Advertisement

அத்தியாயம் 28
ரிஷி ஏன் கீதாராணியை அந்த கோலத்தில் பார்த்து கதறி அழுதான் என்று அவனுக்கே புரியவில்லை. உள்ளுக்குள் அன்னை என்ற பாசம் இருந்ததால் தான் மனம் விட்டு அழுது விட்டானே ஒழிய கீதா செய்தவைகளை அனைத்தையும் அவனால் மன்னிக்க முடியவில்லை. அவனுக்கு செய்தவைகளை அவன் மறந்து வாழ முயற்சித்தாலும் சில நேரம் கனவாக அவனை துரத்திக் கொண்டு தான் இருக்கின்றன. 
கயலின் அருகாமையும், காதலும் அவனை நல்ல மனிதனகாக மாற்றி இருக்கா விட்டால் ரத்னவேலை சென்னையில் சந்தித்த போதே வாக்குவாதம் முற்றி, அடி தடியென்று இறங்கி கொலையில் முடிந்திருக்கும். 
கயலோடு வாழ வேண்டும் என்ற ஆசை அவனை கட்டி போட்டிருக்க, ஒதுங்கிப் போக நினைத்தவனைத்தான் ரத்னவேல் கொலை செய்ய முயற்சி செய்திருந்தார். 
மயிரிழையில் உயிர் தப்பியவனும் மனைவியோடு மனமொத்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைத்தானே ஒழிய பழிவாங்க கிளம்ப வில்லை. 
அவனின் அன்னை நல்லவளாக இருந்திருந்தால் அவனும் பிறந்ததிலிருந்தே நல்லவனாக இருந்திருப்பான். கயலுக்கு நல்ல கணவனாக இருந்திருப்பான். அவளை துன்புறுத்தாமல் இருந்திருப்பான். அவளை விட்டு பிரிய நேர்ந்திருக்காது என்று அழுதானா? அது அவன் மனதறிந்த ரகசியம். 
கீதாராணி தற்கொலை செய்து கொண்டாள் என்று மலர்விழி தகவல் சொன்னதும் மும்பையிலிருந்து தான் மட்டும் ப்ரதீபனோடு  விமானத்தில் வந்திறங்கினான். நானும் வரேன் என்ற கயலை கூட அழைத்து வர மறுத்து விட்டான். 
கீதாராணியின் கம்பீரமான தோற்றம் கண்ணுக்குள் வர தற்கொலை செய்து கொண்டாள் என்பது அவனால் இன்னும் நம்ப முடியவில்லை. மருத்துவமனை கட்டிலில் கீதாவின் பிரேதம் வைக்கப் பட்டிருக்க மாடியிலிருந்து குதித்ததில் முகம் நசுங்கி கோரமாக காட்ச்சியளித்து, பார்க்கவே பயங்கரமாக இருந்தது. அமுதனை விசாரித்ததில் அறிந்து கொண்டு அதனாலயே வீட்டாரை தவிர்த்தான் ரிஷி. 
நீண்ட நேரம் வைத்திருக்க கூடாதென்று கீதாவின் கடைசியாசையாக அவளுக்கு கொல்லி வைக்க சொல்லி ரிஷியை கேட்டிருந்த படியால் ரிஷி வந்த உடனையே கீதாவின் உடல் உடனடியாக சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப் பட்டது. 
அங்கே ரத்னவேலும் வந்திருக்க இந்த கொஞ்சம் நாட்களிலையே ஆளே அடையாள தெரியாத அளவுக்கு கறுத்து, சோர்ந்து போய் கீதாவின் பிணத்தை வெறித்து அமர்ந்திருந்தார். 
 
ரத்னவேலை பார்த்து அமுதன் முறுக்கிக் கொள்ள பிரச்சனை பண்ணுவாரோ என்று பிரதீபன் விறைப்பாக நின்றிருக்க இறுதி சடங்குகளை ரிஷி அமைதியாக செய்து கொண்டிருந்தான். 
