Advertisement

அத்தியாயம் 20
“இந்த பேஜ் தான் படி” அமுதன் சொல்ல பிரதீபன் படிக்கலானான்.
சாவி கொடுத்த பொம்மை போல் தான் நான் அவர்களின் வீடு வந்து சேர்ந்தேன். எனக்கு கல்யாணம் எப்படி நடந்ததென்று அறிந்து கொள்ள முயற்சி செய்யவும் பயமாக இருந்தது.  தாலி கட்ட போகும் நேரத்தில் அவர் தலையில் இரத்தம் வழிய மயங்கி விழுவது என் கண்ணுக்குள் இருக்க நான் எப்பொழுது மயங்கி விழுந்தேன் என்று எனக்கு புரியவே இல்லை. அதை யாரிடம் போய் கேட்பது? எனக்கு தாலி காட்டினேன் என்று சொல்பவனிடம் கேட்கவும் பயமாக இருந்தது. 
அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. மயங்கி விழுந்தவர் கண் விழித்திருந்தால் இந்நேரம் என்னை தேடி வந்திருப்பார். எங்கே சென்றார்? ஆபத்தான நிலையில் ஆஸ்பிடலில் இருக்கிறாரோ? எவ்வாறு தெரிந்துக் கொள்வது?  
அந்த வீடோ மாளிகை மாதிரி இருக்க, மனதில் பயம் கவ்விக் கொண்டது. அந்த வீட்டு மருமகளாக எல்லா சடங்கையும் செய்த பின்னே என்னை உள்ளே அழைத்து சென்றார் உங்கப்பா. வீட்டை சுற்றி வேட்டை நாய்களும், அடியாட்களும் நிறைந்திருக்க அது நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறி விடாதிருக்க செய்யப்பட்ட ஏற்பாடு என புரிந்தது. 
அப்பொழுதுதான் நிதர்சனம் உரைத்தது. நான் இன்னாரின் மனைவி. இனி என் வாழ்க்கை இவரோடு தான். என்னால் இந்த வாழக்கையை ஏற்க முடியுமா? நான் காதலித்தவர் என்ன ஆனார்? இவர் எதற்கு என் கழுத்தில் தாலி காட்டினார்? ஒரு வேலை அப்பா பார்த்த மாப்பிள்ளையோ! கல்யாணம் நின்ற கோபத்தில் என்னை தேடி வந்து அவரை அடித்துப் போட்டு நான் மயங்கிய நேரம் கழுத்தில் தாலி கட்டினாரோ! அப்பாக்கு இந்த விஷயம் தெரியுமா? மனக் குழப்பம் நீங்காமல் என்னுள் பல கேள்விகள் எழுந்து வண்ணம் இருந்தது. 
அன்றிரவு எனக்காக கொடுக்கப் பட்ட அறையில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தேன். என் மேல் ஒரு கை ஊடுருவ பயந்து எழுந்து விட்டேன். 
“பயந்திட்டியா? நான் தான் உன் புருஷன்” என்றவர் என் அனுமதியில்லாமல் என்னை ஆளத்துவங்க அவரை தடுக்கும் முயற்சியில் நான் இருந்தேன். என்னதான் தாலி காட்டினாலும் மனதில் ஒருவன் இருக்க இன்னொருவனை உடனே ஏற்றுக் கொள்ள என் மனம் தயாராக இருக்க வில்லை. அதை அவரிடம் சொல்லி புரிய வைக்கலாம் என்று நினைக்க 
“ஏன் டி  இதுவே அவன் தொட்டிருந்தா அப்படியே உருகி கரைஞ்சி இருப்பியே” 
“என்ன சொல்லுறீங்க?” 
“ஒன்னும் தெரியாத பாப்பா…”
ரொம்ப அசிங்கமாகவே விளக்கம் கொடுக்க கத்தி விட்டேன். நான் சங்கரனை காதலிக்க காரணமே அவர் நடத்தைத்தான். இதில் இவர் அசிங்கமாக பேசினால் நான் எப்படி அதை ஏற்றுக் கொள்வது. 
அதை புரிந்துக் கொள்ளாமல் என்னை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தவர் நான் தொய்ந்து விழும் நேரம் என்னை முற்றாக சின்னாபின்னமாகி இருந்தார். 
