Advertisement

அத்தியாயம் – 17

 

 

ஆராதனா அவள் கையில் இருந்த காசை எடுத்து பார்த்தாள், தான் செய்யப் போவது சரி தானா என்று மனதிற்குள்ளாகவே பலமுறை கேட்டுக் கொண்டாள்.

 

 

எத்தனை முறை கேட்டாலும் அவள் மனது சொன்ன பதில் ஒன்றே ஒன்று தான். முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார் என்பதிற்கேற்ப ஒரு நல்ல விஷயத்திற்காக எடுக்கப்படும் முயற்சியானது தவறானதாகாது என்பதை உறுதியாய் நம்பினாள்.

 

 

அவள் செய்யப்போகும் விஷயத்தை பற்றி யாழினியிடம் கூட அவள் மூச்சு விடவில்லை. அவள் வீட்டினர் அனைவரும் மறுநாள் காலை ஊருக்கு கிளம்பிவிட அதற்காகவே காத்திருந்தார் போல் இருந்தவள் அனீஷின் வரவிற்காய் காத்திருக்க ஆரம்பித்தாள்.

 

 

அவள் கர்ப்பமாயிருக்கிறாள் என்பது அறிந்த நாளில் இருந்து அனீஷ் தாமதமாய் வீட்டிற்கு வருவதில்லை. இந்த ஒரு வாரமும் நேரமாகவே வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தான் அவன்.

 

 

ஆராதனா ஏதோவொரு குண்டை வீச ஆரம்பிக்க போகிறாள் என்று அறிந்திருந்தால் அவன் தாமதமாய் வந்திருப்பானோ என்னமோ?? ஆனாலும் இன்று இல்லாவிட்டால் நாளை கூட அவள் அதையே தானே செய்திருப்பாள்.

 

 

அனீஷ் வீட்டிற்கு வந்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன பின்னே அவனை நாடி வந்தாள் ஆராதனா. அவன் முன்னே கையோடு கொண்டு வந்திருந்த பணத்தை கொண்டு வந்து வைத்தாள்.

 

 

அவன் நிமிர்ந்து என்ன இது என்பது போல் அவளை பார்த்தான். “நான் டெலிவரிக்கு எங்க வீட்டுக்கு போக கூடாதுன்னு சொல்லிட்டீங்க என்று ஆரம்பித்தாள் அவள்.

 

 

“அதை தான் அன்னைக்கு ஆஸ்பிட்டல்ல வைச்சு சொல்லிட்டேனே. அப்புறம் அதுல என்ன வந்தது. உங்க வீட்டிலையும் இதை பத்தி சொல்லியாச்சு அப்புறம் என்ன?? என்றவன் ‘அதற்கும் இந்த பணத்திற்கும் என்ன சம்மந்தம் என்று மேலே வார்த்தையால் கேட்காமல் பார்வையால் கேள்வியாக்கினான்.

 

 

எங்கே அவளிடம் எதுவும் கேட்டு தேவையில்லாமல் மீண்டும் ஒரு வார்த்தை யுத்தம் புரிய அவன் விரும்பவில்லை. அவன் எண்ணங்களை மனதிற்குள் புதைத்துக்கொண்டு அவள் பதிலிற்காய் அவளை பார்த்தான்.

 

 

“அதுக்கும் இந்த காசுக்கும் என்ன சம்மந்தம்ன்னு தானே யோசிக்கிறீங்க என்றவள் சற்று நிறுத்தி அவன் முகத்தை ஏறிட்டாள். அவனுக்கு எதுவோ புரிந்தது போல் இருந்தது. அவளே பேசட்டும் என்று எண்ணினான்.

 

 

“நாளைக்கு இந்த பணத்தை நம்ம ஆஸ்பிட்டல்ல கட்டிடலாம் என்றவளை நிஜமாகவே புரியாமல் பார்த்தான் அவன்.

 

 

“எதுக்கு கட்டணும்?? அதுக்கு இப்போ என்ன அவசியம்?? ஏன் என் பொண்டாட்டிக்கு என்னால இதெல்லாம் செய்ய முடியாதா?? என்றவனின் குரலில் கோபம் சற்று ஏறி கடினத்தன்மையுடன் இருந்தது.

 

 

“இல்லை இது தலைபிரசவம் அம்மா வீட்டில தான் பார்ப்பாங்க. அங்க போய் பார்க்கலைன்னாகூட இதெல்லாம் அவங்க தான் செய்யணும், அது தானே முறை

 

 

“அதை தான் கேட்கறேன் இப்போ அந்த முறைக்கு என்ன அவசரம் வந்திச்சு?? என் பிள்ளைக்கும் பொண்டாட்டிக்கும் என்னால பார்க்க முடியாதா?? என்ன தான் முறையோ?? என்று சலித்தவன் “இந்த காசை உங்கண்ணன் தான் என்கிட்ட கொடுக்க சொன்னானா??

 

 

“நாளைக்கு பேசிக்கறேன் அவன்கிட்ட?? என்றவனின் குரல் கண்டிப்பாக நாளை அவள் அண்ணனிடம் பேசிவிடுவான் என்றே தோன்றியது அவளுக்கு.

 

 

அவள் ஒன்று நினைக்க இதென்னடா வம்பு என்று நினைத்தவள் “அதெல்லாம் எதுவும் வேண்டாம். எங்கண்ணன் எதுவும் சொல்லலை நானா தான் முடிவெடுத்தேன். அவனுக்கும் இதுக்கும் எதுவும் சம்மந்தமில்லை

 

 

“என்ன சொல்றே?? என்றவனின் குரலில் நிச்சயம் இலகுத்தன்மை இல்லை. எங்கே கோபமாய் பேசிவிடுவோமோ என்றெண்ணி அவன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.

 

 

அவனால் வெகு நேரம் அவன் கோபத்தை இழுத்து பிடிக்க முடியவில்லை. அது கொஞ்சம் கொஞ்சமாக அவனை விட்டு போய் கொண்டிருந்தது.அவன் முகம் போன போக்கை கண்டு சற்று அமைதியானவள் மேலே பேசலாமா?? வேண்டாமா?? என்று யோசித்தாள்.

 

 

அவன் முகம் கோபத்தை பூசிக்கொள்வதை நன்றாகவே அவளால் உணரமுடிந்தது. “நாளைக்கு ஒரு பேச்சுன்னு வந்திடக்கூடாது. இந்த மாதிரி விஷயமெல்லாம் எங்க வீட்டுல தான் பார்க்கணும், பார்ப்பாங்க என்றாள் அழுத்தமாக.

