Advertisement

அத்தியாயம் – 18

 

 

அனீஷ் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்தவன் அப்போது தான் அவன் கைபேசியை உயிர்பித்தான். கிளம்பும் அவசரத்தில் ஆராதனாவை அவளின் தாய் வீட்டிற்கு அழைத்து செல்ல சொல்லி ராஜீவனுக்கு சொல்ல மறந்திருந்தான்.

 

 

அவன் கைபேசி உயிர்பெறவும் அவனுக்கு அழைப்பு வர ஆரம்பித்தது. அதில் தெரிந்த எண்ணை பார்த்தவன் பொத்தானை அழுத்தி இயல்பாய் காதுக்கு கொடுத்தான். சாதாரணமான அழைப்பாய் ஏற்றவனுக்கு அதில் கேட்ட செய்தியில் மனம் அமைதியிழந்து தவிக்க ஆரம்பித்தது.

 

 

இரண்டு மாதத்திற்கு பின்

——————————————–

 

“நித்தி என்று அழைத்து கொண்டே படுக்கையறையில் இருந்து வெளியில் வந்தாள் ஆராதனா. “என்ன அ…” என்று சொல்லிக்கொண்டே வந்தவள் வீட்டிற்குள் நுழைந்தவளை கண்டதும் “சொல்லுங்க அக்கா, என்னை எதுக்கு கூப்பிட்டீங்க?? என்றாள் தேனொழுக.

 

 

உள்ளே வந்துக்கொண்டிருந்தவளோ நித்தி என்ற நித்யாவை (இவளைப்பற்றி கதையின் போக்கில் பின்னால் அறிவோம்) பார்த்து பல்லைக் கடித்தாள். ‘கூறுகெட்டவ வேணும்ன்னே என்னை வம்பு பண்ணுறா?? என்று மனதார அடுத்தவளை திட்டிக்கொண்டே ஆராதனாவை நோக்கி வந்தாள்.

 

 

“அக்கா இதுல உங்களுக்கு தேவையான மாத்திரை எல்லாம் இருக்கு. பார்த்து உள்ள வைங்க அக்கா. வீட்டுக்குள்ள அலமாரியை கூட உருட்டுற திருட்டு பூனை ஒண்ணு சுத்திட்டு இருக்கு

 

 

“அது சாப்பிட எது கிடைச்சாலும் விடாது, மாத்திரை கூட அதை பொறுத்தவரை சாப்பிடுற ஐட்டம் தான் என்ற அப்பெண் வேறுயாருமல்ல நம் மதுமிதாவே தான்.

 

 

“அக்கா நான் இப்படி திங்கறது ஊரறிஞ்ச விஷயம் ஆனா இங்க சிலர் இருக்காங்க. இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்துக்கிட்டு அதுக பண்ணுற வேலை தெரியுமா உங்களுக்கு?? என்றாள் நித்யா.

 

 

“என்னாச்சு நித்தி யாரு அப்படின்னு நீ சொல்ல வர்ற??

 

 

“உங்களுக்கு நிதமும் ஹார்லிக்ஸ் கலக்கி கொண்டு வர்றவங்க தான் என்று நொடித்தாள் அவள்.

 

 

அதைகேட்ட மதுவோ குதிக்க ஆரம்பித்தாள் “நான் என்னடி பண்ணேன் எதுக்கு என்னைய சொல்லுற?? என்றாள்.

 

 

“நான் உண்மையை தான்டி சொன்னேன், அக்கா இவ தினமும் உங்களுக்கு ஹார்லிக்ஸ் கலக்கி கொண்டு வர்றான்னு தானே நினைச்சுட்டு இருக்கீங்க. அதுக்கு முன்னாடி இவ கிச்சன்ல என்ன பண்ணுறான்னு தெரியுமா

 

 

“உங்களுக்கு ஒரு ஸ்பூன் எடுத்து கலக்குவா, அடுத்த ஸ்பூனை எடுத்து அவ உள்ளங்கையில வைச்சு அப்படியே கொஞ்சம் கொஞ்சமா டேஸ்ட் பண்ணி சாப்பிடுவா பாருங்க என்று அவள் சொல்லவும் மது அமைதியானாள்.

 

 

‘இந்த பக்கி இதை எப்போ பார்த்திச்சுன்னு தெரியலையே, இவ ஒரு பெரிய பிபிசி ஆச்சே… இதை ஊருக்கே விளம்பரம் பண்ணிடுவாளே… என்று மனதிற்குள் குமைந்தாள்.ஆராதனாவோ “சரி விடு நித்தி அதுக்கு எதுக்கு மதுவை கிண்டல் பண்ணுற நான் கூட சின்ன வயசுல இப்படி தான் என்றாள்.

