Advertisement

அத்தியாயம் – 1

 

 

கோயம்புத்தூரில் இருந்த மிகப்பெரிய திருமண மாளிகை கொடிசியா ஹால், பிரமாண்டமான அம்மண்டபம் விழாக் கோலம் பூண்டிருக்க அந்த அந்தி மாலை வேளையில் அந்த இடமே ஒளிர்ந்து கொண்டிருந்தது.

 

 

வாசலில் மணமக்களின் பெயர்களை தாங்கிய பலகை ஒன்றில் மணமகனாய் அனீஷ் மணமகளாய் ஆராதனாவின் பெயரும் மற்றொரு பலகையில் மணமகனாய் சபரீஷ் மற்றும் மணப்பெண்ணாய் யாழினியின் பெயர் தாங்கிய  பலகை வருவோர்கள் காணும் விதமாய் அலங்காரமாய் நின்றிருந்தது.

 

 

கொஞ்சம் தள்ளி உள்ளே சென்றால் வரவேற்ப்பில் இளம்சிட்டுக்களாய் வந்தோர்களை வரவேற்க என அலங்காரமாய் உடுத்துக் கொண்டு இளம்வயது பெண்கள் நின்றுக் கொண்டிருந்தனர்.

 

 

பூவும் கல்கண்டும் கொடுத்துக் கொண்டும் தங்களை சுற்றி வரும் இளவட்டங்களை ஓரக்கண்ணால் கண்டும் காணாமல் கண்டு தங்களுக்குள் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் நின்றிருந்தனர்.

 

 

வரவேற்ப்பில் நின்றிருந்தவர்களை தாண்டி உள்ளே சென்றால் வாயிலிலேயே மாப்பிள்ளையின் தாயும் தந்தையும் ஒரு புறம் நின்றுக் கொண்டு வருவோர்களை வரவேற்று உள்ளே அமர வைத்துக் கொண்டிருந்தனர். திலகவதி வெளியில் சிரித்துக் கொண்டிருந்தாலும் உள்ளே ஏதோ ஒரு கவலை அவரை வாட்டிக் கொண்டிருந்தது

 

 

அதை மறைத்தவராய் அங்குமிங்கும் வலம் வந்தாலும் அவர் முகத்தில் அது வெளிப்படையாய் தெரிந்ததை கண்டு கொண்ட சுந்தராஜ் மனைவியை அருகே அழைத்து ஏதோ சமாதானம் செய்வது போல் பேச அதன் பின் திலகவதியும் இயல்பாக காட்டிக் கொண்டார்.

 

 

சுந்தராஜ் மற்றும் திலகவதி தம்பதியாரின் வாரிசுகள் தான் அனீஷ் மற்றும் சபரீஷ். இருவருக்கும் இடையே ஒரு வயது மட்டுமே இடைவெளி என்பதால் இருவருக்குமே ஒன்றாகவே பெண் பார்த்தனர் அவர்கள் வீட்டில்.

 

 

பெண் பார்த்ததும் தான் ஒன்றென்றால் இருவருக்கும் ஒன்றாகவே பெண்ணும் அமைந்துவிட இதோ ஒரே நாளில் இரு மக்களுக்கும் திருமணம். பெற்றவர்களாய் இருவரும் குளிர்ந்து தான் போயிருந்தனர்.

 

 

அவர்களை தாண்டி உள்ளே செல்ல அங்கிருந்த இருக்கைகளை சுற்றமும் நட்பும் அலங்கரித்திருந்தனர். ஒரு ஓரமாய் மணமகள்களின் தோழிகள் கூட்டமாய் இருக்கைகளை போட்டு அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.

 

 

வந்திருந்த இளவட்டங்களின் பார்வை முழுதும் அந்த பெண்களையே மொய்த்துக் கொண்டிருந்தது. ஆங்காங்கே ஓரிருவர் அவ்விளவட்டங்களுக்கு பதில் பார்வை பார்த்துக் கொண்டிருக்க இளைஞர்கள் குதூகலமாக சுற்றித் திரிந்தனர்.

