Advertisement

அத்தியாயம் 6
வண்டியை நிறுத்தி விட்டு மனைவியை காண ஆவலோடு வந்தவன் கண்டது பார்வதி பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டு தன்னையே மறந்து தொலைக்காட்ச்சியில் லயித்திருக்கும் மனைவியை. 
“வண்டி சத்தம் கேட்டு வெளியே வருவானு பாத்தா கண் சிமிட்டாம டிவி பாக்குறா அப்படி என்ன பாக்குறா?” என்ற எண்ணத்தோடு அவர்கள் அமர்ந்திருக்கும் சோபாவின் பின்னால் சென்று நின்றுக் கொண்டவன் டீவியை நோக்க அதில் ஏதோ ஹிந்தி டிவி சீரியல் ஓடிக் கொண்டிருந்தது. கதையின் நாயகி கண்ணீரில் கரைய, பாட்டியும் பேத்தியும் சீரியல் மாமியாரையும், ஹீரோவையும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தனர். 
“உங்க ரெண்டு பேருக்கும் ஹிந்தி தெரியும் என்பதே! எனக்கு தெரியாதே” திடுமென கேட்ட கணவனின் குரலில் பாட்டியின் மடியில் தலைவைத்து படுத்துக் கொண்டிருந்த தியா அடித்துப் பிடித்து எழுந்துக்க கொள்ள, 
“ஹிந்தி தெரியும் னு முதல்லயே சொல்லி இருந்தா.. வீட்டுல தனியா இருக்காம வெளிய எங்கயாவது போய் வர ஏற்பாடு செஞ்சி இருப்பேன்” சொல்லியவாறே சோபாவில் அமர்ந்தான் பிரதீபன். 
டிவியில் கண்ணை வைத்தவாறே பார்வதி பாட்டி “என்ன சொல்லுறாங்க னு புரியல பேராண்டி.. ஆனாலும் துணியெல்லாம் பல பல னு போட்டு இருக்காங்க, எம்புட்டு நகை? வீடெல்லாம் பாரேன் டீவிலயே! மும்பாய் பார்க்கலாம். பாஷையா முக்கியம் எங்கப் பாத்தாலும் மாமியார் மருமகளை கொடும செய்றதும், புருஷன்காரன் அம்மாக்கு உடந்தையா இருக்குறதுக்கு நடந்து கிட்டு தானே இருக்கு. திவ்யா போ.. போய் உன் புருஷனுக்கு காபி கொண்டுவா..” திவ்யாவை விரட்ட 
“இப்போ யாரு இவர நேரங்காலத்தோட வீட்டுக்கு வர சொன்னா” சிடுசிடுப்போடையே எழுந்தவளை தடுத்தான் பிரதீபன் 
“நீ இரு தியா சீரியல் சூப்பரா போகுது பாத்துட்டே காபி குடிக்கலாம்” அவளின் சுணங்கிய முகத்தை கண்டு சொன்னவன் “தமிழ் சேனல் என்ன பாக்குறீங்க னு சொன்னா ஏற்பாடு பண்ணுறேன் பாட்டி” என்றவன் பூவை எவ்வாறு மனைவியிடம் கொடுப்பதென்று தயங்கினான். 
“என்ன பேராண்டி பொண்டாட்டிக்கு பூ வாங்கிட்டு வந்திருக்க போல, வந்த உடனே கொடுக்காம என்ன ஆற அமர உக்காந்துட்ட?” ப்ரதீபனின் கையில் இருந்த பையில் மல்லிகை பூவை கண்ட உடன் நொடியில் புரிந்துக் கொண்டு சொன்னவர் தியாவின் புறம் திரும்பி “என்ன மச மசன்னு நிக்குற பூவ வாங்கிட்டு போ.. போய் காப்பி போடு” மீண்டும் அதட்ட 
“எதுக்கு பூவு அதான் தோட்டத்துல நிறைய இருக்கே!” என்ற பார்வையோடு வாங்கிக் கொண்டவள் நேராக சென்றது பூஜையறைக்கு. அழகாக சாமி படத்துக்கு சாத்தியவள் வணங்கி விட்டு வெளியே வர பிரதீபன் தான் நொந்து விட்டான். 
