Advertisement

அத்தியாயம் 19
மலர்விழியை தங்களது வீட்டில் எதிர்பார்க்காத அமுதனுக்கு அவளைக் காணக் காண கோபம் பொங்க, அவளை வீட்டார் தாங்கியதில் எரிச்சலுடன் அவர்களின் பேச்சில் சேராமல் ஒதுங்கி இருந்தான். 
அவளை தனியாக பிடித்துக் கொண்டு நன்றாக நாலு கேள்வி கேக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் இருந்தவனுக்கு அனைவரும் மலர்விழியை சூழ்ந்தவாறே இருக்க, சந்தர்ப்பம் தானாக அமையாது என்று புரியவே அதை தானே ஏற்படுத்திக் கொண்டான். 
அனைவரும் உறங்க சென்ற நேரம் பார்த்து மலர்விழியின் அறையினுள் புகுந்தான் அமுதன். மலர்விழி நன்றாக உறங்கி இருப்பாள் அவளின் வாயை பொத்தி எழுப்பி மிரட்டலாம் என்று உள்ளே சென்றவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 
அறையில் மின் குமிழ் எரிந்துக் கொண்டிருக்க, அவளைக் காணவில்லை. இந்த நேரத்தில் எங்கே சென்றிருப்பாள்? என்று யோசனையாகவே இருந்தவனுக்கு கட்டிலின் மீது அவளின் துணிப்பை இருக்கவே அருகில் செல்ல குளியலறையில் நீர் விழும் சத்தம் கேட்டது. 
“ஓஹ்… உள்ளேதான் இருக்கியா? வா வா உனக்கு இன்னைக்கி இருக்கு” பொறுமியவாறே குளியலறை பக்கம் பார்த்து கட்டிலில் அமர ஏதோ ஒரு புத்தகத்தின் மீது அமர்ந்து விட்ட உணர்வில் அதை கையில் எடுத்தவன் தூக்கிப் போட முனைய,  அது அமுதவள்ளியின் டயரி என்று புரியவே! 
“போற போற இடத்துக்கெல்லாம் இத சுமந்துக் கொண்டுதான் போறாளா? அப்படி என்ன தான் இருக்கு இதுல?” அதை படிக்கும் ஆவல் எழ, தந்தை சொன்னதும் நியாபகத்தில் வந்தது. 
“அவ அம்மா அவளுக்கு ஏதோ எழுதி இருப்பாங்க அத நான் படிக்கிறது தப்பு” தனக்கு தானே! சொல்லிக் கொண்டவன் அதை மேசையின் மீது வைக்க முனைய கீழே விழுந்து திறந்துக் கொண்டது. 
குனிந்து கையில் அடுத்தவனின் பார்வை அப்பக்கத்தில் விழ கண்கள் தானாகவே அதை படித்தன. திடுக்கிட்டவன் அடுத்த பக்கத்தை புரட்ட குளியலறையில் கதவு திறக்கும் சத்தம் கேட்டு டி ஷர்ட்டில் டயரியை மறைத்துக் கொண்டவன். மலர்விழியின் புறம் திரும்ப 
“இங்க என்ன பண்ணுற அமுதா” கண்களை விரித்து மலர் கேட்க, 
“ஆ… குட் நைட் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்” அலட்டலில்லாமல் பதில் சொன்னவனை புரியாத பார்வை பார்த்தவள் 
“என்ன விஷயம்?” நேரடியாகவே கேக்க 
அவளை மிரட்டி துரத்த வந்தவனோ! டயரியை கொஞ்சம் படித்ததில் மனம் மாறி இருக்க, “குட் நைட் சொல்லத்தான் வந்தேன். சொல்லிட்டேன். நல்லா இழுத்து போர்த்திக் கிட்டு தூங்கு” என்று அவள் அறையை விட்டு வெளியேறி தனதறைக்கு வந்தவன் நிதானமாக டயரியை படிக்கலானான். 