 

 

“என்னை என்ன கையாலாகாதவன்னு நினைச்சியா?? என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல நீயா ஒண்ணை நினைச்சு நீயா முடிவெடுக்குற!! இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கலை ஆராதனா

 

 

“இந்த பேச்சை இத்தோட விடு, மேற்கொண்டு பேசி என்னை ரொம்ப கோபப்படுத்தாத. முதல் வேலையா இந்த காசை உங்க வீட்டுக்கு திருப்பி கொடுத்து விடு என்றவன் மேலே எதுவும் பேசாமல் அடக்கி வைத்த கோபத்துடன் எழுந்து வெளியில் சென்று விட்டான்.

 

 

அவன் இவ்வளவு சொல்லியும் ஆராதனா சும்மா இருப்பவளா?? அவள் நினைத்ததை நின்று சாதிக்கும் ரகமாயிற்றே. என்ன செய்தேனும் சில விஷயங்களை மாற்றியே ஆகவேண்டும் புரிய வைத்தே தீரவேண்டும் என்ற உந்துதலில் அடுத்து அவள் செய்தது அவளை அவனை விட்டு விலகி நிறுத்தியது.

 

நடந்த விஷயத்தில் அனீஷ் ஒன்றை கவனிக்க மறந்துவிட்டான். கவனித்திருந்தால் அவனும் அவளை விட்டு விடாதிருந்திருப்பானோ?? என்னவோ??

 

 

குழந்தை உருவாகி சில நாட்கள் தான் ஆகிறது. குழந்தை பேறுக்கு எவ்வளவு நாட்கள் இருக்க அதற்குள்ளாகவே மனைவி பணத்தை நீட்டுகிறாளே என்ன விஷயமாய் இருக்கும் என்று அவன் தீர யோசிக்க மறந்திருந்தான்.

 

 

இரண்டு நாட்கள் எந்த வித பேச்சும் இல்லாமல் அமைதியாகவே கழிந்தது. மனைவி தன் பேச்சை கேட்டுவிட்டாள் என்று ஒரு ஓரத்தில் நிம்மதி வந்தது. இப்படியே இவள் இருந்தால் எந்த பிரச்சனையுமில்லையே என்று எண்ணிக் கொண்டான்.

 

 

அனீஷ் வாரத்தில் ஒரு நாள் நோயாளிகள் பார்வையிடும் நாளுக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு மருத்துவமனை கணக்கு வழக்குகளை பார்ப்பது வழக்கம். அன்று அவன் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

கணினியின் திரையில் ஒவ்வொன்றாக சரி பார்த்துக் கொண்டு வந்தவனின் கண்கள் அனிச்சையாய் ஓரிடத்தில் நிலைபெற்று நின்றது. கண்கள் வெளியே வந்து விழுந்து விடும் போல் திரையை வெறித்து பார்த்தவன் யாருக்கு போனில் அழைத்து உடனே அவன் அறைக்கு வரச்சொன்னான்.

 

 

கதவை தட்டிவிட்டு நடுத்தர வயதுடைய ஒருவர் உள்ளே வந்தார். “எனக்கு இந்த வவுச்சர் ரிசிப்ட் வேணும் உடனே கொண்டு வாங்க என்றான். அவன் திரையில் காட்டிய எண்ணையும் தேதியையும் குறித்துக்கொண்டு வெளியில் சற்று நேரத்திற்கெல்லாம் அவன் கேட்ட தகவலுடன் வந்தார்.

 

 

“சார் இந்தாங்க நீங்க கேட்ட ரிசிப்ட் என்று அவன் கையில் அந்த பைலோடு கொடுத்தார். “இதுல இருக்க பேரை நீங்க கவனிக்கலையா?? எப்படி காசை வாங்கி உள்ள போட்டீங்க?? அவன் குரலில் அப்பட்டமான கோபமிருந்தது.

 

 

‘இதென்னடா வம்பா போச்சு, காசு வந்தா வாங்கி என்ட்ரி போடுறது தானே என்னோட வேலை. இதுல யாரு என்னன்னு நான் எப்படி பார்ப்பேன். காசு தானே வந்திருக்கு

 

 

‘அதுக்கு எதுக்கு இவரு முறைக்கிறாரு?? அப்படி யாரு பேரு இது என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டு அவன் அவர் புறமாக திருப்பிய பைலை பார்த்தார்.

 

அதில் ஆராதனா அனீஷிற்காய் அவர்கள் மருத்துவமனையின் சிறப்பு ஸ்கீமின் அடிப்படையில் அந்த பணம் வரவு வைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்ததும் திடுகிட்டவர் “சார் இது?? என்று இழுத்தார் அவர்.

 

 

கையொப்பம் இடும் இடத்தில் on behalf of Rajeevan என்று எழுதி கீழே யாரோ கையொப்பமிட்டிருந்தனர். ‘நான் அவ்வளவு சொல்லியும் வந்து காசு கட்டிட்டு கட்டியிருக்கு, இதை செஞ்சது ஆராதனாவா அவள் அண்ணனா?? என்று குழம்பிக் கொண்டிருந்தவன் எதிரில் நிற்பவர் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது கண்டு அவன் பாவனைகளை மாற்றினான்.

 

 

“இதை வரவு வைக்காதீங்க, என்னோட மனைவியோட அண்ணன் தான் வந்து காசு கட்டிட்டு போயிருக்கார். தலைபிரசவம் அவங்க தான் பார்க்கணும்னு என்னென்னமோ சொல்லிட்டு இருந்தாங்க

 

 

“நான் மறுத்திடிடுவேன்னு இப்படி வந்து கட்டிட்டு போய்ட்டாங்கன்னு நினைக்கிறேன். சோ இதை நீங்க வரவு வைக்க வேண்டாம். அப்புறம் இதை என்ன செய்யணும்ன்னு  நான் சொல்றேன். இப்போ நீங்க போங்கஎன்று அந்த விஷயத்தை சாதாரணம் போல் சொல்லி அவரை அனுப்பினான்.

 

 

அவர் வெளியில் சென்றதும் ராஜீவனுக்கு அழைத்தான். எதிர்முனையில் உடனே எடுத்தவன் “சொல்லுங்க அனீஷ் என்றான். “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க ராஜீவ்?? என்ற அனீஷின் குரல் மற்றவனுக்கு புதிதாய்.

