Advertisement

அத்தியாயம் 21
சென்னையை நோக்கி பயணித்து கொண்டிருந்த மலர்விழியின் சிந்தனையில் ரத்னவேல் பாத்திருக்கும் மாப்பிளையை எப்படி துரத்துவதென்பதில் இருக்க, அவனை பற்றின தகவல்களை திரட்ட மும்பாயில் இருக்கும் பொழுதே உத்தரவிட்டிருக்க, அவள் விமானம் ஏறு முன் அவனை பற்றிய தகவல்கள் வந்து சேர்ந்திருந்தது. அதை படிக்க மனம் வராமல் தந்தையையும், அத்தையையும் காணும் போது கொதிக்கும் இரத்தத்தை அடக்குவது பெரும் பாடாகிப் போக, அன்னை கூறியது போல் தன்னால  இருந்து விட முடியுமா? கண்டிப்பாக முடியாது. அன்னையின் மரணத்துக்காக அவர்களை பழிவாங்கியே தீருவேன். அவள் கண்களுக்குள் அன்னை இறந்த நாள் வரவே ஆழ மூச்செடுத்து  மனதில் உறுதி பூண்டவள் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
“என்னண்ணே! என் பொறந்த நாள் அதுவுமா இப்படி குடிக்கிறியே. வா எங்கயாச்சும் வெளியே போயிட்டு வரலாம்” ரத்னவேல் குடிப்பதை தடுத்தவாறே உள்ளே நுழைந்தாள் கீதா. 
“வா கீது மா… ” அவளை வரவேற்றவாறே கிளாசில் மதுவை ஊற்ற அதை பறித்து ஒரு ஓரமாக வைத்தாள் கீதா.
“என்னால முடியல, என்னால முடியல அவ இல்லாம இருக்க முடியல” ரத்னவேல் அமுதாவின் நினைவுகளில் புலம்ப 
அவ செத்தும் இந்தண்ணன் இன்னும் விட்டுத் தொலைக்காமல் அவளையே நினைத்துக் கொண்டிருப்பது கீதாராணிக்கு எரிச்சலாக இருந்தது. 
“ஏன் கீதா அவ என்ன விட்டு போனா…. ஏன்.. ஏன்..” அவனின் புலம்பல்கள் முடிவில்லாது இருக்க வேலையாட்களை வரவழைத்து ரத்னவேலை அவனது அறைக்கு தூக்கிச் செல்லுமாறு உத்தரவிட்டாள் கீதா. 
அமுதவள்ளி இறந்த போது நடைப்பிணமாக அலைந்த ரத்னவேலை அரசியலில் முழுமூச்சாக ஈடு பட வைத்து, தான் சம்பாதிக்கும் மொத்தத்தையும் அவனுக்காக கொடுத்து இன்று ரத்னவேல் வர்த்தக அமைச்சராக பதவியில் இருக்க கீதாராணி தான் காரணம் என்றால் மிகையாகாது. 
அதற்கு கைமாறாக அவள் எதிர்பார்ப்பது அவளது பிறந்த நாளன்றாவது அண்ணன் தன் கூடவே இருக்க வேண்டும் என்பதே! ஆனால் அவன் காலையிலையே குடித்து விட்டு மறைந்த மனைவியின் நினைவில்  புலம்புவது கீதாராணிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. 
இத்தனை வருடங்களாக முயற்சி செய்தும் இந்த நாளை தனக்கு வேண்டியது போல் கொண்டாட அவளால் முடியாமலே போனது. அமுதவள்ளி இருந்த வரைக்கும் அவளோடு இருந்த அண்ணன் அவள் இறந்த பின்னும் அவள் நினைவுகளால் புலம்புவது கீதாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தாமல் வேறு என்ன செய்யும்? 