படிக்கப் படிக்க, ரத்னவேலையும், கீதாராணியையும் கொன்று விடும் கோபத்தில் கனன்றவன். காலையில் ப்ரதீபனோடு பேச வேண்டும் என்ற முடிவோடு தூங்கி, காலையிலையே அவனுக்கு அலைபேசி மூலம் அழைப்பு விடுத்து தோட்டத்துக்கு வருமாறு சொல்ல வேண்டா வெறுப்பாக எழுந்து வந்த ப்ரதீபனுக்கும், அவனோடு பேச வந்த அமுதனின் காதிலும் மலர்விழி சொன்னவைகள் விழ பேசாமலே இருவரும் திரும்பி நடந்தனர். 
அதன் பின் மலர்விழி சென்னை திரும்புவதை அறிந்த அமுதன் ப்ரதீபனை அழைக்க அவனோ அவனை வீட்டுக்கு வருமாறு கூற, வந்தவனோ! அவன் கையில் டயரியை கொடுத்து படிக்கும் படி சொல்ல ப்ரதீபனும் அதை படிக்க ஆரம்பித்தான்.
என் அன்பு மகளுக்கு ஆயிரம் முத்தங்களுடன் உன் அம்மா அமுதவள்ளி எழுதுவது.  இதை நீ படிக்கின்றாய் என்றால் நிச்சயமாக நான் உன்னோடு இல்லை என்பதே உண்மை. ஏன் இந்த உலகத்தை விட்டே சென்று இருப்பேன். உன்னை தனியாக விட்டு சென்றமைக்கு என்னை மன்னித்து விடு. மரணம் கூட என்னை நெருங்க முடியாமல் தடுத்தது என்னுள் இருந்த கேள்விகளே! ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்தேன். உன்னை சுமப்பதை பாவமாக கருதினேன். ஆனால் என்று உன்னை கையில் ஏந்தினேனோ! அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. என் தினக் குறிப்பை இரண்டு நோக்கத்துக்காக உன்னிடம் விட்டுச் செல்கின்றேன்.
நான் வெளியூர்ல இருந்து இந்த ஊருக்கு படிக்க வந்தவ. அப்பா ரொம்ப கட்டுப்பாடானவர். அம்மா வெகுளி. அப்பாவே கதின்னு இருக்குறவங்க. சின்ன வயசுல இருந்தே அப்பா அம்மாவ அடிமையா நடத்துறதா ஒரு எண்ணம். அதனாலயே நல்லா படிச்சி நல்ல நிலைமைக்கு வந்து என் சொந்த காலிலேயே நிற்க வேண்டும் என்று ஆசைப் பட்டேன். 
அப்படி கனவுகளோடு வந்தாலும் வயசுக் கோளாறு காதல்ல விழுந்துட்டேன். அந்த வயசுல நம்மள விட்டா ஆளில்ல, நாம பண்ணுறதெல்லாம்  சரியாகத்தான் தோணும். யாரவேனாலும் எதிர்க்கலாம்னு தோணும். 
நான் காதலிச்சவரும் ரொம்ப நல்லவர் தான். என்ன ஒன்னு வேற ஜாதி. காதல் தான் எதையுமே பார்க்காம மனசுக்குள் புகுந்திடுமே! நாங்க ரெண்டு பேரும் காதலிச்சது நெருங்கிய எங்க நண்பர்களுக்கு மட்டும் தான் தெரியும். அப்படி இருக்கும் பொழுது அப்பாக்கு உடம்புக்கு முடியல சீக்கிரம்வானு அம்மா அழுது கிட்டே போன் பண்ணவும் பதறியடிச்சு ஊருக்கு போனா எனக்கு கல்யாண ஏற்பாடு நடந்துக் கொண்டிருந்தது. 
