நீங்க முகம் சுருங்கறீங்க?? என்னாச்சு அவன் எதுவும் உங்ககிட்ட தப்பா பேசிட்டானா?? அப்படி எல்லாம் செய்ய மாட்டானே?? என்றான் அனீஷ்.

 

 

“என்னை எதுவும் பேசலை அனீஷ்??

 

 

“யாழினி… யாழினியை எதுவும் சொன்னானா??

 

 

பதில் சொல்லாமல் வெறுமே அமர்ந்திருந்தான் ராஜீவன். அண்ணனிடம் தம்பியை பற்றி குறை சொல்வதா என்று தயங்கினான்.

 

 

“என்னன்னு சொல்லுங்க ராஜீவ்?? என்றான் கொஞ்சம் அழுத்தமாக.

 

 

“உங்க தம்பி என்ன நினைச்சுட்டு இருக்கார் அனீஷ்என்றான்.

“ஆராதனா பண்ண தப்புக்கு யாழினி கழுத்தை எதுக்கு பிடிக்கணும். எனக்கு ஆராதனா வேற யாழினி வேற எல்லாம் இல்லை. ரெண்டு பேருமே எனக்கு ஒரே மாதிரி தான்

 

 

“ஆராதனாவை விட எனக்கு யாழினி மேல ஒருபடி அதிக அக்கறையே இருக்கு. எனக்கு வந்த கோபத்துக்கு அவரை ஒருவழியாக்கியிருப்பேன் ஏற்கனவே பிரச்சனையாயிருக்கு நான் வேற எதுவும் இழுத்து வைக்க வேண்டாம்ன்னு தான் பேசாம போயிட்டேன்

 

 

“எப்போமே நான் அப்படியே இருக்க மாட்டேன் அனீஷ். அவர் பண்ணதுல எந்த நியாயமும் இல்லை

 

 

“நான் அவனை கண்டிக்கறேன் ராஜீவ், இனி இப்படி நடக்காது. என் மேல உள்ள அக்கறையில தான் கேட்டிருப்பான். ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் இல்லையா, அதுனால அவ மேல சந்தேகப்பட்டிருப்பான்

 

 

“அவர்க்கு அவர் அண்ணன் மேல அக்கறைன்னா எனக்கும் என் தங்கை மேல அக்கறை இருக்கு அனீஷ். நான் ஒண்ணும் ரொம்ப பொறுமைசாலி எல்லாம் இல்லை. உங்க அளவுக்கு அமைதியா எல்லாம் எனக்கு இருக்க தெரியாது என்று சந்தடி சாக்கில் அனீஷின் அழுத்தத்தையும் கோடிகாட்டி விட்டான்.

 

 

லேசாய் சிரித்தவன் “நீங்களும் சபரியும் ஒரே மாதிரி தான் என்றான் மறுபடியும்.

 

 

“முறைக்காதீங்க ராஜீவ் நிஜமா தான் சொல்றேன். என்ன நீங்க சொன்னதும் புரிஞ்சுக்குவீங்க, தப்புன்னா மன்னிப்பு கேட்கக்கூட தயங்க மாட்டீங்க. ஆனா அவன் அப்படி இல்லை கோபமா இருக்கும் போது என்ன பேசினாலும் அவன் காதுல விழாது

 

 

“நிதானமா எடுத்து சொன்னா புரிஞ்சுக்குவான். சட்டுன்னு கீழ இறங்கி போய் மன்னிப்பு கேட்க வராது அவனுக்கு. அது தான் உங்களுக்குள்ள வித்தியாசம், சரி அதை விடுங்க அவனை நான் பார்த்துக்கறேன். அப்புறம்… என்று அவன் இழுக்க “ஆராதனா எனக்கு போன் பண்ணா கண்டிப்பா உங்களுக்கு தெரிவிப்பேன் போதுமா என்று முடித்தான் ராஜீவ்.

 

 

“தேங்க்ஸ் ராஜீவ், ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் என்றான் உள்ளார்ந்து.

 

 

“ராஜீவ் உங்க வீட்டில இருக்கவங்களுக்கு இந்த விஷயம்…

“அய்யய்யோ அவங்ககிட்ட நான் இப்போ எதுவும் சொல்லப்போறதில்லை. நீங்களும் எதுவும் சொல்லிடாதீங்க, ரொம்ப பயப்படுவாங்க, பதறிப்போவாங்க!! தேவையில்லாத சங்கடம், அவங்களை நான் சமாளிச்சுக்கறேன். நாளைக்கு என்ன நடக்குதுன்னு பார்த்திட்டு அப்புறம் முடிவு பண்ணிக்கலாம் என்று முடித்துவிட்டான் ராஜீவன்.

 

 

அன்று இரவே அவன் ஊருக்கு கிளம்புவதாக சொல்லி கிளம்பிச் சென்றுவிட்டான். மறுநாள் காலை அனீஷ் சபரீஷை அழைத்தான்.