 

 

“அக்கா இவ பார்க்க பால் டப்பா மாதிரி இருந்துக்கிட்டு பெரிய பெரிய தில்லாங்கடி வேலை எல்லாம் பார்ப்பா தெரியுமா உங்களுக்கு எனவும் மது அவளிடம் பதிலுக்கு மல்லுக்கட்ட ஆரம்பிக்க அங்கு ஒரு கலவரம் தொடங்க இருந்தது.

 

 

சரியாக அந்நேரம் மதுவின் அன்னை மல்லிகா உள்ளே நுழைந்தார். நித்யா அவரின் அதட்டலுக்கு மட்டுமே கட்டுப்படுவாள், உள்ளே நுழைந்தவர் இருவரையும் பொதுப்படையாக பார்த்து “நீங்க என்ன இன்னும் சின்ன குழந்தைங்களா எப்போ பார்த்தாலும் சண்டை போட்டுட்டே இருக்கீங்க

 

 

“அவங்க பிள்ளையை சுமந்துட்டு இருக்காங்க. உங்க சண்டையை கேட்டா வயித்துல இருக்கற பிள்ளையும் வெளிய வந்திரும். இனி இப்படி ஆராம்மா முன்னாடி சண்டை போட்டீங்க அவ்வளவு தான் போங்க உள்ள என்று விரட்டினார் அவர்.

 

 

நித்யா அதற்கெல்லாம் அடங்குபவளே அல்ல மதுவை பார்த்து சத்தமில்லாமல் வாயசைத்தாள் அவள். ‘அம்மா அக்கா முன்னாடி தான் சண்டை போட வேண்டாம் சொன்னாங்க, உன்கிட்ட சண்டையே போட வேண்டாம்ன்னு சொல்லலை என்று ஆராதனாவை கைக்காட்டி வாயசைக்க மற்றவளோ பல்லைக் கடித்தாள்.

 

 

அறைக்குள் வந்த ஆராதனாவிற்கு என்ன முயன்றும் வீட்டின் நினைவுகளே ஆக்கிரமிக்க தொடங்கின. சிறு வயதில் அவளுமே மதுவை போலத்தான் இருப்பாள் ஏன் திருமணத்திற்கு முன்பு வரை கூட அதே போலத்தான் இருந்தாள்.

 

 

சமையலறைக்கு சென்றால் ஹார்லிக்ஸ் எடுத்து வாயில் போட்டுக் கொள்வது, பூஸ்டை எடுத்து சாப்பிடுவது என்று எப்போதும் அட்டகாசம் செய்வாள். ராஜீவன் ஒரு முறை அதை நேரில் கண்டுவிட்டவன் நித்யா போலவே எல்லோர் முன்னும் அதை பற்றி சொல்லி மானத்தை வாங்கிவிட்டான்.

 

 

ராஜீவன் நினைவு வந்ததும் அவள் வீட்டினரின் ஞாபகம் வர ஆரம்பித்தது. தாய்வீட்டின் எண்ணம் வந்ததுமே அடுத்து அவளுக்கு வந்த ஞாபகம் அனீஷை பற்றி.

 

 

எப்போதும் போல் இப்போதும் அதே நினைவே அவளுக்கு. தான் வீட்டை விட்டு வெளியில் வந்தது தவறு என்ற எண்ணமே எப்போதும் போல் அவளை கலங்கச் செய்தது. வீட்டை விட்டு வந்து ரயிலில் ஏறிய பின்னும் கூட அவள் எண்ணம் சரியே என்று இருந்தவள் தான் அவள்.

ரயில் நகர நகர பெரும் குற்றவுணர்வு வந்து அவள் மனதை ஆக்கிரமித்தது. மனதில் பாறாங்கல்லை போன்றதொரு சுமை ஏறி அமர்ந்தது. அனீஷின் கூற்றுப்படி தான் அருகிருந்து அவனை மாற்றியிருக்க வேண்டுமோ அவனிடம் இன்னும் கனிவாய் பேசியிருக்க வேண்டுமோ?? என்ற எண்ணம் எழுந்தது.

 

 

ஒரு மனம் செய்தது தவறென்றும் மறுமனமோ செய்ததெல்லாம் சரியே என்று சமாதானம் செய்தது. கலகமொன்று பிறந்தால் தான் நன்மை பிறக்கும் என்பதை உறுதியாய் நம்பினாள். ஏன் என்ற கேள்வி மட்டுமே நியாயம் பிறக்க வழிவகுக்கும் என்ற புரட்சித்தலைவரின் பாடல் ஒன்று மனதில் வந்து போனது அவளுக்கு,

 

 

எது எப்படியாகினும் அவளால் அனீஷை பற்றிய எண்ணங்களை புறந்தள்ள முடியவில்லை. அவன் அவ்வபோது செய்யும் குறும்பும் சேட்டையும் மறக்க முடியாமல் நினைவிற்கு வந்து போனது. திருமணமான புதிதில் நடந்த நிகழ்வொன்று கண் முன் நிழலாய் விரிந்தது.

