Advertisement

அத்தியாயம் 3
மெதுவாக கண்விழித்த பிரதீபன் தன் முதுகில் மென்மையாக ஏதோ ஒன்று உரசிக் கொண்டிருப்பதை உணர ஸ்ரீராம் தான் அவன் முதுகோடு ஒட்டிக் கொண்டு தூங்குகின்றான் என்றெண்ணி புன்னகைத்தவன் மீண்டும் கண்ணை மூடிக் கொண்டான்.
மெதுமெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக இரவு நடந்தவைகளும், புது மனைவியின் நியாபகமும் வர கண்களை பட்டென்று திறந்தவன் தன் முதுகோடு ஒட்டி இருக்கும் தியாவின் கன்னத்தின் மென்மையை உணர அவன் உடலோ ஆட்டம் கண்டது. மெதுவாக கட்டிலின் ஓரத்துக்கு நகர முற்பட அவளோ அவனின் இடுப்பில் கையை போட்டு அவனை அணைத்திருந்தாள். 
அவளின் இச்செய்கையில் திகைத்தவன் அசையாது பார்க்க, சிவப்பு நிற கண்ணாடி வளையல்களோடு பளீரென்று அவள் கரம் அவன் பார்வைக்கு. மருதாணி வேறு நன்றாக சிவந்து அதன் வாசனை அவனை இம்சிக்க 
“தீபன் அண்ணா… அண்ணி கை மருதாணியால நல்லா செக்கச் சேவேலுன்னு  சிவந்தா அவங்களுக்கு உங்க மேல ரொம்….ப அன்பாம்” அகல்யா சொன்னது நொடியில் நியாபகத்தில் வரவே தன்னையும் அறியாமல் தியாவின் கையை பிடித்து ஆராயலானான். 
“ம்ம்.. உண்மை தான் நல்லாவே சிவந்திருக்கு. அம்மு ரிஷி மேல வைத்திருப்பது போல் இவ என் மேல நிஜமாவே பாசமாக இருப்பாளா?” மனதில் தோன்றியதை நொடியில் அழித்தவன் “என்ன பிரதீபா.. லூசுத்தனமா யோசிக்கிற, மருதாணினா சிவக்கத்தான் செய்யும். கண்டதையும் யோசிக்காத” மூளை அறிவுறுத்தினாலும் கண்கள் அவளின் சிவந்த கைகளை பாத்திருக்க, கையோ அவளின் கையை வருடிக் கொண்டிருந்தது.   
“என்ன பண்ணி கிட்டு இருக்க பிரதீபா.. இவ கண்ணு முழிச்சா உனக்கு கிளாஸ் எடுப்பா.. என்றவன் அவளின் கையை விட்டு விட்டு கண்மூடி அவனை உரசிக் கொண்டு தூங்கும் மனைவியின் தொடுகையை ரசிக்கலானான்.
ப்ரதீபனின் முதுகில் கண்விழித்த தியாவோ அறையை சுற்றிப் பார்க்க தான் எங்கே இருக்கின்றோம் என்று உணர்ந்து எழுந்தமர்ந்தவள் ப்ரதீபனின் மேல் சாய்ந்து எட்டி அவனின் முகத்தை பார்க்க, அவனோ கண்மூடி தூங்குவதை போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தான். 
“ஹப்பா…நல்ல வேல தூங்குறாங்க, இவங்க எதுக்கு இங்க வந்து தூங்குறாங்க?”
“அடியேய் அது அவன் ரூம். இங்க தூங்காம வேறு எங்க தூங்க?” தியாவின் மனசாட்ச்சி அவளை திட்ட 
“அவங்க கட்டில்ல தூங்குறேன்னு சொல்லி இருந்தா நா கீழயே தூங்கி இருப்பேன். நான் எங்க தூங்கினாலும் கண் முழிக்கும் போது வேற எங்கயோ இருப்பேன். நல்ல வேல இவர் கண்முழிக்கிறதுக்குள்ள எந்திரிச்சிட்டேன். இல்லனா திட்டி இருப்பார். நாளைக்கு தூங்கும் போது நடுவுல ஒரு தலகணையை போடணும்” வாய் விட்டே முணுமுணுத்தவள் குளியலறையினுள் புகுந்து கொண்டாள்.  