 

 

“என்ன அனீஷ்?? கோவமா இருக்கீங்களா?? என்ன விஷயம்ன்னு சொல்லுங்க?? எதுக்கு கோபமா பேசறீங்க?? ஆராதனா எதுவும் தப்பு பண்ணிட்டாளா?? என்றான் அவன்.

 

 

“உங்களை யாரு ஆஸ்பிட்டல்ல பணத்தை கட்டச்சொன்னது என் பொண்டாட்டிக்கு பிரசவம் கூட பார்க்க முடியாம நானென்ன வக்கத்து போயிட்டேனா?? என்றான் உரத்த குரலில்.

 

 

“அனீஷ் நீங்க சொல்றதும் எதுவும் புரியலை எனக்கு. நான் எங்கயும் காசு கட்டலையே. ஏன் என்னென்னவோ சொல்றீங்க??என்ற ராஜீவனுக்கு தங்கை தன்னிடம் பணம் கேட்டது ஞாபகம் வந்தது.

 

 

‘கடவுளே என்ன பிரச்சனையை கூட்டி வைச்சிருக்காளோ தெரியலையே? என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டே கடவுளிடம் எதுவும் இருக்கக்கூடாது ஆண்டவா என்று பிரார்த்தனையும் செய்தான்.

 

“அப்போ யாரு காசு கட்டினது?? ரிசிப்ட்ல உங்க பேரு தான் போட்டிருக்கு. ஆமா கேட்க மறந்திட்டேன், நீங்க ஆராதனாக்கு எதுக்கு காசு கொடுத்தீங்க. பிரசவம் பார்க்க தானே என்றான் மீண்டும்.

 

 

“நான் ஆராதனாவுக்கு காசு கொடுத்தது உண்மை தான் அனீஷ். அது நிச்சயம் பிரசவத்துக்காக எல்லாம் இல்லை. அவ ஏதோ காசு கேட்டாளேன்னு கொடுத்தேன். உங்களுக்கு எதுவும் கிப்ட் வாங்குவாளோ என்னவோன்னு நினைச்சேன்

 

 

“வேற எந்த காரணமும் இல்லை, இதுவரை அவ எப்பவும் என்கிட்ட காசு கேட்டதேயில்லை. அதனால தான் அவ கேட்டதும் என்ன ஏதுன்னு யோசிக்காம கொடுத்திட்டேன்

 

 

“நான் உங்களுக்கு தெரியாம கொடுத்தது தப்பு தான் அனீஷ். என்னை மன்னிச்சுடுங்க, ப்ளீஸ் ஆராதனாவையும் மன்னிச்சுடுங்க. அவ ஏதோ நினைச்சு தெரியாம பண்ணியிருப்பா?? என்றவன் தனக்கும் தங்கைக்குமாய் ஒரே சேர மன்னிப்பு கோரினான்.

 

 

மேலே எதுவும் பேசாத அனீஷ் “சரி உங்க அக்கவுன்ட் நம்பர் உடனே எனக்கு அனுப்பி வைங்க என்றான். ‘இல்லை, எதுக்கு என்ற பேச நினைத்தாலும் ராஜீவன் வாயே திறக்கவில்லை.

 

 

தான் மறுத்து பிரச்சனை பெரிதாவதை அவன் விரும்பவில்லை. அவனறியவில்லை பிரச்சனையே இப்போது தான் பெரிதாகியிருக்கிறது என்று. “சரி அனீஷ் உங்களுக்கு மெசேஜ் அனுப்பறேன் என்றுவிட்டு வைத்தான்.

 

 

ராஜீவனிடம் பேசி வைத்த மறுநிமிடமே அவன் வங்கி கணக்கு எண்ணை அவன் அனுப்பி வைத்திருக்க அந்த நொடியிலேயே அவன் கணக்கிற்கு பணத்தை மாற்றிவிட்டவன் கோபத்துடன் விருட்டென்று அங்கிருந்து கிளம்பினான்.

 

 

உள்ளுக்குள் கோபம் எரிமலையாய் பொங்கிக் கொண்டிருந்தது. ஆராதனாவின் மேல் இமாலய கோபம் வந்தது அவனுக்கு. பொறுமையாய் போகும் அவன் பொறுமை அறவே அவனை விட்டு போயிருந்தது.

 

 

காரை ஓட்டினானே தவிர அவன் எண்ணம் முழுதும் ஆராதனாவே ஆக்கிரமித்திருந்தாள். கடைசியில் அவனை எந்தளவுக்கு தரம் தாழ்த்தி விட்டாள் அவள் என்று நினைக்க நினைக்க அவனுக்கு ஆறவேயில்லை.

 

காரை வாசலில் நிறுத்தி ஓங்கி அறைந்து சாத்தியவன் அதே வேகத்துடன் புயல் போல் அவர்கள் அறைக்குள் நுழைந்தான். வீட்டில் ஆராதனா மட்டுமே தனித்திருந்தாள். யாழினியும் திலகவதியும் சாரதாம்பாள் கோவிலுக்கு சென்றிருந்தனர்.

 

 

“என்னடி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல?? என்னை பத்தி என்னடி உனக்கு நினைப்பு?? என்னை பார்த்தா உனக்கு பணப்பேய்ன்னு தோணுதா??சொல்லு என்ன நினைப்புல நீ ஆஸ்பிட்டல்ல காசு கட்டின என்றவனின் கண்கள் சிவந்து வார்த்தைகள் நெருப்பை கக்கின.

 

 

“எங்க வீட்டில தான் செலவு செய்யணும்னு நான் சொன்னேன் நீங்க கேட்கலை, நீங்களே கொண்டு போய் ஆஸ்பிட்டல்ல  கட்டிடுவீங்கன்னு தான் அன்னைக்கு காசை உங்ககிட்ட கொடுத்தேன்

 

 

“நீங்க என்னை திட்டிட்டு போய்ட்டீங்க. அதனால தான் நானே அந்த காசை கட்ட வேண்டியதா போச்சு என்று வெகு அலட்சியமாக அவனுக்கு பதில் கொடுத்தாள்.

 

 

அவளருகே வந்தவன் “சரி அப்படியே செலவு பண்ணனும்ன்னா கூட இப்போ அதுக்கு என்ன அவசரமும் அவசியமும் வந்திச்சு என்றவனின் கண்கள் இடுங்கியிருந்தது. அவன் கண்களில் கோபத்தின் கனல் நன்றாகவே வீசியது.

