Advertisement

அத்தியாயம் – 14

 

 

மருத்துவமனையில் இருந்த அனீஷுக்கு ஆராதனாவின் செயல் குறித்து பெருங்கவலை தோன்றியது. அவள் சாதாரணமான ஒரு விஷயத்தை தேவையில்லாமல் பெரிதாக்குவதாய் பட்டது அவனுக்கு.

 

 

அவனை பொறுத்தவரை அது சாதாரண விஷயமே, அது சரியென்ற எண்ணமே அவனுக்கு இருந்தது. இதுவரை இப்படி பெரிதாக அவன் எதற்கும் வருந்தியதில்லை. ஒரு வேளை ஆராதனா காரணம் என்பதாலா?? என்பதை அவனே அறியான்.

 

 

எந்த வேலையிலும் மனம் லயிக்கவில்லை. தான் அவ்வளவு தூரம் சொல்லியபிறகும் சபரீஷிடம் பேசியிருக்கிறாள் என்ற கோபமே மிதமிஞ்சி இருந்தது. வேறு ஒரு டாக்டரை அழைத்து அவனுடைய நோயாளிகளையும் சேர்த்து பார்க்கச் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.

 

 

வாசலில் காரை நிறுத்தியவன் கேட்டை திறந்து அதை உள்ளே விட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான். அவர்கள் அறைக்குள் நுழைந்தவன் அங்கிருந்தவளை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் துவாலையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்.

 

 

ஏதோவொரு யோசனையில் கட்டிலில் அமர்ந்திருந்த ஆராதனா அவன் குளியலறைக்குள் நுழைந்ததை பார்த்த பின்னே தன்னினைவுக்கு வந்தாள்.

விரைந்து வெளியில் சென்றவள் அவனுக்கு சூடாக காபியை எடுத்துக்கொண்டு அவர்கள் அறைக்குள் நுழைய அவன் இன்னமும் வெளியில் வந்திருக்கவில்லை.

 

 

ஐந்து நிமிடம் கழித்து அவன் வெளியில் வர ஆராதனா அவன் முன் காபியை நீட்டியபடியே “காபி எடுத்துக்கோங்க என்றாள்.

 

 

அவனோ அவளை சற்றும் கண்டுக்கொள்ளாமல் ஒரு ஷார்ட்ஸ் எடுத்து போட்டுக்கொண்டவன்  ஒரு பனியனை எடுத்து அணிந்துக்கொண்டு கட்டிலின் மேல் அமர்ந்தான்.

 

 

“என்னங்க காபி வேண்டாமா?? நீங்க ஆஸ்பிட்டல்ல இருந்து வந்தா சூடா காபி கேட்பீங்களேன்னு தான் கொண்டு வந்தேன். நான் போய் உங்களுக்கு சாப்பிட எதுவும் கொண்டு வரவா?? என்றாள் உண்மையான அக்கறையுடன்.

 

 

“எனக்கு எதுவும் வேணாம்?? நீ பண்ண வேலைக்கு எனக்கு வயிறு மனசு ரெண்டும் நிறைஞ்சு போச்சு என்றுவிட்டு வேறு புறம் திரும்பிக்கொண்டான்.

 

 

ஆராதனாவிற்கு அனீஷின் இந்த மாதிரியான பேச்சு புதிது. எப்போதும் அவளை சீண்டியே பேசுபவன், காலையில் கூட பொறுமையாய் தான் அவளிடம் விளக்கம் கொடுத்திருந்தவனின் பேச்சு ஏறுக்குமாறாய் இருப்பதாய் தோன்றியது.

 

 

“என்னாச்சுங்க?? என் மேல எதுவும் கோபமா??

 

 

அனீஷால் அதற்கு மேலும் பொறுமையாய் இருக்க முடியவில்லை. கோபத்தில் அவனிடம் இருந்து வார்த்தைகள் வெடிக்க ஆரம்பித்தது. கண்மண் தெரியாமல் வந்த கோபத்தில் வார்த்தைகளை சிதறவிட்டான்.

 

 

“கோபமான்னு?? எதுக்கு சின்னதா கேட்கற?? பெரிசா சொல்லு?? ஏன்னா எனக்கு அவ்வளவு கோபம் வருது. போனாப்போகுதுன்னு நான் அமைதியா இருக்கேன்

 

 

“நீ என்னை ரொம்பவே சோதிக்கற, என்னதான்டி உனக்கு பிரச்சனை?? நான் விளம்பரம் பண்ணா உனக்கு என்ன?? பண்ணலைன்னா உனக்கு என்ன?? உன்னை நான் நல்லா தானே பார்த்துக்கறேன். இல்லை நான் தண்ணி அடிக்கறேன், சிகரெட் பிடிக்கறேன்னு யாரும் சொன்னாங்களா??

 

 

“அப்புறம் எதுக்கு இப்படி வீணான பிரச்சனையை ஆரம்பிச்சு நிம்மதி இல்லாம செய்யற?? என் வேலை அதை எப்படி பண்ணனும்ன்னு எனக்கு தெரியாதா?? இதை செய், செய்யாதான்னே நீ எதுக்கு சொல்ற??

 

 

“இதை நான் காலையிலேயே உன்கிட்ட பொறுமையா சொல்லிட்டு தான் போனேன். அப்புறமும் நீ இதை பத்தி சபரிகிட்ட பேசியிருக்க, அப்புறம் என் வார்த்தைக்கு என்ன தான் மரியாதை இருக்கு

 

 

‘அய்யோ தம்பிகிட்ட பேசினது இவர்க்கு தெரிஞ்சிடுச்சு போல என்று எண்ணியவள் ‘தம்பி தான் இவர்கிட்ட சொல்லியிருப்பார் என்று எண்ணிக்கொண்டாள்.

