Advertisement

அத்தியாயம் 4
“இதோ இப்பொழுது இந்த மருத்துவமனை அதிபர் ஸ்ரீவத்சன் அவர்கள் கீதாராணி அவர்களிடமிருந்து காசோலையை பெற்றுக் கொள்வார்” அறிவிப்பாளர் சொல்லி முடிக்கவும் கீதாராணியும், அதிபர் ஸ்ரீவத்சனும் காசோலையை பற்றியவாறு போட்டோவுக்கு சிரித்தவாறே போஸ்  கொடுத்து விட்டு தங்களது கதிரைகளில் அமர்ந்தனர். 
“இந்த பச்சிளம் பாலகர்களுக்கு உதவிய நல்ல உள்ளம் கொண்ட மாதர்குல மாணிக்கம் கீதாராணி அவர்களை ஒரு சில வார்த்தைகள் பேசுமாறு கேட்டுக் கொள்ளகிறேன்” 
கீதாராணி ஐம்பதை தாண்டியும் இன்னும் கம்பீரம் குறையாது. ஆண்களை மிஞ்சும் அளவுக்கு தொழிலில் கொடிகட்டி பறக்கும் தொழிலதிபர். அவள் கால் பதிக்காத தொழில் ஒரு சிலதே. அண்ணன் அவளுக்கு துணை என்று சொல்லிக் கொண்டாலும் அவள் தான் ரத்னவேலுக்கு பக்க பலமாக இருக்கின்றாள்.
காட்டன் புடவையில் தனது குட்டை முடியை போனிடையில் கட்டி ஆடம்பரத்துக்கும் எனக்கும் ஏழு கடல் தூரம் என்பதுபோல்  உடையும், நகைகளும் இருக்க, நடையில்  கம்பீரம் கொஞ்சம் குறைவிலாது பனிவிழும் அப்படி ஒரு பணிவுடன் வணக்கம் வைத்தவாறே மைக்கின் முன் வந்தாள்.
“எல்லாருக்கும் வணக்கம். நாம் எப்பொழுதும் குழந்தைகளாகவே இருந்தால் துன்பம் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் இன்றோ குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. இங்கே இருக்கும் பிஞ்சுகளை பாருங்கள்? ஓடியாடி விளையாட வேண்டிய வயதில் கேன்சரால் பாதிக்கப் பட்டு ஒரு இடத்தில் ஒடுங்கிப் போய்…” கண்களை கைக்குட்டையால் ஒற்றிக் கொண்டவாறே “இதற்க்கு விடிவு காலமே இல்லையா? அரசு மருந்துகளை கண்டு பிடிக்க முயற்சி எடுக்காமல் இருப்பது ஏன்?..ஆனால் நான் அமைதியாக இருக்க மாட்டேன். என் அண்ணன் மினிஸ்டர் ரத்னவேலின் துணையோடு என்னாலான முயற்சிகளை கண்டிப்பாக எடுப்பேன். 
என்னுடைய ஏழைகளுக்காகவே  கட்டப்பட்ட கே.ஆர். மருத்துவமனையை வந்து பாருங்கள். என்னுடைய கான்ஸ்ட்ரக்சனிலும் ஏழைகளுக்கான வீட்டுத் திட்டம் வெற்றிகரமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றது. கல்வித்துறையிலும் கால் பதித்து… கே.ஆர் ஸ்கூல்ஸ், காலேஜ் என்று மாணவர்களுக்கும் உதவிக்கு கொண்டு தான் இருக்கின்றேன். இது எல்லாம் என் அண்ணனால் தான் சாத்தியமாயிற்று. ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் காணலாம்  இந்த பிஞ்சுகளின் புன்னகையை வாடாது அவர்கள் நலம் பெற இறைவனை பிரார்த்திப்போமாக. நன்றி வணக்கம்”  
கீதாராணி அனைவரிடமிருந்தும் விடைபெற்று காரில் ஏறியதும் “மேடம் பிச்சு உதறிட்டீங்க. வீணா எதுக்கு காசு கொடுக்கிறீங்கன்னு நினச்சேன். ஒரே கல்லுல பல மங்கா அடிச்சிட்டீங்க” கீதாராணியின் பி.ஏ. செல்வம் குஷியாக 
