Advertisement

அத்தியாயம் 15
ஸ்ரீராம் பிறக்கும் பொழுதும் தான் அருகில் இல்லை. பிறந்து இன்று வரையிலான அவனது வளர்ச்சியையும் அருகில் இருந்து பார்க்க முடியவில்லை. அவனுக்காக நான் ஒன்றுமே செய்யவில்லை என்று ரிஷி கயலிடம் அடிக்கடி கூற அதான் மொத்தமா இப்போ செயிரீங்களே என்று அவனை சமாதானப் படுத்துவாள். 
ஸ்ரீராமின் இந்த பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாட வேண்டும் என்பது ரிஷியின் ஆசையாக இருக்க, ஆடம்பர செலவு வேண்டாம் என்றாள் கயல். குழந்தையும் ஆசைப்படுவான் என்று ரிஷி கயலை தாஜா செய்ய அப்போ வீட்டார் மட்டும் போதும் என்று விட முகம் சுணங்கியவாறே மனைவியின் பேச்சுக்கு மறு பேச்சின்றி தலையசைத்தான் ரிஷி.
காலையிலையே மனைவியையும் மகனையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்று குடும்பமாக சாமி கும்பிட்டவர்கள் ஸ்ரீராமை அழைத்துக் கொண்டு மாலுக்கு சென்று அவனுக்கு சில விளையாட்டு சாமான்களை ரிஷி வாங்கிக் கொடுக்க முனைய, வீட்டில் ஏகப்பட்டது இருக்கு வேண்டாம் என்று கயல் மறுக்க, ஸ்ரீராமும் கண்ட, கண்ட பொருட்கள் எல்லாம் வேண்டும் என்று அடம்பிடிக்கலானான். 
 ஆர்ப்பாட்டம் பண்ணி ஒட்டுமொத்த கூட்டத்தின் கவனத்தையும் தன்பால் இழுத்த ஸ்ரீராம் தரையில்  உருள ஆரம்பிக்க குழந்தை அடம் பிடிப்பதை சகிக்காது ரிஷி எல்லாவற்றையும் வாங்க, அவனை முறைத்த கயல் ஸ்ரீராமை திமிரத் திமிர தூக்கிக் கொண்டு வெளிநடப்பு செய்ய சத்தமாக அழத்துவங்கினான் அவன். 
கையில் எடுத்த பொருட்களை விட்டு விட்டு அவள் பின்னாடி ஓடி வந்தவன் “என்ன பண்ணுற வார் பாரு எப்படி அழுறானு” 
கணவனுக்கு பதிலளிக்காமல் “ஸ்ரீ இப்போ நீ அழுறத நிறுத்தலைனா? ஈவினிங் பார்ட்டி கிடையாது. ஐஸ் கிரீம் கிடையாது, பார்க் போகமா வீட்டுக்குத்தான் போகணும்” குழந்தையை மிரட்ட ஸ்ரீராம் அழுவதை நிறுத்துவதாக இல்லை. ரிஷிக்கு தான் கயலின் மேல் கோபம் கோபமாக வந்தது. 
“டைவர் வண்டியை வீட்டுக்கு விடுங்க. ஸ்ரீ பிக் பாய்னு நினச்சேன் இன்னும் சின்ன பையனாக தான் இருக்கான். ஸ்கூல் பிரெண்ட்ஸ் பார்த்தா சிரிப்பாங்க நாங்க வீட்டுக்கே போலாம்” என்றவள் வண்டியில் ஏறி அமர்ந்துக் கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ரீயின் அழுகை அடங்கி அன்னையின் சொல்லுக்கு கட்டுப்படலானான். 
ரிஷிக்குமே ஆச்சரியமாக இருந்தது. ஸ்ரீராமை அழவைக்க கூடாதென்று ரிஷி எல்லாவற்றையும் வாங்கிக் குவிக்க தயாராக இருக்க, ரெண்டே வார்த்தையில் அடக்கி விட்டாள் கயல். 