 

 

“ஹேய் என்னால இப்பக் கூட நம்பவே முடியலைடி, இந்த ஆராதனாவும் யாழினியும் ஏதோ சும்மாவே சொல்லிட்டு இருக்காங்களேன்னு நினைச்சேன். சொன்ன மாதிரியே ஒரே வீட்டில வாழப் போறாளுங்க… என்றாள் ஒருத்தி.

 

 

“ஆனா இப்போ இப்படி நடந்து என்ன புண்ணியம்டி அவளுக ரெண்டு பேரும் தான் ரெண்டு துருவமா இருக்காளுங்களே என்றவள் வாசலில் வருபவளை கண்டு “ஹேய் அங்க பாருங்கடி இவ எதுக்குடி இப்போ இங்க வர்றா… என்று கூறவும் மற்றவர்கள் வாயிலை திரும்பி பார்த்தனர்.

 

 

அந்த வழியாக ஒரு பெண்ணும் அவள் உடன் அவள் கணவனும் வந்து கொண்டிருந்தனர். “இவளால தான் ரெண்டு பேரும் பிரிஞ்சாங்க, இப்போ எதுக்கு இங்க வந்திருக்காளோ தெரியலையே… என்று ஒருத்தி சொல்ல அப்பெண் அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள்.

 

 

அனைவரையும் பார்த்து சினேகமா அப்பெண் புன்னகைக்க மற்றவர்களும் சிரிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அரைகுறையாக  பார்த்து வைத்தனர்.

 

 

“என்ன எல்லாரும் என்னை வேண்டா வெறுப்பா பார்க்கற மாதிரி இருக்கு. இன்னும் என் மேல உங்களுக்கு கோபம் தீரலையா??

 

 

“உன் மேல கோபப்பட நாங்க எல்லாம் யாரு?? என்றாள் ஒருத்தி.

 

 

“ஏன் ஜானகி இப்படி யாரோ மாதிரி பேசுற, இன்னமும் உங்களுக்கு என் மேல கோபமிருக்குன்னு எனக்கு புரியுது. சத்தியமா சொல்றேன் யாழினியும் ஆராதனாவும் பிரியணும்ன்னு நான் நினைக்கலைடி…

 

 

“அவங்க எப்படியாச்சும் சேரணும்ன்னு தான் நினைக்கிறேன். இப்போ கூட ஆராதனா பத்திரிகை அனுப்பி தான் வந்திருக்கேன். யாழினியும் அவளுமே ஒரே வீட்டில வாழ்க்கை படப் போறாங்கன்னு தெரிஞ்சதுல இருந்து எனக்கு எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுமா??

 

 

“என்னால பிரிஞ்சவங்க எப்படியோ சேரப் போறாங்கன்னு எனக்கு இப்படி தான் நிம்மதி வந்திருக்கு என்றவளின் குரலில் ஒரு அமைதி இருந்தது.

 

 

“சரி அதெல்லாம் விடு ராகினி நீ நல்லாயிருக்கியா?? சுரேஷ் எப்படி இருக்கார்?? உங்க வீட்டில உங்களை ஏத்துகிட்டாங்களா??

 

 

“சுரேஷ் நல்லாயிருக்கார், நாங்க ரொம்ப சந்தோசமா இருக்கோம்டி. அவர் வீட்டில எங்களை புரிஞ்சு ஏத்துக்கிட்டாங்க. எங்க வீட்டிலையும் எங்களை சேர்த்துகிட்டாங்க…

 

 

“பரவாயில்லையே உங்க வீட்டில இவ்வளவு சீக்கிரமா உங்களை சேர்த்துகிட்டாங்க!!! பெரிய விஷயம் ராகினி

 

 

“அதுக்கெல்லாம் காரணம் ஆராதனா தான் என்ற ராகினியை மற்றவர்கள் வியந்து பார்க்க “நிஜமா தான் சொல்றேன், நாங்க சேர்றதுக்கு மட்டுமில்லை, எங்களை பெத்தவங்களோட சேர்றதுக்கும் அவ தான் காரணம்… என்றாள்.

