Advertisement

அத்தியாயம் – 12

 

 

ஆராதனாவின் மனதில் என்ன விதமான உணர்வு தோன்றுகிறது என்று அவளாலேயே கணிக்க முடியவில்லை. அவளின் இந்த உணர்விற்கு காரணம் வேறு ஒன்றுமல்ல தொலைக்காட்சியில் ஓடிய சில நிமிட விளம்பரப்படமே.

 

 

விளம்பரங்களை வெறுப்பவளில்லை அவள், ஆனால் அதில் அதிகம் விருப்பும் கொண்டவளில்லை. தலையில் கை வைத்து அமர்ந்தவளுக்கு தலையை வலிப்பது போல் இருந்தது.

 

 

அவளின் தலைவலிக்கான விளம்பரம் வேறு ஒன்றுமல்ல அவர்களின் எஸ்டி பில்டர்சின் விளம்பரமே. வளர்ந்து வரும் இளம் நடிகை ஒருவர் அவர்களின் குடியிருப்புகளை அறிமுகப்படுத்தி அதன் அருமை பெருமைகளை அளந்து கொண்டிருந்தாள்.

 

 

அவர்களின் குடியிருப்புகளை வாங்க முன் பதிவு செய்யும் முதல் நூறு பேருக்கு குடியிருப்புடன் மூன்று செண்டு இடமும் பதிவு செய்வதாக சொல்லி அந்த விளம்பரம் ஓடி முடிந்தது.

 

 

அதை பார்த்ததுமே இது என்ன வியாபாரயுக்தியோ என்று சலித்தவள் மேலும் இரண்டு மூன்று விளம்பரம் முடிந்து அடுத்து வந்த விளம்பரத்தை பார்த்து மொத்தமாய் அருவருத்துப் போனாள். அந்த விளம்பரம் எஸ்டி ஆஸ்பிட்டலை விளம்பரப்படுத்தி ஓடிக் கொண்டிருந்தது.

 

 

சில நிமிடங்கள் ஓடிய அதன் பதிவுகள் முடிந்த பின்னே தான் அவளுக்கு தலைவலியே ஆரம்பமாகியது. விளம்பரத்தில் வந்த காட்சிகள் மீண்டும் கண் முன்னே நிழலாய் ஓட ஆரம்பித்தது அவளுக்கு.

 

 

நிறைமாத கர்ப்பிணிப்பெண் ஒருத்தி பிரசவத்திற்காய் அவசரமாய் மருத்துவமனை அழைத்து வரப்படுகிறாள். பிரசவத்திற்கு இன்னும் இருபது நாளாகும் என்று எண்ணியிருக்க அப்பெண்ணிற்கு முன்பே வலி எடுத்திருந்ததில் வேலைக்கு சென்றிருந்திருந்த அவள் கணவன் அவசரமாய் மருத்துவமனை வளாகத்திற்குள் ஓடி வந்தான்.

 

 

அப்பெண்ணிற்கு வலி அதிகமாகிக் கொண்டே இருக்க, மருத்துவரோ குழந்தை கொடி சுற்றிக் கொண்டதால் அறுவைசிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் அதனால் ஒரு குறிப்பிட்ட தொகையை உடனே மருத்துவமனையில் கட்ட சொல்லி செல்கிறார்.

 

 

அந்த தொகையை கேட்ட அப்பெண்ணின் கணவன் இடிந்து போய் சுவற்றில் சாய்ந்து நிற்கிறான். ‘அய்யோ நார்மல் டெலிவரி ஆகும்ன்னு நினைச்சேனே இப்படி ஆபரேஷன்ன்னு சொல்லிட்டாங்களே. பணத்துக்கு நான் என்ன செய்வேன் என்று புலம்புகிறான்.

 

 

‘இப்படி ஒரு நிலை உங்களுக்கு வேண்டுமா?? நார்மல் டெலிவரியோ அறுவைசிகிச்சையோ நீங்கள் கூடுதலாய் எந்த பணமும் செலுத்த வேண்டி இருக்காது. எஸ்டி மருத்துவமனை தங்களை காக்கும்

 

 

‘எப்படி என்று யோசிக்கிறீர்களா??இதோ பாருங்கள் அவர்களின் பயனளிக்கும் சிகிச்சையை, அவர்களின் ஒரே மாதிரியான கவனிப்பை என்று ஒரு பெண் சிரித்துக் கொண்டே சொல்ல மீண்டும் ஒரு காட்சி.

 

 

கர்ப்பம் உறுதியானதும் எஸ்டி மருத்துவமனைக்கு வந்த கணவன் மனைவி இருவரையும் காட்டிவிட்டு பின் சில மாதங்கள் என்று போட்டு அந்த கணவன் மனைவி சிரித்துக் கொண்டே தங்கள் குழந்தையை காட்டி பேசுவது போல் காட்சி ஒடிக் கொண்டிருந்தது.

