Advertisement

அத்தியாயம் 24
“என்னடா அமுதா… அந்த மினிஸ்டர் இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கல. பொண்ண விட அந்த கீதா தான் முக்கியமா போய்ட்டாளா? என்னடா பண்ணலாம்?” பிரதீபன் தலையில் கை வைத்து அமர்ந்திருக்க அமுதனும் பலத்த யோசனையில் இருந்தான். 
“கட்டின மனைவியின் மீது நம்பிக்கையில்ல. பெற்ற மக்களின் மீது அன்பில்லை. அப்படி என்ன பாசம் கூடப் பிறந்தவள் மீது? கண் மூடித்தனமான பாசம்?” அமுதன் அங்கும் இங்கும் நடந்தவாறே கோபத்தை கட்டுப் படுத்திக் கொண்டிருந்தான். 
 தொலைக்காட்ச்சியில் சற்று நேரத்துக்கு முன் கீதாராணியை கைது செய்ய சென்ற கமிஷ்னரின் பேட்டி ஒளிபரப்பப் பட்டுக் கொண்டிருந்தது. கீதாராணியின் வீட்டில் சோதனை நடந்த நேரத்தில் அவர் அங்கு இல்லையென்றும். அவரின் எந்த ஒரு இடத்திலும் அவர் இல்லை என்றும் அலைபேசியும் அனைத்து வைக்கப் பட்டு விட்டதாகவும். மொத்தத்தில் கீதாராணி தலை மறைவாகி உள்ளார் என்று கூறியவர் கூடுதலான தகவலாக அவருக்கு கிடைத்த ஆதாரங்களை ஊடகங்களுக்கு கொடுத்து ஒளிபரப்பும் செய்வித்தார். 
கமிஷ்னர் ஒரு நேர்மையான மனிதர். மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பித்து கீதாராணியை கைது செய்யும் நடவடிக்கையை தடை செய்யாது இருக்கவே தனது வேலைக்கு ஆபத்து வந்தால் கூட பார்த்துக் கொள்ளலாம் என்று ஆதாரங்களை ஊடகங்களுக்கு கொடுத்தார். 
ஏழை குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு படித்து லஞ்சம் கொடுக்காமல் நேர்மையாக போராடி முன்னுக்கு வந்த ஒரு  இந்திய குடிமகனுக்கு இருக்கும் வெறிதான் அவரை இவ்வாறு செய்யத் தூண்டியதோ!  பணக்காரர்களின் உயிர் மட்டுமா உயிர்? ஏழையின் உயிர்? கண்டிப்பாக கீதாராணியை சிறையில் அடைத்தே தீருவேன் என்பதோடு அவரின் பேட்டி முடிவடைந்திருந்தது. 
கீதாராணி தலைமறைவாகிட்டாள் என்றதும் கண்டிப்பாக ரத்னவேலின் உதவியில்லாமல் இது சாத்தியமில்லை என்று தோன்றவே பிரதீபன் அவரை கண்காணிக்க ஏற்பாடு செய்ததில் அது உறுதியானது. 
“கீதாராணிய அரெஸ்ட் பண்ணி இருந்தா பாதி பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும். இப்போ என்ன செய்றது?” அமுதன் ப்ரதீபனை ஏறிட 
“எல்லாம் பக்காவா திட்டம் போட்டோமே… எப்படிடா இப்படியாகிருச்சு? இப்போ என்ன பண்ணுறது?” தங்களது திட்டம் சொதப்பியதில் செய்வதறியாது பிரதீபன் திணற 
“அந்தாள நாம குறைச்சு எடை போட்டுட்டோம்” அமுதனும் குழம்பினான்.
“கண்டிப்பா கமிஷ்னர் கீதாராணிய அரெஸ்ட் பண்ணுவாரு ஆனா அதுவரைக்கும் நாம அமைதியா இறுக்க முடியாது” பிரதீபன் கீதாராணியை எவ்வாறு கண்டு பிடிப்பது என்று யோசிக்க
“ஒரு வழி இருக்கு” இவ்வளவு நேரமும் அமைதியாக அமர்ந்திருந்த மலர்விழி மௌனத்தைக் கலைத்தாள்.