 

 

சபரியிடம் அவள் பேசியது வேண்டுமானால் தப்பாய் இருக்கலாம், ஆனால் பேசிய விஷயத்தில் தப்பில்லை என்றதில் அவள் நிமிர்ந்தே நின்றாள். “இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன் தம்பிக்கிட்ட??

 

 

“வேணாம் ஆராதனா என்னோட பொறுமையை ரொம்ப சோதிக்காதே?? நான் அதிகம் கோபப்பட்டதில்லை. என்னோட கோபத்துக்கு எல்லையே கிடையாது, தேவையில்லாத வார்த்தைகள் வந்திடும் விட்டிடு

 

 

“என்ன பெரிசா கோபம் வரும்ன்னு சொல்றீங்க?? நான் தம்பிகிட்ட பேசினது தப்பு தான் அதுக்காக நான் அவர்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டேன். ஆனா இப்பவும் சொல்றேன் நான் பேசின விஷயத்துல எதுவுமே தப்பில்லை என்றாள்.

 

 

“பேசாம இங்க இருந்து போகறியா?? இல்லையா?? எதுக்கு உனக்கு இவ்வளவு பிடிவாதம்ன்னு எனக்கு தெரியலை. நிம்மதியா போயிட்டு இருந்த வீட்டில உன்னால பிரச்சனை

 

 

“நான் இப்போ என்ன தப்பு பண்ணேன்னு இப்படி சொல்றீங்க?? உங்க மனசாட்சிப்படி யோசிச்சு பாருங்க. நான் சொல்றதுல உள்ள நியாயம் உங்களுக்கு புரியும் என்றாள் அவளும் விடாமல்.

 

 

“என்ன பெரிய மனசாட்சி வெங்காயத்தை பார்க்க சொல்ற, உன்னால அண்ணன் தம்பிக்குள்ள பெரிய பிரச்சனையே வந்திடும் போல இருக்கு. இதுவரை நான் இப்படி நிம்மதி இல்லாம இருந்ததேயில்லை. உன்னால என்னோட நிம்மதி மொத்தமா போச்சு

 

 

“என்னால என்ன சண்டைன்னு சொல்றீங்க?? அண்ணன் தம்பி பிரியணும்ன்னு நான் எப்பவும் நினைச்சது இல்லை. விட்டா சுனீஷ் தம்பியை நீங்க பிரிஞ்சதுக்கு காரணம் கூட நான் தான்னு சொல்லுவீங்க போல?? என்றாள் அவளும் மேலும் வார்த்தையை வளர்த்தவளாய்.

 

 

“எங்க இருந்துடி வருவீங்க எல்லாரும்?? அவனும் இப்படி தான் நீங்க பண்ற வேலையில அது சரியில்லை!!! இது சரியில்லை!!! கொள்ளை அடிக்கிற!!! அது இல்லை!!! இது இல்லைன்னு பேசறான்!!!

 

 

“இப்போ அவனுக்கு துணையா?? நீயும் சேர்ந்திட்டியா?? பேசாம வெளிய போய்டு ஆராதனா. என்னை நிம்மதியா இருக்க விடு, தயவு செஞ்சு இனிமே என்கிட்ட இந்த விஷயத்தை பத்தி பேசாதே??

 

 

“என்னங்க ஒரு சின்ன விஷயம் அதுக்கு போய் எதுக்கு இப்படி ரியாக்ட் பண்றீங்க?? என்றாள்.

 

 

அவன் கோபம் எல்லை மீறியது “வெளிய போ?? எனக்கு உன்னை பார்க்கவே பிடிக்கலை. பேசாத பேசாதன்னு சொல்ல சொல்ல பேசிட்டே இருக்கே?? என்று அவன் கிட்டத்தட்ட உச்சஸ்தாயில் கத்தினான்.அவள் வெளியில் செல்லாமல் இருப்பதை பார்த்து அவனே வேகமாய் கதவைத்திறந்து ஓங்கி அறைந்துவிட்டு சென்றுவிட்டான்.

 

 

அதுவரை அவன் கோபத்தை சரி செய்ய தன்னால் முடியும் என்று எண்ணியவளுக்கு அப்போது தான் அடிவயிற்றில் குளிர் பரப்பியது. யாழினி பேசாமல் இருந்த போது கூட அவளிடம் தானாய் சென்று பேசியிருக்கிறாள்.

 

 

அவளிடம் அதிகாரமாய் சென்று தான் பேசுவாள், முதன் முறையாக அனீஷிற்காய் மிகப்பொறுமையாய் அவள் பேச அவனோ அவள் மேலும் மேலும் வார்த்தையை வளர்ப்பதாய் கூறுகிறானே.

 

 

‘தான் என்ன அப்படி தப்பாய் சொல்லிவிட்டோம், ஏதோ குடும்பத்தை பிரிக்க வந்தவள் போல மூன்றாம் மனுஷியாய் நினைத்து பேசுகிறாரே. என்னை பார்க்கக்கூட பிடிக்கவில்லையாமே என்று எண்ணியவளின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிவதை தடுக்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

 

 

அவன் கதவை அறைந்து சாத்திய சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த சபரீஷ் வெளியில் வந்து எட்டிப் பார்த்தான்.

பெரிய பிரச்சனை என்பது வரையில் அவனுக்கு புரிந்தது, தன்னால் தான் என்ற குற்றவுணர்ச்சி மேலோங்கியது. வெளியில் எட்டிப்பார்க்க அங்கு யாழினியும் அவன் அன்னையும் சமையலறையில் இருந்து எட்டிப்பார்ப்பது தெரிந்தது.

