Advertisement

அத்தியாயம் – 16

 

 

ஆராதனாவுக்கு அந்த விஷயத்தை நினைத்து அதிக நேரம் சந்தோசப்பட முடியவில்லை. கொண்டவன் துணையிருந்தால் எதையுமே சமாளிக்கலாம் ஆனால் இப்போதோ இருவருமே இரு வேறு திசையில் அல்லவா நிற்கிறார்கள்.

 

 

இதை முதலில் யாரிடம் சொல்வது என்று யோசனை செல்ல கொஞ்சம் கூட தாமதியாது அவள் உள்ளம் சொன்னது முதலில் உன் மணாளனிடம் கூறு என்று. அவசரமாய் கைபேசியை எடுத்து ஒருவித பதட்டத்துடனே அவனுக்கு அழைத்தாள்.

 

 

ஆனால் அங்கு தான் விதி வேலை செய்தது போலும், அவள் அழைத்த போது அனீஷ் நோயாளிகளை பார்வையிட சென்றிருந்தான். அவன் எப்போதுமே அவன் கைபேசியை பாக்கெட்டில் போட்டு செல்ல மாட்டான்.

 

 

அது மற்றவர்களுக்கு தொந்திரவு என்று நினைத்து எங்கு சென்றாலும் அதை அவன் மேஜையின் இழுப்பறையிலேயே தான் விட்டுச் செல்வான். அன்றும் அவள் அழைத்த போது அவன் அருகேயில்லை.

 

 

இரண்டு மூன்று முறை அழைத்து பார்த்தவளுக்கு முகம் வாட ஆரம்பித்தது. அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனை எதுவும் தோன்றவில்லை. ஆராதனா காலையிலேயே சரியாக சாப்பிடவில்லை என்று திலகவதி கூறியிருந்ததால் யாழினி அவளைப் பார்க்க அந்நேரம் அறைக்குள் நுழைந்தாள்.

 

 

ஆராதனா தலையை பிடித்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருப்பதும் அருகில் இருந்த மேஜையில் அவள் பரிசோதனை செய்த உபகரணமும் இருக்க யாழினி வேகமாய் வந்து அவள் தோளை தொட்டாள்.

 

 

“ஆரு!!! என்னடி என்ன பண்ணுது உனக்கு?? என்று அவள் வாஞ்சையாய் கேட்கவும் அமர்ந்திருந்தவள் சட்டென்று தோழியின் இடுப்பைக் கட்டிக்கொண்டவளுக்கு ஏனோ துக்கம் தொண்டையை அடைத்தது.

 

 

அனீஷ் வேறு போனை எடுக்காததால் மனம் சஞ்சலத்தில் இருந்தவள் தோழியை இறுக்கிக்கொண்டு கண்ணில் நீர் நிறைத்தாள்.

 

 

“என்னடி ஆரு என்னாச்சு?? மறுபடியும் மாமா கூட எதுவும் பிரச்சனையா?? ஆமா இதெல்லாம் என்ன?? என்று மேஜையை சுட்டிக் காட்டினாள்.

 

 

“நான்!!! நான்!!! கர்ப்பமா இருக்கேன்டி யாழு என்றவளின் குரல் பிசிறாய் வெளியே வந்தது.

 

 

“ஆரு!!! நிஜமாவாடி சொல்ற?? எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடி. இதுக்கா இப்படி முகத்தை தூக்கி வைச்சுட்டு இருக்க, நான் என்னமோ ஏதோன்னு நினைச்சு பயந்துட்டேன்

 

 

“சரி மாமாகிட்ட சொல்லிட்டியா?? எப்போ ஆஸ்பிட்டல் போகணும்?? என்று கேள்வியாய் ஆரம்பித்தாள் யாழினி.

 

 

“அவர்க்கு போன் பண்ணேன் எடுக்கவேயில்லை. இப்போலாம் அவர் என்கிட்ட சுத்தமா பேசுறதேயில்லைடி யாழு. மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு. என் மேல இருக்க கோபத்துல போனை கூட எடுக்கலை என்றவளின் கண்ணில் இருந்து கண்ணீர் உருண்டு விழுந்தது.

 

 

“லூசாடி நீ?? மாமாக்கு ஆஸ்பிட்டல்ல ஆயிரம் வேலை இருக்கும். ஒரு வேளை இந்நேரம் அவங்க ஆபரேஷன் தியேட்டர்ல கூட இருக்கலாம். நீ போன் பண்ணதும் எடுக்கலைன்னு வருத்தப்படுறியே??

 

 

“மாமாக்கு உன் மேல கோபமெல்லாம் இனி போய்டும் பாரேன் என்று யாழினி சொன்னதும் அவளை நிமிர்ந்து பார்த்தாள்.

“அப்போ அவர் என்கிட்ட பேசணும்ன்னா நான் கர்ப்பமா இருந்தா தானா?? என்று கேள்வி எழுப்பியவளின் மனநிலை யாழினியால் புரிந்து கொள்ள முடிந்தது.

 

 

“அப்படி எல்லாம் இல்லைடி ஆரு. எதுக்காக நீ இப்படி எல்லாம் நினைக்கிற. புருஷன் பொண்டாட்டின்னா இப்படி சின்ன சின்ன சண்டைகள் எல்லாம் வந்து போறது தானே

 

 

“இன்னைக்கு சண்டை போட்டுக்கறீங்க நாளைக்கே சமாதானம் ஆகிடுவீங்க. நீங்களா பேசி சமாதானம் ஆக கொஞ்சம் நாளாகியிருக்கும். ஆனா இப்படி ஒரு நல்ல விஷயம் நடந்து அதுனால நீங்க மறுபடியும் பேசி சமாதானமாகி சந்தோசமாயிருந்தா எவ்வளவு நல்ல விஷயம் அது

 

 