“அவ இருந்ததை விட இல்லாம நீ இவ்வளவு மோசமா குடிச்சு உன்னையே வருத்திக்குவேன்னு தெரிஞ்சிருந்தா அன்னைக்கி நான் நிதானமா நடந்திருப்பேன். கண் மண் தெரியாத என்னோட கோபத்தால் அவ சாவான்னு அப்போ நான் நினைக்கல” கீதாராணி ஒரு பெருமூச்சு விட்டவாறே கட்டிலில் உளறிக் கொண்டிருக்கும் ரத்னவேலை பார்க்க 
“மலருக்கு அவ அம்மா செத்தது எப்படி என்று நியாபகத்துல வருமா? வந்தா என்ன பண்ணுவா?” ரத்னவேல் போதையில் உளற
“மூடிட்டு தூங்குனா… நீயே உன் பொண்ணு கிட்ட எல்லாம் சொல்லிடுவ போல இருக்கே!” அவனை திட்டியவாறு அகன்றாள் கீதாராணி.  
   
“தியா நாம உடனே சென்னை கிளம்புறோம். ஒரு மூணு மாசத்துக்கு தேவையான எல்லாம் எடுத்து வை” தியாவை அழைத்த பிரதீபன் கூற 
“இப்பொவேவா?”
“நீ தானே சொன்ன நான் எங்க இருக்கேனோ அங்க தான் இருப்பான்னு. உன்னால வர முடியாதுனா நீ இங்கயே இரு” தனது துணிகளை அடுக்கியவாறு பிரதீபன்.
“இல்ல ஸ்ரீய  விட்டுட்டு….” தியா இழுக்க 
“நீ என்னடா இன்னும் இங்கயே நிக்குற போ போ போய் ரெடியாகு அடுத்த பிளைட்டுல சென்னை போறோம்”  அங்கே யோசனையில் மூழ்கி இருந்த அமுதனை அதட்டினான் பிரதீபன். 
“இல்ல ரிஷி கேட்டா என்ன சொல்லுறது? நாம அங்க இருக்கும் பொழுது அவன் சப்ரைஸ்ன்னு திடீருனு வந்து நம்ம முன்னாடி நிக்க போறான். அப்பொறம் அவன் கிட்ட இருந்து எதுவும் மறைக்க முடியாது” 
“அவனை நான் பாத்துக்கிறேன். அடுத்த வாரம் இயலுக்கு குழந்தை பொறக்க போகுது. ஸ்ரீராமுக்கு ஸ்கூல் லீவு விட்டா கண்டிப்பா கயல் ரிஷியை கூட்டிக்கிட்டு போவா.. காது குத்து, பேரு வைக்கிறதுனு ஒரு மாசம் தங்கிட்டுதான் வருவாங்க. பாத்துக்கலாம்” அமுதனிடம் சொன்னவன் 
“நீ என்ன மசமசன்னு நிக்குற வரன்னா வா இல்ல இங்கயே இரு” தியாவை கடிய 
“வரேன், வரேன்” பாட்டியை விட்டு, ஸ்ரீயை விட்டு எவ்வாறு இருப்பதென்று அரைமனதாக கிளம்ப தயாரானாள் தியா. 
பார்வதி பாட்டியை சிவா, திலகாவிடம் விட்டு விட்டு முக்கியமான வேலை என்றும் வர கொஞ்சம் நாள் ஆகும் தியாவையும் அழைத்து செல்கிறேன் என்று ரிஷியிடம் கூற 
பார்வதி பாட்டியோ கணவனை பிரிந்து பேத்தி படும் அவஸ்தையை கண்டு மனம் வருந்தி இருந்தவர் சந்தோஷமாகவே வழியனுப்பி வைத்தார்.  
கயல் தியாவை கட்டிக் கொண்டு “புருஷன பிரிஞ்சி அழுமூஞ்சியா இருந்த. போ… போ…  சென்னை க்ளைமேட்டுலயாச்சும் சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுறியான்னு பார்க்கலாம்” தியாவிடம் வம்பு வளர்க்க ரிஷியும் வேறு எதுவும் கேட்காமல் சரி என்று விட்டான். 
ஒருவாறு அனைவரையும் சமாதானப் படுத்தி விட்டு மூவரும் விமானம் ஏறி இருந்தனர்.
மலர் விமான பயணத்தை முடித்துக் கொண்டு சென்னையில் காலடி எடுத்து வைக்க அவளுக்காக காத்திருந்த வண்டியை காணாது சுற்றும் முற்றும் பார்க்க, அவளருகில் வந்த ஒருவன் 
“மேடம் ப்ளீஸ் இந்த வண்டில ஏறுங்க” என்று உத்தரவிட அவனை கேள்வியாக ஏறிட்டாள். 