 

 

அவன் கண்களால் யாழினியை அழைக்க அவள் அதை புரிந்துக்கொள்ள மறுப்பவளாய் வேறு புறம் கண்களை சுழற்றினாள். ‘இவ பிரண்டை சொன்னாளே ஆடுவா?? இப்போ இவ்வளவு பெரிய சண்டைக்கு நான் தான் காரணம்ன்னு தெரிஞ்சா பேயாட்டாம் ஆடுவாளே?? என்று நினைத்தவனது நெஞ்சில் குளிர் பிறந்தது.

 

 

‘நான் எதுவும் செய்யலை என்பது போல் மீண்டும் அவளை பார்த்துவைக்க அவள் இப்போது குற்றம் சாட்டும் பார்வை பார்த்தாள். மணி ஒன்பதை கடக்க வீட்டிற்கு வந்த அனீஷிற்கு பசித்தது.

 

 

“அம்மா சாப்பாடு வைங்க என்றவன் டைனிங் டேபிளில் அமர்ந்தான். திலகவதி அவனுக்கு பரிமாறிவிட்டு யாழினியை பார்த்து கண்களால் ஜாடை காட்டிவிட்டு “யாழிம்மா ஆராதனாவையும் சாப்பிட கூப்பிடேன்

 

 

“நீங்களும் அப்படியே சாப்பிடுங்களேன் என்று கூற நிமிர்ந்து அவன் அன்னையை நோக்கியவன் “நான் சாப்பிட்டு போனபிறகு யாரை வேணும்ன்னாலும் கூப்பிடுங்க என்று சொல்லிவிட்டு மீண்டும் சாப்பாட்டில் கவனம் செலுத்தினான்.

 

 

அவன் சாப்பிட்டு எழவும் யாழினி ஆராதனாவை தேடிச் சென்றாள். அனீஷ் வரும் முன் அவளை வெளியே அழைத்து வந்துவிட வேண்டும் என்று எண்ணி உள்ளேச் சென்றாள்.

 

 

ஆராதனா அழுதது அழுதபடியே அமர்ந்திருக்க யாழினியால் தாங்க முடியவில்லை. எதற்கும் எப்போதும் கலங்கியே பார்த்திராத தன் தோழி அதுவும் தன் முன் அழவும் அவளுக்கும் லேசாய் கண்ணை கரித்தது.

 

 

தானும் அழுதால் சரியாய் வராது என்று எண்ணியவள் தோழியின் முன் சென்று நின்றாள். “ஆரு வா வெளிய போகலாம். அத்தை உன்னை சாப்பிட வரச் சொன்னாங்க என்றாள்.

 

 

தோழியின் நீண்ட நாளைக்கு பின்னான ஆரு என்ற அழைப்பு கூட ஆராதனாவை சாய்க்கவில்லை. “நான் வரலை என்று மெதுவாய் உரைத்துவிட்டு அப்படியே அமர்ந்திருந்தாள்.

 

“இங்க பாரு ஆரு, அத்தை நமக்காக தான் சாப்பிடாம உட்கார்ந்து இருக்காங்க. அவங்களுக்கு பிரஷர் வேற இருக்கு. நாம சாப்பிட்டா தானே அவங்களும் சாப்பிடுவாங்க. பேசாம எழுந்து வா

 

 

“மாமா உன் மேல காட்டுற கோபமெல்லாம் நாளைக்கே காணாம போய்டும்டி. நீ அதை நினைச்சு கவலைப்படாம இப்போ எழுந்து வா என்று அதையும் இதையும் பேசி அவளை ஒருவழியாய் அந்த அறையில் இருந்து நகர்த்தவும் அனீஷ் உள்ளே நுழையவும் சரியாய் இருந்தது.

 

 

அவளை பார்த்தும் பார்க்காதவனாய் உள்ளே சென்று விட்டான். யாழினி அவளை அமரவைத்து தட்டில் சாப்பாடு போட ஆராதனாவோ சாப்பாட்டை அளைந்து கொண்டிருந்தாள்.

 

 

இது வேலைக்கு ஆகாது என்று எண்ணியவள் தட்டை கையில் எடுத்து தோழிக்கு ஊட்டவே ஆரம்பித்துவிட்டாள். அவர்கள் அறையில் இருந்து வெளியே எட்டிப்பார்த்த அனீஷ் அடுத்த அறையை நோக்கி “சபரீஷ் என்று குரல் கொடுத்தான்.

 

 

“நான் கூப்பிடுறேன் மாமா என்று எழுந்த யாழினி அவர்கள் அறைக்கு சென்று “உங்கண்ணா கூப்பிடுறாங்க?? என்று எங்கோ பார்த்து சொல்லிவிட்டு வெளியில் வர சபரீஷ் விழித்தான்.

 

 

“உங்ககிட்ட தான் சொன்னேன், உங்க அண்ணா கூப்பிடுறாங்க என்றுவிட்டு அவன் எதுவும் சொல்லுமுன் வெளியே சென்றுவிட்டாள்.

 

 

சபரீஷ் வெளியில் வந்து அனீஷின் அறைக்கதவை லேசாய் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான். “உட்காரு சபரி என்றான் அனீஷ். அண்ணனை கண்டவனின் முகம் வாட ஆரம்பித்தது.

 

 

இதுவரை அனீஷ் இவ்வளவு வருத்தமாய் இருந்ததேயில்லை. ஏன் இப்படி இருக்கிறான் என்று கவலையாய் இருந்தது எல்லாம் என்னால் தானே என்ற எண்ணத்தில் “அனீஷ் என்னை மன்னிச்சுடு, அண்ணி என்கிட்ட பேசினதை நான் உன்கிட்ட சொல்லியிருக்கக் கூடாது என்று சரியாய் தப்பாய் பேசினான்.