 

 

‘நாங்க கர்ப்பம் உறுதியானதும் இங்க வந்தோம். அதுக்கு பிறகு இங்க தொடர்ந்து மாதந்திர செக்கப்புக்காக வந்தோம். அப்போ தான் எங்களுக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுது இந்த மருத்துவமனையில் குழந்தை பிறக்கறதுக்கு நான்கு மாதம் முன்னாடி இருபதாயிரம் ரூபாயை முன் பணமாய் செலுத்திவிட்டால் போதும்

 

 

‘குழந்தை நார்மலோ அருவைசிகிச்சையோ இரண்டுமே அவர்களின் பொறுப்பாய் ஆகிவிடுகிறது. பணம் மட்டும் தான் குறைவு ஆனால் மற்ற அனைத்துமே எங்களுக்கு வெகு நிறைவு என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர்.

 

 

மேலும் இரண்டு மூன்று தம்பதிகள் தாங்கள் நலமாய் இருப்பதாயும், தாயும் சேயும் சுகம் என்றும், இன்னும் சிலர் அறுவைசிகிச்சை அதிக பணமாகும் மேலும் கொஞ்சம் தொகை கட்டச் சொல்லுவார்கள் என்று பயந்தோம்.

 

 

ஆனால் அப்படி எந்த கட்டணமும் வாங்கவில்லை என்று நிறைவாக சொல்லிக் கொண்டிருந்தனர். ‘மீண்டும் விளம்பரப்பெண் வந்து கேட்டீர்களா அன்பர்களே எஸ்டி மருத்துவமனையின் சிகிச்சை பற்றி

 

 

‘எஸ்டி மருத்துவமனை பிணியை போக்குவோம்!!! பேணிக் காப்போம்!!! இனி உங்களுக்கும் புரிந்திருக்கும் தானே எஸ்டி மருத்துவமனைக்கு வாங்க!!! நலமாய் போங்க!!! என்று சொல்லி சிரிக்க விளம்பரம் முடிந்தது. அவளுக்குள் உள்ளே கனன்றுக் கொண்டிருந்தது.

 

 

கட்டிடத்திற்கான விளம்பரத்தைக் கூட அவளால் ஓரளவிற்கு ஒத்துக்கொள்ள முடியும், ஆனால் மருத்துவமனை விளம்பரத்தை அவளால் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை.

 

 

மருத்துவம் ஒரு சேவைத்தொழில், காசு முக்கியமாய் இருக்கலாம். ஆனால் அதையும் விட ஆரோக்கிய வாழ்வும் உயிரும் முக்கியமில்லையா?? அதற்கு முன் காசு எம்மாத்திரம் என்னும் எண்ணம் கொண்டவள் அவள்.

 

 

வியாபாரயுக்திக்காய் எதையும் செய்வார்கள் என்று அவளுக்கு தெரியும். ஆனால் உயிரும் உணர்வும் கொண்ட ஒரு மனிதனின் ஆரோக்கியம் காப்பதற்கு கூட விளம்பரம் தேவையா என்றிருந்தது அவளுக்கு.

 

 

இலவசமாய் மருத்துவம் பார்ப்பதற்கு விளம்பரம் செய்யலாம். இங்கே வாருங்கள் குறைவாய் செலவு செய்து அறுவைசிகிச்சை செய்து கொள்ளுங்கள் என்று விளம்பரப்படுத்துவது சற்றும் நியாயமில்லாத ஒன்றாய் தோன்றியது.

 

இது பத்தாது என்று குடியிருப்புக்கு வேறு தனி விளம்பரம். வீடு வாங்கினால் இடம் இலவசமாம். அந்த காசையும் சேர்த்தே குடியிருப்பில் வாங்கிக் கொள்பவர்கள் அதை இலவசமாய் தானே கொடுப்பர்.

 

 

கேட்டால் அதை வியாபார தந்திரம் என்பர். எம்பிஏவில் மார்க்கெட்டிங் பிரிவை எடுத்து படித்தவள் அதிகமாய் தெரிந்துக் கொண்டது அட்வர்டைசிங் மார்கெட்டிங் தான்.

 

 

அவளறியாததா?? அத்துறை பற்றி?? ஒன்றை விற்க அதை பத்தாக்கி நூறாய் ஆயிரமாய் லட்சமாய் விற்கத்தான் பார்ப்பர் என்று அறிந்தவளே. அதில் அவளறிந்த ஒரு விஷயம் உண்டு.

 

 

தரமான எந்த ஒன்றுக்கும் விளம்பரம் என்பதே தேவையில்லை என்பது தான் அது. கடைக்காரனிடம் எந்த பேரமும் பேசாமல் இருபது ரூபாய் கொடுத்து விளம்பரத்தில் பார்த்த செயற்கை பானம் குடித்து உடம்பை கெடுத்துக் கொண்டாலும் கெடுத்துக் கொள்வர்.

 

 

ஆனால் அதே இருபது ரூபாயை இளநீர் கடைக்காரருக்கு கொடுத்து இளநீர் குடிக்க மட்டும் கசக்கும். ஏனெனில் அவர் இளநீரை பத்து ரூபாய்க்கு தரமாட்டாரே?? என்னே ஒரு நல்லெண்ணம் செயற்கை பானம் குடித்து உடலை கெடுத்துக் கொள்வதில்.

