Advertisement

அத்தியாயம் 17
தியா படபடவென பேசினாலும் கணவனுக்கும் தனக்குமான பிரச்சினையை மற்றவர்கள் அறிந்துக் கொள்ள விரும்பாமல் அனைவரின் முன்பும் கணவனோடு பேசாமல் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தாள். 
ஸ்ரீராம் தூங்கி வாழியவே அவனை தூங்க வைக்கவென உள்ளே வந்தவள் தூங்க வைத்து விட்டு வெளியே வர பார்வதி பாட்டி, திலகா சரவணகுமரன், சிவரஞ்சனி, அகல்யா என அனைவரும் தூங்க சென்றிருக்க கணவனை பார்த்தவாறே வீட்டுக்குள் வந்தாள். 
அவள் எண்ணமெல்லாம் கணவன் தன்னை பின் தொடர்ந்து வந்து விடுவான் என்றிருக்க அவள் வந்து பதினைந்து நிமிடங்கள் கழித்தும் அவன் வந்த பாடில்லை. பொறுமையை இழந்தவளாக அறையில் நடை பயின்றாள் தியா.
இங்கே ப்ரதீபனோ! ரிஷியோடு அமர்ந்து மலர்விழியுடன் கதையடித்துக் கொண்டிருந்தான். 
“இவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து தப்பி வந்திருக்க, அந்தாள ஒண்ணுமே பண்ண தோணாம எப்படி நீ அமைதியா இருக்க” ஆதங்கமாக மலர்விழி கேக்க 
புன்னகைத்தவாறே “எதிர்த்து போராடினாலும் அவங்க என் அம்மாவும், மாமாவும் அதான் ஒதுங்கிப் போய்டலாம்னு நினச்சேன்” ரிஷி சொல்ல 
“சரி நீ ஒதுங்கியே இரு” என்ற மலர்விழி மெளனமாக 
“நீ ஏதாவது செய்ய போகிறாயா? இந்த அத்தானுக்காக பழிவாங்க கிளம்பிட்டாயா?” குறும்பாக ரிஷி கேட்க 
“இருடா உன் பொண்டாட்டிக்கு கிட்ட பத்தி வைக்கிறேன்” 
“அம்மா தாயே அந்த ராட்சசி கிட்ட மட்டும் என்ன கோர்த்து விடாத. பூரிக் கட்டையாலையே அடிப்பா”  ரிஷி வலிப்பது போல் நடித்தவாறே சொல்ல பின்னாலிருந்து அவனின் காதை திருகியிருந்தாள் கயல்விழி.
“நான் ராட்சசியா? உள்ள வாங்க வச்சிக்கிறேன்” 
“செல்ல ராட்சசி டி” என்று கயலை பார்த்து கூறிய ரிஷி மலர்விழியை பார்த்து “நான் சொன்னேனே உள்ள போய் கவனிக்கிறாளாம்” என்றவன் மீண்டும் வலி தாங்க முடியாமல் தவிப்பது போல் நடிக்க மலர்விழிக்கு ரிஷி சின்ன வயதில் நடுநடுங்கி நின்ற தோற்றம் கண்ணில் வர கண்ணில் நீர் கோர்த்தது. 
“ஏய் மலர் எதுக்கு அழுகை” ப்ரதீபனும், ரிஷியும் ஒன்றாகவே பதற தூரத்தே இவர்களை பார்த்திருந்த அமுதன் பல்கலைக் கடித்தான். 
“சின்ன வயசுல எவ்வளவு பாடு பட்டிருப்ப, எவ்வளவு வலிச்சிருக்கும். உன்ன நல்லா பார்த்துக்க முடியலன்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க. எல்லாத்துக்கும் சரியா உனக்கு நல்ல மனைவி அமைஞ்சிருக்கா” என்று கயல்விழியின் கையை பிடிக்க மலர்விழியின் கண்களை துடைத்தவாறே 
“பழசெல்லாம் எதுக்கு மலர் வேணாமே” என்றாள் கயல்விழி. 
