Advertisement

அத்தியாயம் 25
ரத்னவேல் பிறந்து ஆறு வருடங்கள் கழித்து பிறந்தவள் தான் கீதாராணி. பிறந்த அன்று கையில் ஏந்தியவன் இன்றுவரை நெஞ்சில் ஏந்திக் கொண்டு இருக்கின்றான்.  
கீதாவுக்கு அண்ணன் என்றால் தனிப் பாசம். தாய் தந்தையை விட அண்ணன் சொன்னால் கேட்டுக் கொள்பவள் அவன் நலனை மட்டுமே நாடினாள்.
 
சரவணகுமரனின் மேல் சிறு வயதில் பொறாமை கொண்டு வளர வளர கோபம், வன்மமாக மாற எந்த ஒரு பெண்ணும் செய்ய துணியாத காரியத்தை தன் சகோதரனுக்காக கீதாராணி செய்தாள். அதுவே ரத்னவேல் அவள் மேல் கண்மூடித்தனமான பாசம் வைக்க மற்றுமொரு காரணமாக அமைந்தது. 
கீதாவுக்கு எவனோ யாதவமாதவ் என்பவன் இடைஞ்சல் கொடுத்துக் கொண்டு இருக்கின்றான் என்று அறிந்து தன்னாலான எல்லா முயற்சியையும் எடுத்தும் அவனை கண்டு பிடிக்க முடியவில்லை. அவன் அமெரிக்காவில் இருப்பதாக தான் கடைசியாக தகவல் கிடைத்தது. 
தாங்கள் செய்தவைகள் கொஞ்சம் நஞ்சமல்ல என்பதால் அவன் யார் என்ன என்பதை அலசி ஆராய்வதை விட அவனை கொன்றோழிப்பதே புத்திசாலித்தனம் என்று கருதிய ரத்னவேல் ரகசியமாக மேற்கொண்டு விசாரணைகளை ஆரம்பித்திருந்த நேரம்தான் மலரை கடத்தி கீதாவை கைது செய்யும் பொழுது குறுக்கிட கூடாதென்று வலியுறுத்தினான் யாதவமாதவ்.
மலர்விழி தான் பெத்த பொண்ணு என்றாலும் கீதாவின் தட்டு ஒரு படி கீழ் தான். அது தன் மனசாட்ச்சிக்கு நன்கு தெரியும் என்பதால் டிவியில் செய்தி ஒளிபரப்பப்படும் பொழுதே நிலைமையை சீர் செய்து கொள்ளலாம் இந்த டாக்டரை வைத்தே மறுப்பு வாக்கு மூலம் கொடுக்க வேண்டும் என்று எண்ணி  கீதாவை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்தான். ஆனால் அவன் எதிர்பாராத விதமாக கமிஷ்னர் அதிரடியாக ஆதாரங்களை ஊடகங்களுக்கு கொடுத்ததால் நிலைமை கை மீறி சென்றிருந்தது. 
தன்னுடைய காதல் சின்னம் மலர்விழி. அவளை ஆபத்தான நிலைமையில் விட்டு விட்டோமே என்று உள்ளம் கதறினாலும், மலர் பெண் என்றாலும் ஆண்களுக்கு நிகரானவள். எந்த ஒரு சூழ்நிலையிலும் நிலைமையை சரியாக கையாள்வாள். அந்த இடத்தில் இருந்து கண்டிப்பாக தப்பிப்பாள் என்ற அசாத்திய நம்பிக்கையை வைத்திருக்க அவளே அலைபேசி வழியாக அழைத்தாள். 
அமுதவள்ளி இறந்ததைக் கண்டு அதிர்ச்சியில் மலர்விழி மயங்கி விழுந்த பின் சுயநினைவுக்கு வந்தவள் அமுதவள்ளி இறந்ததையே மறந்திருக்க, அன்னையை தேடி அழ ஆரம்பித்தாள். அவளை தேற்ற முடியாமல் தான் ஹாஸ்டலில் விட்டார் ரத்னவேல்.