அவள் உள்ளே செல்லும் வரை பாதி திறந்த ஒற்றை விழியால் பாத்திருந்த பிரதீபன் கண்களை திறந்தவாறே எழுந்தமர்ந்து “நடுவுல தலகணை தடுப்பு போட போறியா அதையும் தான் பாக்கலாம்” தியாவோடு இருக்கும் நொடிகளில் தன்னிலை மறந்தது அவனுள் புதைந்து கிடக்கும் குறும்பு கொஞ்சம் கொஞ்சமாக வெளி வந்து கொண்டிருந்தது. 
“வெளியே வரும் போது குளித்து விட்டுத்தான் இனி மேல் வரணும்” என்று பார்வதி பட்டி கட்டளையாக சொல்லி இருக்க, தியாவும் குளித்து விட்டு ஒரு டிசைனர் புடவையை அணிந்து கொண்டே வெளியே வந்தாள். 
பிரதீபன் அறையில் இல்லையென்றதும் “அதுக்குள்ள எந்திரிச்சு எங்க போனாங்க? ஒரு வேல நேத்து மாதிரி தம்மடிக்க போனாங்களோ!” என்றெண்ணியவாறே பால்கனியை நோக்கி நடந்தவள் வெளியே செல்ல அக்கணமே ப்ரதீபனும் உள்ளே வர இருவரும் ஒருவரையொருவர் மோதிக்கொண்டனர். தியா தடுமாற அவளின் இடையோடு சேர்த்து அணைத்திருந்தான் அவளின் கணவன். 
எதிர் பார்க்காமல் நடந்த நிகழ்வால் அவள் திகைத்து அவன் முகம் பார்த்து நிற்க, குளிர்ந்து போன அவள் மெல்லிடையில் கை வைத்திருந்தவனோ! குளித்து விட்டு எந்த ஒப்பனையும் இல்லாமால் வந்தவளின் முகத்தில் தலையில் இருந்து உருண்டோடும் நீர்துளியை தொட்டுப் பார்க்க, அவளின் பஞ்சுபோன்ற மென்மையான கன்னத்தில் அவன் விரல் படவே! இதயம் படபடக்க கண்களை மூடிக் கொண்டாள் தியா.
அவளின் மென்மையான குளிர்ந்து போன சருமத்தை விரல் கொண்டு தடவிக் கொண்டிருந்தவனோ! கன்னத்தில் முத்தம் வைக்கும் ஆவல் தோன்ற மெதுவாக மேலும் நெருங்கியவனை பூஜை வேலை கரடியாக  தொல்லை செய்தது அவனின் அலைபேசி. 
திடிரெனென கேட்ட சத்தத்தில் அவளை விட்டு விலகி மேசையின் மீது இருந்த அலைபேசியோடு காரியாலய அறையினுள் பிரதீபன் புகுந்துக் கொள்ள தன்னிலை மறந்து தியா கண்மூடி அங்கேயே நின்றிருந்தாள். 
“சொல்லுடா” 
“என்ன புது மாப்புள, டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” ரிஷி தான் அழைப்பை ஏற்றிருந்தான். 
“சரியான டைமில் தான் போன் பண்ண” கரடி என்று சொன்னனானா? இல்லை தியாவிடமிருந்து காப்பாத்தி விட்டாய் என்று சொன்னானா? அது ப்ரதீபனுக்கே வெளிச்சம். 
“உங்க ரெண்டு பேருக்காகவும் தான் எல்லாரும் வைட்டிங். குடும்பத்தோடு கோவிலுக்கு போலாம் னு பிளான்”
“சரிடா மச்சான். வரேன்” 
“காரியால அறையில் ப்ரதீபனின் குரல் கேட்கவும் சுயநினைவுக்கு வந்த தியா? கனவா? நனவா?” என்ற குழப்பத்திலையே கீழே சென்றாள். 
பிரதீபன் வெளியே வர தியா அறையில் இல்லையென்றதும் அவ்வறையே வெறுமையாக தோன்ற, ஒரே நாளின் நடந்த மாயமான மாற்றம் அவனது மனதுக்கு ரொம்பவே மகிழ்ச்சியை கொடுத்திருக்க, புன்னகை முகமாகவே குளிக்க சென்றான்.