 

____________________

 

 

ஒரு மாலை பொழுதில் ஆராதனா அவர்கள் வீட்டு மாடியில் நின்றுக்கொண்டு தூரத்தே தெரிந்த மருதமலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க சத்தமில்லாமல் படியேறி வந்த அனீஷ் பின்னால் இருந்து அவளை அணைத்தான்.

 

 

சட்டென்ற அணைப்பில் திடுக்கிட்டு போனவள் அணைத்தவன் கணவன் என்பதை அறிந்ததும் அமைதியானாள். “இங்க என்ன பண்ணிட்டு இருக்க ஆரா?? என்றவன் சும்மா இல்லாமல் அவள் கழுத்தில் முகம் பதித்து காதோரம் கிசுகிசுத்தான்.

 

 

“சும்மா இருங்க இப்படி மொட்டை மாடியில ஷோ காட்டுவீங்களா?? என்றாள் சிணுக்கமாக.

 

 

“என் பொண்டாட்டி நான் என்ன வேணா செய்வேன் யாரு என்னை கேட்பா?? என்கவும் ஒரு குரல் “அங்கிள் ஆன்ட்டி என்ன பண்ணுறீங்க?? என்ற மழலை குரல் கேட்க ஆராதனா அவனிடத்தில் இருந்து விலகி சுற்றுமுற்றும் பார்த்தாள்.

 

 

“ஹேய் அங்க பாரு?? என்று அவளை அருகிழுத்து அடுத்த வீட்டு மாடியை காட்ட அங்கு அஸ்வந்த் வாண்டு நின்றிருந்தான்.

 

 

“உங்க ஆன்ட்டி கூட நான் விளையாடிட்டு இருக்கேன்டா என்றவன் “ஆமா நீ இங்க என்ன பண்ணுற?? என்றான்.

 

 

“எனக்கு விளாட ஆளே இல்லை. அங்கிள் நான் இவங்களை கல்யாணம் பண்ணிக்கறேன் அன்னைக்கு சொன்னேன்ல எப்போ பண்ணிக்கட்டும். அதுக்கு அப்புறம் இவங்க என்கூட விளாடுவாங்களா?? என்றான்.

 

 

“டேய் உனக்கு விளையாட என் பொண்டாட்டி தான் கிடைச்சாளாடா?? ஆசையா ஒருத்தியை கட்டி கூட்டிட்டு வந்தா இவன் எனக்கு வில்லனா வருவான் போலயே என்றவன் “டேய் கண்ணா உனக்கு என்ன விளையாட தானே ஆளு வேணும்

 

 

“கொஞ்ச நாள் பொறு உன்கூட விளையாட நான் ஆள் ரெடி பண்ணி தர்றேன் என்றவன் ஆராதனாவை பார்த்து கண் சிமிட்டினான். “அதெப்படி ரெடி பண்ணுவீங்க குழந்தைகிட்ட இப்படி தான் பொய் சொல்லுவாங்களா என்றாள் அவள்.

 

 

“அடியே மக்கு பொண்டாட்டி நான் என்ன சொல்ல வர்றேன்னு சின்ன குழந்தைக்கு புரியாது. உனக்குமா புரியலை, இரு இரு புரிய வைக்குறேன் என்றவன் அவளை தூக்கிக்கொண்டு படியிறங்கினான்.

 

 

“என்னங்க என்ன பண்ணுறீங்க?? வீட்டில எல்லாரும் இருக்காங்க என்று அவள் சொன்னது எதுவும் அவன் காதில் ஏறவேயில்லை. நல்லவேளையாக ஹாலில் யாருமில்லை தூக்கி வந்தவன் அவர்கள் அறைக்கு சென்று அவளை கட்டிலில் கிடத்தினான்.

 

 

“இப்போ சொல்லு நான் என்ன சொன்னேன் உனக்கு புரியலையா எனவும் அவன் அஸ்வந்த்திடம் சொல்ல வந்த சேதி புரிந்து அவள் சிவக்க அனீஷ் அவளை இன்னும் சிவக்க வைத்துக்கொண்டிருந்தான்.

 

____________________

 

 

அவள் நினைவுகள் கலைந்து நிகழ்காலத்திற்கு வந்தாலும் அவள் மனமோ அனீஷை சுற்றி சுற்றியே வந்தது. முயன்று அனைத்தும் ஒதுக்க முயற்சி செய்தாள் அவனாய் புரிந்து தன்னைத் தேடி வருவான் என்று நம்பிக்கை கொண்டவள் அறியவில்லை அவன் தேடி வரப்போவதில்லை என்று…..