ரிஷி சொன்ன ஒன்னும் நடக்கவில்லை. ஒரு வெக்கப் புன்னகை கூட இல்லாமல், பூவை வாங்கியது மட்டுமல்லாது ஆசையாக அவளுக்காக வாங்கி வந்ததை சாமிக்கு சாத்தி விட்டாள். காலையில் அவன் கொடுத்த முத்தத்திற்கு  மாலையில் வீட்டுக்கு வந்தால் அவளின் பிரதிபலிப்பு என்னாவா இருக்கும் என்று காலையில் நினைத்து பார்த்தது மகிழ்ந்தது நியாபகம் வர அவளிடம் மாற்றம் எதிர் பார்த்து வந்தவனை ஏமாற்றி இருந்தாள் அவன்  மனையாள்.
“இவ எந்த நேரத்துல என்ன செய்வான்னு ஒன்னும் புரியல” மனைவியை முறைக்கவும் முடியாமல், கடியாவும் முடியாமல் அவளையே பாத்திருக்க, 
“என்ன ஒரு நாளும் இல்லாம இப்படி பாக்குறாரு. கோபமா இருக்கிறாரோ” யோசனையுடனே கணவனுக்கு காபி போட அவனை திரும்பித் திரும்பி பார்த்தவாறே சமயலறைக்குள் நுழைந்தாள் தியா. 
டிவியில் கண்ணாக இருந்த பார்வதி பாட்டியும் அங்கே நடந்ததை பார்த்துக் கொண்டு தான் இருந்தார். “உசுரு போக மொத கொள்ளு பேர பசங்களை பாக்க முடியாம போகும் போலயே! இப்படி கூறுகெட்டவளா இருக்கா. இவளையெல்லாம் என் பேத்தி னு சொல்லணும். புருஷன கைக்குள்ள வச்சிக்க தெரியல” தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக மனதுக்குள் நொடித்தவர் 
“பேராண்டி நீ மேல போ உன் பொண்டாட்டி காபியோட வருவா” டிவியிலிருந்து கண்களை அகற்றாதவாறே பாட்டி சொல்ல 
எதுவும் பேசாது அமுதனை அலைபேசியில் அழைத்தவாறே  படிகளில் ஏறினான் பிரதீபன். 
“என்ன புது மாப்புள… எங்க நியாபகம் எல்லாம் வருது” எடுத்த உடனே ப்ரதீபனை சீண்ட
“அட போடா நீ வேற.. இங்க ஒரு முன்னேற்றத்தையும் காணோம். உன் கிட்ட ஏதாவது ஐடியா கிடைக்குமான்னு பாத்தேன்” 
‘ரிஷி உங்க ரெண்டு பேரையும் ஹனிமூன் அனுப்பனும் னு சொன்னான். அத சாக்கா வச்சி அவனும் போக போறான் போல. நீ சொல்லுறத பாத்தா.. அங்க போய் சுவர பாத்துட்டு உக்காந்து இருக்க போற்றியோ னு தோணுது”
“அதுல என்ன சந்தேகம் உனக்கு. ஏதாவது ஐடியா கொடுடா…”
“இதுக்கு தான் தமிழ் சினிமா பாக்கணும் னு சொல்லுறேன்”
“டேய் டேய் அடங்குடா… அதுக்கெல்லாம் டைம் இல்ல . சீக்கிரம் ஒரு நல்ல ஐடியாவை சொல்லு” 
“சரி முதல்ல இருந்தே என்ன நடந்தது னு சொல்லு” பிரதீபன் சொன்னதை பொறுமையாக கேட்டுக் கொண்ட அமுதன் 
“ஹாஹாஹா ரிஷி கிட்ட சொல்லி அந்த ஹனிமூன் பேக்கேஜ் மாத்தி எனக்கு ஸ்விஸ்லண்ட் போக டிக்கட் போட சொல்லுற. நா ஐடியா வோட வரேன்”  அமுதன் அழைப்பை துண்டிக்க குளியலறைக்குள் புகுந்தான் பிரதீபன். 