“நீ அதை போய் ஏன் வேற மாதிரி நினைக்கிற. எல்லாமே நல்லதுக்கு தான்னு நினைடி ஆரு. சும்மா எதையாச்சும் யோசிச்சு உன் மனசை போட்டு குழப்பிக்காதே. உன் மனசை சந்தோசமா வைச்சுக்கோடி

 

 

“அதுக்கில்லைடி யாழி, நீ என்கிட்ட பேசாம இருந்தப்பக்கூட நான் வந்து உன்கிட்ட பேசுவேன். அட்லீஸ்ட் நீ என்னை திட்டவாச்சும் பேசுவ. ஆனா அவர் நான் எத்தனை முறை திரும்பி திரும்பி போய் பேசினாலும் என்னை திட்டுறதுக்கு கூட என்கிட்ட பேசவே மாட்டேங்குறார்டி

 

 

“நான் எதுவும் தப்பு செய்யறேன்னு நினைக்கிறியாடி யாழு. நீ சொல்லுடி என் மனசுல பட்டதை நான் சொல்லிட்டேன். நான் எல்லாரையும் கஷ்டப்படுத்துறேனா?? என்னால எல்லார் நிம்மதியும் கெடுதா?? என்றாள்.

 

 

“நீ செய்யறது தப்புன்னு நான் சொல்ல மாட்டேன் ஆரு

 

 

“அப்போ சரின்னு சொல்றியா??

 

 

“சரின்னு சொல்லலை, ஆனா தப்பில்லை அது மட்டும் என்னால சொல்ல முடியும்

 

 

“புரியற மாதிரி சொல்லு யாழி

 

 

“நீ செய்யறது தப்பில்லை அவ்வளவு தான் ஆரு. ஒரு ஒருத்தர்க்கு ஒரு நியாயம். உனக்கு சரின்னு பட்டதை தானே நீ சொன்ன. அதுல எதுவுமே தப்பில்லை

“எனக்கு இதுல வருத்தமா இருக்கற விஷயம் நீயும் மாமாவும் பேசாம இருக்கறது தான். நீ இந்த விஷயத்தை இன்னும் பக்குவமா மாமாகிட்ட பேசி புரிய வைச்சு இருக்கலாமோன்னு தோணிச்சு

 

 

“நான் பேசலைன்னு நீ நினைக்கறியா யாழி?? அதெல்லாம் அவர்க்கு நான் எடுத்து சொல்லிட்டேன், அவர் ரொம்ப பிடிவாதமா இருக்கார். நான் சொல்ல வர்றதை காது கொடுத்து கூட கேட்க தயாரா இல்லை

 

 

“அது தான் எனக்கு கஷ்டமா இருக்கு. நீ சாப்பிட்டியா?? இல்லையான்னு?? கூட என்கிட்ட கேட்குறது இல்லை. ஒரே அறையில இணையாம இருக்க தண்டவாளம் போல இப்போ எங்க பயணம் போகுதுடி

 

 

“இந்த பிரச்சனையில நடந்த ஒரே நல்ல விஷயம் நீ என்கிட்ட மறுபடியும் பேசினது தான் யாழி. எனக்கு இப்போ இருக்க ஒரே ஆறுதல் நீ மட்டும் தான் என்றாள்.

 

 

“ஹேய் பேசாம இரு ஆரு, இதெல்லாம் சீக்கிரமே சரியாகக் கூடிய பிரச்சனை தான். மாமாக்கு மட்டும் நீ கர்ப்பமா இருக்கற விஷயம் தெரிஞ்சுது எவ்வளவு சந்தோசப்படுவார் தெரியுமா!!! அப்புறம் இந்த நிலைமை தலைகீழா மாறிடும்

 

 

“இந்த விஷயம் கேள்விப்பட்டா வீட்டில இருக்கவங்க எவ்வளவு சந்தோசப்படுவாங்க. சும்மா மூஞ்சியை தூக்கி வைச்சுட்டு இருக்காம எழுந்து வா. அத்தைகிட்ட போய் இந்த நல்ல விஷயத்தை சொல்லுவோம் என்றாள் யாழினி.

 

 

உடனே மாமியாரிடம் சொல்ல அவரும் சந்தோசப்பட்டார், அனீஷிடம் சொல்லிவிட்டு மருத்துமனை சென்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றவர் “ஏம்மா ஆராதனா அனீஷ்கிட்ட பேசிட்டியா?? என்றார்.

 

 

அவளோ “போன் போட்டேன் அத்தை. அவர் ஏதோ வேலையா இருக்கார் போல அதான் போன் எடுக்கலை என்றாள்.

 

 

“ஆரு அப்போ நீ மாமாக்கு ஒரு மெசேஜ் தட்டிவிட்டிடு அவர் வேலை முடிஞ்சு வந்ததும் பார்ப்பார்ல என்றாள்.

 

 

“இதெல்லாம் மெசேஜ்ல சொல்ற விஷயமாம்மா ஒரு வார்த்தை போன்ல பேசினா சந்தோசம் தானே என்றவர் “இருங்க நான் போன் பண்ணி பார்க்கறேன் என்றுவிட்டு அவன் கைபேசியில் இருந்து அழைப்பு விடுத்தார்.

நோயாளிகளை பார்வையிட்டு முடித்து வந்த அனீஷ் அவன் அறைக்கு சென்றதும் கைபேசியை எடுத்து பார்த்தான். ஆராதனாவின் அழைப்பை அதில் கண்டவன் ஏனோ அவளுக்கு மீண்டும் அழைக்க அவசரம் காட்டவில்லை.

 

 

அவனுக்கு தெரியவில்லை அது அவர்கள் இருவரின் இடைவெளியை இன்னும் அதிகரிக்கும் என்று. சற்று நேரம் இருக்கையின் பின் சாய்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் வெளியே சென்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் வந்து அமர்ந்தான்.