 

 

கண்ணைக்கட்டியது ஆராதனாவிற்கு, ஏன் இப்படி?? எதற்காய் இந்த விளம்பரம்?? என்று கேள்வி உள்ளுக்குள் அரிக்கத் தொடங்கியது. இதை பற்றி அனீஷிடம் பேசுவது என்று முடிவு செய்தாள்.

 

 

அதன்பின்னே சற்றே அவளால் மூச்சு விட முடிந்தது போல் இருந்தது அவளுக்கு. ஆராதனா யாழினியை போல் அல்ல என்று சொல்லிக் கொண்டாலும் இருவருமே ஒரே போன்றவர்கள் தான்.

 

 

சற்று தான் அவர்களுக்கு வித்தியாசப்படும். யாழினி தன்னை சுற்றி உள்ளவர்கள் தன்னிடம் எப்படி நடந்து கொள்கின்றனர் தான் அவர்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்பதையும் அவர்கள் நலனையும் பற்றியுமே யோசிக்கக் கூடியவள்.

 

 

ஆராதனா தன்னிடம் தன்னை சுற்றியுள்ளவர்கள் எப்படி நடந்த போதும் தன்னை சுற்றி உள்ளவர்கள் நலனும் அவர்கள் எந்த தவறும் செய்யாதிருப்பதும் முக்கியமாய் கருதுபவள்.

 

அவளுக்கு தவறென்று பட்டதை முகத்திற்கு நேரேயே சொல்லிவிடுபவள் அவள். ஊரையே திருத்த வேண்டும் என்று தெருவில் இறங்கி நடப்பவளில்லை அவள், முடிந்தவரை தன்னை சுற்றி தவறுகள் நடக்காமல் இருக்க வேண்டும் என்று எண்ணமுடையவள்.

 

 

இவளின் எண்ணங்கள் ஒருபுறம் இருக்க அவள் பேசுவதை அனீஷ் புரிந்து நடப்பான் என்று எண்ணியவள் அவனிடம் எப்படி பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

பாவம் அவளறியவில்லை அனீஷ் அவளை பேச விடுபவனில்லை என்று. வசூல்ராஜா எம்பிபிஎஸ்ஸில் வரும் பிரகாஷ்ராஜ் போன்று மனிதாபிமானம் என்றால் என்ன என்று கேட்பவனாய் அவனிருப்பான் என்று அவள் எண்ணியும் பார்க்கவில்லை.

 

 

அனீஷ் வீட்டில் அன்பானவனாய் இருந்த போதிலும் தொழிலில் எதற்கும் எப்போதும் கரிசனம் காட்டுவதேயில்லை. அவன் வேலையில் அவன் சரியாய் இருப்பான். காசிலும் கறாராய் இருப்பான். ஆராதனா அனீஷின் வரவிற்காய் காத்திருக்க தொடங்கினாள்.

 

____________________

 

 

 

இரவு கட்டிலில் படுத்துக் கொண்டு எப்படி மது மேல் இருந்த அன்பை உணர ஆரம்பித்தோம் என்று யோசிக்க ஆரம்பித்தான் சுனீஷ். சில நாட்களுக்கு முன் ஆராதனாவிடம் பேசியதை எல்லாம் நினைவில் கொண்டு வந்தான்.

 

 

“சொல்லுங்க அண்ணி

 

 

“தம்பி உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்?? என்று அவள் பீடிகையாய் ஆரம்பிக்கவுமே ‘அய்யோ இந்த அண்ணி மறுபடியும் மிது பத்தி ஆரம்பிக்க போறாங்களோ என்று அவன் எண்ண அதையே கேட்டும் வைத்தாள் அவன் அண்ணி.

 

 

“தம்பி அந்த பொண்ணு மது… என்று இழுத்து வேண்டுமென்றே நிறுத்தினாள்.

 

 

சுனீஷோ பொறுமை இழந்தவனாக ‘அது தான் ஒன்றுமில்லை என்று முன்னாடியே சொல்லிவிட்டேனே அப்புறமும் எதுக்கு அவளை பத்தி கேட்குறாங்கஎன்றசலிப்புடன் எண்ணியவன் “அதான் அன்னைக்கே நான் சொல்லிட்டேனே எங்களுக்குள்ள அப்படி எதுவுமில்லைன்னு என்றான்.

“அதான் அன்னைக்கே சொல்லிட்டீங்களே, நான் அதை பத்தி கேட்கலை. அந்த பொண்ணு எப்படி என்னன்னு தெரிஞ்சா என்னோட அண்ணாக்கு பேசலாம்ன்னு பார்க்கறேன்

 

 

“எனக்கு அந்த பொண்ணை பார்த்ததும் பிடிச்சு போச்சு. உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணாச்சேன்னு தான் உங்ககிட்ட கேட்குறேன் என்றாள்.

 

 

இப்போது சுனீஷுக்கு உள்ளே எதுவோ செய்தது. ஏதோவொரு எண்ணத்தில் “அண்ணி அவளோட கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம்?? என்றான் அவசரமாய்.