“இலக்சன் வருது இந்த தடவையும் அண்ணன் ஜெயிக்கணும். இந்தமாதிரி விஷயங்களுக்கு காச வீசினா ஓட்டு தானா விழும். அத்தோடு ஸ்கூல், காலேஜ், கான்ஸ்டரக்சன், ஹாஸ்பிடல் என்று எல்லாத்துக்கும் ப்ரீயா.. விளம்பரமும் கொடுத்தாச்சு” 
“மேடம் நீங்க பேசாம அரசியலுக்கு வாங்க”
“அதுக்கு தான் அண்ணன் இருக்கானே! அவன் பாத்துப்பான். நீ வண்டிய வீட்டுக்கு விடு” 
கீதாராணி தனது வீட்டிலும், ரத்னவேல் தனது வீட்டில் என்று இன்றும் வெவ்வேறாகத்தான் வசிக்கிறார்கள். அதற்க்கு காரணம் ரத்னவேலை காலையிலையே கோசம் போட்டவாறு பார்க்க வரும் கூட்டம் தான்.  அந்த சத்தத்தால் தன் நிம்மதி பறிபோய் விடுகிறது என்று கீதாராணி ஒதுங்கிக் கொள்ள அதையே சொல்லி மலர்விழியும் ஒரு பிளாட்டில் தங்கி இருக்கின்றாள். 
அந்த அரண்மணை போன்ற வீட்டின் முன் வண்டி நின்றதும் கீதாராணி இறங்கும் போது தனது யமஹாவில் வந்திறங்கினாள் மலர்விழி. 
“ஹாய் ஆன்ட்டி” என்று அவளை கட்டித் தழுவியவள் கீதாராணியோடு உள்ளே சென்று அமர வேலையாள் பருக டீயும் ஸ்னாக்ஸ்சும் கொண்டு வந்து வைக்க அதை ருசிக்க ஆரம்பித்தாள் மலர். 
“உன் கிட்ட ஸ்கூல், காலேஜ் பொறுப்பை கொடுத்த பிறகு எனக்கு கொஞ்சம் ரிலீபா இருக்கு. ஆனாலும் என் காதுக்கு வரும் செய்திகள் தான் சரி இல்ல” 
காலுக்கு மேல் காலை போட்டு அமர்ந்திருந்த கீதாராணி தனது கூர்மையான விழிகளால் மலரை நேர்பார்வை பார்க்க மலரின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.
கீதாராணிக்கு சரி சமமாக காலுக்கு மேல் காலை போட்டவள் “நா எது செஞ்சாலும் நல்லா யோசிச்சு தான் செய்வேன். பணக்கார பசங்க படிக்க ஒரு காலேஜும். ஏழை, மிடில் கிளாஸ் மாணவர்களுக்கு ஒரு காலேஜ் னு ஏன் ஏற்பாடு பண்ணேன்? அதுலயும் இந்த மிடில் கிளாஸ் பசங்க ஒழுங்காவே பீஸ் கட்டுறதில்லன்னு உங்களுக்கு கம்பளைண்ட் வருது. நா அத கண்டுக்கறதில்லன்னு உங்களுக்கு என் மேல கோபம். அதானே!” டீயை பருகியவாறே மலர்.
“புரியுதுல்ல… அப்போ ஏன் அவங்கள வார்ன் பண்ணி விட்டுடுற? எல்லா ஸ்டூடன்ட் முன்னாடியும் அவமானப் படுத்தினா காச கட்டிட்டு போறாங்க. நா என்ன இலவச சேவையா பண்ணுறேன்.. காசு பார்க்க தானே! உன் அப்பா இலக்சனுக்கு கேக்கும் போது அள்ளி அள்ளி கொடுக்குறேன்! எங்க இருந்து வருது அம்புட்டு காசும்.  ஹாஸ்பிடல், காலேஜ், ஸ்கூல் னு எல்லாம் என் உழைப்பு”
“ஆமா இவங்க என்னடான்னா.. அது இவங்க உழைப்புனு சொல்லுறாங்க அவர் என்னடான்னா.. இவங்க அவரோட பினாமி னு சொல்லுறாங்க” வாய் விட்டே முணுமுணுத்த மலர்விழி ஸ்னாக்ஸை வாயில் திணித்தாள்.  