“மிஸ்டர் ஈகைச்செல்வன் ஈஸ் வைட்டிங் போர் யு” 
“அந்த பெயரை எங்கயோ கேட்டது போல் நியாபகம் ஆனால் எங்கே?” மலர்விழி யோசிக்க அவனோ கதவை திறந்து வைத்துக் கொண்டிருந்தான். 
“மேம் ப்ளீஸ்…” 
“ஆ… அப்பா பார்த்த மாப்புள. அவனா என்ன சந்திக்க இன்றே காத்திருக்கிறான். அப்பா எதுவும் சொல்லவில்லையே!” மலரின் மனம் நொடியில் கண்டு பிடித்து காரணங்களை அலச கதவை திறந்து வைத்துக் கொண்டிருந்தவன் ரொம்ப பொறுமையாகவே நின்று கொண்டிருந்தான். 
வண்டியில் ஏறி அமர்ந்தவள் “எப்படியும் இவனை சந்திக்க வேண்டி இருக்கு அது இப்போவே என்றால் என்ன? இன்னும் இரண்டு நாளில் என்றால் என்ன?” முணுமுணுத்தவாறே மலர் தனது கணணியை திறந்து ஈகைச்செல்வனை பற்றி அவளுக்கு வந்த மெயிலை ஆராய்ந்தாள். 
ஈகைசெல்வன் வயது இருபத்தியெட்டு. சிறு வயதில் பெற்றோரை இழந்து தனியாக வளர்ந்தவன். இன்று அவனுக்கு இருக்கும் சொத்துக்களின் மதிப்பு பல கோடி. எல்லாம் அவனின் சுய சம்பாத்தியம். பல தொழில்களில் கால் பதித்து கொடி கட்டி பறக்கும் இந்தியாவின்  இளம் வயது தொழிலதிபர்களின் இவனும் ஒருவன். மது, மாது, சூது என்று எதிலும் ஈடுபாடற்றவன். தன்னிடம் உள்ள பணத்தை மேலும் பெருக்க எந்த தொழிலில் முதலீடு செய்யலாம் என்று விரல் நுனியில் வைத்திருப்பவன் 
அதற்கு மேலும் படிக்க பிடிக்காமல் மடிக்கணணியை மூடினாள் மலர். “சரியான பணப் பேயா இருப்பான் போல இருக்கு. காசு காசுன்னு அலையிறான். எந்த கெட்ட பழக்கமும் இல்லனு ரிப்போர்ட் சொல்லுது இவன எப்படி துரத்தியடிக்கிறது” மலர்விழி சிந்தனையில் ஆழ்ந்திருக்க அவள் சந்திக்க போகும் ஈகைச்செல்வனோ தனது மடிக்கணனியில்  மலர்விழியை பற்றி வந்திருந்த தகவலை அக்குவேர் ஆணிவேராக ஆராய்ந்துக் கொண்டிருந்தான். 
அந்த ஐந்து நட்சத்திர விடுதியின் உள்ளே வண்டி செல்லவும் மலர்விழிக்கு கதவை திறந்து விட்டவன் அவளை அழைத்துக் கொண்டு ஈகைசெல்வன் தங்கி இருக்கும் அறைக்குள் அழைத்து சென்று விட்டு கதவை சாத்திக் கொண்டு வெளியே செல்ல மலர்விழியோ அங்கே அமர்ந்து தன்னையே ஆராயும் பார்வை பார்ப்பவனை பார்த்து 
அவன் பார்வைக்கு பதில் பார்வை பார்த்தவாறே “இன்னும் ரெண்டு நாள்ல தான் என்ன சந்திக்க வருவதாக அப்பா சொன்னாரு. என்ன திடீரென்று…” சாதாரணமாகவே பேசியவள் அவன் முன் சென்று அமர 
அவன் முன் கோழிக் குஞ்சாய் நடுங்கும் பெண்களையே பார்த்து பழகியவனுக்கு மலர்விழியின் நிமிர்ந்த நடையும் பேச்சும் முகத்தில் புன்னகையை வரவழைக்க 