 

____________________

 

 

சபரீஷ் அன்று நேரமாகவே வேலை முடிந்து விட்டதால் விரைவாகவே வீட்டிற்கு வந்து சேர்ந்தான். உள்ளே நுழையும் போதே ஹாலில் யாருமில்லாததை கண்டதுமே அவனுக்கு சுருசுருவென்று வந்தது.

 

 

வந்ததும் எதுவும் பேசவேண்டாம் என்று எண்ணியவன் நேரே அவர்கள் அறைக்கு சென்று குளித்து வேறு உடைமாற்றி வந்து ஹாலில் அமர்ந்த பின்னும் யாரும் வந்து எட்டிக்கூட பார்க்காதது இன்னமும் கோபத்தை அதிகப்படுத்தியது.

 

 

எழுந்து சமையலறை வாயிலில் நின்று பார்க்க யாழினி காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருப்பது கண்ணில் விழுந்தது. “வீட்டை இப்படி தான் திறந்து போட்டுட்டு வந்து இங்க நிப்பியா??கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா?? என்றான் சபரீஷ் கோபமாக.

 

 

“சாரி அத்தை இப்போ தான் கோவிலுக்கு போனாங்க. நான் இங்க வேலையா இருந்ததுல மறந்துட்டேன் என்றாள்.

 

 

“அதுக்கு இப்படி தான் திறந்து வைச்சுட்டு நீ பாட்டுக்கு இருப்பியா?? நான் வந்தது கூட தெரியாம அப்படி என்ன வேலை?? என்று பொரிந்தவன் “காபி வேணும் சீக்கிரம் கொண்டு வா. உன்னால என்னோட தலைவலி இன்னும் அதிகமாகிடுச்சு என்றுவிட்டு சென்றுவிட்டான்.

 

 

யாழினிக்கு வெறுத்து போனது, சபரீஷ் ஒன்றும் புதிதாய் கோபப்படுபவனல்ல தான். ஆனாலும் ஆராதனா சென்றதில் இருந்து அவனின் பழைய குணம் மீண்டிருந்தது. ஆராதனா சென்றதிற்கு யாழினி தான் காரணம் என்று தீவிரமாகவே நம்பத் தொடங்கினான் அவன்.

 

 

நினைவுகளை இழுத்துப் பிடித்தவள் காபியை தயாரித்துக் கொண்டு வந்து அவன் கையில் கொடுத்தாள்.என்ன பேசாம இருக்கே?? என்றான் எதையோ எதிர்பார்த்தவன் போல்.

 

 

யாழினியோ ‘இவன் என்ன கேட்டான் நாம் என்ன பதில் பேசாமல் இருந்தோம் என்று யோசிக்க ஆரம்பித்தாள். “உன்கிட்ட இருந்து என்னைக்கு தான் பதில் வந்திருக்கு, தெரிஞ்சாலும் தெரியலைன்னு தானே சொல்லுவ, திமிர் திமிர் அவ்வளவு திமிர் என்று முறைத்தவன் கோபத்துடன் விருட்டென்று எழுந்து சென்றுவிட்டான்.

 

 

யாழினிக்கு இப்போதெல்லாம் அவன் பேசுவது மரத்துப் போய்விட்டது. அதையெல்லாம் நினைத்து கவலைப்பட அவளுக்கு சக்தியில்லை. ஏற்கனவே அவளுக்கு ஆராதனா பற்றிய கவலையே இருந்ததில் அவனை பெரிதாய் கண்டுகொள்வதில்லை.

 

 

ஆனாலும் அவ்வபோது அவன் குத்தல் பேச்சில் நெஞ்சின் ஒரு ஓரத்தில் வலி எடுப்பதை அவளால் தடுக்கவே முடியவில்லை.சமையலறைக்குள் சென்றுவிட்டவளின் நினைவுகள் தோழி காணாமல் போன அன்றைய நாளை நினைக்க ஆரம்பித்தது.

 

____________________

 

 

ஆராதனாவின் அறையில் அவள் எடுத்து வைத்திருந்த சிம் கார்டை பார்த்ததும் மனதிற்குள் ஏதோ பெரிய அசம்பாவிதம் தோன்றினாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு பீரோவை பார்த்தவளுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

 

‘கடவுளே இவள் வேண்டுமென்றே தான் இங்கிருந்து கிளம்பி சென்றிருக்கிறாள் போலிருக்கிறதே… மாமாவுக்கும் இவளுக்கும் பிரச்சனை எதுவும் பெரிதாகி இருக்குமா??

 

 

‘மாமா இவளை எதுவும் சொல்லியிருப்பாரா?? அதனால் தான் வீட்டை விட்டு போய்விட்டாளா?? அதற்காக தான் இரவு கூட என்னை அவளுடன் படுக்க வேண்டாம் என்று சொன்னாளா??