எந்த பிரச்சினையும் பண்ணாது அமைதியாக அமர்ந்திருந்த ரத்னவேலை பார்க்கும் பொழுது அவரும் தற்கொலை செய்து கொள்வாரோ என்று ப்ரதீபனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. 
என்னவோ! ஊருக்கே கெட்டவர்களாக இருந்தாலும், இவர்களை போன்ற அண்ணன், தங்கையை எங்குமே பாத்திருக்க முடியாது. நாணயத்துக்கு இரு பக்கம் என்று சொல்வதா? ஒரு உடல் இரு உயிர் என்று சொல்வதா? இன்று குற்றுயிராய் தங்கையின் முகத்தை இறுதியாக ஒரு தடவை பார்த்துக் கொள்ள அசையாது அமர்ந்திருந்தார் ரத்னவேல். 
நேற்று மாலை விஷேச அனுமதியோடு கீதாவை பார்க்க சென்ற ரத்னவேலுக்கு கீதா திக்கித்திக்கி சொன்னவைகள் அனைத்தும் நியாபகத்தில் வந்து அலைக்கழிக்க கண்களில் பெருகும் கண்ணீரை இமை தட்டி ஊமையாக சிந்திக் கொண்டிருந்தார்.    
அன்று பெங்களூரில் தீவிர சிகிச்சை பிரிவின் முன் கண்ணாடி வழியாக தூர இருந்து பார்த்தவர் தான் இன்று மிக அருகில் மருத்துவமனையில் படுத்துக் கிடந்த  தங்கையின் நிலையை கண்டு துடிதுடித்து செத்தே போனார் ரத்னவேல்.
“அண்ணா… ச…ரவண…கு..மர…ன் மே..ல உனக்..கு என்..ன கோ…பம் என்..ன எது..ன்..னு விசா…ரிக்கா..ம, உனக்..கா..க மட்..டு..ம் தா..ன் அவனை.. பழி..வா..ங்..க எல்..லா..ம் பண்..ணேன்.
 உன் மேல வச்..ச பாச..த்துக்..காக மட்..டும் தா..ன் பண்..ணேன். 
அவ..ன் ரெத்..தம் என்..ற ஒரே கா..ரணத்..துக்காத்..தான் நா..ன் பெத்தவ..னை ஒ..துக்கி..னேன்.
 எனக்..கு பிடிக்கா..த அமுதா.. பெத்..தவ உன்.. ரெத்..தம்..னுதா..ன் என் பையன் மேல வச்ச பா..சத்..தையும் அவ மேல கா..ட்டினே..ன்.
 ஊரை அடிச்..சி சொத்..து சேர்த்..தோ..ம் சாகு..ம் போ..து கொண்..டா போ..க போறோ..ம்? 
நம்..ம பசங்..க நம்மளை..யே பாதிக்..கப் பட்..டு, நிம்மதி..யை இழந்..து… நம்மளை..யே அழிக்..க துடிக்கி..றாங்க. நாம யாருக்கா..க வாழுறோம்? 
எனக்கு.. ஒரு சத்தியம்.. பண்..ணி கொடுக்..குறியா..? மலரை..யோ? சர..வணன் குடும்..பத்தையே! என்  ப..சங்க..ளையோ! எது..வு..ம் பண்..ண மா..ட்..டேன்..னு சத்..திய..ம் பண்..ணி கொடு..க்கிறி..யா?” 
கீதாராணியின் கண்களில் கொஞ்சமேனும் கண்ணீர் இல்லை. காயத்தால் ஏற்பட்ட வலி மாத்திரமே! உறவுகளின் அருமையை உணர்ந்து சொன்னாளா? இல்லை செய்த பாவம் போதும் என்று நினைத்து சொன்னாளா? அல்லது வலியின் கொடுமையில் உளறுகின்றாளா? அல்லது ரிஷி பேசி சென்றதன் தாக்கமா அல்லது அமுதனின் முகத்திருப்பாளா? அப்படியும் இல்லா விடில் அன்னையை கொன்றவள் என்றறிந்து மலர் செய்யும் சேவகம் அவளை திருத்தி விட்டதா? அது கீதாவுக்கே வெளிச்சம். ரத்னவேல் சத்தியம் செய்யும் வரை விடாது பேசிக் கொண்டிருந்தாள் கீதா.
