Advertisement

அத்தியாயம் 12
அழைப்பு மணி அடித்துக் கொண்டே இருக்க கோபமாக கண்விழித்த பிரதீபன் கதவை திறக்க கையில் உணவு பாத்திரங்களோடு நின்று கொண்டிருந்தாள் மலர்விழி.
தான் எங்கே இருக்கோம், யார் இவன் என்று தூக்க கலக்கத்தில் பிரதீபன் இருக்க 
“யார் நீ? நந்தி மாதிரி குறுக்க வந்து நிக்குற? தள்ளு…” என்றவாறு ப்ரதீபனை தள்ளி விட்டு உள்ளே வந்த மலர்விழி உணவு பாத்திரங்களை மேசையில் வைக்க 
“என்ன டிலிவரி பாய்க்கு இவ்வளவு திமிரு என்றவாறு கண்ணை கசக்கி பார்த்தவன் மலர்விழியை கண்டு பொண்ணு…” என்ற பார்வையை தாங்கி நிற்க 
“அமுதன் எங்க?”
“குளிக்கிறான்” 
“நீ யாரு?”
“பிரென்ட்”
“தேங்க்ஸ்” என்றவள் நகர 
“என்ன சொன்னேன்னு தாங்க்ஸ் சொல்லிட்டு போறா” முற்றாக தூக்கம் தூர ஓட முகத்தை கழுவியவன் சாப்பிட ஆரம்பித்தான். 
குளித்து விட்டு படிகளில் இறங்கிக் கொண்டிருந்த அமுதன் “என்னடா… காலைலயே எந்திருச்சு சமைச்சி இருக்க, உனக்கு சமைக்க தெரியும் னு எனக்கு தெரியாதே!”
“நானே நைட் லேட்டா வந்ததுல பசி வெரீல பல்லு கூட விளக்காம சாப்பிட்டு கிட்டு இருக்கேன்.  எனக்கு சமைக்க எல்லாம் தெரியாது. உன் கேர்ள் பிரெண்டு தான் கொண்டு வந்தா…” சொல்லியவாறே இன்னொரு இட்லியை தட்டில் வைத்து சாம்பாரை ஊற்ற 
“யாரு மலர் வந்தாளா?”
“பேரெல்லாம் தெரியல பாண்ட் ஷர்ட்ல இருந்தா. ரொம்ப திமிரு புடிச்சவளா இருக்கா… சொல்லிவை ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் நா இருக்க மாட்டேன்” சொல்லியவாறே பிரதீபன் வாயில் சாப்பாட்டை திணிக்க போக அவனின் கையை பிடித்து தடுத்த அமுதன் 
“முதல்ல எந்திரிச்சு கைய கழுவு, அவளை நான் உள்ளேயே விடமாட்டேன். நீ என்னடானா அவளுக்கு கதவை திறந்துவிட்டதுமில்லாம  அவளை திட்டி கிட்டே அவ கொண்டு வந்த சாப்பாட்டை சாப்புடுற” அமுதன் கோபமாக 
“உனக்கு கொண்டு வந்தது தான் பசில சாப்புட்டேன். இதுக்கு போய் கோபிச்சு கிட்டு, உனக்கு ஒரு நல்ல ஹோட்டல்ல வாங்கித்தாரேன்” 
“டேய் அறிவு கெட்டவனே!  அவ யார்னு தெரியுமா? தெரிஞ்சா நீ சாப்பிட்டத வாந்தி எடுப்ப” 
“யார் அவ?”
“மலர்விழில் ரத்னவேல்”
“சரிடா.. அதுக்கென்ன”
“மினிஸ்டர் ரத்னவேலோட பொண்ணு” 
“என்னடா சொல்லுற?” கையை உதறியவாறே எழுந்துக்க கொண்டவன் “அவ எதுக்கு உன் பின்னாடி சுத்திக்கு கிட்டு இருக்கா?” கோபம் கணக்க 
“என்ன காதலிச்சு கல்யாணம் பண்ணனும் னு சொல்லுறா.. நா வீட்டுக்குள்ளேயே சேர்க்க மாட்டேன் நீ கதவ திறந்து உள்ள விட்டிருக்க” 
“ஓஹ்.. அதான் தாங்க்ஸ் சொல்லிட்டு போனாளா?” மலர்விழியின் தாங்க்ஸ் நியாபகத்தில் வர ப்ரதீபனின் முகத்தில் கொஞ்சம் புன்னகை எட்டிப் பார்த்தது. 