அன்னையின் கொடூரமான சாவு மலருக்கு நியாபகம் வந்திருக்கும் என்றோ! அமுதவள்ளி எழுதிய டயரி அவள் கையில் கிடைத்து மலர் தான் யாதவமாதவனாக உருமாறி தங்களை பழிதீர்க்க நினைக்கின்றாள் என்று கிஞ்சித்தும் நினைத்து பார்த்திருக்கவில்லை. 
மலரின் மீது கடுகளவேனும் சந்தேகம் வந்திருந்தாள் பாசமாக வளர்த்த மகள் துரோகியானதற்காக கண்டிப்பாக மரண  தண்டனையே விதித்திருப்பார். 
தன் இரத்தம் கீதாவின் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்தாரோ! அதே நம்பிக்கை சொந்த மகள் மேல் வைத்திருந்தார். அவளின் உடலில் ஓடும் பாதி இரத்தம் அமுதவள்ளியினுடையது என்பதை மறந்து போனது விதி.
“அப்பா எனக்கு ஒன்னும் ஆபத்தில்ல நான் அங்க இருந்து தப்பிச்சிட்டேன் நீங்க ஒன்னும் பயப்படாதீங்க” மெதுவான குரலில் மலர் சொல்ல 
பதட்டமாக ரத்னவேல் “மலர் மலர் இப்போ நீ எங்க இருக்க, நானே வரேன்… சொல்லு” 
கீதாராணி எங்கே ஒளிந்திருக்கிறாள் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். ரத்னவேலை மிரட்டி பணிய வைக்க முடியாது என்றறிந்த மலர்விழி எவ்வாறு பேச வேண்டும், எவ்வாறு பேசினால் ரத்னவேல் வாய் திறப்பார் என்பதை அறிந்து ஸ்பீக்கர் மூடில் பேசிக் கொண்டிருக்க அமுதனும் ப்ரதீபனும் அவள்  அருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர். 
“பதட்ட படாதீங்கப்பா நான் சொல்லுறத கேளுங்க. அத்தைய காப்பாத்த நான் கடத்தப் பட்டதாகவே இருக்கட்டும் அப்போ தான் போலீஸ் அந்த யாதவமாதவன தேடுவாங்க. அத்த சேப்பா தானே இருக்காங்க?” திட்டம் போட்டு தூண்டிலையும் போட்டாள் மலர் 
மகளின் குரல் கேட்டு சந்தோஷமும், பதட்டமும் அடைந்த ரத்னவேல் “ஆ… அவ பத்திரமா இருக்கா…” என்று விட்டு ஒருவேளை மலர்விழியின் குரலில் யாராவது பேசுகிறார்களோ! போட்டு வாங்குகிறார்களோ!  அல்லது யாதவமாதவே மலர்விழியை மிரட்டி பேச வைத்திருப்பானோ! என்று தோன்ற உஷாரானார்.
“மலர் அடுத்த வாரம் உன் பொறந்த நாள் வருதேமா… அதுக்குள்ள இப்படியெல்லாம் நடக்கணுமா?” கண்ணீர் குரலில் சொல்ல 
“என்ன இந்தாளு சம்பந்தம் சம்பந்தமில்லாம பேசுறான்” அமுதனின் மூளை குறுக்கு கேள்வி எழுப்ப ப்ரதீபனோ மினிஸ்டரின் உள்குத்துப் புரிய கேலியாக புன்னகைத்தான். 
“என்னப்பா என் பொறந்த நாள்தான் இரண்டு மாசத்துக்கு முன்னாடியே வந்துருச்சே! நீங்க கூட பிளாட்டினம் வாட்ச், அத்த வைரநகை வாங்கித் தந்தாங்களே!  தந்தப்போ கூட அடுத்த வருஷம் புருஷன் கூட இருந்து பரிசு வாங்கணும்னு சொன்னீங்க அத்த வேற புருஷன் மட்டும் போதாது வயித்தையும் உப்பி வச்சிக்க டபிள் பரிசு தரேன்னு கிண்டல் பண்ணங்களே! மறந்துட்டீங்களா?” வெட்கப்பட்டு பேசினால் எவ்வாறு குரல் குலையுமோ அவ்வாறு முயற்சி செய்து பேசிக் கொண்டிருக்க, அவள் பொய்யாக வெட்கப் படுவதை புருவம் உயர்த்திப் பார்த்திருந்தான் அமுதன்.