“ம்ம்… எந்த ஒரு காரியத்தையும் பிளான் பண்ணி தான் செய்வேன். கல்யாணம் என்பது ஒரு கப் காபி சாப்பிட்டு முடிவு செய்யிற விஷயமில்லை. உன்ன பத்தி விசாரிச்சேன். அமெரிக்கால படிச்ச இங்க இப்போ என்ன செய்யிற எல்லாம்…….” அவனும் சாதாரணமாக சொல்ல 
கண்டிப்பாக விசாரித்திருப்பான் என்று மலர்விழிக்கு தெரியும் என்பதால் இந்த கல்யாணத்தை நிறுத்தும் படி அவனிடம் நேரடியாகவே பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தவள் எவ்வாறு ஆரம்பிப்பது என்று யோசிக்கையில் 
“உங்கப்பாவை பழிவாங்கின பிறகுதான் கல்யாணம் பண்ணனும் னு இருக்கியா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு பழிவாங்கலாம்னு இருக்கியா” அவன் குரலோ சாதாரணமாகவே ஒலிக்க
ஈகைச்செல்வனின் இந்த பேச்சில் ஒருகணம் உள்ளுக்குள் ஆட்டம் கண்டாலும் அவன் குரலில் என்ன இருக்கிறது என்று கணிக்க முடியாமல் வாயை இறுக மூடி அமர்ந்திருந்தாள் மலர்விழி. 
“நீ அமெரிக்கால என்ன படிச்ச, இங்க என்ன வேல பாக்குற, இப்போ நீ மும்பாயில் யாரை சந்திச்சுட்டு வர, உங்கம்மா சாவுக்கு உங்கப்பா அண்ட் அத்தைக்கு சம்பந்தம் இருக்கு என்பது மட்டுமல்ல அவங்கள வீழ்த்த நீ பண்ணிக்க கிட்டு இருக்குற ஒவ்வொன்னாத்தையும் கண்டு பிடிச்சிட்டு தான் உன் முன்னாடி உக்காந்து இருக்கேன் பேபி” அப்போதும் அவன் குரல் சாதாரணமாகவே இருந்தது.
“அமெரிக்கால உன் பிரெண்டு ஒருத்தன் எப்.பி.ஐ ல இருக்கான் இல்ல…. அவன் உதவி உனக்கு கிடைச்சி கிட்டே இருக்கு. யாதவ்மாதவ் என்ற ஒருவனை உருவாக்கி அவன் பேருல கம்பனி ஆரம்பிச்சு உன் அத்தை  கோட் பண்ணும் அமௌண்ட்ட விட குறைவா கோட் பண்ணி எல்லா ப்ரொஜெக்டையும் உன் கை வசப்படுத்தி அவங்க தொழிலை கொஞ்சம் கொஞ்சமாக முடக்கிட்டுவர. 
இந்த யாதவ்மாதவ் யாரு? எங்க இருக்கான்? உன் அத்தையும், அப்பாவும் மண்டைய பிச்சிக்கிறாங்க, நீ கூலா அவங்க பேசுறத ஒட்டுக் கேட்டு உன் வேலைய பாக்குற. 
கூடிய சீக்கிரம் உங்க அப்பாவை மண்ணை கவ்வ வைக்க போற. 
அப்பொறம்… உன் அத்த…. 
உன் மாமா பையன் அமுதன் அவனை லவ் பண்ணுறியா? இல்ல…. 
ஒரு பிரீ அட்வைஸ் சொல்லவா… பேசாம உங்கப்பனையும், அத்தையும் போட்டுடு” சாதாரண முகத்தை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருப்பவனை மலர்விழியால் கணிக்க முடியவில்லை. அவனை பார்க்கும் பொழுது இன்னொரு ரத்னவேல் என்றே தோன்றியது. 
“என்ன பேபி எப்போ கல்யாணத்த வச்சிக்கலாம்?” 
தான் செய்பவை எல்லாவற்றையும் புட்டு, புட்டு வைக்கும் இவன் லேசு பட்டவனில்லை. இவனிடம் இருந்து தப்பிப்பது கடினம் என்று மலர்விழிக்கு தோன்ற என்ன பதில் சொல்வது? எப்படி சொன்னால் பிரச்சினை வராது என்று யோசிக்கையில் ஈகைச்செல்வனின் அலைபேசி அடித்தது. 