சனிக்கிழமை காலையிலையே சென்னையை நோக்கி பயணிக்கும் பிரதீபன் தன்னை வேலைகளில் மூழ்கடித்துக் கொண்டு நடு இரவில் தான் அமுதனின் வீட்டுக்கு செல்கின்றான். ஞாயிறு காலை பத்து மணியளவில் கடைக்கு செல்பவன் அங்கிருந்தே மும்பை புறப்பட்டு செல்வான். 
அதனாலயே மலர்விழியை அவனால் சந்திக்க முடியவில்லை. அமைச்சர் ரத்னவேலின் பொண்ணு பெயர் மலர்விழி என்பதோடு சரி அவளை அவனுக்கு தெரியாது. அமுதனின் பாதுகாப்புக்கு ஏற்படுத்தியிருந்த இருவரும் அமுதன் குடியிருக்கும் ஏரியாவுக்குள் வராததால் மலர்விழி அங்கே இருப்பதும் அவர்களுக்கு தெரியவில்லை. 
அமுதனோடு ஜாகிங் செய்யும் மலர்விழி ஒரு ஹூடி அணிந்தது தலையை மறைத்திருப்பதால் தூரத்திலிருந்து பார்த்தாலும் அவளை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. இதனாலயே அமுதனின் வாழ்வில் மலர்விழி என்பவளின் குறுக்கீடு ப்ரதீபனின் பார்வைக்கு வராமலையே போனது. 
தன்னிடம் எதுவுமே பதில் சொல்லாது யோசனையாக அறைக்குள் செல்லும் ப்ரதீபனை வித்தியாசமாக பார்த்தான் அமுதன் 
“வாந்தியெடுப்பான்னு பார்த்தா கைய சூப்பிக் கிட்டு போறான். இவன புரிஞ்சிக்கவே முடியல” தனக்குள் முணுமுணுத்தவாறே பாத்திரங்களை அள்ளிக் கொண்டு மலர்விழியின் வீடு நோக்கி நடந்தான் அமுதன். 
நகத்தைக் கடித்தவாறே அறைக்குள் வந்த பிரதீபன் லேப்டப்பை உயிர்ப்பு பித்து தனது வீட்டின் சீசீடிவியை பார்வையிடலானான். 
தோட்டத்தில் சோகச்சித்திரமாய்  அமர்ந்திருந்தாள் தியா. கொஞ்சம் நாள் வேண்டா வெறுப்பா செய்த வேலைகள் கணவனுக்காக ஆசையா செய்யும் போது அடைந்த மகிழ்ச்சி காணாமல் போய் உரிமைகள் மறுக்கப் பட்டு யாரோ போல் தோட்ட வேலைகள் நடந்து கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். 
தியா எந்த வேலை செய்ய முனைந்தாலும் யாராவது முன் வந்து அந்த வேலையை செய்ய, ஸ்ரீராமோடு கழியும் பொழுதை தவிர அறைக்குள் மட்டும் யாரும்  வராததால் அதிக நேரம் அறையிலையே தஞ்சமடைந்தாள். 
வெளியே எங்கேவேனாலும் செல்ல காரோடு ஓட்டுனர் தயாராகி இருந்தார். மாதாந்தம் வீட்டுக்கு தேவையான பொருட்களும், அவளுக்கு தேவையான பொருள்களும் வீடு வந்து சேரும்.  மொத்தத்தில் அரண்மனையில் சிறைவைக்கப்பட்ட இளவரசி போல வாழ்க்கை மாறிப் போனது.
ஆனால் கணவனை இந்த ஒரு மாதமாக தன் கண் கொண்டு காணத்தான் முடியவில்லை. எங்கே இருக்கிறான், என்ன செய்கிறான் என்ற தகவலும் தெரியாது. கயலும், ஸ்ரீராமும் பேச்சு வாக்கில் சொல்லும் தகவலோடு பாட்டியுடனும் அலைபேசியில் உறையாடுவது அவளுக்கு தெரியும். ஒரு தடவையாவது பாட்டியிடம் அவளை பற்றி விசாரித்தது போல் தெரியவில்லை. 