அவள் எண்ணமெல்லாம் பழங்கதையை கிளறுவதால் தன் கணவனின் மனம் காயப்படும் என்பதே! 
“ஆமா அத்த அம்மாக்கு தெரியாம எனக்கு ஊட்டிக் கூட விடுவாங்க. அம்மா பார்த்து விட்டு ஒருநாள் அத்தையின் கன்னத்திலையே அறைஞ்சாங்க. அது என்னால மறக்கவே முடியல. இருந்தாலும் அம்மாக்கு தெரியாம என்ன குளிப்பாட்டி, சோறூட்டி, தூங்க கூட வைப்பாங்க”
“ஆமா நாம வேறு வீட்டுல இருக்குறதால உன்ன சரியா பார்த்துக்கொள்ள முடியவில்லையென்று சொல்லிக் கொண்டே இருப்பாங்க” அன்னையின் நினைவில் மலர்விழி.
“சரி வாங்க போய் தூங்கலாம்” ரிஷியின் கையை பிடித்தவாறே கயல் மலர்விழியை பார்த்து சொல்ல 
“பாத்தியா உள்ள கூட்டிட்டு போய் என்ன பொளக்க போறா” எழுந்தவாறே ரிஷி கிண்டலடிக்க 
“வாய் மேலையே போடு கயல்” என்றாள் மலர்விழி. 
“பாருடா.. ஒன்னு கூடிட்டாங்க” பிரதீபன் ரிஷியை பார்த்து சொல்ல 
“அது சரி உன் பொண்டாட்டி எங்க?” மலர்விழி ப்ரதீபனை நோக்க 
“அந்த கும்பகர்ணி இந்நேரம் குறட்டை விட்டுக் கொண்டு இருப்பாள்” என்றாள் கயல். 
“அவ மட்டும் தூங்கி இருக்கட்டும் அவளுக்கு இருக்கு இன்னைக்கி” மனதில் குமைந்தவாறே அனைவருக்கும் இரவு வணக்கத்தை கூறிக் கொண்டு விடைப் பெற்றான் பிரதீபன்.  
இத்தனை மாதங்கள் கடந்த நிலையில் மனைவியை நிழல் உருவமாய் பார்த்து ரசித்தவன் இன்று அவள் கையால் உணவையும் அருந்திய பின் அவள் தன் அருகில், அணைப்பில் வேண்டும் என்று உள்ளம் துடிக்க கதையடித்ததில் தியா வீட்டுக்குள் செல்வதைக் கண்டாலும் உடனே கழன்று வர முடியாது என்பதால் அமர்ந்திருந்த பிரதீபன் கயல் சொன்னதில் கடுப்பாகவே வீட்டையடைந்தான். 
மனைவியின் மனம் மாறி தன்பக்கம் சாய்வது புரிந்த பின் தான் அவளருகில் அமர்ந்து அவள் கையால் உணவருந்தினான். அவள் ஒரு வார்த்தையாவது பேசாதது கோபத்தை மூட்டியிருக்க, அவள் மட்டும் தூங்கிருந்தால் அவள் முகத்திலையே முழிக்க மாட்டேன் என்று பொறுமியவாறே அறைக் கதவை திறக்க கும்மிருட்டில் மூழ்கியிருந்தது அறை. 
“தூங்கிட்டாளா?” கோபமாக மின்விளக்கை எரிய விட தியா தாவி வந்து அவனை அணைத்திருந்தாள். சற்றும் எதிர்பார்க்காத தருணத்தில் மனைவி அணைத்ததில் தடுமாறியவன் கோபம் பறந்தோட அவளை இறுக அணைத்து தன்னுள் இறுக்கிக் கொள்ள 
“விடுங்க என்ன, விடுங்க தொடாதீங்க” என்றவாறே கணவனை அடிக்க ஆரம்பித்தாள் தியா.