 

 

“அப்போ என்கிட்ட நீ இதெல்லாம் சொல்ல மாட்டே?? எப்போல இருந்துடா நீ இப்படி மாறின?? என்றான் தம்பியை பார்த்து.

 

 

“அதில்லை அனீஷ் அவங்க பாவம். பேசினது தப்புன்னு உடனே என்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டாங்க. ஆனா, நான் தான் அவசரப்பட்டு உன்கிட்ட அவங்களை பத்தி சொல்லிட்டேன். பாவம் அனீஷ் அவங்க, நீ அவங்க மேல கோபப்படாதே?? என்றான்.

 

 

“நீங்க என்னைல இருந்து சார் இவ்வளவு தன்மையா பேசக்கத்துக்கிட்டீங்க?? வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசறவன் திடிர்ன்னு எப்படி சார் மாறினீங்க??

 

 

“சரி நான் கேட்கறதுக்கு பதில் சொல்லு. உங்கண்ணி சொன்ன விஷயத்துல உனக்கு உடன்பாடு இருக்கா?? என்றான்.

 

 

உண்மையாகவே சபரீஷிற்கு அதில் எந்த உடன்பாடுமில்லை. நிமிர்ந்து அனீஷை நோக்கியவன் தலை இல்லையென்பதாய் ஆடியது. “அப்புறம் எதுக்குடா சப்போர்ட் பண்ணுற??

 

 

“அதில்லை அனீஷ், நீ அவங்களுக்கு பொறுமையா எடுத்துச் சொல்லு. அவங்க புரிஞ்சுக்குவாங்க அதைவிட்டு கோபமா பேசினா ஆச்சா?? என்ற சபரீஷை ஆச்சரியமாய் பார்த்தான் அனீஷ்.

 

 

“ஏதேது சாத்தான் வேதம் ஓதினது மாதிரி இருக்கு. எப்போமே கோபக்காரன் நீ?? நீ என்னை சொல்றியா சபரி?? நான் உங்கண்ணிக்கிட்ட பேசியிருக்க மாட்டேன்னு நீ நினைக்கறியா??

 

 

“ரெண்டு நாளா அவகிட்ட சரியா பேசலை. கல்யாணம் ஆகி இத்தனை நாள்ல இப்படி இருந்ததேயில்லை. என்னால அவகிட்ட பேசாம இருக்க முடியலை, ரொம்ப பொறுமையா இன்னைக்கு காலையில அவகிட்ட எடுத்து சொன்னேன்

 

 

“அதையெல்லாம் காதுலையே போட்டுக்காம உன்கிட்ட வந்து பேசியிருக்கா?? அப்போ என்னன்னு நினைக்கறது

 

 

“அனீஷ் அவங்க என்கிட்ட சும்மா சொல்லிப் பார்க்கலாம்ன்னு நினைச்சு சொல்லியிருப்பாங்க. அதை போய் பெரிசு படுத்திக்கிட்டு

 

 

“நானும் அவ நாம பேசினதுல சரியாகிடுவான்னு தான் நினைச்சேன். ஆனா எப்போ எல்லாத்தையும் மீறி உன்கிட்டயும் பேசினாளோ அப்போ தான் புரிஞ்சுது அவ எதையும் லேசுல விடுறவ இல்லைன்னு

 

 

“இந்த விஷயத்துல எவ்வளவு தீவிரமாய் இருக்கான்னு. இவ சுனீஷை விட அதிகமா கேள்வி கேட்கறா?? சரி விடு இந்த விஷயத்தை நான் பார்த்துக்கறேன். இந்தா இந்த பைல் பார்த்திட்டு என்ன பண்ணலாம்ன்னு சொல்லு என்றவன் சபரீஷிடம் ஒரு கோப்பை திணித்தான்.

 

 

“என்ன அனீஷ் இது??

 

 

“நாம ரொம்ப நாளா சொல்லிட்டு இருந்தோம்ல வேற பேட்டர்ன்ல விளம்பரம் வேணும்ன்னு அதோட டிசைன்ஸ், மாடல்ஸ், ஐடியாஸ் எல்லாம் லிஸ்ட் பண்ணி இருக்காங்க

 

 

“எவ்வளோ நாளா கேட்டு இன்னைக்கு தான் அனுப்பி இருக்கானுங்க. அதுவும் இப்படி ஒரு சூழல்ல தான் வரணும்ன்னு இருக்கு போல. என்னால அதுல கவனம் செலுத்த முடியலை. நீயே பார்த்திட்டு சேஞ்சஸ் இருந்தா சொல்லிடு. சரியா இருந்தா ஓகே பண்ணிடு

 

 

“ஏன் அனீஷ் இப்போ இது அவசியமா?? அப்புறம் பார்த்துக்கலாமே??

 

 

“எதுக்கு சபரி அப்படி சொல்ற?? இது நம்மோட வேலையில ஒரு பகுதி, அதை நாம தான் பார்க்கணும். எந்த சாக்கு போக்கும் சொல்லாம அது என்னன்னு பார்த்து முடி

 

 

“அனீஷ் நீ ஏன் இப்படி இருக்க?? உன்னை பார்க்கவே எனக்கு கஷ்டமா இருக்கு?? நானும் ஒரு காரணமோன்னு கில்டியா இருக்கு. இத்தனை வருஷமா உன்னோட இருக்கேன்

 

 

“இதுவரை நான் உன்னை இப்படி பார்த்து இல்லை. இது தான் முதல் முறை, ப்ளீஸ்டா இப்படி இருக்காதே!!! நான் தான் கோபக்காரன் ஆனா நீ எப்பவும் நிதானமா தானே பேசுவ

 

 

“நீ பேசியே சமாளிக்கறவன் ஆனா இப்போ மட்டும் ஏன் அண்ணிக்கிட்ட உனக்கு அவ்வளவு கோபம் என்று மீண்டும் ஆரம்பித்தான் அவன்.