மறுமுனையில் என்ன சொல்ல பட்டதோ! மடிக்கணியில் மடிசாரில் இருந்த மாமியை கண்ணுக்குள் நிறைத்துக் கொண்டவன் மலர்விழியின் புறம் திருப்பி
“வீ ஆர் இன் சேம் போர்ட். எங்கப்பா அம்மாவை கொன்னு என்ன அனாதையாக்கினவன நானும் பழிவாங்க காத்திருந்தேன்… அவன் பேத்தி இதோ இவ தான் இவளுக்கு வலிச்சா அவன் துடிப்பானில்லை” கண்கள் சிவக்க சொன்னவன் ஒரு நொடியில் சுதாரித்து “ஓகே மிஸ் மலர்விழி இந்த கல்யாணம் நடக்காது உங்க அப்பாக்கு நானே போன் பண்ணி சொல்லுறேன். ஐ ஹவ் டு கோ” என்றவன் அவளின் பதிலையும் எதிர் பார்க்காது நகர 
  
“ஒரு நிமிஷம் மிஸ்டர் ஈகைச்செல்வன் பெண் பாவம் பொல்லாததுனு சொல்வாங்க. அந்த பொண்ணோட தாத்தா பண்ணதுக்கு அந்த பொண்ண எதுக்கு பழிவாங்க போறீங்க. சரியான ஆம்புளையா  இருந்தா அவ தாத்தாவோட மோதுங்க. இதுவும் ப்ரீ அட்வைஸ் தான்”  அவனை நேர் பார்வை பார்த்தே சொல்ல 
“என் விஷயத்தில் தலையிட நீ யாரு” எனும் விதமாக மலரை அலட்ச்சியமாக ஒரு பார்வை பார்த்து விட்டு நடையை தொடர்ந்தான் ஈகைச்செல்வன்
செல்லும் அவனையே வெறித்து பார்த்தவள் “சிலருக்கு பட்டா தான் புரியும்” என்று முணுமுணுத்தவாறே வீட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தாள். 
ஈகைசெல்வனை பற்றி அறிந்து கொண்டவைகளில் அவன் தன்னை பற்றி இவ்வளவு தூரம் விசாரித்து கண்டு பிடித்தது எப்படி என்ற கேள்வி மலர்விழியின் மனதை குடைய பணம் பத்தும் செய்யும், பாதாளம் வரை பாயும், நிறைய செலவழித்து இருப்பான் என்றெல்லாம் எண்ணியவள் இவ்வளவு கேயாளர்சாவா இருக்கோம். அப்பாவோ! அத்தையோ! கண்டு பிடிச்சிருந்தா செத்தேன்.  
ஈகைசெல்வனால் தனக்கு ஆபத்து வராது என்று புரியவே அவனை பற்றி விசாரிக்க தேவையில்லை என்று முடிவுக்கு வந்தவள் வீட்டின் கதவை திறந்தவாறே தனது பி.ஏக்கு அழைத்து தான் ஊர் திரும்பியதை சொல்லி குளித்து விட்டு ஒரு குட்டித்த தூக்கம் போடலானாள். 
அழைப்பு மணி விடாது அடிக்கவே வேண்டா வெறுப்பாக எழுந்து கதவை திறக்க அங்கே அமுதன் நிற்பதைக் கண்டு புருவம் சுருக்கினாள்  மலர்.
“எக்ஸ்கியூஸ் மீ மேடம் நாங்க பக்கத்து வீட்டுக்கு குடி வந்திருக்கிறோம் ஸ்வீட் எடுத்துக்கோங்க” என்று சொல்லியவன் அவளுக்கு ஊட்டியே விட அவ்வளவு நேரமும் தான் காண்பது கனவு என்று கண்களை சுருக்கி பார்த்திருந்தவள் சுவையை உணரவே கண்களை அகல விரித்தாள். 