சிங்கார சென்னையில் ட்ராபிக்குக்கா பஞ்சம் அந்த ட்ராபிக்கில் மாட்டி இருந்தான் கனிஅமுதன். இந்த ஆறு மாதங்களில் வேலை பளு அதிகரித்திருக்க, பிறரிடம் குறும்பாக பேசுவது மட்டும் போய் ஆளுமையான பேச்சும், கம்பீரமான தோற்றமும் கலையாக அவனுள் குடிவந்திருக்க, கூடிய விரைவில் வளர்ந்து வரும் தொழிலதிபர் என்ற பட்டத்தை தன் வசப்படுத்திக் கொள்வான். 
“டேய் அமுதா எங்க டா   இருக்க” அலைபேசியில் தொடர்ப்பு கொண்ட ரிஷி.
“ட்ராபிக்ல மாட்டி இருக்கேன்” 
“எங்க போய் கிட்டு இருக்க” 
“என்னோட  கடைக்குத்தான்”
“சென்னைலயாடா இருக்க? எப்போ போன? நைட் இருந்தியே!” ரிஷி சந்தேகமாக கேள்விகளை அடுக்க, 
“வாழ்க்கைல சாதிக்கணும் னு முடிவு பண்ணிட்டா இரவு பகல் பார்க்க முடியாது ணா…. எர்லி மோர்னிங் பிளைட்டை புடிச்சி வந்துட்டேன். எல்லா வேலையையும் முடிச்சிட்டு இப்போ தான் கடைக்கு போறேன். என்ன ட்ராபிக் வாழ்க்கையே வெறுத்தது போகுது. சரி நீ எதுக்கு போன் பண்ண அத சொல்லு” 
தம்பியின் பேச்சில் மனம் குளிர்ந்த ரிஷி “இன்னைக்கு எல்லாரும் சேர்ந்து கோவிலுக்கு போய் அப்படியே சினிமா, பீச்  னு என்ஜோய் பண்ணலாம் னு பிளான் பண்ணேன். சரிடா நீ உன் வேலையை பாரு” என்று அலைபேசியை அனைத்திருந்தான்.
அமுதனோட ஒரே கனவு சென்னையில் பெரிதாக ஒரு சூப்பர்மாக்கட் வைப்பதே! சரவணகுமரன் அமுதன் சென்னை செல்வதை தடுக்க, வீட்டில் கோபித்துக் கொண்டு வந்தவனுக்கு சென்னையில் ரிஷியை கண்டதும் கோபத்தோடு சேர்ந்து அவனின் கனவும் மறந்தது போக ரிஷியோடு குன்னூர் பயணித்த பொழுதுதான் ஆக்சிடண்டில் ரிஷி ஆபத்தான நிலைமைக்கு தள்ளப்பட்டான்.
 
அதன் பின் ஒரு சகோதரனாக தமையனை கவனிப்பதையே கடமையாக செய்தவன். இன்று எல்லாம் சரியாக மீண்டும் சென்னையில் கடையை திறக்க வேண்டும் என்ற அவனது ஆசையை இலங்கையிலிருந்து வந்த மறுநாளே வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்த ப்ரதீபனும், ரிஷியும் மாத்திரமே! தோள் கொடுத்தனர்.  
“அந்த கீதா, அவ அண்ணன் கண்ணுல இவன் பட்டான் இவன ஏதாவது பண்ணிடுவாங்க”  கண்கலங்கியவாறே சரவணகுமரன்
“நா என்ன சின்ன குழந்தையா? அவங்க இருக்குற ஏரியா பக்கமே தலைவைக்க மாட்டேன்” அமுதன் 
“நீங்க ஒன்னும் பயப்படாதீங்க மாமா நா பாத்துக்கிறேன்” பிரதீபன்
“சென்னைல இருக்குற நகைக் கடைய பிரதீபன் இங்க இருந்தே தானே பாத்துகிறான். அவன் பாத்துப்பான்” ரிஷி. 
எப்படியோ வீட்டாரை சமாளித்தவன் சூப்பர்மார்க்கட் வைக்க இடம் பார்த்து சிறிதாக ஆரம்பித்திருந்தான். பெரிதாக கடையை கட்டலாம் என்று ரிஷி கேட்ட போது
“இது என் கனவு நான் தான் நிறைவேற்றணும்” என்று புன்னகைத்தவன் அந்த பெரிய இடத்தில் முதலில் ஒரு தளத்தை அமைத்து தரமான, மலிவான, சுத்தமான, பாக்கட் உணவு பொருட்கள்,  கரிம காய்கறிகள் மற்றும் பழவகைகளை கொண்டு ஆரம்பித்தான். 