 

 

‘இது தெரியாமல் நான் வேறு சாதாரணமாய் இருந்து விட்டேனே?? அவள் அழுதது கூட மாமா ஊருக்கு சென்றிருக்கிறார் என்றதினால் என்று எண்ணி இருந்து விட்டேனே

 

 

‘கடவுளே இவள் எங்கு சென்றிருப்பாள், இவருக்கு தெரிந்தால் நான் தான் காரணம் என்று குதிப்பாரோ என்று எண்ணியவளுக்கு அடிவயிற்றில் புளியை கரைத்தது.

 

 

‘வயிற்றில் பிள்ளையுடன் இவள் எங்கு சென்றிருப்பாள்?? இவளுக்கு ஏன் இந்த விபரீத எண்ணமெல்லாம் தோன்றுகிறது… என்று எண்ணியவளின் எண்ணம் “முருகா அவளுக்கு நல்லபுத்தி கொடுத்து சீக்கிரமே எங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்திடுப்பா, மருதமலைக்கு வந்து நூறு தேங்காய் உடைக்கிறேன் என்று வாய்விட்டு வேண்டிக் கொண்டாள் அவள்.

 

 

ஆராதனா காணாமல் போன விஷயத்தை மாமியாரிடம் சென்று சொல்லவும் சபரீஷ் வேகமாய் வந்து அவள் கழுத்தை பிடிக்கவும் சரியாய் இருந்தது. “ஹேய் என்ன சொன்ன?? என்ன சொன்னேன்னு சொல்லு?? என்ன ரெண்டு பேரும் சேர்ந்து விளையாடுறீங்களா??

 

 

“உனக்கு தெரியாம அவங்க இந்த வீட்டில இருந்து போயிருக்கவே முடியாது. எப்படிடி இப்படி கூசாம வந்து பேசுற?? என்றான் எப்போதும் போல் நிதானத்தை இழந்து.

 

 

“என்ன சொல்றீங்க நீங்க?? நானே அவளை காணோமேன்னு பதட்டமா இருக்கேன். நீங்க அவளை தேடுறதை விட்டுட்டு என்னை போய் கேட்டுட்டே இருக்கீங்க. எனக்கு நிஜமாவே எதுவும் தெரியாதுங்க என்றவளின் கழுத்தை இன்னமும் இறுக்கினான் அவன்.

 

 

“தெரிஞ்சிருந்தா நான் அவளை இப்படி விட்டிருப்பேனா?? என்றவளின் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தாலும் அவன் முன் அழக்கூடாது என்ற நினைப்பில தைரியமாகவே அவன் கண்களை சந்தித்தாள். “நேத்து அனீஷ் தான் வீட்டில இல்லைன்னு தெரியும்ல அப்புறம் நீ அவங்களோடவே படுக்காம எதுக்கு வந்த??

 

 

“நான் நைட் கேட்டப்போ ஏதேதோ சொல்லி மழுப்பிட்ட, பொய் சொல்லாம உண்மையை சொல்லு என்ன உங்களோட பிளான்??என்று கோபமாய் இரைந்தவன் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றான்.

 

 

“நைட் நான் அவகூட படுக்கறேன்னு சொன்னதுக்கு அவ தான் தனியா படுத்துக்கறேன்னு சொன்னா?? நான் விடாம கேட்டு பார்த்திட்டு அப்புறம் தான் நம்ம ரூம்க்கு வந்தேன்

 

 

“அவ இப்படி செய்வான்னு நிஜமாவே எனக்கு தெரியாது. இதுக்கு மேல நீங்க நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம் என்றவளுக்கு வெறுத்து போனது அவன் தன்னை நம்பவில்லையே என்று. தான் என்ன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற நினைவில் கண்ணை கரித்தது.

 

 

“நீ சொல்றது நம்புற மாதிரி இல்லை. அவங்க வெளிய போக ஈஸியா இருக்கும்ன்னு நீங்க ரெண்டு பேரும் போட்ட பிளான்படி தான் செஞ்சிருக்கீங்க, அப்படி தானே என்றான் நம்பாமலே.

 

 

“சபரி போதும் கொஞ்சம் வாயை மூடு. யாழினி ஒண்ணும் பொய் சொல்லலை. பொய் சொல்றவ இப்படி தான் இருப்பாளா?? நீ பேசாம இங்கிருந்து போ, முதல்ல போய் அனீஷுக்கு போன் பண்ற வழியை பாரு என்று மகனை சற்றே கடிந்து சத்தமாய் குரல் கொடுத்தார் திலகவதி.

 

 

ஏனோ சபரீஷ் அந்த குரலில் அடங்கியவனாய் அங்கிருந்து நகர்ந்தவன் அனீஷை அழைக்க சென்றான். திலகவதி சின்ன மருமகளை நோக்கி “ஏன்ம்மா யாழினி, நைட் ஆராதனா எப்படி இருந்தா??