சிலசமயம் பாடியுமே தியாவிடம் அலைபேசியை கொடுக்கவா என்று கேட்பது காதில் விழும், அவன் மறுத்து பேசுவானா? அல்லது பேசிவிட்டேன் என்று பொய் சொன்னானா? அலைபேசி அவள் கைக்கு வந்ததே இல்லை. 
“நான் என்ன தப்பு பண்ணேன்? பண்ணுற தப்பெல்லாம் அவர் பண்ணிட்டு தண்டனையை எனக்கு கொடுக்குறாரு?” கோபமாக முணுமுணுப்பவள் சில சமயம் அலைபேசியை எடுத்து அவனை திட்டவென அழைப்பாள். சில நேரம் அழைப்பு துண்டிக்கப் படும், சில நேரம் அடித்து அடித்து ஓய்ந்து விடும், அப்படியே அழைப்பு இணைக்கப் பட்டாலும், ப்ரதீபனின் பி.ஏ பேசி பிரதீபன் பிசியாக உள்ளதாக கூறுவான். 
பெண் பித்தனாக சித்தரிக்கப் பட்ட கணவன் பி.ஏ வாக ஒரு பெண்ணை வைத்துக் கொள்ளவில்லை என்பதை கூட யோசிக்கத் தவறினாள் தியா. தனக்கான சந்தேகத்தை யாரிடமும் கேட்கவும் மனமில்லாது, இதுதான் தனக்கு விதிக்கப் பட்ட வாழ்க்கை என்று மனம் வெறுத்தவளாக சொந்த வீட்டில் சிறையிருந்தாள். 
லேப்டாப் வழியாக மனைவியை பாத்திருந்த ப்ரதீபனுக்கும் அவளின் சோகமான முகம் கவலையை கொடுக்க
“வேற வழியில்லை தியா.. உனக்கு என்ன பிடிக்கலானாலும் நீ என் கூட இருந்துதான் ஆகணும்.  ஆனா எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும். இந்த உலகத்துல நான் நேசிச்ச முதல் பொண்ணு நீ தான் டி. ஏன் டி என்ன புரிஞ்சிக்கல. யாரு என்னமோ பேசினா உடனே நம்பிடுவியா? என் கிட்ட கேக்காம அம்மு கிட்ட கேக்க போன… அப்போ நீ என்ன நம்பள இல்ல. சொந்தமா யோசிக்க மாட்டியா? இப்போ கூட உன்ன நினைச்சி கவலைல உக்காந்து இருக்க இல்ல என்ன பத்தி கொஞ்சம் கூட நினைச்சி பாத்தியா? டெய்லி சீசீடிவில உன்ன பாக்குறேன் நீ கோபமா போன் பண்ணும் போது உன் கூட பேசாம இருக்கேனா அதுக்கு ஒரே காரணம் இன்னும் நீ ஏதாவது பேசி என் கோபத்தை தூண்டிடுவியோ னு தான். நீயா என்ன புரிஞ்சிக்கிற வரைக்கும் நா உன் கூட பேச மாட்டேன் டி” திரையில் தெரியும் மனைவியின் உருவத்தை தடவியவாறே பேசிக் கொண்டிருந்தான் அமுதன். 
அழைப்பு மணி ஒரு தடவை அடித்த உடனே மலர்விழியின் வீட்டுக் கதவு திறந்துக் கொண்டது. வீட்டின் உள்ளே செல்லாது வெளியே இருந்து குரல் கொடுத்தவன் பாத்திரங்களை அங்கையே வைத்து விட்டு திரும்ப 
“ஒய் மாம்ஸ் என்ன வீட்டுக்குள்ள வராம போற? உள்ள வா…” கதவை முற்றாக திறந்து வைத்துக் கொண்டு மலர்விழி. 