அமுதனின் கடை வேலைகளை ப்ரதீபனும், ரிஷியும் கூடவே இருந்து பார்த்துக் கொள்ள அமுதனின் எண்ணப்படியே வேலைகள் நடந்தது. வேலைகள் முடிந்து கடை ஓரளவுக்கு முன்னேற ஆறு மாதங்கள் எடுத்திருக்க, அதன் பின் தான் பார்வதி பாட்டியிடம் பேசி பிரதீபன், தியாவின் கல்யாணத்தை நடத்தினாள் கயல். 
அமுதன் குறும்புக்காரன், எந்த ஒரு விஷயத்திலும் தீவீரமாக இருக்க மாட்டான். நகைக் கடையில் அவன் வேலை பார்த்த போதும் அலட்ச்சியம் மேலோங்கி இருந்ததை பிரதீபன் கண்கூடாக கண்டதுதான். அமுதன் சூப்பர்மார்க்கட் என்றதும் யோசிக்காது அவனுக்கு பிரதீபன் தோள் கொடுத்தது. பிடிக்காத விஷயத்தில் எப்பொழுதும் அலட்ச்சியம் இருக்கும். மனதுக்கு பிடித்த வேலையில் ஆர்வமும், உழைப்பும் இருக்கும் என்ற நம்பிக்கையில் தான். அத்தோடு  அவன் கீதாராணி மற்றும் அமைச்சர் ரத்னவேலை கவனிக்க ஏற்படுத்தி இருந்த ஆட்களின் மூலம்  அவர்களுக்கு யாரோ மறைமுகமாக தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கின்றான் என்ற தகவலும் கிட்ட, அமுதனின் பாதுகாப்புக்கும்  இருவரை ஏற்பாடு செய்து விட்டே அவனை சென்னைக்கு அனுப்பினான். 
 
“இந்த ட்ராபிக் எப்ப முடியுமோ! ஆமை வேகத்தில் நகருது” முணுமுணுத்தவன் கண்ணாடியை இறக்கி அவன் வண்டிக்கு அருகில் இருந்த பைக்கில் அமர்ந்திருந்தவனை அழைத்தான் 
“டேய் தம்பி என்னடா பிரச்சினை? ஆக்சிடன் ஏதாவது நடந்ததா?” 
கண்கள் மட்டும் தெரிய முகத்தை முற்றாக மறைத்திருந்த தலைக் கவசத்தை அணிந்திருந்த  பைக்காரனோ அந்த அழகிய விழிகளால் அவனை பார்த்து விட்டு தலை கவசத்தை கழட்ட 
“ஐயோ.. அம்மா.. பொண்ணு” அமுதன் நெஞ்சில் கை வைத்திருக்கும் நேரம் பைக்கில் இருந்து இறங்கிய மலர்விழி அமுதனின் காருக்கு முன்னாடி இருந்த பஸ்ஸினுள் நுழைந்து ஒருவனை இழுத்து வெளியே போட்டவள் அவனை தாறுமாறாக அடிக்க ஆரம்பித்தாள். 
“என்ன இவ ரௌடி மாதிரி அடிக்கிறா” 
“உனக்கு ஒரு ரௌடி ரங்கம்மா தான் மனைவியா வருவா” அகல்யா சொன்னது அக்கணம் அமுதனின் மனக் கண்ணில் தோன்ற தலையை உலுக்கினான். 
ஆண்கள் போல் பாண்ட், ஷார்ட் மட்டுமல்ல முடியையும் குட்டுயாக வெட்டி, பெண் என்ற அடையாளங்கள் ஆடையில் எதுவுமே இல்லாமல் முற்றாக ஆண் போல் ஆடையணிந்து,  கழுத்தில் பெரிய வெள்ளி மாலையுடன், காதணியும் இல்லாது, கண்களில் ரௌத்திரத்தோடு  மலர்விழி.
“நல்லா போடு…கா…” இரு பாடசாலை மாணவிகள் கண்கள் கலங்கியவாறே கோபமாக 
அவர்களை முறைத்து விட்டு தனது பெல்ட்டை கழற்றியவள் மேலும் அவனை விலாச அவளின் அடிகளை தாங்க முடியாமல் அவளின் காலியையே விழுந்து அவன் கதற, அதை கண்டு கொள்ளாது எட்டி உதைத்தாள் மலர்விழி. 