ஸ்ரீராமோடு சிறுவர் பூங்கா, ஐஸ் கிரீம் பாலர், கார்ட்டூன் திரைப்படத்தையும் பார்த்து விட்டு  வெளியே வர மதியத்தையும் தாண்டியிருக்கவே! சாதாரணமாக  உணவை முடித்துக் கொண்டு வீடு திரும்ப களைப்பில் உறங்க ஆரம்பித்திருந்தான் ஸ்ரீராம். 
“முதல்ல அடம்பிடிச்சவன் அப்பொறம் அடங்கியே இருந்தானே! அவனை அடக்குற மாதிரிதான் என்னையும் அடக்கி உன் முந்தானையில் நல்லா முடிச்சு வச்சிருக்க” ரிஷி சிரித்தவாறே சொல்ல 
தூங்கும் ஸ்ரீராமின் தலையை கோதியவாறே “ஊட்டில இருக்கும் பொழுது இப்படி அடம் பிடிச்சதே இல்ல. வீட்டுல நீங்க விளையாட்டு சாமான்களை வாங்கிக் குவிக்கும் பொழுதே தெரியும் இப்படி அடம் புடிப்பான்னு. என்ன சொன்னா அடங்குவான்னும் தெரியும். குழந்தைக்கு வாங்கிக் கொடுக்கலாம். ஆனா வீண் செலவு செய்யவும் கூடாது. அடம் பிடிக்கும் பொழுது அவங்க சொல்லுறத செய்யவே கூடாது. அப்பொறம் அதையே ஆயுதமா பயன் படுத்திப்பாங்க” 
“இதுல என்ன இருக்கு வார். என்னால வாங்க முடியுது என் பையனுக்கு நான் வாங்கிக் கொடுக்குறேன். ஒரு அப்பாவா என் பையனுக்கு இதக் கூட நான் செய்யக் கூடாதா?” தன்னனுடைய குழந்தை பருவம் தான் கொடுமையாக முடிந்தது. தன்னுடைய குழந்தையாவது ஆசைப்பட்டவைகளை அனுபவிக்கட்டும் என்ற ஆதங்கத்தில் ரிஷி பேச 
“இப்போதான் சொன்னேன் வீண் செலவு பண்ண கூடாதென்று. இதுவே கத்தியோ! ஆயுதமோ! வேணும் னு சொன்னா வாங்கிக் கொடுப்பீங்களா? ஆபத்துனு சொல்லி புரிய வைக்க மாட்டீங்க? தேவைக்கு அதிகமாகவே இவன் கிட்ட விளையாட்டு சாமான்கள் இருக்கு. பகிர்ந்து விளையாடவும் யாரும் இல்ல. இந்த லட்சணத்துல இன்னும் எதுக்கு. முதல்ல இருக்குறத விளையாடட்டும்” கணவனை முறைக்கலானாள் கயல். 
“உனக்கு நான் என்ன சொல்ல வரேன்னு புரியல” 
“நல்லாவே புரியுது.  உங்களுக்கு கிடைக்காததெல்லாம் உங்க மகன் அனுபவிக்கனும்  னு ஆசை படுறீங்க. ஆசை படலாம் அதுவே அவனை பேராசைக்காரனாக மாத்தாம இருக்கணும்” 
இதற்கு மேலும் மனைவியிடம் பேசி புரியவைக்க முடியாது என்று புரிய ரிஷி அமைதியாக வண்டியை வீட்டுக்கு செலுத்த வீட்டில் மாலை பார்ட்டிக்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தது. 
வீட்டார் மட்டும் கலந்துக் கொள்ளும் பார்ட்டி என்பதால் தோட்டத்தில் சிறு மேடையமைத்து கேக் வெட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, உணவு வகைகள் புப்பே முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு அமர்ந்து உன்ன கதிரைகளும் ஒரு பக்கமாக போடப்பட்டிருந்தது. 
மரங்களில் வண்ண வண்ண மின் குமிழ்களும், பலூனும் தொங்க விடப்பட்டிருக்க மாலை மங்கும் வேளையில் அவ்விடமே அழகாக காட்ச்சியளித்தது. 