வாழ்க்கையில் பெரிதாக எதுலையும் ஈடுபாடற்றவன் பிரதீபன். பொன்னோ! பொருளோ! பெண்ணோ! எதுவுமே அவன் தவத்தை கலைக்கவில்லை. பெண்களை முற்றாக வெறுத்தவனை கயல்விழியின் அன்பு மாற்றி இருக்க, ரிஷி கயலின் அந்நியோன்யமான வாழ்க்கை அவனுள் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.  அதுவே அவனை பொறுமையாக மனைவியை நெருங்க முயற்சிகளை செய்ய தூண்டியிருந்தது. இதுவே பழைய ப்ரதீபனாக இருந்தால்? வார்த்தைகள் தேளாக மாறி தியாவை கொட்டி இருப்பான்.
ஆற அமர காபியோடு வந்த தியாவை பிடித்துக் கொண்டார் பாட்டி “ஏய் நில்லு என்ன நினச்சிக்க கிட்டு இருக்க உன் மனசுல? புருஷன் ஆசையா பூ வாங்கிட்டு வந்தா தலைல வச்சிக்காம நேரா போய் சாமிக்கு சாத்துற, அறிவிருக்கா உனக்கு?” 
“மொத மொத பூ வாங்கிட்டு வந்து இருக்காரு அதான்….” “சாமிக்கு தானே சாத்தினேன். நான் என்ன தப்பு பண்ணேன்” என்ற யோசனையோடு பாட்டியை  முறைத்தாள் தியா
“போ..போய் மொதல்ல காப்பிய கொடு ஆறிட போகுது” 
“வர வர  நீ எனக்கு பாட்டியா? அவருக்கு பாட்டியானே சந்தேகமா இருக்கு. பேசாம ஊட்டிலையே விட்டுட்டு வந்திருக்கணும், தனியா கஷ்டப் படுமேனு கூடவே கூட்டிட்டு வந்தா அதிகாரம் பண்ணுற. இரு உன்ன வச்சிக்கிறேன்” தியா பொரும 
“போடி போய் ஒழுங்கா புருஷன் கூட குடும்பம் நடத்தி புள்ளய பெக்கா பாரு, பெருசா பேச வந்துட்டா.. உன்னயெல்லாம் மாமியார் னு ஒருத்தி வந்து கொடும படுத்தினா தான் திருந்துவ” பாட்டியும் தாக்க முணுமுணுத்தவாறே பிரதீபனை நாடிச் சென்றாள் தியா.
காபியோடு வந்த தியா குளியலறையில் சத்தம் கேக்கவே! “ஐயோ அவரு வரும் போது காபி ஆறி இருக்குமே! இப்போ என்ன செய்றது? இத நாம குடிச்சிட்டு வேற போடலாம்” என்றவள் மீண்டும் கீழே வந்து சீரியல் பார்த்தவாறு காபியை அருந்த 
“என்ன போன வேகத்தை விட திரும்பி வந்துட்ட” 
“அவர் குளிக்கிறாரு”
“நீ ஆடியசஞ்சி போகும் போது எல்லாம் முடிஞ்சிருக்கும். காலைலயும் ஒழுங்கா சாப்பிடாம போனான். மத்தியானம் ஒழுங்கா சாப்பிட்டானோ என்னமோ இரவைக்காவது ஒழுங்கா சாப்பாடு போடு. புருஷன கவனிக்காம சீரியல் பாத்து கிட்டு. முதல்ல எந்திரிச்சு ஓடு” 
“கொல்லிக் கண்ணு, எத்தன இட்லி சாப்புட்டாரு, என்ன சாப்பிட்டுறாரு, என்ன சாப்பிடலைனு கணக்கு பாத்து கிட்டு” பாட்டியை மனதுக்குள் திட்டியவள்
“வர வர நீ ஏதேதோ பண்ணுற.. இப்படியே பேசிகிட்டு இரு உன்ன முதியோர் இல்லத்துல கொண்டு போய் விடுறேன்”
“முதல்ல போய் ஒழுங்கா காப்பிய போட்டு புருஷன் மனசுல இடம் பிடிக்க பாரு”
“என்ன பஸ்ஸு, ட்ரைன்ல இடம் பிடிக்கிற மாதிரி சொல்லுற”
“போடி..” பாட்டியின் அடிக்குரலில் அதன் பின் தியா அங்கு இருந்தால் தானே!