 

 

“என்ன இப்படி சொல்லிட்டீங்க?? எப்படியும் அந்த பொண்ணுக்கு ஒரு இருபத்திரண்டு வயசு இருக்காது. அவங்க வீட்டில கல்யாணம் பண்ணாமலா வைக்கப் போறாங்க தம்பி??

 

 

“நீங்க என்ன ஏதுன்னு சொன்னா?? நான் அவங்க அம்மாகிட்ட வந்து முறைப்படி பேசுவேன் என்று அவள் சொன்னதும் அவனால் அதற்கு மேல் முடியவில்லை. மனதில் ஏதோவொரு பாரம் அழுத்தியது.

 

 

சிறு குழந்தையொன்று தான் வைத்திருக்கும் பொம்மையின் அருமையை அடுத்த வீட்டு பிள்ளை வந்து ஆசையுடன் தொடும் போது தான் உணர்ந்து அது தன்னது என்ற உரிமையுணர்வுடன் தன்னோடு சேர்த்து வைத்துக் கொள்ளுமாம்.

 

 

அதே போன்ற உணர்வில் தான் இப்போது சுனீஷும் இருந்தான். அவனுக்கு மதுவின் மீது இருந்த பிடிப்பை அக்கணம் முழுதாக உணர்ந்தான்.

 

 

ஒருவேளை ஆராதனா மதுவை பற்றி முன்பே பேசி கிளறிவிட்டதாலா?? இல்லை தனக்கே அப்படி ஒரு எண்ணம் இருந்ததா?? என்று அவனுக்கு யோசிக்க வேண்டி இருந்தது.

 

 

ஆராதனாவிடம் ஏதோதோ பேசிவிட்டு போனை வைத்தவனுக்கு அவன் மனம் மெல்ல புரிய ஆரம்பித்தது. மறுநாளே ஆராதனாவிற்கு போன் செய்து பேசினான். “அண்ணி

 

 

“சொல்லுங்க தம்பி என்றாள்.

 

 

“மிது பத்தி… என்று தயங்கி தயங்கி இழுக்கவும் “என்ன உங்களுக்கு அவளை பிடிச்சிருக்கா?? என்று பட்டென்று கேட்டாள்.

 

 

“அண்ணி அதெப்படி உங்களுக்கு தெரியும்?? எனக்கே என்னை தெரியாம இருந்திருக்கேன். நீங்க எப்படி கண்டுபிடிச்சீங்க?? என்றான் வியப்பாய்.

 

 

“மதுமிதாவை நாங்க எல்லாரும் மதுன்னு கூப்பிடும் போது நீங்க மட்டும் ஏன் மிதுன்னு கூப்பிடுறீங்க?? என்றாள் அவன் கேள்விக்கு சம்மந்தமேயில்லாமல்.

 

 

“அது… அது எனக்கு தெரியலை அண்ணி. எனக்கு அப்படி கூப்பிட தான் பிடிச்சிருக்கு என்றான் அவன்.

 

 

“உங்களையே அறியாம நீங்க மதுவை நினைக்க ஆரம்பிச்சுட்டீங்க. உங்களுக்கே தெரியாம அவ மேல நீங்க உரிமை எடுத்துட்டு இருக்கீங்க. ஆனா அதெல்லாம் நீங்க காதல்ன்னு உணரவே இல்லை

 

 

“அதனால தான் எங்க அண்ணனுக்கு மதுவை கேட்கப் போறேன்னு சொல்லி உங்க மனசை உங்களுக்கு புரிய வைச்சேன் என்றாள் அவள்.

 

 

“அண்ணி அப்போ உங்க அண்ணனுக்கு நிஜமாவே மதுவை பேசலையா?? என்றவனின் மனதில் இருந்த பாரம் முழுதுமாய் விலகியது.

 

 

“இதுல இன்னொரு பெரிய விஷயம் என்னன்னா உங்களுக்கு உங்களோட காதலும் புரியலை. மது உங்களை விரும்பறதும் புரியலை என்று மீண்டும் அவனை கிண்டலடித்தாள்.

 

 

“என்னண்ணி சொல்றீங்க?? மிது என்னை விரும்புறாளா??அப்படி எல்லாம் இருக்காது அண்ணி. அவளுக்கு என் மேல மதிப்பு நெறைய இருக்கு. அதனால உங்களுக்கு அப்படி தோணியிருக்கும்

 

 

“இல்லவே இல்லை நான் உறுதியா சொல்றேன். மது உங்களை ரொம்பவும் விரும்பறா?? சந்தேகமா இருந்தா நீங்களே அவளை கவனிச்சு பாருங்க. அப்புறம் ஆல் தி பெஸ்ட், சீக்கிரமே ரெண்டு பேரும் கூடிப்பேசி ஒரு முடிவுக்கு வாங்க என்று வாழ்த்தி போனை வைத்தாள் ஆராதனா.