தூங்கும் ஸ்ரீராமை எழுப்பி குளிப்பாட்டி அவனுக்கான உடையை அணிவித்து ரிஷியிடம் ஒப்படைத்தவள் கணவன் கோட் சூட்டில் இருக்கவே புருவம் உயர்த்திப் பார்க்க 
“பார்டினா போட்டோ எடுப்போம். ஸ்ரீ வளர்ந்து பெரியவனானதும் போட்டோ பார்த்தா பர்த்டே பார்ட்டி சிறப்பாக இருந்ததாக நினைக்கணும். வீட்டுல வச்ச சாதாரண பார்ட்டியாக தோன கூடாது” மனைவியின் பார்வைக்கு விளக்கமாகவே பதில் சொன்னான் ரிஷி. 
புன்னகையாகவே அவனை புரிந்துக் கொண்டேன் என்று பார்வையை வீச கணவன் கொடுத்த அட்டைப்பெட்டியில் இருந்த  பட்டுப் புடவையில் கயலும் தயாராகி வர ப்ரதீபனை தவிர மற்ற அனைவருமே தோட்டத்தில் இவர்களுக்காக காத்திருந்தனர். 
அனைவருக்கும் ரிஷி துணி வாங்கிக் கொடுத்திருக்க, ரிஷி நினைத்தது போலவே வீட்டில் நடக்கும் சாதாரண பார்ட்டி போல் இல்லாது அனைவரும் அழகாக மிளிர  ஸ்ரீராமின் பிறந்தநாள் விழா வீட்டில் கோலாகலமாக ஆரம்பமானது.
சென்னையிலிருந்து அமுதன் வருவதாக கயல் சொல்லவே கணவனும் அமுதனோடு வருவான் என்று அவனுக்காக ஆசையாக காத்திருக்கலானாள் தியா. 
ஆனால் சென்னையிலிருந்து அமுதன் தனியாகவே வர “உன் புருஷன் என்ன சின்ன பாபாவா? தனியா வரத் தெரியாதா?” மனசாட்ச்சி அவளை கேலி செய்தாலும் கண்டிப்பாக ஸ்ரீராமின் பிறந்த நாள் விழாவுக்கு வருவான் என்று ஆவலாக காத்திருக்க பார்ட்டி ஆரம்பமாகியும் அவனை காணாது தன்னால் தான் வராமல் இருக்கின்றானோ என்ற குற்ற உணர்ச்சி தாக்க பார்ட்டிக்கு வரவில்லையானால் அவனை தேடி அவன் இருக்கும் இடத்துக்கே செல்வதென்ற முடிவுக்கு வந்தாள் தியா.
கணவனின் அருகாமையை தேடும் மனதை கட்டுப் படுத்த வழி தெரியாமல் நாளுக்கு நாள் உடல் இளைத்து உருகுலைந்தவள் காய்ச்சலில் விழவே! சிதைந்த சித்திரமானாள். 
பிரதீபன் எந்தநாளும் பார்வதிப் பாட்டியுடன்  அலைபேசியில் உரையாடுவதால் தியாவுக்கும் அவனுக்குமிடையில் இருக்கும் பிரச்சினை அவர் கண்களுக்கு தெரியவில்லை. மாறாக பேத்தி கணவனின் அருகாமை இல்லாமல் கவலையாக தன்னையே வருத்திக் கொள்கிறாள் என்று புரிய ப்ரதீபனை அழைத்து தியாவை அவனோடு அழைத்து செல்லும் படி சொல்ல ஏதேதோ காரணம் கூறி மறுத்து விட்டான் பிரதீபன். 
பேத்தியின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கவும்  பார்க்க முடியாமல், அவளை கடியாவும் முடியாமல், ப்ரதீபனிடம் சொல்லி பயனில்லையென்று புரிய கயலை அழைத்து சொல்ல அவளும் ப்ரதீபனிடம் பேசிப் பார்க்க 
“இன்னும் கொஞ்சம் நாள் தான். அங்கேயே வந்து விடுவேன். தியா வீணாக அலைய வேணாமே” என்று விட கயலும் அமைதியானாள்.  