அவள் சொல்பவை எல்லாவற்றுக்கும் “சரி சரி” என்று கண்ணீர் வடித்தவாறு தலையை ஆட்டினாரே ஒழிய மறுத்து ஒரு வார்த்தைக் கூட மொழிந்தாரில்லை ரத்னவேல். தங்கையின் மீதான பாசம் அவரை கட்டிப் போட மெளனமாக தங்கை சொன்ன அனைத்துக்கும் தலையை ஆட்டியவாறு வக்கீல் நீட்டிய பத்திரங்களில் கையொப்பமும் இட்டார்.
இறுதிக் காரியங்கள் அனைத்தும் முடிய ரத்னவேல் மீண்டும் போலீஸ் வண்டியில் ஏற்ப்பட்டு சிறைக்கு அழைத்து செல்லப்பட அமைதியாக செல்லும் அவரை மலர்விழி வெறித்துப் பாத்திருந்தாள். 
அவள் அருகில் வந்த ரிஷி தோளோடு அணைத்து அவளை வீட்டுக்கு அழைத்து செல்ல அவர்களுக்கு முன்பாக வக்கீல் அங்கே அமர்ந்திருக்க  புருவம் உயர்த்தினான் ரிஷி. 
ரத்னவேலின் சொத்துக்கள் ஏற்கனவே மலர்விழி, அமுதாவின் பெயரில் இருப்பதால் அவை அனைத்தும் மலர்விழிக்கு உரியது என்றும் கீதாராணியின் சொத்துக்கள் சம விகிதமாகா ரிஷி, மற்றும் அமுதனுக்கு எழுதப்பட்டிருப்பதாகவும் அவர் சொல்ல 
“அந்தம்மா சல்லிக் காசு கூட எனக்கு வேணாம்” அமுதன் எழுந்துக் கொள்ள 
“அவங்க சொத்து எதுவும் எங்களுக்கு வேணாம் வக்கீல் சார்” ரிஷி அமர்ந்தவாறே மறுக்க மலர்விழி மௌனம் காத்தாள். 
“மலர் என்ன அமைதியா இருக்க, சொத்து வேணாம்னு  சொல்ல வாய் வரலையா? அதானே பார்த்தேன். உன் அப்பன் புத்தி தானே உனக்கும் இருக்கும், ஏன் டி காசு காசுனு அலையுற? நான் சம்பாதிச்சு போட மாட்டேனா?உன்ன உக்கார வச்சி மூணு வேலையும் நான் சோறு போடுறேண்டி. இல்ல உனக்கு உன் அப்பா சொத்துதான் முக்கியம்னு நினச்சா என்ன மறந்துடு” 
அமுதன் கோபத்தில் தன் மனதில் உள்ள காதலையும் வெறுப்பையும் ஒன்றாக சேர்த்து சொல்ல அவனை ஒரு கணம் வெறித்துப் பார்த்தவள் 
“உக்கார வச்சு சோறு போடுவியா? ஆமா யாரு நீ? எனக்கு நீ யாரு னு கேட்டேன்? அடுத்த மாசம் நான் அமேரிக்கா போறேன். வேலைல சேர போறேன். சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஐஞ்சி லட்சம். என் அப்பன் சொத்தை தூக்கிப் போட சொல்ல நீ யாரு?” ஆதங்கமாக வந்தது அவள் வார்த்தைகள். 