 

 

உண்ட களைப்பு தீர சற்று நேரம் இளைப்பாறிவிட்டு மேஜையின் மேலிருந்த ஸ்கேன் ரிப்போர்ட் எல்லாம் எடுத்து பார்வையிட்டுக் கொண்டிருந்தான். அன்று இரவு ஒரு அறுவைசிகிச்சை இருந்தது.

 

 

அந்த நோயாளியின் ஸ்கேன் ரிப்போர்ட்டை தான் அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அந்நேரம் அவன் அன்னையிடம் இருந்து அழைப்பு வரவும் உடனே எடுத்தான்.

 

 

மறுமுனையில் அவரோ “அனீஷ் போன் எடுத்திட்டான் என்று ஆராதனாவிடம் கூற அவளோ யாழினியை அர்த்தமாய் திரும்பி பார்த்தாள்.

 

 

“இப்போ தான் வந்திருப்பாரா இருக்கும்டி நீயா!!! எதுவும் கற்பனை பண்ணிக்காதே!!! என்று தோழியின் காதில் கிசுகிசுத்தாள்.

 

 

அதற்குள் திலகவதி மகனிடம் பேச ஆரம்பித்திருந்தார். “அனீஷ் ஏம்பா போன் எடுக்கலை??

 

 

“அம்மா நீங்க பண்ணதுமே எடுத்திட்டேனே

 

 

“இல்லைப்பா ஆராதனா உனக்கு ரொம்ப நேரமா பேச முயற்சி பண்ணிட்டு இருக்காளாம். நீ எடுக்கவேயில்லையே அதை தான் கேட்டேன் என்றார் அவர்.

 

 

“கொஞ்சம் வேலையா இருந்தேன்ம்மா அப்போ. சரி அப்புறம் கூப்பிட்டுக்கலாம்ன்னு இருந்தேன் ஏன்?? இப்போ என்னாச்சு??எதுவும் முக்கியமான விஷயமா??

 

 

“என்னப்பா இப்படி பொறுப்பில்லாம பேசுற, வீட்டில இருந்து போன் வந்திருக்கு. நீ வேலையா இருந்திருக்க அப்போ எடுக்க முடியாது. வேலை முடிச்சுட்டு வந்து பார்த்ததும் திரும்ப கூப்பிட்டு பேச வேண்டாமா??

ஏனோ அனீஷ் பொறுமையிழந்தவனாக “இப்போ என்னாச்சும்மா எதுக்கு இப்படி அட்வைஸ் பண்ணிட்டு இருக்கீங்க?? அவ எதுவும் உங்ககிட்ட வந்து கம்பிளைன்ட் பண்ணாளா?? என்றான்.

 

 

“ஆராதனா என்னைக்கு என்கிட்ட உன்னை பத்தி தப்பா சொல்லி இருக்கா?? நீயா எதுவும் கற்பனை பண்ணி பேசாதே என்றவர் “ஆராதனா உன்கிட்ட ஒரு நல்ல விஷயம் சொல்லணுமாம் பேசு என்றார்.

 

 

ஆராதனா ஏற்கனவே தவிப்பில் இருந்தாள் திலகவதியின் பேச்சைக் கேட்டு. திலகவதி அவனிடம் பேசும் போது அவ்வப்போது தோழியை ‘நான் தான் சொன்னேன்ல என்பது போல பார்த்துக் கொண்டு தானிருந்தாள்.

 

 

அவளால் அவனிடம் இயல்பாக பேச முடியுமா என்றே தெரியவில்லை. அவள் அழைப்பை பார்த்தும் வேண்டுமென்றே திருப்பி அழைக்காதவனிடம் என்ன பேச என்ற கோபம் எழுந்தது அவளுக்கு.

 

 

அதற்குள் நிலைமையை யூகித்த யாழினி நிலைமையை சமாளிக்கும் பொருட்டு “அத்தை நீங்களே இந்த நல்ல விஷயத்தை மாமாகிட்ட சொல்லிடுங்க, அது தான் நல்லா இருக்கும். அப்புறம் ஆருகிட்ட கொடுங்க என்றாள்.

 

 

அவருக்குமே அது சரியென்பதாய் தோன்ற அவரே பேச ஆரம்பித்தார். ஆராதனாவிற்கு அப்போது தான் நிம்மதி மூச்சே வந்தது. அவனிடம் என்னவென்று சொல்வது எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் விழித்தவளுக்கு நிம்மதியாக இருந்தது போலவும் இல்லாதது போலவும் இருந்தது.

 

 

ஒருவிதமான குழப்ப மனநிலையிலேயே இருந்தாள். அதற்குள் ஆராதனாவிடம் இருந்து கைபேசியை வாங்கியிருந்த திலகவதி மகனிடம் அவரே விஷயத்தை கூறவாரம்பித்தார்.

 

 

“அனீஷ் ஒரு நல்ல விஷயம் சொல்லணும்ப்பா என்ற அவர் ஆரம்பிக்க ‘என்ன இது ஆரா தானே பேசப் போகிறாள் என்று பார்த்தால் மீண்டும் அன்னையே பேசுகிறாரே என்று எண்ணிக் கொண்டே “என்னமா சொல்லுங்க?? என்ன விஷயம்?? என்றான்.

 

 

“ஆராதனா மாசமா இருக்காப்பா!!! என்றார். அனீஷுக்கோ சட்டென்று ஒன்றுமே விளங்கவில்லை.

“என்னம்மா என்ன சொன்னீங்க?? என்றான் அவன் கேட்டதை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக.

 

 

“மருமக கர்ப்பமா இருக்காப்பா. அதை சொல்ல தான் உன்னை கூப்பிட்டேன் என்றார்.

 

 

அனீஷுக்கு என்னவென்று சொல்ல முடியாத உணர்வொன்று அவனை இனிமையாய் ஆக்கிரமித்தது. என்ன தான் மருத்துவன் ஆனாலும் அவனும் ஒரு மனிதன் தானே.