 

 

“எல்லாத்துக்கும் விதிவிலக்கு இருக்கும் தானே, இதுவும் அப்படி தான் சபரி. ப்ளீஸ் சபரி இதுக்கு மேல இதைப்பத்தி நாம பேச வேண்டாம் நீ உன்னோட ரூமுக்கு போ என்றதும் சபரீஷ் எழுந்துவிட்டான்.

 

 

“சரி அனீஷ் நான் இதை பார்த்திட்டு சொல்றேன் என்றுவிட்டு கதவருகே செல்லவும் “ஒரு நிமிஷம் சபரி என்றான் அனீஷ்.

 

 

“சொல்லு அனீஷ்

 

 

“உங்க அண்ணி சாப்பிட்டாளா?? என்றவனை கண்கொட்டாமல் பார்த்தான் சபரி. ‘இந்த அனீஷுக்கு தான் அண்ணி மேல எவ்வளவு பிரியம். என்ன மாதிரியான அன்பு இது

 

 

‘நாம ஒரு நாளும் யாழினி பத்தி இப்படி யோசிச்சதே இல்லையே என்று எண்ணியவன் சட்டென்று நினைவு வந்தவனாய் அவன் சிந்தனையை ஒதுக்கி வைத்துவிட்டு வெளியில் எட்டி பார்த்தான்.

 

 

யாழினி ஊட்டிக் கொண்டிருப்பதை பார்த்ததும் தான் என்ன உணர்கிறோம் என்று அறியாதவனாய் ஓரிரு நிமிடம் பார்த்தவன் உள்ளே திரும்பி அனீஷிடம் “யாழினி சாப்பிட வைச்சுட்டு இருக்கா?? நீ கவலைப்படாதே அனீஷ் என்றுவிட்டு வெளியில் சென்றுவிட்டான்.

 

 

சபரீஷ் வெளியில் சென்றதும் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவன் நினைவுகள் சுனீஷை நோக்கி பயணப்பட்டது. ஆராதனாவை போன்றே அவனும் இவர்களை சில விஷயங்களில் எதிர்த்திருக்கிறான்….

 

____________________

 

 

அண்ணன்கள் இருவரிடமும் மறுத்துவிட்டு சென்னைக்கு வேலைக்கு சென்ற சுனீஷ் ஆறே மாதத்தில் வேலையை விட்டுவிட்டு வந்தான். “என்னாச்சு சுனீஷ் போன வேகத்துல திரும்பி வந்திருக்க என்றான் அனீஷ்.

 

 

“அது ஒன்ணுமில்லைண்ணா என்னோட வேலை பார்த்திட்டு இருந்த பார்த்தியை வேலையை விட்டு தூக்கற மாதிரி இருந்துச்சு. எப்படியும் என்னை வெளிய அனுப்ப மாட்டாங்கன்னு எனக்கு தெரியும்

 

 

“நான் வெளிய வந்தா அவன் உள்ள இருக்க நெறைய சாத்தியம் இருந்துச்சு அதான் வேலையை விட்டுட்டு வந்திட்டேன். பாவம்ண்ணா அவன் ரொம்ப கஷ்டப்படுற குடும்பம். எனக்கு அப்படியா நீங்க எல்லாம் இருக்கீங்க??

 

 

“நம்ம தொழிலே இருக்கு, ஆனா அவன் பாவமில்லையா?? அதான் வேலையை விட்டுட்டேன் என்றான் கூலாக.

 

“ஏன்டா நீ வேலையை விட்டுட்டு வரலைடா, விட்டுக்கொடுத்திட்டு வந்திருக்க. அவன் எப்படி போனா உனக்கென்னடா நீ எதுக்கு அவனுக்காக பார்க்கற, ஆமா நீ வேலையை விட்டுகொடுத்தது அவனுக்கு தெரியுமா?? என்றான் சபரீஷ் வழக்கம் போலவே கடுப்பாக.

 

 

“சபரிண்ணா யாராச்சும் செய்த உதவியை சொல்லிட்டு இருப்பாங்களா?? நீங்க கோவப்படாம இருங்கண்ணா. இப்போ என்ன நீங்க என்னை நம்ம ஆபீஸ்க்கு கூட்டிட்டு போக மாட்டீங்களா?? என்றான் அவர்களின் அருமைத்தம்பி.

 

 

“உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடா என்று சலித்த அனீஷ் “சபரி அவனை பார்த்துக்கோ, சுனீஷ் ஒழுங்கா அவன் கூடவே போய் கத்துக்கோ என்று அண்ணனாய் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

 

 

மறுநாளில் இருந்தே சபரீஷுடன் சென்றவன் கவனமாய் வேலையை கற்றுக்கொண்டாலும் சில விஷயங்கள் அவனுக்கு பிடித்தமின்மையாக இருந்தது.

 

 

ஒரு வாரம் கழித்து தனியே சைட்டுக்கு பார்வையிட சென்றான். நான்கைந்து சைட்டுகளை பார்வையிட்டு வந்தவன் முதல் வேலையாக சபரீஷிடம் சென்று நின்றான்.