அவள் தந்தை தவறிழைத்தவர்தான். ஏன் கீதாராணியும் தவறானவள் தான் அவள் அமுதனின் அன்னையில்லை என்றாகி விடுமா? “அது என்ன எப்ப பார்த்தாலும், உன் அப்பா… உன் அத்த என்பது? அவர்களை வெறுத்தவளால் உறவை துண்டிக்க முடியவில்லை. இவனால் மட்டும் எவ்வாறு இப்படி முகம் திருப்ப முடிகிறது? நான் என்ன சொத்துக்காக அலைபவளா? அமைதியாக இருந்தால் என்ன செய்ய போகிறாள் என்று கூடவா யோசிக்க மாட்டான்” இவ்வளவு நாள் தன்னை கண்டு கொள்ளாமல் இருந்த  கோபம் எல்லைக் கடக்க சூடாகவே பதில் சொன்னாள் மலர்விழி. 
அவளும் தன்னை விரும்புகிறாள். மனதில் உள்ளதை சொன்னால் புரிந்துக் கொள்வாள், மறுக்க மாட்டாள் என்று கூறினால் இப்படி ஒரேயடியாக மறுத்து விட்டாளே! “அமேரிக்கா போறாளாமே அமேரிக்கா” அமுதனின் மனம் அடிக்க முகத்தை தூக்கி வைத்தவன் அமர்ந்துக் கொண்டான். 
“நேத்து மதியம் மேடம் ரத்னவேல் சாரை சந்திக்கணும்னு கேட்டு கிட்டதால விஷேச அனுமதியோடு பார்க்க போய் இருந்தாரு அப்போ பதிவு பண்ணதுதான் இது” என்ற வக்கீல் ஒரு காணொளியை ஓட விட்டார். 
அதில் கீதாராணி ரத்னவேலிடம் பேசியவைகளை ஒளித்த பின் சொத்துக்களை வாரிசுகளுக்கு பிரித்து எழுதுமாறு சொல்லி இருந்தாள். அதில் ரத்னவேலும் கையொப்பம் இடுவது தெளிவாக இருந்தது. 
ரத்னவேல் சென்ற பின் நீண்ட நேரமாக சுவரை வெறித்துப் பார்த்து அமர்ந்திருந்த கீதாராணி மெதுவாக இடது காலை இழுத்து இழுத்து நடந்தவள் மின் தூக்கியில் நுழைவது தெரிந்தது. அதன் பின் மொட்டை மாடியிலிருந்து குதித்தாள் என்றுதான் செய்தி வந்தது.  சிறை வாழ்க்கை பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டாளா? கோரமான தன் முகத்தை பார்க்கப் பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டாளா? சாகும் போது அவள் மனதில் என்ன இருந்தது? யாராலும் கணிக்க முடியவில்லை.
“சொத்து இல்லாட்டியும் பரவால்ல எங்களை நிம்மதியா இருக்க விட்டா போதும்” மீண்டும் அமுதன் எகிற 
“டேய் அமுதா கொஞ்சம் அமைதியா இரெண்டா…” இவ்வளவு நேரமாக அமைதியாக நடப்பவைகளை பார்த்திருந்த பிரதீபன் வாய் திறந்தான். 
“ரிஷி நீ சொல்லு என்ன செய்யலாம்” 
“எல்லா சொத்தையும் மலர் பேர்ல மாத்த சொல்லு அவ என்ன செய்யுறாளோ அதான் முடிவு” 
“ஏற்கனவே ஆடி கிட்டுதான் இருக்கா நீ வேற சலங்கை கட்டி விடுறியா” ரிஷியை அமுதன் உலுக்க, மலர்விழி யோசனையாக அமர்ந்திருந்தாள். 
“சொத்து வருதுன்னா அப்படியே வாய பொளந்து உக்காந்திருக்கா… வேணான்னு சொல்லுறாளா பாரு” அமுதனின் மனம் கூவ மலரை முறைக்கலானான். அவளோ ஆழ்ந்த சிந்தனையில் விழுந்திருக்க பிரதீபன் அவளை உலுக்கினான். 