அரசல் புரசலா அப்பா காதுக்கு விஷயம் போய் அவர் பொய் சொல்லி என்ன வரவழைச்சு இருக்கிறாருனு புரிஞ்சது.  எல்லாம் உங்க இஷ்டம்னு பா… னு சொல்லி அமைதியாகவே இருந்துட்டேன். தான் சந்தேகப்பட்டது தப்பு என் பொண்ணு வழி தவற மாட்டான்னு அவர் நினைக்கும் அளவுக்கு நடந்துக் கொண்டேன். 
யாருக்கும் தெரியாம சங்கரனுக்கு போன் பண்ணி ஊருல கல்யாணம் நடக்க ஏற்பாடு நடக்குறதையும், கல்யாணமன்று  காலைல நான் ஊறவிட்டு வந்துடுவேன் என்றும் வந்து இறங்கிய உடனே நாம கல்யாணம் பண்ணனும் என்று சொல்லி வைத்தேன். 
பெத்தவங்கள ஏமாத்துறோம் என்றோ!, நான் போனா ஊர் மக்கள் மத்தியில் அவங்களுக்கு ஏற்படும் தலைகுனிவை பத்தியோ!  அவங்க படும் வேதனையை பத்தியோ! எனக்கு பிறகு இருக்கும் ரெண்டு தங்கைகளோட வாழ்க்கையை பத்தியோ! கொஞ்சம் கூட நினைக்காம, கவலைப் படாம என் சந்தோசம் தான் முக்கியம்னு கல்யாணமன்று காலைல வீட்டை விட்டு வெளியேறினேன். நான் பண்ண போறதுக்கு கடவுள் காலம் பூரா  தண்டனையா அழ வைக்க போறான்னு தெரியாம சந்தோசமாக கல்யாணக் கனவுகளோடும், சங்கரன் கூட வாழப் போற வாழ்க்கையை நினச்சு சென்னையை நோக்கி ரயில் பயணம் செஞ்சேன்.  
காலேஜ் விடுமுறை எங்குறதால அவர் நண்பர்களும், என் தோழிகளும் ஊருக்கு போய் இருந்தாங்க, இந்த ஊருல இருக்குறவங்க கூட சுற்றுலான்னு கிளம்பிப் போனதா அவர்தான் சொன்னாரு. யாரும் தேவ இல்ல நாம ரெண்டு பேரும் மட்டும் போதும்னு நான்  சொல்லிட்டேன். 
அப்பொறம் ஊருக்கு ஒதுக்கு புரத்துல உள்ள ஒரு கோவில்ல எங்க கல்யாணம் நடக்க ஏற்பாடு பண்ணிட்டதாக என்ன கூட்டிட்டு போனாரு. அந்த இடத்துல ஒரு ஈ, காக்கா இல்ல. உள்ளுக்குள்ள பயம் வந்திருச்சு. அவர் கைய இறுக்கி புடிச்சிக் கிட்டேன். என் வாழ்க்கைல இனி எல்லாமே அவர் தான் என்ற நிம்மதி வந்தது.
அவசரத்துல இந்த கோவில்லதான் ஏற்பாடு பண்ண முடிஞ்சதாகவும், விசேஷமான நாட்கள்ல மட்டும் தான் கூட்டம் கூடும் என்று அவர் சொல்ல நானும் சரினு தலை ஆட்டினேன். 
கல்யாண ஏற்பாடும் எல்லாம் நடந்து கொண்டிருக்க தாலி காட்டும் நேரத்துல எங்கிருந்தோ வந்த ரவ்டிங்க அவர் தலைல கட்டையால் அடிக்கவும் இரத்தம் வழிய மயங்கி விழுந்துட்டாரு. அப்பொறம் என்ன நடந்ததுன்னு தெரியல நானும் மயங்கி விழுந்துட்டேன் போல கண்ண முழிச்சு பார்த்தா ஆஸ்பிடல்ல இருந்தேன். என் கழுத்துல  தாலி இருந்தது. எனக்கு எப்போ கல்யாணம் ஆச்சு? அவர் தாலி எப்போ கட்டினார்னு ஒரே குழப்பம். நான் கண்ணு முழிச்சது தெரியாம ரெண்டு நர்ஸ் பேசுறது என் காதுல விழுந்தது. 