 

 

ஒரு பெண்ணின் கணவனாய் ஒரு ஆண்மகனாய் அந்த தருணம் அவனை மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக்கியது. ‘ச்சே ஆராதனாவிற்கு அழைக்காமல் விட்டுவிட்டோமே. இதை சொல்ல தான் அழைத்தாளோ!!!’

 

 

‘முதலில் என்னிடம் பேச வேண்டும் என்று நினைத்திருப்பாள் என்ற எண்ணமே அவனுக்கு உவகையாய் இருந்தது. உடனே அவளிடம் பேச வேண்டும் போல் தோன்றியது, அவளை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

 

 

‘அம்மா போனை அவகிட்ட கொடுங்க என்று சொல்ல நினைத்தவன் அன்னையின் எண்ணிலிருந்து வந்த அழைப்பை துண்டித்துவிட்டு உடனே அவளின் எண்ணுக்கு அழைத்தான்.

 

 

அவள் கையிலிருந்த கைபேசி அழைக்கவும் ஆராதனா அழைப்பை ஏற்காமலே போனை வெறித்தாள். அவளை கண்டுவிட்ட யாழினி “மாமா தான் உன்கிட்ட பேசறதுக்கு கூப்பிடுறாங்க பாரு. எடுத்து பேசு எதையாச்சும் மனசுல வைச்சுட்டு மறுகாத, பேசு என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

 

 

ஆராதனா போனின் அழைப்பை ஏற்று காதில் வைத்து “ஹலோ என்றாள். அனீஷ் அவர்களுக்கிடையில் எதுவுமே நடக்கவில்லை என்பது போல் பேச ஆரம்பித்தான்.

 

 

“ஆரா அம்மா சொன்னாங்க, சாரிடா நீ போன் பண்ணும்போது நான் பேஷன்ட் செக்கப் பண்ண போயிருந்தேன். அதான் எடுக்கலை, உனக்கு இப்போ எப்படி இருக்கு. எனக்கு உன்னை உடனே பார்க்கணும் போல இருக்கு

 

 

“நான் உடனே வீட்டுக்கு வரேன், நீ ரெடியா இரு. நானே வந்து உன்னை ஆஸ்பிட்டல் அழைச்சுட்டு போறேன்

“இங்க லேடி டாக்டர்கிட்ட இப்போவே சொல்லிடறேன். ஒரு பத்து நிமிஷத்துல நான் வீட்டில இருப்பேன் என்றான். அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லாது போகவும் தான் அவனுக்கு உரைத்தது இவ்வளவு நேரமாக அவனாகவே பேசிக் கொண்டிருப்பது.

 

 

“ஆரா என்னாச்சு?? என் மேல இன்னமும் கோபமா?? ப்ளீஸ் அதெல்லாம் விட்டு தள்ளு, இது நாம சந்தோசமா இருக்க வேண்டிய நேரம். நம்மோட பிரச்சனைகளை நாம அப்புறம் பேசி தீர்த்துக்கலாம் என்று அவளை சமாதானப்படுத்த துவங்கினான்.

 

 

இன்னமும் அவளிடமிருந்து ஒரு ஹ்ம்ம் என்ற பதில் கூட கிடைக்காததால் மனதில் ஏதோவொரு பெரிய பாரம் வந்து அமர்ந்ததாய் தோன்றியது. ‘இவளை எப்படி சமாதானப்படுத்த போகிறோம்?? என்றிருந்தது அவனுக்கு.

 

 

“ஆரா ஏன் எதுவும் பேச மாட்டேங்குற?? இந்த விஷயம் தெரிஞ்சதுனால தான் நான் உன்கிட்ட பேசறேன்னு நினைக்கிறியா?? என்றான் அவள் மனதின் எண்ணத்தை படித்தவன் போல்.

 

 

“அப்படி இருக்கக் கூடாதுன்னு தான் நானும் நினைக்கறேன். ஆனா என்னோட மனசு அதை ஏத்துக்க மாட்டேங்குது என்றாள் ஒருவழியாக வாய் திறந்து.

 

 

“சரி நான் இப்போ என்ன விளக்கம் கொடுத்தாலும் நீ அதை ஏத்துக்கற மனநிலையில இல்லை. விடு நான் இப்போ நேர்ல வர்றேன். வந்து பேசறேன், நீ ரெடியா இரு என்றுவிட்டு போனை வைத்தவனுக்கு ஆயாசமாக இருந்தது.

 

 

மனதில் இருந்த சந்தோசம் மொத்தமும் வடிந்தது போல் இருந்தது. தன் மீதும் தவறிருக்கிறது என்பது வெகு தாமதமாய் புரிந்தது. எல்லோரிடமும் தணிந்து பேசுபவன் அவளை பெரிதும் காயப்படுத்தி விட்டது புரிந்தது.

 

 

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன், அவனின் நிலையும் தற்போது அதுவாய் தானிருந்தது. தான் ஆடாவிட்டாலும் தன் தசை தன்னை ஆட்டுவித்தது புரிந்தது.

 

 

சுனீஷிடம் கூட இவ்வளவு கடுமை காட்டியதில்லை, ஆனால் ஏன் ஆராதனாவிடம் இவ்வளவு கோபம் காட்டினான் என்பது அவனுக்கே புரியவில்லை. அவன் பிடிவாத குணம் அவன் மகிழ்ச்சிக்கே உலை வைத்துவிட்டது நன்றாக உணர்ந்தான்.

 

 

ஏதாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகம் தோன்றியது. மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்து காரை எடுத்தான். விரைவாய் ஓட்டிக்கொண்டு வந்து அவர்கள் வீட்டு வாசலில் நிறுத்தினான்.

 

____________________

 

 

ஆராதனாவும் அனீஷும் மதிய உணவை உண்டுவிட்டு சற்று இளைப்பாறிவிட்டு மருத்துவமனை கிளம்பிச் சென்றனர். அவர்கள் கிளம்பிச் சென்றதும் வீட்டிற்குள் நுழைந்தான் சபரீஷ்.