ஆனால் தியா தன்னையே வருத்திக் கொண்டு காய்ச்சலில் விழ பயந்து போன கயலோ ப்ரதீபனை வருமாறு அழைக்க முனைய 
தனக்கு காய்ச்சல் என்று சொல்லிய பின்பும் கணவன் வராவிட்டால்? அவர்களுக்குள் நடக்கும் மௌனப் போர் அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகும் என்று தடுத்தாள் தியா. 
“என்ன தியா நீ. ஒன்னு அண்ணன் உன்ன கூட கூட்டிட்டு போய் இருக்கணும். பாட்டியா நான் பார்த்துக்க மாட்டேனா?  இல்ல இங்க இருக்கணும்.  என்ன தான் வேலைனாலும் ரொம்ப நாள் வீட்டை விட்டு இருக்குறது நல்லதில்லை. வரட்டும் நான் பேசுறேன்” 
கலங்கிய கண்களை கயலுக்கு மறைத்தவாறே “பாவம் அவர் வேலையா இருப்பாரு. முடிச்சிட்டே வரட்டும். நீ எதுவும் சொல்லாத” உள்ளம் ஒன்றை சொல்ல வேறொன்றை மொழிந்தாள்.
“நல்ல புருஷன். நல்ல பொண்டாட்டி. நீயென்னடான்னா இப்படி சொல்லுற. அவரும் உன்ன கஷ்டப் படுத்த வேணாம் னு சொல்லுறாரு” என்று சிரிக்க, வலியோடு சிரித்தாள் தியா. 
“சரி நீ ரெஸ்ட் எடு” என்று நகர போன கயலின் கையை பிடித்த தியா 
“எப்படி நீ தாங்கிக் கிட்ட? எப்படி உன்னால மன்னிக்க முடிஞ்சது” அடி நுனியில்லாமல் கேள்வி கேட்க, அவளை புரியாது பார்த்தாள் கயல். 
ஒருவாறு திக்கித் திணறி அன்று தொலைக்காட்ச்சியில் மதுரிகாவை பற்றி ஒளிபரப்பான செய்தியை பார்த்து விட்டு ரிஷி கூறியதை நியாபகப் படுத்தியவள் கயலின் முகம் பார்த்து நிற்க, 
தியாவின் கையை தட்டிக் கொடுத்தவாறே “சிம்பலா சொன்னா நான் அவர் மேல வைத்திருந்த காதல். காதல் மறக்கும், மன்னிக்கும். விலாவாரியா சொன்னா… கஷ்டமா தான் இருந்தது. அத அவர் வாயாலேயே சொல்லும் பொழுது இதயம் ரொம்ப வலிச்சது. ஆனா அவர் அப்படி நடந்துக் கிட்டத்துக்கு அவருடைய மோசமான குழந்தை பருவம் தான் காரணமாக இருக்கும் பொழுது அவர் மேல தப்பில்ல னு தோணிருச்சு.
திருந்திட்டேன் னு சொல்றவர ஏத்துக்க ஒரு மனசு வேணும் அது எல்லாராலையும் முடியாது. ஆனா அவருக்கு அத சொல்ல கூட சந்தர்ப்பம் கிடைக்காம ஒரு பெரிய ஆக்சிடண்ட்டுல மாட்டி உயிர் தப்பிச்சதே பெரிய விஷயம். இதுல என்னையே மறந்து. நியாபகம் வந்த பொழுது பொழைக்க மாட்டேன்னு உசுருக்கு போராடி விட்டு வந்தவரை வார்த்தைகளால் காயப்படுத்தி இருந்தால் சரி னு நினைக்கிறியா? விட்டுட்டு போய் இருக்கணும் னு சொல்லுறியா? 