“யோவ் என்னய்யா பண்ணிக் கிட்டு இருக்க? எவனோ ஒருத்தன் என் பொண்ண கடத்தி என் தங்கச்சிய லாக் பண்ண பாக்குறான். அந்த கமிஷ்னர் வேற அரெஸ்ட் பண்ணியே தீருவேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு அலையிறான். அவள பத்திரமா அனுப்பி வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிருச்சு. இப்போ என் பொண்ண காப்பாத்த என்ன நடவடிக்கை எடுத்திருக்க” டி.ஜி.பியின் முன் அமர்ந்திருந்த ரத்னவேல் கொதித்துக் கொண்டிருந்தார்.
ரத்னவேலின் ஒரு கண் கீதா என்றாள் மறு கண் மலர். இருவரையும் விட்டுக் கொடுக்க மாட்டார். யாதவ்மாதவ் சொல்வதை செய்வது போல் செய்து நம்பத்தகுந்த அடியாளை மாறு வேஷத்தில் அனுப்பி கீதாவை பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்து அவள் தலைமறைவாகிட்டாள் என்ற புரளியை கிளப்பினான். இதில் தன்னுடைய பங்கு எதுவும் இல்லையென்று யாதவ்மாதவ் நம்பினால் மலருக்கு ஆபத்து எதுவும் வராது என்று நினைத்து இவ்வாறு செயல் பட்டு தனக்கு கட்டு பட்டிருக்கும் டி.ஜி.பியின்  முன் நின்று மலரை தேட சொல்லி கட்டளையிட்டுக் கொண்டிருந்தார். 
“ஐயா…. உங்க மகள் போன் வீட்டுல இருக்கு. அவங்கள வீடு புகுந்து கடத்தினாங்களா? போன வீட்டுல விட்டுட்டு வெளிய போன நேரம் கடத்தினங்களானே தெரியல. கடத்தினவன் டிமாண்ட் தொழிலதிபர் கீதாராணிய அரட்ஸ்ட் பண்ணுறது. அவங்க வேற தலைமறைவாகிட்டாங்க. இனி அவனே போன் பண்ணினா தான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும். அதுவரைக்கும் ஏரியா, ஏரியாவா சேர்ச் பண்ணிக் கிட்டுதான் இருக்கோம்”
“என் பொண்ணுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு….  ஒருத்தனும் உசுரோட இருக்க மாட்டீங்க” கர்ஜித்தவாறே அகன்றவரின் அலைபேசி அடிக்க அதில் வந்த செய்தியில் ஒரு கணம் திகைத்தவர் மறுகணம் மகிழ்ச்சியடைந்தார். அழைத்தது யாதவமாதாவால் கடத்தப் பட்ட ஒரே மகள் மலர்விழி.
சென்னை வந்து ஒரு மாதத்துக்கும் மேலாகப் போகிறது. ஆரம்பத்தில் எல்லாம் சரியாக போய் கொண்டு இருப்பதாக நினைக்க மும்பாயில் இருந்ததை விட தான் தனிமை படுத்தப் பட்டதாகவே நினைத்தாள் தியா. அங்கே  குடும்பம் மொத்தமும் கூட இருக்க, இங்கே ப்ரதீபனின் அருகாமையும் இல்லாமல் சூனியமாக உணரலானாள்.
இந்த ஒரு வாரமாக ப்ரதீபனை கண்ணிலையே காண முடியாமல் தவிக்க அவள் கண் முழிக்க முன் காலையிலையே  அமுதனோடு வெளியே செல்பவன் எப்போ வருகிறான் எப்போ போகிறான் என்பதே அவள் அறியாள். அலைபேசியில் அழைத்தாலும் பிறகு பேசுறேன் என்று சொல்பவன் பேசவே மாட்டான். பழிவாங்குறேன் என்று கிளம்பியவர்கள் என்னதான் செய்கிறார்கள் என்ற கேள்வியே அவளுள்.
நாளை செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் திட்டமிட்டு நிமிர மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. நாளை  அவர்களின் திட்டப் படி நடந்தால் கீதாராணியும், ரத்னவேலும் சிறை வாசம்தான். இவ்வளவு நாளும் மனதில் நிம்மதியில்லாமல் அலைந்துக் கொண்டிருந்த பிரதீபன் வீட்டையடைய தியா தூங்கி இருப்பாள் என்று மின் விளக்கை போடாமலையே கட்டிலில் சாய்ந்தான். 