 

 

அதெல்லாம் எதையும் கண்டுகொள்ளாதவளாக அவள் பேச்சை மேலே தொடர்ந்தாள். “உங்க ஆஸ்பிட்டல்ல தான் சீக்கிரமே பணத்தை கட்டிட்டா நார்மல் டெலிவரி, சிசேரியன் எதுனாலும் ஒரே காசு தானே. நீங்க எங்க வீட்டுக்கு அனுப்பலைன்னாலும் எனக்கு இது தலைபிரசவம் ஆச்சே

 

 

“அவங்க தானே பார்க்கணும் அதுக்கு தான் இப்போவே காசை கட்டிடலாமேன்னு என்றவளின் பேச்சு விஷத்தை தடவிய ஊசியை யாரோ அவனுக்கு குத்தியது போல் வலி எடுத்தது.

 

 

அவன் முகம் ரௌத்திரமாய் மாறி ரத்தம் நிறம் கொண்டிருந்தது. அவன் பொறுமை முற்றிலும் துறந்தவனாய் அவள் இருதோளையும்அவன் இருகைகளால் பிடித்து அவனருகே இழுத்தவன் “என்ன சொன்னே?? என்னடி சொன்னே?? என்றான் கோபமாய்.

 

 

“உன் மனசுல என்னை பத்தி என்ன நினைச்சுட்டு இருக்க நீ?? கொஞ்சம் கூட யோசிக்காம எப்படி உன்னால இப்படி எல்லாம் பேச முடியுது

 

அவன் பேசும்போதே அவள் மறுத்து பேச ஆயத்தமானாள். “நான் யோசிக்காம எல்லாம் பேசலை, நல்லா யோசிச்சு தான் சொல்றேன். நீங்க போட்ட ஸ்கீம் தானே, அது நல்ல ஸ்கீம் அதான் நான் இப்போவே பணம் கட்டலாம்ன்னு முடிவு பண்ணேன்

 

 

“இப்போவே கட்டிட்டா தானே உங்க ஆஸ்பிட்டல்ல நாங்க பார்க்க முடியும். இன்னும் கொஞ்ச நாள் ஆனா டெபாசிட் அமௌன்ட் அதிகம் பண்ணிடுவீங்க. அதான் முன்னாடியே கட்டினேன் இதிலென்ன தப்பிருக்கு என்றவனின் கரங்கள் அவனறியாமேலே அவளை அடிக்க ஓங்கிவிட்டது.

 

 

சட்டென்று அவன் கையை ஓங்கவும் அதை எதிர்பாராதவள் பயந்து ஓரடி பின்னே நகரவும் தான் அவனுக்கு தான் செய்ய இருந்த காரியம் உறைக்க கையை கீழே இறக்கினான்.

 

 

“அவ்வளவு திமிரா உனக்கு, என்ன என்னை குத்திக்காட்டுறியா?? சீய்!! வாயை மூடுடி!! என்ன தைரியம் உனக்கு என்கிட்ட இப்படி பேச??என்றவனால் அவன் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

 

 

“நான் உங்களை இப்போ எதுவுமே சொல்லலையே, எதுக்கு கையை ஓங்கிட்டு வர்றீங்க. நான் இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன். நான் எப்படி பேசணும் உங்கக்கிட்டன்னு நினைக்கறீங்க

 

 

“இந்த காசை உங்ககிட்ட கொடுக்காம நேரா போய் கட்டலாம்ன்னு தான் முதல்ல நினைச்சேன். அங்க போய் நானே கட்டினா உங்களுக்கு கவுரமா இருக்காதுன்னு தான் இங்கயே உங்ககிட்ட கொடுக்கலாம்ன்னு நினைச்சேன்

 

 

“நீங்க தான் அன்னைக்கு அவ்வளவு பேசிட்டு போனீங்க. அதான் நான் நேரா போகாம ஒரு ஆளை வைச்சு பணத்தை கட்டிட்டேன் என்றவள் கொஞ்சம் கூட அவன் கோபத்தை லட்சியம் செய்யாமல் மேலே மேலே குத்தீட்டியாய் வார்த்தைகளால் காயப்படுத்தினாள்.

 

 

“போதும் நிறுத்து ஆராதனா. நானும் போதும் போதும்ன்னு பார்க்கறேன். என்ன தான்டி உனக்கு பிரச்சனை??நீ காசு கொண்டுட்டு வரும் போது ஏதோ பிரசவத்துக்கு உங்க வீட்டில இருந்து கொடுக்க சொன்னதா கொடுக்க போறியோன்னு நினைச்சேன். ஆனா நீ என்னல்லாம் பேசுற??

 

 

“நான் என்ன இப்போ தப்பா சொல்லிட்டேன். உங்க குடும்பம் அளவு எங்க குடும்பம் அதிக வசதி எல்லாம் இல்லை. இது நல்ல ஸ்கீம் எங்களுக்கும் செலவு குறைச்சல் ஆகும் அதுக்காக தானே பார்த்தேன். அதுக்காக தானே இந்த ஸ்கீம் எல்லாம் வைச்சு விளம்பரம் பண்ணிட்டு இருக்கீங்க என்று மேலும் மேலும் குத்திக்காட்டவும் அனீஷ் அந்த வார்த்தையில் மிகவும் அடிபட்டு போனான்.

 

 

“வாயை மூடு ஆராதனா, நான் சொல்லிட்டே இருக்கேன் நீ பேசிட்டே இருக்க. பேசாத நீ இனிமே எதுவும் பேசாத. எப்படி எல்லாம் குத்திக்காட்டி பேசுற?? நான் அப்படி என்ன பெரிய குற்றம் பண்ணிட்டேன்னு இந்தளவு என்னை கீழ இறக்கி உன்னால நினைக்க முடியுது

 

 

“உன் மேல அன்பு வைச்சது தவிர நான் என்ன தப்பு செஞ்சேன் ஆராதனா. எதுக்குடி இப்படி வார்த்தையால என்னை கொல்ற?? உனக்கு என்ன வேணும் இப்போ!!! நான் அந்த மாதிரி விளம்பரம் பண்ணக் கூடாது அது தானே வேணும் உனக்கு

 

 