 

 

“இந்த வீட்டில என்ன தான் நடக்குது?? புருஷன் பொண்டாட்டி பிரச்சனைன்னு தான் நான் எதுவும் தலையிடாம இருந்தேன். ஆனா அதுவே தப்பாயிடுச்சு போலேயே

 

 

“நீயாச்சும் சொல்லும்மா எதுக்காக அவங்களுக்குள்ள பிரச்சனை. சபரி ஏன் உன்னையும் ஆராதனாவையும் தப்பா பேசுறான்?? என்று மாமியாராய் மருமகளை பார்த்து கேட்கவும் யாழினி நடந்த விஷயத்தை சுருக்கமாய் அவருக்கு சொன்னாள்.

 

 

“நேத்து அவ அழுதப்போ மாமா ஊருக்கு போறதை நினைச்சு அழறான்னு நினைச்சேன் அத்தை. எனக்கென்னமோ மாமாவுக்கும் அவளுக்கும் இடையில நேத்து பெரிசா ஏதோ பிரச்சனை நடந்திருக்குமோன்னு நினைக்கிறேன் அத்தை. ஆனா இவ வீட்டை விட்டு போற அளவுக்கு அது இருக்கும்ன்னு நான் நினைக்கலையே

 

 

“இவ இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கலை அத்தை, தெரிஞ்சிருந்தா நான் விட்டிருக்க மாட்டேன். சத்தியமா இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமுமில்லை அத்தை. நீங்களாச்சும் என்னை நம்புங்க அத்தை. இப்போ என்ன அத்தை பண்ணுறது?? என்றவளின் கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்ட ஆரம்பித்தது.

 

 

கணவனிடம் தான் தன்னை நிரூப்பிக்க முடியவில்லை. மாமியாரும் தன்னை நம்பாமல் போய்விடுவாரோ என்ற எண்ணத்தில் கண்கள் அவரை பார்த்து கெஞ்சியது.

 

 

“உன்னை எனக்கு தெரியாதாம்மா. எனக்கு தெரியும் நீ எதுவும் செய்யலைன்னு. விடும்மா சபரி ஏதோ தெரியாம பேசிட்டான். அவன் இன்னைக்கு நேத்தா இப்படி இருக்கான் அவனை விட்டுத் தள்ளு என்றவர் “ஆராதனா எதுக்கும்மா இப்படி எல்லாம் பண்ணுறா?? என்ன நடந்துச்சுன்னு வேற தெரியலை. ஒரு வேளை அவங்க வீட்டுக்கு போயிருப்பாளோ?? என்றவருக்குமே பதட்டம் அதிகமாய் தானிருந்தது.

 

 

தோழியை பற்றி நன்கு அறிந்தவளாய் “அவ அங்க போயிருக்க மாட்டா அத்தை?? எதுக்கும் நான் ராஜீவ் அண்ணாக்கு போன் பண்ணி பக்குவமா விசாரிச்சு பார்க்கறேன் என்றவள் ராஜீவனுக்கு அழைத்தாள்.ராஜீவனோ நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூரை நோக்கி ரயிலில் வந்து கொண்டிருந்தான்.

 

 

முதல் நாள் அனீஷ் அவனை கூப்பிட்டு பேசியதில் தன்னால் அவர்களுக்குள் எதுவும் பிரச்சனை வந்திருக்குமோ என்று எண்ணியவன் அனீஷை நேரில் கண்டு பேசிவிடலாம் என்றே கிளம்பி வந்துக் கொண்டிருந்தான்.

 

 

ரயிலில் சிக்னல் சரியாக கிடைக்காமல் போனதால் யாழினியின் அழைப்பு அவனை வந்து சேராமல் போனது. ராஜீவனுக்கு முயன்று பார்த்து தோற்றவளுக்கு ஆராதனாவின் வீட்டிற்கு அழைத்து பேச தயக்கமாய் இருந்தது.

 

 

ஏதேதோ யோசனை செய்தவள் அவளின் அக்காவிற்கு அழைத்து அவளிடம் மட்டும் விஷயம் உரைத்து யாரிடமும் எதுவும் கூறாமல் சாதாரணமாய் செல்வது போல் அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்து வரச்சொன்னாள்.

 

 

ஆராதனா அவர்கள் வீட்டிற்கு செல்லவில்லை என்று உறுதியாக தெரிந்ததும் நெஞ்சில் பெரிய பாறாங்கல் ஒன்று ஏறி அமர்ந்தது, அடிவயிறு பிசைந்தது. அவளுக்கு என்னவாகியிருக்கும் என்று யோசித்து யோசித்தே யாழினி வெகுவாய் கலங்கி போயிருந்தாள்.