“பணக்காரன்னா என்னவேனாலும் பண்ணுவானா? இந்த டாக்டர் வேற காச வாங்கிட்டு இப்படியா பண்ணுவான்” ஒருத்தி கத்த
“மெதுவா பேசுடி. கல்யாண பொண்ணையே தூக்கி அவ கர்ப்பமா இருக்காளா, கன்னித்தன்மையோடு இருக்காளான்னு, செக் பண்ணுறவன் சரியான சைக்கோவா தான் இருப்பான். நீ பேசுறது யார் காதுலயாவது விழுந்தது என்ன நடக்குமோ… ஈஸ்வரா…”
“மனசு ஆரலடி.. ஒரு பொண்ணோட  கல்யாணத்த நிறுத்தி அந்த பொண்ண கல்யாணம் பண்ணிட்டு அவ சுத்தமானவளானு பாக்குறதெல்லாம்… நினைக்கவே உள்ளுக்குள்ள எரியுது. இவனையெல்லாம் என்ன செய்யலாம்?”
“கத்தாதே… இந்த பொண்ண பார்த்தா பாவமா தான் இருக்கு, ஆனா அந்தாளு செக் பண்ண சொன்னது இந்த பொண்ணுக்கு தெரியாதே! அதனால் அவ சந்தோசமா இருப்பா.. கடவுளை வேண்டிக்குவோம்” 
அவர்கள் பேசிவிட்டு போன பிறகு. அவங்க பேசினது கிரகிக்கவே எனக்கு கொஞ்சம் நேரம் எடுத்தது. சங்கரன் கண்டிப்பா அப்படி பண்ணி இருக்க மாட்டான்னு புரிஞ்சது. அப்போ யாரு? யாரு என் கழுத்துல தாலி கட்டினது. என் கல்யாணம் எப்படி நடந்தது. மனக்குழப்பத்துலயே எழுந்தமர்ந்து தாலியை கையில் ஏந்தி அதையே வெறித்தவாறே இருக்க, உள்ளே நுழைந்தான் ரத்னவேல்.
வருபவனை அமுதவள்ளிக்கு  எங்கேயும் பார்த்ததா நியாபகம் இல்லை. தன்னையே புன்னகை முகமாக  பார்த்தவாறே வரவும் 
“நீங்க யாரு?” 
“உன் புருஷன் மா….”
“புருஷனா? அவரு எங்க?” அமுதவள்ளி நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் யோசனையாக கேக்க அவளின் கழுத்தை இறுக்கி இருந்தான் ரத்னவேல். 
“ஏய் நல்ல கேட்டுக்க, நான்தான் உன் புருஷன், நீ தான் என் பொண்டாட்டி. நடுவுல எவனாச்சும் வந்தான் கொன்னுடுவேன். புரிஞ்சதா?”
மூச்சு விட முடியாமல் திமிறிய அமுதவள்ளி ரத்னவேல் கழுத்தில் வைத்திருந்த கைக்கு அடிக்க பிடியை இறுக்கியவன் கையை எடுக்க அமுதவள்ளி இரும ஆரம்பித்தாள். 
தன் கழுத்தை இறுக்கியவன் இவனா எனும் விதமாக கனிவாக பேசி தண்ணீரையும் புகட்டியவன், அவளின் முதுகையும் நீவிவிட தான் ஏதோ கெட்ட கனவு காண்பதாகவே எண்ணலானாள் அமுதவள்ளி. 
இது கனவல்ல நிஜம் என்பது போல் புயலாக நுழைந்த கீதாராணி அமுதவள்ளியின் கன்னத்தில் மாறி மாறி அறைய கன்னங்களை பிடித்தவாறு திகைத்து நின்றாள் அவள். 