“அதை சொல்லிக்காட்ட தானே இப்படி ஒரு வழியை தேர்ந்தெடுத்த?? முடியாது என்னால அதை நிறுத்தவே முடியாது. இதே விஷயத்தை நீ மறுபடியும் என்கிட்ட அன்பா சொல்லியிருந்தா கூட நான் கேட்டிருப்பேன். உனக்காக நிச்சயம் நான் செஞ்சிருப்பேன்

 

 

“ஆனா என்னை காயப்படுத்தவே நீ இப்படி செய்யறன்னா முடியாது என்னால என்னை மாத்திக்க முடியாது முடியவே முடியாதுடி. இப்போ சொல்றேன் கேட்டுக்கோ நான் எதையும் நிறுத்தறதா இல்லை

 

 

“நான் இப்படி தான் இருப்பேன், எப்பவும் இப்படி தான் இருப்பேன். இனி உன் விஷயத்துல நான் தலையிடவே மாட்டேன். என் விஷயத்துல நீயும் தலையிடாதே. இன்னையோட உனக்கும் எனக்கும் எல்லாமே முடிஞ்சு போச்சு

 

 

“நீ என் மூஞ்சியில இனிமே முழிக்காதே. எனக்கும் உன் மூஞ்சில முழிக்கறதுக்கு கூட பிடிக்கலை, எங்கயாச்சும் கண்காணாம போய்ட போறேன். உங்க அண்ணன்கிட்ட போன் பண்ணி சொல்லிடறேன். நாளைக்கு வந்து அவனே உன்னை கூட்டிட்டு போய்டுவான்

 

 

“உன் விருப்பப்படி உன் பிரசவம் உங்கம்மா வீட்டிலேயே பார்க்கட்டும். அதுவரை நீ அங்கேயே இருஎன்றவன் அங்கே நில்லாமல் மேலே அவளிடம் எதுவும் பேசப்பிடிக்காதவனாய் போனை எடுத்து யாருக்கோ போன் செய்தான்.

 

 

“டேனியல் நாளைக்கு அந்த மலேசியா கான்பிரன்ஸ்க்கு நான் வரலைன்னு சொல்லி இருந்தேன்ல. இப்போ சொல்றேன் நான் அங்க போறேன், எனக்கு இன்னைக்கு நைட்டே டிக்கெட் போட்டுடுங்க என்றுவிட்டு போனை வைத்தவன் அவளிடம் எதுவும் பேசாமல் அவன் பெட்டி எடுத்து துணிகளை அடுக்கலானான்.

 

 

“நான் போறேன், ராஜீவனுக்கு போற வழியில போன் போட்டு சொல்லிடறேன். நீ கிளம்பி தயாரா இரு என்றுவிட்டு அவன் பாட்டுக்கு கிளம்பிச் சென்றுவிட்டான்.

 

 

ஆராதனா இதெல்லாம் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தாள் தான் இருந்தாலும் அவனை காயப்படுத்தியதிற்காய் அவள் மனம் வலிக்க ஆரம்பித்தது. அவனின் உதாசீனம் நெஞ்சில் பாறாங்கல்லை ஏற்றி வைத்தது போன்று கனத்தது.

 

 

விழிகளில் இதோ வழிந்துவிடுவேன் என்று குளம் கட்டி நின்றது கண்ணீர். அவன் கிளம்புவது மங்கலாய் தெரிந்தது. எதுவும் பேசாமல் அமைதியாய் கட்டிலில் அமர்ந்தாள்.

 

 

அனீஷ் பெட்டியை அடுக்கி முடிக்கவும் அவன் கைபேசி அடிக்கவும் சரியாய் இருந்தது. “சொல்லு டேனி, ஹ்ம்ம் எத்தனை மணிக்கு ப்ளைட் ஒரு மணிக்கா சரி நான் இப்போவே கிளம்பறேன் என்றவன் திரும்பி அவளை எரிப்பது போல பார்த்துவிட்டு வேகமாய் வெளியில் சென்றுவிட்டான்.

 

 

அவன் சென்ற சற்று நிமிடதிற்கெல்லாம்கோவிலில் இருந்து திரும்பி வந்திருந்த யாழினி உள்ளே நுழைந்தாள். “ஆரு என்னாச்சுடி?? எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்க??

 

 

“மாமா ஊருக்கு போறாங்கன்னு பீல் பண்ணுறியா?? மாமா போன் பண்ணியிருந்தாங்க அத்தைக்கு, ஏதோ கான்பிரன்ஸ்ன்னு சொல்லிட்டு தானே போய் இருக்காங்க. அதுக்கெல்லாமா வருத்தப்படுவாங்க

 

 

“அவங்க எப்பவும் இப்படி போறது தானே. சீக்கிரம் வந்திடுவாங்கடி வருத்தப்படாதே சரியா?? எனவும் ஆராதனா தோழியை கட்டிக்கொண்டு ஓவென்று ஆழ ஆரம்பித்தாள். யாழினி அறிந்தது ஆராதனா அனீஷை பிரிந்திருக்க வருந்தியே அழுகிறாள் என்று எண்ணி.

 

 

அதை மனதில் வைத்தே தோழியை சமாதானம் செய்ய அவளோ மேலே மேலே நிற்காமல் அழவும் குழந்தையை காரணம் காட்டி அவள் அழுகையை நிறுத்தி சமாதானம் செய்தாள்.

 

 

ஏதேதோ சொல்லி அன்று இரவு உணவு அவளை அருந்த வைத்தவள் அனீஷ் வரும் வரை அவளுடனே படுத்துக்கொள்வதாக கூறவும் ஆராதனா மறுத்தாள். “வேணாம் யாழி நீ உன்னோட ரூம்லயே படு. தனியா இருக்க எனக்கொன்னும் பயமில்லை

 

 

“உனக்கு தனியா இருக்க பயமில்லைன்னு எனக்கு தெரியும். மாமா வேற ஊருக்கு போயிருக்காங்க. மாசமா இருக்க உன்னை தனியா படுக்க வைக்க எனக்கு தான் மனசு கேட்கலை என்றாள் யாழினி.

 

 

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் யாழி நான் பார்த்துக்கறேன். நீ போ தம்பி உனக்காக காத்திட்டு இருப்பாங்க என்றாள் மற்றவள்.

 

 

‘ஹ்க்கும் அப்படியே காத்திட்டு இருந்திட்டாலும் என்று மனதிற்குள் நொடித்துக் கொண்டாள் யாழினி. கடைசியாக அவளிடம் மன்னிப்பு கேட்டபிறகு அவன் அவளிடம் வந்து எந்த விளக்கமும் சொன்னானில்லை.

