Advertisement

அத்தியாயம் 22
தியா சமைத்து வைத்து காத்திருந்தாலும் மலர் சில நேரம் சாப்பிடாமலே சென்று விடுவதால் அவளுக்கான உணவை கொண்டு வந்து கொடுப்பாள் தியா. இன்றும் வந்தவள் மலர்விழி அவளின் பி.ஏ உடன் அலைபேசி உரையாடலில் இருக்க பேசி முடிக்கட்டும் என்னு அமர்ந்திருந்தாள்.
அழைப்பு மணி அடிக்கவே “தியா யாரென்று பாரு” அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த மலர்விழி தியாவிடம் கூறி விட்டு அலைபேசியில் கவனமானாள்.  
தியா சென்று கதவை திறக்க அங்கே புடவையில் ராஜ தோரணையில் இருக்கும் பெண்மணியை கண்டு “யாரா இருக்கும்” என்று மனம் கேள்வி எழுப்ப 
வந்தவளோ! “இது மலர் வீடுதானே!” மலர் அடிக்கடி வீடு மாறுவதால் சந்தேகமாக கேக்க 
“ஆமா ஆமா உள்ள வாங்க” தியாவும் இன்முகமாகவே வரவேற்றாள். 
“ஆமா நீ யாரு? எங்க வீட்டுக்கே வந்து என்னையே வரவேற்குற?” வந்தவள் அதிகாரமாக குரல் எழுப்பியவாறே சோபாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டாள். 
  “யார் டா இது…. நீலாம்பரியின் மறுபிறவியோ”  தியா லுக்கு விட
“அத்த….” என்றவாறே கூவிக்கொண்டு வந்த மலர் கீதாராணியை கட்டிக் கொண்டு தியாவை உள்ளே செல்லுமாறு கண்ணசைக்க அவளோ அதை புரிந்துக் கொள்ளாமல் அங்கேயே அவர்களை பார்த்தப்ப படி நின்றிருந்தாள். 
“யாரு மலர் இவ” 
“பக்கத்து வீடு அத்த… அவங்க ஹஸ்பண்ட் ஜுவல்லரி ஷாப் வச்சிருக்கிறாரு” 
“ஒரே ஒரு ஷாப்பா” குரலிலையே  இவளையெல்லாம் உன் பக்கத்துல அண்ட விடலாமா என்ற கண்டனம் இருந்தது. 
தியாவோ அப்பாவியாய் “ஒஹ் இவங்க மலரோட அத்தையா? அப்போ இவங்க கிட்டயே அமுதன், மலர் கல்யாணத்தை பேசலாம் என்று நினைக்க கீதாராணி அடுத்து பேசியதில் முகம் மாறினாள். 
“ஆமா நீ எதுக்கு இங்க வந்த? உன் வேல முடிஞ்சதுன்னா நீ போலாம். நான் என் பொண்ணு கூட தனியா பேசனும்” அதிகாரம் தெறிக்கும் குரலில் தியாவை துரத்த தியாவின் கோபம் பெருகி மூக்கு சிவந்தது. 
கீதாராணியின் அன்பும், கருணையும் மலருக்கு மட்டும் தான். தியாவும் துடுக்கு தனமாக பேசுபவள் என்பதால் வம்பை விலைகொடுத்து வாங்கப் போகிறாள் என்று மலருக்கு தோன்றவே தியா வாய் திறக்கும் முன் “புதுசா குடி வந்திருக்காங்க போல ஸ்வீட் கொண்டு வந்தாங்க” கூறியவாறே அவளை இழுத்துக் கொண்டு சென்று வெளியே விட்டு கதவை சாத்தினாள் மலர்.
மலர் பேசியதை கவனத்தில் கொள்ளாது, முகத்தில் அறைந்தது போல் மலர் கதவை சாத்தியது தியாவை அவமானப் படுத்தியதாக நினைத்த தியா பொறுமியவாறே வீடு சென்றாள். 