 

“ஆமா எப்படி ரெண்டு பேரும் ஒரே வீட்டுக்கு மருமகளா போறாங்க. காலேஜ்ல ஏதோ சும்மா ஜாலிக்கு பேசிட்டு இருந்தாங்கன்னு நினைச்சேன், நிஜமாவே நடந்திடுச்சே…

 

 

“அதை தான் நாங்களும் இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தோம் ராகினி. நீயும் அதே தான் கேட்குற, உன்னை போல தான் எங்களுக்கும் தோணுது. இனி அவங்க ரெண்டு பேரும் பழைய மாதிரி பேசிக்க ஆரம்பிச்சுடுவாங்கன்னு தான் நாங்களும் நினைக்கறோம்… என்றனர் அனைவருமே கோரசாக.

 

 

தோழிகள் மீண்டும் தங்களுக்குள் வேறு ஏதோ வளவளக்க அவர்களை தாண்டி செல்ல அங்கு மணமக்கள் அமருவதற்காய் போடப்பட்டிருந்த நாற்காலிகள் அலங்காரமாய் வீற்றிருக்க அந்த மணமேடைக்கு நேர் மேல இருந்த மாடியில் இருந்த அறைகளில் ஒன்றில் மாப்பிள்ளைகள தயாராகிக் கொண்டிருந்தனர்.

 

 

அனீஷும் சபரீஷும் கோட் சூட் அணிந்து தயாராகியிருந்தனர். இருவருக்கும் தனிப்பட்ட நண்பர்கள் என்றில்லாததால் ஒருவருக்கொருவர் அவர்களே நண்பர்களாகியிருந்தனர்.

 

 

அனீஷ் சபரீஷ் இருவருமே நினைத்ததை சாதிக்கும் ரகம். முதலாமவன் பேச்சில் வல்லவன் பேசியே தன் காரியத்தை சாதித்துக் கொள்ளவான். இரண்டாமவன் பேசிக் கொண்டிருக்க மாட்டான் எதிலும் அவன் அதிரடி தான்.

 

 

அதிரடியாய் இறங்கி தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளவான். அனீஷ் மருத்துவனாய் அவர்கள் மருத்துவமனையான எஸ்டி ஹாஸ்பிடலில் தலைமை பொறுப்பில் இருப்பவன்.

 

 

சபரீஷ் கட்டிடக்கலை வல்லுனன், எஸ்டி பில்டர்ஸ் அவனுக்கு சொந்தமானது. சுந்தராஜை பின்தொடர்ந்து அவனும் அதே தொழிலை திறம்பட செய்துக் கொண்டிருப்பவன்.

 

 

“என்ன அனீஷ் இன்னுமா டிரஸ் பண்ணிட்டு இருக்க?? என்றான் சபரீஷ்.

 

 

“பின்ன ஆராவை விட நான் ஜம்முனு இருக்க வேண்டாமா?? என்றவனின் யோசனை ஆராதனாவை பற்றி சிந்திக்க அவளை பெண் பார்க்க சென்ற அந்த நினைவுக்குள் சென்று வந்தது.

 

 

“அதுக்குள்ள நீ அண்ணிக்கிட்ட பிளாட் ஆகிட்டியா?? என்றான் கிண்டலாக.

“ஏன் நீ பிளாட் ஆகலையா சபரி??

 

 

“பிளாட் ஆக என்ன இருக்கு அனீஷ், அவளை எனக்கு பிடிச்சிருக்கு அவ்வளவு தான். அதுக்காக அவளையே நினைச்சுட்டு சாப்பிடாம தூங்காம இருக்கறது எல்லாம் என்னால முடியாது

 

 

“நான் என்ன சாப்பிடாம தூங்காமலா இருக்கேன். அடப்போடா அது ஒரு பீல் என்றவனின் எண்ணம் மீண்டும் ஆராதனாவை சுற்றி வட்டமிட ஆரம்பித்தது.

 

 

“அப்பா சாமி நீ கனவெல்லாம் அப்புறம் காணு. இப்போ ரிஷப்ஷன்க்கு நேரமாச்சு கீழே போவோமா?? என்றவன் அனீஷை இழுத்துக் கொண்டு போனான் சபரீஷ்.