 

 

வீட்டிற்குள் நுழையும் போதே இப்போதெல்லாம் கண்கள் யாழினியை தேடுவதை அவனால் தடுக்க முடியவில்லை. ஹாலில் அவன் அன்னை மட்டுமே அமர்ந்திருக்க “யாழினி எங்கம்மா?? என்று மென்மையான குரலில் கேட்ட மகன் திலகவதிக்கு புதிராய் புதிதாய் தோன்றினான்.

 

 

“உள்ள தான்ப்பா இருக்கா?? என்று மகனுக்கு பதில் கொடுத்தவர் எப்போதும் தன்னிடத்தில் எடுத்தெறிந்து பேசும் சபரீஷையும் தற்போது அவன் பேசிய விதத்தையும் நினைத்து பார்த்துக் கொண்டார். மகன் நல்ல படியாக பேசியதே போதும் என்றிருந்தது அவருக்கு.

 

 

“காபி எதுவும் போட்டு தரட்டாப்பா?? என்றவரிடம் “வேண்டாம்மா நான் உள்ள போறேன், எனக்கு பசிக்குது டிபன் எதுவும் இருந்தா எடுத்து வைங்க நான் ரெப்ரெஷ் பண்ணிட்டு வந்து சாப்பிடுறேன் என்றுவிட்டு உள்ளே சென்று விட்டான்.

 

 

மலைத்து போய் தான் அமர்ந்துவிட்டார் அவன் அன்னை. இவ்வளவு தணிவாய் கனிவாய் பேசி செல்பவனுக்கு விரைவாய் உணவு தயாரிக்க எழுந்து சென்றார் அவர்.

 

 

அவன் உள்ளே நுழையவும் யாழினி கட்டிலில் அமர்ந்து துவைத்து காயவைத்த  துணிகளை எல்லாம் எடுத்து மடித்து வைத்துக் கொண்டிருந்தாள். “ஹாய் யாழும்மா!!! என்றான் அவளை பார்த்த சந்தோசத்தில் உற்சாகத்துடன்.

 

 

முதலில் யாரென்று திகைத்தவள் அவனை கண்டதும் கட்டிலில் இருந்து எழப்போனாள். “என்ன என்னை பார்த்து எதுக்கு எழுந்துக்கற?? நான் நெருங்கி வரேன் நீயேன் விலகி போற யாழும்மா என்றவன் அவள் கைப்பிடித்து அவளை அமரவைத்து அவனும் அருகே அமர்ந்தான்.

 

 

“நான் ஒண்ணும் விலகிப் போகலை என்றாள்.

“இல்லை நீ விலகி விலகி போற, அது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அன்னைக்கு கூட நான் உன்கிட்ட பேச வந்தா நீ என்கிட்ட சண்டை போடுற மாதிரியே பேசுற?? ஏன் இப்படி நடந்துக்கற?? என்றான்.

 

 

‘இவன் இவ்வளவு பணிவாக பேசுவானா?? என்றிருந்தாலும் அவள் எதுவும் பேசவில்லை. “யாழு ப்ளீஸ் எனக்கு பதில் சொல்லு, எதுக்கு இப்படி தள்ளி போற?? என்றான் மீண்டும் கேள்வியாய்.

 

 

“நான் உங்க பொண்டாட்டின்னு உங்களுக்கு எப்போல இருந்து ஞாபகம் வந்திச்சு?? இவ்வளவு நாளா இந்த ரூம்ல இருக்கற மற்ற பொருட்கள் மாதிரி தானே நானும் இருந்தேன்

 

 

“உங்களுக்கு தேவையான போது தானே என்னை யூஸ் பண்ணுவீங்க. இப்போ என்ன புதுசா மாற்றம்?? என்று நெத்தியடியாய் அவனுக்கு உறைக்குமாறு கேட்டவளை திகைத்து தான் பார்த்தான்.

 

 

“எப்போமே வீட்டுக்கு வந்தா உங்களோட டேப் கூட தானே குடும்பம் நடத்துவீங்க. அதிசயமா என்னை மதிச்சு பேசுறீங்க. ஊட்டில வைச்சு கொஞ்சம் மாறின மாதிரி இருந்தீங்க

 

 

“நான் கூட நீங்க மாறிட்டீங்க!!! என்னை புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டீங்கன்னு சந்தோசப்பட்டேன். அதெல்லாம் காத்து போன பலூன் மாதிரி ஆகிப்போச்சு திரும்பவும் இங்க வந்ததும்

 

 

“என்ன பழைய மாதிரி சிடுசிடுன்னு பேசலைன்னாலும் கொஞ்சம் பரவாயில்லாம இருந்தீங்க. அன்னைக்கு என்னோட பிரண்டு பத்தி பேசி நீங்க மாறவேயில்லைன்னு திரும்பவும் நிரூபிச்சீங்க

 

 

“என்னமோ இந்த ஒரு வாரமா என் பின்னாடியே சுத்தி வர்றீங்க. எனக்கும் என்ன விஷயம்ன்னு தான் புரியவே இல்லை என்றவள் இப்போது அதிர்ந்து பேசவில்லை, கத்தவில்லை.

 

 

அமைதியாகவே எல்லாவற்றையும் பேசினாள், அவள் பேசியது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியது போல் அவன் இதயத்தில் இறங்கி அவனுக்கு வலிப்பதாய் இருந்தது.

 

 

அவள் இந்த வீட்டிற்கு வந்தது முதல் அவள் எப்படியிருந்தாள் என்பதை அவள் வார்த்தைகள் அவனுக்கு புரிய வைத்தது.

அவள் பேச்சில் அவன் விக்கித்து போய் தான் அமர்ந்திருந்தான். என்ன சொல்லி அவளை சமாதானப்படுத்துவது என்றே அவனுக்கு புரியவில்லை. ஆனாலும் அவளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற நிலையிலிருந்தான் அவன்.