கோபமூச்சுக்களை இழுத்தவாறே வரும் மனைவியைக் கண்டு புருவம் சுருக்கிய பிரதீபன் “என்ன தியா?” என்று ஒரே ஒரு கேள்வியைக் கேக்க 
“தனியா பேசணுமாமே தனியா… பேசட்டும்…. யாரு வேணாம்னு சொன்னா… நா என்ன அங்க இருந்து அவங்க பேசுறத ஒட்டு கேக்கவா போறேன். சாப்பிடாம போவாளேனு  காலையிலையே அவளுக்கு சமைச்சி எடுத்துக் கொண்டு போனதுக்கு எனக்கு இது தேவைதான் மூஞ்சில அடிச்சது போல கதவை சாத்துறா. இனிமேல் அங்க போவேன்? ஏதோ சொந்தமாக போறாளே நல்லா பழகணும்னு நினச்சேன். என் புருஷன் ஒரு நகைக் கடை வச்சிருந்தா என்ன? ஒன்பது வச்சிருந்தா அந்தம்மாக்கு என்னவாம்” 
தியா பொரிந்துத் தள்ள அமுதன் தான் ஏதோ சொன்னதாக நினைத்த பிரதீபன் “அவன் கிடக்கிறான் விடு தியா… லவ் பண்ணுற பொண்ணு கூட தனியா இருக்கணும்னு நினைச்சிருப்பான். உன்ன தொந்தரவா நினைச்சி ஏதோ பேசி இருப்பாங்க” மனைவியை சமாதானப் படுத்த கணவனின் பேச்சில் திருதிருவென முழிக்கலானாள் தியா.
“என்ன தியா மூஞ்ச தூக்கி வச்சிருக்க, புருஷனும், பொண்டாட்டியும் காலையிலையே சண்டை போட ஆரம்பிச்சிட்டீங்களா?” சட்டை கையை மடக்கியவாறே படிகளில் இருந்து இறங்கிய வண்ணம் அமுதன் கிண்டலடிக்க 
“டேய் நீ மேல இருந்து வர… அப்போ இவ யாரு கூட மல்லு காட்டினா?”
“அதான் அந்த மலரோட அத்தயாமில்லை அத்த ஊர்லயே  இல்லாத அத்த… பாக்குறதுக்கு அழகா, கம்பீரமா இருந்தா போதுமா மனசு குப்பை. அந்த அம்மா என்ன கண்ட படி பேசுறாங்க. இவளும் என்ன தள்ளி விட்டு கதவை சாத்துறா…. ” முகத்தை சுளித்தவாறே அங்கே நடந்ததை தியா சொல்ல ப்ரதீபனும் அமுதனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 
மனைவியின் முன் எதுவும் பேசவும் முடியாமல்  இப்போதைக்கு தியா இந்த பேச்சை விடமாட்டாள் என்று தோன்ற “எனக்கு பசிக்குது தியா சாப்பாடு எடுத்து வை கடைக்கு வேற போகணும்” அவளை அங்கிருந்து அனுப்புவதற்காக  பிரதீபன் சொல்ல தன் மேல் அவன் இன்னும் கோபமாகவே இருக்கிறான் என்று நினைக்கலானாள் தியா. 
தியா சமையலறையை நோக்கி செல்ல “டேய் அந்த கீதாராணி வந்திருக்கா போல… அவ எதுக்குடா இங்க வந்தா…” அமுதன் 
“எனக்கென்ன தெரியும். தியா கூடவே இருக்குறதால மலர் கிட்ட எதுவும் பேச முடியல” பிரதீபன் சொல்ல 
“வந்து சாப்பிடுங்க” தியா தொண்டை கமர குரல் கொடுத்தாள். 
மனைவியின் மனதில் உள்ள சஞ்சலம் அறியாமல் மலர் வீட்டில் நடந்ததை வைத்து அவள் முகம் சுணங்குகிறாள் என்று நினைத்த பிரதீபன் அவளிடம் பக்குவமாக பேச வேண்டும் என்று எண்ணினான்.