உடல் காயங்களை விட எங்கள் காதலையும், உறவையும் கொச்சை படுத்தி ஏன் காதலித்தோம் என்று நினைக்கும் அளவிற்கு வார்த்தையால் சொல்லி சொல்லி வலிக்க வதைத்தது என் மனதில் இன்னும் ஆறாத வடுவாகவே இருக்கின்றன. அவை என் மரணத்தில் தான் ஆறும். 
பகலில் அந்த அறையை விட்டு என்னால் எங்கும் செல்ல முடியாத படி சிறை வைக்கப் பட்டேன். நான் மறுக்கும் பொழுதெல்லாம் சங்கரனை சம்பந்தப் படுத்தி நான் அவரை காதலித்ததற்காக உடற்காயங்களோடு என் கற்பும் சூறையாடப்படும். என் இரவுகள் இவ்வாறுதான் இருந்தது. கொடிய நரகம் கூட இவ்வாறு இருந்திருக்காது. 
ஒரு கட்டத்தின் மேல் என் மீதே எனக்கு அருவருப்பாக வர கையை கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தேன். அதற்கும் அவரின் வார்த்தைகள் ரணமாகத்தான் வந்தன. அந்த இடத்தை விட்டு போகவும் முடியாமல், ஒவ்வொரு இரவும் படும் வேதனை தாங்க முடியாமல் சாவும் என்னை நெருங்காமல் என்ன வாழ்க்கை இனிமேல் இதுதான் என்றிருக்கும் பொழுது என்னை சந்திக்க அப்பா வந்தார். 
அவர் தானாக வரவில்லை வரவைக்கப் பட்டிருந்தார். அது என் தற்கொலை முயற்சியால் என்று அறிந்து கொள்ள நேர்ந்தது அவர் சென்ற பின் தான். 
அப்பா நான் அணிந்திருந்த, புடவை, நகைகளை பார்த்து விட்டு நான் வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, பணக்காரனுக்கு வாக்கப் பட்டு இருப்பதாக கருதி கல்யாணத்தை நிறுத்தி அவருக்கு ஏற்படுத்திய தலைகுனிவுக்காகவும், இரண்டு தங்கைகளின் வாழ்க்கையை கேள்விக்கு குறியாக்கியதற்காகவும் சாபமிட்டுவிட்டு சென்று விட்டார். 
“உங்களுக்கு பண்ணதுக்கு ஏற்கனவே தண்டனையை அனுபவித்து கொண்டு தான் இருக்கேன் அப்பா…” என்னால் மனத்தால் மட்டுமே கதறி அழ முடிந்தது. ஆனால் கண்களில் பெருகும் கண்ணீரை என்னால் தடுக்க முடியவில்லை.
“அய்ச்சோ அமுதா… எதுக்கு இப்படி அழுற?  அவரு கெடக்குறாரு விடு, உனக்கென்ன குறைச்சல் நாளுக்கு ஒரு புடவை, நகை உன் வாழ்வு மிக சிறப்பா இருக்கு. நீ அந்த சங்கரனையோ! உங்கப்பா பார்த்த மாப்பிளையோ! கல்யாணம் பண்ணி இருந்தா இந்த வாழ்க கிடைச்சி இருக்குமா? இல்லல…” ரத்னவேல் பொய்யாக அனுதாபப் பட அமுதாவின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக பெருகியது.