“என்னப்பா… ரெண்டு பேரும் வாசலிலேயே ரோமன்ஸ் பண்ணுறீங்க? எங்களை உள்ள போக விடுங்க, தள்ளு… மலர்விழியை தள்ளிக் கொண்டு தியா உள்ளே செல்ல 
வாயிலிருந்த ஸ்வீட்டாய் சாப்பிட்டவாறே பிரதீபனை உள்ளே வர வழி விட்டவள் 
“என்ன திடீரென வந்திருக்குறீங்க, காலைல நான் வரும் போது கூட ஒன்னும் சொல்லலையே!” கேள்வி என்னமோ ப்ரதீபனிடம் கேட்டாலும் பார்வை முழுவதும் அமுதனின் மேலையே இருந்தது. 
“நீ என்ன தீண்ட மாட்டியே! நீ வந்துருக்க” என்றது அவள் பார்வை. 
“உன்ன ஒருத்தன் பொண்ணு பார்க்க வறானாமே! அவனை ஓட விடத்தான் வந்தோம்” அமுதன் சொல்ல ப்ரதீபனும் தலையசைத்தான். 
“அவன் அப்போவே கிளம்பிட்டான்” மலர் சாதாரணமாக சொல்ல 
“உன்ன பையன்னு நினைச்சி போய்ட்டானா? முடி கொஞ்சம் வளர்ந்திருக்கே!” நாடியை தடவியவாறே சந்தேகம் கேட்பது போல் கேட்க அமுதனை நன்றாக முறைக்கலானாள் மலர். 
தியா அங்கே இருப்பதால் இப்போதைக்கு எதுவும் பேச முடியாதென்பதால் ப்ரதீபனும், அமுதனும் பொறுமை காக்க 
“ஆமா எங்க தங்கி இருக்கிறீங்க?”
“பக்கத்து வீட்டுல தான்” அமுதனும் ப்ரதீபனும் ஒரே நேரத்தில் சொல்ல அவர்களின் குரலை வைத்தே ஏதோ சரியில்லை என்று புரிந்துக் கொண்ட மலர்விழி மேலும் எதுவும் கேளாது மௌனமானாள்.  
“பசிக்குது… இப்போ தான் புது வீட்டுக்கு வந்திருக்கோம். இனிமேல் தான் எல்லாம் வாங்கணும் அமுதன் ஏதாவது ஆடர் பண்ணுங்க. மலர பார்த்தா காலைலயும் சாப்பிட்ட மாதிரி தெரியல” 
“உனக்கு என்ன தேவையோ லிஸ்ட் போடு என் சூப்பர்மார்கெட்டுல இருந்தே வரவழைக்கிறேன். மலர் நல்லா சமைப்பா அவளும் இன்னைக்கி வந்ததால வீட்டுல ஒன்னும் இருக்காது. இரு நான் நாலு பேருக்கும் சேர்த்து ஏதாவது வரவழைக்கிறேன்” 
அமுதன் மலர் தங்களுக்கு சாப்பிட எதுவும் கொடுக்கவுமில்லை. சாப்பிட்டு விட்டு செல்லுமாறு சொல்லவுமில்லை என்பதை தியா எவ்வாறு எடுத்துக் கொள்வாளோ என்று சொல்ல 
“இந்த வீட்டுக்கு வந்த பிறகு பெருசா எதுவும் சமைக்கிறதில்ல எல்லாம் பாஸ்ட் புட் தான்” உனக்காதான் சமைத்தேன் என்று சொல்லாமல் சொல்ல 
அவர்களின் பேச்சு வார்த்தையை கவனித்துக் கொண்டிருந்த ப்ரதீபனோ தியாவிடம் கண்ணசைவில் வெளியே செல்லலாம் என்று கூற அவளும் கணவனை பின் தொடர்ந்தாள். 
“ஏங்க நிஜமாவே இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுறாங்களா?” தியா சந்தேகமாக கேக்க 
“ஆமா நான் நாலஞ்சு பொண்ணுங்கள லவ் பண்ணி இருக்கேன். நீயும் லவ்ல பி.எச்.டி பண்ணி இருக்க இவங்க ரெண்டு பேரும் பண்ணுறது லவ்வா இல்லையானு சொல்ல” பிரதீபன் என்னவோ சாதாரணமாகத்தான் சொன்னான் ஆனால் தியாவுக்கு அவன் அவர்களுக்குள் நடந்த சண்டையை மனதில் வைத்து பேசுவதாக தோன்ற கண்ணில் நீர் கோர்த்து நெஞ்சுக்குழி இறுகியது.

Advertisement