அது கீதாராணியின் காதில் விழுந்தாலும் முகத்தில் தோன்றிய மாற்றத்தை நொடியில் மறைத்தவள் மலர்விழி தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் வரை அவளையே பாத்திருந்தாள்.
“ஆன்ட்டி பணக்காரங்க காச என்னம்மா செலவு பண்ணுவாங்க, நாம சொல்லுறது தான் பீஸ். அந்த காலேஜ் ப்ரோபிட் மாசம் பல கோடி அதுல வர லாபம் மட்டும் லோ கிளாஸ் பசங்க பீஸ் பூரா கட்டிடலாம். ஆனாலும் லோ கிளாஸ் காலேஜ் எதுக்குன்னா… திறமையான மாணவர்கள் நமக்கு தேவ. அண்ட் ஓட்டு ஆன்ட்டி ஓட்டு… நீங்க சொல்லுறது போல அவமானப்படுத்த போய் மானம் ரோஷம் னு தற்கொலை பண்ணிக்கிட்டா நம்ம காலேஜ் மேல நடவடிக்கை எடுக்கிறோம் என்று சென்டர் மினிஸ்டர் தலையிட்டு நம்ம எல்லா காலேஜையும் இழுத்து மூடிடுவாங்க. ஏற்கனவே நம்ம மேல பொறாமைல ஒரு கூட்டம் சுத்திகிட்டு இருக்கு, இவனுங்களுக்கு நம்மளே தீனி போட்ட மாதிரி இருக்கக் கூடாது. கொஞ்சம் யோசீங்க. மூணு மாசம் கழிச்சு எப்படியாவது பீஸ் கட்டுற பசங்க இருக்காங்க. கடைசி வருடம் பீஸ் கட்டி னா… தான் எக்ஸாம் எழுத முடியும் எங்குற ரூல்ஸ் இருக்கே! அப்போ கண்டிப்பா கட்டிதான் ஆகணும்” 
“பாப்பாக்கு உடம்பெல்லாம் மூள. கொஞ்சம் லேட்டா ஆனாலும் காசு கண்டிப்பா கிடைக்கும். பொன் முட்ட இடும் வாத்துகளை  எதுக்கு வயித்த கிளிக்கிறீங்க னு அழகா சொல்லுது. செக்கு தந்தா வெயிட் பண்ணி காசு எடுக்கிறோம் இல்ல அது போலத்தான்” செல்வம் சொல்ல கீதாராணி யோசிக்க ஆரம்பித்தாள். 
 பிக்கள் பிடுங்கல் இல்லாம போற வரைக்கும் தான் எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிக்கலாம். நம்ம சின்னதா.. ஒரு தப்பு பண்ணாலும் அத பெருசு பண்ணி நம்மள வீழ்த்த பாப்பாங்க. பீஸ் விசயத்துல நம்ம கொஞ்சம் அஜஸ் பண்ணாலும் நல்ல பேரோட மொத்த ஓட்டும் எங்க கைல” உள்ளங்கையை மடித்து பிடியை இறுக்கியவாறே சொன்னவள். “எங்க சைட்டுல எந்த தவறும் வராம பாத்துக்கணும்” கண்ணில் ஒரு வெறியோடு சொல்ல 
“சபாஷ்… ஐயோ… அடுத்த அமைச்சர் ரெடியாகிட்டாரே! என்னமா பேசுறீங்க பாப்பா.. நீங்க மினிஸ்டர் ஆனா என்ன உங்க பி.ஏ வாக வச்சிக் கோங்க” 
“சந்தடி கேப்புல சிந்து பாடுறீங்களா?  செல்வம் அங்கிள் நீங்க தான் என்ன சரியா புரிஞ்சி வச்சிருக்கிறீங்க. என்ன விட உங்களுக்கு அறிவு ஜாஸ்த்தி. நீங்க அத்தையோட இருக்குற வர அவங்களுக்கு எண்டே கிடையாது” செல்வத்தை ஐஸ் மழையில் நனைய வைத்தாள் மலர். 