 

 

“யாழும்மா எனக்கு புரியுது, என்னால நீ நிறைய ஹர்ட் ஆகியிருக்கேன்னு. தப்பு என்னோடது தான் இல்லைன்னு சொல்லலை. உனக்கு என்னை பத்தி இவ்வளவு தான் குறையா இல்லை இன்னும் எதுவும் இருக்கா??

 

 

“எதுவா இருந்தாலும் கேட்டிரு, இன்னைக்கே இதை பத்தி நாம பேசி தீர்த்திடலாம். எனக்கும் உன்கிட்ட நெறைய பேசணும் என்றான் அவனும்.

 

 

“இவ்வளவு நாளா நீங்க என்னை எதுவுமே கேட்டதில்லையே. இப்போ தான் என்னை பத்தி கேட்கணும்ன்னு தோணுதா?? என்ன குறைன்னு கேட்கறீங்களே!!!

 

 

“உங்களுக்கு இன்னுமா புரியலை நான் இவ்வளவு நேரம் என்ன சொல்லிட்டு இருந்தேன்னு என்று சொல்லிவிட்டு அவனை அழுத்தமாய் பார்க்க அவன் ஒன்றுமே பேசத் தோன்றாமல் அப்படியே நின்றான்.

 

 

‘இப்போ இவகிட்ட என்ன பேசினாலும் என்னை இவளால புரிஞ்சுக்க முடியாது. நான் என்ன சமாதானம் சொன்னாலும் இவளால் ஏத்துக்கவும் முடியாது. நான் பேசுறது ஏதோ சாக்கு சொல்ற மாதிரி இருக்கும்

 

 

‘நான் பேசுறதை புரிஞ்சுக்கறதுக்கு பதில் என்னை மேல மேல குத்திக்காட்டினா திரும்பவும் நான் பழைய சபரீஷா மாறிடுவேன். இப்போதைக்கு இதை ஆறப்போடுவோம் என்று தனக்கு தானே பேசிக் கொண்டவன் மேலே எதுவும் பேசவில்லை.

 

 

“யாழும்மா நான் உன்னை கஷ்டப்படுத்தினதுக்காக என்னை மன்னிச்சுடு. இப்போதைக்கு இதை தவிர நான் வேற எதுவும் சொல்ல விரும்பலை. ஏன்னா நான் என்ன சொன்னாலும் அதை உன்னால இப்போ ஏத்துக்க முடியாது என்றுவிட்டு குளித்து உடைமாற்றி வெளியே சென்றுவிட்டான்.

 

 

எந்த விஷயத்தில் அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒற்றுமை இருந்ததோ!!! இல்லையோ!!! அவர்களின் மனைவிமாரை சமாதானப்படுத்துவதில் இருவருமே ஒரே மாதிரியாகவே நடந்து கொண்டனர். இருவரும் ஒன்று போலவே பேசி இருந்தனர் அவர்களின் மனையாளிடம்.

மருத்துவமனை சென்று ஆராதனாவின் கர்ப்பம் உறுதி செய்தனர். ஸ்கேன் செய்து குழந்தையின் இதயத்துடிப்பு எல்லாம் ஆய்வு செய்து திருப்திகரமாய் இருந்த பின்னே தான் அனீஷ் வீட்டிற்கே வந்தான். இரண்டு நாட்கள் கடந்திருந்தது, அனீஷ் ஆராதனாவின் இடையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

 

 

யாழினியோ எப்படியோ இந்த விஷயம் அவர்களுக்கு பிணைப்பை உருவாக்கியிருக்கும் என்று எண்ணியது போக நடந்தது வேறாக இருந்தது வருந்தினாள். ஆராதனா அவள் அறையில் அமர்ந்து கொண்டு இரண்டு நாளைக்கு முந்தைய நினைவை அசை போட்டாள்.

 

____________________

 

 

அனீஷ் வீட்டிற்கு வந்தவன் காரை நிறுத்திய வேகத்தில் விரைந்து அவர்கள் அறைக்கு வந்தான். அவன் அவளை பார்க்க காட்டிய வேகத்தை அவள் அருகே நெருங்க காட்டவில்லை.

 

 

ஆராதனா என்ன சொல்லுவாளோ?? என்ற பயமெல்லாம் இல்லை அவனுக்கு. ஒருவேளை அவன் நெருங்கி அவள் தள்ளிச் சென்றால் அவனுக்கு தேவையில்லாமல் கோபம் வந்துவிடுமோ எதுவும் பேசிவிடுவோமோ என்றே அருகே நெருங்கவில்லை.

 

 

அவன் எந்த சமாதானம் கூறினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று எண்ணியவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் அவன் தான் அவளிடம் எந்த சமாதானமும் தானாய் வந்து கூற முன் வரவேயில்லையே.

 

 

ஆறப்போட்டு பேசலாம் என்று அமைதியாய் இருந்தான். “உனக்கு எதுவும் கஷ்டமா இருக்கா?? வாமிட் எதுவும் வர்ற மாதிரி இப்படி எதுவும் தோணுதா?? என்றான்.

 

 

நிமிர்ந்து அவனை பார்த்தவள் இல்லை என்பதாய் தலையசைத்தாள். “உன் முகத்தில சிரிப்பே இல்லையே!!! உனக்கு பிடிக்கலையா!!! என்றதும் அவன் வாயை பொத்தினாள்.

 

 

“இது நம்ம குழந்தை, எப்படி உங்களால இப்படி கேட்க முடியுது. மேல மேல என்னை கஷ்டப்படுத்துற மாதிரியே பேசுறீங்க என்றவளின் குரல் வெகுவாய் உள்ளே போயிருந்தது.