தன் தந்தையின் சுபாவம் அறிந்திருந்தமையால் அலைபேசியில் பேசி ரத்னவேலை நம்ப வைப்பது கடினம் என்று மலர்விழி அவர் எந்த மாதிரி கேள்விகளை எழுப்புவார் எந்தமாதிரி பதில்களை எவ்வாறு சொல்ல வேண்டும் என்று ஒத்திகை பார்த்து அவரின் கேள்விக்கு தகுந்தமாதிரி பதிலளித்து தான் ரத்னவேலின் வாரிசு என நிரூபித்தாள்.
அவளின் பதிலில் ரத்னவேலின் எண்ணத்தை கைப்பற்றிய அமுதன் செய்கையாலையே! “கிரிமினல் குடும்பம்” என்று சொல்ல மலர் அவனை முறைக்க பிரதீபன் அவர்களின் செல்ல சண்டையை பார்த்திருந்தான். 
அவனின் எண்ணமெல்லாம் கர்ப்பமாக இருக்கும் மனைவியை தனியாக விட்டு வந்ததில் அவள் நேற்று போல் சாப்பிடாமல் வாந்தி எடுத்துக் கொண்டு சுருண்டு படுத்திருப்பாளோ! அவளை தனியாக மும்பாய் அனுப்பி வைக்கவும் மனம் வரவில்லை. பாட்டியையாவது துணைக்கு அழைக்கலாமா என்றால் வேண்டாம் என்கின்றாள். 
வீட்டிலிருந்து வரும் போது தூங்கிக் கொண்டிருந்தாள். இப்பொழுது எழுந்திருப்பாள். அழைத்து பேசி விடலாம். மலர் பேசி முடிக்கட்டும். அவள் பேசுவதில் கவனமானான். 
“அத்தைய நம்மளோட எந்த இடத்திலையும் தங்க வைக்காதீங்க சேப் இல்ல. உங்க ப்ரெண்ட்ஸ் யாராவது நம்பிக்கையானவங்க கிட்ட உதவி கேளுங்க. நானும் அது மாதிரியான ஒரு இடத்துல தங்க ஏற்பாடு செய்ங்க” 
“இல்லமா… அவ எங்க இடத்துல தான். பெங்களூர்ல புதுசா வாங்கின பில்டிங்ல ஒரு பகுதி கட்டி முடிச்சிட்டாங்க, மத்த பகுதி வேல நடக்குது. அங்க தான் இருக்கா. யாருக்கும் சந்தேகம் வராது. கூடவே செல்வமும் என் தொண்டர்கள் ரெண்டு பேர் இருக்காங்க. நீயும் அங்க போய்டு. நான் வண்டி ஏற்பாடு பண்ணுறேன். இப்போ நீ எங்க இருக்க?”
ரத்னவேலுக்கு அலைபேசி அழைப்பை ஏற்படுத்தும் முன்பாகவே மலரை கடத்தி யாதவமாதவ் எங்கே வைத்திருந்தான்? மலர் எவ்வாறு தப்பினாள் என்ற கேள்விகளுக்கு பதில்களை தயார் செய்து விட்டே அலைபேசி அழைப்பு விடுத்திருக்க, ஆள் நடமாட்டமற்ற ஏரியாவில் உள்ள டெலிபோன் பூத்தில் இருந்து பேசுவதாக சொன்னவள் அந்த ஏரியாவில் உள்ள பாழடைந்த வீட்டில் இருப்பதாகவும் அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் தான் கடத்தி வைத்திருந்ததாகவும், தப்பித்து ஓடி வரும் பொழுது போன் பூத்தைக் கண்டு கால் செய்ததாகவும் விலாவாரியாகவே சொல்ல அடுத்த ஒரு மணித்தியாலத்துக்குள் ரத்னவேல் தானே வந்து மலரை தன்னுடைய வண்டியில் ஏற்றி இருந்தார். 