“ஆ… அமுதா இன்னொரு தடவ  தற்கொலைக்கு முயற்சி பண்ணினாலோ! என்ன விட்டு, இந்த வீட்டை விட்டு போகலாம்னு நினைத்தாளோ! அந்த எண்ணத்தை கை விடு. ஏன்னா… நீ பண்ணுற ஒவ்வொண்ணுத்துக்கும் உன் குடும்பம் தான் பதில் சொல்லணும். உனக்கு ரெண்டு தங்கச்சிங்க வேற இருக்கிறாங்க இல்ல. அதுங்களுக்கு காதல்னு கண்டவனோடு போய்ட்டானு வச்சிக்க, உன் அப்பா அம்மா நிலைமை என்னாகுறது”
 நான் அவரை திகைத்து விழித்த போது “போகமாட்டாங்கனு சொல்லவரியா? என் பசங்கள விட்டு தூக்கி மும்பாய், கல்கத்தானு வித்துட்டு, எவன் கூடயோ ஓடி போய்ட்டதாக புரளியை கிளப்பி விட்டா உன் அம்மாவும், அப்பாவும் நாண்டுக்கிட்டு சாவங்கள்ல. பாவம் உன்னால எதுக்கு அவங்களுக்கு இப்படியொரு முடிவு. இப்போ நல்ல பொண்டாட்டியா கண்ண தொடச்சிகிட்டு உள்ள போ” 
அந்த நேரம் உங்கப்பா முழு அரக்கனாகவே மாறி இருந்தார். அப்பாவை வரவழைத்தது இதற்குத்தான். என்னை மிரட்ட. அதன் பின் அப்பாவையே அம்மாவையே என் வாழக்கையில் நான் சந்திக்கவில்லை. சந்திக்க முயற்சியும் எடுக்க வில்லை. அவர்களாவது நிம்மதியாக இருக்கட்டும் என்று இந்த வாழ்க்கையை பழகிக் கொண்டேன். 
கீதாராணிக்கு எல்லாமே அண்ணன் என்றாகிப் போக ரத்னவேல் அமுதவள்ளியை காதல் கல்யாணம் செய்தது அவளுக்கு பிடிக்கவில்லை. காரணம் அமுதவள்ளி அண்ணனின் வாழ்க்கையில் வந்த பின் தங்கையோடு நேரம் செலவழிப்பது குறையவே அமுதவள்ளியின் மீது வன்மம் கொண்டாள். 
தான் பத்து மாசம் சுமந்து பெற்ற மகனையே கொடுமை படுத்துபவளுக்கு அண்ணன் மனைவியெல்லாம் சாதாரணம். அண்ணன் வீட்டில் இல்லாத சமயம் வீட்டுக்கு வருபவள் அமுதவள்ளியின் ஏழ்மையையும், அவள் இன்னொருத்தனை காதலித்தவள் என்றும் வார்த்தைகளில் விஷம் தடவி பேசி விட்டு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள் கீதாராணி. 
 
கீதாராணியின் பிறந்தநாளன்று ரத்னவேல் எல்லா வேலைகளையும் முடக்கி விட்டு தங்கையோடு முழுநாளும் கழிக்க, அமுதவள்ளியை திருமணம் செய்தது கீதாவின் பிறந்த நாளக்கிப் போனது அமுதவள்ளி முன் ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவோ என்பது போல் ஆனது அந்நாள். 
கல்யாண நாள் அன்று காலையில் கோவிலுக்கும், வீட்டில் விஷேச பூஜை சினிமா என்னு ரத்னவேல் அமுதாவோடு கிளம்பி விட கீதாவின்  கோபமெல்லாம் அமுதவள்ளியின் மீதுதான் திரும்பும். வருடத்தில் அந்த ஒருநாள் தான் அமுதா வீட்டை விட்டு வெளியே செல்வது. அதுவும் ரத்னவேலோடு. ஆனால் அதற்காக கீதாவிடம் அடிகளும், குத்தீட்டி வார்த்தைகளும் வருடம் முழுவதும் அமுதாவுக்கு பரிசாகக் கிடைக்கும். அதுவும் வயித்துப் பிள்ளைக்காரி என்ற பாரபட்சமில்லாமல். இவைகள் அனைத்தும் ரத்னவேலின் காதுக்கு செல்லாமல் கீதா பார்த்துக்  கொள்வாள். தெரிந்தாலும் ரத்னவேல் கீதாவிடம் கேட்க மாட்டான் என்பது தான் உண்மை. 
உன்னை சுமந்த பொழுது எதற்கு இந்த உயிர்? அவரை போல் ஒரு அரக்கனை ஜனனம் செய்ய வேண்டுமா? என்று தான் தோன்றியது. அதை அழித்து விடத்தான் என் மனம் துடித்தது. இப்படிப்பட்ட கொடூரனின் வாரிசு என் வயிற்றிலா கூடாது என்ற எண்ணம் தான் மேலோங்கியது. ஆனால் என் கையால் உன்னை கொள்ள மட்டும் என் மனம் இடம் தரவில்லை. தனக்கு ஆண் வாரிசுதான் பிறக்கும் என்று அந்த அரக்கன் உன் வரவை வெகு விமர்சையாக கொண்டாடினான். ஆனால் பிறந்தது நீ.  உன்னை வெறுப்பார்கள் என்று நான் எதிர்பார்க்க உன்னை அப்படி தங்கினார்கள் ஏன் என்று எனக்கு புரியவே இல்லை.