இருவரும் அமைதியாக வந்து அமர தியா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே  இருவருக்கும் பரிமாற மலர்விழியும் வந்தமர்ந்து உண்ணலானாள். அவளைக் கண்டு தியா முகம் திருப்பினாள். 
“ரொம்ப நெருங்கிய சொந்தக்காரங்களெல்லாம் வீடு தேடி வந்திருக்காங்க போல” அமுதன் பேச்சை ஆரம்பிக்க
“நீங்க ரெண்டு பேரும் பண்ணுறது சரியில்ல” மலர் ப்ரதீபனையும், அமுதனையும் குற்றம் சாட்ட “நாங்க என்ன பண்ணோம்” என்று இருவரும் அவளை முறைக்கலாயினர். 
“இதோ இந்த அம்மாஞ்சிய கூட்டிட்டு வந்திருக்கிறீங்களே! என் அத்த யாரு? என்ன? என்ற விவரம் சொல்ல வேணாமா? இவ பாட்டுக்கு அவங்க கூட உக்காந்து சம்பந்தம் பேச போறா” மலர் கடுப்பாகவே சொல்ல 
தான் மனதில் நினைத்ததை கணித்து சொல்லும் அவளை முறைத்த தியா “இனிமேல் உன் வீட்டு வாசப் பாடிய மிதிச்சேனா என்ன என்னனு கேளு” மலரோடு சண்டைக்கு தயாராக
“மிதிக்காத தாண்டி வா…” மலரும் சாதாரணமாகவே சொன்னவள் “வந்து உன்ன பேசிட்டு போனாங்களே அவங்க என் அத்த மட்டுமில்ல.. இதோ இவனுக்கு அம்மாவும் கூட… ரிஷியை பெத்தவங்களும் அவங்க தான்”  
கடைசி வாக்கியத்தில் கயல் ரிஷியின் குழந்தை பருவத்தை பற்றி சொன்னவைகள் நியாபகத்தில் வரவே “முதல்லயே சொல்லணுமில்ல கால்ல இருந்த செருப்பை கழட்டி அடிச்சிருப்பேன்” தியா பற்களை நற நறவென கடிக்க,
“அடிச்சிட்டு….. அவங்க துப்பாக்கி குண்டை நெஞ்சுல சுமந்து வீர மரணம் அடைய போறியா?” உணவை வாயில் திணித்தவாறே மலர் சொல்ல தியாவின் உடல் ஆட்டம் காண, சிரிப்பை அடக்கியவாறே பிரதீபன் அவளை அமர்த்தி தண்ணீர் புகட்டலானான். 
“சரியான தொட நடுங்கியா இருக்கியே! உன் கிட்ட உன் புருஷன் எதுவுமே சொல்லலையா?” அமுதனும் ப்ரதீபனும் காது கேளாதது போல் அமர்ந்திருக்க அவர்களை முறைத்தவள் 
“ஏதோ திட்டத்தோட தான் வந்திருக்கிறீங்கன்னு புரியுது இவ இருக்குறதால பேச முடியாம தடுமாறுறீங்கனும் புரியுது. சாப்பிட்டுட்டு மூணு பேரும் வீட்டுக்கு வாங்க பேசலாம்” மலர்விழி கைகழுவ எழுந்து செல்ல பிரதீபன் அமுதனுக்கு கண்ணால் சைகை செய்கை செய்ய அவனும் புரிந்து கொண்ட விதமாக தலையசைத்தான். 
தியாவை வீட்டிலிருக்கும் படி பிரதீபன் சொல்லியும். “எதையும் என் கிட்ட மறைக்க மாட்டீங்கனு சொன்னீங்க… நானும் வரேன்” என்றவள் பிடிவாதமாக  அவர்களோடு கிளம்ப 
தியா படபடவென பேசினாலும் இது மாதிரியான விஷயங்கள் அவள் வாழ்வில் கண்டதில்லை. எப்படி ரியாக்ட் பண்ணுவாளோ என்று ப்ரதீபனின் மனம் அடிக்க ஆரம்பித்தது.