தியாவிடம் அலைபேசியில் உரையாடிய பிரதீபன் அவசர வேலையாக பெங்களூர் செல்வதாகவும் வர இரண்டு நாளாவது ஆகும் என்று கூற அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியவள் தானும் வருவதாக அடம்பிடிக்க கூட்டத்தின் நடுவே மானசீகமாக தலையில் கை வைத்தவன் அமுதனின் கிண்டல் பார்வையையும் பொருட்படுத்தாது மெல்லிய குரலில் மனைவியை கெஞ்சிக் கொஞ்சி ஒருவாறு சமாதானப் படுத்து அவளை பார்த்துக்கொள்ள இருவரை ஏற்பாடு செய்து விட்டே விமானம் ஏறினான். 
சென்னை வந்ததிலிருந்து வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டு செய்பவள் தன் கையாலையே சமைத்து பறிமாறிக் கொண்டிருக்க,  வீட்டு வேலைகளுக்கும் அவளை கவனிக்கவும் என நம்பத்தகுந்த இருவரை நியமித்து ஒரு மணித்தியாலத்துக்கு ஒரு முறை அலைபேசியில் உரையாடுவதாக வாக்களித்த பின்தான் தியா அவனை போகவே அனுமதியளித்தாள். 
“அழிச்சாட்டியம் பண்ணுறடி நீ. போயிட்டு வந்து உன்ன செம்மயா கவனிக்கிறேன்” பொய்யாய் கோபம் கொள்ள 
“உங்க பொண்ணு என்ன சாப்பிட விடாம கொடும படுத்துறது பத்தாதாமா? நீங்க வேற பண்ணனுமா?”
“பொண்ணுனே முடிவு பண்ணிட்டியா?” புன்னகைத்தவாறே கேட்க 
“சிடுமூஞ்சி சிங்காரத்துக்கெல்லாம் பொண்ணுதான் பொறக்கும்” கணவன் அருகில் இல்லையென்ற கோபம் அவள் குரலில் அப்பட்டமாக தெரிந்தது. 
“ஏன் டி நைட்டுனு பார்க்காம பாட்டி கிட்ட சொல்ல துடிச்ச. காலைல நான் சொல்ல போனப்போ வேணாம்னு சொன்ன? அதான் டாக்டரை பார்த்து கன்போர்ம் பண்ணியார்ச்சே, எப்போ சொல்ல போற?”
“நேர்ல போறப்போ சொல்லிக்கலாம். உங்க பழிவாங்குற படலத்தை முடிச்சிட்டு வாங்க” 
“கோபமா….” குரல் குலைந்து வழிய…
“இல்ல…” 
“ம்ம்.. நீ சொல்லுற விதமே கோபமா இருக்கானு  தெரியுது. இப்படி கோபப்பட்டா என் பொண்ணும் உன்ன மாதிரி சிடுமூஞ்சியா பொறுப்பா” சிரிப்பை கட்டுப் படுத்த 
“யாரு நான் சிடுமூஞ்சியா? நீங்கதான் சிடுமூஞ்சி எதுக்கெடுத்தாலும் வல், வல்னு எறிஞ்சி விழுறீங்க”  
“ஆமா… நீ அழுமூஞ்சி இல்ல… மறந்துட்டேன்” 
“கிண்டல் பண்ணுறீங்களா… வீட்டுக்கு வாங்க… உங்கள வச்சி செய்றேன்” 
விமானம் ஏற நேரமாவதால் அமுதன் அழைக்க “என்னவேனாலும் செஞ்சிக்கோடி அழ மட்டுமாதே சரியா. வாந்தி வந்தாலும் பரவால்ல நேரத்துக்கு சாப்பிடு நல்லா ரெஸ்ட் எடு. ஏர்போர்ட்ல இருக்கேன் டி கிஸ் எல்லாம் தர முடியாது வந்து தரேன் சரியா” குழந்தையோடு பேசுவதை போல் பேசி புரியவைத்து அலைபேசியை அணைக்க 
“நான் கேட்டேனா? பழி வாங்கவா போறீங்க வீட்டுக்கு வாங்க நான் வாங்குறேன் பழி உங்கள” மனதில் கன்றும் கோபத்தை வார்த்தையாக்கி கடித்துத் துப்பிக்க கொண்டிருந்தாள் தியா. 