 

 

மணமகன் அறைக்கு நேர் எதிரே இருந்த இரு அறைகளும் மணப்பெண்களுக்கு ஒதுக்கியிருந்தனர். ஆராதனா தயாராகி வெளியில் வரவும் யாழினி அவள் அறையில் இருந்து வரவும் இருவர் விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவி நின்றது.

 

 

ஆராதனாவோ யாழினியை பார்த்து புன்னகைக்க பதிலுக்கு அவளும் புன்னகைக்க நினைக்கையில் ராகினி வந்து சேர்ந்தாள். ராகினி வரவும் யாழினி இருவரையுமே பார்த்து முறைத்துவிட்டு மற்றவர்களுடன் சேர்ந்து கீழே இறங்கிச் சென்றாள்.

 

 

“சாரி ஆராதனா எல்லாம் என்னால தான். உங்களை இங்கவே வந்து பார்த்திட்டு போயிடலாம்ன்னு வந்தேன். ஆனா யாழினி இப்படி கோவமா போவாங்கன்னு நினைக்கலை

 

 

“ராகினி நீ அவளை விடு, சொல்லு நீ எப்படியிருக்க?? சுரேஷ் வந்திருக்காரா?? அம்மா அப்பா மாமனார் மாமியார் எல்லாம் எப்படி இருக்காங்க?? என்று விசாரித்தாள் ஆராதனா.

 

 

“எல்லாரும் நல்லாயிருக்காங்க ஆராதனா. யாழினி இன்னும் உன் மேல கோபமா தான் இருக்காளா?? உங்களோட நல்ல நட்பு உடைய நான் காரணம்ன்னு நினைச்சா ரொம்ப கஷ்டமாயிருக்கு?? என்றவளின் கண்ணில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

 

 

“உன்னால அப்படின்னு எதுவுமில்லை. எனக்கு யாழியை தெரியும், அவளை நான் பார்த்துக்கறேன். நீ இதுல கவலைப்பட எதுவுமில்லை

“என்னம்மா இங்க நின்னு மசமசன்னு பேசிட்டு?? மாப்பிள்ளை வந்துட்டாராம் கீழே, யாழினியும் அப்போவே இறங்கி போயாச்சு நீ இன்னமும் நின்னு பேசிட்டு இருக்க?? வாம்மா கீழே போவோம் வா என்று அருகில் இருந்த உறவின் பெண்மணி அவளை அழைத்துச் சென்றார்.

 

 

அவளுக்கு முன்னதாக சென்றுவிட்ட யாழினி சபரீஷின் அருகில் நின்றிருக்க அவர்கள் இருவரின் ஜோடி பொருத்தத்தை கண்ணார கண்டு மகிழ்ந்தவளாக அவளும் மேடையேறி அனீஷின் அருகில் சென்று நின்றாள்.

 

 

அனீஷின் ஒல்லியான உடல்வாகையும் தன் பூசிய உடல்வாகையும் ஒப்பிட்டு பார்த்தவள் ‘தான் இவனுக்கு பொருத்தமாய் தான்இருக்கிறோமா?? என்று எண்ணிக் கொண்டே குனிந்து தன்னையே ஒரு முறை பார்த்தவள் திரும்பி அருகில் நின்றிருந்தவனை பார்த்தாள்.

 

 

அவனும் அந்நேரம் அவளையே பார்த்தவன் அவளை பார்த்து லேசாய் கண்சிமிட்ட அவளுக்கு குப்பென்று வியர்ப்பது போல் தோன்றியது.

 

 

“என்ன பார்வை எல்லாம் பலமா இருக்கு?? என்ன ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க?? என்று குனிந்து அவள் காதில் கிசுகிசுத்தான் அவன்.

 

 

“ஒண்… ஒண்ணும்மில்லை… என்றாள் திக்கிக் கொண்டே

 

 

“நிஜமாவே ஒண்ணுமில்லையா?? நான் கூட நீ என்னை சைட் அடிக்கிறேன்னு நினைச்சேன், இப்படி ஏமாத்திட்டியே?? என்றான்.