வரி வடிவமாய் தூங்கும் மனைவியை ஒரு பெருமூச்சுடன் பார்த்தான் பிரதீபன். அவளை எங்கும் அழைத்து செல்லவும் முடியவில்லை. அவளோடு அமர்ந்து சரியாக பேச கூட நேரமில்லை. அவளும் குறை சொல்லாமல் புரிந்து கொண்டு நடந்துக் கொள்வது நிம்மதியாக இருந்தது. நாளையோடு எல்லாவற்றுக்கும் முற்றுப் புள்ளி வைத்த பின் அவளை அழைத்துக் கொண்டு வெளிநாடு செல்ல வேண்டும். தேனிலவுக்கு கூட அவளை எங்கும் அழைத்து செல்ல முடியவில்லை.
தியாவால் தாங்கள் செய்யும் அனைத்தையும் புரிந்துகொள்ளவோ! ஏற்றுக்கொள்ளவோ! முடியாது, கயலிடம் உளறியும் விடுவாள்.    தாங்கள் செய்து கொண்டிருக்கும் எல்லாவற்றிலிருந்தும் அவளை விலக்கியே வைத்திருந்தான் பிரதீபன். அவள் கேட்கும் பொழுது மட்டும் பட்டும் படாமலும் பதிலளிக்க டிவியில் பார்த்துதான் நடப்பவைகளை அறிந்துக் கொண்டாள் அவன் மனையாள். 
பிரதீபன் ஒன்று நினைத்து செயல் பட தியாவோ கணவன் தன்னை இன்னும்  மன்னிக்கவில்லை என்ற முடிவுக்கு வந்தாள். இரவில் வெகு நேரம் சென்று வீடு வருவதும், கொஞ்சல் மொழிகளும் காணாமல் போய் ஒரு இயந்திரம் போல் செயல் படுபவனை காணக் காண தன்னையும் பழிவாங்க தான் முற்படுகிறானோ என்ற அச்சம் தியாவின் மனதில் தோன்ற ஆரம்பித்திருந்தது. 
நாளை நடப்பவைக்கள் ஒழுங்காக நடக்க வேண்டும் என்ற சிந்தனையில் கட்டிலில் புரண்டவனுக்கு தூக்கம் தூர ஓடியிருக்க தியாவிடமிருந்து மெல்லிய விசும்பல் ஒலி வரவே மின் விளக்கை போட்டவன் அவளை தன் புறம் திருப்ப அழுது அழுது சிவந்த முகமும் வீங்கிய இமைகளும் அவனை பதட்டமடையச் செய்ய 
“என்னாச்சு தியா? எதுக்கு இப்படி அழுது கிட்டு நிக்குற? பாட்டி நியாபகம் வந்திருச்சா? ஸ்ரீராம பார்க்கணுமா? என்னாச்சு” 
விசும்பிக் கொண்டிருந்தவள் அவனையே கட்டிக் கொண்டு சத்தமாக அழ இப்படி ஒரு கோலத்தில் மனைவியை நிற்க வைத்தோமே என்ற குற்ற உணர்ச்சி மேலோங்க என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கலானான் பிரதீபன். 
பலவாறு சமாதானப் படுத்தியும் சமாதானமாகாமல் அவன் பேசும் பொழுதெல்லாம் அவளின் அழுகை கூடியதே ஒழிய குறையவே இல்லை. அவள் எதற்காக அழுகிறாள் என்று புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் அழுது முடியும் வரை தன்னுள் புதைத்துக் கொண்டு அவளின் முதுகை நீவி விட்டவன் தண்ணீரையும் புகட்டி மெதுவாக அவள் நெத்தியில் முத்தமிட்டான். 
கண்களில் நீர் வழிய கணவனை ஏறிட்டவள் மெளனமாக தனது இடத்தில் தலை வைத்து படுத்துக் கொள்ள  எந்த ஒரு விஷயத்தையும் படபடவென பேசும் மனைவியின் மௌனம் ப்ரதீபனின் நெஞ்சை பிசைந்தது. 
அவள் இடையில் கை போட்டு அவளை தன் புறம் இழுத்தவன் அவளின் சிவந்த முகத்தையே பார்த்திருக்க கண்களிலிருந்து கண்ணீர் இன்னும் பெருகி கன்னத்தில் வழிந்துக் கொண்டிருந்தது. 