 

 

அவளுக்குமே சபரீஷ் உண்மையிலேயே மாறியிருக்கிறான் என்று புரிந்தது. இருந்தாலும் அவளாக அவனிடத்தில் சென்று பேச யோசித்தாள். ஆராதனாவிடம் விடைபெற்று அவள் அறைக்கு சென்றாள்.

 

 

ஆராதனா எடுக்கப் போகும் முடிவை அறிந்திருந்தால் அவள் தோழியை விட்டு இம்மியளவும் நகர்ந்திருக்க மாட்டாள். சபரீஷும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாய் மீண்டும் பழைய நிலைக்கு சென்றிருக்க மாட்டான்.

 

 

மறுநாள் நன்றாக விடிந்த பொழுது யாழினி எப்போதும் போல் எழுந்து காலை வேலைகளை முடித்தவள் இன்னமும் எழுந்து வந்திருக்காத ஆராதனாவை எழுப்ப கையில் காபியுடன் சென்றாள். ஆராதனாவின் அறைக்கதவை மெதுவாக தட்டவும் அது திறந்து கொண்டு தான் தாழிடப்படாமல் இருப்பதை காட்டியது.

 

 

யாழினி கண்களை அறையை சுற்றி பார்க்க ஆராதனாவை காணவில்லை. கட்டிலின் அருகே இருந்த மேஜையில் காபியை வைத்துவிட்டு குளியலறை கதவருகே சென்றவள் அப்படியே நின்றாள்.

 

 

ஆராதனா அங்கு இல்லை என்பதை வெளியில் தாழிட்டிருந்த கதவு உணர்த்த உள்ளுக்குள் ஏதோவொரு உணர்வு எதுவோ சரியில்லை என்று மூளைக்கு அச்சுறுத்த அவளை பதட்டம் தொற்றிக் கொண்டது.

 

 

பின் வீட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குக்கும் சென்று தேடியவள் மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்தாள். அப்போது தான் மேஜையில் இருந்த அந்த சிம் கார்ட் கண்ணில்பட்டது.

 

 

வேறு எதுவும் இருக்கிறதா என்று தேடி பார்த்தவளுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை. அவசரமாய் அங்கிருந்த மர அலமாரியை திறக்க அங்கு ஆராதனாவின் உடைகள் கொஞ்சம் குறைந்திருப்பது போல் தோன்றியது.

 

 

நடந்ததெல்லாம் அவளுக்கு உரைத்த செய்தி ஒன்று தான் ஆராதனா வீட்டை விட்டுச் சென்றுவிட்டாள். ஏன் சென்றாள்?? எதற்கு சென்றாள்?? என்பது முழுதாய் உணரமுடியாவிட்டாலும் அனீஷுக்கும் அவளுக்கும் இடையில் என்னமோ நடந்திருக்கிறது என்பது புரிந்தது.

 

 

ஆராதனா வீட்டைவிட்டு சென்றுவிட்டாள் என்பதைத்தான் அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை. அடுத்து என்ன செய்வது என்று குழம்பித் தவிக்க விஷயத்தை ஒருவாறு திலகவதிக்கு சொல்லிவிட்டாள்.

 

____________________

 

 

அதிகாலையிலேயே அந்த ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தவள் அங்கு வந்து நின்ற சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணச்சீட்டுடன் ஏறி அமர்ந்தாள். வயிறு வேறு எனக்கு ஏதாவது கொடேன் என்று கேட்க தன்னிலையை கருதியவள் ஒரு கப் பாலை வாங்கி அருந்தினாள்.

 

 

இனி எங்கு செல்ல வேண்டும் என்ற இலக்கில்லாமலே அந்த ரயிலில் ஏறிவளுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லாமல் கண்ணை மூடி சோர்வுடன் சயனித்திருந்தாள் ஆராதனா….

 

____________________

 

 

மதிய உணவு வேளையில் சுனீஷ் மது வேலை பார்க்கும் ஹோட்டலுக்கு உணவருந்த வந்து சேர்ந்தான். வேண்டுமென்றே அவள் பரிமாறாத டேபிளாக சென்று அமர தூரத்திலிருந்தவள் அவனை பார்த்து லேசாய் முறைத்துவிட்டு முகம் வாட நின்றிருப்பதும் பார்த்தான்.

 

 

அவள் கோபம் மட்டும் காட்டி முறைத்திருந்தால் எழுந்து சென்றிருக்க மாட்டான், முகம் வாடி நிற்கவும் மனது கேட்காமல் அவள் பரிமாறும் டேபிளுக்கு வந்து அமர்ந்தான்.

 

 

அவன் வந்து உட்காருவதற்காகவே காத்திருந்தவள் போல் வேகமாய் அவனை நோக்கி வந்தாள் மது. “ஏன் இப்படி பண்றீங்க?? என்றாள்.

 

 

“எப்படி பண்றேன் மிது?? என்று ஏதும் அறியா குழந்தை போல் கேட்டான் சுனீஷ். அவளோ சலித்துக்கொண்டே “என்கிட்ட எப்பவும் உங்களுக்கு விளையாட்டு தானா?? போங்க சார்… எனவும் அவனுக்கு கோபம் வந்தது.

 

 

“உன்னை என்ன பண்ணலாம்னு எனக்கு தெரியலை?? நான் உன்னை கலாட்டா பண்ணேன்னு இப்போ நீ என்னை வெறுப்பேத்துறியா மிது?? என்றான்.

 

 

“என்னங்க சொல்றீங்க நான் என்ன பண்ணேன்?? என்று நிஜமாகவே விழித்தாள் அவள்.

 

 

“சார்ன்னு கூப்பிடாதேன்னு எத்தனை முறை உனக்கு சொன்னாலும் புரியவே மாட்டேங்குது மிது உனக்கு… என்றவன் சட்டென்று எழப் போக அவள் அவன் கைபிடித்து தடுத்தாள்.

 

 

 

“ப்ளீஸ் ப்ளீஸ் என் செல்லம்ல அப்படியே உட்காருங்க. நான் என்ன செய்ய எனக்கு சமயத்துல அப்படியே வந்திடுது. முடிஞ்சவரை நான் இனி கூப்பிட மாட்டேன். என்னையறியாம வந்திட்டா ப்ளீஸ் மன்னிச்சிடுங்க என்று சமாதானம் செய்யவும் எதுவும் சொல்லாமல் அமர்ந்தான்.