 

 

அவன் பேச்சு காதில் விழுந்தாலும் விழாதது போல் காட்டிக் கொண்டவள் பார்வையை வேறு புறம் வைத்துக் கொண்டாள்.

 

 

“பதில் சொல்லாம எஸ்கேப் ஆகுற?? எங்க போய்ட போற என்கிட்ட தானே வரணும் அப்போ பேசிக்கறேன்… என்று சிரித்தவனின் கன்னத்தில் அழகாய் குழி விழ அதற்குள் கைவைத்து பார்க்க ஆசை வந்தவளாய் அவள் கைகள் மேல் நோக்கி உயர சுற்றுப்புறம் உணர்ந்து கையை கீழே இறக்கினாள்.

 

 

யாழினியின் அருகில் நின்றிருந்த சபரீஷ் ரொமான்ஸ் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பான் போல் நின்றிருந்தான். அனீஷ் ஆராதனாவிடம் பேசுவதும் அவள் வெட்கப்படுவதையும் பார்த்தவள் சபரீஷ் ஏதும் பேசாமல் நின்றிருப்பதை பார்த்து சங்கடமாக உணர்ந்தாள்.

 

 

பெற்றவர்களின் விருப்பத்திருக்காக சபரீஷை மனம் புரிய சம்மத்திருந்தாலும் யாழினிக்கும் அவனை பிடித்து தான் சம்மதம் சொல்லியிருந்தாள். அவன் பாவனையில் தெரிந்த சிறு அலட்சியம் கூட அன்று அவளுக்கு பிடித்தது.

 

 

ஆனால் இன்றும் கூட பெண் பார்க்க வந்த அன்று காண்பித்த அதே அலட்சிய மனோபாவத்தையே அவன் காட்டவும் அவளுக்கு நெருடலாய் இருந்தது. இவன் தன்னை பிடித்து தான் இந்த திருமணத்திற்கு சம்மதித்தானா?? என்று கேள்வியாய் அவனை நோக்கினாள்.

 

 

அவனும் தற்செயலாய் அவளை பார்க்க அந்த ஒரு பார்வையே அவளை ஏதோ செய்ய பார்வையை அவள் தழைத்துக் கொண்டாள். வரவேற்பு வெகு விமரிசையாக நடந்துக் கொண்டிருந்தது.

 

 

ஒவ்வொருவராக வந்து மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். ராகினியும் சுரேஷும் மேடையேறி வர யாழினி அவர்களை கண்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

 

அவர்கள் இருவரும் ஆராதனாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அவளிடம் விடை பெற்றார்கள். ராகினியோ இறங்கும் தருவாயில் யாழினியை பார்த்து மன்னிக்குமாறு கண்களால் வேண்ட அவளோ அலட்சியமாய் மற்றவளை பார்த்தாள்.

 

 

மறுநாள் சுபயோக சுபதினத்தில் மணமகன்கள் தங்கள் இணைகளுக்கு மாங்கல்யம் பூட்டி தங்களின் சரிபாதியாய் ஆக்கிக் கொண்டார்கள்.

 

 

ஆராதனாவின் பெற்றோரும் யாழினியின் பெற்றோரும் தங்கள் மகள்களின் அருகில் வந்து நின்றனர். “நீங்க ரெண்டு பேரும் உங்களுக்கு விபரம் தெரிந்த வயசுல இருந்து சொல்லிட்டே இருப்பீங்க ஒரே வீட்டுக்கு தான் கல்யாணம் ஆகி போகணும்ன்னு நீங்க நினைச்ச மாதிரி அது நடந்திருச்சு…

 

 

“நீங்க ரெண்டு பேரும் உங்களோட மனத்தாங்கலை எல்லாம் விட்டுட்டு ஒண்ணா சந்தோசமா குடும்பத்தை நடத்தணும் அது தான் எங்களோட விருப்பம்… என்று யாழினியின் அன்னை கூற மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.