 

 

அனீஷிடம் விஷயத்தை சொன்னதுமே அவன் அடுத்த பிளைட்டில் கிளம்பி இந்தியா வருவதாக சொல்லிய விஷயத்தை சபரீஷ் அவன் அன்னையிடம் கூறிக் கொண்டிருந்தான்.

 

 

‘மாமா வேறு வந்து கேட்டால் என்ன சொல்ல?? அவரும் என்னைத் தான் சநதேகப்படுவாரோ?? என்று கலங்கியவள் மனதினுள் ‘ஏன்டி இப்படி எல்லாம் செய்யுற?? எப்பவும் போல இப்பவும் அவசரப்பட்டுட்டியேடி. நீ நினைக்கிறது தான் சரின்னு யோசிச்சே பழகிட்டியேடி

 

 

‘எங்களை ஒரு முறை நினைச்சிருந்தா இப்படி போயிருப்பியா?? என்றவளுக்கு இப்போது ஆராதனாவின் மேல் கோபம் கோபமாய் வந்தது. அவள் மட்டும் நேரில் அவளெதிரில் நின்றிருந்தால் நன்றாக அவளை அடித்திருப்பாளோ என்னவோ அவ்வளவு கோபம் தோன்றி அவள் முகத்தை கன்ற வைத்தது.

 

 

அப்போது அருகே வந்த சபரீஷோ அதை கண்டுவிட்டு “நீ எதுக்கு கோபப்படுற, உன் மேல நாங்க தான் கோபப்படணும். இவ்வளவு தூரம் கேட்கறேன் எனக்கென்னன்னு இருக்க?? எவ்வளவு திண்ணக்கம் உனக்கு

 

 

“அனீஷ் வேற கிளம்பி வர்றான், அவளுக்கு என்ன பதில் சொல்றது?? அண்ணி மேல உயிரையே வைச்சிருந்தான் அவன். உனக்கெங்க அதெல்லாம் தெரியப் போகுது. அவனை எப்படி சமாதானம் செய்யப் போறேன்னு தெரியலையே என்றவனின் கண்மண் தெரியாத கோபம் மீண்டும் அவள் கழுத்தை பிடிக்க வைத்தது.

 

 

அவளை சுவற்றோடு சாய்த்தவன் “சொல்லுடி எங்க போனாங்க அண்ணி?? எதுக்கு போனாங்க?? எல்லாம் அந்த பாழா போன விளம்பரம் தானே இனிமே அதை போடலை போதுமா?? சொல்லு அவங்ககிட்ட உடனே திரும்பி வர சொல்லு

 

 

“போன் பண்ணி இப்போவே சொல்லு என்று கர்ஜித்தான் அவன். ஒரு புறம் சபரீஷை நினைத்து கோபம் எழுந்தாலும் அவன் அறியாமையை நினைத்து ஆற்றாமை எழுந்தது அவளுக்குள்.

 

 

‘என்னைக்கு தான் இவர் என்னை புரிஞ்சுக்குவார் என்ற பெருமூச்சு எழுந்தது அவளுக்கு. சபரீஷ் எப்படியிருந்த போதும் அண்ணனின் மீது அதிக பாசம் கொண்டவனென்பது புரிந்தது.

 

 

அதனால் தான் இப்படி செய்கிறான் என்று புரியவும் அவனை நினைத்து வருத்தம் தான் அவளுக்கு எழுந்தது. மெதுவாய் திரும்பி உணர்ச்சி தொலைத்த முகத்துடன் அவனை பார்த்தவள் “உண்மையை சொல்லட்டுமா?? நிஜமாவே அவ எங்க போனான்னு எனக்கு தெரியாது

 

 

“உங்க ஆத்திரத்துக்கும் அவளோட அவசரத்துக்கும் நான் தான் இப்போ பலியாடா உங்க முன்னாடி நிக்கறேன். உங்களுக்கு இப்போ என் கழுத்தை நெரிக்கணும் அவ்வளவு தானே

 

 

“செய்ங்க என்னை கொன்னுட்டா உங்களுக்கு திருப்தின்னா செய்ங்க என்று நிதானமாய் கூறியவளை “ச்சே.. என்று சொல்லி அவன் விடுவிக்க யாழினி தடுமாறி கீழே சரிந்து அமர்ந்தாள்.

 

அவன் கழுத்தை பிடித்த அந்த கணம் சரியாக ராஜீவன் கதவை தட்டவும் திலகவதி திறந்திருக்க சபரீஷும் யாழினியும் பேசிக் கொள்ளும் சத்தம் கேட்கவும் வந்தவனை வரவேற்காமல் அவர் அவசரமாய் உள்ளே நுழைய பின்னோடே ராஜீவனும் வந்தான்.