தன் விரல் கொண்டு கண்ணீரை துடைத்தவாறே “பேபி டால் என்னடி பிரச்சினை உனக்கு? சொன்னாத்தானே எனக்கு புரியும். இப்படி அழுது உன் உடம்ப கெடுத்துக்கலாமா? பேசேன்” 
 “என்னை இன்னும் மன்னிக்கவே இல்லையா? பழிவாங்கத்தான் இவ்வாறு நடந்து கொள்கிறாயா?” மனம் முழுக்க கேள்விகள் மாறி மாறி வர  எங்கே தான் கேட்கப் போய் ஆமாம் என்று சொல்லிவிடுவானோ என்ற அச்சம் மனதில் குளிர் பரப்ப தியாவோ வாயை திறந்து பேசினாலில்லை.
அவளை இழுத்து தன் நெஞ்சோடு சேர்த்தனைத்தவன் முகத்தை நிமிர்த்தி கண்களுக்கு முத்தமிட சூடான கண்ணீரின் சுவையையே அவன் உதடுகள் ருசித்தது. 
 
“இப்படி அழுது கிட்டு இருந்தேனு வை காலையிலையே எந்திரிக்க முடியாம காய்ச்சல்ல படுக்க போற. முதல்ல அழுறத நிறுத்து. முகம் வேற வீங்கி போய் பார்க்கவே யாரோ மாதிரி இருக்க, நீ இப்படி அழுறவ இல்லையே! பேசியே மத்தவங்கள அழ வைப்பியே” சாதாரணமாக பேசி அவளின் மன சஞ்சலத்தை அறிய முட்பட்டான் பிரதீபன். 
“செத்து போறேன்… ரெண்டு நாளா காலைல எந்திருக்கவே முடியல ஒரே தல சுத்துது எனக்கு ஏதோ பெரிய வியாதி வந்திருக்கும்” விசும்பலோடு கூறினாள் தியா. 
தியா எதையோ மனதில் போட்டு குழப்பிக் கொண்டு குழந்தை தனமாக பேசுவதாக ப்ரதீபனுக்கு சிரிப்பு எட்டிப் பார்க்கவே கொஞ்சம் சத்தமாக சிரிக்கலானான். 
“நான் செத்தா உங்களுக்கு சந்தோசமா?” மீண்டும் முணுக்கென கண்ணீர் விழி தாண்ட கோபமும் கனன்று அவனை சரமாரியாக அடிக்கலானாள். 
அவளை தடுத்தவாறே “உன் பிரச்சினை என்னனு சொல்லாம செத்து போறேன்னு சொல்லுற? தல சுத்துது னு சொல்லுற? தல சுத்தமா என்ன? இப்படி பேசி பேசியே என்ன கொல்லுற. நைட்டுல தூங்க விடாம என்ன தாண்டி உன் பிரச்சினை?” 
“நீங்கதான்” 
“நான் என்னடி பண்ணேன்?” 
“என்ன பழிவாங்கத்தானே இப்படியெல்லாம் பண்ணுறீங்க?” 
“பழிவாங்கவா? இப்படி கட்டி புடிச்சி கிட்டு இருக்குறத சொல்லுறியா?” மேலும் தன்னுள் இறுக்கியவாறே கேக்க தியா தான் குழம்பிப் போனாள். 
“இல்ல… இல்ல… நீங்க சரியில்ல…. அன்னைக்கி நான் பேசினது இன்னும் மனசுல வச்சிக்க கிட்டு அப்பப்போ குத்தி காட்டி பேசுறீங்க?” 
கண்கள் இடுங்கியவாறே “குத்திக் காட்டி பேசுறேனா? நானா? எப்போ? என்ன சொன்னேன்?” 
அவன் சொன்ன ஒவ்வொன்றையும் சொல்லியவள் “பழிவாங்கவெல்லாம் வேணாம். நானே செத்து போறேன் நீங்க சந்தோசமா இருங்க” உதடு பிதுக்கி குழந்தை போல் பேசுபவளை பதீபனுக்கு அறைந்தால் என்ன என்று தோன்றியது  
“அடியேய் நான் சும்மா பேசினாவே எறிஞ்சி விழுற மாதிரி தாண்டி இருக்கும். சின்ன வயசுல இருந்தே அப்படி பேசி பழகிட்டேன். ஒன்னும் பண்ண முடியாது. நாம பிரிஞ்சிருக்கும் பொழுது கூட வீட்டுக்கு வராம இருக்க முதல் காரணம் என் கோபமும், பேச்சும் தான். எங்க உன்ன கண்ட படி பேசிடுவேனோ என்ற பயம் தான். இது சரியில்ல நீ வீட்டுல தனியா இருக்குறதால கண்டபடி யோசிக்கிற முதல்ல உன்ன ஒரு வழி பண்ணனும்” பிரதீபன் யோசிப்பது போல் பாவனை செய்ய 
கணவன் பேசப் பேச தான் தான் வீனா குழம்பி போய் கண்டதை  யோசிக்கிறோமோ! என்று எண்ணியவள் அவன் கடைசியில் சொன்னதைக் கேட்டு எங்கே தன்னை மும்பாய் அனுப்பி விடுவானோ என்று அஞ்ச அவன் வேறு சொன்னான். அதில் தியாவின் முகம் இருண்டது. 