“மேம்… மேனேஜர் கிட்ட இருந்து கால்….” செல்வம் சொல்லியவாறே காதில் வைத்து அந்த பக்கம் சொன்ன செய்தியில் முகம் இறுகியது. ஒரு கோப்பை பாத்திருந்த கீதாராணி 
“என்ன செல்வம் டெண்டர் நமக்குத்தான்”
“மேடம்.. அது வந்து… அது… அந்த மாதவன் யாதவ் கான்ஸ்டாக்சனுக்கு போயிருச்சு” 
“என்ன சொல்லுற?” கத்தியவாறே கோபமாக எழுந்து கொண்ட கீதாராணி “யாரு யா…அந்த மாதவ் யாதவ் என்னோட எல்லா டெண்டரும் அவனுக்கு போகுது”
“மேடம் மாதவ் யாதவ் இல்ல மாதவன் யாதவ்” செல்வம் திருத்த 
“பேரு ரொம்ப முக்கியம்…” கடுப்பானவள் செல்வத்தை முறைக்க, 
“இந்த பேர எங்கயோ கேட்டிருக்கேன்! ஆ.. அப்பா கூட போன்ல பேசினவரு” மலர்விழி அசால்ட்டாக குண்டை போட கீதாராணியின் முகம் யோசனைக்குள்ளானது. 
“இந்த தடவையும் ஜஸ்ட் ஒரு ரூபா.. வித்தியாசத்துல…” செல்வம் இழுத்த இழுப்பில் 
“யார் அந்த கறுப்பாடு னு இன்னுமா கண்டு பிடிக்கல?. எங்க இன்போர்மஸ் என்ன செய்றாங்க?” கீதா ஹை பிச்சில் கத்த 
“நா வேணா பார்க்கவா னு அப்பா கிட்ட கேட்டேன் ஆன்ட்டி.. அப்பா.. தான் எதுக்கு உனக்கு இந்த வேண்டாத வேல ஒதுங்கிக்க னு சொன்னாரு” அடுத்த குண்டை போட்டாள் மலர்விழி. 
“ஓகே ஆன்ட்டி எனக்கு வேல நிறைய இருக்கு, முக்கியமான ஒருத்தர பார்க்க போகணும். பை..” என்றவள் கீதாவின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டே தனது பைக்கில் பறந்தாள். 
  “ஆமா சார் இப்போ கீழ இருக்குற மரக்கறி, பழங்கள், பூ.., பூட் ப்ராடக்ட் எல்லாம் மேல ஷிப்ட் பண்ணனும். கீழ ஜூஸ் பார், மினி பேக்கரி, புட் கோட், சாக்லட் ஷாப், கார்ட் ஷாப், பிலோவேர் ஷாப் எல்லாம் கீழ் மாடில வரனும் அதுக்கேத்த மாதிரி பிளான் கீறி கொடுங்க. படிக்கட்டு இல்லாம கார்ட்ட தள்ளிக் கொண்டு போடுறது போல இருந்தா ஓகே. லிப்ட் வேணா.. ஷாப்பிங் பண்ணி கிட்டு நடந்தா மாதிரியும் இருக்கும் இல்ல” அமுதன் சொல்ல 
“சார் நான் ஒன்னு கேட்டா.. தப்பா நினைக்க மாட்டீங்களே!” இன்ஜினியர் கேட்டார்.
“கேளுங்க”
“இல்ல ஜூஸ் பார், புட்  கோட் சாக்லட் ஷாப் இதெல்லாம் ஒரு சூப்பர்மார்க்கட்டுக்கு எதுக்கு?” 
“இப்போ வீட்டுக்கு சாமான் வாங்க போறவங்க நாலஞ்சு கடை ஏறி நல்ல சாமான் வாங்க பார்ப்பாங்க, அத்தோடு தாகம் எடுத்தா பிரெஷா ஏதாவது தொண்டைல இறங்கினா நல்லா இருக்கும் னு நினைப்பாங்க. அப்பொறம் வீட்டுக்கு போய் வாங்கின சாமான்களை அடுக்குறதா? சமைக்குறதா? னு மனசுக்குள்ள போராட்டம். இங்கவே நல்ல தரமான உணவும் கிடைச்சா…? கண்டிப்பா இந்த இடத்துக்கு வருவாங்க. 