“இவ இப்படி தத்தியா இருப்பான்னு எனக்கு தோணவே இல்லையே! இப்படியே விட்டா நா எப்போ கொள்ளு பேரன பாக்குறது. இருடி இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்” வாய்க்குள் முணுமுணுத்தவாறே அலைபேசியை கையில் எடுத்து கயல்விழியை அழைத்தார் பார்வதி பாட்டி. 
“ஹாய் பாட்டி என்ன போன் எல்லாம் பண்ணுறீங்க?”
“இங்க ஒன்னும் நடக்க காணோம். இவ வேற கூறுகெட்ட தனமா இருக்கா, உங்கண்ணன் என்னடான்னா ஸ்லோவா இருக்கான். இவங்க போற ஆம வேகத்துல நா சீக்கிரம் போய் சேர்ந்துடுவேன் போல இருக்கே!” எடுத்த எடுப்பிளையே பாட்டி அடி, நுனி இல்லாது புலம்ப 
“என்ன பாட்டி.. நீங்க சொல்லுறது ஒன்னும் புரியல, என்ன நடக்குது அங்க?” கயல்விழி யோசனையாக கேக்க 
“நீ முதல்ல பின்னாடி தோட்டத்துக்கு வா விலாவரியாக சொல்லுறேன்” என்றவர் அலைபேசியை அனைத்து விட்டு தோட்டம் பக்கம் நடந்தார். 
“என்ன பிரச்சினையோ?” என்ற கவலையாகவே வந்த கயல்விழி பாட்டி சொல்ல சொல்ல யோசனையில் விழுந்தாள். 
“ஊட்டில இருக்கும் போது எப்படி இருந்தாளோ அப்படியே தான் இருக்கா? எதுவும் மாறல. கல்யாணம் ஆனவங்களுக்குள்ள இருக்குற அன்னியோன்யம் எதுவும் இல்ல. கல்யாணம் எதுக்கு பண்ணி வச்சோம். குடும்பம் தழைக்கணுமா இல்லையா? எல்லாத்தையும் நான் சொல்லி கடமையா செய்றா, இவ சரிப்பட்டு வர மாட்டா. நானும் விரட்டிக் கிட்டு தான் இருக்கேன். இப்படியே போனா உங்கண்ணனுக்கு வேற பொண்ணு பாக்க வேண்டியது தான்” அவரின் அனுபவம் அவரை அவ்வாறு பேச வைக்க 
“என்ன பாட்டி பேசுறீங்க? அண்ணா அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு. தியாகு கல்யாணத்துல இஷ்டம் இல்லாம, கல்யாணத்துலயே ஒரு பிடித்தம் இல்லாம தானே இருந்தா, போகப் போக புரிஞ்சிப்பா” 
“காலம் கடந்து புரிஞ்சி என்ன செய்ய?” பாட்டி மூக்கை சிந்த 
“அவரை அண்ணா கிட்ட பேச சொல்லுறேன். அவங்க ரெண்டு பேரையும்  தேனிலவுக்கு அனுப்ப அவர் வேற ஏற்பாடு பண்ணுறதா சொன்னாரு போயிட்டு வந்தா ஒரு மாற்றம் ஏற்படுமில்ல” கயல் பாட்டிக்கு எடுத்து சொல்ல 
“நல்லது நடந்தா சரி. அம்மா, அப்பா இல்லாத பொண்ணு னு கைக்குள்ளயே வச்சி வளர்த்தது தாப்பாகிடுமோ னு பயமா இருக்கு”
“அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது பாட்டி நாம எல்லாரும் இருக்கோம்! விட்டுடுவோமா? இருட்டிருச்சு வாங்க உள்ள போலாம்” பாட்டியை ஒருவாறு சமாதனப் படுத்திய கயல் தியாவோடு பேச வேண்டும் என்ற முடிவோடு பாட்டியை வீட்டில் விட்டு விட்டு தங்களது வீட்டுக்குள் சென்றாள்.