மலர்விழி கடத்தப்பட்டு அடைக்கப் பட்டிருந்த இடத்தை பொலிஸார் சோதனை நடத்திக் கொண்டிருக்கும் பொழுதே கீதாராணி பெங்களூரில் இருக்கும் தகவல் கமிஷ்னருக்கு ரகசியமாக யாதவமாதவன் மூலம் தகவல் அனுப்பப்பட ப்ரதீபனும், அமுதனும் பெங்களூருக்கு விமானம் ஏறி இருந்தனர். 
மலர்விழி கடத்தப்பட்டால் அவள் அடைத்து வைக்கப்பட ஒரு இடம் வேண்டும். மலர்விழி ரத்னவேலிடம் சொன்னது போல் எல்லாம் அமைந்திருக்க அங்கே மலர்விழியின் கைரேகைகளை தவிர வேறு எதுவும் கிடைக்காமல் போலீஸ் பின்வாங்க ரத்னவேலும் கீதாவை காப்பாற்றுவதுதான் இப்போதைய மிக முக்கியமான வேலையென மலர்விழியை தரைவழியாக பெங்களுர் அனுப்பி வைத்து, பேட்டி கொடுத்த டாக்டரை கடத்தி ஏதாவது செய்ய முடியுமா என்று வக்கீலை அணுக டாக்டரை யாதவமாதவன் ஏற்கனவே கடத்தியிருந்தான். 
கீதாராணி இருக்கும் இடத்தை கண்டு பிடித்து கமீஷ்னருக்கு அறிவிக்கலாம் என்று மலர் கூற, என்னதான் ஆதாரங்கள் இருந்தாலும் கீதாராணியின் வாக்கு மூலம் மிக முக்கியமானதாகப் பட அவளை பேச வைக்க மலரால் முடியும் என்று ப்ரதீபனுக்கு தோன்ற அவன் போட்ட திட்டம் கீதாராணியின் வாயாலையே எல்லாவற்றையும் வெளிக் கொண்டு வருவது. 
“இந்த பட்டன்  கேமராவையும் மைக்கையும் உன் ஷர்ட்டில் பொருத்திக் கொண்டு போ”
“போன உடனே இவ கேட்டாலும் அந்தம்மா உண்மையை சொல்வங்களா?” அமுதன் சந்தேகமாக கேக்க 
“கேக்குற விதத்துல கேக்கணும்” பிரதீபன் உறுதியாக சொல்ல 
“கமிஷ்னருக்கு வேற தகவல் சொல்லியாச்சு அவர் வேற நேரங்காலத்தோடு வந்து குட்டைய குழப்பமா இருக்கணும்” அமுதன் யோசிக்க, 
“மாட்டாரு… அவர் கிட்ட பேசிட்டேன் கூடுதலாக  ஆதாரம் சிக்கினா சந்தோசம்தான் படுவாரு” பிரதீபன் சொல்ல 
“எல்லாம் நல்ல படியாக நடக்கும் இந்த தடவ கீதாராணி தப்பிக்க மாட்டாங்க” 
தங்கள் போட்ட திட்டத்தை நிறைவேற்ற மலர் ரத்னவேலோடு சென்றிருக்க அமுதனும் ப்ரதீபனும்  தங்கள் வழியில் சென்றனர்.
மதியத்தை நெருங்கிய பொழுதும் வீசும் காற்றில் இதம் இருக்க பெங்களூரில் காலடி எடுத்து வைத்தனர் ப்ரதீபனும், அமுதனும். மலர் தரைவழியாக வந்து சேர இன்னும் இரண்டு  மணித்தியாலங்கள் செல்லும் என்பதால் தங்கள் திட்டத்தை ஆரம்பித்தனர். 