“ஏன் டி இப்படி பண்ணுற? என்றவன் மீண்டும் அவளை இழுத்தணைக்க 
“பேசாதீங்க.. ஏதோ கோபத்துல, அறியாமைல ஒரு வார்த்த சொல்லிட்டேன்னு என்ன பார்க்கவே வராம ஒதுக்கி வச்சிட்டீங்கல்ல. நான் தான் புரியாம பேசுறேன்னு உங்களுக்கு தெரியும்ல புரிய வைக்காம ஒதுக்கி வைக்கிறீங்க. இப்போ கூட நானா வரலைனா நீங்க என் கிட்ட பேசி இருக்க மாட்டீங்கள்ல” என்றவாறே அவனை தள்ளிவிட 
அவள் சொல்வதெல்லாம் முற்றிலும் உண்மை. அவளுக்கு தான் உண்மை தெரியாதே பேசி புரியவைக்காமல் இப்படியா ஓடி ஒளியனும். அவள் மனது அறிந்த பின்னும் அவளிடம் பேசாமல் அவளாகவே வர வேண்டும் என்ற ஈகோ, அவள் மனநிலையை புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொண்ட தன் மீதே கோபம் வந்தது. அவளை சமாதனப் படுத்தும் வழி தெரியாமல் அவளை பார்த்திருக்க 
கண்களில் நீர் கோர்த்தவாறே “இப்போ கூட என்ன சமாதானப் படுத்தணும்னு நினைக்க மாட்டீங்கல்ல, அந்த மலர் கண்கலங்கினா மட்டும் அப்படியே பதறுறீங்க” கோபமாக அவனின் சட்டையை பிடித்தவள் 
“என்ன என்ன வெறுப்பேத்த அவ மேல கைய போடுறீங்களா? இந்த கைதானே இந்த கைதானே என்றவாறே  நன்றாக பல முறை கிள்ள வலியோடு புன்னகைத்தவாறே அவளை பார்க்க அது அவளை மேலும் தூண்டி விட்டிருந்தது. 
“சிரிக்கிறீங்களா? என் நிலைமை உங்களுக்கு சிரிப்பா இருக்கா? வருவீங்க வருவீங்கன்னு காத்திருக்கிறேன் அங்க உக்காந்து அரட்டை அடிக்கிறீங்க. என்ன விட்டுட்டு எப்படி இருக்க முடிஞ்சது உங்களால? போன் போட்டா கூட எடுக்க மாட்டீங்களா?” பலநாள் ஒதுக்கி வைத்ததையும் , இன்று ஒருநாள் தவிக்க விட்டதையும் ஒன்று சேர்த்து வார்த்தைகளாக்கி அவனை அர்ச்சித்தவாறே சுற்றும் முற்றும் பார்த்தவள் அவனை அடிக்க கையில் ஒன்றும் கிடைக்காததால் அவனை பார்க்க அவள் கிள்ளியதில் புன்னகை முகமாக கையை தடவிக் கொண்டிருந்தான் பிரதீபன். 
வலியிலும் சுகம் இதுதான் போலும். எந்த ஒரு விஷயத்தையும் படபடவென பேசுபவள் தியா. இன்று கோபத்தில் தன் மனதை திறந்துக் கொண்டிருக்க ஆசையாக அவளை ரசித்துக் கொண்டிருந்தான் பிரதீபன். 
தான் இவ்வளவு பேசியும் அமைதியாக இருப்பவனை என்ன செய்வது? அவனின் கையை பார்க்கப் பார்க்க அவன் மலர்விழியின் தோளின் மேல் கையை போட்டுக் கொண்டு நடந்து வந்த தருணம் நினைவில் வர ப்ரதீபனின் கையை இழுத்து கடித்துவிட்டாள். 
“ஆ… என்று கத்தியவாறே அவளிடம் கையை கொடுத்துவிட்டு திமிராமல் நின்று கொண்டிருப்பவனை மேலும் சில அடிகளை கொடுத்தவாறே “கல்நெஞ்சுக்காரன், கல்நெஞ்சு” கத்தியவாறே அழ
அவளின் கண்களை துடைத்து விட்டவன் “ப்ளீஸ் பேபி டால் என்ன என்னவேனாலும் செய்துகோ அழாதா. ரொம்பவே அசிங்கமா இருக்கு” என்று சொல்லி அதற்கும் சில அடிகளை பெற்றுக்கொண்டான். 