 

 

“என்னடா எல்லாம் பார்த்தியா?? வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?? சைட் இன்சார்ஜ்கிட்ட ரிப்போர்ட்ஸ் எல்லாம் வாங்கிட்டியா?? என்று கேள்விகளால் அடுக்கினான்.

 

 

“சபரிண்ணா வேலை எல்லாம் நல்லா தான் போயிட்டு இருக்கு. எந்த குறையும் இல்லை. இதுல ரிப்போர்ட்ஸ் இருக்கு என்றவன் அதை சபரியிடம் கொடுத்தான்.

 

 

“இன்னும் என்னடா யோசனையில இருக்க??

 

 

“அது ஒண்ணுமில்லைண்ணா, எனக்கு அங்க போனதுல இருந்து மனசே சரியில்லை

 

 

“ஏன்?? என்னாச்சு??

 

 

“அங்க கஷ்டப்பட்டு எவ்வளவு பேரு வேலை செய்யறாங்க, அவங்களை பார்க்க எவ்வளவு பாவமா இருக்கு தெரியுமா

“நமக்காக நாம விக்கறதுக்காக நம்மோட லாபத்துக்காக வேலை செய்யறாங்க அவங்க எல்லாம். ஆனா பாரேன் இதுல என்ன கொடுமைன்னா அவங்க யாருக்கும் சொந்தமா ஒரு வீடு கூட கிடையாது என்றவனை என்ன செய்யலாம் என்பது போல் பார்த்தான் சபரீஷ்.

 

 

“அது அவனோட தலையெழுத்து அதுக்கு நாம என்ன செய்ய முடியும், அவங்களுக்கு வீடா கட்டிக்கொடுக்க முடியும் என்றான் சபரீஷ்.

 

 

“சூப்பர் சபரிண்ணா நாம ஏன் அவங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க கூடாது என்றவனை வெகுவாக முறைத்தான் சபரீஷ்.

 

 

“நீ என்ன லூசாடா?? எந்த ஊர்ல இப்படி நடக்கும், அதுவுமில்லாம அவனோட பிழைப்பு நாடோடி பிழைப்புடா. இன்னைக்கு ஒரு சைட்ல வேலை நடக்கும் அங்க இருப்பான். நாளைக்கே வேற சைட்டுல வேலை நடந்தா அங்க போய்டுவான்

 

 

“அவனுக்கெல்லாம் போய் வீடு கட்டித்தரணும்ன்னு சொல்ற, உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு என்றான்.

 

 

“அண்ணா நீயே சொல்ற அவன் பிழைப்பு நாடோடி பிழைப்புன்னு எத்தனை நாள் தான் அவன் இப்படி கஷ்டப்படுவான். நாம எத்தனை வீடு கட்டறோம், இவங்க போல உண்மையா கஷ்டப்படுற ஆளுங்களுக்காக நம்ம லாபத்தை கொஞ்சம் விட்டுக்கொடுத்து இப்படி செஞ்சா என்ன

 

 

“பேப்பர்ல விளம்பரம், பிட் நோட்டீஸ், டிவியில விளம்பரம்ன்னு தேவையில்லாத வெட்டிச்செலவு எவ்வளவு பண்றோம். அதெல்லாம் விட்டு கொஞ்சம் நல்லதும் பண்ணுவோமே என்றான் சுனீஷ். சுனீஷ் வெட்டிச்செலவு என்றதும் எப்போதும் போல் சபரீஷுக்கு சுள்ளென்று கோபம் ஏறியது.

 

 

“சுனீஷ் நீ எனக்கு கீழ தான் வேலை பார்க்கற, எனக்கு அட்வைஸ் பண்ணற வேலை எல்லாம் வேண்டாம். உன் யோசனை மண்ணாங்கட்டி எல்லாம் தூக்கி குப்பையில போடு. இப்போ போய் வேலையை மட்டும் பாரு என்று அதட்டி அனுப்பி வைத்தான்.

 

 

சுனீஷ் அத்தோடு விடுபவனா, விடாகண்டன் ஆயிற்றே, இரண்டே நாளில் மீண்டும் ஒரு பிரச்சனையை ஆரம்பித்து வைக்க சபரீஷுக்கு இவனை ஏன் தான் தன்னருகில் வைத்துக் கொண்டோமோ என்று எண்ணத் தோன்றியது.

 

 

சுனீஷின் கேள்விகள் எல்லாம் நறுக்கு தெறித்தார் போலவே இருந்தது சபரீஷுக்கு. இவன் அதை செய்கிறான் அவன் இதை செய்கிறான், எவன் எவனோ சுருட்டிக் கொண்டிருக்கிறான். இல்லாதவனுக்கு கொடுக்க மட்டும் உங்களுக்கு கசக்கிறது என்று சொல்லி அவன் விடாமல் பேசியதில் அயர்ந்தான் அவனுக்கு மூத்தவன்.

 

 

வேறு வழியில்லாமல் அவனை அனீஷிடம் கொண்டு விட்டான். “அனீஷ் இவனோட தொல்லை எனக்கு தாங்கலை. என்னால நிம்மதியா வேலையே பார்க்க முடியலை

 

 

“இது சொட்டை சொள்ளைன்னு சொல்லி என் உயிரை எடுக்கறான். பேசாம இவனுக்கு தனியா ஒரு பிரான்ச் போட்டு கொடுத்திடலாம். நானாச்சும் நிம்மதியா இருப்பேன் என்று அலுப்பாய் கூறி முடித்தான்.

 

 

“என்ன சுனீஷ்?? என்ன பிரச்சனை?? சபரி இவ்வளவு சலிப்பா பேச மாட்டானே?? என்ன செஞ்ச?? என்றான் நிதானமாய்.