 

 

ஆராதனா மதுவை பற்றி சொன்ன போது கூட அவன் யோசித்திருக்கவில்லை அவளும் தன்னை விரும்புகிறாள் என்று. ஆனால் அவளை அவன் தொடர்ந்து கவனித்ததில் மதுமிதாவின் பார்வை தன்னை தொடர்வதை உணர்ந்தான். அதை உறுதியாக தெரிந்துக் கொள்ள அன்று ஒரு வேலை செய்தான்.

 

 

எப்போதும் குளியலறையில் சவரம் செய்பவன் மது வந்திருந்த அன்று வேண்டுமென்றே ஹாலில் இருந்த கண்ணாடி முன்பு நின்றுக்கொண்டு சவரம் செய்தான்.

 

 

கண்ணாடி வழியே பின்னால் சமையலறையில் வேலைப்பார்த்துக் கொண்டு அவனையும் அவ்வப்போது பார்வையில் தீண்டிக் கொண்டிருந்தவளை பின்னால் திரும்பி பார்க்காமலே கண்ணாடி வழியாக பார்த்துவிட்டான்.

 

 

அவளின் பார்வை தன் மீது இருப்பதை உணர்ந்த அந்த கணம் அவனுக்குள் சந்தோஷ ஊற்று கிளம்பியது. உற்சாகமாய் சீட்டி அடித்துக் கொண்டே அவளையும் பார்த்தான்.

 

 

அதன் பின் தான் அவளிடம் அவன் விருப்பத்தை சொல்ல வேண்டும் என்று நினைத்து எப்படியோ ஒரு வழியாக சொல்லியும் விட்டான். இன்றோடு ஒரு வாரம் முடிந்திருந்தது சுனீஷ் மதுமிதாவிடம் பேசி.

 

 

அன்று பொட்டானிக்கல் கார்டனில் வைத்து அவன் விருப்பத்தை தெரிவித்த பின் அவளை அவனால் பார்க்கக் கூட முடியவில்லை.மது வேண்டுமென்றே அவனை தவிர்ப்பது தெரிந்தது. படித்து படித்து அன்றே அவளுக்கு சொன்னான். கண்டதையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று.

 

 

அவனுக்கு உறுதியாய் புரிந்தது அவள் எதையோ நினைத்து குழம்பி தான் தன்னைவிட்டு விலக்கி விலகிப் போகிறாள் என்று. என்ன செய்ய என்று யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனாய் விடியலை நோக்கிக் காத்திருந்தான்.

 

____________________

 

 

அனீஷும் ஆராதனாவும் இயல்பாய் பேசி ஆயிற்று இன்றோடு பத்து நாட்கள் முழுதாய் முடிந்துவிட்டது. இடையில் என்னென்ன நிகழ்வுகளோ நடந்து முடிந்துவிட்டது.

 

 

நடந்த எதுவும் அவளுக்கு உவப்பானதாய் இருக்கவில்லை. மேலும் மேலும் அவளை ரணப்படுத்துவதாய் தான் இருந்தது. அந்த விளம்பரங்களை கண்ட அன்று அவனிடம் பேச வேண்டும் என்று எண்ணியவளுக்கு அன்று அவனிடம் அதை பற்றி பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

அன்று இரவு அறுவைசிகிச்சை ஒன்றை முடித்து வெகு தாமதமாய் வீட்டிற்கு வந்தவனை ஏதேனும் பேசி குழப்ப விரும்பாதவள் அன்று அந்த பேச்சை எடுக்கவில்லை.

 

 

மறுநாள் காலை மருத்துவமனை கிளம்பிக் கொண்டிருந்தவனை நிறுத்தி பேசவும் அவளுக்கு சங்கடமாய் இருக்க எதுவும் சொல்லாமலே அமைதியாய் இருந்தாள்.

 

 

அனீஷுக்கு அவள் பார்வை செய்கை அத்துப்படியாயிற்றே மனைவி எதையோ யோசிப்பதும் பின் விடுவதுமாய் இருந்தவளை பார்த்துவிட்டான். கிளம்பும் முன் நின்று அவளிடம் “இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்திடுவேன், நாம வெளிய போயிட்டு வருவோம் என்றதும் அவள் முகம் மலர்ந்தது.

 

 

“இதை நீ கேட்டு நான் மறுத்திடுவேனா?? என்ன?? இப்போ பாரு முகம் எவ்வளவு மலர்ச்சியா இருக்கு. நீ எப்பவும் இப்படி சிரிச்ச முகமா இரு அது தான் உனக்கு நல்லா இருக்கு என்றவனாலேயே அவள் வேதனைப்படப் போகிறாள் என்பதை அறியாமல் பேசிக் கொண்டிருந்தான்.

 

 

‘ச்சே என் மனசு புரிஞ்சு நடக்கறார், நிச்சயம் நான் சொல்றதை புரிஞ்சு சரியாகிடுவார் என்று மனதிற்குள் பேசிக் கொண்டவள் அவனை பார்த்து புன்னகைக்க பதிலுக்கு கன்னம் குழிய சிரித்தவனை நோக்கி தன்னையுமறியாமல் நீண்ட கைகளை சட்டென்று பின்னால் மறைக்க முயன்றாள்.