“உன் பொண்டாட்டி படிய தாண்ட மாட்டா தூக்கிகிட்டே வா” கிண்டலடித்தவாறு அமுதன் முன்னாள் நடக்க பிரதீபன் தியாவை அணைத்தவாறு மலர்விழியின் வீட்டையடைந்தான். 
அவர்கள் பேசட்டும் என்று மலர்விழியும், எவ்வாறு கேட்பது என்று ப்ரதீபனும், அமுதனும் அமர்ந்திருக்க இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று புரியாமலே ப்ரதீபனை ஒட்டி  அமர்ந்திருந்தாள் தியா.
“என்ன பேச வந்தீங்களோ பேசுங்க” மௌனத்தை உடைத்தாள் மலர்.
எதுவுமே பேசாது அமுதவள்ளியின் டயரியை மலரின் முன் தூக்கிப் போட்ட அமுதன் “நாங்க ரெண்டு பேருமே இத படிச்சோம்” என்று மட்டும் சொல்ல 
அதை கையில் எடுத்த மலர்விழியோ புரட்டிப் பார்த்து விட்டு “அன்னைக்கி நைட் அறைக்குள்ள வந்து இந்த வேல தான் பாத்திருக்க. சரி அதுக்கென்ன இப்போ” மலரும் இனி மறைக்க ஒன்றுமில்லை என்றவாறே பேச தியா டயரையை கையில் எடுத்தாள். 
“பேபி டால் இதெல்லாம் நீ படிக்கிற சமாச்சாரமில்ல. உனக்கு படிக்க வேற வாங்கித்தாரேன்” என்று பிரதீபன் பிடுங்காத குறையாக டயரியை கைப்பற்றினான். 
அமுதனோ! “கண்டிப்பா உங்கப்பா சங்கரனை கொன்றிருப்பாரு எதுக்கு அவரை தேடுற?” நேரடியாகவே கேட்டு விட 
“அம்மா… அவங்கள காதலிச்சதுக்காகவே அவங்கள அவ்வளவு படுத்தினவங்க யாரை காதலிச்சாங்களோ அவரை மட்டும் விட்டுடுவாரா கண்டிப்பா அவர் அன்னைக்கே செத்திருப்பார்.
அம்மாவை பெத்தவங்கள தேடித் போனேன். தாத்தா இறந்துட்டாரு. ரெண்டு சித்தியும் சாதாரணமான வாழ்க்கையை தான் வாழுறாங்க. ஒரு சித்தி வீட்டுல தான் பாட்டி இருக்காங்க. அம்மாவோட பேர சொல்லி புலம்பிக்கிட்டே இருந்தாங்க. சித்தி அவங்கள திட்டிக் கிட்டே இருந்தாங்க”
“நான் பெத்த ஆத்தா.. எங்க இருந்தாலும் என்ன பார்க்க வருவா… அவ வராம இருக்கானா.. ஏதோ பெரிய ஆபத்துல இருக்கா.. அவளை தேடி என் கிட்ட கூட்டிட்டுவா ஆத்தா…. எங்க இருக்காளோ! எப்படி இருக்காளோ! அவளை பார்க்காம இந்த கட்ட வேகாதே!” 