“உடம்புல கொழுப்பேரி அலையிரியா? கைய வச்சி கிட்டு நிற்க முடியாம அரிப்பெடுக்குதா? உன் அம்மா கிட்ட தானே பால் குடிச்ச அங்க போய் கைய வையேன்” அவள் சொல்லி சொல்லி மேலும் அடிக்க அங்கே என்ன நடந்ததென்று யாரும் சொல்லாமலையே அனைவருக்கும் புரிய காலில் இருந்த செருப்பை கழற்றி இன்னும் சில பெண்கள் அவனை அடிக்க ஆரம்பித்தனர். ட்ராபிக் போலீஸ் வந்து நிலைமையை கையில் எடுத்து அவளுக்கு ராஜமரியாதையும் வழங்கினர். 
அவனை அரஸ்ட்பண்ணி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லுமாறு சொன்ன மலர்விழி அந்த மாணவிகளின் பக்கம் திரும்பி “இப்படி ஒருத்தன் மேல கை வைக்கிறான் கன்னத்துல ரெண்டு போடுறத விட்டுட்டு, அதென்ன ஒதுங்கி போறீங்க. இனிமேல் அடிக்கணும். சரி போங்க” 
“யார் டா… இது?”
“யார் ட…. இவ?”
“இவனுங்கள ரோட்டுல வச்சே சுட்டு கொல்லனும்” 
“பொம்பள புள்ளைங்க மேலயா கை வைச்சான்” 
“இது தான் டா…. போலீஸ் அடி”
“சும்மா… கெத்து அள்ளுதுள்ள…”
“அப்பா… என்னா அடி.. மூணு மாசம் ஹாஸ்பிடல்ல படுத்துட்டுதான் ஜெயிலிக்கே போவான் போல” கூடியிருந்த கூட்டத்தில் இருந்து குரல்கள் எழுந்தன.
அவளையே பாத்திருந்த அமுதன் “ஐயோ போலீஸா.. தம்பி னு வேற சொல்லிட்டேனே என்ன பண்ண போறாளோ!” 
“டேய் உன் பேரென்ன?” அமுதனின் அருகில் வந்தவள் அதிகாரமாக கேக்க, திக்கிக் திணறி பெயரை சொல்ல 
“சரியான தொடை நடுங்கியா இருக்கானே” முணுமுணுத்தவள் “என்ன தொழில் பண்ணுற” 
“சூப்பர்மார்கட் வச்சிருக்கேன்” 
“கல்யாணம் ஆச்சா” 
“இன்னும் இல்ல மேடம்” 
“தண்ணி, தம்மு, கஞ்சா.. அபின், பான்பராக்” 
“ஐயோ.. மேடம்  சத்தியமா அந்த பழக்கம் எல்லாம் இல்ல. அக்மார்க் நல்ல பையன். கூகுள்ல தேடினா என் பேர் தான் முதல்ல வரும்” சத்தியத்தை அவள் தலைமேல் செய்திருந்தான்.
“சுத்தம்” என்றவள் அவனின் கையை பார்க்க  சட்டென்று கையை எடுத்துக் கொண்டவன் அசடு வழிய 
“எங்க தங்கி இருக்க?”
அமுதன் தங்கி இருக்கும் இடத்தை சொன்ன பின் அவனின் அலைபேசி எண்ணையும் பெற்றுக் கொண்டவள் 
“தனியாவா தங்கி இருக்க?” 
“ஆமாம் மேடம். என் குடும்பம் இப்போ மும்பாயில இருக்காங்க” 
“ஒஹ்.. ஓஹ்.. அப்போ சாப்பாட்டுக்கு” 
“ஒரு அம்மா வந்து சமைச்சி வச்சிட்டு, துணி துவைச்சு, வீட்டையும் சுத்தம் செய்வாங்க” அவள் கேக்காமலையே சொல்லலானான்.
“தனியா இருக்கேனு நைட்டுல பொண்ணுங்கள வீட்டுக்கு..” 
அவள் முடிக்கும் முன் “ஐயோ.. மேடம் நா அப்படி பட்டவன் இல்ல” 
“சரி போ” விட்டா போதும் என்று அமுதன் காரில் ஏறி பறக்க ஒரு மர்ம புன்னகைக்காய் சிந்தினாள் மலர்விழி. 

Advertisement