 

 

சிறுவயதில் ஆராதனாவும் யாழினியும் இருவரும் பிரியக் கூடாது என்பதற்காய் விளையாட்டாய் சொல்லிக் கொண்டிருந்தது அவர்களே இதை எதிர்பார்த்திருக்கவில்லை ஒரே வீட்டிற்கு அவர்கள் மருமகளாய் வருவார்கள் என்று. ஏனோ அன்று அப்படி சொல்லும் போது இருந்த சந்தோசம் இன்று இருவருக்குள்ளுமே இல்லை என்றே தோன்றியது.

 

 

யாழினி திரும்பி ஆராதனாவை பார்க்க அவளோ தோழியை பார்த்து புன்னகைத்தாள். ‘எதுவுமே நடக்காத மாதிரி இவளால மட்டும் எப்படி சிரிக்க முடியுது என்று யோசனையுடனே அவள் பார்த்தாள்.

 

 

‘கடைசிவரைக்கும் நான் சொன்னதையே கேட்காம அவ நினைச்சதை சாதிச்சுட்டாளே. அதனால எவ்வளவு கெட்ட பேரு, எவ்வளவு பேரு தப்பா பேசினாங்க… என்று கண்ணை மூடி யோசித்தவள் நிகழ்காலத்திற்கு வந்தாள்.

 

 

அந்த சடங்கு இந்த சடங்கு என்று அன்றைய பொழுது வேகமாய் செல்ல மதியத்திற்கு மேல் மணப்பெண்கள் இருவரையும் ஓய்வெடுக்க தனியறைக்கு அனுப்பி வைத்தனர்.

 

 

இருவருக்கும் ஓய்வெடுக்க ஒரே அறையை கொடுத்திருக்க தன்னிடம் பேச வந்த ஆராதனாவை கவனிக்காதவள் போல் சென்று கட்டிலில் விழுந்தாள் யாழினி.

 

 

“யாழி… யாழி… என்று நீண்ட நாளைக்கு பின் கேட்ட ஆராதனாவின் செல்ல அழைப்பு அவளுக்குமே ஏதோ செய்ய மனதை மறைத்தவளாய் திரும்பியும் பாராமல் கண்ணை இறுக மூடிக் கொண்டாள் அவள்.

 

 

“நீ தூங்கற மாதிரி நடிக்கிற யாழி, உன்னை எழுப்பறது கஷ்டம் தான். இன்னுமாடி உனக்கு என் மேல கோபம். அப்படி நான் பெரிசா என்ன தப்பு பண்ணிட்டேன்னு நீ இப்படி எனக்கு தண்டனை கொடுக்குற??

 

 

“எத்தனை தரம் உன்கிட்ட வந்து பேசினாலும் இப்படி முகத்தை திருப்பிட்டு போற?? உன்னை என்னோட தோழியா நினைச்சது தவிர நான் என்னடி தப்பு செஞ்சேன்??

 

 

“இந்த கல்யாணத்துக்கு நான் ஒத்துக்கிட்டது கூட உனக்காக தான் தெரியுமா?? சின்ன வயசுல நாம் விளையாட்டா சொல்லியிருக்கலாம் ஒரே வீட்டில தான் இருக்கணும்ன்னு

 

 

“தம்பிக்கு உன்னை பார்த்து முடிவு பண்ணதுமே உங்கம்மா தான் இதே வீட்டில இன்னொருத்தருக்கும் பொண்ணு பார்த்திட்டு இருக்காங்கன்னு சொல்லி என்னோட ஜாதகத்தையும் போட்டோவையும் கொடுத்திருக்காங்க…

“கடைசில எங்களுக்கும் பொருத்தம் சரியா இருந்து அவரும் வந்து பார்த்து பிடிச்சு போச்சு. உண்மையா சொல்றேன் நீயும் நானும் ஒண்ணா ஒரே வீட்டில இருக்கப்  போறோம்ங்கற ஒரே சந்தோசத்துக்காக தான் நான் இந்த கல்யாணத்துக்கே ஒத்துக்கிட்டேன் யாழி…

 

 