 

 

மீண்டும் அவளை பார்த்து ஒரு மார்க்கமாய் சிரித்துவிட்டு அவன் கிளம்பிச் சென்றான். மாலை சொன்னது போலவே வந்தவன் அவளை ப்ரோக்பீல்ட்ஸ் மாலுக்கு அழைத்துச் சென்றான்.

 

 

இருவருமாய் பாஸ்கின் ராபின்ஸ்க்குள் நுழைந்து ஒரு மூலையில் சென்று தனித்து அமர்ந்தனர். “இதான் பர்ஸ்ட் டைம்ல நீயும் நானுமா தனியா வெளிய வர்றது என்றான்.

 

 

“ஹ்ம்ம் ஆமாங்க என்றாள்.

 

 

இருவருக்குமாய் ஆர்டர் செய்துவிட்டு அவளை பார்த்தான். “சொல்லு ஆரா என்னையவே எவ்வளவு நேரம் தான் பார்த்திட்டு இருப்ப, என்கிட்ட ஏதோ சொல்லணும்ன்னு தானே நினைக்கிற. இப்போ பேசலாமே என்றான்.

 

 

“அதெப்படி நான் உங்ககிட்ட பேச தான் நினைக்கிறேன்னு சொல்றீங்க??

 

 

“அதான் என் முகத்தையே பார்த்திட்டு இருக்கியே?? அதை வைச்சு தான் சொல்றேன்

 

 

“என் புருஷன் நான் பார்க்கறேன், ஏன் பார்க்கக் கூடாதா??

 

 

அனீஷுக்கு அவள் என் புருஷன் என்று உரிமையாய் பேசியது சற்றே பெருமிதமாய் இருந்தது. “உன் புருஷன் தான் யாரு பார்க்க வேணாம்ன்னு சொன்னது. வீட்டில வைச்சு இப்படி பார்க்க மாட்டேங்கறியே??

 

 

“இங்க என்னால எதுவும் செய்ய முடியலையே?? என்று சொன்னவன் சும்மா இல்லாமல் எழுந்து வந்து அவளருகில் அமர்ந்தான். அவள் இடையை சுற்றி கையை போட்டவனின் கரம் அவள் வெற்றிடையில் அழுத்தமாய் பதிந்தது.

 

 

“அய்யோ!!! என்னங்க நீங்க!!! கையை எடுக்க எங்க வந்து உங்க சேட்டையை செய்யறீங்க?? நீங்க முத மாதிரியே எதிர்ல உட்காருங்க ப்ளீஸ் என்று கெஞ்சவும் அவன் கையை எடுத்தான்.

 

 

ஆனால் எதிரில் சென்று அமரவில்லை. “இப்போ சொல்லு டார்லிங் என்ன விஷயம்?? என்றதும் அவள் சிவந்துவிட “வேணாம் ஆரா நீ இப்படி செய்ய செய்ய எனக்கு உன்னை ஏதாச்சும் செய்யணும்னு தோணுது என்றான்.

 

 

“வேணாம் வேணாம் ஆளை விடுங்க என்று அவள் சொல்லி முடிக்கவும் அவர்களின் ஆர்டர் தயாராகி வந்திருந்தது. அதை குடித்துக் கொண்டே மெதுவாய் அவனிடம் தான் கேட்க நினைத்ததை ஆரம்பித்தாள்.

 

 

“என்னங்க ரெண்டு நாள் முன்னால நான் டிவில ஒரு விளம்பரம் பார்த்தேன் என்றாள்.

 

 

“என்ன ஆரா?? அதுல வர்ற நகை புடவை எதுவும் வாங்கணுமா?? என்றான் அவன்.

 

 

உடனே அவனை பார்த்து முறைத்தவள் “அதெல்லாமில்லை, அதென்ன அப்படி கேட்கறீங்க. பொண்ணுங்கன்னா டிவி பார்த்திட்டு புடவை, நகை தான் கேட்பாங்கன்னு என்ன இருக்கு. ஏன் அப்படி கேட்டீங்க??

 

 

“அம்மா தாயே நான் தெரியாம தான் சொன்னேன். ஒருவேளை உனக்கு விருப்பம்ன்னா வாங்கி கொடுக்கலாம்ன்னு நினைச்சேன். சரி நீ ஏதோ சொல்ல வந்தியே சொல்லு என்று ஊக்கினான்.

 

 

“அது… அந்த விளம்பரம் நம்ம எஸ்டி பில்டர்ஸ் அப்புறம் நம்ம ஹாஸ்பிட்டல் பத்தி என்று சொல்லி இடை நிறுத்தினாள்.

 

 

“என்ன ஆரா?? விளம்பரம் பார்த்தியா?? நல்லா இருந்துச்சா?? அதுல எதுவும் மாற்றம் பண்ணணுமா?? அப்படி எதுவும் இருந்தா சொல்லு செஞ்சிடலாம் என்றான்.