“இனிமேல் இப்படி பண்ணுவீங்களா? பண்ணுவீங்களா?” கேட்டவாறே அவன் மார்பில் அடைந்தவள் நெஞ்சில் சாய்ந்தவாறு விசும்ப ஆரம்பிக்க 
“சாரி டி ஏதோ கோபம் உன் மேல இல்ல. என் மேல தான். இவ்வளவு நாள் பழகியும் உன் மனசுல எனக்கு இடமில்லை. நீ என்ன புரிஞ்சிக்கவே இல்ல. என்ன உனக்கு நான் புரிய வைக்கவே இல்ல என்கிற கோபம். நீ வேற டைவர்ஸ் கொடு, ஊட்டி போறேன்னு சொன்னியா எங்க உன்ன பார்த்தா கடிச்சு கொதறிடுவேனோனு தான் வீட்டுக்கு வராம இருந்துட்டேன். சாரி டி” 
முகத்தை திரும்பியவள் “சாரி சொன்னா நான் மன்னிச்சு ஏத்துப்பேன்னு கனவிலையும் நினைக்க வேணாம். என்ன பார்க்காம இருந்தீங்கள்ல. நானும் உங்க கிட்ட பேசாம கொஞ்சம் நாள் இருக்கேன் அப்போ தான் உங்களுக்கு புரியும்” குழந்தை போல் கோபப் படுபவளை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டவன் 
மனைவியின் தலைக் கோதியவாறே தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்தமையால் தன் வாழ்க்கையில் வந்த மாற்றத்தை நினைத்து சிரிக்காமல் இருக்க ப்ரதீபனால்  முடியவில்லை.
“நான் உன்ன பார்க்காம இருக்கேனு உனக்கு தெரியுமா? நான் தான் டெய்லியும்  உன்ன பார்ப்பேனே! எங்க நேர்ல வந்தா என்ன கட்டு படுத்திக்க கஷ்டமா  இருக்கும் னு தூரமா இருந்தேன்” 
கணவனின் உடல் குழுங்கவே! “ஆமா அந்த மலர் கூட ஏதோ சொன்னா.. நீங்க தான் இங்க இல்லையே அப்போ எப்படி?” 
தனது அலைபேசியை இயக்கியவன் வீட்டில் பொறுத்தியுள்ள சீசீடிவி காட்ச்சிகளை ஒளிபரப்ப கண்களை அகல விரித்து பார்த்தவள் கண்களை சுருக்கி 
கோபத்தில் ஒருமைக்கு தாவியவள் “டேய் நீ மட்டும் என்ன நல்லா பார்த்துட்டு உன்ன என் கண்ணுலயே காட்டாம இருந்தியே. உன்ன…” அவனின் தலை முடியை பிடித்திழுக்க 
வலி தாங்க முடியாமல் “விடு டி வலிக்குது” 
“நல்லா வலிக்கட்டும். இனிமேல் இப்படியெல்லாம் பண்ண மாட்டிங்கல்ல”
“போதும் டி ஒரே நாள்ள இவ்வளவு தண்டனை தந்தா நான் இமயமலைக்கு தான் ஓடிடுவேன். நாளைக்கும் கொஞ்சம் மிச்சம் வை”
“ஓடுவீங்க ஓடுவீங்க… இந்த கால ஒடச்சி அடுப்புல போட மாட்டேன்” 
கோபம்தான் கணவனின் மேல் கட்டுக்கடங்காத கோபம் தான் எல்லாம் வார்த்தைகளானும், செய்கைகளாலும் அவளது பாணியில் கொட்டித்தீர்த்து விட்ட பின் நிம்மதியாக உணர  நெஞ்சில் சாய்ந்து முகம் புதைத்திருந்தாள் தியா.   