 

 

“அண்ணா இந்த சபரிண்ணாக்கு எப்போமே என்னை குறை சொல்றது தான் வேலையே. நீங்க அவங்களை விடுங்கண்ணா என்றான் அவர்களின் தம்பி.

 

 

“என்னது நான் குறை சொல்றேனா?? நீ தானேடா குறை சொல்லியே என் காதுல ரத்தம் வரவைச்ச, இப்போ நான் உன்னை சொல்றேன்னு சொல்ற என்றவன் சுனீஷின் எண்ணங்களை அனீஷுடம் விளக்கினான்.

 

 

அனீஷ் முகத்தில் லேசான புன்னகை அரும்ப “ஏன் சுனீஷ்?? உண்மையை சொல்லு நீ வேலை பார்த்த இடத்தில இப்படி தான் குறை சொல்லிட்டே இருந்தியா?? அதான் உன்னை வேலைவிட்டு அனுப்பிட்டாங்களா?? என்றான்.

 

 

“அண்ணா அப்படி எல்லாம் எதுவுமேயில்லை. வேலை பார்க்கற இடமும் இதுவும் ஒண்ணா என்ன?? என்னை பொறுத்தவரை அடுத்தவனை குற்றம் சொல்ல நம்மோட விரல் நீட்டும் போது மிச்சமிருக்கற நாலு விரலும் நம்மை நோக்கியே இருக்கும்ங்கறதை நம்பறவன் நான்

 

 

“நான் சொல்றது உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன். அடுத்தவனை சொல்ல முன்னாடி நான் சரியானவனா என்னை சுற்றி எல்லாம் சரியானவர்களான்னு தான் யோசிப்பேன்

 

 

“இப்பவும் அப்படி தான் யோசிக்கறேன். இது நம்ம ஆபீஸ் அதுல இருக்கற சின்ன சின்ன குறைகளை சுட்டிக்காட்டுறதுல என்ன தப்பிருக்கு?? அதை மாத்திக்கறதுல என்ன கவுரவ குறைச்சல் என்று கண் பார்த்து நேர்பட பேசுவனை ஒன்றும் சொல்ல முடியாமல் அமைதி காத்தான் அனீஷ்.

 

 

“சரி நீ சபரியோட இருக்க வேண்டாம். என்னோட ஆஸ்பிட்டலுக்கு வா… என்னோடவே இரு, ஆஸ்பிட்டல் மானேஜ்மென்ட் எல்லாம் நீயே பார்த்துக்கோ என்றவன் அறியவில்லை சபரீஷ் நொந்து போனதிற்கும் மேலாக தான் நொந்து போகப் போகிறோம் என்று.

 

 

முதலில் ஒரு மாதிரியாக தோன்றிய போதும் சுனீஷ் மூத்தவனின் பேச்சைக் கேட்டு மருத்துவமனைக்கு சென்றான். சபரீஷின் அலுவலகத்தை விட அங்கு நெறைய மாற்றம் தேவைப்படுமென்பதாய் தோன்றியது அவனுக்கு.

 

 

அவர்கள் மருத்துவமனையில் பணம் செழித்தவர்கள் மட்டுமே வந்து பார்க்க முடியும் என்றிருந்த அந்த நிலைமை அவனை வெகுவாய் கவலைக்கொள்ள வைத்தது. வெளிநாட்டில் இருந்த போது ஜனாவுடனான சினேகிதத்தில் வறுமையின் நிலையை வெகு துல்லியமாய் அறிந்திருந்தான்.

 

 

நேரடியாக அவன் அந்நிலைக்கு தள்ளப்படவில்லை எனினும் ஜனாவின் மூலம் அதை அறிந்தான். வறுமையிலும் நேர்மை என்பதை அவன் முழுதுமாய் உணர்ந்திருந்தான் அவனிடம்.

 

 

ஜனாவிற்காய் சமயங்களில் உதவ முன்வந்தாலும் நாசூக்காய் அதை தடுத்தவனிடம் உழைப்பின் பெருமையை அறிந்திருந்தான் சுனீஷ். அதனாலேயே நெறைய விஷயங்களை அவனால் ஜீரணிக்க முடியவில்லையோ என்னவோ??

 

 

பணம் கொண்டவர்கள் மட்டும் பார்ப்பதற்கு ஊரில் ஆயிரம் மருத்துவமனைகள் இருக்கிறதே?? தங்கள் மருத்துவமனையில் வசதி குறைந்தவர்கள், பணம் கட்டி பார்க்க முடியாதவர்கள் யாரும் பார்க்க இயலாதா என்ற ஆதங்கம் அவனை கோபம் கொள்ளச் செய்தது.

 

 

உள்ளூர இருந்த அந்த கோபத்தில் சபரீஷ் கூட எதிர்த்து பேசியிராத தன் அண்ணனிடம் முதன் முறையாய் எதிர்த்து நின்று கேள்வி கேட்டான் அவன். கேள்வி கேட்டான் என்று சாதாரணமாய் சொல்வதை விட சண்டையிட்டான், வழக்காடினான் என்றே சொல்ல வேண்டும்.

 

 

அனீஷிற்கு சுனீஷின் போக்கு ஒன்றும் புதிததல்ல என்றாலும் அவன் இவ்வளவு தீவிரமாய் எதிர்க்க அப்படி என்ன பெரிய தவறை தாம் இழைத்துவிட்டோம் என்ற எண்ணமே மேலோங்கியது அவனுக்கு.