“என்ன மலர் என்ன யோசிக்கிற?” 
“ஒரு ட்ரஸ்ட் அமைச்சு எல்லா தொழிலையும் இனச்சி. தொழிலாளருக்கு பங்கு கொடுத்து, ஏழைகளுக்கு மட்டுமே சேவை செய்றது மாதிரி ஏதாவது செய்யணும் அண்ணா…” மலர் தன் யோசனையை சொல்ல 
“சபாஷ் நல்ல ஐடியா… அத வழி நடத்த நீ இங்க இருக்கணும் இல்ல” அமுதனை பார்த்து கண் சிமிட்டியவாறே பிரதீபன் சொல்ல 
“அதுக்குதான் நீங்க இருக்கீங்களே! ஐ மீன் ரிஷி, அமுதன் பாத்துப்பாங்க என் சார்பா நீங்க பாத்துக்க மாட்டீங்களா?” உன் பாட்ச்சா எல்லாம் என் கிட்ட பலிக்காது எனும் விதமாக சொன்னாள் மலர்விழி. 
அடுத்து வேக வேகமாக வேலைகள் நடந்தேறியது. அமுதவள்ளியின் பெயரில் ட்ரஸ்ட் ஆரம்பிக்கப்பட்டு பாடசாலை முதல் காலேஜ் வரை திறமையான ஏழை மாணவர்களுக்கு படிக்க வசதி செய்து கொடுத்து வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து கொடுக்க முடிவுகள் எடுக்கப்பட்டன. வெளியூராக இருந்தாலும், உள்ளூராக  இருந்தாலும் அதற்கேத்தது போல் அவர்களின் செலவை ட்ரஸ்ட் ஏற்றுக் கொள்ளும்.
இலவச மருத்துவ முகாம்களோடு ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சையும் செய்து கொள்ள ட்ரஸ்டின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன் பின்னும் அவர்களின் சத்தான ஆகாரம், ஓய்வு, வேலைக்கு செல்லும் வரையிலான வீட்டு செலவை கூட ட்ரஸ்ட் ஏற்றுக் கொண்டது. 
காண்ட்ராசானில் வேலை பார்ப்போருக்கு தொழிலில் பங்கும் கொடுத்து  வீடுகளும் கட்டிக் கொடுக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது. அவர்களின் குழந்தைகள் படிக்க ட்ரஸ்ட் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அமுதவள்ளியின் பெயரியில் ஆரம்பிக்கப் பட்ட பாடசாலையில் வேலைகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. வேலைகள் முடிந்த உடன் கல்விக்காக இன்னொருவரிடம் காசை நீட்டி கையேந்தும் தேவை அவர்களுக்கு வராது. 
இது ரத்னவேலின் தாத்தா ஆரம்பித்த தொழில். அப்பா காலேஜ் ஆரம்பிக்க, கீதாராணி காண்ட்ராக்சன் என்று முன்னேறி விருத்தியடைந்த தொழில். இடையில் அவர்கள் தப்பாகிப் போனதில் குடும்பத் தொழிலை விட்டு விட முடியாது என்றெண்ணியே மலர்விழி இவ்வாறு செய்ய திட்டமிட்டாள். 
அவள் திட்டப்படி மேலும் தொழிலை விருத்தி செய்ய என்ன செய்யலாம் என்ற ஆலோசனைகளோடு, நிறை, குறைகளும் அலசப்பட்டு வேலைகள் நடந்துக் கொண்டிருக்க அமுதனுக்கு பெண் பார்த்து பேசி முடித்ததாக சிவரஞ்சனி போனில் சொல்ல முகம் இறுக்கி நின்றான் அமுதன். 
“என்னமா… உன் இஷ்டத்துக்கு என்னென்னமோ பண்ணுற? என் மனசுல என்ன இருக்குனு கேக்க மாட்டியா?”