 

 

“சாரி உன்னை கஷ்டப்படுத்த இப்படி கேட்கலை. இந்த மாதிரி நேரத்துல எல்லா பொண்ணுங்களுக்கும் ஹஸ்பன்ட் கூட இருக்கணும்னு தோணுமாமே!! ஆனா நான் வந்த பிறகு கூட உன் முகத்துல எந்த சந்தோசமும் தெரியலை. அதான் அப்படி கேட்டுட்டேன் என்றவனின் கூற்றில் அவள் மீது குற்றச்சாட்டு இருந்தது.

 

 

“உங்க வேலை அப்படி நான் அதுக்கெல்லாம் பழகிக்க வேண்டாமா!! இந்த விஷயத்தை முதல்ல உங்களுக்கு தான் சொல்லணும்ன்னு நினைச்சேன். ஆனா சொல்ல முடியலை நீங்க வேலையா இருந்தீங்க

 

 

“அதுல எனக்கு நெறையவே மனவருத்தம் தான். அதனால தான் அப்படி இருந்தேன், அதுக்காக நீங்க கேட்டது சரின்னு ஆகிடாது என்றாள் பதிலுக்கு.

 

 

‘இவ சொல்றதும் சரி தான், நான் தான் இப்படி ரொம்ப சொதப்புறேன்… என்னாச்சு எனக்கு என்று சற்று ஆராய்ந்தவன் இது ஆராயும் நேரமல்ல என்றுணர்ந்து “சரி போனது போகட்டும் விடு என்றுவிட்டு அவளருகே நெருங்கி வந்தான்.

 

 

எதேச்சையாகவோ இல்லை வேண்டுமென்று நடந்ததோ அவன் நெருங்கவும் அவள் பின்னே ஓரெட்டு எடுத்து வைத்தாள். அதை காணாமல் கண்டவன் அப்படியே நின்றுவிட்டான்.

 

 

“ஆரா நீ டெஸ்ட் பண்ண கிட் எங்க?? எனவும் அவள் அதை அவனிடம் எடுத்து கொடுக்க அதை திருப்தியாய் கண்டவன் “சரி ஆரா நீ இங்க வந்து கட்டில்ல நேரா படு என்றான்.

 

 

“எதுக்கு??

 

 

“டெஸ்ட் பண்ண தான் என்றான் அவன் கூலாக.

 

 

“என்னது?? எதுக்கு?? அதான் ஆஸ்பிட்டல் போலாம்ன்னு சொன்னீங்களே?? அதுக்குள்ள என்ன அவசரம்?? என்றாள்.

 

 

“நீ எதுக்கு பயப்படுற?? எனக்கு இதுல பிராக்டீஸ் இருக்கு. அந்த லேடி டாக்டர் வர்றதுக்கு நாலரை மணி ஆகிடும். அதான் நானே டெஸ்ட் பண்ணிடலாம்ன்னு பார்த்தேன் என்றவன் அவளை மீண்டும் அவசரப்படுத்தினான்.

 

 

“இல்லை நான் மாட்டேன். ஆஸ்பிட்டல்ல போய் பார்த்துக்கலாம். எனக்கு பயமாயிருக்கு என்று பின்வாங்கினாள். “என்ன ஆரா நீ இதுக்கெல்லாமா பயம் நான் தானே செக்கப் பண்ணப் போறேன். என்னை உன் புருஷனா பார்க்காம டாக்டரா பாரு என்றான் அதட்டலாக.

 

 

“உங்களை என்னால டாக்டரா எல்லாம் பார்க்க முடியாது, புருஷனா தான் பார்க்க முடியும். ப்ளீஸ் சொன்னா புரிஞ்சுக்கோங்க என்று மறுத்து பேசவும் அதற்கு மேல் அவளை வற்புறுத்தவில்லை.

 

 

‘நான் இவ புருஷன் தானே அப்புறம் என்கிட்ட என்ன தயக்கம் இவளுக்கு என்று கோபம் வந்தாலும் அமைதி காத்தான். அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றவன் அங்கு அடுத்து ஒரு கூத்தை ஆரம்பித்தான்.

 

 

ஷீலா அவள் தான் அவர்கள் மருத்துவமனையின் மகப்பேறு சிகிச்சை மருத்துவர். ஆராதனாவை அழைத்துக்கொண்டு அவள் அறைக்கு சென்றான். ஷீலாவும் அவளிடம் விபரம் எல்லாம் கேட்டுக்கொண்டு அவளுக்கு பிபி எல்லாம் பார்த்தாள்.

 

 

சில பரிசோதனைக்கு எல்லாம் எழுதிக்கொடுத்து அதை மறுநாள் செய்யுமாறு கூறிவிட்டு அவளை தனியாக பரிசோதனை செய்ய மறைவுக்கு அழைத்தாள். ஆராதனா எழுந்து அங்கு செல்லவும் அனீஷும் அங்கு சென்றான்.

 

 

அவனை கண்டதும் ஷீலா திகைத்தாள். “அனீஷ் நீங்க இங்க என்ன பண்றீங்க?? செக்கப் அவங்களுக்கு தானே. நானே வந்து சொல்றேன், நீங்க போங்க என்றாள்.

 

 

“எதுக்கு ஷீலா என்னை போகச் சொல்றீங்க?? நானும் டாக்டர் தானே நான் இதெல்லாம் செஞ்சது இல்லையா என்ன??என்றான் அவன் பதிலுக்கு. ‘அய்யோ இவரு மறுபடியும் ஆரம்பிச்சுட்டாரே என்று புலம்ப ஆரம்பித்தாள் ஆராதனா.

 

 

“அதுக்கென்ன அனீஷ் ஆனா இப்போ நீங்க இங்க இருந்தா என்னால ப்ரீயா செக்கப் பண்ண முடியாது

 

 

“நான் உங்க வேலையில குறுக்க வரமாட்டேன் ஷீலா. நான் இப்படி ஒரு ஓரமா நிக்கறேன் என்று அடம்பிடித்தான் அவன். ‘என்ன இவன் புரிந்து தான் நடக்கிறானா?? இப்படி அடம் பிடிப்பவனில்லையே அனீஷ். என்ன சொல்லி இவனை அப்புறப்படுத்துவது என்று விழித்தாள் ஷீலா.