 

 

பொறுமையுடனே தம்பிக்கு புரிய வைக்க முயன்றான். எவ்வளவு எடுத்துக் கூறிய போதும் புரிந்து கொள்ள மறுத்தவனிடம் “சரி சுனீஷ் நீ எங்க ரெண்டு பேரோட வேலையிலையும் தலையிட வேண்டாம்

 

 

“உனக்கு என்ன வேணும்ன்னு சொல்லு அதை நாங்க செஞ்சு தர்றோம். நீ என்ன செய்யறேன்னு நாங்களும் எதுவும் கேட்க மாட்டோம் என்றான் அனீஷ்.

 

 

சுனீஷுக்கு இது சற்று அவமானமாய் தோன்றியது போலிருந்தாலும் அவன் எண்ணத்தில் தவறிருப்பதாய் அவனுக்கு படவில்லை. நிமிர்ந்து அன்னையை நோக்கியவன் ஒரு முடிவெடுத்தவனாய் பேச ஆரம்பித்தான்.

 

 

“நான் ஒரு ஸ்கூல் ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன். நிச்சயம் அங்க பணம் பணம்ன்னு கேட்டு யாரையும் கஷ்டப்படுத்த மாட்டேன். உங்க மனசுல வேரூன்றி போயிருக்க எல்லாத்துக்குமே காரணம் நம்ம அப்பா தான்

 

 

“பணம் பணம்ன்னு சொல்லி அவர் தூவின விதை இப்போ ஆழமா உங்களுக்குள்ள பதிஞ்சு போச்சு. அஞ்சு வயசுல பதிஞ்ச விஷயம் அதான் உங்களால மாத்திக்க முடியலை

 

 

“நான் மாத்திக்காட்டுறேன், உங்களை மாத்த முடியலைன்னாலும் நாளைக்கு சமுதாயத்தை என்னால மாத்த முடியும்ன்னு நம்பறேன். அதுக்கான என்னோட முயற்சி தான் ஸ்கூல்

 

 

“பிஞ்சுகளோட எண்ணத்துல நல்ல விதைகளை அவர்களுக்கு நல்லது செய்ய கூடியதை சொல்லி தரப்போறேன் என்று சொல்லிக்கொண்டே போனவனை ஆத்திரமாய் பார்த்தான் சபரீஷ்.

 

 

“அப்போ என்னடா சொல்ல வர்ற நாங்க எல்லாம் பணப்பிசாசுங்கன்னு சொல்றியா?? என்னமோ உலகமகா குத்தம் செஞ்ச மாதிரி பேசற. நாங்க என்ன திருடினோமா?? இல்லை கொள்ளையடிச்சோமா?? பெரிசா பேசிட்டே போறான் என்றான் பொரிந்தான் அவன்.

 

 

அனீஷுக்கு தம்பியை குறித்து கவலை இருந்தாலும் அவன் எண்ணத்தை அவன் மாற்றிக்கொள்ள அவன் எண்ணவேயில்லை.

“சரி சுனீஷ் ஸ்கூல் ஆரம்பிக்கறதுன்னா ஆரம்பி என்றான்.

 

 

“அனீஷ் அவன் தான் அறிவுகெட்டத்தனமா பேசிட்டு இருக்கான் நீயும் ஆமாம் சாமி போடுற என்றான் எரிச்சலாய்.

 

 

“சபரிண்ணா போதும் நிருந்துங்க, இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம். உங்க பக்கத்துல இருந்து நான் உங்களை கஷ்டப்படுத்த விரும்பலை, அம்மா, அப்பா, அனீஷ் அண்ணா, சபரிண்ணா எல்லாரும் கேட்டுக்கோங்க

 

 

“நான் வீட்டை விட்டு போறேன். ஊட்டியில இருக்க என்னோட பிரண்டோட உதவியோட ஸ்கூல் ஆரம்பிக்க போறேன். இனிமே உங்களை தொல்லை செய்ய மாட்டேன் என்று தீர்க்கமாய் பேசி வெளியில் சென்றவன் உண்மையிலேயே சொன்னதை செய்து காட்டினான்.

 

 

அவனின் இரண்டு வருட உழைப்பு நல்ல தரமான பள்ளியாய் அங்கு உருவாகியிருந்தது. தன்னினைவு கலைந்து நிகழ்காலத்திற்கு வந்தான் அனீஷ்.

 

____________________

 

 

அவனின் எண்ணங்கள் எல்லாமே சுனீஷுற்கும் ஆராதனாவிற்கும் தாங்கள் ஏன் தப்பாய் தெரிகிறோம். ஊரில் உலகத்தில் இல்லாததையா தாங்கள் செய்கிறோம். எல்லோரும் போலவே படித்தோம், உழைத்தோம் தங்களில் வேலையில் முன்னேறவும் முன்னேற்றவும் தானே பார்க்கிறோம்.

 

 

இதில் என்ன தவறு இருக்கிறது என்று எண்ணியவனின் மனம் அதை எப்போதும் போலவே மேம்போக்காகவே ஆராய்ந்தது. மனம் யோசித்து யோசித்து சோர்ந்திருந்த வேளை ஆராதனா உள்ளே நுழைந்தாள்.

 

 

அவளைக் கண்டதும் முகம் இறுகி அமர்ந்தாலும் அவளின் அழுது களைத்த தோற்றம் அவனுக்குள் வலிக்கவே செய்தது.

 

 

எதற்காகவும் எதையும் மாற்றிக் கொள்ளக் கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தவனின் உறுதி அப்படியே இருக்குமா?? மாறுமா?? மாற்றம் ஒன்றே மாறாததாய் இருக்கலாம், அம்மாற்றம் இப்போது மாறப்போவதும் மாறாமல் இருக்கப் போவதும் யாரிடத்தில் என்பதை காலம் தான் கணிக்கும்…..

Advertisement