“பேபி டால் கோபமெல்லாம் போச்சா” 
“இன்னும் கொஞ்சம் இருக்கு. அசையாம இருங்க, பேசாதீங்க” கண்களை மூடியவாறே அவனை அதட்ட 
“ஏன் டி எத்தன நாள் கழிச்சு வந்திருக்கேன். நாளில்லை மாசக் கணக்ககிருச்சு. ஒரு கிஸ்ஸாவது தந்தியா? ராட்ச்சி”
“ஆச தான். என்ன தவிக்க விட்டீங்கல்ல நாள்ள அனுபவிங்க” 
“உன் கிட்ட கெஞ்சிக் கொண்டிருந்தா வேலைக்காகாது” தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளை கைகளில் ஏந்தி கட்டில் பக்கம் நகர 
“விடுங்க என்ன விடுங்க… நான் இன்னும் கோபமா தான் இருக்கேன்” 
“போடி… உன் கோபத்தை இன்னைக்கி ராத்திரி மட்டும் மூட்ட கட்டி வை நாளைக்கு காலைல அவிழ்த்து விடு” என்றவன் அவளை கட்டிலில் கிடத்தி தானும் அவள் மேல் சரிய
“இல்ல இல்ல நாம ஹனிமூன் போலாம். இன்னைக்கி வேணாம்” கணவனை தடுக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் தியாவுக்கு இல்லை. ஒரு வித அச்சமும், வெட்கமும் ஆட்கொள்ள உடலில் தோன்றும் ரசாயண மாற்றத்தை தடுக்க வழி தெரியாது, வார்த்தைகளால் மட்டும் அவனை தடுத்துக் கொண்டிருந்தாள். 
அதை புரிந்துக் கொண்டவனும் “சரி சரி ஒன்னும் பண்ண மாட்டேன் ஒரே ஒரு கிஸ் மட்டும் பண்ணிக்கிறேன்” அவள் முகம் பார்த்து நிற்க மனைவியின் சம்மதம் கிடைத்த உடன் முத்தத்தில் ஆரம்பித்தவன் மொத்தமாக அவளை எடுத்துக் கொண்டான். 
இத்தனை நாள் காத்திருப்பு மனைவியின் அருகாமை அவளே தடை விதித்தாலும் உள்ளம் கேட்கவில்லை. ரசனையாக இதழ் தேன் பருகி அவளை வேறொரு உலகத்துக்கே அழைத்து செல்ல செல்லமாக சிணுங்கி நின்றவளை மெதுவாக ஆட்கொள்ள தொடங்கினான். 
 அவள் மறுப்புக்கள் ரீங்காரமாக தனக்கு பூத்த மெல்லிய காதலை மென்மையாக உணர்த்தலானான். அவளின் நாடி நரம்பெங்கும் மின்சாரம் பாய்வது போல் மாயை தோன்ற மேலும் மேலும் அவனுள் புதைந்து போனாள் தியா. 
  
 
தோட்டத்தில் அமர்ந்து டீ அருந்தியவாறே பத்திரிக்கை படித்துக் கொண்டிருந்த சரவணகுமரனைக்  கண்டு ஜாகிங் செய்துகொண்டிருந்த மலர்விழி அருகில் வந்து “குட் மோர்னிங் மாமா” என்றவாறே அமர்ந்துக் கொள்ள 
தலையை நிமிர்த்திப் பார்த்த சரவணகுமரனும் “குட் மோர்னிங்” என்றவாறே கையிலிருந்த பத்திரிக்கையை மடித்து வைத்து விட்டு “என்னமா ரொம்ப நேரமா என் கூட பேசணும் னு இந்த பக்கம் ஜாகிங் என்ற பெயர்ல சுத்திக்கிட்டு இருந்தியே! என்ன விஷயம்” 
உடனே விசயத்துக்கு வந்த சரவணகுமரனை ஆச்சரியமாக பார்த்திருந்த மலர்விழியை ஏறிட்டு “சிவா என் பக்கத்துல இருந்த வரைக்கும் நீ வரல அவ உள்ள போனதும் வந்துருக்கியே என்ன பேசணும்” உள்ள போனவ எந்த நேரத்திலும் வெளியே வரக் கூடும் என்று நியாபகப்படுத்த 
“அதுவந்து மாமா அம்மாவை பத்தி. அவங்க காலேஜ் ல ஒருத்தர விரும்பினாங்க னு சொன்னாங்க. அவரு எங்க இருக்குறாரு? எப்படி இருக்கிறாரு?” அவளும் கேக்க வேண்டியதை கேட்டு விட 
“உங்கம்மா ஒருத்தன லவ் பண்ணானு உனக்கு யார் சொன்னது?” 