அவள் ஆராதனாவை பார்க்க அவளுக்கும் அவன் இங்கிருப்பது பிடித்தமில்லை என்பதை அவள் முகம் காட்ட ஷீலா நீங்களே சொல்லுங்கள் என்பது போல் பார்த்தாள்.

 

 

“டாக்டர் ஒரு நிமிஷம் என்று ஷீலாவை அவள் பார்க்க அவளும் புரிந்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். “என்னாச்சு உங்களுக்கு எதுக்கு இப்படி அடம் பிடிக்கறீங்க நீங்க?? என்றாள் ஆராதனா அனீஷை பார்த்து.

 

 

“நான் என்ன அடம் பிடிக்கறதை நீ கண்டுட்ட இப்போ, எதுக்கு என்னை விரட்டுற என்று சிறுகுழந்தை போல் அவளிடம் மல்லுக்கு நின்றான்.

 

 

“நீங்க டாக்டர் அது ஞாபகம் இருக்கு தானே என்றாள். “எனக்கு ஞாபகமிருக்கு உனக்கு தான் இல்லை என்றான்.

 

 

“நீங்க எனக்கு புருஷன் அது ஞாபகமிருக்கா?? எனக்கு நீங்க இங்க இருந்தா கூச்சமா இருக்கு. ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க??

 

 

“அதே தான் நானும் கேட்கறேன், நான் புருஷன் தானே!!! என்கிட்ட என்ன கூச்சம் உனக்கு என்றான்.

 

 

அவனிடம் கெஞ்சி புரியவைக்க முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை உடனே அதிரடியாய் இறங்கினாள். “நீங்க இங்க இருந்து போகலைன்னா நான் செக்கப் பண்ணிக்க மாட்டேன் என்றவள் நிற்காமல் மேலே நடக்கவும் அவள் கைப்பிடித்து தடுத்தான்.

 

 

“போய் செக்கப் பண்ணு நான் உள்ள வரலை என்று வேண்டா வெறுப்பாய் வெளியில் சென்றான். மனதிற்குள்ளோ ‘நான் இப்படி நடந்துக்கிட்டது சரி தானா என்று யோசிக்க ஆரம்பித்தான்.

 

 

‘ஒரு டாக்டரா இருக்க போய் குழந்தையை பத்தி தெரிஞ்சுக்க தானே நினைச்சேன். இதுல என்ன தப்பு என்று நினைத்தவனுக்கு அப்போது தான் அவன் தவறே புரிந்தது.

 

 

அவளின் கணவனாய் குழந்தை பற்றி அறிய நினைத்தவன் மருத்துவனாயும் அவளிடம் நடக்க முயன்றது சரியில்லை என்று புரிய ஆரம்பித்தது. அதற்கு பிறகு அவளை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்தவன் அவளிடம் அதற்காய் மன்னிப்பும் கேட்டுக் கொண்டான்.

 

 

‘இதே போல அந்த பிரச்சனை பத்தியும் புரிஞ்சு இவர் மாறினா எப்படியிருக்கும் என்று எண்ணியவள் நிகழ்காலத்திற்கு வந்தாள். அவனுக்கு சில விஷயங்களை புரிய வைத்துவிடும் நோக்குடன் அவள் அடுத்து செய்தது அவனை மொத்தமாக புரட்டியது.

 

 

அந்த வாரயிறுதியில் ஆராதனாவின் வீட்டினர் அவள் விஷயம் கேள்விப்பட்டு அவளை பார்த்து சீராட்டி போக வந்திருந்தனர். அவள் தனியாய் இருந்த நேரம் அவளின் அறைக்கு வந்தான் அவளின் அண்ணன் ராஜீவன்.

 

 

“ஆராதனா ஏதோ காசு வேணும்ன்னு சொன்னியேடா போன்ல இந்தாடா என்று சிலகட்டுகளை அவளிடம் கொடுத்தான். “கொண்டு வந்திட்டியாண்ணா நீ மறந்திருப்பேன்னு நினைச்சேன் என்றாள்.

 

 

“அதெப்படிம்மா மறப்பேன், நீ கேட்டு நான் எப்படி கொடுக்காம இருப்பேன் என்றான்.

 

 

“ஆமா நான் காசு கேட்டதும் என்ன ஏதுன்னு கேட்காம அப்படியே கொடுத்திட்ட, எதுவும் கேட்க மாட்டியா??

 

 

“சொல்லணும்னா நீயே சொல்லியிருப்பியேம்மா?? நீ அனாவசியமா எதுவும் கேட்க மாட்டே?? ஏதாச்சும் நல்ல விஷயமா தான் இருக்கும்ன்னு தோணிச்சு

 

 

“மாப்பிள்ளைக்கிட்ட கேட்காம என்கிட்ட கேட்குறன்னா உனக்கு தனிப்பட்ட முறையில யாருக்கோ உதவி பண்ணணும்ன்னு நீ நினைக்கிறியோ!!! என்னவோ!!!அதான் எதுவும் கேட்கலை என்றுவிட்டு அவன் அங்கிருந்து நகர்ந்தான்.

 

 

அவன் தங்கை செய்யப் போகும் காரியம் தெரிந்திருந்தால் அவன் ஒரு வேளை பணம் கொடுத்திருக்க மாட்டானோ!!! என்னவோ!!! நடக்கப் போவதை யாரால் தடுக்க முடியும். அவளுமே அது கொடுக்கும் வலியை பற்றி எண்ணாமலே அவள் செய்யப் போகும் காரியத்திற்கு ஆயத்தமானாள்….

Advertisement