 

 

“அந்த விளம்பரமே வேண்டாமே அப்புறம் என்ன அதுல மாற்றம் செய்யணும் என்று பட்டென்று உடைத்துவிட்டாள்.

 

 

“வேண்டாமா?? ஏன்?? அதிலென்ன இருக்கு??

 

 

“அது நல்லாவா இருக்குங்க, இதுக்கு எல்லாமா விளம்பரம் செய்வாங்க

 

 

“ஏன் செஞ்சா என்ன?? இதெல்லாம் மார்கெட்டிங்ன்னு உனக்கு தெரியாதா?? அப்புறம் எப்படி மக்களுக்கு நாம ரீச் ஆவோம். அதுக்காக தானே இதெல்லாம் என்று அவளுக்கு புரிய வைக்கும் நோக்குடன் சொன்னான் அவன்.

 

 

“இதெல்லாம் செஞ்சு தான் நாம இருக்கோம்ன்னு ஏன் காட்டிக்கணும். உண்மையான உழைப்புக்கு விளம்பரம் தேவையேயில்லைங்கறது தான் என்னோட எண்ணம்

 

 

“என்ன பேசறே ஆரா?? இந்த காலத்துல எவன் உழைப்பு அது இதுன்னு பேசிட்டு இருக்கான். நம்மை நாமே அடையாளம் காட்டிக்க வேண்டிய இடத்துல தானே நாமெல்லாம் இருக்கோம்

 

 

“இதெல்லாம் என்ன கொடுக்கும்ன்னு நீங்க நினைக்கறீங்க. நமக்கான அடையாளம் விளம்பரம் பண்றதுல இருக்குன்னு நீங்க நினைக்கறீங்களா??

 

 

“ஆமாம் வேற எதுல இருக்குன்னு நீ நினைக்கிற??

 

 

“நியாயமா இருக்க எதுக்குமே விளம்பரம் தேவையே இல்லைங்க. இது சேவைத் தொழில் இல்லையா?? நீங்க ஏன் அப்படி யோசிக்க மாட்டேங்கறீங்க??

 

 

“அப்போ நாம இலவச சேவை செஞ்சு ஓட்டாண்டியா போகணும்ன்னு சொல்ல வர்றியா??

 

 

“நான் அப்படி சொல்லலைங்க, நமக்கு காசு முக்கியம் தான். நம்மோட தேவைக்கு தான் பணம் தேவைக்கு அதிகமா எதுவுமே வேணாமே

 

 

“அப்போ நான் கொள்ளை அடிக்கிறேன்னு சொல்றியா?? உன் மனசுல என்னை பத்தி என்ன நினைச்சுட்டு இருக்க?? இப்படி இலசவமா செஞ்சுட்டு இருந்தா நாளைக்கு நம்ம பிள்ளை நடுத்தெருவுல தான் நிற்பான்

 

 

“நான் ஒண்ணும் இலசவ சேவை செய்ய சொல்லலை, தேவைக்கு மிஞ்சி எதுவும் வேண்டாம்ன்னு சொல்றேன். விளம்பரம் தேவையில்லைன்னு சொல்றேன். நம்ம பிள்ளைக்கு கல்வியை மட்டும் நாம கொடுத்தா போதும் அவனோட தேவைக்கு அவனே சம்பாத்தியம் செஞ்சுகுவான்

 

 

“நீ என்ன லூசா?? கல்வியை கொடுத்தா சம்பாத்தியம் தானா வந்திடுமா?? போதும் ஆரா இனி நீ இதை பத்தி என்கிட்ட எதுவும் பேசாதே. நீ எப்படி வேணா நினைச்சுக்கோ என்று சொல்லியவனின் குரல் ஒவ்வொரு கட்டமாக உயர்ந்துக் கொண்டிருந்ததை கவனித்தாலும் அவள் சொல்ல வந்ததிலேயே குறியாய் இருந்தாள் அவள்.

 

 

“நான் இப்படி தான், இப்படி தான் இருப்பேன் எப்பவும். சேவை செய்ய நானொண்ணும் அன்னை தெரசா இல்லை. நான் ஒரு சாதாரண மனுஷன். என் குடும்பம் அவங்களுக்கு தேவையானதுன்னு நாளைக்கும் சேர்த்து யோசிக்கறவன் நான்

 

 

“சேவை பண்ண அன்னை தெரசாவா இருக்கணும்ன்னு அவசியமில்லை. கொஞ்சம் மனிதாபிமானம் இருந்தா போதும். நீங்க ஏன் இப்படி மனிதாபிமானமே இல்லாம பேசறீங்க??