“மண்ணாங் கட்டி உன் அண்ணனுக்கு கல்யாணமாகி நாலு வயசுல பையன் இருக்கான் உனக்கு முப்பது வயசு முடியப் போகுது இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்க, அகல்யாக்கு வேற கல்யாண வயசு வந்தாச்சு அவளை வேற கரை சேர்க்க வேணாமா?” எப்படி பேசினால் அமுதன் அடங்குவான் என்று அறியாதவளா சிவரஞ்சனி. 
அகல்யா என்றதும் அமைதியானவன் “சரி கல்யாணம் பண்ணிக்கிறேன். பொண்ணு மலர்விழியா இருந்தா நல்லா இருக்கும். கொஞ்சம் பார்த்து பண்ணி குடுமா…” சிரிரித்தவாறே சொல்ல 
“யாரு அமுதா பொண்ணா.. அவதான் அமேரிக்கா போறேன்னு ஒத்த கால்ல நிக்குறாளே! அவ சரிப்பட்டு வர மாட்டா நீ வேற ஆள பாரு” அவனை வெறுப்பேத்த 
“அம்மா…. “
“அழாதேடா… உனக்காக பேசுறேன்….” அவனை வாரி விட்டே அலைபேசியை அனைத்திருந்தாள் சிவரஞ்சனி. 
சிவரஞ்சனி அமுதனுக்கு வரன் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள் அவன் தட்டிக் கழித்துக் கொண்டே இருக்க, அதிரடியாக பேசி முடித்து விட்டதாக கூறவும் அமுதன் தன் மனதை திறந்து விட்டான். 
மலர்விழி என்ன சொன்னாலும் அவள் இல்லாத வாழ்க்கையை அவனால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவள் மேல் இருந்த வீணான கோபமும் அவளின் செய்கைகளால் நீங்கி இருக்க அவளை கைப்பிடிக்கும் கனவில் மிதந்தவனைத்தான் போட்டு வாங்கி இருந்தாள் சிவரஞ்சனி. 
சிவரஞ்சனி வீட்டில் விஷயத்தை சொல்லவும் சரவணகுமரன் ரத்னவேலின் பெண்ணை மருமகளாக ஏற்றுக்கொள்ள முடியாதென்று ஒரு ஆட்டம் ஆடி நிற்க, மலர்விழியின் நல்ல குணங்களையும், அவள் செய்யும் அனைத்து நல்ல காரியங்களையும் அனைவரும் மாறி மாறி சொல்ல அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவர் 
“இப்போ சொன்ன அனைத்தும் எல்லார் மனசுளையும் நல்லா பதிவு பண்ணிக்கோங்க. குடும்பம்னு இருந்தா… ஏதாவது ஒரு சூழ்நிலையில பிரச்சினை வரும் பொழுது என் மருமகளை பார்த்து அவ அப்பன மாதிரி னு யாரும் வார்த்தையை விட்டுடக் கூடாது அதுக்குதான் இந்த ஆட்டம். யார் மனசுளையும் மலர பத்தி எந்த தப்பான எண்ணமும் இல்லனு எல்லாருக்கும் புரிஞ்சிருச்சில்ல கல்யாண வேலைய பாருங்க” சோபாவில் காலுக்கு மேல் காலை போட்டு அமர்ந்து கொள்ள சரவணகுமரனை  வெட்டவா குத்தாவ என முறைத்துப் பார்த்தாள் சிவரஞ்சனி. 
இங்கே மலர்விழியோ அமுதனை கல்யாணம் செய்ய ஒரேயடியாக மறுத்து விட குடும்பம் மொத்தமும் அவளிடம் பேசி பார்த்து சோர்ந்து போய் அமர்ந்திருந்தனர். 