“ஒரே புலம்பல் சித்தி திட்டுறத காது கொடுத்து கேக்க முடியல. பொறுக்காம பாட்டியை என் கூட கூட்டிட்டு வரலாம்னு தோணிருச்சு”
“இங்க பாரு புள்ள நீ யாறென்னே தெரியல ஊருக்கு புதுசா இருக்க, வீட்டுக்கு வந்தவங்கனு மரியாதை கொடுத்து உக்கார வச்சி பேசிக்கிட்டு இருக்கேன். என் அம்மாவை பாத்துக்க எனக்கு தெரியும். அக்காவை பார்க்காம புலம்பி இப்படியே கெடந்து சாவங்களேன்னு திட்டியாச்சும் அவங்கள நிதானத்துக்கு கொண்டு வர முடியுமான்னு பாக்குறேன்” புடவை முந்தியால் கண்களை துடைத்தவாறே பேச 
” அம்மா எங்கயோ குடும்பம், குழந்தைனு நல்லா இருக்காங்க, தாத்தா வந்து பார்த்து அத்து விட்டதால வரமா இருக்காங்கனு நினச்சிக்க கிட்டு இருக்காங்க. அம்மா இப்போ உயிரோட இல்லனு என்னால சொல்லவும் முடியல, நான் தான் உங்க பேத்தின்னு சொந்தம் கொண்டாடவும் முடியல. அதனால அவங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்திடுமோ.. என்னால அவங்க நிம்மதி கெட்டு போய்டுமோனு என்கிற பயம் என்ன அவங்க கிட்ட எந்த உண்மையையும் சொல்ல விடல.
சங்கரன் அப்பாகும் ரெண்டு தங்கச்சி, ஒரு அக்கா இருக்கிறதா டயரில் இருந்தது. அவரை நம்பித்தான் அவர் குடும்பமே இருந்திருக்கு. அவர் செத்தது தெரியுமோ! தெரியாதோ! அந்த குடும்பத்துக்கு என்னால ஏதாவது உதவி செய்ய முடியுமான்னு பார்க்கத்தான் அவரை பத்தி விசாரிக்கிறேன்” 
“அக்கா தங்கச்சிங்க கூட பொறந்தவங்க லவ் பண்ண கூடாதோ!” என்று தான் தோன்றியது அமுதனுக்கு.
“உங்கம்மா தான்  உன்ன பழிவாங்க கூடாதுனு சொல்லி இருக்காங்களே! அப்போ ஏன்…” ப்ரதீபனின் பேச்சில் குறுக்கிட்டவள் 
“பழிவாங்கக் கூடாதென்று அவங்க ஒன்னும் சத்தியம் வாங்கல. அவங்களுக்கு பண்ணதுக்கு நான் ஒன்னும் பழிவாங்க கிளம்பல அவங்கள கொன்னதுக்காக பழிவாங்க போறேன்” கண்கள் சிவந்தாள் மலர்விழி. 
“கொன்னுட்டாங்களா…”
அமுதனுக்கும், ப்ரதீபனுக்கும் கொஞ்சம் அதிர்ச்சிதான். இவ்வளவு கொடுமைகளை தாங்கிக் கொண்டு அமுதவள்ளி உயிரோடு இருந்ததே நம்ப முடியாமல் இருக்க, அவளை போய் எதற்கு கொன்றார்கள் என்ற கேள்வி மனத்தைக் குடைய, அங்கே நடக்கும் பேச்சு வார்த்தையில் முழிபிதுங்கி நின்றது தியா மட்டுமே!
“எப்போ?” 
“எப்படி?” 
ப்ரதீபனும், அமுதனும் ஒரே நேரத்தில் கேள்வி தொடுக்க,
“அத உங்க கிட்ட சொல்லணும்னு அவசியமில்லை நான் பார்த்துக்கிறேன். 
சரி எது பண்ணுறதா இருந்தாலும் சேர்ந்தே பண்ணலாம் ரிஷிக்கு பண்ணதுக்கு நானும் பழிவாங்கணும்” பிரதீபன் சொல்ல 
“எங்கப்பாக்கு பண்ணதுக்கு நானும் பழிவாங்கணும்” அமுதன் சொல்ல 
“என்ன ஆளாளுக்கு பழிவாங்க கிளம்பிட்டீங்க இங்க என்னதான் நடக்குது” தியா கத்த ப்ரதீபனின் கையிலிருந்த டயரியை பிடுங்கி தியாவின் கையில் கொடுத்தாள் மலர்விழி.
முதல் இரண்டு பக்கங்களை படித்து விட்டு டயரியை மூடிய தியா இதற்கு மேலும் என்னால் இதை படிக்க முடியாது என்று மலர்விழியை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.  