 

 

“இதுல மனிதாபிமானம் எங்க இருந்து வந்தது. அதுக்கு என்ன அவசியம் இப்போ?? நீ என்ன நினைச்சு இப்படி எல்லாம் பேசறேன்னு எனக்கு புரியலை

 

 

“நான் இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன், மக்களை ஏமாத்துற அந்த விளம்பரம் வேண்டாம்ன்னு சொன்னேன். அதுக்கு எதுக்கு இப்படி கோபமா பேசறீங்க

 

 

“உயிரில்லாத கட்டிடமா இருந்தாலும் அதுல உயிருள்ள ஜீவன் தான் வாழப் போகுது. அங்கயும் கொள்ளை லாபத்துக்கு விக்கறீங்க, இதுல விளம்பரம்ங்கற பேருல கண்டதையும் சொல்லி ஏமாத்துறீங்க

 

 

“கட்டிடத்துக்கு மட்டுமான்னு பார்த்தா ஆஸ்பிட்டலுக்கும் அது போலவே ஒரு விளம்பரம். எதுக்கு இப்படி எல்லாம் செய்யறீங்க. இப்படி விளம்பரத்துக்கும் அதுல நடிக்கறவங்களுக்கும் செய்யற செலவை நாலு ஏழைக்களுக்கு மருத்துவம் பார்க்க செய்யலாமே. உங்களுக்கு அதை விட பேரு வேற எதுலயும் கிடைச்சுடாது

 

 

எங்கிருந்து அவனுக்கு அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை. வார்த்தைகளை பற்களுக்கிடையில் கடித்து துப்பினான் அவன். “ஆமா நாங்க ஏமாத்துக்காரங்க தான். அப்படியே வைச்சுக்கோ

 

 

“என்ன சொன்ன இலவச மருத்துவம் பார்க்கணும்ன்னா?? அதுக்கு என்ன அவசியம் எனக்கு?? நான் இலவசமா பார்த்தா என் குடும்பத்தை யாரு பார்க்கறது?? அப்படி இலசவமா தான் பார்க்கணும்ன்னா அவங்க கவர்மென்ட் ஆஸ்பிட்டல் போய் பார்ப்பாங்க

 

 

“என்கிட்ட வரணும்ன்னு எந்த அவசியமும் இல்லை. உனக்கு ஏன் இப்படி தேவையில்லாத சிந்தனை எல்லாம் வருது. இன்னையோட இந்த பேச்சை நீ என்கிட்ட பேசவே கூடாது

 

 

“நான் பேசத்தான் செய்வேன் என்றாள் அவள் வீம்பாய், விருட்டென்று இருக்கையை விட்டு எழுந்தவன் உக்கிரமாய் அவளை பார்த்துவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.

 

 

அவன் பின்னோடே சென்றவள் அவன் பார்வையில் வாயை மூடிக் கொண்டாள். வீட்டிற்கு வந்த பின்னும் கூட அவன் எதுவுமே அவளிடம் பேசவில்லை.

 

 

இப்படியே இருவருக்குள்ளான மௌனப் போராட்டம் தொடர மீண்டும் இரண்டு நாள் கழித்து ஆரம்பித்தாள் அவள். “என்னங்க?? என்றதற்கு பதிலேதும் சொல்லாதவன் ‘என்ன என்பது போல் அவளை பார்த்து வைத்தான்.

 

ஒரு வேளை அவள் செய்தது தப்பு என்று எண்ணி மன்னிப்பு கேட்பாளோ என்று எண்ணியே அவளை நோக்கினான். “அன்னைக்கு நாம பேசினதை பத்தி எதுவும் யோசிச்சீங்களா??

 

 

“நீங்க யோசிக்கட்டும்ன்னு தான் நான் ரெண்டு நாளா எதுவும் பேசாம அமைதியா இருந்தேன் என்றாள்.

 

 

அவள் மீண்டும் ஆரம்பித்ததில் பொறுமை இழந்தவன் “இங்க பாரு இது தான் கடைசி நீ என்கிட்ட இந்த விஷயம் பேசறது. என் வேலையில நீ தலையிடுறது எனக்கு பிடிக்கலை. உனக்கு என்ன குறை, நான் உன்னை சரியா பார்த்துக்கலையா?? உன்னை கவனிக்கலையா??

 

 

“அப்படி எதுவுமே இல்லாதப்போ நீயா எதுக்கு தேவையில்லாத ஒரு பிரச்சனையை நமக்குள்ள ஆரம்பிச்சு வைக்கற, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஆரா

 

 

“உன்கிட்ட பேசாம ரெண்டு நாளா இப்படி இருக்கறது எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ இனி என் வேலை பத்தியோ சபரி வேலை பத்தியோ நீ எதுவும் பேசாதே என்றவனிடம் பதிலேதும் பேசாமல் இருந்தாள்.

 

 

அவள் அமைதியாய் இருந்தது அவனுக்கு சற்றே சந்தோசமாயிருந்தது நம் பேச்சை கேட்டுவிட்டாள் என்று. அத்துடனாவது ஆராதனா சும்மா இருப்பாள் என்று எண்ணியவன் அறியவில்லை அவள் அடுத்து ஒரு வினையை இழுத்து வைப்பாள் என்று.

 

 

அதனால் அனீஷுக்கும் ஆராதனாவுக்கும் மட்டுமல்ல சபரீஷுக்கும் யாழினிக்கும் இடையிலும் கூட கருத்து வேறுபாடு தோன்றப் போவதை அறியாமல் அவன் கிளம்பிக் கொண்டிருந்தான்….

 

 

 

Advertisement