“கீதா விடு விடு என்ன பண்ணுற?” கீதாவின் கையை பிடித்து ரத்னவேல் இழுக்க, 
“யாருனா…. இவ இன்னைக்கு என் பொறந்தநாள் உன் கூட இருக்கணும்னு என்னவெல்லாமோ பிளான் பண்ணா? நீ எல்லாத்தையும் விட்டுட்டு இவ பின்னாடி அலைஞ்சுக்கிட்டு இருக்க, உனக்கு பொண்ணுக தான் வேணும்னா ஆயிரம் பேர நான் கொண்டு வந்து நிறுத்துறேன். கண்டவ பின்னாடியெல்லாம் எதுக்கு அலையுற” தன் அண்ணனின் தோள் சாய்ந்து செல்லம் கொஞ்ச 
“கீதா கீத்துமா… அண்ணனுக்கு இவளைத்தான் பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்க கிட்டேன்” ரத்னவேல் தங்கையின் முகத்தை நேருக்கு நேராக பார்த்து சொல்ல,
அவன் சொல்ல விளைவதை புரிந்து கொள்ளாதவளோ “என்னண்ணே சொல்லுற? கல்யாணமா? யாரக் கேட்டு பண்ண? இவ தகுதி என்ன தராதரம் என்ன? அரசியல்ல காலடி எடுத்து வைக்க போறியே உன் கல்யாணம் பெரிய இடத்துல பண்ணி உன் பின்புலத்தை பக்கபலமாக்கணும்னு நினச்சேன். உனக்கு இவதான் வேணும்னா வச்சிக்க வேண்டியது தானே எதுக்கு கல்யாணம் பண்ண?”
“என்ன பேசுற கீதா? அந்த சரவணனை தூக்கிப் போட்டியே அதற்கு பிறகும் உன்ன இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொன்னேன். இப்போ மட்டுமில்ல எப்போ கேட்டாலும் அவனை தவிர எந்த ஆணுக்கும் உன் வாழ்க்கைல இடமில்லன்னு சொல்லிட்ட. அது நீ அவன் மேல வைத்த காதலாலையோ! அவனை பழிவாங்க துடிக்கும் வன்மத்தாளையோ! இல்ல. நீ ஒரு பொண்ணு என்கிறதால மட்டும் தான். என் உடம்புளையும் ஓடுறது உன் உடம்புல ஓடுற ரத்தம் தான் எனக்கும் இவ ஒருத்திதான் புரிஞ்சிக்க”
அண்ணன் தங்கை இருவரின் சம்பாஷனையும் காதில் விழ மேலும், மேலும் அதிர்ச்சியடைந்த அமுதவள்ளி  அமர்ந்திருக்க அப்பொழுதுதான் கீதாராணியை நன்கு கவனித்தாள். அவள் தங்கள் காலேஜில் படிக்கும் கீதா…. சங்கரனின் நண்பன் சரவணகுமரனின் காதலியாக இருந்து அவனை ஏமாற்றியவள் காலேஜில் அமைதியே உருவமாக சுடிதாரில் வளம் வருபவள் மேற்கத்திய உடையில்…. அடையாளம் காண்பது கொஞ்சம் கடினம் தான். சரவணனின் வாழக்கையில் என்ன நடந்தது, வழக்கின் பின் சரவணனும் காணாமல் போக,  கீதாவும் காணாமல் போனாள். காணாமல் போய் இருந்தவள் இங்கு என்ன செய்கிறாள்? இவன் யார்? அமுதவள்ளி சிந்தனையில் விழ அடுத்து அவர்கள் பேசியதில் முற்றாக உடைந்து போனாள். 