சற்று நேரத்துக்கு முன் மலர்விழியோடு மல்லு கட்டிய தியா இவளா என்று அமுதன் ஆச்சரியமாக பார்க்க, என்னதான் கோபம் இருந்தாலும் அது கொஞ்சம் நேரம் தான் அதன் பின் தான் பேசியதற்கு அவளே வருந்துவாள் என்று பிரதீபன் அறிந்திருந்தமையால் அவளை சமாதானப் படுத்தாமல் பார்த்திருந்தான்.
“நேர்சரி ஸ்கூல் போக வேண்டியதெல்லாம் மிஷன்ல கூட்டு சேர்த்தா இப்படித்தான்” அமுதன் நக்கலடிக்க 
“தியாமா… நீ இப்படி அழுதா வீடு கண்ணீர்ல மூழ்கிடும். அப்பொறம் பழிவாங்க கிளம்பின நாங்க போர்ட்டுல தான் போகணும்” ப்ரதீபனும் அவளை வார 
“தியா அழவோ, ஆறுதல் படுத்தவோ எனக்கு நேரமில்ல” அவளை தள்ளி நிறுத்திய மலர்விழி. 
தான் அமெரிக்காவில் இருக்கும் பொழுதே யாதவமாதவ் என்ற பெயரில் கம்பனி ஆரம்பித்து கீதாராணியின் டெண்டர்களை கைப்பற்றுவதை சொன்னவள் 
“கொஞ்சம் கொஞ்சமாக தான் அவங்கள அழிக்க நினைக்கிறேன். முதல்ல இந்த அண்ணனையும், தங்கையும் பிரிக்கணும்”
“அவங்களுக்கு பிறகு அந்த சொத்து உனக்குத்தான் வரும். சொத்தை அழிக்கணும்னா நஷ்டத்தை ஏற்படுத்தனும் நீ விவரமில்லாம இருக்க” பிரதீபன் சொல்ல 
“ஆமா எங்கம்மா பாக்டரி தீ புடிச்சி எறிஞ்சா எவ்வளவு நஷ்டமாகும்” அமுதன் கணக்குப் போட 
“வேலை செய்றவங்க பாதிப்படைய கூடாது. அப்படி நடந்தா அவங்களுக்கு வேலையில்லாம போகும்” மலர் மறுக்க 
“இவ்வளவு நல்லவளா நீ” அமுதன் கனிவான பார்வையை வீசினான். 
“பிளான் பண்ணா எல்லாம் சரியா பண்ணலாம். பாக்டரி தீப் பிடிச்சு எறிஞ்சி வேல போனவங்களுக்கு உடனே வேல வாய்ப்பு கொடுத்தா? அதுவும் யாதவமாதவ் கொடுத்தா?”
“அவன் மேல வன்மம் கூடி அவனை தேட ஆரம்பிப்பாங்க” அமுதன் சொல்ல  
“ரைட்டு…” பிரதீபன் ஹாய் பை கொடுக்க 
அங்கே நடப்பவற்றை பார்க்க முடியாமல் “இப்படியே வாயால வட சுட்டு கிட்டு இருங்க நான் போய் டி போட்டு கொண்டு வரேன். எனக்கு தலைவலிக்குது. ஏதோ வேற கிரகத்துல குடிவந்துட்டேன் போல” தியா தன் பாட்டுக்கு எழுந்து செல்ல அவளை முறைத்தவாறே பிரதீபன்
“உங்கப்பா, அத்த ரெண்டு பேரும் பண்ணுற இல்லீகல் பிஸ்னஸ்? பொண்ணுங்க? ட்ராக்ஸ்? இப்படி ஏதாவது” 
“பொண்ணுங்க, ட்ராக்ஸ் கண்டிப்பா இல்ல. வேறேதாவது இருக்குமான்னு தெரியல” 
“கொஞ்சம் நல்லவங்கதான் கொலை மட்டும் தான் பண்ணுவாங்க” அமுதன் சிரிக்க, 
“ஏன் டா…” பிரதீபன் அவனைக் கடிந்தான்.