“ஆமா உன் விருந்தோம்பலுக்குத் தான் நான் நாய் மாதிரி அலஞ்சிக்கிட்டு இருக்கேன் நீ கூப்பிட்ட உடனே வாலாட்டிக்கிட்டு, நாக்கை தொங்க போட்டுக்கிட்டு உன் பின்னாடியே வந்துட. உனக்கு எத்துணை தடவ சொன்னாலும் புரியாதா? வெக்கம், மானம், சூடு, சொரணை ஏதாவது இருக்கா? வீட்டுக்கு வராதனு சொன்னா  வர, சாப்பாடு கொண்டு வராதனு சொன்னா கொண்டு வர, என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்க உன் மனசுல” ஏற்கனவே மனதில் ஒத்திகை பார்த்து வச்சிருந்த அத்தனை வசனங்களையும் அமுதன் எடுத்து விட 
“உன்ன தான் மாம்ஸ்” பட்டென்று பதில் சொன்னாள் மலர்விழி. 
அமுதனின் ஒரு கை இடுப்பிலும், மறு கை  நெற்றியையும் தடவ “இவளை என்ன சொன்னாலும் கண்டுக்காம படையெடுக்குறாளே!” நொந்தவனாய் அவளை ஏறிட்டு முறைக்க, 
“ஆனாலும் மாம்ஸ் உன்ன நீயே நாய்னு சொல்லலாமா? இந்த விஷயம் நாய்க்கு தெரிஞ்சா பாவம் தற்கொலை பண்ணிக்கும்” ரகசியம் சொல்வது போல் கையை வாயின் அருகில் வைத்து கூறிவிட்டு கண்சிமிட்டி சிரித்தவாறே “ரொம்ப நேரமா தலையை புடிச்சிக்கிட்டு நிக்குற ரொம்ப தலைவலியா? உள்ள வா…. ஒரு லெமன் டி போட்டு தரேன் தலைவலி பறந்து போகும்” சொல்லியவாறே அமுதனின் கையை பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டு சென்றாள் மலர்விழி. 
அன்றிரவு போல் இல்லாது வீடு சுத்தமாக இருக்க “வீடெல்லாம் நல்லா வச்சிருக்கா, நல்லா சமைக்கிறா, ஆனா துணி மட்டும் பசங்க மாதிரி போடுறா..” அவளை ஒரு புரியாத பார்வை பார்த்து வைத்தான் அமுதன். 
 அமுதன் வீட்டை நோட்டமிட அதற்குள் சமயலறைக்குள் புகுந்து லெமன் டீயோடு வந்தாள் மலர். மறுக்காமல் வாங்கிக் குடித்தவாறே 
“இவ எதுக்கு நம்ம பின்னாடி சுத்துறா? கண்டதும் காதலாக நிச்சயமாக இருக்க முடியாது, வாய் வார்த்தையாக காதலை சொன்னாலும் மனசுல துளியளவும் காதல் இல்ல. அத அவ கண்ணே சொல்லுது. ரிஷி இறந்துட்டதாகத்தான் நினைக்கிறாயா.  இவங்கப்பன் கூட சேர்ந்து ஏதாவது செய்ய போராளோனு சந்தேகப்பட்டாலும் இதுவரைக்கும் அப்பாவை பத்தி ஒரு வார்த்த கூட கேக்கல. அவளை பத்தியும் எதுவும் சொல்லல. இவ நோக்கம் தான் என்ன? என் கிட்ட என்ன எதிர்பார்க்குறானு ஒன்னும் புரியல” மலர்விழியின் மனதை படிக்க முயன்றான். 
ஏதோ அலைபேசியில் நோண்டிக் கொண்டிருந்தவளுக்கு அமுதனின் ஆராய்ச்சி பார்வை கண்ணில் தட்டுப்படவில்லை. 
“என்ன மாம்ஸ் யோசனை பலமா இருக்கு?” அலைபேசியை கால்ச்சட்டை பையில் சொருகியவாறே மலர் கேக்க 
“ஆமா நீ ஏன் உன் அப்பா கூட தங்காம இங்க வந்து தனியா இருக்க, என்ன எதுன்னு தேட மாட்டாரா?” 