“நீ ஏன் உன் படிப்பை தொடர கூடாது. கயல் கூட எங்க தொழிலை கத்துக்கணும் நாங்க சொன்னப்போ முதல்ல முடியாதுனு சொன்னா அப்பொறம் கத்துக் கிட்டா இப்போ அவ நா இல்லாத நேரம் ரிஷியோடு கடைக்கு போறா… நா இங்க நிம்மதியா வேல பார்க்க முடியுது” தன் பாட்டுக்கு பேசுபவனை வெறித்து பார்த்திருந்தாலே ஒழிய தியா பதில் பேச வில்லை. 
மனைவியின் மௌனம் ஏன் என்று புரியாமல் அவளை பார்த்தவன் “நீ கடைக்கெல்லாம் வர வேணா உனக்கு என்ன விருப்பமோ அத படி சரியா” 
பிரதீபன் கிண்டல் செய்வதாக எண்ணியவள் “ஸ்ரீராமோட என்னையும் ஸ்கூல் போக சொல்லுறீங்களா?” அவன் சொல்லி முடிக்கும் மீண்டு அவனை அடிக்க ஆரம்பித்தாள் தியா.
“ஸ்கூல் இல்ல டி காலேஜ் ராட்சசி ராட்சசி வலிக்குது டி” கத்தியவாறே அவளை தடுக்க முயன்றான் பிரதீபன் 
“நான் கேட்டேனா? நான் கேட்டேனா?” 
“அம்மா தாயே அழுது கிட்டு இருந்த உன் கிட்ட ஏன் டி அழுறனு கேட்டது தப்புதான் இனி கேக்க மாட்டேன்” 
“அச்சோ ரொம்ப வலிக்குதா?”
“கராத்தே அடி அடிச்சிட்டு வலிக்குதான்னு கேள்வி வேற உன்ன…” பொய்யாய்  வலிப்பது போல் பாசாங்கு செய்தவன் “பொண்ணுங்களுக்கு படிப்பு ரொம்ப முக்கியம் பேபி டால். நாளைக்கே எனக்கு ஏதாவது ஆனா” 
அவன் வாயை தன் கை கொண்டு பொத்தியவள் “என்ன பேசுறீங்க இதுக்குதான் பழிவாங்க கிளம்ப வேணாம் னு சொன்னேன்” 
“வீட்டுல நீ சும்மா இருக்குறதால தான் உன் மூள கண்டதையும் யோசிக்குது.  நான் என்ன சொல்லுறேன் நீ என்ன பேசுற?”
“தல மட்டும் சுத்தல என்னால ஒண்ணுமே சாப்பிட முடியல ஒரே வாந்தி வாந்தியா வருது. காலைல இருந்து ஒண்ணுமே சாப்பிடல” சொல்லும் போதோ குளியலறைக்குள் ஓடியவள்  சத்தமாக வாந்தி எடுக்க பின்னால் வந்த பிரதீபன் பயந்தே விட்டான். 
சத்தம் மட்டும் தான் வந்ததே ஒழிய நீர் கூட வெளியே வர வில்லை. காலையிலிருந்தே சாப்பிட முடியாமல் ஒக்காலிக்க மனக்குழப்பமும் சேந்து அவளை படுத்த கட்டிலில் சுருண்டு இருந்தாள் தியா. மயங்கி இருந்தாளா? தூங்கினாளா? என்று அவளுக்கே தெரியவில்லை. 
  
கணவனின் அருகாமையில் கொஞ்சம் தெம்போடு பேசிக் கொண்டிருந்தவள் வாந்தியை நியாபகப் படுத்தியதும் மீண்டும் குளியலறைக்குள் ஓடி இருந்தாள்.