மலர்விழி ரத்னவேலின் தொண்டன் ஒருவனோடு வண்டியில் வருவதால் குறுந்செய்தி மூலமாகவே தொடர்பில் இருந்தவள் தங்களது திட்டம் நிறைவேற வேண்டும் என பல வருடங்களுக்கு பிறகு கடவுளை மனதால்  வேண்டி நின்றாள்
ஐந்து மாடிகளைக் கொண்ட அந்த ஷாப்பிங்மால் கட்டிடத்தில் மூன்றாம் மாடிவரை நிறைவு செய்திருக்க மேலுள்ள இரு மாடிகளும் வேலைகள் நடை பெற்றுக் கொண்டிருந்தன. கீதாராணி  தங்கவைக்கப்பட்ட நொடியிலிருந்து அனைத்து வேலைகளும் நிறுத்தம் செய்யபப்பட்டு தொழிலாளர்களுக்கு இரண்டுநாள் சம்பளமும் விடுப்பும் கொடுக்கப்பட்டது.
அவர்களின் திட்டப்படி கீதாராணி தங்கி இருக்கும் கட்டிடத்துக்கு அருகே அறையெடுத்து தங்கிய இருவரும் மலர்விழியின் கேமரா காட்ச்சிகளை பதிவு செய்துகொண்டிருந்தனர்.
பயணக் களைப்பையும் மீறி கீதாராணியை கண்டு கட்டிப்பிடித்து அழுகை காட்ச்சியை அற்புதமாக அரங்கேற்றி வந்த வேலையை ஆரம்பித்தாள் மலர்விழி. 
“என்ன அத்த இப்படி பண்ணிட்டீங்க? என்ன இருந்தாலும் என் கிட்ட சொல்லி இருக்கணுமா இல்லையா? நீங்க என்ன பண்ணாலும் அப்பாக்காகன்னு எனக்கு தெரியும் நானும் அப்பாக்காத்தான் பண்ணுவேன். அதுக்காக உங்களுக்கு ஒன்னுனா அமைதியா இருப்பேன்னு  நினைச்சிட்டேங்களா?” 
“அதுக்கில்லடி செல்லம்… நீ அடிக்கடி கை நீட்டுற.. ரோடுனு கூட பாக்க மாட்ட… இதெல்லாம் உனக்கு பிடிக்காதோன்னு” கீதாராணி இழுக்க 
“அது வேற அத்த… பொண்ணுங்களுக்கு ஒண்ணுன்னா… தட்டிக் கேட்டா சமூகத்துல நல்ல பேரு அதான் அந்த மாதிரியான காரியமெல்லாம் பண்ணுறேன். யார் கொடுத்த தைரியம்? அப்பா மினிஸ்டர். அத்த தொழிலதிபர் எவனாச்சும் என் மேல கைவைப்பானா சொல்லுங்க?” 
தான் செய்த நல்லவைகளை கூட கெட்டதாக மாற்றி சொல்ல வேண்டிய சூழ்நிலையை எண்ணி நொந்தவள் கீதாராணி யோசிக்கும் பொழுதே! 
“ஆமா அத்த அந்த ஒரு க்ளினிக் தானா? இல்ல இன்னும் இருக்கா? ஏன் கேக்குறேன்னா? விட்னஸ் எல்லாம் அழிக்கணும். நம்மாளுங்களே நம்மள காட்டிக் கொடுக்க வாய்ப்பிருக்கு. நான் அவங்கள சந்தேகப் படுறேனு சொல்ல வரல. போலீசுக்கு பயந்தோ! அந்த யாதவமதவன் காசுக்கு ஆசை பட்டோ உளறிட்டாங்கன்னா? அதனால இதுல சம்பந்த பட்டவங்க யார் யார் என்ற லிஸ்ட்டை கொடுங்க பெர்சனலா கண்காணிக்க ஏற்பாடு பண்ணலாம். அந்த டாக்டரை வேற யாதவமாதவன் தூக்கிட்டானாம். அவனுக்கு ஏதாவது ஆச்சு அந்த பழியும் உங்க மேலதான் வரும்.  கமிஷ்னரை போட்டுடலாம். மீடியாக்கு கொடுத்த ஆதாரத்தையெல்லாம் ஒன்னுமில்லாமல் ஆகிடலாம். டோன்ட் ஒர்ரி” கொஞ்சம் கூட பதட்டம் இல்லாமல் பேசுபவளை ஆச்சரியமாக பார்த்த கீதாராணி அண்ணன் வாரிசு என்ற நம்பிக்கையில் வாய் திறந்தாள் 
தான் செய்யும் ஆர்கன் இல்லீகல் பிஸ்னஸ் மற்றுமன்றி, ஏழைகளின் இடங்களை மிரட்டி எழுதி வாங்கியது அதற்காக செய்த கொலைகள். டெண்டர் கோட் செய்யும் பொழுது அரச ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தது, பணியாதவர்களை மிரட்டி பணிய வைத்தது, முடியாத பட்சத்தில் கொலையில் அவர்களை அப்புறப் படுத்தி தான் காரியம் சாதித்துக் கொண்டது. அதானால் கிடைத்த லாபம். தொழிலில் போட்ட முதலீடு, அண்ணனுக்கு அரசியலுக்கு செலவழிக்கும் தொகை. அரசாங்கத்தை ஏமாற்றி வரி கட்டாது பதுக்கிய தொகை. எந்த பாங்கில் எவ்வளவு வைய்ப்பு வைத்திருக்கிறாள். எங்கெல்லாம் நிலம் வாங்கி இருக்கிறாள். கட்டிடம் வாங்கி இருக்கிறாள் என்று எல்லாவற்றையும் ஒப்பித்தாள். 