மலர்விழி அமெரிக்காவில் படித்தவள், இரண்டு வருடங்களுக்கு முன் தான் இந்தியா வந்தாள். அங்கு சுதந்திரமாக இருந்தவள் இங்கும் சுதந்திரமாக இருக்க நினைத்திருக்கலாம் என்று தான் அமுதன் எண்ணி இருந்தான். அவன் என்னதான் கோபமாக பேசினாலும் கண்டு கொள்ளாமல் அவனை நெருங்குபவளை கோபத்தை கைவிட்டு விட்டு அன்பாக பேசி விரட்டலாம் என்று எண்ணி தான் இந்த கேள்வியையே கேட்டான் 
அமுதனின் கேள்விக்கு மலர்விழியின் முகம் வேதனையா, கோபமா என்று அறியமுடியாத பாவனை நொடியில் தோன்றி மறைய யோசனையாக அவளையே அமுதன் பாத்திருக்க 
‘அது ஒண்ணமில்லா மாம்ஸ்… அப்பா கூட தொண்டர்கள் னு ஒரு கூட்டமே இருக்கு… அதுங்க போடுற கோஷமும், சத்தமும் காது ஜவ்வு கிழியுது. அதான் தனியா இருக்கேன்”  காதை குடைந்தவாறே சொல்ல 
“அப்போ உன் அத்த…” என்றுமே தன் அன்னையை அம்மா என்று விழித்திருக்காததால் சரளமாக உன் அத்தையென்று அமுதனின் வாயில் இருந்து வந்தது. 
“ஐயோ அவங்க ஒரு லேடி ஹிட்லர். அவங்க கூடயெல்லாம் தங்க முடியாதுப்பா…” பயந்தவாறு சொல்ல தன்னையறியாமளையே அவளை ரசித்தான் அமுதன். 
“ஓகே மாம்ஸ் எனக்கு லேட் ஆகுது நான் காலேஜ் போகணும், நீயும் என் கூட வரியா இல்ல தனியா போறியா” சொல்லியவாறே எழுந்துக் கொள்ள 
மாயவலை அறுபட்டது போல் எழுந்துக் கொண்ட அமுதன் விறைப்பாக முகத்தை வைத்துக் கொண்டு “என் வழில நான் போறேன், உன் வழில நீ போ” அவளின் பதிலை எதிர்பார்க்காமல் வீட்டை நோக்கி நடந்தான். நடந்தவன் சட்டென்று நின்று அவள் புறம் திரும்பாமலையே “என்ன இருந்தாலும் ஒரு வயசு பொண்ணு இப்படி தனியா இருக்குறது நல்லதில்லை” யாருக்கோ கூறுவதை போல் கூறியவன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
“உன்ன புரிஞ்சிக்கவே முடியல மாம்ஸ் ஒரு நேரம் என்ன அன்பா பாக்குற, திட்டவும் செய்ற, அக்கறையும் காட்டுற, கண்டிப்பா அமைச்சர் ரத்னவேல் பொண்ணுக்கு உன் மனசுல இடம் இல்லனு நல்லா புரியுது. இனிமேல் உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்” மனதில் நினைத்தவாறே மெல்லிய புன்னகையை சிந்தியவள் தனது வண்டி சாவியை கையில் எடுத்தாள். 
தன் தந்தைக்கு பாடம் புகட்டவேண்டும் என்று திட்டமிட்டு அமுதனை நெருங்க முயற்சித்தாலும் அமுதன் மீது தனக்கு இருப்பது காதலா? அத்தை மகன் என்ற பாசமா? என்று ஆராய்ச்சி செய்ய விரும்பாமல் அவனை சீண்டிக் கொண்டிருந்தவளுக்கு ஒரு கட்டத்தின் மேல் அமுதனின் விருப்பம் இல்லாது அவனை திருமணம் செய்யவும் முடியாது. அவனின் குடும்பமும் ஒருகாலமும் ரத்னவேலின் மகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று மலர்விழிக்கு தோன்ற ஆரம்பித்தது. 