 

 

“என்ன சாப்பிடறீங்க?? என்றாள்.

 

 

“நான் என்ன சாப்பிடுவேன்னு தெரியாதா உனக்கு?? புதுசா கேட்குற, வேற டேபிள்ல உட்கார்ந்தா மட்டும் கோபம் வருது. மூஞ்சி தூக்கி வைச்சுக்க தெரியுது. நான் என்ன சாப்பிடுவேன்னு மட்டும் உனக்கு தெரியாது அப்படி தானே?? என்றான்.

 

 

“என்னாச்சு உங்களுக்கு?? நான் எதுவும் தப்பா பேசி இருந்தா மன்னிச்சுடுங்க. நான் போய் உங்களுக்கு பிரியாணி எடுத்திட்டு வர்றேன் என்று நகரப்போனாள்.

 

 

“நீ சாப்பிட்டியா?? என்றான்.

 

 

“இன்னும் இல்லை

 

 

“சரி உட்காரு ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம் என்றான் கூலாக.

 

 

“நீங்க என்ன என்கிட்ட விளையாடுறீங்களா?? நான் எப்படி உங்களோட உட்கார்ந்து சாப்பிட முடியும்

 

 

“ஏன்?? ஏன் முடியாது??

 

 

“நான் இங்க வேலை செய்யறேன், கஸ்டமர்ஸ் முன்னாடி எல்லாம் நான் உட்கார்ந்து சாப்பிடறது இல்லைங்க

 

“நான் என்ன கஸ்டமரா??

 

 

“புரிஞ்சுக்காம பேசுறீங்களா?? இல்லை புரிஞ்சே தான் என்னை கஷ்டப்படுத்தறீங்களான்னு எனக்கு தெரியலை என்றவளின் கண்கள் கலங்கி நின்றது.

 

 

“சரி நீ எப்போ சாப்பிடுவேன்னு சொல்லு??

 

 

“எல்லாரும் சாப்பிட்டு போன பிறகு

 

 

“அதான் எப்போ??

 

 

“கஸ்டமர்ஸ் போனபிறகு??

 

 

“அதான் அவங்க எப்போ போவாங்க சொல்லு, சரியா ஒரு டைம் சொல்ல தெரியாதா மிது?? என்றவனின் குரலில் லேசாய் கோபமிருந்தது.

 

 

“அது எப்படியும் ஒரு நா… நாலு மணி ஆகிடும் என்றாள்

 

 

“என்னது நாலு மணியா?? டெய்லி இப்படி தானா??

 

 

‘ஆமாம் என்பது போல் தலையசைத்தாள் அவள்.

 

“நீ என்ன செய்வியோ?? ஏது செய்வியோ?? எனக்கு தெரியாது. இப்போ நீயும் நானும் சேர்ந்து சாப்பிடணும். அதுக்கு என்ன வழின்னு நீயே சொல்லு இங்க தான் என்னோட சாப்பிடணும்ன்னு அவசியம் இல்லை என்று பிடிவாதமாய் நின்றான் அவன்.

 

 

சுனீஷ் மற்ற விஷயத்தில் எப்படியோ பிடிவாதத்தில் அவன் இரு அண்ணன்களுக்கும் சளைத்தவனே அல்ல. ஒரே ரத்தம் என்பதினால் அவனுக்கும் அந்த குணம் கொஞ்சம் ஊறிவிட்டது போலும்.

 

 

மதுமிதா என்ன செய்வதென்று கையை பிசைந்தாள். அவளுக்கு ஒன்றுமே ஓடவில்லை, அவனிடம் பத்து நிமிடத்தில் வந்து சொல்வதாக சொல்லிவிட்டு அவள் உள்ளே சென்றாள்.

 

 

உள்ளே அவளுடன் பணிபுரியும் மற்றொரு பெண்ணும் இருக்க அவளிடம் யோசனை கேட்டாள் மது. அந்த பெண்ணிற்கு சுனீஷை பற்றி முன்னமே தெரியும் என்பதால் அவளிடம் கேட்டாள்.

 

 

“நான் என்ன பண்ணுறதுன்னு தெரியலை, இவங்க என்னோட தான் நீ சாப்பிடணும்ன்னு சொல்றாங்க. எனக்கு ஒரு ஐடியா கொடுங்க அக்கா என்றாள் மதுமிதா.

 

 

“பேசாம நீ அரை நாள் லீவ் போட்டுட்டு உங்களுக்கு வேண்டியதை நம்ம ஹோட்டல்ல வாங்கிட்டு நம்ம ஹோட்டலோட இணைஞ்சு இருக்கற அந்த ஏரிக்கரைக்கு போய் அங்க உட்கார்ந்து சாப்பிடுங்களேன் என்று அந்த பெண் யோசனை கூற அந்த யோசனை அவளுக்கும் சரியென்றே பட்டது.

 

 

ஹோட்டலுடன் இணைத்திருந்தாலும் அதற்கும் இதற்கும் வேறு வேறு ஆட்கள் என்பதால் மதுமிதாவிற்கும் அதுவே சரியென்று தோன்றியது.

 

 

தேவையானதை ஆர்டர் செய்து எடுத்துகொண்டவள் அரை நாள் விடுப்பு சொல்லிவிட்டு உணவுக்கு பணம் கொடுக்க போக நம் சுனீஷ் வழக்கம் போலவே அவளை ஒரு பார்வை பார்க்க கையில் எடுத்த பணம் மீண்டும் அவள் பையில் போய் அமர்ந்து கொண்டது.

 

 

ஏரிக்கரைக்கு சென்று ஓரமாய் போட்டிருந்த பெஞ்சில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறே அமர்ந்திருந்தனர். அமைதியாக இருவரும் உணவை உண்டு முடித்தனர்.

 

 

இன்னமும் இருவருமே அமைதியாகவே இருந்தனர். சுனீஷ் எதுவோ தன்னிடம் பேசத்தான் வந்திருக்கிறான் என்று புரிந்தது மதுமிதாவிற்கு. ஆனால் வந்தவன் எதுவும் பேசாமல் இருந்தால் என்னவென்று கேட்பது என்று புரியாமல் அவளும் அமைதியாகவே இருந்தாள்.

 

 

ஒரு கட்டத்திற்கு மேல் அந்த அமைதி பிடிக்காதவள் “என்னாச்சுங்க?? என்கிட்ட ஏதோ பேசணும்ன்னு தானே என்னை கலாட்டா பண்ணி இங்க கூட்டிட்டு வந்தீங்க??