அமுதவல்லி யாரோ ஒரு பெண்ணல்ல மலர்விழியின் அன்னை. அன்னையின் காதல் விவகாரம் இந்த சின்ன பெண்ணின் மனதில் ரணத்தை ஏற்படுத்தக் கூடும் என்று தோன்ற அமுதவல்லி சங்கரனை காதலித்த விஷயத்தை மறைப்பதற்காகவே அப்படி ஒரு கேள்வியை சரவணன் கேக்க 
“அம்மா எனக்காக விட்டுடு போன டயரில் இருந்தது” என்றவள் டீஷர்ட்டில் மறைத்து வைத்திருந்த டயரியை எடுத்துக் காட்டினாள். 
அமுதவல்லிக்கு டயரி எழுதும் பழக்கம் இருக்கு என்பது சரவணகுமரனுக்கு நன்றாக தெரியும். காலேஜில் ஏதாவது ஒரு மரத்தடியில் அமர்ந்து எழுதிக் கொண்டிருப்பது பல தடவைகள் கண்டிருப்பதால் பார்த்த உடனே அது அமுதவல்லியின் டயரி என்று புரிந்தது. ஆனால் மகளிடம் எதற்காக தன் காதல் விவகாரத்தை சொல்ல வேண்டும் என்று புரியாமல் மலர்விழியை ஏறிட்டு சரவணகுமரன்
“சங்கரனை பத்தி டயரில் என்ன சொல்லி இருக்கா? உன் அம்மா எதற்கு ரத்னவேலை மணந்தாள்?” இரண்டு கேள்விகளுக்கும் பதில் தெரியாமல் உண்மையை சொல்ல மாட்டேன் என்பது போல் மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டார் சரவணகுமரன்.
“அம்மா ஒருத்தர காதலிச்சதாகவும் அவரை கல்யாணம் பண்ண வீட்டை விட்டு வந்துட்டதாகவும். அவர் கல்யாணம் பண்ண முடிவெடுத்திருந்த கோவிலுக்கு வரவே இல்லை. மீண்டும் வீட்டுக்கு போக முடியாமல் என்ன செய்வதென்று புரியாமல் குழம்பிய நேரம் அப்பா தான் அடைக்கலம் கொடுத்திருக்கிறார். அம்மா காதலிச்சவரு கண்டிப்பா ஏமாத்தி இருக்க மாட்டார் என்று ரெண்டு பேருமே தேடி இருக்காங்க அவரு எங்க போனாரு என்ன ஆனார்னு அப்பாவால் கண்டு பிடிக்க முடியல.  கொஞ்சம் நாள் கழிச்சு ப்ரெக்னன்ட்டா இருக்குறது தெரிஞ்ச பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் பொழுது அப்பாவே அம்மாவை கல்யாணம் பண்ணி ஏத்துக் கிட்டாராம். அவரு என்ன ஆனார்னு உங்களுக்குத் தெரியுமா?” 
சரவணகுமரன் கேள்வி கேட்க ஆரம்பிக்கும் பொழுதே சிவரஞ்சனி வந்து சரவணன் அருகில் அமர்ந்துக் கொள்ள  பின்னால் ப்ரதீபனும், அமுதனும் நின்றிருக்க மலர்விழியின் பதிலில் அமுதன் அதிர்ச்சியாக ப்ரதீபனை பார்க்க அவன் முகத்திலும் அப்பட்டமான அதிர்ச்சி. 