அமுதவள்ளி எவ்வாறு இறந்தாள் என்று மலர்விழி பகிர தயாராக இல்லை. அது ஏன் என்று அமுதனுக்கு குழப்பமாக இருந்தாலும். அவளருகில் வந்தமர்ந்தவன் அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு 
“ஏன் மலர் இவ்வளவு ரணத்தையும் உன் மனசுல வச்சிக்க கொண்டு எப்படி இத்துணை வருஷமா இவர்களோடு இருந்த? கஷ்டமா இல்லையா? என்ன சீண்டிக்கிட்டே இருந்தியே அப்போவாச்சும் உண்மையா சொல்லி இருக்கலாம்ல”        
“எங்கம்மா சங்கரன் அப்பா எப்படி இறந்தாருன்னு டயரியில் சொல்லாம விட்டாங்களே! அது எனக்கு தெரியக் கூடாதென்று இல்ல. அவருடைய சாவத் பார்த்து அதிர்ச்சில மறந்துட்டாங்க. அதே வியாதி தான் எனக்கும். அம்மா செத்ததை தாங்கமுடியாம மயங்கி விழுந்து எல்லாத்தையும் மறந்து அம்மாவை தேடி அழ ஆரம்பிச்சேன். என்ன சமாளிக்க முடியாம ஹாஸ்டல்ல சேர்த்துட்டாங்க. நானாத்தான் அமெரிக்கா போகணும்னு போய்ட்டேன். 
பைக் ரைடனாவே எனக்கு ரொம்ப பிடிக்கும், ஸ்பீடா போய் விழுந்து அடிபட்டத்துல பழைய நியாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமா வர ஆரம்பிச்சிருச்சு.  
 நான் காண்பது கனவா? இல்ல உண்மையா? அப்பாகிட்ட கேட்கவும் முடியாம, நிஜத்துக்கும் கனவுக்கும் நடுவுல போராடி உண்மையை உணர்ந்தபோ…. 
ஆணவத்தில் ஆடும் கீதாராணியையும், பதவி, பணம் இருந்தால் எதையும் செய்யலாம் என்று நினைக்கும் ரத்னவேலையும்  கண்டிப்பா அவங்க கூடவே இருந்து வீழ்த்துவேன் என்று முடிவு செஞ்சேன். அந்த நேரம் தான் ரிஷி இறந்துட்டன் என்கிற செய்தியும் வந்தது. 
எல்லா காலேஜ் பொறுப்புகளும் என் கிட்ட என் பேர்ல தான் இருக்கு, அதுல தலையிடவும்   மாட்டாங்க, லாபம் மட்டும் கணக்கு காட்டணும்.   அதே போல் கீதா ஹாஸ்பிடல்ஸ், கீதா கான்ஸ்டரக்சன்ஸ் எல்லாம் முடக்கி ஒண்ணுமில்லாதவங்களா நடுத்தெருவில் நிறுத்தணு, 
 அவங்க காசுதான் எங்கப்பா மினிஸ்டரா இருக்க செலவு செய்றாங்க. கீதாராணி ஒண்ணுமில்லாதவனா ரத்னவேல் பூஜ்ஜியம்”
“உங்கப்பா ஒரு சொத்தும் சேர்த்து வைக்கலயா?” ஆச்சரியமாக பிரதீபன் கேக்க 
“ஏன் இல்ல பாதி சொத்து அம்மா பேர்ல மீதி என் பேர்ல இருக்கே, அவர் பேர்ல ஒன்னும் இல்ல”
“பினாமி யாராவது” அமுதன் கேள்வி எழுப்ப 
“அண்ணனும் தங்கையும் யாரையும் நம்பமாட்டாங்க. அப்படி யாருமில்ல”  உறுதியாக சொன்னாள் மலர்.

Advertisement