 அவரை பிரிஞ்சி இருந்த கொஞ்சம் காலம் அவர் இல்லாம வாழ முடியாதுன்னு அவரை பார்த்தப்போ புரிஞ்சிருச்சு. அவரை விட்டு பிரிஞ்சாலும் அவர் நல்லா இருக்கணும் னு பிராத்தினை தான் பண்ணேன். அவர் நினைப்போடு தான் வாழ்ந்தேன். நடந்து முடிஞ்சது நினைச்சி என்னையும் வருத்திக் கிட்டு அவரையும் கஷ்டப்படுத்தி, ஸ்ரீராம அப்பாகிட்ட இருந்து பிரிச்சி வச்சு கடைசி வரைக்கும் கவலையாகவே இருந்துட்டு போய் சேருறத விட அவருடைய கஷ்டங்களை புரிஞ்சிக்க கிட்டு பங்கெடுக்கணும் னு நினச்சேன். 
ஒவ்வொரு நொடியும் அவர் மனசுல எனக்கிருக்கும் காதலை உணர்த்திக் கிட்டு தான் இருக்காரு, பழசை நான் மறந்தாலும் அவர் மறக்காம தன்னையே வருத்திக் கொள்ளும் பொழுது பார்க்கவே கஷ்டமாக இருக்கு. கணவன், மனைவிக்கிடையில் காதலும், புரிதலும் ரொம்ப அவசியம் தியா. என்ன கஷ்டம் வந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுக்காம இருக்கணும். 
என் புருஷன் தப்பு பண்ணவர் தான். அத யார் கிட்ட இருந்தும் மறைக்கணும் னு கூட அவர் நினைக்கல, அதையே நினைச்சி அவர் கஷ்டப் படக் கூடாதுனு நான் நினைக்கிறேன். 
அண்ணனும் ஒருவகைல அவரோட அப்பா, அம்மாவால பாதிக்கப் பட்டவர் தான். உன் கிட்ட சொல்லி இருப்பாரே! உன்னால தான் அவரை புரிஞ்சி நடந்துக்க முடியும் னு தோணிருச்சு. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சேன். பாரு… இங்க நீ அவரை நினைச்சி உருகிக் கரையதும். அவரு உனக்காக பாக்குறதும். என்னமா லவ்ஸ் விடுறீங்க. இப்படியே போனா உன் எலும்பு மட்டும் தான் மிஞ்சும். நல்லா சாப்பிட்டு தெம்பா இரு. அப்பொறம் நாங்க உன்ன கவனிக்கள்னு எங்களை திட்ட போறாரு” கிண்டல் செய்தவாறே நகர்ந்தாள் கயல். 
கயல் பேசிவிட்டு சென்றதில் கணவனை புரிந்துக் கொள்ளவோ, அவனிடம் மனம் விட்டு பேசவோ முயற்சி செய்ய தவறியது  தனக்கு கல்யாண வாழ்க்கையில் பிடித்தமில்லாமல் இருந்தது தான் காரணம் என்று நன்றாகவே புரிந்தது. 
ஆனாலும் நெருங்கி வந்த அவனிடம் தோழமையாக பழகியும் அவன் தன்னை பற்றி அறிந்துக் கொள்ள முயற்சி செய்ததை போல் தான் அவனை பற்றி அறிந்துக் கொள்ள எந்த ஒரு முயற்சியும் எடுக்காதது ஏன் என்ற கேள்வி அவள் மனதில் தோன்ற அதற்கு அவளிடம் பதிலில்லை.
அவனை பற்றி அவனிடம் கேட்டிருந்தால் மனபாரத்தை இறக்கி வைத்திருப்பானே! பிரதீபன் ஒரு முரட்டுக் குழந்தை. அன்புக்காக ஏங்குபவன்.  தன்னிடம் அன்பை மட்டுமே எதிர்பார்த்தவனை புரிந்துக் கொள்ளாமல் துரத்தியடித்ததை காலம் கடந்து உணர்ந்துக் கொண்டாள் தியா.