மொத்தத்தையும் பதிவு செய்ய இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக செல்ல இடையே யாரும் குறுக்கிட முடியாத படி செல்வத்துக்கும், தொண்டர்களுக்கும் மதுபானத்தையும் வழங்கி அவர்களின் அலைபேசிகளையும் கைப்பற்றி அனைத்து வைத்தவள் அவர்களின் அறையை வெளியால் பூட்டியும் விட்டாள்.  கீதாராணிக்கும் கொஞ்சம் ஊற்ரிக் கொடுத்தே வாக்கு மூலத்தை பெற்றிருக்க அன்னையின் மரணத்துக்கு பழிவாங்கி விட்ட திருப்பதி வரவில்லை. 
கீதாராணி குடித்தவாறே நிமிர அங்கே அமுதனை கண்டு ரிஷி என்று நினைத்து வெல வெலத்துப் போக 
“நீ நீ எப்படி உயிரோட…” 
“ஓஹ்… உன் அண்ணன் பெத்த மகனை கொன்னது உனக்கு தெரியுமா? தெரியாதுன்னு இல்ல நினச்சேன்” அமுதன் கேலியாக சொல்ல மலரை ஏறிட அவளோ கைகளை கட்டிக் கொண்டு வெறித்துப் பார்த்திருந்தாள். 
அவளின் பார்வை தந்த உஷ்ணம் நெஞ்சில் குளிர்ப்பரப்ப “நீயும் கூட்டா” 
“என் அம்மாவை கொன்னதுக்கு…”
அந்த ஒற்றை வாக்கியம் கீதாராணியின் தொண்டையை இறுக செய்ய செல்வத்தை அழைக்க கூட பேச்சு வரவில்லை. அங்கிருந்து அகன்றால் போதும் என்று ஓட ஆரம்பித்தவள்  கட்டிக் கொண்டிருக்கும் பகுதிக்குள் நுழைந்திருந்தாள். 
ஓடும் அவளை துரத்திப் பிடிக்க கமிஷ்னர் இருக்க இவர்கள் மூவர் வேடிக்கை பார்க்க தயாராக அடுத்த கணம் கீதாராணியின் அலறல்தான் கேட்டது. பலத்த காயங்களோடு அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாள். 
ஐந்தாம் மாடியிலிருந்து கால் இடறி விழுந்தவள் படியின் இடுக்கில் வைத்திருந்த அமில பீப்பாயின் மீது மோதியதில் பீப்பாய் விழுந்து அமிலம் கொட்டுப்பட்டு அதன்மேல் கீதாராணியும் விழ படுகாயமடைந்தாள். 
மேலே இருந்து விழுந்து எலும்பு முறிவு மாத்திரமன்றி அமிலத்தாலான காயங்களோடு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்த அவளை காணும் பொழுது அமுதவள்ளி படுத்திருந்தது மலர்விழியின் கண்ணுக்குள் விரிந்தது.
   

Advertisement