அமுதவள்ளியை அடையாளம் கண்டு கொண்ட கீதா “சே உனக்கு நான் சொல்ல வருவது புரியல…. இவ அந்த சரவணனோட பிரெண்டு ஆளு. இவ போய் எங்க வீட்டு வாரிசை சுமப்பதா… அனுபவிச்சிட்டு தூக்கிப் போடு” ஏதோ மறுசுழற்சி பண்ண முடியாத குப்பையை  போல் சொல்ல 
தங்கை இலைமறைகாயாய் சொல்ல வருவதை புரிந்துக் கொண்ட ரத்னவேல் “அப்படி ஏதாவது நடந்திருந்தா இவள கொன்னு இருப்பேன். எல்லா டெஸ்ட்டும் எடுத்தாச்சு” தங்கையை சமாதானப் படுத்தவென தான் சொன்னது காலம் பூராக ஒன்றாக வாழப் போகும் மனைவியின் மனதை குத்திக் கிழித்திருக்கும் என்பதை கவனிக்க தவறினான் ரத்னவேல். 
“அடப் பாவிங்களா?” டயரியை மூடிய பிரதீபன் அதிர்ச்சியடைந்து வாய் விட்டே சொல்ல 
“இதை படிக்கும் பொழுது மலர் எப்படி உணர்ந்தாளோனு நினைக்கும் பொழுது ரொம்ப கஷ்டமா இருக்கு” அமுதன் கவலையாக சொல்ல 
“ஆமா… ரிஷி அவங்கள பத்தி சொன்னதை வச்சி பார்த்தா அமைதியானவங்க, மலர்மேல ரொம்ப பாசமா இருப்பாங்கன்னு சொன்னான். என்னால ஒரு விசயத்த புரிஞ்சிக்க முடியல” பிரதீபன் ஆள்காட்டி விரலை நாடியில் தேய்த்தவாறே சொல்ல 
“என்னடா…”
“நியாயமா பார்த்தா அவங்க மலர வெறுத்து இருக்கணும் முதல்ல வெறுத்தவங்க தன் பொண்ணுன்னு, தன் ரெத்தம்னு பாசம் வைத்திருக்கலாம். அங்க இருந்து தப்பிச்சு போக ஏன் நினைக்கல? இன்னொன்னு இந்த டயரிய எழுதி மலர பழிவாங்க சொல்லுறாங்களோ!” 
“முழுசா படி…”
“சங்கரன் என்ன ஆனார்? மலர் உங்க அப்பாகிட்ட அவர்தான் அப்பான்னு சொன்னா… அப்பான்னா அவரை தேடுறதுல ஒரு நியாயம் இருக்கு இப்போ எதுக்கு தேடுறா? எனக்கென்னமோ இவ்வளவும் பண்ண ரத்னவேல் சங்கரனை போட்டிருப்பான்னு தோணுது. நீ என்ன நினைக்கிற?” தன் சந்தேகங்களை அடுக்கியவன் அமுதனை ஏறிட 
“எனக்கும் அப்படித்தான் தோணுது” அமுதனும் ஒப்புக்கொள்ள 
“ஆமா நீதான் நயிட்டே டயரிய ஆட்டைய போட்டியே! அப்போ மலர் உங்கப்பா கிட்ட காட்டின டயரி?” அதி முக்கியமான சந்தேகத்தை முன் வைக்க, 
“ம்ம்… ஏன் இன்னொரு டயரி இருக்கக் கூடாது. இவனுங்க பண்ணதுக்கு ஒவ்வொருநாளும் எழுதி இருந்தா… அவங்க சாகும் போது மலருக்கு எத்தனை வயசோ அத்தனை டயரி இருந்திருக்கணும்” 
“மெய்பி அவங்களுக்கு டயரி எழுதும் பழக்கம் இருக்கலாம். உங்கப்பா மலர் டயரிய காட்டின பிறகுதான் வாய தொறந்தாரு. ஆனா இந்த ஒரு டயரிதான் மலருக்காக விட்டு சென்று இருப்பாங்க. இங்க வரும் பொழுதே சரவணனிடம் டயரிய காட்ட நேரிட்டா இந்த டயரிய காட்டாம அவங்க பழைய டயரிய காட்ட நினச்சு கொண்டு வந்திருக்கலாம்” பிரதீபன் சரியாக கணித்து சொல்ல 