நீ வயிற்றில் உதயமான பின் தான் எனக்கு சிறிது சுதந்திரம் கிடைத்தது. கோவிலுக்கு செல்ல அனுமதி அதுவும் நாலஞ்சி அடியாட்களோடு. உன்னை கையில் ஏந்திய போது என் மனம் சந்தோஷமடைந்ததற்கு முதல் காரணம் நீ அவன் போல் அரக்கனாக பிறக்காமல் தேவதையாக பிறந்ததே. 
நீ என் வாழ்க்கையில் வந்த பின் எனக்கு முற்றாக சுதந்திரம் கிடைத்த உணர்வு. உனக்கா வெளியில் செல்ல நேர்ந்தது என் அதிஷ்டமோ? துரதிஷ்டமோ! 
அந்த கீதாவின் வீட்டுக்கும் அழைத்து சென்றார். அப்பொழுதுதான் ரிஷியை முதன் முதலாகப் பார்த்தேன். பார்க்க சரவணன் அண்ணா போல தான் இருந்தான். ஆனால் அந்த வீட்டு இளவரசன் அம்மாவின் வேலைக்காரனாக. 
அவள் எனக்கு பண்ணிய கொடுமைகளை கூட நான் மறந்து விடுவேன். அந்த பிஞ்சுக்கு செய்யும் அநியாயத்தை என்னால் மன்னிக்கவே முடியாது.  சரவணன் அண்ணா எதற்காக இவளிடம் இந்த பாலகனை விட்டு சென்றார் என்று எனக்கு அவர் மேல் தான் கோபம் வந்தது. அவனுக்கு சோறு ஊட்டினேன் என்று என்னை அடித்ததை நீயும் பார்த்து விட்டாய் அன்று  நீ அவளை போட்ட சத்தத்தில் அவள் அடங்கி போனதைக் கண்டு எனக்குள் நிம்மதி பரவியது. நீ அவர்களை அடக்கி விடுவாய் என்ற நிம்மதி.
பெற்ற மகனின் மீது வைக்காத பாசத்தை உன் மீது மட்டும் ஏன் பொழிகிறார்கள் என்றால் நீ அச்சு அசல் உன் பாட்டியை போல் இருக்கின்றாய் என்பதால் மட்டுமே!
நான் உனக்கு இந்த தினக்குறிப்பை விட்டு செல்வதன் நோக்கம் அவர்களை பழிவாங்கவல்ல. துஷ்டனை கண்டால் தூர விலகு. அவர்களிடமிருந்து எவ்வளவு தூரம் போக முடியுமோ! போ… அது உன் திருமணத்தால் தான் முடியுமென்றால் செய். ரிஷியை உனக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசை இருக்கு அவன் சரவண அண்ணாவின் பையன் என்பதால்  சத்தியமாக இந்த ஜென்மத்தில் அது நடக்காது. 
உன் திருமணம் உன் விருப்பப் படிதான் நடக்க வேண்டும். உன் அத்தையின், அப்பாவின் பணத்தில் மயங்கி நீ வழி தவறி எக்காலமும் போகக் கூடாது என்பதற்காகவும், பணத்துக்காகவோ! பதவிக்காகவோ! உன் கல்யாணம் இருக்கக் கூடாது. உன் வாழ்க்கை துணையாக வருபவன் உன்னை முழுவதுமாக புரிந்து நடந்து கொள்பவனாக இருக்க வேண்டும். இதுதான் என் ஆசை. இதற்காத்தத்தான் இந்த தினக்குறிப்பு.
எந்த பெண்ணுக்கும் அமையாத வாழ்க்கைதான் எனக்கு அமைந்தது. இது போல் ஒரு வாழ்க்கை எந்த பெண்ணுக்கும் வேண்டாம். என் மகளுக்கு வேண்டவே வேண்டாம். மனம் ஒத்த தம்பதியர்களாக வாழும் வாழ்க்கையை உனக்கு கிடைக்க பிராத்திக்கிறேன் இத்துடன் உன் அம்மா அமுதவள்ளி.