 

 

“இப்போ எதுவும் பேசாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம். எவ்வளவு நேரம் தான் ஏரியை வேடிக்கை பார்த்திட்டு இருப்பீங்க?? என்றாள்.

 

 

“புத்திசாலி தான் என்றான்.

 

 

“அது இப்போ தான் உங்களுக்கு தெரிஞ்சுதா??

 

 

“அது எப்போவோ தெரிஞ்சுடுச்சு ஆனாலும் நீ சமயத்துல சரியா இருக்க மாட்டியா, அதான் கொஞ்சம் யோசனை வந்திடுச்சு

 

 

“என்னை கிண்டல் அடிச்சது எல்லாம் போதும், இப்போ எதுக்கு என்னை வரச் சொன்னீங்க??

 

 

“உன் கூட ரொமான்ஸ் பண்ணலாம்ன்னு தான் வரச்சொன்னேன்

 

 

“என்… என்ன?? என்ன சொன்னீங்க?? என்றவளின் முகம் சிவந்து போனது.

 

 

அவளை ஆர்வமாய் பார்த்துக் கொண்டே “நிஜமா தான் மிது சொல்றேன் என்றான் அவளை பார்த்து சீரியசாக.

 

 

“போங்க நீங்க என்னை கிண்டல் பண்றீங்க?? என்று எழப்போனவளின் கரம் பற்றி இழுக்க அதை எதிர்பாராதவள் அவள் மேல் இடித்துக்கொண்டு அவனருகில் விழுந்தாள்.

 

 

“என்ன பண்ணறீங்க?? கையை விடுங்க, என்னாச்சு உங்களுக்கு. நீங்க இப்படி எல்லாம் செய்யற ஆளே இல்லையே என்றாள்.

 

 

“உண்மையை சொல்லு மிது ஒரு நாள் கூட நான் இதெல்லாம் செய்யணும்னு நீ எதிர்பார்த்ததேயில்லை என்றவனின் கண்கள் அவள் கண்களுக்குள் ஊடுருவியது.

 

 

அவளுக்கும் ஆசைகள் உண்டு தான் ஆனால் அதை அவள் எப்போதும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. சென்ற வாரம் கூட தோழி ஒருத்தியுடன் அவள் வீட்டு மொட்டைமாடியில் நின்று பேசிக் கொண்டிருந்தாள் சுனீஷை பற்றி.

 

 

அந்த எண்ணம் வரவும் கண்களில் மின்னல் ஓட “அன்னைக்கு மாடியில நானும் மனோவும் பேசினதை கேட்டீங்களா??

 

 

“மறுபடியும் ஒத்துக்கறேன் நீ புத்திசாலி தான் மிது

 

 

“ஆனா இதெல்லாம் நீ உன் பிரண்டுகிட்ட சொல்லியிருக்க வேணாம். ஸ்ட்ரைட்டா என்கிட்டேயே சொல்லியிருக்கலாம் மிது. இதுல என்னோட தப்பு எதுவும் இல்லை மிது

 

 

“தப்பெல்லாம் உன்னோடது தான் இப்போலாம் நீ சமைக்கிறதுக்கு கூட எங்க வீட்டு பக்கம் எட்டி பார்க்க மாட்டேங்குற. உங்கம்மா வந்து சமைக்காத அன்னைக்கெல்லாம் நான் பாவம் இந்த கன்றாவி ஹோட்டல்ல வந்து சாப்பிட வேண்டி இருக்கு என்று சலித்தவன் போல் கூறினான்.

 

 

“என்னது இது கன்றாவி ஹோட்டலா அப்புறம் எதுக்கு இங்க வர்றீங்களாம். நான் வீட்டுக்கு வந்திருந்தா மட்டும் என்ன செஞ்சி இருப்பீங்களாம்?? என்றாள்.

 

 

“வந்து பாரு செயல்ல காட்டுறேன். நான் என்ன செஞ்சி இருப்பேன்னு, உனக்கு ஓகேன்னா சொல்லு அதை இங்கயே செஞ்சிடுறேன். நீ தயக்கம் எல்லாம் காட்ட மாட்டேன்னு தெரியும்

 

 

“நீ தயங்குறவளா இருந்தா அன்னைக்கு என் கன்னத்தில இச் வைச்சிருப்பியா!! என்றவன் அவன் கன்னத்தை தடவ மதுவிற்கு வெட்கம் பிடுங்கி தின்றது.

 

 

“போடா?? என்று அவள் வாய் செல்லமாய் கூப்பிட்டுவிட “மிது உன்னை சார்ன்னு தான் கூப்பிட வேண்டாம்ன்னு சொன்னேன். நீ என்ன அடாபுடாங்குற??

“சாரி சாரிங்க, தெரியாம கூப்பிட்டேன். நீங்க கொஞ்ச நேரம் என்னை கிண்டல் பண்ணுறது எல்லாம் விட்டுட்டு நீங்க பேச வந்த விஷயத்தை பேசுங்க என்று மீண்டும் ஆரம்பித்தாள்.

 

 

“இருங்க இப்போ நீங்க என்ன சொல்ல போறீங்கன்னு எனக்கு தெரியும். மிது நீ மறுபடியும் புத்திசாலின்னு நிருபிச்சிட்டன்னு தானே சொல்லப் போறீங்க??அந்த கதை எல்லாம் அப்புறம் இப்போ சொல்லுங்க என்று சொல்லி சீரியசாய் அவன் முகம் பார்த்தாள்.

 

 

அவளை கலாட்டா செய்து கொண்டிருந்தவனின் முகமும் இப்போது சீரியஸ் ஆனது. சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டு அவளுடன் வார்த்தைக்கு வார்த்தை விளையாடியவனின் மனம் அவளிடம் பேச ஆரம்பித்ததில் லேசாகியிருந்தது.

 

 

அவன் பேச நினைத்ததை அவளிடம் பேச ஆரம்பித்தான். இப்போது அவளின் முகம் கலவரமாய் அவனை பார்த்தது. அவள் அவனை பார்த்து எதுவோ மறுத்துப்பேச ஆரம்பிக்க வேண்டாம் என்பதாய் சைகை செய்தவன் “ப்ளீஸ் மிது எனக்காக என்றுவிட ‘கடவுளே என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு அவனை மறுத்து பேசாமல் அமைதியானாள் அவள்.

Advertisement