“கண்டிப்பா… அவ எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணுறவ. பலியெடுக்க போறான்னு சொல்லிக்கிட்டு இருக்காளே! என்ன பிளான் பண்ணி இருக்கானு புரியல” 
“அதான் உன்ன கல்யாணம் பண்ணி அவங்கப்பன் முகத்துல கரிய பூசப் போறான்னு சொன்னாளே!” ப்ரீத்தீபன் வாய் மூடி சிரிக்க, 
அவனை பொருட்படுத்தாது “பி சீரியஸ்… அதான் அவங்கப்பன் பேச்சையும், அத்த பேச்சையும் ஒட்டுக் கேக்குறாளே! என்ன பண்ண போறான்னு கேளு. ஐம் இன்” தான் முற்றாக மலர்விழிக்கு உதவுவதாக அமுதன் கையை தூக்கி சொல்ல 
“ஐம் ஆல்சோ இன் யா…” ப்ரதீபனும் கையை தூக்கியவாறு “டேய் டயரிய முழுசா படிக்க விடுடா… சும்மா சும்மா டிஸ்டர்ப் பண்ணிக்க கிட்டு” 
“யாரு நான்…” என்றவன் சுற்றும் முற்றும் பார்க்க 
“என்னடா தேடுற?” ப்ரதீபனும் தேட 
“உன்ன எதால அடிக்கலாம்னு தேடுறேன்” தீவிரமான முகபாவத்தோடு சொல்ல 
“இன்னொரு ரவுண்டா… என் உடம்பு தாங்காதுடா…” பிரதீபன் பயந்தவாறே நடிக்க கதவு தட்டப் படும் ஓசையில் இருவரும் நிமிர்ந்து அமர்ந்தனர். 
இருவருக்கும் அருந்த குளிர்பானத்தோடு உள்ளே நுழைந்த தியா இருவரையும் மாறி மாறிப் பார்க்க, புன்னகை முகமாக நின்றிருந்தனர் இருவரும்.
“இவங்க ரெண்டு பேருடைய முழியும் சரியில்லையே! ஏதோ பண்ண கூடாததை பண்ண போறாங்கன்னு மனசு அடிக்குது. கடவுளே எந்த ஆபத்தும் வராம நீதான் எங்க குடும்பத்தை காப்பாத்தணும்” உடனடியாக கடவுளுக்கு ஒரு வேண்டுதலை வைத்தவள் புன்னகைத்தவாறே இருவருக்கும் பானத்தை பரிமாற இருவரும் அமைதியாகவே பெற்றுக் கொண்டனர். 
“என்ன பேபி டால் முகம் அப்படி ஜொலிக்குது என்ன விஷயம்?” இயல்பாக இருப்பது போல் பிரதீபன் கேட்க, அவன் உடல் மொழியே சொன்னது அவன் இயல்பாக இல்லையென்று. 
“ஸ்ரீராமோடு இருந்தேங்க… சரியா ஒன் ஹவர்ல வர சொன்னீங்கள்ல, அதான் வந்தேன். வேறேதாவது வேணுமா?” தன் மனதில் உள்ள சங்கடத்தை மறைக்க பெரும் பாடுபட்டவாறே தியா 
பிரதீபன் மனைவியை சைட்டடித்துக் கொண்டிருக்க “ஒன்னும் வேணாம் தியா” அமுதன் தான் முந்திக் கொண்டு சொன்னான். அவன் பார்வையோ நீ கிளம்பு என்றிருக்க அமுதனை முறைத்தான் பிரதீபன். 
காலை உணவையும் அங்கேயே வரவழைத்தவள் இருவரும் உண்ணும் வரை காத்திருந்து அனைத்தையும் எடுத்துக் கொண்டு தியா  வெளியேற அவர்களும் இயல்பு நிலையை அடைந்திருந்தார். 
“புரட்டு புரட்டு சீக்கிரம் படி அமுதன் அவசர படுத்த பிரதீபன் விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தான். 

Advertisement