சென்னையில் உள்ள ரிஷியின் வீட்டில் தான் தங்கி இருந்தான் அமுதன். பணக்காரர்கள் வசிக்கும் ஏரியா என்பதால் அமைதியும், சூழலும் நன்றாகவே இருந்தது. ரிஷியின் வீட்டின் சிறப்பு என்னவென்றால் அந்த பாதை முடியும் இடத்தில் அமைந்திருப்பதே! அவனின் வீடு தான் கடைசி வீடு. இரண்டுப் பக்கம் இல்லாது பாதையின் நடுவே பாதையை மறைத்து, அமைந்திருப்பது போல் இருந்தது. 
“அரசாங்க வேலையோ, தனியார் வேலையோ நீ பாக்கல, சொந்தமா பிஸ்னஸ் பண்ணுற, உனக்கு லீவு என்பதே கிடையாது, வாழ்க்கைல முன்னேறினா எப்போ வேணாலும் நீ லீவு போடலாம்” நடிகர் சந்தானத்தின் குரலில் அலாரம் அடிக்க அதை நிறுத்தியவன் இன்னும் ஐந்து நிமிடங்கள் தூங்கலாம் என்று கண்ணை மூட 
“அட  ச்..சி எழுத்துரு… நாயே! நீயெல்லாம் பிஸ்னஸ் மேகினட் னு கனவுல தான் பேரெடுப்ப, இப்போ எழுந்துக்க போறியா சுடுதண்ணிய மூஞ்சிலயே! ஊத்தவா” நடிகர் கவுண்ட மணியின் குரலில் அடுத்த அலாரம் அடிக்க 
அக்குரலில் தூக்கம் தூர ஓட “எஸ் எழுந்துட்டேன் தலைவா..” சுறுப்பாக ஜாகிங் செல்ல வெளியே கிளம்பியவன் இடது புறத்து வீட்டிலிருந்து ஜாகிங் செல்ல வெளியே வந்த மலர்விழியை கண்டு முகம் சுளித்தான். 
அதைக் கண்டும் காணாது “ஹாய் மாம்ஸ் நல்லா இருக்கியா?” என்றவள் அவன் கூடவே ஜாகிங் செய்ய 
“என்ன என் வீட்டு பக்கத்துல குடி வந்தா உன்ன லவ் பண்ண வைக்கலாம் னு நினைப்போ?” வார்த்தையை கடித்து துப்ப 
“அட என் பிளானை சரி…யா அச்சு பிசகாமல் அப்படியே சொல்லுற. க்ரேட் மாம்ஸ் நீ ஐ லவ் யு” 
நடையை நிறுத்தாது “உன்ன பாத்தா பொண்ணு மாதிரியே இல்லையே! பாண்ட், டி ஷர்ட்ல ரௌடி மாதிரி சுத்துறது மட்டுமில்ல குட்ட முடியோட பாக்கவே கன்றா…வியா? உன்ன எல்லாம் எவன் சீண்டுவான்” வேண்டுமென்றே அவளை காய படுத்த 
அவன் சொன்னது மனதை ரணப்படுத்தி ஒரு நொடி முகம் சுருங்கினாலும் “அதான் மாம்ஸ் என் அத்த மகனையே கல்யாணம் பண்ண முடிவு  செஞ்சேன். உன்ன தவிர எனக்கு யாரு இரக்கப் பட்டு வாழ்க்கை கொடுக்க போறாங்க” சோகமான குரலில் மலர்விழி. 
“கண்ட கழிசடைங்களுக்கு வாழ்க்கை கொடுக்க எங்கப்பா ஒன்னும் என்ன பெத்து போடல. நான் நல்ல குடும்பத்துல பொறந்தவன். என் அம்மானு சொல்லுறவாள வச்சி உனக்கும் எனக்கும் உறவு முறை சொல்லி கிட்டு என் முன்னாடி வராத” 
“சரி இருந்துட்டு போகட்டும். என் அம்மாவை உங்க அப்பா கூட பொறந்தவங்களா தத்தெடுத்துக்க, அப்போவும் நீ எனக்கு மாமா பையன் ஆகிடுவ அந்த உறவு முறை ஓகே தானே!” குழந்தை முகமாக கேட்டவளின் மனதில் என்ன இருக்கின்றதோ! 