 

 

“சொல்லு அனீஷ் நீ கூப்பிட்டன்னு அம்மா சொன்னாங்க. என்ன அந்த ராஜீவ் என்னை பத்தி உன்கிட்ட எதுவும் வத்தி வைச்சானா?? என்றான் கடுகடுத்தவாறே.

 

 

“சபரீஷ் எதையும் யோசிச்சு பேசு. அவர் எதுவும் வத்தி வைக்கலை, நானா தான் கேட்டேன் அவர்கிட்ட. நீ ஏன்டா இப்படி பண்ணுற?? ஆராதனா போனதுக்கு யாழினி என்ன செய்வா?? கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டியா?? என்று முறைத்தான் தம்பியை.

 

 

“தெரியும் அவளுக்கும் இதுக்கும் சம்மந்தமில்லைன்னு. கொஞ்சம் லேட்டா தான் புரிஞ்சுகிட்டேன், அந்த நேர கோபம்டா?? நான் என்ன செய்ய?? எனக்கு ஒண்ணுமே ஓடலை

 

 

“நைட் அவ தான் அண்ணிக்கிட்ட ரொம்ப நேரமா பேசிட்டு இருந்தா?? மறுநாள் அண்ணியை காணோம். நீ வேற ஊர்ல இல்லை நான் என்னன்னு யோசிப்பேன்?? உனக்கு என்ன பதில் சொல்வேன்

 

 

“அந்த கோபத்துல தான் அப்படி முரட்டுத்தனமா நடந்துகிட்டேன். ஏன் எனக்கு அவ மேல கோபப்பட உரிமையில்லையா?? என் பொண்டாட்டி அவன் யாரு என்னை கேட்க என்று முறுக்கினான் சபரீஷ்.

 

 

“நீ ஏன் கேள்வி கேட்குறன்னு கேட்குறியா சபரி??

 

 

“அனீஷ் நான் உன்னை எதுவும் சொல்லலை. அந்த ராஜீவ்க்கு ஏன் என் மேல இவ்வளவு காட்டம்ன்னு தான் கேட்குறேன். நேத்துல இருந்து என் பொண்டாட்டிகிட்ட என்னை பேசவிடாம பாடிகார்ட் போல அவளை விட்டு அப்படி இப்படி நகராம இருந்தான். இப்போ மட்டும் என்னவாம் துரை கிளம்பி போயிட்டாரு

 

 

“ஏன் சபரி நீ இப்படி சிறுபிள்ளையா நடந்துக்கற?? உன் பொண்டாட்டின்னு இத்தனை முறை எவ்வளவு உரிமையா சொன்ன. அவ மேல உனக்கு எந்த அளவுக்கு கோபப்பட உரிமை இருக்கோ, அந்தளவுக்கு அவளை நல்லா பார்த்துக்கற கடமையும் உனக்கிருக்கு

 

 

“பொறு நான் பேசி முடிச்சுடுறேன். நல்லா பார்த்துக்கறதுன்னா வேளாவேளைக்கு சாப்பிடுறதும், துணிமணி எடுத்து கொடுக்கறதும் மட்டும் இல்லை. அவளை அன்பா நடத்துறதும் அவளை புரிஞ்சு அனுசரணையா நடந்துக்கறதும் தான்

 

 

“உனக்கு கோபப்பட மட்டுமே தெரியுதே, ஒரு நாள் ஒரு நாளாச்சும் நீ பண்ணது தப்புன்னு நினைச்சிருக்கியா?? அப்படியே அது தப்புன்னு தெரிஞ்சதும் நீ செஞ்சதுக்காக மன்னிப்பு கேட்டிருக்கியா??

 

 

“எதுவுமே செஞ்சதில்லை நீ?? அம்மாகிட்டயும் சரி மனைவிகிட்டயும் சரி எந்த ஒரு விஷயத்துக்காவும் மன்னிப்பு கேட்கவோ நாம இறங்கி போறதுலயோ  தப்பேயில்லை. புரிஞ்சு நடந்துக்கோ சபரி, எனக்கு ஆயிரம் கவலை இருக்கு, நீயும் எனக்கு ஒரு கவலையை கொடுக்காத

 

 

“உன்னை தம்பியா மட்டும் நான் நினைக்கலை. நாம அண்ணன் தம்பியா இல்லாம ஒரு நண்பர்களா தான் பழகறோம். நான் இப்போ சொன்னதை உனக்கு அண்ணனா சொன்னதா நினைச்சாலும் சரி, நண்பனா சொன்னதா நினைச்சாலும் சரி. உன் மேல இருக்கற அக்கறையில தான் சொல்றேன் என்றவன் மேலும் பேச்சை வளர்த்தாமல் எழுந்து சென்றுவிட்டான்.

 

 

நம் சபரீஷ் இதெல்லாம் கேட்டு மாறுவானா?? என்ன?? பார்ப்போம்.

Advertisement