மலர்விழி சொல்லும் கதையில் ரத்னவேல் ஹீரோவாக இருக்க, எதற்கு இவள் ரத்னவேலை பழிவாங்க துடிக்கின்றாள் என்று பிரதீபன் அதிர்ச்சியாக, நேற்றிரவு மலர்விழியின் அறையினுள் புகுந்த அமுதன் அமுதவல்லியின் டயரியை படித்ததில் மலர்விழி சொல்லும் கதைக்கும் டயரியில் இருந்தவைகளுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்க அவனின் முகம் அதிர்ச்சியைக் காட்டியது.  
அரவம் செய்யாது அங்கே நடக்கும் பேச்சு வார்த்தையை கவனித்த இருவரும் மனதுக்குள் புயலே வீச இதை பற்றி மலர்விழியிடமே கேட்டு தெளிவுப் படுத்திக்க கொள்ள வேண்டும் என்று நினைத்தனர். 
“எனக்கும் என் குடும்பத்துக்கும் தான் உன் அப்பா வில்லன் போல. உன் மேலயும் உன் அம்மா மேலயும் அன்பா, பாசமா இருக்கிறதே சந்தோசம். உங்க அம்மா காதலிச்சது சங்கரன் என் நண்பன் தான். உங்க அப்பா எங்க காலேஜே கிடையாது கீதா தான் எங்க காலேஜ் என்ன பின் தொடர்ந்ததுல தான் உங்கம்மாவை தெரியும் னு நினைக்கிறேன்” சரியாக கணித்தார் சரவணன். 
“மன்னிச்சிக்க அமுதாவை ரத்னவேல் மனைவியா பார்த்தப்போ பணத்துக்காக அவ ரத்னவேலு திருமணம் செஞ்சிருப்பானு நினச்சேன். சிவாவே என்ன தேடி வந்து கீதாவால என் வாழ்க்கைல நடந்ததெல்லாம் தெரியும் என்றும் என்ன காதலிக்கிறதாகவும் சொல்லி கல்யாணம் பண்ண கேட்டா. அப்பாவும் என்ன இன்னொரு கல்யாணம் பண்ண சொல்லி கெஞ்சாத குறையா சொல்லிக் கிட்டு இருந்தாரு அது அமுதனுக்காகவும், குழந்தையா மாறிப்போன திலகாகாகவும். சிவாவோட அப்பா கோயம்புத்தூர்ல  செல்வாக்கானவர் அவர் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சு எங்களை இத்துணை வருஷமா கீதா கண்ணுலையும், உங்கப்பா கண்ணுலையும் படாம பார்த்துக் கிட்டாரு. இவளை கல்யாணம் பண்ண பிறகு தான் காலேஜ் நண்பர்களை சந்திக்க முடிஞ்சது. அப்போதான் சங்கரன் காணாமல் போய்ட்டான்னு தெரியவந்தது. அதுக்கும் உங்க அப்பாக்கும் தொடர்ப்பு இருக்கும் னு நினச்சேன். ஆனா நீ சொல்லுறத பார்த்தா நான் தப்பா புரிஞ்சிக்க கிட்டேனு தெரியுது. மன்னிச்சிக்க”
“எதுக்கு மாமா மன்னிப்பெல்லாம் அப்பா உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் பண்ணது கொஞ்சமா நஞ்சமா? உங்களுக்கு சங்கரன் அப்பா ஊரு,  அட்ரஸ் ஏதாவது தெரியுமா?” 
சிவரஞ்சனி மலர்விழியை அணைத்துக் கொள்ள “ஊரு திருநெல்வேலி பக்கம் அட்ரஸ் தெரியல உனக்காக என் நண்பர்கள் கிட்ட விசாரிச்சு சொல்லுறேன்” என்றவர் ஆறுதலாக மலர்விழியின் கையை தட்டிக் கொடுக்கலானார். 
 அமுதனும் ப்ரதீபனும் தங்களது சிந்தனையிலேயே திரும்பி நடக்க, மலர்விழி ரத்னவேல் மகள் இல்லாமல் சங்கரனின் மகள் ஆனது சரவணகுமாரனின் மனதில் நிம்மதியையும் மலர்விழி மீது அம்பும் பெருகியது.
 

Advertisement