அத்தோடு அந்த டயரி முடிவடைந்திருந்தது.
“உப்…. இவ்வளவு கொடுமைகளையும் தாங்கிக் கிட்டு மலருக்காக வாழ்ந்திருக்காங்க” அமுதன் 
என்னடா அமுதா பண்ணுறது. அவங்க பாட்டுக்கு பழிவாங்க கூடாதுனு சொல்லிட்டாங்க. இந்த மலர் பழிவாங்குவேன்னு சொல்லுறா” பிரதீபன் அமுதனிடம் யோசனை கேக்க, 
“அவங்க ஆசையை நிறைவேத்தணும்னுதான் அவ ரிஷியை கல்யாணம் பண்ணனும்னு தேடி இருக்கால்ல” அமுதன் கவலையாக சொல்ல 
“ஆமா… இப்போவாச்சும் எல்லாம் புரிஞ்சதே! அந்த சங்கரன் என்ன ஆனார் னு டயரில் இல்லையே! அத அவங்க ஏன் சொல்லாம விட்டாங்க?”
“ஒரே குழப்பமா இருக்கு, அவங்க எப்படி இறந்தாங்க?”
“இந்த எல்லா கேள்விகளுக்கும் மலரிடம் தான் பதில் இருக்கு. உடனே சென்னை போறோம் மிஷன ஸ்டார்ட் பண்ணுறோம்” 
அமுதனும் ப்ரதீபனும் மலர்விழியை சந்திக்க சென்னை செல்ல திட்டமிட மலர்விழியோ சென்னையை நோக்கி பயனைத்துக் கொண்டிருந்தாள்
இங்கு ரத்னவேல் அமுதவள்ளியின் புகைப்படத்தின் முன் அமர்ந்து மதுவருத்திக் கொண்டிருந்தான். இன்று அவர்களின் கல்யாண நாள். 
  
சரவணகுமரன் ரத்னவேலின் பரம எதிரியாகிப் போக அவனை பழிவாங்க கீதா அவன் படிக்கும் காலேஜில் சேர தங்கையை வழி நடத்தினான் ரத்னவேல். மறைந்திருந்து சரவணகுமரன் மற்றும் அவனின் நண்பர்களை பற்றி விசாரித்து தெரிந்து கொள்ளும் போது தான் அவர்களின் குழுவில் இருந்த அமுதவள்ளி அவன் கண்களில் விழுந்தாள். 
கிராமிய மணம் வீசும் அவள் அழகில் அவளை பார்த்த நொடியே காதல் கொண்டான் ரத்னவேல். சரவணகுமரனை பழிவாங்க வந்ததால் அவளை நெருங்க முடியாமல் தூரத்திலிருந்தே பார்த்திருந்தவனுக்கு எல்லோரும் ஒன்றாகவே இருப்பதால் சங்கரன் அமுதா காதல் விவகாரம் தெரியாமலே போனது. அமுதாவும் சங்கரனும் கண்களால் பேசிக் கொண்டது தூரத்திலிருந்த ரத்னவேல் எப்படி அறிந்திருக்க முடியும்? 
அமுதா டயரியில் குறிப்பிட்டது போல் சங்கரன் அவளை தனியாக சந்திக்க முயற்சி செய்யவுமில்லை. எந்நாளும் காலேஜில் சந்தித்து கொள்வதால் முக்கியமான பேச்சு வார்த்தைகள் கடிதம் மூலம் தான் நடைபெறும். அதுவும் நூலகத்தில் குறிப்பிட்ட புத்தகத்தில் ஒருவர் கடிதத்தை வைக்க, மற்றவர் எடுத்துக் கொள்வார். 
இது எதுவுமே அறியாமல் ரத்னவேல் தன் மனதில் அமுதாவின் மீது ஆசையை வளர்த்துக் கொள்ள அவள் திடீரென ஊர்க்கு சென்றதால் அவனுடைய அடியாள் அனுப்பி அங்கே என்ன நடக்கிறது என்று விசாரித்து தகவல் தரும் படி சொல்ல அமுதாவுக்கு திருமணம் என்றதும் எல்லா வேலைகளையும் விட்டு விட்டு அமுதாவின் ஊர் நோக்கி பயணித்தவனுக்கு கிடைத்த தகவல் மணப்பெண்ணை காணவில்லை என்பதே!