 

 

சபரீஷ் யாழினியின் கழுத்தை பற்றியிருப்பதை பார்த்த ராஜீவனுக்கு சுள்ளென்று கோபம் எழுந்தது. யாழினி கீழே சரியவும் அவசரமாய் வந்து அவளுக்கு கைக்கொடுத்தான்.

 

 

ராஜீவனை பார்த்ததும் தடுமாறி எழுந்தவள் “அண்ணா நீங்க எப்போ வந்தீங்க?? நானே உங்களுக்கு போன் பண்ணினேன்என்றவளின் குரலில் பதட்டமும் குற்றவுணர்ச்சியும் அதிகமிருந்தது.

 

 

ராஜீவனோ அவளுக்கு பதில் கொடுக்காமல் சபரீஷையே ஏகத்துக்கும் முறைத்தான். “அண்ணா நான் கேட்டுட்டே இருக்கேன், என்னண்ணா பதில் சொல்லுங்க என்றவள் அவன் கையை தட்டவும் தான் அவன் திரும்பினான்.

 

 

“இல்லைம்மா நான் ட்ரைன்ல வந்துட்டு இருந்தேன். அதான் நீ போன் பண்ணும் போது ரீச் ஆகியிருக்காது. சொல்லும்மா என்ன விஷயம் நீ எதுக்கு என்னை கூப்பிட்ட?? ஆமா ஆராதனா எங்க போய்ட்டா?? என்று அவன் கேள்விகளை அடுக்கவும் யாழினிக்கு அவனிடம் எப்படி சொல்வது என்று மலைப்பாக இருந்தது.

 

 

தன்னை ஒருவாறு திடப்படுத்திக் கொண்டவள் நடந்ததை அவனிடம் கூறவும் அவன் எதுவுமே பேசவில்லை. அமைதியை குத்தகை எடுத்தவன் போல் பேசாமலிருந்தான்.

 

 

“அண்ணா நாம போலீஸ்ல கம்பிளைன்ட் கொடுக்கலாமா?? என்றாள். சபரீஷோ அவளை பார்த்து பயங்கரமாய் முறைத்தான்.

 

 

ராஜீவனோ “அதெல்லாம் வேண்டாம் யாழினி அவளா தானே போயிருக்கா?? அவளே வருவா?? நாம போலீஸ் எல்லாம் போனா குடும்ப பெயர் தான் கெட்டுப் போகும். ஆமா அனீஷ் எங்க?? என்றான் நினைவு வந்தவனாய்.

 

 

“மாமா நேத்து நைட் தான் மலேசியா கான்பிரன்ஸ் கிளம்பி போனார். இவர் போன் பண்ணி சொல்லியிருக்கார், மாமா உடனே அடுத்த பிளைட்ல வர்றேன்னு சொல்லியிருக்காங்க என்றுவிட்டு சபரீஷை பார்த்தாள்.

 

 

“அனீஷ் பிளைட் ஏறிட்டான், எப்படியும் இன்னைக்கு நைட்குள்ள இங்க இருப்பான் என்று எங்கோ பார்த்து சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

 

 

“என்னப்பா சாப்பிடுற?? என்ற திலகவதியை ஏறிட்டான் அவன். “அத்தை மன்னிச்சுடுங்க, ஆராதனா ஏதோ புரியாம பண்ணிட்டா?? நீங்க அவளை தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு உங்களை பார்க்கவே கஷ்டமா இருக்கு என்றான் ராஜீவன் குற்றவுணர்ச்சியாக.

 

 

“உன்னை பார்த்ததும் எனக்கு தான்பா தர்மசங்கடமா இருந்துச்சு. இப்படி வீட்டு பொண்ணை தொலைச்சுட்டீங்களேன்னு நீங்க கேட்டுடுவீங்களோன்னு நினைச்சு பயந்தேன். நீ என்னையே சமாதானப்படுத்துறியேப்பா??

 

 

“என்னத்த சொல்ல?? எனக்கு ஆராம்மா பண்ணது கொஞ்சமும் பிடிக்கலை. அதுக்காக என் மருமகளை நான் வெறுத்திட மாட்டேன். பொண்ணு இல்லாத எனக்கு அவ மகளா தான் தெரியறா??

 

 

“என் பொண்ணுன்னா பொறுத்துக்க மாட்டேனா?? அவ நல்லபடியா திரும்பி இந்த வீட்டுக்கு வந்தா போதும். வயித்து பிள்ளைக்காரி அதை நினைச்சா தான் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு

 

 

“நாடு இப்போ இருக்கற நிலைக்கு என்ன நடக்குமோ தெரியலை?? அதெல்லாம் நினைச்சா தான் குலை நடுங்குதுப்பா எனக்கு என்றவரின் கண்களும் மனமும் சோர்ந்திருந்தது நன்றாகவே தெரிந்தது அவனுக்கு.

 

 

Advertisement