நடையை நிறுத்தியவன் “உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா? உன் உடம்புல ஓடுதே அது ரத்தமல்ல சாக்கடை,  அதுல குதிக்க நான் ஒன்னும் முட்டாள் இல்ல, முதல்ல உன்னயெல்லாம் பொண்ணாவே பாக்கல, இதுல காதல், கல்யாணம் கனவுல கூட நடக்காது, எத்தன பேரோட வாழ்க்கையை நாசம் பண்ணின காசுல உடம்ப வளத்து வச்சிருக்கியோ! நீ எல்லா உசுரோட இருக்கிறதே உலகத்துக்கு பாரம். உனக்கெல்லாம் சாவு வரமாட்டேங்குது” அமுதனின் பொறுமை எல்லைக் கடக்க அவனின் வார்த்தையும் சற்று தடித்தே வந்தது. 
அமுதனிடம் தன் உண்மை நிலையை சொல்லி அவனையடைய மலர்விழிக்கு சில நிமிடங்கள் போதும். ஆனால் பரிதாபபட்டு அவளை ஏற்றுக் கொள்ளும் நிலை அவளுக்கு வேண்டவே வேண்டாம் என்று முடிவெடுத்திருக்க, அமுதன் என்ன சொன்னாலும் அமைதியாக போனவள் அவளின் உடம்பில் ஓடுவது சாக்கடை என்றதும் மனதளவில் நன்றாகவே அடிபட்டு போனாள். 
அன்னை இறந்த பின் அவள் மனதில் முளைத்த வன்மமும், க்ரோதமும் அவள் உடம்பில் ஓடுவது சாக்கடை என்பதை நியாபகப் படுத்திய வண்ணமே இருக்க, தனக்கு ஆறுதலாக இருக்க வேண்டியவனே! குத்திக் காட்டியது மனதை ரணப்படுத்த தொண்டையடைத்து கண்களும் கலங்கியது. 
அந்த நேரம் பார்த்து ஜாகிங் செய்து கொண்டிருந்த ஒருவன் மலர்விழியின் மேல் மோதி விட்டு “சாரி ப்ரோ” என்று சொல்ல அமுதன் அடக்கமாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தான். 
ஏற்கனவே அவன் பேசியதில் சூடாக்கி இருந்த அவள் ரெத்தம் தன் வேலையை காட்ட மோதியவனை சரமாரியாக அடித்தவாறே “வேணும்னே மோதிட்டு சாரி ப்ரோ நா சொல்லுற, உன்ன நா இந்த ஏரியாலயே பார்க்க கூடாது மீறி பாத்தின் மவனே!… ”  இரண்டு கெட்ட வார்த்தைகளை மேலும் சொன்னவள்
ஒரு நொடியில் சுதாரித்து  “என் உடம்புல ஓடுறது சாக்கடைநா? உன் உடம்புல ஓடுறது பன்னீரா? உன் அம்மா ரத்தமும் ஓடுதுல்ல?” அனல் தெறிக்க சொன்னவள் அவனை திரும்பியும் பார்க்காமல் வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள். 
“ஆமாம் டி.. ஓடுதுதான் ஆனா உன்ன மாதிரி சாக்கடைல உருண்டு புரளல” சத்தமாக சொன்னவன் “உண்மைய சொன்ன கோபம் வரத்தான் செய்யும்” முணுமுணுத்தவாறே தனது நடையை தொடர்ந்தான். 
அத்தோடு மலர்விழி தன் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டாள் என்று அமுதன் நினைக்க, அவளோ அவன் என்ன சொன்னாலும் பதில் சொல்லியவாறு அவனை நெருங்க சமயம் பாத்திருந்தாள். 
அவன் பால்கனியில் நின்றாள் போதும் அவளும் அவனுக்கு தென் பட நின்று குரல் கொடுப்பாள். ஏதாவது சமைத்துக் கொண்டு தினமும் அவனின் வீட்டு மணியை விடாமல் அடிப்பாள். அவன் வெளியே செல்லும் போது அவனையே, வண்டியையோ வழி மறித்து வம்பு செய்யலானாள். அமுதனின் பொறுமையும் கொஞ்சம் கொஞ்சமாக எல்லைக் கடந்துக் கொண்டிருந்தது.

Advertisement