 அவள் இந்தியா வந்ததிலிருந்து தந்தையும், அத்தையும் சரவணன் குடும்பத்தை பற்றி தோண்டித் துருவாமல் இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. அமுதனை உள்ளே கொண்டுவந்து மீண்டும் இவர்களின் பார்வை சரவணன் குடும்பத்தின் மீது விழுந்தால் அவர்களின் நிம்மதியும், சந்தோஷமும் பறிபோவது உறுதி. 
அதனாலயே தன்னுடைய வேலைகளில் அமுதனை சம்பந்தப் படுத்தக் கூடாதென்று முடிவு செய்த மலர் முதலில் செய்தது அமுதன் தங்கி இருக்கும் ஏரியாவில் இருந்த வீட்டை விற்று அவளுடைய காலேஜ் அருகிலையே வீடு வாங்கி குடியேறினாள். 
அமுதனை பார்க்காமல், அவனை சீண்டாமல் அந்த நாளே அவளுக்கு சுத்த போராக தோன்ற உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள் தன மனதை அறியத்  தவறினாள். 
இதற்கிடையில் ராஜேஷ் மலரை நிராகரிக்க கொதித்துப் போன ரத்னவேல் இன்னும் மும்முரமாக மலர்விழிக்கு மாப்பிளை தேடும் படலத்தில் இறங்கியிருந்தார்.
நாட்கள் அதன் போக்கில் நகர காலேஜில் பரீட்ச்சை நடைபெறுவதால் அதிக  வேலையில் மூழ்கியிருந்தாள் மலர்விழி. இன்றும் அதே போல் வேலையில் மூழ்கியிருந்தவள் பசியெடுக்கவே கடிகாரத்தை பார்க்க நேரம் பத்தை தாண்டி கொண்டிருப்பதைக் கண்டு எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தியவள்  வீடு நோக்கி செல்ல வண்டியை கிளம்பினாள். 
அன்று மழையும் இல்லாமல் அந்த ஏரியாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்க மெதுவாகவே வண்டியை ஓட்டி வந்தவள் ஒரு வளைவில் திரும்பும் போது சட்டென்று ஒரு வெள்ளை நிற வேன்  குறுக்காக வர மோதாமல் வண்டியை நிறுத்த, அதிலிருந்து இறங்கிய நால்வர் அவளை பிடிக்க முயற்சி செய்ய அவர்களோடு  கைகலப்பில் ஈடுபடலானாள். 
கராத்தே, கும்பு என தற்காப்புக் கலைகளை பயின்றிருந்தவளுக்கு தான் அணிந்திருந்த ஆடையும் அவர்களோடு சண்டைப் போட ரொம்பவே வசதியாக இருந்தது. அந்த நால்வரையும் சமாளித்துக் கொண்டிருக்கும் போதே பைக்கில் வந்த இருவர் அவளுக்கு உதவ  உயிர் தப்பியதே பெரியவிசயமாக எண்ணி அங்கிருந்து நால்வரும் வேனில் ஏறி தப்பிச் சென்றனர். 
பைக்கில் இருந்த இருவரும் முகத்தை முற்றாக மறைத்த தலைக் கவசமும், கையுறைகளை அணிந்திருக்க இருக்க, அவர்களை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. அறிந்துக் கொள்ளும் எண்ணமும் அவளுக்கு இருக்கவில்லை. ஒருவன் வண்டியின் அருகில் செல்ல மற்றவன் மலர்விழியின் புறம் திரும்பி விடை பெரும் விதமாக தலையசைக்க அவனுக்கு நன்றி கூறியவள் திரும்பி நடக்க அவளை பின்னால் இருந்து அவன் இறுகப் பற்றிப் பிடிக்க வண்டியின் அருகில் சென்றவன் எப்பொழுது வந்தான் என்று மலர் யோசிக்கும் தருவாயில் அவள் முகத்தில் மயக்க மருந்து தெளிக்கப்பட கொஞ்சம் கொஞ்சமாக மலர்விழி மயக்கத்துக்கு செல்ல வெள்ளை வேன் மீண்டும் வருவதைக் கண்டாள். 
வேனில் இருந்தவர்கள் அமைதியாகவே அவளைத் தூக்கி வண்டியில் ஏற்றியபின் வண்டி வேகமெடுக்க பைக்கும் வேனை பின் தொடர்ந்தது. 

Advertisement