யார் என்ன பேசியும் மனம் இழக்காத மலர்விழி அமேரிக்கா செல்வதில் பிடிவாதமாக இருக்க, அமுதனும் முறுக்கிக் கொண்டான் 
“பொம்பள அவளுக்கே இவ்வளவு திமிர் இருந்தா ஆம்புள எனக்கு இருக்காதா… சிவா நீ பொண்ணு பாக்குற அடுத்த முகூர்த்தத்திலையே எனக்கு கல்யாணம்” வேட்டியை மடித்துக் கட்டியவன் சட்டை கைகளையும் தூக்கி விட்டவாறே வெளியேற ஏதோ கோபத்தில் சொல்வதாக அனைவரும் அமைதி காக்க அவன் கோபத்தில் சொல்லவில்லை என்றது அவன் நடவடிக்கைகள். 
அவனே! தரகரை அழைத்து பெண்களின் போட்டோக்களை பார்வையிடலானான். நிறை, குறைகளை அவனே அலசி, பெண் பார்க்க அனைவரையும் அழைத்தும் சென்றான். குடும்பம் மொத்தமும் அவன் செயலில் வாய் பிளந்து நிற்க, 
கீதாராணியின் ஆவிதான் அவன் உடம்பில் புகுந்து விட்டதாக அவனை கோவிலுக்கு அழைத்து சென்ற சிவா வேப்பிலையடிக்க ஆரம்பிக்க பூசாரியை திருப்பியடித்தவன் சிவாவை வசைபாடியவாறு வீட்டுக்கு அழைத்து வந்தான். 
மணப்பெண் சென்னையை சேர்ந்தவள் என்பதால் குடும்பத்தார் அனைவரையும்  சென்னையில் தங்க வைத்தான். மலர்விழியும் அவனை அழைத்துப் பேசவில்லை. அவனும் அவளை அழைக்கவில்லை. ஆனால் அமுதனின் கல்யாண வேலைகள் அனைத்தும் மலர்விழியின் காதுக்கு வந்த வண்ணம் தான் இருந்தது. 
கல்யாண பத்திரிக்கையும் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட மலர்விழி அமெரிக்கா செல்லும் நாளுக்கு முந்தைய நாள் தான் திருமணம் என்றிருந்தது. 
“என்ன மலர்விழி என் மாமன் பெத்த மைனாவே எப்படி இருக்க?”
ஆபீஸ் அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவள் திடுமெனக் கேட்ட குரலில் திடுக்கிட்டு விழிக்க, சத்தியமாக அங்கே அமுதனை எதிர்பார்க்கவில்லை. இரண்டு வாரம் கடந்த நிலையில் மலர்விழி அதிக வேலையாள் சோர்ந்து போய் இருக்க அமுதனோ அழகாக இருந்தான் 
அவள் சுதாரிக்க முன்பாகவே பேச ஆரம்பித்தான் அமுதன் “என்னடா நாம வேணாம்னு சொன்ன உடனே! இவன் தாடியை வளர்த்து கிட்டு தண்ணியடிச்சி கிட்டு தேவதாஸ் மாதிரி ரோட்டுல விழுந்து கிடப்பான்னு நினைச்சியா? நோ..நோ.. என் முகத்தை பாரேன். நேத்துதான் க்ளீனப் பண்ணேன். எப்படி ஜொலிக்குது நல்லா இருக்கில்ல. இன்னைக்கி கோல்ட் பேசல் பண்ண போறேன் இன்னும் தக தகனு மின்னும். சே… இதெல்லாம் உன் கிட்ட சொல்லி கிட்டு நா வந்த விஷயமே வேற… இந்தா… பிடி” திருமண அழைப்பிதழை அவள் கையில் திணித்தவன் “கல்யாணத்துக்கு மறந்தும் வந்துடாத வயிறெரிவ அப்பொறம் என் பர்ஸ்ட் நைட்டுல ஏதாவது தடங்கல் வந்துட போகுது” நிற்காமல் சொல்லியவாறே வெளியேற கோபத்தில் ஜிவு ஜிவு என சிவந்தாள் மலர்விழி.
 

Advertisement