“நீ என்னை எப்போ புரிஞ்சுக்கப் போறியோ தெரியலை யாழி?? நாம ரெண்டு பேரும் ஒரே வீட்டில வாழ்க்கை பட்டிருக்கோம். நீ இனியும் இப்படி முகத்தை திருப்பினா எல்லாரும் நம்மை தப்பா நினைப்பாங்கடி

 

 

“உனக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ என்கிட்ட பேசுடி, நாம ஒரே வீட்டில இருக்கப் போறோம் அப்படிங்கறதுக்காகவாச்சும் பேசுடி. நான் இவ்வளவு சொல்லியும் நீ இப்படி அமைதியா இருக்கே??

 

 

“நான் சொல்றதை சொல்லிட்டேன், இனியும் நீ தூங்கற மாதிரி நடிச்சா நான் ஒண்ணும் செய்ய முடியாது. இருந்தாலும் உனக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது யாழி என்று சொல்லிவிட்டு அமைதியாய் மற்றவளை பார்த்தாள்.

 

 

ஆராதனா சொல்வதை அவள் காதுகள் கேட்டாலும் உணர்வில் பதிந்தாலும் அவளுக்கு பதிலேதும் சொல்லாமல் கண்ணை மூடி வெறுமே சயனித்திருந்தாள் மற்றவள்.

 

 

ஆராதனா பொறுத்து பார்த்துவிட்டு அருகில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள். உறக்கம் அவளை தழுவ அமர்ந்த நிலையிலேயே உறங்கிப் போனாள் அவள்.

 

 

சில மணி நேர தூக்கத்திற்கு பின் எழுந்த யாழினி அமர்ந்த நிலையிலேயே உறங்கிக் கொண்டிருந்த ஆராதனாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க அதற்குள் யாரோ அறைக்கதவை தட்டும் ஒலி கேட்க யாழினி எழுந்து சென்றாள்.

 

 

கதவு தட்டும் ஒலியில் உறக்கம் கலைந்த ஆராதனாவும் எழுந்து அவள் பின்னேயே சென்றாள். அன்றைய இரவை நினைத்து இயல்பாய் பெண்களுக்கே தோன்றும் பய உணர்வு அவர்கள் இருவரையுமே ஆட்டி படைத்தது.

 

 

தத்தம் கணவன்மார்களுடன் அமர்ந்து இரவு உணவை அருந்த அமர்ந்த இருவருமே சாப்பிட்டார்களா என்று கேட்டால் அவர்களுக்கே தெரியாது. ஆராதனாவும் யாழினியும் வாய் திறந்து பேசிக்கொள்ளவில்லையே தவிர அவர்கள் பார்வை அவ்வப்போது ஒருவரை ஒருவர் தழுவியே இருந்தது. அதுவே இருவருக்கும் சற்று தெம்பை கொடுத்தது போல் இருந்ததுவோ என்னவோ??

 

 

அன்றைய இரவுக்காய் நெருங்கிய உறவு பெண்மணிகள் அவர்களிருவரையும்  அலங்கரித்தனர்.அருகருகே அமர்ந்திருந்த போதும் இருவரையுமே ஏதோவொரு கலக்கம் சூழ்வதாய் இருந்தது. அடிவயிற்றில் தோன்றிய பயம் இருவர் முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தது.

 

 

ஆராதனாவையும் யாழினியையும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்திருந்த அறைக்குள் செல்லுமாறு அனுப்பி வைக்க உள்ளே செல்லும் முன் இருவருமே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

 

ஆராதனா எப்போதும் போல் தோழியை பார்த்து புன்னகைக்க யாழினியோ ‘இந்த ரணகளத்துலையும் கூட இவளால மட்டும் தான் சிரிக்க முடியும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

 

 

மேலும் ஆராதனா அவளை பார்த்து லேசாய் தலையாட்டிவிட்டு உள்ளே செல்ல யாழினிக்கு மற்றவளின் புன்னகை முகமும் தலையசைப்பும் கொடுத்த தைரியத்தில் அவளும் முதலிரவு அறைக்குள் நுழைந்தாள்…

Advertisement