இந்த திருமணம் பிடிக்காமல் சென்றிருப்பாள் என்று எண்ணினானே தவிர அமுதா அவளின் காதலனை தேடித்தான் சென்றிருக்கின்றாள் என்று எண்ணவில்லை.
வண்டியை அதிவேகமாக கிளப்பி உடனே சென்னை வந்தவன் ரயில் நிலையத்தில் அமுதாவை தேட தூரத்தில் சங்கரனோடு செல்லும் அவளைக் கண்டு ரத்னவேலின் புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது. 
ரத்னவேலின் மூளை எல்லாவற்றையும் கணக்கிட்டு ஒரு முடிவுக்கு வந்தவன் அவர்களை பின் தொடருமாறு உத்தரவிட்டு வீட்டுக்கு சென்று தனது குடும்ப தாலியோடு புறப்பட்டான். 
அவனது திட்டமோ அமுதாவின் வீட்டில் திருமணம் ஏற்பாடு செய்தாகி விட்டது ஊரிலிருந்து அவளை தேடி வர முன் அவளை தன்னவளாக்கிக் கொள்ள வேண்டும் அது அமுதாவின் விருப்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்ற முடிவோடு தன் அடியாள் கூறிய இடத்துக்கு வந்து சேர்ந்தான்.  
கல்யாண ஏற்பாட்டை பார்த்ததும் காதல் கொண்ட மணம் சுக்குநூறாக சங்கரனின் மேல் கொலை வெறியே வந்தது. அவன் கண்ணசைவில் அடியாள் அடித்ததில் சங்கரன் மயங்கி விழ, அடியாளின் கையிலிருந்த அருவாளை எடுத்து சங்கரனை சரமாரியாக வெட்டி சாய்த்தான். அதை கண்டு அதிர்ச்சியில் அமுதா மயங்கி விழ அமுதாவின் கழுத்தில் அவள் மயங்கிய நிலையிலையே தாலியை கட்டி தன்னவளாக்கிக் கொண்டான்.  
சங்கரனின் சாவை கண்டதால் அமுதா அவனிடம் சண்டை போடுவாள், கண்டிப்பாக அவனோடு சேர்ந்து வாழ மாட்டாள் என்ற அச்சம் மனதில் குடி கொள்ள என்ன செய்வதென்று குழம்பி இருந்தவனை டாக்டர் அழைத்து 
அதிர்ச்சியில் அமுதா சில நியாபகங்களை இழந்து விட்டாள் என்றும், அவை திரும்ப நியாபகத்தில் வரும், சில நேரம் வராமலும் போகலாம் என்றும் கூற கோணலாக புன்னகைத்தான் ரத்னவேல்.
நடப்பதையெல்லாம் அவனுக்கு சாதகமாக இருக்க, இனி அமுதாவோடு தன் வாழக்கையை இணைக்க எந்த தடையும் இல்லை என்ற மிதப்பில்லையே இருந்தவனுக்கு சங்கரனுடனான காதல் உறுத்தியது.
  
இவர்கள் இருவரின் காதலும் இதுவரை தனக்கு தெரியாமல் போனதால் அவர்களுக்குள் எந்த மாதிரி உறவு இருந்திருக்கும் என்று அவனின் உள் மனம் கேள்வி எழுப்ப எந்த கணவனும் செய்ய துணியாத காரியத்தை செய்தான். அதில் அவள் மாசற்றவள் என்று மருத்துவ அறிக்கை அவன் கையில் இருந்தாலும் இன்னொருவனை நினைக்கும் அவள் மனதை வெறுத்தான். அதனாலயே வார்த்தைகளாலும், செய்கைகளாலும் அமுதாவை வதைத்துக் கொண்டிருந்தான் ரத்னவேல்.
“இந்த உலகத்துல நான் நேசிச்ச ஒரே பெண்ணும் நீதான், நான் அதிகமாக வெறுக்கும் ஒரே பெண்ணும் நீதான்” அமுதவள்ளியின் சோகமான புகைப்படத்திடம் உளறிக் கொண்டிருந்தான் ரத்னவேல்.
    

Advertisement