அப்பொறம் இப்போ நண்டு சிண்டு எல்லாம் காதலிக்குறாங்க, சாக்லட், பிலோவேர், கார்ட் னு இங்க கிடைச்ச.. இளசுகளுக்கு கூட்டம் கூடும்”
“சூப்பர் ஐடியா சார்” 
“இப்போதைக்கு இந்த ப்ளோவ பண்ணி குடுங்க அடுத்த ப்ளவ் கட்டும் போது உங்களையே கூப்பிடுறேன்” அமுதன் புன்னகைக்க 
“அட..அட.. அட.. என்னா.. மூளை என்னா மூளை” கைத் தட்டியவாறு மலர்விழி ப்ரசன்னமாக முகத்தை சுளித்தான் அமுதன்.
இன்ஜினியரை கண்ணாளையே “போ” என்றவள் “என்ன மச்சான் முகத்தை சுளிக்கிறீங்க? ஆசையா உங்கள பார்க்க வந்தா? இப்படி பண்ணுறீங்களே!”
“பேசாம போய்டு. அன்னைக்கி  நீ போலீஸ் என்று எண்ணி தான் மரியாதையா.. நீ கேட்ட எல்லா கேள்விக்கும் பதில் சொன்னேன். நீ அந்த கேடு கேட்ட மினிஸ்டர் மகள் னு தெரிஞ்சி இருந்தா..” 
அவனை அணைத்து கொள்வது போல் நெருங்கி நின்றவள் அவன் காதருகில் கிசுகிசுப்பாக “யோவ் மெதுவா பேசுயா… இப்படி மினிஸ்டர் திட்டினேன்னா… உன் அண்ணன் போன இடத்துக்குத் தான் போக வேண்டி இருக்கும்” 
அவளின் மூச்சுக்கு காற்று காது மடல் உரச உடலில் இரத்தம் வேகமாக பாய  உள்ளுக்குள் ஏற்படும் மாற்றத்தை ஆழ்ந்த மூச்சை இழுத்து நிறுத்தி  “ரிஷி செத்துட்டான்னு நினைச்சி கிட்டு இருக்கிறியா?” மனதில் நினைத்தவன் “ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து போய்டு” முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு சொல்ல
“அப்போ நான் தான் உன் மாமா பொண்ணு னு உனக்கு தெரிஞ்சி போச்சு. நாலு நாள்ல என்ன பத்தி நல்லா விசாரிச்சு வச்சிருக்க குட். இப்போ சொல்லுறேன் கேட்டுக்க என் அத்த மகனே! நீ தான் எனக்கு புருஷன்” உதடு குவித்து பறக்கும் முத்தம் வைத்தவள் கண்ணடிக்க 
“நினைப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்… போ.. போய் வேலைய பாரு. கொலைகாரன் பெத்த மக. வந்துட்டா கல்யாணம் பண்ணு, கருமாதி பண்ணு னு” 
அவன் சொன்னதில் கோபம் கொஞ்சமும் இல்லாது “பார்க்கத்தான்யா போற என் அயித்தா  மவனே!” ஒயிலாக வெளி நடப்பு செய்தாள் மலர்விழி. 
மலர்விழி அமுதனோடு பேசும் போதே அவளைக் கவனித்த ப்ரதீபனின் ஆட்கள் அவளை பற்றி விசாரித்து ப்ரதீபனுக்கு தகவல் சொல்ல அமுதனை அழைத்து மலர்விழி யார் என்ன என்று சொல்லியவன் “கொஞ்சம் ஜாக்கரதையாக இரு” என்று வார்னிங்கும் பண்ண 
“இருடி போலீஸ் னு சொல்லியா ஏமாத்துற நீ மட்டும் என் கண்ணுல சிக்கட்டும் உன்ன வச்சி செய்றேன்” அமுதன் கருவிக்கு கொள்ள இன்று மலர்விழியை தனது கடையில் கண்டதும் வந்த கோபத்தை அடக்கியவன் தொழில் பார்க்கும் இடம் என்பதால் அவளை துரத்துவதில்லையே! குறியாக இருந்தான்.
கீதாராணி, ரத்னவேலின் மேல் அதீத வெறுப்பில் இருந்த அமுதன் அறியவில்லை  இனி தன் வாழ்வில் மலர்விழி ஒரு அங்கமாக போகிறாள் என்றும், அவன் அவளை எவ்வளவு வெறுக்கின்றானோ அத விட அவனை அவள் நேசிப்பான் என்றும்  அமுதனுக்கு தெரியவில்லை.  

Advertisement