தொய்ந்து விழுபவளை அணைத்தவாறு கட்டிலில் படுக்க வைத்தவன் வலுக்கட்டாயமாக ஜூஸ் போட்டுக் கொடுத்தான் “ஏன் டி இப்படி உடம்ப கெடுத்துக்கிற. வா ஆஸ்பிடல் போலாம்”
“ஒன்னும் வேணாம்” கணவன் இறங்கி வரவும் முறிக்கிக் கொண்டாள். 
“கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடிதான் புரிஞ்சி நடத்துகிறானு சட்டிபிகேட் கொடுத்தேன். அத கைல வாங்கின உடனே சுக்கு நூறா பிச்சி எரிஞ்சிட்டியே பேபி டால்” மனதுக்குள் அவளை செல்லமாக முறைத்தவாறே பார்த்திருந்தவன் டாக்டரை அழைக்கலாமா என்று யோசிக்க 
“ஐயோ… அம்மா… இத எப்படி மறந்தேன். பாட்டி கிட்ட சொன்னா திட்டுவாங்களே!” அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தவள் அச்சம் நிறைந்த விழிகளோடு அலைபேசியை கையில் எடுக்க 
அலைபேசியை பிடுங்கிய பிரதீபன் “ஏன் டி பாட்டி மாத்திரை போட்டு  தூங்கி இருப்பாங்க இப்போ போய் போன் பண்ணினா அவங்க தூக்கம் கெடாது?” 
“கயலுக்கு பண்ணுறேன். அவ சிலோன்ல இருக்கா…”
 
“அங்கேயும் இங்கயும் ஒரே டைம் தான் டி அவளும் தூங்கிக் கிட்டு தான் இருக்கா… என்ன தான் டி உன் பிரச்சினை… உன் பக்கத்துல இருக்குற என் கிட்ட முதல்ல சொல்லு” 
“நாள் தள்ளி  போய் இருக்குங்க அதுவும் பத்து நாள் என்ன பண்ணுறதுனு எனக்கு ஒன்னும் புரியல” தியா பதட்டமாக கை விரல் பத்தையும் காட்ட 
“என்னடி சொல்லுற?” அவளின் பதட்டம் அவன் மனதில் குளிர்ப்பரப்ப அவள் பேசும் பாஷையும் புரியவில்லை. 
 
“வாந்தி.. வருது, தல சுத்துது… பாப்பா வர போகுதுங்க” இவ்வளவு நேரமும் மனக் குழப்பத்தில் அழுது கொண்டிருந்தவள் ஆனந்தக் கண்ணீர் வடிக்க 
அவளின் பதட்டமான செய்கைகளை பதட்டத்தோடு பாத்திருந்தவனுக்கு அவள் சொல்லவிளைவது புரியவில்லை. காதலோடு சொல்ல வேண்டியதை பதட்டத்தோடு உளறிக் கொண்டிருந்தாள் தியா. 
பெண்களை பற்றி அரிச்சசுவடியே அறியாதவன் இனிதான் ஒரு பெண் குழந்தையை சுமந்தாள் எவ்வாறு இருப்பாள் என்று அறிந்துகொள்ள போகிறான். கயல் ரிஷியோடு இருந்திருந்தால் அறிந்து, புரிந்து கொண்டிருப்பானோ! பாட்டியிடம் வளர்ந்து எல்லாவற்றையும் பாட்டி சொல் படியே செய்யும் தியா தானும் பாதட்டமடைந்து அவனையும் பதட்டமடைய வைத்துக் கொண்டிருந்தாள். 
“யார் பாப்பா டி” புரியாமல் பிரதீபன் கேக்க 
“நம்ம பாப்பாங்க” கண்களில் நீரோடு கணவனையே பார்த்திருந்தாள் தியா. 
அவள் முக பாவனையும், முகச் சிவப்பும் சேதி சொல்ல, இவ்வளவு நேரம் நெஞ்சில் இருந்த பதட்டம் துணி கொண்டு துடைத்து போல் நீங்கி சந்தோசம் மட்டும் அங்கே குடிகொள்ள  அவளை இறுக அனைத்திருந்தான் பிரதீபன். அவன் கண்கள் கலங்கி இருக்க வார்த்தை வர வில்லை. மனைவியின் முகமெங்கும் முத்தமழை பொழிய அவளின் ஆனந்தக் கண்ணீர் கூட உதடுகளில் பட  இனிப்பை உணர்ந்தான். 
 

Advertisement