பிரதீபன் வீடு வந்தாலும் அவள் கண்ணில் படமாட்டான். தப்பித்தவறி கண்முன் வந்தாலும் ஓடி ஒளிவதிலையே குறியாக இருக்கின்றான். அவனால் மட்டும் அவளை பாராது இருக்க எப்படி முடிகிறது? அவன் மனதில் தான் இல்லையா? இருந்திருந்தால் இப்படி முகம் பாராது இருக்க முடியுமா? அவளிடம் பேச்சு வார்த்தையும் முற்றாக நின்று போய் இருக்க, கணவன் தன்னை முற்றாக வெறுத்து விட்டான் என்ற முடிவுக்கே வந்தவள், கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும் அவன் அவளை விட்டும் செல்ல மாட்டான் என்று நம்பினாள்.
கணவனை காண ஏங்கித் தவிக்கும் அவள் மனதை அவனுக்கு எவ்வாறு புரிய வைப்பதென்று ஒரு பக்கம் தவித்தாலும். அவனை சந்திப்பது எப்படி என்ற குழப்பமே எழுந்தது. பார்ட்டிக்கு வருவானா? மாட்டானா? என்று அவளை தவிக்கவிட்டு ஒரு வாறு மலர்விழியுடன் வந்திறங்கினான் பிரதீபன்.
மலரை கண்டு அனைவரும் “யார் இவள்” என்று பார்க்க அமுதன் மட்டும் ப்ரதீபனை முறைக்கலானான். அவனின் முறைப்பைக் கண்டு உள்ளுக்குள் சிரித்தவன் வேண்டுமென்றே மலர்விழியின் தோளில் கைபோட்டு அணைத்தவாறே வர அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எண்ணலாகினர். 
குடும்பப் பெண்களை தவிர பிற பெண்களோடு நெருக்கமாக கூட பேசாதவன் இன்று ஒரு பெண்ணின் தோளில் கைபோட்டு வருவதைக் கண்ட கயல் வருபவளை ஆராய்ச்சி பார்வை பார்க்க, சாதாரண குர்தா, ஜீன்ஸில் இருந்த மலரின் தேஜஸ் அவள் பெரிய இடத்து பெண்ணென்றும், எளிமை விரும்பி என்றும் அவளுக்கு தோன்ற சினேகமாக புன்னகைத்தாள். 
மலர்விழியும் அமுதனை கண்டு தனது தோளில் இருந்த ப்ரதீபனின் கையை பிடித்துக் கொண்டவள் அவனை ஏறெடுத்தும் பாராது அங்கே உள்ளவர்களை பார்க்க ரிஷியை கண்டு ஆச்சரியமாக விழிவிரித்தவள் ப்ரதீபனை விட்டு விட்டு அவனிடம் ஓடி இருந்தாள். 
ப்ரதீபனோடு ஒரு பெண் வரவும் பார்வதி பாட்டியின் மனம் அடித்துக் கொள்ள அவன் அனைவரினது முன்னிலையிலும் அவளின் தோள் மேல் கை போட 
“போச்சு… போச்சு… நான் நினைத்தது போல் உன் புருஷன் அவனுக்கு வேற ஒருத்திய தேடிக்கிட்டான்” என்று தியாவிடம் கதற அது அகல்யாவின் காதிலும் விழுந்தது. 
கணவன் வண்டியிலிருந்து இறங்கவும் அவன் புறம் நகர்ந்தவள் கூடவே மலர்விழி இறங்கவும் யோசனையாக புருவம் சுருக்கியவள் பார்வதி பாட்டியின் குரல் நரசமாக ஒலிக்க தன் இயலாமையை பாட்டியின் மீது காட்டலானாள்.
“கண்ட, கண்ட டிவி சீரியல்களை பார்க்காதே நா கேக்குறியா? என் புருஷன பத்தி எனக்கு தெரியும். நீ மூடிக்கிட்டு நில்லு” தியா அதட்ட கலகலவென சிரிக்கலானாள் அகல்யா. 
அவளின் சிரிப்பு சத்தத்தில் அந்த பக்கம் திரும்பிய ப்ரதீபனுக்கு பாட்டியை  முறைத்துக் கொண்டே திரும்பிய தியாவின் முகமே கண்ணில் விழ “செத்தேன் சும்மாவே சாமி ஆடுவா, அமுதனை வெறுப்பேத்த போய், எனக்கு நானே ஆப்பு வச்சிக்கிட்டேனே! ஐயோ இவ இன்னும் என்ன செய்வாளோ” என்று துடிக்கலானது ப்ரதீபனின் மனது. ஆனாலும் விறைப்பாக முகத்தை வைத்துக் கொண்டு அவளை அலட்ச்சியமாக பார்த்து விட்டு ரிஷியின் அருகில் சென்றிருந்தான் அவன்.  
ரிஷியின் அருகில் ஓடியவளோ! யார் அமுதன்? யார் ரிஷி என்று இருவரையும் மாறி மாறி பார்த்து விட்டு  ரிஷியை இறுக அணைத்துக் கொள்ள அங்கிருந்த அனைவருக்குமே அதிர்ச்சியென்றால் பிரதீபன் மட்டும் சிரித்துக் கொண்டிருந்தான். 
“டேய் தடியா… செத்து போய்ட்டேனு நினச்சேன். உசுரோட இருக்கிறியே! என்ன தேடி வரணும் னு தோனலயா?” கண்களில் நீர் பெறுக இறுகிய குரலில் சொல்ல யாரென்றே அறிமுகமில்லாத ஒரு பெண் கயலின் முன் அவனை அணைத்தது மட்டுமில்லாது உரிமையுடன் பேச அவளை தன்னிடமிருந்து பிரிக்க முயற்சித்தவாறே மனைவி என்ன நினைப்பாளோ என்று சங்கடமாக அவளின் முகத்தை பார்த்தான் ரிஷி. 
ப்ரதீபனுடன் வந்தவள் என்பதால் பொறுமையாக இருந்த கயலின் முகத்தில் கோப ரேகைகள் தோன்ற கணவனை முறைக்கலானாள் அவள். இங்கே காதில் புகை வராத குறையாக நின்றிருந்தான் அமுதன். 
“விட்டா இவ நல்ல இருக்குற குடும்பத்துல கும்மி அடிச்சிட்டு போய்டுவா காப்பாத்துடா…” என்ற பார்வையை பிரதீபன் புறம் ரிஷி வீச… 
“மலர் கண்ட்ரோல் யுவர்செல்ப்” என்றவாறே பிரதீபன் மலரை ரிஷியிடமிருந்து பிரித்தெடுக்க, 
“ஹேய் நீ மலரா…?” என்று ரிஷி ஆச்சரியப்பட  
“நீ சொன்ன சப்ரைஸ் இது தானா” என்றவள் ப்ரதீபனின் வயிற்றில் செல்லமாக குத்தியவாறே  “ஆமாம்” எனும் விதமாக கண்களில் நீரோடு தலையசைத்தாள் மலர்விழி.  
   
கல்யாணம் ஆகும் வரை ரிஷியின் வாழ்க்கையில் பெண்கள் வந்து போன விஷயம் குடும்பத்தாருக்கு தெரியும் என்பதால் இது என்ன புதுப் பிரச்சினை என்று பார்த்திருந்த சிவரஞ்சனி கண்வனைன் முகம் பார்க்க 
அதை சரியாக புரிந்துக் கொண்ட சரவணகுமரனும் “யார்மா.. நீ” என்று கேட்க அவர் புறம் திரும்பியவள் “மாமா” என்றவாறே அவரின் நெஞ்சில் சாய்ந்து விசும்ப புரியாமல் விழித்தார் சரவணகுமரன். 
“என்ன இவ வந்ததிலிருந்து ஆம்பிளைங்க பூரா கட்டிப்பிடிக்கிறா” பார்வதிப் பாட்டி கழுத்தை நொடிக்க,  கயலும், தியாவும் தங்கள் துணைவர்களை தான் முறைத்துக் கொண்டிருந்தனர்.

Advertisement